search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கரும்பு எடுத்து வர தடை
    X

    வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கரும்பு எடுத்து வர தடை

    • பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு மாநகர பஸ்கள் மற்றும் அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
    • புகையிலை பொருட்கள், மது பானங்கள், கத்தி மற்றும் பிற ஆயுதங்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    பொங்கல் பண்டிகையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வருகிற 14-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை சுமார் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சுற்றிப்பார்க்க வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக காணும் பொங்கலான வருகிற 17-தேதி பார்வையாளர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிறப்பு முன்னேற்பாடு பணிகளை செய்வது தொடர்பாக பூங்கா நிர்வாகம் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது.

    இது தொடர்பாக வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    பொங்கல் பண்டிகையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்பதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு மாநகர பஸ்கள் மற்றும் அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    மேலும் 100-க்கும் மேற்பட்ட போலீசார், வனத்துறை ஊழியர்கள், தன்னார்வலர்கள் என 500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் மருத்துவ வசதிகளும் செய்து கொடுக்கப்படுகிறது. அவசர சிகிச்சை தேவைப்படும் பொதுமக்களுக்கு உதவ ஆம்புலன்சு ஒன்று தயார் நிலையில் இருக்கும். தீயணைப்பு வாகனமும் நிறுத்தி வைக்கப்பட உள்ளது. பூங்காவுக்கு வரும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக அவர்களின் கையில் அடையாள சீட்டு கட்டுவதற்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை விடுமுறை தினமாகும். பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் 16-ந்தேதி செவ்வாய்க்கிழமை திருவள்ளுவர் தினம் வருவதால் அன்றைய தினம் வண்டலூர் உயிரியல் பூங்கா பொதுமக்கள் பார்வைக்காக திறந்திருக்கும்.

    பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் கரும்பு, பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிக் பையில் அடைக்கப்பட்ட உணவு பொருட்கள், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், சிகரெட், புகையிலை பொருட்கள், மது பானங்கள், கத்தி மற்றும் பிற ஆயுதங்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    பொதுமக்கள் கூட்ட நெரிசல் இன்றி நுழைவு சீட்டு பெறும் வகையில் கூடுதல் டிக்கெட் கவுண்டர்கள் மூலம் டிக்கெட் வழங்கப்படும். மேலும் பொதுமக்கள், பூங்கா மொபைல் செயலி, இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். டிஜிட்டல் முறையிலும் பணம் செலுத்தி டிக்கெட் பெறும் முறைகளும் அறிமுகப்ப டுத்தப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×