என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வருகிற 11, 12-ந்தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை, திருப்பூர் பயணம்
- கோவையில், திருப்பூர் மாவட்டங்களில் ரோடு ஷோ மேற்கொள்ளவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.
- கடந்த ஜூலை 22, 23-ந்தேதி கோவை, திருப்பூர் மாவட்டத்திற்கு கள ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 11, 12-ந்தேதிகளில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்திற்கு செல்கிறார்.
கள ஆய்விற்காக கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு செல்லும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அங்கு நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளிலும், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும் பங்கேற்கிறார்.
சென்னையில் இருந்து கோவை சென்று அங்கிருந்து திருப்பூர் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலம்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவமனை கட்டிடத்தை திறந்து வைக்கிறார். இதனைத் தொடர்ந்து கோவையில் புதிய பஸ் நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கிறார். இதனைத்தொடர்ந்து மடத்துக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து ஆகஸ்ட் 12-ந்தேதி பொள்ளாச்சிக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாய பொதுமக்கள் நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக கட்டப்பட்டுள்ள புதிய அரங்கத்தை திறந்து வைக்கிறார்.
இந்த 2 நாட்கள் கோவையில், திருப்பூர் மாவட்டங்களில் ரோடு ஷோ மேற்கொள்ளவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.
கடந்த ஜூலை 22, 23-ந்தேதி கோவை, திருப்பூர் மாவட்டத்திற்கு கள ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக கள ஆய்வு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.






