search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கோட்டை-திருச்செந்தூர் இடையே நேரடி ரெயில்கள் இயக்க வேண்டும்: முருக பக்தர்கள் கோரிக்கை
    X

    செங்கோட்டை-திருச்செந்தூர் இடையே நேரடி ரெயில்கள் இயக்க வேண்டும்: முருக பக்தர்கள் கோரிக்கை

    • திருச்செந்தூர் செல்வதற்கு சரியான சாலை வசதி இல்லாத காரணத்தால் முருக பக்தர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
    • ரெயில்களை நேரடியாக திருச்செந்தூருக்கு நீட்டிக்க வேண்டும்.

    தென்காசி:

    செங்கோட்டை-நெல்லை வழித்தடமானது 1904-ல் மீட்டர் கேஜ் ஆக தொடங்கப்பட்டு 2012-ல் அகல பாதையாக மாற்றப்பட்டு 16 ரெயில் நிலையங்களுடன் தற்போது செயல்பாட்டில் உள்ளது.

    விரைவில் இயங்க இருக்கும் ஈரோடு-செங்கோட்டை ரெயிலையும் சேர்த்து தற்போது 6 தினசரி ரெயில்களும் ஒரு வாரம் மும்முறை ரெயில், ஒரு வாராந்திர ரெயில் உட்பட 8 ரெயில்கள் இயங்கி வருகின்றன.

    அதைப்போல 60 கிலோ மீட்டர் நீளம் கொண்ட நெல்லை-திருச்செந்தூர் வழித்தடமானது 1923-ம் ஆண்டு மீட்டர் கேஜ் வழித்தடமாக தொடங்கப்பட்டு 2009-ல் அகலப்பாதையாக மாற்றப்பட்டு 10 ரெயில் நிலையங்களுடன் தற்போது செயல்பாட்டில் உள்ளது. செந்தூர் எக்ஸ்பிரஸ் உட்பட மொத்தம் 7 தினசரி ரெயில்கள் இயங்கி வருகின்றன.

    இந்த இரு வழித்தடங்களிலும் 110 கிலோ மீட்டர் வேகத்தில் மின்சார என்ஜின் கொண்டு தற்போது ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. செங்கோட்டை-நெல்லை-திருச்செந்தூர் ரெயில் வழிதடங்கள் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருந்தாலும் இதுவரை நேரடி ரெயில்கள் இயக்கப்படாமல் இருந்து வருகிறது.

    இந்நிலையில் செங்கோட்டை-நெல்லை திருச்செந்தூர் இடையே நேரடி ரெயில்கள் இயக்க வேண்டும் என்பது முருக பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.

    செங்கோட்டையில் இருந்து காலை 6.40 மற்றும் மதியம் 2.35 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் ரெயில்களை நேரடியாக திருச்செந்தூருக்கு நீட்டிக்க வேண்டும்.


    அதைப்போல திருச்செந்தூரில் இருந்து காலை 7.20 மற்றும் மதியம் 4.25-க்கு புறப்பட்டு நெல்லை செல்லும் ரெயிலை நேரடியாக செங்கோட்டைக்கு நீட்டிக்க வேண்டும். இவ்வாறு இணைப்பதால் ரெயில் இயக்கத்தில் எந்த இடையூறும் இருக்காது. மேலும் தென்காசி மற்றும் நெல்லை மேற்கு மாவட்ட முருக பக்தர்களுக்கு வசதியாக இருக்கும்.

    தற்போது திருச்செந்தூர் செல்வதற்கு சரியான சாலை வசதி இல்லாத காரணத்தால் முருக பக்தர்கள் அவதியடைந்து வருகின்றனர்.

    இதுகுறித்து பாவூர்சத்திரம் திப்பணம்பட்டியை சேர்ந்த முருக பக்தர் வேல்முருகன் கூறியதாவது:-

    சூரசம்ஹாரம், தைப்பூசம், பங்குனி உத்திரம், மாசி பெருந்திருவிழா உள்ளிட்டவை திருச்செந்தூர் முருகன் கோவிலில் வெகு சிறப்பாக நடைபெறும் விழாக்கள் மற்றும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் முருக பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    தென்காசி மாவட்டத்தில் இருந்து லட்சக்கணக்கான முருக பக்தர்கள் திருச்செந்தூர் சென்று வருகிறோம். செங்கோட்டை-திருச்செந்தூர் இடையே நேரடி ரெயில்கள் இயக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    எனவே கூடுதல் பெட்டிகள் இணைத்து செங்கோட்டை-திருச்செந்தூர் இடையே நேரடி ரெயில்கள் இயக்க தெற்கு ரெயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×