என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ராமர் உருவம் பொறித்த காவி கொடி ஏற்றப்பட்டது.
    • கன்னியாகுமரி பகுதியில் பரபரப்பையும் பதட்டையும் ஏற்படுத்தி உள்ளது.

    கன்னியாகுமரி:

    அயோத்தியில் கடந்த ஜனவரி மாதம் 22-ந் தேதி ராமர் கோவிலில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதையொட்டி அன்றைய தினம் இரவு குமரி மாவட்ட பா.ஜ.க. சார்பில் கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

    மேலும் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறையில் கடல் நடுவில் உள்ள பாறையில் இரும்பு கம்பி நடப்பட்டு ராமர் உருவம் பொறித்த காவி கொடி ஏற்றப்பட்டது. அகஸ்தீஸ்வரம் ஒருங்கிணைந்த ஒன்றிய பார்வையாளர் சி.எஸ். சுபாஷ் தலைமையில் குமரி மாவட்ட பா.ஜ.க. தலைவர் தர்மராஜ் இந்த கொடியை ஏற்றி வைத்தார்.

    இந்த நிலையில் கன்னியாகுமரி கடல் நடுவில் உள்ள பாறையில் ஏற்றப்பட்ட ராமர்கொடி குறித்து சமூக வலைத் தளங்களில் சர்ச்சை கிளப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று இரவோடு இரவாக கடலில் உள்ள பாறையில் ஏற்றப்பட்ட ராமர் கொடி அகற்றப்பட்டது. அதையும் மீறி அந்த பகுதியில் மீண்டும் காவி கொடியேற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து இன்று காலை மீண்டும் அந்த காவி கொடி அகற்றப்பட்டது.

    இந்த சம்பவம் கன்னியாகுமரி பகுதியில் பரபரப்பையும் பதட்டையும் ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் ரோந்து சுற்றி தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    • தஞ்சாவூர் மாவட்டத்துக்கு செல்வது 16-ந் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
    • பொது தேர்தல் அறிக்கைக்கான பரிந்துரைகளை கேட்க உள்ளனர்.

    சென்னை:

    தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் கனிமொழி எம்.பி. தலைமையிலான குழுவினர் கடந்த 5-ந் தேதி முதல் ஒவ்வொரு மாவட்டமாக பல்வேறு தரப்பட்ட மக்களிடம் சென்று தேர்தல் அறிக்கைக்கான பரிந்துரைகளை கேட்டு வருகிறது.

    இந்த குழு மேற்கொள்ள இருக்கும் சுற்றுப்பயணத்தின் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டம் செல்கின்றனர்.

    நாளை (8-ந் தேதி) தஞ்சை-திருவாரூர், நாகை-திருவாரூர், திருச்சி-புதுக்கோட்டை மாவட்டங்களின் நிர்வாகிகளை சந்திப்பதாக இருந்தது. ஆனால் இப்போது தஞ்சாவூர் மாவட்டத்துக்கு செல்வது 16-ந் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

    9-ந் தேதி சேலத்துக்கு பதில் ஓசூர் செல்கிறார்கள். 10-ந் தேதி கோவை, திருப்பூருக்கும், 11-ந் தேதி சேலம் செல்லும் வகையிலும் சுற்றுப்பயணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 17-ந் தேதி விழுப்புரம், 18-ந் தேதி வேலூர், ஆரணிக்கு செல்லும் இந்த குழுவினர் 21, 22, 23-ந் தேதிகளில் சென்னையில் பொது தேர்தல் அறிக்கைக்கான பரிந்துரைகளை கேட்க உள்ளனர்.

    • ஒவ்வொரு மாநிலத்தின் சூழ்நிலைகளை ஆராய்ந்து தேர்தல் தேதிகளை முடிவு செய்வதற்கான பூர்வாங்க பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.
    • வாக்குப்பதிவு எந்திரங்களின் தயார் நிலை குறித்தும் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் தேர்தல் பயிற்சி குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி பற்றி அட்டவணையை இந்த மாதம் இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரம் வெளியிட தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது.

    அதற்கு முன்னதாக நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து வருகிறது.

    இதையொட்டி ஒவ்வொரு மாநிலத்தின் சூழ்நிலைகளை ஆராய்ந்து தேர்தல் தேதிகளை முடிவு செய்வதற்கான பூர்வாங்க பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.

    இதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தலுக்காக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள், வாக்காளர் பட்டியல் புதுப்பித்தல், வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கை, சட்டம்-ஒழுங்கு நிலவரம் ஆகியவை குறித்து அந்த மாநில தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிப்பதற்காக இந்திய துணை தேர்தல் கமிஷனர் அஜய் பதூ மற்றும் இந்திய தேர்தல் கமிஷனின் முதன்மைச் செயலாளர் மலேய் மாலிக் ஆகியோர் நேற்று சென்னை வந்திருந்தனர்.

    தலைமைச் செயலகத்தில் நேற்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய இவர்கள் வாக்காளர் இறுதி பட்டியல் நிலை குறித்தும், வாக்குப்பதிவு எந்திரங்களின் தயார் நிலை குறித்தும் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் தேர்தல் பயிற்சி குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.

    அதன்பிறகு வருமான வரித்துறை, சுங்கத்துறை, அமலாக்கத்துறை, சி.ஆர்.பி.எப். போலீஸ் அதிகாரிகள், தமிழக ஆயுதப்படை போலீசார், தேர்தல் பிரிவு போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

    இதைத்தொடர்ந்து இன்று மாவட்ட கலெக்டர்கள் போலீஸ் சூப்பிரண்டுகளுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்கள்.

    ஒவ்வொரு மாவட்ட கலெக்டரையும் தொடர்பு கொண்டு அந்தந்த மாவட்டங்களில் உள்ள வாக்காளர் பட்டியல் பற்றியும் திருத்தம் சம்பந்தமாகவும், எவ்வளவு வாக்குப்பதிவு எந்திரங்கள் கைவசம் உள்ளது என்பது பற்றியும், இன்னும் எவ்வளவு மின்னணு எந்திரங்கள் தேவைப்படும் என்பது பற்றியும் கேட்டறிந்தனர்.

    ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வெளி மாநில போலீசார் எவ்வளவு தேவைப்படும், பதட்டமான பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் காணொலி மூலம் விவாதித்தனர். இன்று மாலை வரை இந்த ஆய்வு நடைபெறும் என தெரிகிறது.

    அதன்பிறகு துணை தேர்தல் கமிஷனர் அஜய் பதூ மற்றும் தேர்தல் கமிஷன் முதன்மை செயலாளர் மலேய் மாலிக் ஆகியோர் டெல்லி புறப்பட்டுச் சென்று தலைமை தேர்தல் ஆணையரிடம் அறிக்கை சமர்ப்பிப்பார்கள்.

    • திமு.க கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    • மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு திமுக கூட்டணியில் 2 அல்லது 3 தொகுதிகளை கேட்டு பெற்று விட வேண்டும்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

    தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் தனித்து போட்டியிட்ட நிலையில் வருகிற பாராளுமன்ற தேர்தலை கூட்டணி அமைத்து சந்திக்க முடிவு செய்துள்ளது.

    இதற்காக மக்கள் நீதி மய்யம் கட்சி ஏற்கனவே அடித்தளமும் அமைத்துள்ளது. ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பிரசாரமும் மேற் கொண்டார்.


    இதன்மூலம் மக்கள் நீதி மய்யம் கட்சி தி.மு.க. கூட்டணியில் இடம் பெறுவது உறுதியானது.

    இந்த நிலையில் தி.மு.க. கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு இதுவரை யாரும் அழைக்காமலேயே உள்ளனர்.

    இதனால் மக்கள் நீதி மய்யம் கட்சி தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெறுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பேட்டியளித்த தி.மு.க. முன்னணி தலைவர்களில் ஒருவரான டி.ஆர்.பாலு தி.மு.க. கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி இடம் பெற்றுள்ளதா என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார்.

    இது கமல் கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு பேட்டி அளித்த அமைச்சர் ஐ.பெரியசாமி மக்கள் நீதி மய்யம் கட்சியை கூட்டணியில் சேர்ப்பது பற்றி வெளிநாட்டிலிருந்து திரும்பியதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார் என்று கூறியிருந்தார். இதன் மூலம் மக்கள் நீதி மய்யம் கட்சி தி.மு.க. கூட்டணியில் சேர்வதற்கான சூழல் ஏற்பட்டிருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.

    இதற்கிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்பினார். அதே நேரத்தில் வெளிநாட்டில் இருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அடுத்த வாரமே சென்னை திரும்புகிறார். வருகிற 12 அல்லது 13-ந்தேதி அவர் சென்னை திரும்ப உள்ளார்.


    அதன் பிறகு தி.மு.க. கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் தொகுதிகள் முடிவு செய்யப்பட்டு முறைப்படி அறிவிப்பு வெளியாகும் என கமல் கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    வெளிநாட்டில் இருந்து திரும்பியதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கமல்ஹாசன் நேரில் சந்தித்து பேசுவதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தி.மு.க. கூட்டணியில் 2 அல்லது 3 தொகுதிகளை கேட்டு பெற்று விட வேண்டும் என்பதில் அந்த கட்சி நிர்வாகிகள் தீவிரமாக உள்ளனர்.

    இது தொடர்பாக கமல்ஹாசன் பேச்சு நடத்தி உரிய முடிவை எடுப்பார் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    தென்சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 தொகுதிகளையும் தி.மு.க. கூட்டணியில் குறிவைத்து மக்கள் நீதி மய்யம் கட்சி காய் நகர்த்தி வருவது குறிப்பிடத்தக்கது. அனைத்து கட்சிகளும் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க பம்பரமாக சுழன்று வரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியும் ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் தேர்தல் அலுவலகத்தை திறக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

    பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து தொகுதிகளிலும் அந்த கட்சியினர் தீவிரம் காட்டி வருகிறார்கள். தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதியானதும் தேர்தல் பணிகளை மேலும் வேகப்படுத்தவும் கமல்ஹாசன் கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.

    • என்.ஐ.ஏ. அதிகாரிகள் பல மாதங்களாக ஆதாரங்கள் மற்றும் வெளிநாட்டு நிதி தொடர்பான பணப்பரிமாற்றங்கள் குறித்து விசாரணை நடத்தினர்.
    • என்.ஐ.ஏ. அதிகாரிகள் சாட்டை துரைமுருகன், ரஞ்சித்குமார், இசை மதிவாணன், விஷ்ணு பிரதாப், பாலாஜி ஆகியோருக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.

    சென்னை:

    சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் விசாரணைக்காக ஆஜராகினர்.

    இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலை புலிகள் அமைப்புகளுடன் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் ரகசிய தொடர்பு கொண்டு, பல நூறு கோடி நிதி சட்டவிரோதமாக பெற்றதாக கடந்த 2022-ல் ஓமலூர் அருகே வெடிகுண்டுகள், துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்ட 2 பேர் என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.

    இதில், தமிழீழ விடுதலை புலிகளுக்கு இணையாக மற்றொரு புதிய அமைப்பை நிறுவி தமிழ்நாட்டில் ஆயுத போராட்டத்தை நடத்தவும், இதற்காக வெளிநாடுகளில் உள்ள தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்தவர்களிடம் இருந்து நிதி உதவி பெற்றதாகவும், இந்த ஆயுத போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் பின்னணியில் இருப்பதாகவும் வாக்குமூலம் அளித்தனர்.

    அதன் அடிப்படையில், என்.ஐ.ஏ. அதிகாரிகள் பல மாதங்களாக ஆதாரங்கள் மற்றும் வெளிநாட்டு நிதி தொடர்பான பணப்பரிமாற்றங்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

    பின்னர் கைது செய்யப்பட்ட சஞ்சய் பிரகாஷ், நவீன் சக்கரவர்த்தி ஆகியோரின் வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    நாம் தமிழர் கட்சியின் செய்தி தொடர்பு கொள்கை பரப்பு மாநில செயலாளரும், யூடியூபருமான சாட்டை துரைமுருகன், கோவை ஆலாந்துறையில் நாம் தமிழர் கட்சி தொழில்நுட்ப பாசறை பிரிவு முன்னாள் நிர்வாகி ரஞ்சித்குமார் (33), நாம் தமிழர் கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளர் இசை மதிவாணன் (40), மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் விஷ்ணு பிரதாப் (25), முன்னாள் நிர்வாகி சென்னை கொளத்தூர் பொறியாளர் பாலாஜி (33) ஆகியோர் நேரடி தொடர்பில் இருந்தது உறுதியானது.

    அதைதொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் திரட்டிய ஆவணங்களின் அடிப்படையில், கடந்த வெள்ளிக்கிழமை சாட்டை துரைமுருகன், ரஞ்சித்குமார், இசை மதிவாணன், விஷ்ணு பிரதாப், பாலாஜி ஆகியோருக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

    இந்நிலையில் இன்று சாட்டை துரை முருகன், இசை மதிவாணன், முருகன் ஆகியோர் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகினர்.

    • காங்கிரசை அட்டாக் பண்ணுவது போல் பேசிக் கொண்டிருக்கிறார்.
    • மக்களுக்கு தொண்டாற்ற யார் வந்தாலும் நான் மகிழ்ச்சி அடைவேன்.

    சென்னை:

    சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    கேள்வி:- பாராளுமன்றத்தில் பிரதமர் உரை நிகழ்த்தி இருக்கிறார். பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளார். அது தொடர்பான நிகழ்வுகளை நீங்கள் பார்த்தீர்களா?


    பதில்:-பார்த்தேன், படித்தேன், ரசித்தேன், சிரித்தேன். ஏனென்றால் பி.ஜே.பி.தான் எதிர்க்கட்சி மாதிரியும், காங்கிரஸ் ஆளும் கட்சி மாதிரியும், அவர் தொடர்ந்து பேசுகிறார். ஆட்சிக்கு வந்ததில் இருந்து, அவர் எதிர்க்கட்சியாக செயல்பட்டுக் கொண்டு ஆளுங்கட்சி போல் இருக்கக் கூடிய காங்கிரசை அட்டாக் பண்ணுவது போல் பேசிக் கொண்டிருக்கிறார். இது தான் புரியாத புதிராக இருக்கிறது.

    கேள்வி:- பிரதமர் மோடி பேசும்போது எம்.பி. தேர்தலில் 400 இடங்களை கைப்பற்றுவோம் என்று சொல்லி இருக்கிறாரே?

    பதில்:- மொத்தம் 400 தானா? 543 இடம் இருக்குது. அதையும் கைப்பற்றுவோம் என்று சொன்னால் ஆச்சரியம் இல்லை.


    கேள்வி:- நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்துள்ளாரே? எப்படி பார்க்கிறீர்கள்? புதிதாக அரசியலுக்கு வந்திருக்கிறாரே?

    பதில்:- மக்களுக்கு தொண்டாற்ற யார் வந்தாலும் நான் மகிழ்ச்சி அடைவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த 2 நாட்களாக அப்பகுதியில் முகாமிட்டு வெங்கடேசனை தேடி வந்தனர்.
    • போலீசில் சிக்காமல் தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் பிடித்ததால் மாவட்ட எஸ்.பி. பாராட்டு தெரிவித்தார்.

    தேவதானப்பட்டி:

    மதுரை மாவட்டம் டி.வாடிப்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்த சடகோபாலன் மகன் வெங்கடேன் (வயது 46). இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டு வழக்கில் பிடிபட்டார். போலீசார் அவரை கைது செய்து பெரியகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    பின்னர் ஜாமீனில் வெளி வந்த வெங்கடேசன் தலைமறைவானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து பெரியகுளம் உதவி அமர்வு நீதிபதி தலைமறைவான குற்றவாளியை பிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என தேவதானப்பட்டி போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

    அதன்படி இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் தலைமையிலான போலீசார் அவரை பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வந்தனர். திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அவர் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி கடந்த 2 நாட்களாக அப்பகுதியில் முகாமிட்டு வெங்கடேசனை தேடி வந்தனர்.

    பின்னர் நேற்று இரவு அவரை கைது செய்து பெரியகுளம் அழைத்து வந்தனர். 20 ஆண்டுகளாக போலீசில் சிக்காமல் தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் பிடித்ததால் மாவட்ட எஸ்.பி. பாராட்டு தெரிவித்தார்.

    • வருகிற பாராளுமன்ற தேர்தலையும் சீமான் தனித்தே சந்திக்க முடிவு செய்து இருக்கிறார்.
    • வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பணியில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈடுபட்டுள்ளார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சு வார்த்தை தொகுதி பங்கீடு என முட்டி மோதிக் கொண்டிருக்கும் நிலையில் நாம் தமிழர் கட்சி எப்போதும் போல பதட்டம் இன்றி தனியாகவே தேர்தல் களத்தை சந்திக்க தயாராகி வருகிறது.

    நாம் தமிழர் கட்சி இது வரை நடந்துள்ள அனைத்து தேர்தல்களிலும் தனித்தே போட்டியிட்டுள்ளது. சட்டமன்ற, பாராளுமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டாலும் கணிசமான வாக்கு சதவீதத்தை அந்த கட்சி தொடர்ந்து பெற்று வருகிறது.

    நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் படிப்படியாக உயர்ந்து வரும் நிலையில் வருகிற பாராளுமன்ற தேர்தலையும் சீமான் தனித்தே சந்திக்க முடிவு செய்து இருக்கிறார்.

    இதன்படி வேட்பாளர் தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் ஆணுக்குப் பெண் சரிசமம் என்பதை நிரூபிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சியில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.


    அந்த வகையில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 20 பெண் வேட்பாளர்களை களம் இறக்க சீமான் முடிவு செய்துள்ளார். இதற்கான வேட்பாளர் தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது 3 வேட்பாளர்கள் நாம் தமிழர் கட்சியில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    இதன்படி நெல்லை, கன்னியாகுமரியில் பெண் வேட்பாளர்கள் களமிறங்கும் நிலையில் தென்சென்னை தொகுதிக்கும் பெண் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    தென்சென்னை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் பேராசிரியை தமிழ்ச் செல்வி போட்டியிடுகிறார். இந்த 3 வேட்பாளர்களை தவிர மேலும் 17 பெண் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

    இது தொடர்பான அறிவிப்பை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விரைவில் அறிவிக்க உள்ளார். மீதம் உள்ள 20 தொகுதிகளிலும் ஆண் வேட்பாளர்கள் நிறுத்தப்படுகிறார்கள். அவர்களை தேர்வு செய்யும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாராளுமன்ற தேர்தல் களத்தில் இந்த முறை நாம் தமிழர் கட்சி தங்களது வாக்கு சதவீதத்தை அதிக அளவில் உயர்த்தி காட்டும் என்று அந்தக் கட்சியின் முன்னணி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.


    இது தொடர்பாக அவர் கூறும்போது, "தொடர்ந்து தனித்து போட்டியிட்டு வருவதே நாம் தமிழர் கட்சியின் தனித் தன்மையாக இருந்து வருகிறது. படிப்படியாக எங்களது ஓட்டு சதவீதமும் அதிகரித்து வருகிறது. எனவே இந்த தேர்தலில் நிச்சயம் அரசியல் களத்தில் ஆச்சரியப்படும் அளவுக்கு எங்களது வாக்கு சதவீதம் கூடியிருக்கும். அதற்கு ஏற்ப வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பணியில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈடுபட்டுள்ளார்.

    தமிழக மக்களும் நாங்கள் தனித்து போட்டியிடுவதையே தொடர்ந்து விரும்புகிறார்கள். அதனாலயே எங்களது வாக்கு சதவீதம் உயர்ந்து வருகிறது" என்று தெரிவித்தார்.

    இதன் மூலம் பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் நாங்கள் திராவிட கட்சிகளுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் கடும் சவாலை அளிப்போம் என்றும் அவர் கூறினார்.

    • காரில் பயணம் செய்த வெற்றியை காணவில்லை.
    • வெற்றி துரைசாமியின் செல்போன் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மீட்பு குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

    முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி, கடந்த 4 நாட்களுக்கு முன்பு இமாசலபிரதேசத்தில் உள்ள லடாக் பகுதிக்கு திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை சேர்ந்த உதவியாளர் கோபிநாத்துடன் (35) சுற்றுலா சென்றார்.

    கடந்த 4-ந் தேதி மாலை அங்கிருந்து சென்னை திரும்புவதற்காக வாடகை காரில் விமான நிலையம் புறப்பட்டார்.

    கார் கஷங் நாலா என்ற மலைப்பகுதியில் வந்துகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து 200 அடி பள்ளத்தாக்கு பகுதியில் விழுந்து, அருகே ஓடிக்கொண்டிருந்த சட்லஜ் நதிக்குள் பாய்ந்தது.

    விபத்து தகவல் அறிந்து போலீசார் அங்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். டிரைவர் தஞ்ஜின் காருக்குள் சீட் பெல்ட் அணிந்த நிலையில் இறந்து கிடந்தார். கோபிநாத் படுகாயத்துடன் பள்ளத்தாக்கு பகுதியில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    காரில் பயணம் செய்த வெற்றியை காணவில்லை. சீட் பெல்ட் அணிந்திருந்த அவர், காரை விட்டு வெளியே வந்திருக்கிறார். ஆனால், அவரது செல்போன் சிக்னலை வைத்து சோதனை செய்தபோது, விபத்து நடந்த பகுதியிலேயே காட்டுகிறது. அதனால், சட்லஜ் நதி தண்ணீரில் அவர் அடித்துச்செல்லப்பட்டிருப்பார் என்று போலீசார் கருதினார்கள். உடனே, மீட்பு பணிக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவை நாடினார்கள். அவர்கள் வந்து படகில் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் வெற்றி துரைசாமியின் செல்போன் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மீட்பு குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர். விபத்து நடந்த இடத்தில் இருந்து 15 கி.மீ. சுற்றளவில் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.

    • 'ஹபக் லாய்டு' நிறுவனம் 2500 கோடி ரூபாய் முதலீடு, எடிபன் நிறுவனம் 540 கோடி ரூபாய் முதலீடு, ரோக்கா நிறுவனம் 400 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்காக உறுதி அளித்துள்ளது.
    • தமிழ்நாடு குறித்தும், கழக அரசு குறித்தும், உலகளாவிய தொழில் நிறுவனங்களுக்கு உள்ள நம்பிக்கையை இது காட்டுகிறது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டுக்கு அரசு முறை பயணமாக கடந்த மாதம் 27-ந்தேதி புறப்பட்டுச் சென்றிருந்தார். 12 நாட்கள் வெளிநாட்டில் இருந்த அவர் தமிழகத்துக்கு ரூ.3440 கோடிக்கு தொழில் முதலீட்டுக்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டு வந்து உள்ளார்.

    இன்று காலை 8 மணியளவில் சென்னை திரும்பிய அவருக்கு விமான நிலையத்தில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு உயர் அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    வரவேற்பை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    உங்கள் வாழ்த்துகளையெல்லாம் பெற்று ஸ்பெயின் நாட்டுக்கு சென்ற நான் தமிழ்நாட்டுக்கு பல்வேறு முதலீடுகளை ஈர்த்துவிட்டு திரும்பி இருக்கிறேன்.

    அந்த வகையில் இது மிகப்பெரிய சாதனைப் பயணமாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டில், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணமாக ஸ்பெயின் நாட்டுக்கு கடந்த ஜனவரி 29-ந்தேதி சென்றேன். முதல் நிகழ்வாக ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த முன்னணி தொழில் நிறுவனங்களுடன் நிர்வாகிகள் பங்கேற்ற முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது.

    அதற்கு ஸ்பெயின் நாட்டில் இருக்கிற பல்வேறு தொழில் குழும நிர்வாகிகள் வந்திருந்தார்கள். ஸ்பெயின் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக துறை அமைச்சக அதிகாரிகள், ஸ்பெயின் தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், கூட்டமைப்பு பொறுப்பாளர்கள், 'இன்ஸ்வெஸ்ட் ஸ்பெயின்' என்ற அமைப்பை சார்ந்தவர்களை சந்தித்தேன்.

    தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு இருக்கக்கூடிய உகந்த சூழல் பற்றி அங்கு எடுத்துச்சொல்லி, மாநிலத்தில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன்.

    அதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்த நாட்களில், ஸ்பெயின் நாட்டில் செயல்படுகிற முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை தனித் தனியாக நேரில் சந்தித்து கலந்துரையாடினேன்.

    தமிழ்நாட்டில் முதலீடு செய்யுங்கள் என்று அப்போது கேட்டுக் கொண்டேன். சில முக்கிய நிறுவனங்களின் பெயர்களை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

    காற்றாலை மின் உற்பத்தியிலும், நீர் மறுசுழற்சியிலும் முன்னணி நிறுவனமான ஆக்கியானா நிறுவனம் உயர்தர வீட்டு கட்டுமான பொருட்களின் உற்பத்தியிலும், பீங்கான் பொருட்கள் உற்பத்தியிலும், உலகின் முன்னணி நிறுவனமான ரோக்கா நிறுவனம், கன்டெய்னர் முனையங்கள் மற்றும் சரக்கு பூங்காக்கள் அமைப்பதில் சிறந்த நிறுவனமான ஹபக் லாய்டு நிறுவனம், சர்வதேச தரத்தில் சாலை கட்டமைப்பு வசதிகள் அமைக்கக்கூடிய அபர்ட்டிஸ் நிறுவனம், மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தியில், உலகின் முன்னணி நிறுவனமாக இருக்கக்கூடிய கெஸ்ட்ராம் நிறுவனம், ரெயில்வே சார்ந்த உற்பத்தி தொழிலில் உயர் தொழில் நுட்பத்துடன் செயல்படக்கூடிய 'டால்கோ' நிறுவனம், பொறியியல் வடிவமைப்பு மற்றும் பொறியியல் கல்வித் திறன் பயிற்சிக்கான நவீன கருவிகளை உற்பத்தி செய் கிற 'எடிவான்' நிறுவனம், உயிரியல் ஆராய்ச்சி மற்றும் மருந்து உற்பத்தி நிறுவனமான 'மேப்ட்ரி' நிறுவனம் ஆகிய நிறுவனங்களோடு, நிர்வாகிகளை நான் சந்தித்தேன்.

    இந்த நிறுவனங்களின் நிர்வாகிகள் எல்லோரும், தங்களது தொழில் திட்டங்களை விளக்கியும், தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு தங்களது ஆர்வத்தையும் தெரிவித்தார்கள்.

    இந்த முயற்சிகளின் பயனாக 3440 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

    'ஹபக் லாய்டு' நிறுவனம் 2500 கோடி ரூபாய் முதலீடு, எடிபன் நிறுவனம் 540 கோடி ரூபாய் முதலீடு, ரோக்கா நிறுவனம் 400 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்காக உறுதி அளித்துள்ளது.

    இந்த நிறுவனங்கள் மட்டுமல்லாமல், மற்ற நிறுவனங்களும் அடுத்தடுத்து எதிர்காலத்திலே, தங்களது முதலீடுகளை மேற்கொள்வார்கள் என்பதிலே நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

    தமிழ்நாடு குறித்தும், கழக அரசு குறித்தும், உலகளாவிய தொழில் நிறுவனங்களுக்கு உள்ள நம்பிக்கையை இது காட்டுகிறது.

    தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியையும், தமிழ்நாட்டின் பொருளாதார மேம்பாட்டையும் புகழ்ந்து உலக அளவில் முக்கிய பத்திரிகையான நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியை நீங்கள் எல்லோரும் படித்திருப்பீர்கள்.

    உற்பத்தி துறையிலே சீனாவுக்கு மாற்றாக இந்தியா கருதப்பட்டு வரும் இந்த வேளையில், அந்த உற்பத்தி துறையில், முந்தி செயல்படுகிற மாநிலமாக தமிழ்நாடு முன்னேறி வருவதையும், பெருமளவிலான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தக்கூடிய முதலீடுகளும் வருகின்றன.

    தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளதையும் அந்த செய்தி சுட்டிக்காட்டி இருக்கிறது.

    இந்தியா பயணிக்கக்கூடிய பாதையில் முந்தி பயணிப்பது மட்டுமல்ல தமிழ்நாடு தனக்கென்று தனிப்பாதையை வகுத்து செயல்பட்டு வருவதாகவும் முதல் பக்கத்தில் செய்தி போட்டுள்ளது. பாராட்டியும் உள்ளது.

    இதுபோன்ற பாராட்டுகள்தான் எங்களை மேலும் உற்சாகப்படுத்தி செயல்பட வைக்கிறது. தமிழ்நாட்டை தொழில்துறையில் தலைசிறந்த மாநிலமாக உயர்த்தும் எங்கள் பயணத்துக்கு ஸ்பெயின் பயணம் மிக மிக பயனுள்ளதாக அமைந்துள்ளது.

    இதுபோன்ற அடுத்த பயணங்கள் திட்டமிடப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கேள்வி:- வெளிநாடுகளுக்கு நீங்கள் பயணம் மேற்கொண்டு வரும்போது முதலீடுகள் அதிகளவு ஈர்க்கப்படுகிறது. இதற்கு அடுத்த கட்டமாக வேறு ஏதும் நாடுகளுக்கு செல்ல வாய்ப்பு உள்ளதா?

    பதில்:- திட்டமிடும்போது உங்களிடம் சொல்லிவிட்டு செய்கிறேன். பாராளுமன்ற தேர்தல் இப்போது நெருங்கி வருவதால் அதற்கு பிறகுதான் என்னுடைய பயணங்கள் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். 


    விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தி.மு.க. பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா ஆகியோர் சேர்ந்து ஆளுயர மாலை அணிவித்து வரவேற்றனர்.

    அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின், ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, முன்னாள் அமைச்சர் பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், தா.மோ. அன்பரசன், பி.கே.சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், அனிதா ராதாகிருஷ்ணன், ராஜ கண்ணப்பன், ரகுபதி, தங்கம் தென்னரசு, சிவசங்கர், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், சாமிநாதன், கா.ராமச்சந்திரன், கீதா ஜீவன், ஜெகத் ரட்சகன் எம்.பி., பல்லாவரம் இ.கருணாநிதி எம்.எல்.ஏ., தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, இனிகோ இருதயராஜ், சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு, மாதவரம் சுதர்சனம், புழல் நாராயணன், படப்பை மனோகரன், கோல்டு பிரகாஷ், பம்மல் வே.கருணாநிதி.

    அரசு உயர் அதிகாரிகளான தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உள்ளிட்டோரும் வரவேற்றனர்.

    விமான நிலையத்துக்கு வெளியே சாலையின் ஓரம் ஏராளமான தி.மு.க. நிர்வாகிகளும் திரண்டு நின்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்தனர்.

    • வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து சாமி தரிசனம்.
    • ஆஞ்சநேயருக்கு வெள்ளி அங்கி சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு.

    சுசீந்திரம்:

    குமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இங்கு 18 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர்சாமி சிலை உள்ளது.

    ஆஞ்சநேயர் சாமிக்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தன்று ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். மேலும் மாதந்தோறும் மூலம் நட்சத்திரத்தன்று ஆஞ்சநேயர் சாமிக்கு வெள்ளி அங்கி சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.

    அது போல் நேற்றும் மூலம் நட்சத்திரத்தையொட்டி ஆஞ்சநேயர் சாமிக்கு வெள்ளி அங்கி சார்த்தி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகம் செய்திருந்தது.

    • தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான மிகவும் சாதகமான சூழ்நிலைகளைப் பற்றி அவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துரைத்தார்.
    • சில நிறுவனங்கள், தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன.

    சென்னை:

    பல்வேறு தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டார்.

    கடந்த மாதம் ஜனவரி 27-ந் தேதி ஸ்பெயின் புறப்பட்டுச் சென்ற அவர் பல்வேறு தொழில் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான மிகவும் சாதகமான சூழ்நிலைகளைப் பற்றி அவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துரைத்தார். அதன் மூலம் சில நிறுவனங்கள், தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன.

    இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்பினார்.

    விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, சேகர்பாபு, ஐ.பெரியசாமி, பொன்முடி மற்றும் டி.ஆர். பாலு ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    ×