என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • இந்திய மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
    • மெட்ரோ ரெயில்களில் ஒப்பிடும் போது இதுவே மிக நீளமான 'யு' கர்டர் ஸ்பான் ஆகும்.

    இந்திய மெட்ரோ ரெயில் கட்டுமானத்தில் முதன்முதலாக புதுமையான புல்லர் ஆக்சில் முறையைப் பயன்படுத்தி சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

    நேரு நகர் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான உயர்மட்ட வழித்தடத்தில் மேம்பட்ட கிரேன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 20 மீட்டர் உயரத்திற்கு 30 மீட்டர் யு கர்டரைக் கொண்டு செல்வதற்கும், அமைப்பதற்கும் மேம்பட்ட புல்லர் ஆக்சில் அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளார்.

    இதுகுறித்து இந்திய மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

    அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 3-ல் நேரு நகர் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான உயர்மட்ட வழித்தடத்தில் இந்திய மெட்ரோ திட்டங்களில், முதன்முறையாக மேம்பட்ட கிரேன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 20 மீ உயரத்திற்கு 30 மீ யு கர்டரைக் கொண்டு செல்வதற்கும், அமைப்பதற்கும் மேம்பட்ட புல்லர் ஆக்சில் அமைப்பை அறிமுகப்படுத்தி, சென்னை மெட்ரோ ரெயில் மைல்கல்லில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையை எட்டியுள்ளது. இத்திட்டத்திற்கான ஒப்பந்தம் லார்சன் & டூப்ரோ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மற்ற மெட்ரோ ரெயில்களில் ஒப்பிடும் போது இதுவே மிக நீளமான 'யு' கர்டர் ஸ்பான் ஆகும்.

    பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த கனரக வாகனம் 12 அச்சுகளில் தலா 8 டயர்களுடன் மொத்தம் 96 டயர்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மெட்ரோ இரயில் கட்டுமானத்தில் U Girder பணிக்கு தேவையான தடையற்ற போக்குவரத்து, எடை விநியோகம் நிலைத்தன்மை மற்றும் நெகிழ்வுத்தன்மை போன்ற பணிகள் உறுதி செய்யப்படும்.

    சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் திட்ட குழுவினர் இணைந்து இந்த புல்லர் ஆக்சில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 30மீ நீளமுள்ள 185 மெட்ரிக் டன் எடை கொண்ட U-கர்டரைக் வெற்றிகரமாக நிறுவியுள்ளது.

    சென்னை மெட்ரோ இரயில் திட்டக் குழு இதுபோன்ற புதுமையான தீர்வுகளை கட்டுமான பணிகளில் பயன்படுத்துவதால், இந்திய மெட்ரோ துறையின் வரலாற்று மைல்கல் சாதனையை அடையாளப்படுத்துவது மட்டுமல்லாமல், சிக்கலான மற்றும் லட்சியத் திட்டங்களைத் துல்லியமாகவும் நிபுணத்துவத்துடனும் செயல்படுத்த பெரிதும் உதவுகிறது.

    ஒக்கியம்பேட்டை மற்றும் காரப்பாக்கம் இடையே முதல் நீளமான 'யு' கர்டர் ஸ்பான் இன்று (10.01.2024) அமைக்கப்பட்டது. சென்னை மெட்ரோ ரெயில்

    நிறுவனத்தின் திட்ட இயக்குநர் திரு. தி.அர்ச்சுனன், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், பொது ஆலோசகர்கள் மற்றும் லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இந்த நிகழ்வின் போது உடன் இருந்தனர்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    • அ.தி.மு.க. கட்சியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார்.
    • ஓ.பி.எஸ். மேல்முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பு.

    அ.தி.மு.க. பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகிறது.

    சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபீக் அடங்கிய அமர்வு காாலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்க இருக்கிறது. அ.தி.மு.க. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பி.எஸ். கட்சி கொடி, சின்னத்தை பயன்படுத்த தனி நீதிபதி தடை விதித்து இருந்தார்.

    இவரது தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.எஸ். சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் கைது.
    • நாளை கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த நோட்டீஸ்.

    ஊதிய உயர்வு, நிரந்தர பணி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி இன்று பேரணியாக செல்ல முயன்றனர்.

    இதைதொடர்ந்து, 300க்கும் மேற்பட்ட என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

    ஆனால், என்எல்சி தொழிலாளர்கள் திருமண மண்டபத்தை விட்டு வெளியே செல்ல மறுத்துவிட்டனர்.

    இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் விரைவில் என்எல்சி நிர்வாகத்துடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    இருப்பினும், நாளை கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், குடியரசு தினத்தன்று கருப்புக்கொடி ஏந்தி என்எல்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிடவும், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை துவக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • துணை வேந்தர் ஜெகநாதனை ஆளுநர் சந்திப்பதற்கு திமுக மாணவரணியினர் கடும் கண்டனம்
    • திமுக மாணவரணி சார்பில் நாளை சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி எழிலரசன் அறிவித்துள்ளார்.

    பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருக்கும் ஜெகநாதன், போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு மேற்கொண்டதாகப் பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

    இதனைத்தொடர்ந்து, சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கருப்பூர் காவல்துறையினரால் கடந்த டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், மோசடி, கூட்டுச்சதி செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதை தொடர்ந்து, பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ஜெகநாதனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். ஜெகநாதனுக்கு உடந்தையாக இருந்ததாக துணைவேந்தரின் தனிச் செயலாளர், பொறுப்பு பதிவாளர், கண்காணிப்பாளர் உட்பட 5 பேரிடமும் சேலம் கருப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    இந்நிலையில், முறைகேடு புகாரில் சிக்கிய துணைவேந்தர் ஜெகநாதனை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திக்க உள்ளார். சேலம் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற உள்ள விழாவில் பங்கேற்கச் செல்லும் ஆளுநர் ரவி, ஜெகநாதனை சந்திக்க உள்ளதற்கு திமுக மாணவரணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆளுநரை கண்டித்து திமுக மாணவரணி சார்பில் நாளை சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி எழிலரசன் அறிவித்துள்ளார்.

    மேலும், ஆளுநரை கண்டித்து நாளை சேலத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொள்வார்கள் எனவும் தெரிவித்தார்

    • கருக்கா வினோத்தின் வழக்கு என்.ஐ.ஏ., போலீசாருக்கு மாற்றப்பட்டது.
    • காவலில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ மனுத்தாக்கல் செய்திருந்தது.

    பிரபல ரவுடி கருக்கா வினோத் கடந்த ஆண்டு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டுகளை வீசினார்.

    பிறகு, கைது செய்யப்பட்ட கருக்கா வினோத்தின் வழக்கு என்.ஐ.ஏ., போலீசாருக்கு மாற்றப்பட்டது.

    கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ மனுத்தாக்கல் செய்திருந்தது.

    இந்த மனு மீதான விசாரணை இன்று சிறப்பு நீதிமன்றம் முன் வந்தது. இதில், ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கருக்கா வினோத்தை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    • வாழ்வச்சகோஷ்டம் வட்டாரத்தில் நியாய விலை கடை வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.
    • காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    வாழ்வச்சகோஷ்டம் வட்டாரத்தில் நியாய விலை கடை வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 12 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    அதன்படி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட நியாய விலை கடை கட்டிடத்தை பாராளுமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.


    இந்த நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.டி. உதயம், வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொன். சாலமன், வாழ்வச்சகோஷ்டம் பேரூராட்சி தலைவர் ஜான் டென்சிங், பேரூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராபர்ட் கிளைவ் உட்பட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்

    • பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு மாநகர பஸ்கள் மற்றும் அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
    • புகையிலை பொருட்கள், மது பானங்கள், கத்தி மற்றும் பிற ஆயுதங்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    பொங்கல் பண்டிகையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வருகிற 14-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை சுமார் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சுற்றிப்பார்க்க வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக காணும் பொங்கலான வருகிற 17-தேதி பார்வையாளர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிறப்பு முன்னேற்பாடு பணிகளை செய்வது தொடர்பாக பூங்கா நிர்வாகம் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது.

    இது தொடர்பாக வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    பொங்கல் பண்டிகையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்பதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு மாநகர பஸ்கள் மற்றும் அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    மேலும் 100-க்கும் மேற்பட்ட போலீசார், வனத்துறை ஊழியர்கள், தன்னார்வலர்கள் என 500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் மருத்துவ வசதிகளும் செய்து கொடுக்கப்படுகிறது. அவசர சிகிச்சை தேவைப்படும் பொதுமக்களுக்கு உதவ ஆம்புலன்சு ஒன்று தயார் நிலையில் இருக்கும். தீயணைப்பு வாகனமும் நிறுத்தி வைக்கப்பட உள்ளது. பூங்காவுக்கு வரும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக அவர்களின் கையில் அடையாள சீட்டு கட்டுவதற்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை விடுமுறை தினமாகும். பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் 16-ந்தேதி செவ்வாய்க்கிழமை திருவள்ளுவர் தினம் வருவதால் அன்றைய தினம் வண்டலூர் உயிரியல் பூங்கா பொதுமக்கள் பார்வைக்காக திறந்திருக்கும்.

    பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் கரும்பு, பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிக் பையில் அடைக்கப்பட்ட உணவு பொருட்கள், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், சிகரெட், புகையிலை பொருட்கள், மது பானங்கள், கத்தி மற்றும் பிற ஆயுதங்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    பொதுமக்கள் கூட்ட நெரிசல் இன்றி நுழைவு சீட்டு பெறும் வகையில் கூடுதல் டிக்கெட் கவுண்டர்கள் மூலம் டிக்கெட் வழங்கப்படும். மேலும் பொதுமக்கள், பூங்கா மொபைல் செயலி, இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். டிஜிட்டல் முறையிலும் பணம் செலுத்தி டிக்கெட் பெறும் முறைகளும் அறிமுகப்ப டுத்தப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்களை முழுமையாக அறிந்தபின் கருத்து தெரிவிப்போம்.
    • நீதிமன்ற உத்தரவின்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    வேலூர்:

    போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * பொங்கல் நேரத்தில் பேருந்துகளை இயக்க வேண்டும் என்பதுதான் முதலமைச்சரின் உத்தரவு

    * தொழிற்சங்கங்கள் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கள் முழுமையாக தெரியவில்லை.

    * நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்களை முழுமையாக அறிந்தபின் கருத்து தெரிவிப்போம்.

    * நீதிமன்ற உத்தரவின்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    * வரும் 19-ந்தேதி மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அதன்பிறகு நல்ல முடிவு எடுக்கப்படும்.

    * நிதி நிலையை பொறுத்து கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பண்டிகை நேரத்தில் இந்த வேலை நிறுத்தம் அவசியமா? இந்த போராட்டத்தால் பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள்.
    • பணிக்கு திரும்பும் போக்குவரத்து தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று காலை விசாரித்த நீதிமன்றம், ''போராட்டம் நடத்த உரிமை இல்லை என்று கூறவில்லை. தற்போதைய பண்டிகை நேரத்தில் அந்த போராட்டத்தை நடத்துவது முறையற்றது என்று தான் கூறுகிறோம்.

    பண்டிகை நேரத்தில் இந்த வேலை நிறுத்தம் அவசியமா? இந்த போராட்டத்தால் பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் மிகப்பெரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையின் போது பொதுமக்களுக்கு ஏன் இடையூறு ஏற்படுத்த வேண்டும்? நகரங்களில் உள்ள மக்கள் அதிகம் பாதிக்கப்படவில்லை என்றாலும், கிராமத்திற்கு செல்லக்கூடிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அரசும் சரி, போக்குவரத்து தொழிற்சங்கங்களும் சரி ஏன் இந்த விவகாரத்தில் பிடிவாதமாக இருக்கிறீர்கள்? இந்த விவகாரத்தில் தீர்வு காண்பதில் என்ன பிரச்சனை உள்ளது? என்று கேள்வி எழுப்பினர்.

    பின்னர் ஓய்வூதியதாரர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஜனவரி மாத பண பலன்களை அளிக்க முடியுமா? ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு பிற்பகலுக்குள் பதில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைத்தனர்.

    மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாகவும், ஜனவரி 19-ந்தேதி வரை வேலைநிறுத்த போராட்டத்தை ஒத்திவைப்பதாக தொழிற்சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் வேலை நிறுத்தத்தை நிறுத்தி வைத்து பணிக்கு திருப்பவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    பணிக்கு திரும்பும் போக்குவரத்து தொழிலாளர்களை அனுமதிக்க அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் பணிக்கு திரும்பும் போக்குவரத்து தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என தெரிவித்தனர்.

    • திருச்செந்தூர் செல்வதற்கு சரியான சாலை வசதி இல்லாத காரணத்தால் முருக பக்தர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
    • ரெயில்களை நேரடியாக திருச்செந்தூருக்கு நீட்டிக்க வேண்டும்.

    தென்காசி:

    செங்கோட்டை-நெல்லை வழித்தடமானது 1904-ல் மீட்டர் கேஜ் ஆக தொடங்கப்பட்டு 2012-ல் அகல பாதையாக மாற்றப்பட்டு 16 ரெயில் நிலையங்களுடன் தற்போது செயல்பாட்டில் உள்ளது.

    விரைவில் இயங்க இருக்கும் ஈரோடு-செங்கோட்டை ரெயிலையும் சேர்த்து தற்போது 6 தினசரி ரெயில்களும் ஒரு வாரம் மும்முறை ரெயில், ஒரு வாராந்திர ரெயில் உட்பட 8 ரெயில்கள் இயங்கி வருகின்றன.

    அதைப்போல 60 கிலோ மீட்டர் நீளம் கொண்ட நெல்லை-திருச்செந்தூர் வழித்தடமானது 1923-ம் ஆண்டு மீட்டர் கேஜ் வழித்தடமாக தொடங்கப்பட்டு 2009-ல் அகலப்பாதையாக மாற்றப்பட்டு 10 ரெயில் நிலையங்களுடன் தற்போது செயல்பாட்டில் உள்ளது. செந்தூர் எக்ஸ்பிரஸ் உட்பட மொத்தம் 7 தினசரி ரெயில்கள் இயங்கி வருகின்றன.

    இந்த இரு வழித்தடங்களிலும் 110 கிலோ மீட்டர் வேகத்தில் மின்சார என்ஜின் கொண்டு தற்போது ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. செங்கோட்டை-நெல்லை-திருச்செந்தூர் ரெயில் வழிதடங்கள் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருந்தாலும் இதுவரை நேரடி ரெயில்கள் இயக்கப்படாமல் இருந்து வருகிறது.

    இந்நிலையில் செங்கோட்டை-நெல்லை திருச்செந்தூர் இடையே நேரடி ரெயில்கள் இயக்க வேண்டும் என்பது முருக பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.

    செங்கோட்டையில் இருந்து காலை 6.40 மற்றும் மதியம் 2.35 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் ரெயில்களை நேரடியாக திருச்செந்தூருக்கு நீட்டிக்க வேண்டும்.


    அதைப்போல திருச்செந்தூரில் இருந்து காலை 7.20 மற்றும் மதியம் 4.25-க்கு புறப்பட்டு நெல்லை செல்லும் ரெயிலை நேரடியாக செங்கோட்டைக்கு நீட்டிக்க வேண்டும். இவ்வாறு இணைப்பதால் ரெயில் இயக்கத்தில் எந்த இடையூறும் இருக்காது. மேலும் தென்காசி மற்றும் நெல்லை மேற்கு மாவட்ட முருக பக்தர்களுக்கு வசதியாக இருக்கும்.

    தற்போது திருச்செந்தூர் செல்வதற்கு சரியான சாலை வசதி இல்லாத காரணத்தால் முருக பக்தர்கள் அவதியடைந்து வருகின்றனர்.

    இதுகுறித்து பாவூர்சத்திரம் திப்பணம்பட்டியை சேர்ந்த முருக பக்தர் வேல்முருகன் கூறியதாவது:-

    சூரசம்ஹாரம், தைப்பூசம், பங்குனி உத்திரம், மாசி பெருந்திருவிழா உள்ளிட்டவை திருச்செந்தூர் முருகன் கோவிலில் வெகு சிறப்பாக நடைபெறும் விழாக்கள் மற்றும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் முருக பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    தென்காசி மாவட்டத்தில் இருந்து லட்சக்கணக்கான முருக பக்தர்கள் திருச்செந்தூர் சென்று வருகிறோம். செங்கோட்டை-திருச்செந்தூர் இடையே நேரடி ரெயில்கள் இயக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    எனவே கூடுதல் பெட்டிகள் இணைத்து செங்கோட்டை-திருச்செந்தூர் இடையே நேரடி ரெயில்கள் இயக்க தெற்கு ரெயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கடந்த 2 நாட்களாக கோவில் வசந்த மண்டபத்தில் நடைபெற்றது.
    • தங்கம் 1100 கிராம், வெள்ளி 29,300 கிராம், பித்தளை 80 கிலோ, செம்பு 6 கிலோ 500 கிராம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் 417-ம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் வருவாய் மாதந்தோறும் எண்ணப்படுகிறது.

    இதன்படி கடந்த மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கடந்த 2 நாட்களாக கோவில் வசந்த மண்டபத்தில் நடைபெற்றது. கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன் தலைமையில் இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன் ஆகியோர் முன்னிலையில் காணிக்கை எண்ணப்பட்டது.

    இந்த பணியில் சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவாரபணிக் குழுவினர், தூத்துக்குடி ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் உழவாரப்பணிக்குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    இதில் நிரந்தர உண்டியல் மூலம் ரூ.2 கோடியே 70 லட்சத்து 70 ஆயிரத்து 541-ம், தங்கம் 1100 கிராம், வெள்ளி 29,300 கிராம், பித்தளை 80 கிலோ, செம்பு 6 கிலோ 500 கிராம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் 417-ம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி உதவி ஆணையர் சங்கர், கண்காணிப்பாளர் ஆனந்தராஜ், ஆய்வர் செந்தில்நாயகி, அறங்காவலர் குழுத்தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தமிழ்பாண்டியன் ஆகியோரும், பொதுமக்கள் பிரதிநிதிகளாக சுப்பிரமணியன், கருப்பன், மோகன் ஆகியோர் பார்வையாளர்களாகவும் பங்கேற்றனர்.

    • 1999-ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி சார்பில் கட்டை வண்டி சின்னத்தில் போட்டியிட்டு 1 லட்சம் வாக்குகள் பெற்றேன்.
    • தேனி மண்ணில் டி.டி.வி.தினகரனுக்கு எதிராக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு துரோகிகளை மண்ணை கவ்வ வைப்பேன்.

    சென்னை:

    தமிழ் திரையுலகில் வில்லன் நடிகராக இருப்பவர் மன்சூர் அலிகான். சமீபத்தில் நடிகை திரிஷா பற்றி இவர் பேசிய கருத்துக்கள் பெரிய சர்ச்சையாக வெடித்தது.

    இதையொட்டி மன்சூர் அலிகான் மீது போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில் மன்சூர் அலிகான் டி.டி.வி.தினகரனை எதிர்த்து போட்டியிட போவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

    நான் 1999-ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி சார்பில் கட்டை வண்டி சின்னத்தில் போட்டியிட்டு 1 லட்சம் வாக்குகள் பெற்றேன். தேர்தலில் போட்டியிட்ட டி.டி.வி.தினகரன் ஜெயலலிதா பெயரால் வெற்றி பெற்றார்.

    நான் ஜெயலலிதா மரணத்திற்கு வழக்குப் போட்டு எல்லா ஆவணங்களையும் வைத்துள்ளேன். அம்மாவின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டு அவரை கவர்னர் உள்பட யாரையும் பார்க்கவிடாமல் செய்தனர்.

    இதை மக்களிடம் எடுத்து சொல்ல 1999-ம் ஆண்டு நான் தோற்ற அதே பெரிய குளம் தேனி மண்ணில் டி.டி.வி.தினகரனுக்கு எதிராக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு துரோகிகளை மண்ணை கவ்வ வைப்பேன்.

    இது சத்தியம். எந்த கட்சியுடன் கூட்டணி வைத்து வந்தாலும் சரி. இந்தா வர்றேன்டா...

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×