என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

முழு கொள்ளளவை எட்டி கடல்போல் காட்சி அளிக்கும் வைகை அணை நீர்மட்டம்.
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை நீர்மட்டம்- 5 மாவட்டங்களுக்கு 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
- தேனி மாவட்டத்துக்கு தற்போது கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.
- அணைக்கு நீர் வரத்து 974.50 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1867 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவையை பூர்த்தி செய்து வருகிறது.
அணையின் நீர்மட்டம் 60 அடிக்கு மேல் உயர்ந்ததால் கடந்த ஜூன் மாதம் 15-ந்தேதி முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. ஜூன் 25-ந்தேதி முதல் 7 நாட்கள் ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசன பகுதிகளுக்கு ஆற்றுப்படுகை வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்டது.
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும், வைகை அணை நீர் பிடிப்பு பகுதியில் பெய்த மழை காரணமாகவும் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. கடந்த மாதம் 26-ந் தேதி 66 அடியை எட்டியதால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தொடர்ந்து நீர்மட்டம் 68.50 அடியாக உயர்ந்ததால் 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தற்போது அணையின் நீர்மட்டம் 69.19 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 1510 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து பாசன தேவைக்காக 500 கன அடியும், குடிநீர் தேவைக்காக 69 கன அடி என மொத்தம் 569 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5622 மி.கன அடியாக உள்ளது.
கடந்த 2023ம் ஆண்டுக்கு பிறகு வைகை அணை மீண்டும் தற்போதுதான் முழு கொள்ளளவை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் வைகை அணை வரலாற்றில் தற்போது 35-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
வழக்கமாக அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதும் 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை 69 அடியை கடந்த பிறகும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உபரி நீர் திறக்கப்படவில்லை.
71 அடி வரை உயர்த்தப்பட்டு பின்னர் உபரி நீரை வெளியேற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இருந்தபோதும் அணை பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு அணைக்கு வரும் நீர் வரத்து அளவை கணக்கிட்டு வருகின்றனர்.
5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எந்த நேரமும் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படலாம் என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்துக்கு தற்போது கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனால் எந்த நேரமும் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டும் என்பதால் 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்துக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அவ்வப்போது முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. அணையின் நீர்மட்டம் கடந்த வாரம் 136 அடிக்கு மேல் உயர்ந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி 133.65 அடியாக சரிந்துள்ளது.
அணைக்கு நீர் வரத்து 974.50 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1867 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5551 மி.கன அடியாக உள்ளது. அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர்கள் இயக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.






