என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பசப்பு வார்த்தைகளால் இதைக் கடந்துவிட முடியாது!
    • காமராஜரை இழிவுபடுத்துவதே திமுகவின் நோக்கம் என்பது ஊரறிந்த விஷயம்!

    பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    எத்தனை பதிவுகளை இட்டு, பூசி மெழுக முயன்றாலும், உண்மை வரலாற்றை எவராலும் அழிக்க முடியாது, மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே! அப்படியானதை நான்கு கருப்பு-வெள்ளை புகைப்படங்களால் நீங்கள் அழிக்க நினைப்பது வேடிக்கையாக உள்ளது!

    கர்ம வீரர் காமராஜரை அவமானப்படுத்த திமுக பரப்பிய அவதூறுகளையும், பொய் பிரச்சாரங்களையும், கேலிச் சித்திரங்களையும், மேடைப் பேச்சுக்களையும் காங்கிரஸ் கட்சி மறந்திருக்கலாம், ஆனால் தமிழக மக்களின் நினைவில் இவையெல்லாம் நீங்கா ரணங்களாக இன்றளவும் இருக்கின்றன!

    உங்கள் துணைப் பொதுச் செயலாளர் திரு. திருச்சி சிவா அவர்கள், பெருந்தலைவர் காமராஜரை இழிவுபடுத்திப் பேசவில்லை என நீங்கள் மழுப்பலாம். உங்கள் அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ்.பாரதி

    அவர்கள், "காமராஜருக்குக் கல்லறை கட்டியதே நாங்கள் தான்" என்று கூறவில்லை என உண்மையைத் திரிக்கலாம்.

    ஆனால், இதோ முரசொலி இதழிலேயே மிகவும் கொச்சையாகவும், கீழ்த்தரமாகவும் நீங்கள் காமராஜரை இழிவுபடுத்திய காட்சிகள்.

    இதை உங்களால் மறுக்க முடியுமா, அல்லது இன்று நியாயப்படுத்திப் பேச முடியுமா?

    ஆகவே, பசப்பு வார்த்தைகளால் இதைக் கடந்துவிட முடியாது! காமராஜரை இழிவுபடுத்துவதே திமுகவின் நோக்கம் என்பது ஊரறிந்த விஷயம்!

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மீனவர்கள் வாக்கை பெறுவதற்காக தந்திரமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுகிறார்.
    • மத்திய அரசு மீது பழிபோட்டு, மீனவர்களின் வாக்குகளைப் பெற திமுக முயற்சிக்கிறது.

    மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் இ.பி.எஸ். சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    அதன்படி, மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் அதிமுக தொண்டர்கள் மற்றும் மக்கள் திரண்டு இபிஎஸ்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர் எடப்படி பழனிசாமி பேசியதாவது:-

    கச்சத்தீவை தாரை வார்த்தபோது மத்தியில் காங்கிரசும் மாநிலத்தில் திமுகவும் ஆட்சியில் இருந்தது.

    ஆனால், தற்போது கச்சத்தீவை மீட்பதில் பாஜக அரசியல் செய்வதாக திமுக பொய் கூறி வருகிறது.

    16 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது மீனவர்கள் திமுகவினரின் கண்ணுக்கு தெரியவில்லை.

    திமுக ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது கச்சத்தீவை மீட்டு மீனவர்களை காப்பாற்றியிருக்கலாமே?

    மீனவர்கள் வாக்கை பெறுவதற்காக தந்திரமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுகிறார்.

    மத்திய அரசு மீது பழிபோட்டு, மீனவர்களின் வாக்குகளைப் பெற திமுக முயற்சிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மத்தம்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
    • பாரதிநகர் சாமநாயக்கன் பாளையம் ரோடு, கண்ணார்பாளையம் ரோடு ஆகிய இடங்களில் மின்வினியோகம் இருக்காது.

    கோவை:

    கோவை மத்தம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

    இதன் காரணமாக நாைள காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பெட்டதாபுரம், தண்ணீர்பந்தல், மத்தம்பாளையம், கோட்டைப்பிரிவு, ஒன்னிபாளையம் ரோடு, அறிவொளி நகர், சின்ன மத்தம்பாளையம்,

    மத்தம்பாளையம், செல்வபுரம், சாந்திமேடு, பாரதிநகர் சாமநாயக்கன் பாளையம் ரோடு, கண்ணார்பாளையம் ரோடு ஆகிய இடங்களில் மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை கு.வடமதுரை செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

    • சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
    • சென்னை உள்பட 26 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு.

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் வருகிற 22-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று சென்னை உள்பட 26 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நீலகிரி, கோவை, திருவள்ளூர், காஞ்சிப்புரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கடலூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சேலம், கரூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    கடலூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சேலம், கரூர் மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரியிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணி நடக்கிறது.
    • கட்டக்காடு, வெள்ளரிக்கரை, அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது.

    இதையொட்டி பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், சித்தரேவு, எம். வாடிப்பட்டி, முத்துலாபுரம், கணேசபுரம், கதிர் நாயக்கன்பட்டி. கே.சிங்காரக்கோட்டை, ஒட்டுப்பட்டி, போடிக்காமன்வாடி, நெல்லூர், குப்பிநாயக்கன்பட்டி, ரெங்கராஜபுரம் காலனி,

    நெல்லூர் காலனி, பெரும்பாறை, கொங்கப்பட்டி, மஞ்சள்பரப்பு, புல்லாவெளி, கட்டக்காடு, வெள்ளரிக்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என வத்தலக்குண்டு மின்சார வாரிய செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

    • குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை பணிகளையும் விரைந்து முடிக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
    • அனைத்து பணிகளையும் வழகிழக்கு பருவமழை காலம் தொடங்குவதற்கு முன்பே முடிக்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் உள்ள 25 மாநகராட்சிகள் 144 நகராட்சிகளில் மேற்கொள்ளப்படும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் அடிப்படை பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    அப்போது, மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடித்திடுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

    குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை பணிகளையும் விரைந்து முடிக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

    சாலைப்பணிகளை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

    அனைத்து பணிகளையும் வழகிழக்கு பருவமழை காலம் தொடங்குவதற்கு முன்பே முடிக்க வேண்டும்.

    பருவமழைக் காலம் தொடங்குவதற்கு முன்பே மழைநீர் வடிகால்கள் சுத்தம் செய்து நீர் வெளியேற வழி ஏற்படுத்த வேண்டும்.

    பணிகளை நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என தெரிவித்தார்.

    • திமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு.
    • வருகிற 25ஆம் தேதி எம்.பி.யாக பதவி ஏற்க உள்ளார்.

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் வருகிற 25ஆம் மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்க இருக்கிறார். இதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    மக்கள் நீதி மய்யம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. 2024 மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி, திமுக கூட்டணியில் இடம் பிடித்தது. மக்களவை தொகுதி ஏதும் பெறாமல் தேர்தல் பிரசாரம் மட்டும் மேற்கொண்டது. இதற்குப் பதிலாக ஒரு மாநிலங்களவை எம்.பி. இடம் வழங்கப்படும் என திமுக தெரிவித்தது. அதன்படி ஒரு இடத்தை வழங்கியது. இதனைத் தொடர்ந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.

    • இந்த ஓவியம் வரைவது மிகவும் கடினமான ஒன்று.
    • இதுவரை நான் வரைந்த ஓவியங்களிலேயே ராஜராஜ சோழன் ஓவியம் எனக்கு மிகவும் சவாலாக இருந்தது.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூர் கரந்தையை சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மகன் தருண்குமார் (வயது 21). இவர் தஞ்சையில் உள்ள கல்லூரியில் கட்டிடக்கலையியலில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். சிறுவயதில் இருந்தே பெயிண்ட் ஓவியம், மினியேச்சர் ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்ட மாணவர் தருண்குமார் தற்போது டிரெண்டிங்கில் இருக்கும் சூரிய ஒளி ஓவியத்தை வரைந்து அசத்தி வருகிறார்.

    அரசியல் தலைவர்களின் ஓவியங்கள், ராஜராஜ சோழன் போன்ற வரலாற்று மன்னர்கள் ஓவியம், பிரபலங்களின் ஓவியங்கள் என பல்வேறு விதமான ஓவியங்களை சூரிய ஒளியில் லென்ஸ் பயன்படுத்தி வரைந்து வருகிறார். இந்த ஓவியங்களை வெயில், மழையில் படாமல் பாதுகாத்து வந்தால் சுமார் 400 ஆண்டுகள் வரை அப்படியே இருக்கும் என்றும் தஞ்சையில் பலருக்கும் இந்த ஓவிய கலையை பயிற்சி அளித்தும் வருவதாகவும் கூறினார்.

    இதுகுறித்து மாணவர் தருண்குமார் மேலும் கூறும்போது:-

    சூரிய ஒளியில் இருந்து கிடைக்கக்கூடிய ஆற்றலை பயன்படுத்தி லென்ஸ் மூலம் ஒரு மிட் பாயிண்டை குறித்து இந்த ஓவியம் வரைந்து வருகின்றேன். இந்த ஓவியம் வரைவது மிகவும் கடினமான ஒன்று. வரலாற்று சம்பந்தமான ஓவியங்கள், பாரம்பரிய சின்னங்கள் போன்ற ஓவியங்களை அடுத்தடுத்து வரைய உள்ளேன். ஒரு ஓவியம் வரைவதற்கு ஓவியத்தை பொறுத்து 2-ல் இருந்து 3 நாட்கள் வரை ஆகும். இதுவரை நான் வரைந்த ஓவியங்களிலேயே ராஜராஜ சோழன் ஓவியம் எனக்கு மிகவும் சவாலாக இருந்தது.

    என்னுடைய தொழில் ஆர்க்கிடெக்சர் ஆக இருந்தாலும் ஓவியத்தின் மேல் உள்ள எனது ஆர்வத்தினால் இதனை தற்போது தஞ்சையில் நான் மட்டுமே செய்து வருகிறேன். அதே நேரத்தில் விருப்பம் உள்ளவர்களுக்கு பயிற்சியும் அளித்து வருகிறேன். ஒரு சிலர் என்னை தொடர்பு கொண்டு அவர்களுக்கு ஏற்ற ஓவியங்களை ஆர்டர் கொடுக்கின்றனர். இந்த ஓவியம் வரைவதற்கு மிகவும் கவனம் தேவை. ஒரு நாள் முழுவதும் ஓவியம் வரைந்தால் இரவு தூக்கம் வராது. கண் எரிச்சல் ஏற்படும். பாதுகாப்பான கண்ணாடியை போட்டு வரைந்தாலும் அந்த பிரச்சனை சில சமயங்களில் ஏற்படும். இருந்தாலும் சவால் மிக்க இந்த ஓவியங்கள் வரைவதில் எனக்கு ஆர்வம் அதிகம் உள்ளது என்றார்.

    • வனப்பகுதியில் உள்ள யானைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் நடமாடுவது வழக்கம்.
    • தேங்காய்மட்டை பாரம் ஏற்றி வந்த லாரியையும் தடுத்து நிறுத்தி கரும்பு உள்ளதா என அந்த யானை தேடியது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியாக தமிழகம்-கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் இந்த நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

    வனப்பகுதியில் உள்ள யானைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் நடமாடுவது வழக்கம்.

    இந்த நிலையில் தாளவாடி மலைப்பகுதியில் விளையும் கரும்புகள் வெட்டப்பட்டு லாரிகளில் ஏற்றப்பட்டு வனப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாக சத்தியமங்கலத்தில் உள்ள சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    லாரியில் இருந்து சிதறி கீழே விழும் கரும்பு துண்டுகளை தின்பதற்காக யானைகள் சாலையை நோக்கி படையெடுக்கின்றன. இந்த நிலையில் பண்ணாரி வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் கரும்பு துண்டுகளை தின்று பழகியதால் கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகளை வழிமறித்து கரும்பு கட்டுகளை தேடுவது தொடர்கதை ஆகி வருகிறது.

    இந்நிலையில் பண்ணாரி அம்மன் கோவில் அருகே திம்பம் மலை அடிவாரத்தில் சாலையில் நடமாடிய ஒற்றை யானை அந்த வழியாக வந்த லாரிகளை தடுத்து நிறுத்தி கரும்பு கட்டு இருக்கிறதா? என ஒவ்வொரு வாகனங்களை நிறுத்தி பார்த்து வந்தது.

    அப்போது அந்த வழியாக கர்நாடகாவில் இருந்து கரும்பு கட்டுகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரியை இந்த ஒற்றை யானை வழிமறித்து தடுத்து நிறுத்தியது. பின்னர் தனது தும்பிக்கையால் கரும்பு கட்டுகளை ருசி பார்த்தது. யானை பக்கவாட்டில் சென்றதும் ஓட்டுநர் லாபகரமாக லாரியை இயக்கி யானையிடமிருந்து தப்பினார். தொடர்ந்து அந்த வழியாக வந்த தேங்காய்மட்டை பாரம் ஏற்றி வந்த லாரியையும் தடுத்து நிறுத்தி கரும்பு உள்ளதா என அந்த யானை தேடியது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். சிறிது நேரம் சாலையில் நின்ற அந்த ஒற்றை யானை மீண்டும் வனப்பகுதியில் சென்றது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • புத்தகத்தின் தொடக்கத்தில் வரலாற்றில் சில இருண்ட காலகட்டங்கள் பற்றிய குறிப்பு என்ற தலைப்பில் ஒரு பகுதி உள்ளது.
    • உடனடியாக பாடப் புத்தகங்களில் இருந்து இத்தகைய கருத்துக்களை நீக்க வேண்டும்.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தேசிய கல்விக் கொள்கை மற்றும் தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு ஆகியவற்றின் கீழ் பள்ளிக் கல்விக்கான புதிய புத்தகங்களை என்.சி.இ.ஆர்.டி தயாரித்துள்ளது.

    8-ம் வகுப்பு புதிய பாடப் புத்தகம் இந்த வாரம் வெளியிடப்பட்டது. சமூகத்தை ஆராய்தல், இந்தியா மற்றும் அதற்கு அப்பால் என்ற தலைப்பில் வந்துள்ள இந்த புத்தகத்தில் டெல்லி சுல்தான்கள், முகாலயர்கள், மராத்தியர்கள் மற்றும் காலனித்துவ சகாப்தத்தை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் புதிய என்.சி.இ. ஆர்.டி.யின் பாடத் திட்டத்தில் முதலாவதாகும்.

    புத்தகத்தின் தொடக்கத்தில் வரலாற்றில் சில இருண்ட காலகட்டங்கள் பற்றிய குறிப்பு என்ற தலைப்பில் ஒரு பகுதி உள்ளது. போர் மற்றும் ரத்தக் களரியை முதன்மையாக கொண்ட உணர்வு பூர்வமான மற்றும் வன் முறை நிகழ்வுகள் குறித்த செய்திகள் இடம்பெற்று உள்ளன. 13 முதல் 17ஆம் நூற்றாண்டு வரையிலான இந்திய வரலாற்றை உள்ளடக்கிய அத்தியாயம் இந்தியாவின் அரசியல் வரைபடத்தை மறுவடிவமைத்தல், டெல்லி சுல்தான்களில் எழுச்சி மற்றும் வீழ்ச்சி, விஜயநகர பேரரசு, முகலாயர்கள், சீக்கியர்களின் எழுச்சி குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

    பாடப்புத்தகத்தில் பாபர் நகரங்களில் முழு மக்களையும் கொன்று குவித்த ஒரு மிருகத்தனமான மற்றும் இரக்கமற்றவர் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. அவுரங்கசீப் கோவில்களையும், குருத்வா ராக்களையும் அழித்த ராணுவ ஆட்சியாளர் என்றும், அக்பரின் ஆட்சி கொடூரமானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.

    இந்துத்துவ சனாதன சக்திகளின் திட்டப்படி நாட்டின் பன்முகத்தன்மைக்கும், மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சிகளுக்கும் என்.சி.இ. ஆர்.டி துணை போவது கடும் கண்டனத்துக்குரியது. எனவே, உடனடியாக பாடப் புத்தகங்களில் இருந்து இத்தகைய கருத்துக்களை நீக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஒரே நேரத்தில் 22 பஸ்களை நிறுத்தும் வகையில் நவீன வசதிகளுடன் அமைய உள்ளது.
    • கடந்த 9-ந்தேதி அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, ஆவடி சா.மு.நாசர் ஆகியோர் இந்த பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.

    ஆவடி பேருந்து நிலையம் சென்னை புறநகர் பகுதிகளை இணைக்கக்கூடிய முக்கிய நிலையமாக உள்ளது. தற்போது இந்த பஸ்நிலையம் 1.93 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

    இங்கிருந்து கோயம்பேடு, திருவான்மியூர், தாம்பரம், பூந்தமல்லி, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. புறநகர் பகுதிகளுக்கு மட்டுமின்றி தொலைதூரப் பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது.

    ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு உள்ள நிலையில் இங்குள்ள பஸ்நிலையம் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் இட நெருக்கடியில் செயல்பட்டு வந்தது. இதையடுத்து ஆவடி பஸ்நிலை யத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று பயணிகளும், பொதுமக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதைத்தொடர்ந்து ஆவடி பஸ் நிலையத்தை 3 தளங்களுடன் ரூ.36.06 கோடி செலவில் நவீன வசதியுடன் சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த 9-ந்தேதி அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, ஆவடி சா.மு.நாசர் ஆகியோர் இந்த பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.

    65 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட உள்ள இந்த புதிய பஸ் நிலையத்தில் உணவுத் திடல், ஷாப்பிங் பகுதி, நீர் சுத்திகரிப்பு நிலையம், கழிப்பறைகள் மற்றும் பஸ்களை நிறுத்து வதற்காக பிரத்யேகமாக வடிவ மைக்கப்பட்ட தரைத்தளம், ஒரே நேரத்தில் 22 பஸ்களை நிறுத்தும் வகையில் நவீன வசதிகளுடன் அமைய உள்ளது.

    ஆவடி பஸ் நிலையம் சென்னை- திருவள்ளூர் நெடுஞ்சாலையில், ஆவடி ரெயில் நிலையத்திற்கு எதிரே அமைந்துள்ளது. ஏற்கனவே ஆவடி ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.

    இதனை இந்த ஆண்டு ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. தற்போது ஆவடி பஸ்நிலைய பணிகளும் நடந்து வரும் நிலையில் பஸ் நிலையத்தில் இருந்து எதிரே உள்ள ரெயில் நிலையத்திற்கு பயணிகள் சாலையை கடக்காமல் எளிதாக செல்லும் வகையில் பஸ்நிலையம்- ரெயில் நிலையத்தை இணைக்கும் வகையில் உயர் மட்ட பாதை அமைக்க வேண்டும் என்று பொது மக்களும் பயணிகளும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • அருவிகளில் மிதமான தண்ணீர் விழுந்தாலும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து உற்சாகமாக குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.
    • குற்றால சாரல் திருவிழாவிற்கு அனைவரையும் வரவேற்கும் வகையில் வரவேற்பு பதாகைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குறைந்த அளவே தண்ணீர் விழுந்து வந்த நிலையில் சாரல் மழையின் எதிரொலியாக அருவிகளுக்கு தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து காணப்பட்டது.

    கடந்த ஒரு வார காலமாக போதிய மழை இல்லாமல் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து குறைந்த நிலையில் தற்போது பெய்து வரும் சாரல் மழையினால் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அருவிகளில் மிதமான தண்ணீர் விழுந்தாலும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து உற்சாகமாக குளித்து மகிழ்ந்து செல்கின்றனர். மேலும் வருகிற 20-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தென்காசி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்படும் சாரல் திருவிழா ஏற்பாடுகளும் கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளதால் அதற்கான முன்னேற்பாடு பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    குற்றாலம் பஸ் நிலையம், குற்றாலம் பேரூராட்சி, தென்காசி காசி விஸ்வ நாதர் கோவில் மற்றும் தென்காசியில் பொது மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் குற்றால சாரல் திருவிழாவிற்கு அனைவரையும் வரவேற்கும் வகையில் வரவேற்பு பதாகைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    குற்றாலத்தில் இன்று காலையில் குளிர்ந்த காற்றுடன் விட்டுவிட்டு லேசான சாரல் மழை பெய்ததால் குற்றாலம், தென்காசி பகுதிகளில் குளிர்ச்சியான சூழ்நிலை நீடித்து வருகிறது.

    ×