என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பச்சிளம் பெண் குழந்தையை ரூ.2 லட்சத்திற்கு விற்க முயற்சி: பெண் உள்பட 3 பேர் கைது
    X

    பச்சிளம் பெண் குழந்தையை ரூ.2 லட்சத்திற்கு விற்க முயற்சி: பெண் உள்பட 3 பேர் கைது

    • ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், 4-வதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் பெற்றோர் கவலை அடைந்தனர்.
    • பச்சிளம் குழந்தையை வாங்கிய சிந்து, அதனை விற்க முயற்சித்தார்.

    கோவை:

    திருப்பூர் மாவட்டம் மங்கலம் அருகே உள்ள பள்ளபாளையத்தை சேர்ந்தவர் 35 வயது பனியன் தொழிலாளி.

    இவருக்கு 30 வயதில் மனைவி, 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அந்த பெண், 4-வதாக கர்ப்பம் ஆனார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு பிரசவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை அவரது கணவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவருக்கு கடந்த 26-ந் தேதி பெண் குழந்தை பிறந்தது.

    ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், 4-வதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் பெற்றோர் கவலை அடைந்தனர். இதனால் அந்த பெண் குழந்தையை தத்து கொடுக்கலாம் என அவர்கள் முடிவு செய்தனர்.

    இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சிந்து (வயது32) என்ற பெண், அந்த தம்பதிக்கு அறிமுகம் ஆனார். சிந்து, அவர்களிடம், எனக்கு தெரிந்த ஒருவர் மிகவும் வசதியானவர். திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் அவருக்கு குழந்தை இல்லை.

    எனவே அவர்களிடம் உங்கள் குழந்தையை கொடுத்தால் நன்றாக பார்த்துக் கொள்வார் என கூறியுள்ளார். அதன்படி பெற்றோர், பிறந்து 11 நாளே ஆன பச்சிளம் பெண் குழந்தையை சிந்துவிடம் கொடுத்தனர். பச்சிளம் குழந்தையை வாங்கிய சிந்து, அதனை விற்க முயற்சித்தார்.

    இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் சைல்டு லைன் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து அந்த குழந்தையை மீட்டனர். மேலும் சிந்து மற்றும் குழந்தையின் பெற்றோரை பிடித்து விசாரித்தனர்.

    அப்போது பெற்றோர், தங்களால் குழந்தையை வளர்க்க முடியாததால் வேறு ஒரு நபரிடம் கொடுத்து வளர்க்க அந்த குழந்தையை சிந்துவிடம் கொடுத்ததாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் கோவை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நடந்ததால் அதிகாரிகள் சிந்துவை ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும் மீட்கப்பட்ட 11 நாள் பெண் குழந்தையை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    போலீசார் சிந்துவை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் சிந்து, இளம்பெண்ணுக்கு குழந்தை பிறந்ததும் தொழிலாளியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவர்களை சந்தித்து, எனக்கு தெரிந்த வசதி படைத்த ஒருவருக்கு பல ஆண்டுகளாக குழந்தை இல்லை.

    அவர்களுக்கு உங்களது குழந்தையை கொடுத்து விடலாம் என கூறியுள்ளார். அவர்களும் அதற்கு சம்மதித்து சிந்துவிடம் குழந்தையை கொடுத்துள்ளனர்.

    குழந்தையை வாங்கிய சிந்து, அதனை சோமனூரை சேர்ந்தவரிடம் ரூ.2 லட்சத்திற்கு விற்க பேரம் பேசியுள்ளார். அவர் பணம் தந்ததும் குழந்தையை கொடுத்துவிட தயாராக இருந்தார். ஆனால் அதற்குள் போலீசில் சிக்கி கொண்டார்.

    குழந்தையை விற்பதற்கு சிந்துவுக்கு, மற்றொரு புரோக்கரான பிரசாத் மற்றும் குழந்தையின் தந்தையும் உடந்தையாக இருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் சிந்து, பிரசாத், குழந்தையின் தந்தை ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். கைதான 3 பேரையும் இன்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.

    பிறந்த 11 நாளே ஆன பெண் குழந்தையை விற்க முயன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×