என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தமிழகத்தில் சாதி ஆணவ கொலைகள் அதிகரித்துள்ளது.
    • தனிச்சட்டம் இயற்றினால் ஓபிசி மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பது மாயை.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின்னர் தி.மு.க. கூட்டணி தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

    * சாதி ஆணவ படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தினோம்.

    * தனிச்சட்டம் இயற்ற வேண்டியதன் தேவை குறித்து முதலமைச்சரிடம் எடுத்துரைத்தோம்.

    * தமிழகத்தில் சாதி ஆணவ கொலைகள் அதிகரித்துள்ளது.

    * தனிச்சட்டம் இயற்ற வேண்டியதன் தேவையை அரசும் உணர்ந்திருக்கிறது.

    * சாதி ஆணவ படுகொலைகள் அதிகரிப்பது கவலைக்குரியது.

    * சாதி வெறியிலிருந்து மக்கள் விடுபட்டு வரவேண்டியது அவசியமாகிறது.

    * ஆணவ படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் தேவை என்பதை பல அமைப்புகள் வலியுறுத்துகின்றன.

    * தனிச்சட்டம் வேண்டும் என தேசிய பெண்கள் ஆணையம் வலியுறுத்தி உள்ளது.

    * நீதிபதி ராமசுப்ரமணியம் தனிச்சட்டம் வேண்டும் என்பதை தீர்ப்பாகவே வழங்கி இருக்கிறார்.

    * சாதி ஆணவ கொலை என்பது ஒட்டுமொத்த சமூகத்திற்கான பிரச்சனை.

    * ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இத்தகைய சட்டம் நடைமுறையில் உள்ளது.

    * தனிச்சட்டம் இயற்றினால் ஓபிசி மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பது மாயை.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை காவல் ஆணையத்தின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படவில்லை.
    • சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்கவும், மக்கள் அச்சமின்றி வாழ்வதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    திருப்பூர் மாவட்டம் சிக்கனுத்து கிராமத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் மோதலில் ஈடுபட்டவர்களை பிடிக்கச் சென்ற குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பணியில் இருக்கும் காவல் அதிகாரி ஒருவரை கொடூரமான முறையில் படுகொலை செய்யும் அளவுக்கு குற்றவாளிகளுக்கு துணிச்சல் ஏற்படுகிறது என்றால், அந்த மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு என்பது பெயரளவுக்குக் கூட இல்லை என்று தானே பொருள். தமிழ்நாட்டில் மக்கள் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்கிறார்கள்; தமிழ்நாட்டில் தேனாறும் பாலாறும் ஓடுவதாக கூறி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கு என்ன பதில் கூறப் போகிறார்? தமிழகத்தில் யாருமே அச்சமின்றி வாழ முடியாது என்ற நிலை நிலவுவதையே இந்தக் கொலை காட்டுகிறது.

    தமிழ்நாட்டில் காவல்துறைக்கு பொறுப்பு வகிப்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் என்றாலும் கூட, காவல்துறை அவரது கட்டுப்பாட்டில் இல்லை; காவல்துறைக்கு ஏராளமான எஜமானர்கள் உள்ளனர்; முதலமைச்சரின் குடும்பத்தில் உள்ளவர்களும், முதலமைச்சரை சுற்றி வளையம் அமைத்திருப்பவர்களும் காவல்துறையின் அதிகார மையங்களாக திகழ்கின்றனர்; அதனால் தான் காவல்துறை சுதந்திரமாக செயல்பட முடியாமல் தடுமாறுகிறது என்று தொடர்ந்து கூறி வருகிறேன். எனது குற்றச்சாட்டு உண்மை என்பதை காவல் அதிகாரி சண்முகவேலின் படுகொலை உறுதி செய்திருக்கிறது.

    காவல்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் ஓய்வுபெற்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் காவல் ஆணையம் அமைத்து பரிந்துரைகள் பெறப்பட்டன. அதன் பின் ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை காவல் ஆணையத்தின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படவில்லை. காவல் ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்தப் போவதில்லை என்றால் பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை செலவழித்து ஏன் ஆணையம் அமைக்க வேண்டும். அதற்கு பருத்தி மூட்டை கிடங்கிலேயே இருந்திருக்கலாமே?

    சட்டம் - ஒழுங்கை நிலை நிறுத்தி, மக்களிடம் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தத் தவறியதற்காக தமிழக மக்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்கவும், மக்கள் அச்சமின்றி வாழ்வதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். 

    • ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், 4-வதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் பெற்றோர் கவலை அடைந்தனர்.
    • பச்சிளம் குழந்தையை வாங்கிய சிந்து, அதனை விற்க முயற்சித்தார்.

    கோவை:

    திருப்பூர் மாவட்டம் மங்கலம் அருகே உள்ள பள்ளபாளையத்தை சேர்ந்தவர் 35 வயது பனியன் தொழிலாளி.

    இவருக்கு 30 வயதில் மனைவி, 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அந்த பெண், 4-வதாக கர்ப்பம் ஆனார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு பிரசவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை அவரது கணவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவருக்கு கடந்த 26-ந் தேதி பெண் குழந்தை பிறந்தது.

    ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், 4-வதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் பெற்றோர் கவலை அடைந்தனர். இதனால் அந்த பெண் குழந்தையை தத்து கொடுக்கலாம் என அவர்கள் முடிவு செய்தனர்.

    இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சிந்து (வயது32) என்ற பெண், அந்த தம்பதிக்கு அறிமுகம் ஆனார். சிந்து, அவர்களிடம், எனக்கு தெரிந்த ஒருவர் மிகவும் வசதியானவர். திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் அவருக்கு குழந்தை இல்லை.

    எனவே அவர்களிடம் உங்கள் குழந்தையை கொடுத்தால் நன்றாக பார்த்துக் கொள்வார் என கூறியுள்ளார். அதன்படி பெற்றோர், பிறந்து 11 நாளே ஆன பச்சிளம் பெண் குழந்தையை சிந்துவிடம் கொடுத்தனர். பச்சிளம் குழந்தையை வாங்கிய சிந்து, அதனை விற்க முயற்சித்தார்.

    இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் சைல்டு லைன் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து அந்த குழந்தையை மீட்டனர். மேலும் சிந்து மற்றும் குழந்தையின் பெற்றோரை பிடித்து விசாரித்தனர்.

    அப்போது பெற்றோர், தங்களால் குழந்தையை வளர்க்க முடியாததால் வேறு ஒரு நபரிடம் கொடுத்து வளர்க்க அந்த குழந்தையை சிந்துவிடம் கொடுத்ததாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் கோவை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நடந்ததால் அதிகாரிகள் சிந்துவை ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும் மீட்கப்பட்ட 11 நாள் பெண் குழந்தையை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    போலீசார் சிந்துவை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் சிந்து, இளம்பெண்ணுக்கு குழந்தை பிறந்ததும் தொழிலாளியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவர்களை சந்தித்து, எனக்கு தெரிந்த வசதி படைத்த ஒருவருக்கு பல ஆண்டுகளாக குழந்தை இல்லை.

    அவர்களுக்கு உங்களது குழந்தையை கொடுத்து விடலாம் என கூறியுள்ளார். அவர்களும் அதற்கு சம்மதித்து சிந்துவிடம் குழந்தையை கொடுத்துள்ளனர்.

    குழந்தையை வாங்கிய சிந்து, அதனை சோமனூரை சேர்ந்தவரிடம் ரூ.2 லட்சத்திற்கு விற்க பேரம் பேசியுள்ளார். அவர் பணம் தந்ததும் குழந்தையை கொடுத்துவிட தயாராக இருந்தார். ஆனால் அதற்குள் போலீசில் சிக்கி கொண்டார்.

    குழந்தையை விற்பதற்கு சிந்துவுக்கு, மற்றொரு புரோக்கரான பிரசாத் மற்றும் குழந்தையின் தந்தையும் உடந்தையாக இருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் சிந்து, பிரசாத், குழந்தையின் தந்தை ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். கைதான 3 பேரையும் இன்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.

    பிறந்த 11 நாளே ஆன பெண் குழந்தையை விற்க முயன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தற்கொலை செய்து கொண்ட நபர் குறித்த தகவல்கள் தற்போது வரை வெளியாகவில்லை.
    • தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    கோவை:

    கோவை பெரிய கடைவீதி காவல்நிலையத்தில் முதலாவது மாடியில் உள்ள க்ரைம் உதவி ஆய்வாளர் அறையில் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தற்கொலை செய்து கொண்ட நபர் நேற்று இரவு 11 மணி அளவில் காவல் நிலையத்திற்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.

    தற்கொலை செய்து கொண்ட நபர் குறித்த தகவல்கள் தற்போது வரை வெளியாகவில்லை. மேலும் உயிரிழந்த நபர் எதற்காக காவல்நிலையத்திற்கு வந்தார் என்பது குறித்த தகவல்களும் வெளியாகவில்லை.

    இச்சம்பவம் குறித்து அறிந்து வந்த தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்தனர்.
    • திருமாவளவன், முத்தரசன், சண்முகம் ஆகியோர் முதலமைச்சரை சந்தித்து பேசினர்.

    சாதிய ஆணவப் படுகொலைகள் தொடராமலிருக்க தமிழக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்தனர்.

    வி.சி.க. தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் ஆகியோர் முதலமைச்சரை சந்தித்து பேசினர்.

    • கடந்த 1-ந்தேதி முதல் இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 25 சதவீத வரி விதித்தது.
    • அமெரிக்காவில் ஒரு முட்டை ரூ.15-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் தினமும் சுமார் 7 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், மற்ற மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இது தவிர அரபு நாடுகளுக்கு தினமும் 80 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவுக்கு கடந்த ஜூன் மாதம் இறுதியில் முதன் முதலாக கப்பலில் 1.20 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டது. இதனால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி முதல் இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 25 சதவீத வரி விதித்தது. இதையடுத்து நாமக்கல்லில் இருந்து அமெரிக்காவுக்கு முட்டை ஏற்றுமதி நிறுத்தப்பட்டது. இதனால் 1.20 கோடி முட்டைகள் அனுப்ப முடியாத நிலை உருவாகி உள்ளது.

    நாமக்கல்லில் இருந்து ஒரு முட்டையை ரூ.4.50க்கு கொள்முதல் செய்து அமெரிக்காவுக்கு கொண்டு செல்ல ஒரு முட்டைக்கு ரூ.7.50 செலவாகிறது. இதையடுத்து அமெரிக்காவில் ஒரு முட்டை ரூ.15-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாமக்கல்லில் இருந்து முட்டைகள் அனுப்ப முடியாததால் அமெரிக்காவில் ரூ.20 கோடி மதிப்பிலான முட்டை விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து முட்டை ஏற்றுமதியாளர் சங்க தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறுகையில், தினசரி நாமக்கல் மண்டலத்தில் இருந்து 7 கோடி முட்டைகள் உற்பத்தி செய்து விற்பனை செய்கிறோம். இதில் ஒருமுறை மட்டும் அமெரிக்காவுக்கு அனுப்பிய 1 கோடியே 20 லட்சம் முட்டைகள் பெரிய விஷயமல்ல. இந்த முட்டைகளை இந்தியாவிலேயே வேறு பகுதியில் விற்பதற்கு நடவடிக்கை எடுப்போம். இதனால் முட்டைகள் பெரிய அளவில் தேக்கம் அடையாது.

    • அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 18,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
    • அணை நீர்மட்டம் 118.80 அடியாகவும், நீர் இருப்பு 91.56 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

    மேட்டூர்:

    கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது மழையின் தீவிரம் குறைந்துள்ளது. இதனால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்துள்ளது.

    இன்று காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7,769 கன அடியிலிருந்து 7,591 கன அடியாக சரிந்துள்ளது. அணை நீர்மட்டம் 118.80 அடியாகவும், நீர் இருப்பு 91.56 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

    அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 18,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதுபோல் கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கன அடி வீதம் நீர் வெளியேற்றப்படுகிறது.

    • இரட்டை இலக்க வளர்ச்சி எட்டப்பட்டது 2010-11-ஆம் ஆண்டில்.
    • இதே வேகத்தில் சென்றால், எதுவும் சாத்தியம் என்பது இப்போது மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது!

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    * இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிக் காட்டியுள்ள ஒரே அரசு தமிழ்நாட்டின் திராவிட மாடல் அரசு!

    * இந்தியாவிலேயே அதிகபட்சமாக 9.69% பொருளாதார வளர்ச்சியுடன் தமிழ்நாடு முதலிடம் என்று கூறி வந்தோம் அல்லவா…

    * அதையும் தாண்டி, தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 11.19% என ஒன்றிய அரசின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் வெளியாகியுள்ளது!

    * இதற்கு முன்பு, இரட்டை இலக்க வளர்ச்சி எட்டப்பட்டது 2010-11-ஆம் ஆண்டில். அப்போது கலைஞர் ஆட்சி! இப்போது கலைஞர் வழி நடக்கும் திராவிட மாடல் ஆட்சி! இரண்டுமே கழக ஆட்சி!

    * 2030-ஆம் ஆண்டுக்குள் டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்றபோது பலரது புருவமும் உயர்ந்தது. "இது மிக உயர்ந்த இலக்கு, எப்படி சாத்தியமாகும்?" என்றார்கள்! இதே வேகத்தில் சென்றால், எதுவும் சாத்தியம் என்பது இப்போது மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது!

    * எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

    திண்ணியர் ஆகப் பெறின் (குறள் 666)

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தேனி மாவட்டத்துக்கு தற்போது கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.
    • அணைக்கு நீர் வரத்து 974.50 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1867 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவையை பூர்த்தி செய்து வருகிறது.

    அணையின் நீர்மட்டம் 60 அடிக்கு மேல் உயர்ந்ததால் கடந்த ஜூன் மாதம் 15-ந்தேதி முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. ஜூன் 25-ந்தேதி முதல் 7 நாட்கள் ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசன பகுதிகளுக்கு ஆற்றுப்படுகை வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்டது.

    முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும், வைகை அணை நீர் பிடிப்பு பகுதியில் பெய்த மழை காரணமாகவும் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. கடந்த மாதம் 26-ந் தேதி 66 அடியை எட்டியதால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    தொடர்ந்து நீர்மட்டம் 68.50 அடியாக உயர்ந்ததால் 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தற்போது அணையின் நீர்மட்டம் 69.19 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 1510 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து பாசன தேவைக்காக 500 கன அடியும், குடிநீர் தேவைக்காக 69 கன அடி என மொத்தம் 569 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5622 மி.கன அடியாக உள்ளது.

    கடந்த 2023ம் ஆண்டுக்கு பிறகு வைகை அணை மீண்டும் தற்போதுதான் முழு கொள்ளளவை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் வைகை அணை வரலாற்றில் தற்போது 35-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

    வழக்கமாக அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதும் 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை 69 அடியை கடந்த பிறகும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உபரி நீர் திறக்கப்படவில்லை.

    71 அடி வரை உயர்த்தப்பட்டு பின்னர் உபரி நீரை வெளியேற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இருந்தபோதும் அணை பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு அணைக்கு வரும் நீர் வரத்து அளவை கணக்கிட்டு வருகின்றனர்.

    5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எந்த நேரமும் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படலாம் என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்துக்கு தற்போது கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதனால் எந்த நேரமும் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டும் என்பதால் 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்துக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அவ்வப்போது முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. அணையின் நீர்மட்டம் கடந்த வாரம் 136 அடிக்கு மேல் உயர்ந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி 133.65 அடியாக சரிந்துள்ளது.

    அணைக்கு நீர் வரத்து 974.50 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1867 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5551 மி.கன அடியாக உள்ளது. அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர்கள் இயக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

    கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • நேற்று சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,960-க்கு விற்பனையானது.
    • வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.

    சென்னை:

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது. அந்த வகையில் வார தொடக்க நாளான திங்கட்சிழமை சவரனுக்கு 40 ரூபாயும், நேற்று சவரனுக்கு 600 ரூபாயும் உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,960-க்கு விற்பனையானது.

    இந்த நிலையில், மூன்றாவது நாளாக இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,380-க்கும், சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.75,040-க்கும் விற்பனையாகிறது.



    வெள்ளி விலை இரண்டாவது நாளாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 126 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    05-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,960

    04-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,360

    03-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,320

    02-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,320

    01-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,200

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    05-08-2025- ஒரு கிராம் ரூ.125

    04-08-2025- ஒரு கிராம் ரூ.123

    03-08-2025- ஒரு கிராம் ரூ.123

    02-08-2025- ஒரு கிராம் ரூ.123

    01-08-2025- ஒரு கிராம் ரூ.123

    • சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்
    • கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கைதுசெய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிப் புரிந்துவந்த சண்முகவேல் (வயது 57) மற்றும் ஆயுதப்படைக் காவலர் அழகுராஜா ஆகிய இருவரும் நேற்று இரவு 11 மணியளவில் ரோந்துப் பணியின் போது சிக்கனூத்து அருகில் தனியாரின் தோட்டத்து சாலையில் நடந்த அடிதடி பிரச்சனை குறித்து தகவல் அறித்ததும் விசாரிக்க சம்பவ இடத்திற்குச் சென்றபோது அடிதடி பிரச்சனையில் ஈடுபட்டிருந்த 3 பேர் சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் ஆயுதப்படை காவலர் ஆகிய இருவரையும் துரத்திச் சென்று அரிவாளால் வெட்டியதில் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையுமடைந்தேன்.

    சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கைதுசெய்ய காவல் துறையினருக்கு உத்தரவிட்டு உள்ளேன். சண்முகவேலை இழந்து வாடும் அவரது குடும் பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தர விட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கோவையில், திருப்பூர் மாவட்டங்களில் ரோடு ஷோ மேற்கொள்ளவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.
    • கடந்த ஜூலை 22, 23-ந்தேதி கோவை, திருப்பூர் மாவட்டத்திற்கு கள ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 11, 12-ந்தேதிகளில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்திற்கு செல்கிறார்.

    கள ஆய்விற்காக கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு செல்லும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அங்கு நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளிலும், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும் பங்கேற்கிறார்.

    சென்னையில் இருந்து கோவை சென்று அங்கிருந்து திருப்பூர் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலம்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவமனை கட்டிடத்தை திறந்து வைக்கிறார். இதனைத் தொடர்ந்து கோவையில் புதிய பஸ் நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கிறார். இதனைத்தொடர்ந்து மடத்துக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கிறார்.

    தொடர்ந்து ஆகஸ்ட் 12-ந்தேதி பொள்ளாச்சிக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாய பொதுமக்கள் நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக கட்டப்பட்டுள்ள புதிய அரங்கத்தை திறந்து வைக்கிறார்.

    இந்த 2 நாட்கள் கோவையில், திருப்பூர் மாவட்டங்களில் ரோடு ஷோ மேற்கொள்ளவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.

    கடந்த ஜூலை 22, 23-ந்தேதி கோவை, திருப்பூர் மாவட்டத்திற்கு கள ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக கள ஆய்வு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    ×