என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சூரிய ஒளிக்கதிரை பயன்படுத்தி லென்ஸ் மூலம் ஓவியங்கள் வரையும் மாணவர் தருண்குமார்.
சூரிய ஒளிக்கதிரை பயன்படுத்தி லென்ஸ் மூலம் வரையப்படும் ஓவியங்கள் - அசத்தும் கல்லூரி மாணவர்
- இந்த ஓவியம் வரைவது மிகவும் கடினமான ஒன்று.
- இதுவரை நான் வரைந்த ஓவியங்களிலேயே ராஜராஜ சோழன் ஓவியம் எனக்கு மிகவும் சவாலாக இருந்தது.
தஞ்சாவூா்:
தஞ்சாவூர் கரந்தையை சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மகன் தருண்குமார் (வயது 21). இவர் தஞ்சையில் உள்ள கல்லூரியில் கட்டிடக்கலையியலில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். சிறுவயதில் இருந்தே பெயிண்ட் ஓவியம், மினியேச்சர் ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்ட மாணவர் தருண்குமார் தற்போது டிரெண்டிங்கில் இருக்கும் சூரிய ஒளி ஓவியத்தை வரைந்து அசத்தி வருகிறார்.
அரசியல் தலைவர்களின் ஓவியங்கள், ராஜராஜ சோழன் போன்ற வரலாற்று மன்னர்கள் ஓவியம், பிரபலங்களின் ஓவியங்கள் என பல்வேறு விதமான ஓவியங்களை சூரிய ஒளியில் லென்ஸ் பயன்படுத்தி வரைந்து வருகிறார். இந்த ஓவியங்களை வெயில், மழையில் படாமல் பாதுகாத்து வந்தால் சுமார் 400 ஆண்டுகள் வரை அப்படியே இருக்கும் என்றும் தஞ்சையில் பலருக்கும் இந்த ஓவிய கலையை பயிற்சி அளித்தும் வருவதாகவும் கூறினார்.
இதுகுறித்து மாணவர் தருண்குமார் மேலும் கூறும்போது:-
சூரிய ஒளியில் இருந்து கிடைக்கக்கூடிய ஆற்றலை பயன்படுத்தி லென்ஸ் மூலம் ஒரு மிட் பாயிண்டை குறித்து இந்த ஓவியம் வரைந்து வருகின்றேன். இந்த ஓவியம் வரைவது மிகவும் கடினமான ஒன்று. வரலாற்று சம்பந்தமான ஓவியங்கள், பாரம்பரிய சின்னங்கள் போன்ற ஓவியங்களை அடுத்தடுத்து வரைய உள்ளேன். ஒரு ஓவியம் வரைவதற்கு ஓவியத்தை பொறுத்து 2-ல் இருந்து 3 நாட்கள் வரை ஆகும். இதுவரை நான் வரைந்த ஓவியங்களிலேயே ராஜராஜ சோழன் ஓவியம் எனக்கு மிகவும் சவாலாக இருந்தது.
என்னுடைய தொழில் ஆர்க்கிடெக்சர் ஆக இருந்தாலும் ஓவியத்தின் மேல் உள்ள எனது ஆர்வத்தினால் இதனை தற்போது தஞ்சையில் நான் மட்டுமே செய்து வருகிறேன். அதே நேரத்தில் விருப்பம் உள்ளவர்களுக்கு பயிற்சியும் அளித்து வருகிறேன். ஒரு சிலர் என்னை தொடர்பு கொண்டு அவர்களுக்கு ஏற்ற ஓவியங்களை ஆர்டர் கொடுக்கின்றனர். இந்த ஓவியம் வரைவதற்கு மிகவும் கவனம் தேவை. ஒரு நாள் முழுவதும் ஓவியம் வரைந்தால் இரவு தூக்கம் வராது. கண் எரிச்சல் ஏற்படும். பாதுகாப்பான கண்ணாடியை போட்டு வரைந்தாலும் அந்த பிரச்சனை சில சமயங்களில் ஏற்படும். இருந்தாலும் சவால் மிக்க இந்த ஓவியங்கள் வரைவதில் எனக்கு ஆர்வம் அதிகம் உள்ளது என்றார்.






