என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • விழாவுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார்.
    • தமிழகம் முழுவதும் இருந்து 3 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.

    கரூர்:

    தி.மு.க. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 17-ம் தேதி அண்ணா பிறந்தநாள், பெரியார் பிறந்த நாள், தி.மு.க. தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் இந்த ஆண்டு கொங்கு மண்டலத்தைச் சார்ந்த கரூர் மாவட்டத்தில் நடைபெறும் என்று தி.மு.க. தலைமை அறிவித்தது. அதன்படி கரூர் திருச்சி சாலையில் கோடங்கிபட்டி அருகில் நாளை(புதன்கிழமை) மாலை 5 மணிக்கு முப்பெரும் விழா நடைபெறுகிறது.

    விழாவுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். கரூர் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி வரவேற்று பேசுகிறார்.

    பொருளாளர் டி.ஆர். பாலு, முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, துணை பொது செயலாளர் அமைச்சர் ஐ.பெரியசாமி, எம்.பி.க்கள் திருச்சி சிவா, ஆ ராசா, கனிமொழி, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

    விழாவில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு கட்சிப் பணிகளில் சிறப்பாக செயல்பட்ட மூத்த முன்னோடிகள் 6 பேருக்கு பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர் பாரதிதாசன், பேராசிரியர், மு.க. ஸ்டாலின் விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    இந்த விழாவுக்காக கோடங்கிபட்டி அருகில் 50 ஏக்கர் நிலத்தில் மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் கடந்த 10 நாட்களாக நடந்தன. 200 அடி அகலம் 60 அடி நீளத்தில் மிக பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் இருந்து 3 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். இதில் இளைஞர் அணி நிர்வாகிகள் ஒரே மாதிரியான டீ சர்ட் சீருடையுலும், இளம்பெண்கள் ஒரே மாதிரியான சுடிதார் உடையிலும், பெண்கள் ஒரே மாதிரியான புடவையிலும், ஆண்கள் ஒரே மாதிரியான கட்சி வேட்டி சட்டையிலும் கலந்து கொள்கிறார்கள்.

    விழாவில் பங்கேற்கும் முதல்வர் நாளை காலை 10:30 மணிக்கு விமானம் மூலம் திருச்சி வருகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் கரூர் வருகை தருகிறார். கரூர் தான்தோன்றி மலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். அதன் பின்னர் மாலை 4 மணிக்கு புறப்பட்டு முப்பெரும் விழா நடைபெறும் மேடைக்கு வருகை தர உள்ளார்.

    முதலமைச்சர் மற்றும் துணை முதல்வர் வருகையை முன்னிட்டு கரூர் மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. வாழை தோரணங்கள், அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டு வருகிறது. கட்சி கொடி, தோரணங்கள் கட்டப்பட்டு வருகின்றன. முதல்வரின் வருகையொட்டி கரூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    • பஸ்சில் பிளாஸ்டிக் தண்ணீா் பாட்டில்கள் உள்ளதாக ஊட்டி நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
    • சோதனை சாவடிகளில் கடுமையான சோதனைகளை மேற்கொண்டால் மட்டுமே நீலகிரியின் சுற்றுச்சூழல் காக்கப்படும்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் குடிநீா் பாட்டில் உள்பட 19 வகையான பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தடையை மீறி, நீலகிரிக்கு பிளாஸ்டிக் பொருள்கள் கொண்டுவரப்படுகிறதா? என்பது குறித்து அவ்வப்போது அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் அடிக்கடி அதிகாரிகள் ஆய்வு செய்து பிளாஸ்டிக் வைத்திருப்போருக்கு அபராதம் விதித்து வருகிறார்கள்.

    இந்நிலையில், கா்நாடக மாநிலம் சிக்மகளூர் நகராட்சி ஆணையாளர், நகராட்சி கவுன்சிலா்கள் மற்றும் சிக்மகளூர் சட்டப்பேரவை உறுப்பினா் கொண்ட குழு நீலகிரியில் திடக்கழிவு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக அண்மையில் ஊட்டிக்கு வந்தனர். அவா்கள் வந்த பஸ்சில் பிளாஸ்டிக் தண்ணீா் பாட்டில்கள் உள்ளதாக ஊட்டி நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, அந்தப் பஸ்சில் நகராட்சி நகா்நல அலுவலா் சிபி தலைமையிலான நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அதில் 1 லிட்டா் பிளாஸ்டிக் குடிநீா் பாட்டில்கள் 60 இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, பாட்டில் ஒன்றுக்கு ரூ.100 வீதம் ரூ.6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    இது குறித்து சமூக ஆா்வலா்கள் கூறுகையில், கூடலூா், நாடுகாணி சோதனை சாவடிகளை கடந்து தண்ணீா் பாட்டில்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

    இது சோதனைச் சாவடியின் குறைபாட்டை காட்டுகிறது. சோதனை சாவடிகளில் கடுமையான சோதனைகளை மேற்கொண்டால் மட்டுமே நீலகிரியின் சுற்றுச்சூழல் காக்கப்படும். இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
    • நேற்று சவனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.81,680-க்கு விற்பனையானது.

    சென்னை:

    சென்னையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

    கடந்த வாரம் முழுவதும் உயர்ந்த தங்கம் விலை வார தொடக்க நாளான நேற்று சற்று குறைந்தது. சவனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.81,680-க்கு விற்பனையானது.

    இந்த நிலையில், இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,280-க்கும் சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ. 82,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 144 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 44 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    15-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.81,680

    14-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.81,760

    13-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.81,760

    12-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 81,920

    11-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 81,200

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    15-09-2025- ஒரு கிராம் ரூ.143

    14-09-2025- ஒரு கிராம் ரூ.143

    13-09-2025- ஒரு கிராம் ரூ.143

    12-09-2025- ஒரு கிராம் ரூ.142

    11-09-2025- ஒரு கிராம் ரூ.140

    • ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து 16 ஆயிரம் கன அடி வந்தது.
    • சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    தருமபுரி:

    கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து 16 ஆயிரம் கன அடி வந்தது.

    இதையடுத்து காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்துள்ளது. இதன் காரணமாக இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 9,500 கனஅடியாக தண்ணீர் குறைந்து வந்தது.

    இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    இதனால் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    மேலும் அவர்கள் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர். பின்னர் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

    சுற்றுலா பயணிகள் மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

    நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • மாநில அரசு 55 சதவீதம் வரி விதிக்கிறது என்று சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது.
    • மத்திய, மாநில அரசு சார்பில் தலா 2.5 சதவீத வரி மட்டுமே சமையல் கியாசுக்கு விதிக்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் சமையல் கியாசுக்கு மத்திய அரசு 5 சதவீதம்தான் வரி விதிக்கிறது. ஆனால், மாநில அரசு 55 சதவீதம் வரி விதிக்கிறது என்று சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது. இது முற்றிலும் தவறான தகவல் என்று தமிழக அரசு சார்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்ட பதிவில், 'சமையல் கியாஸ் ஜி.எஸ்.டி. வரியின் கீழ் வருகிறது. மத்திய, மாநில அரசு சார்பில் தலா 2.5 சதவீத வரி மட்டுமே சமையல் கியாசுக்கு விதிக்கப்படுகிறது. எனவே வதந்திகளை பரப்ப வேண்டாம்' என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    • தினந்தோறும் பல்வேறு தேவைகளுக்காக ரெயில்களில் லட்சக்கணக்கானோர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
    • 84 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வேயின் கீழ் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 கோட்டங்கள் உள்ளன. இங்கிருந்து நாள்தோறும் 400-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தினந்தோறும் பல்வேறு தேவைகளுக்காக ரெயில்களில் லட்சக்கணக்கானோர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

    ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள் ரெயிலில் படிக்கட்டில் தொங்கியபடியோ, ஓடும் ரெயிலில் ஏறவோ, இறங்கவோ கூடாது, தண்டவாளங்கள் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் யாரும் கடந்து செல்லக்கூடாது என ரெயில்வே நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி, இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு ரெயில்வே பாதுகாப்பு படையினர் அபராதம் விதித்து வருகின்றனர்.

    என்னதான் விழிப்புணர்வு மற்றும் அபராதம் விதித்தாலும் ரெயில்களில் படிக்கட்டில் நின்று பயணம் செய்பவர்கள், தண்டவாளங்களை கடந்து செல்பவர்கள் யாரும் தங்களை மாற்றி கொள்ள முன்வரவில்லை. இதனால் பல்வேறு பயணிகள் மற்றும் பொதுமக்கள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அவ்வபோது அரங்கேறி வருகிறது.

    அந்தவகையில், தெற்கு ரெயில்வேயில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்டு மாதம் வரையில் 8 மாதங்களில் தண்டவாளங்களை கடக்க முயன்றபோது எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மோதி 410 பேர் உயிரிழந்துள்ளனர். 48 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும், கடந்த 8 மாதங்களில் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் இருந்து தவறி விழுந்து 68 பேர் உயிரிழந்துள்ளனர்.

    84 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க வேண்டும் என்றால், பயணிகளும், பொதுமக்களும் தாங்களே தங்களை மாற்றிக்கொண்டால் மட்டுமே தடுக்க முடியும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

    • துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார்.
    • 17,18 ஆகிய தேதிகளுக்கான சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், சில நாட்களுக்கு முன் டெல்லிக்கு சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாலை 5 மணிக்கு டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். அவருடன் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி ஆகியோரும் சென்றுள்ளனர்.

    டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார். மேலும் மாலை 4 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பா.ஜ.க. முக்கிய தலைவர்களையும் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்தை ஒட்டி நாளை மற்றும் நாளை மறுநாளுக்கான சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

    • 21-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • சென்னையிலும் நள்ளிரவு முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 21-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இதனால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. சென்னையிலும் நள்ளிரவு முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, சேலம், திண்டுக்கல், கோவை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
    • அப்பாசாமி, சங்கர் நகர் மெயின் ரோடு, காந்தி மெயின் ரோடு.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (17.09.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    அடையாறு: வெங்கடேஸ்வரா நகர், எம்ஜிஆர் நகர், பைபாஸ் ரோடு, தேவி கருமாரியம்மன் நகர், சசி நகர், பத்மாவதி நகர், முருகன் நகர், விஜயா நகர், கங்கை நகர், புவனேஸ்வரி நகர், ராம் நகர், நேரு நகர், தண்டீஸ்வரம் நகர், வேளச்சேரி மெயின் ரோடு, 100 அடி ரோடு, ராஜலட்சுமி நகர், வி.ஜி.பி., தெரு, காந்திஅம்மாபுரம் செல்வா நகர், சீத்தாராமன் நகர், புவனேஸ்வரி நகர், வேளச்சேரி மெயின் ரோடு, தரமணி மற்றும் பேபி நகர்.

    செம்பியம்: எம்.எச்.ரோடு, கொல்லம் தோட்டம், செயின்ட் மேரீஸ் சாலை, சொக்கலிங்கம் தெரு, சின்ன குளந்தை 1 முதல் 4வது தெரு, எஸ்எஸ்வி கோவில் 1 முதல் 3வது தெரு, என்எஸ்கே தெரு, மதியழகன் தெரு, சீதாராமன் நகர் 1 முதல் 6வது தெரு, நரசிம்மரெட்டி நகர், 1 முதல் 4வது தெரு, பள்ளி உயர் சாலை, மணலி.

    பம்மல்: கிழக்கு மெயின் ரோடு, அப்பாசாமி, சங்கர் நகர் மெயின் ரோடு, காந்தி மெயின் ரோடு, சங்கர் நகர் 2வது குறுக்குத் தெரு, சங்கர் நகர் 17வது முதல் 27வது தெரு, பிள்ளையார் கோவில் தெரு, மற்றும் திருநீர்மலை மெயின் ரோடு.

    தரமணி: காமராஜ் அவென்யூ 1வது, 2வது தெரு மற்றும் 3வது குறுக்குத் தெரு, கஸ்தூரிபாய் நகர், கால்வாய் வங்கி சாலை, ஜஸ்டிஸ் ராமசாமி தெரு, வெங்கடரத்தினம் நகர் மெயின் ரோடு, டீச்சர்ஸ் காலனி, 4வது முதல் 8வது மெயின் ரோடு, 6வது முதல் 15வது குறுக்குத் தெரு மற்றும் இந்திரா நகர்.

    • வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கியது.
    • வரும் 19-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

    தமிழ்நாட்டின் அனேக இடங்களில் வரும் 19-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

    இந்நிலையில், சென்னையில் அதிகாலை முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டியது. இதனால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    சென்னை மட்டுமில்லாமல் வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது.

    • 12 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.
    • 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றிக்கு மதிமுக உழைக்கும்.

    பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி திருச்சி மாவட்டம் சிறுகனூரில் மதிமுக சார்பில் நேற்று (செப். 15) மாநாடு நடைபெற்றது.

    இந்த மாநாட்டில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதன்மை செயலாளரும் எம்.பி.யுமான துரை வைகோ மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

    இதில் 2025 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றிக்கு உழைப்பது, தமிழகத்தில் சிறப்பு வாக்காளர் திருத்தப்பணி என்ற பாஜக சதியை முறியடிக்க வேண்டும் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

    மாநாட்டில் பேசிய வைகோ, எந்தத் தடையையும் பொருட்படுத்தாது மதிமுக பயணித்துக்கொண்டே இருக்கும். ஸ்டெர்லைட் ஆலையை போராடி விரட்டியடித்த இயக்கம் மதிமுக. டாக்டர் அம்பேத்கர் படத்தை நாடாளுமன்ற மைய மண்டபத்தில் திறந்துவைக்க காரணமாக இருந்தது மதிமுக.

    முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை பெரும்பாலும் நிறைவேற்றிவிட்டது. கொடுக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளது. சில வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியாமல் போனதற்கு மத்திய அரசு இடையில் நிற்பதுதான் காரணம்.

    2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றிக்கு மதிமுக உழைக்கும்" என்று பேசினார்.  

    • என்மீது எப்போது வைகோ அபாண்டமான பழியை சொன்னாரோ, அப்போதே நான் கட்டியிருந்த சிவப்பு, கருப்பு வேட்டியை அவிழ்த்துவிட்டேன்.
    • 7 நட்சத்திரங்களுடன் அமைந்துள்ள கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தினார்.

    ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளராக இருந்த மல்லை சத்யாவுக்கும், கட்சியின் முதன்மை செயலாளரும், வைகோவின் மகனுமான துரை வைகோவுக்கும் இடையே சில காலமாக கருத்து மோதல் நிலவி வந்தது.

    இதற்கிடையே விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததை போன்று, தன்னுடன் பல போராட்டங்களில் பங்கேற்ற மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்து விட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டினார்.

    துரோகி என்று கூறிய வைகோவுக்கு எதிராக மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு மல்லை சத்யா தனது ஆதரவாளர்களுடன் சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் கடந்த மாதம் 2-ம் தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

    கட்சி கட்டுப்பாட்டை மீறி தலைமைக்கு எதிராக செயல்படுவதாக ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார்.

    கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து மல்லை சத்யா கூறுகையில், என் மீது சுமத்தியிருக்கின்ற குற்றச்சாட்டு அபாண்டமான குற்றச்சாட்டு. எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனநாயகப் பண்பு கொண்ட தலைவர் வைகோவின் இருந்து அந்த வார்த்தை வந்திருக்கக் கூடாது என்பது நாட்டு மக்களின் கருத்தாக உள்ளது. என்மீது எப்போது வைகோ அபாண்டமான பழியை சொன்னாரோ, அப்போதே நான் கட்டியிருந்த சிவப்பு, கருப்பு வேட்டியை அவிழ்த்துவிட்டேன்.

    32 ஆண்டுகளில் ஒருநாளும் என் காரில் கொடி இல்லாமல் பயணம் செய்ததில்லை. ஆனால் பழி சொன்ன நாளிலேயே அகற்றிவிட்டேன். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.. அல்ல அல்ல.. 'மகன் திமுக'வில் இருந்து நாங்கள் விடுதலை பெற்றிருக்கிறோம் என்றுதான் பார்க்கிறேன். இனிமேல் நாங்கள் சுதந்திர மனிதனாக செயல்பட முடியும் என்றார்.

    இந்த நிலையில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான இன்று காஞ்சிபுரத்தில் வைத்து மல்லை சத்யா புதிய கட்சியை துவங்கி உள்ளார். கருப்பு-சிவப்பு நிறங்களில், 7 நட்சத்திரங்களுடன் அமைந்துள்ள கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தினார். கட்சியின் பெயரை நவம்பர் 20 ஆம் தேதி அறிவிப்பதாக மல்லை சத்யா தெரிவித்தார்.

    கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள மதிமுகவில் இருந்து விலகிய 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் புலவர் சே.செவிந்தியப்பன், மல்லை சத்யா, செங்குட்டுவன், அழகு சுந்தரம், வல்லம் பசீர், சேலம் ஆனந்தராஜ், இளவழகன் உள்ளிட்டவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    இதற்கிடைய அறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் விழா மாநாடு மதிமுக சார்பில் இன்று திருச்சியில் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    ×