என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சூர்யா சிவா, தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.
- “இப்போதெல்லாம் ஒருவர் 2 போலீஸ் பாதுகாப்பு வைத்துக்கொள்வது பேஷனாக மாறிவிட்டது"
பாஜகவில் ஓபிசி அணியின் மாநில பொதுச்செயலாளராக உள்ள சூர்யா சிவா, தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.
பொதுமக்கள் சேவைக்காக மாநிலம் முழுவதும் பயணம் செய்து வருவதாகவும், தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால், போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டுமென சூர்யா சிவா மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
சூர்யா சிவா மீது குற்ற வழக்குகள் இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு அளிக்க முடியாது என அரசுத் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பேசிய நீதிபதி தண்டபாணி, "இப்போதெல்லாம் ஒருவர் 2 போலீஸ் பாதுகாப்பு வைத்துக்கொள்வது பேஷனாக மாறிவிட்டது" என கூறி சூர்யா சிவாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
திருச்சி சூர்யா சிவா மீது பல்வேறு கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. திருச்சி பகுதியில் உள்ள தனியார் பள்ளி இடத்தை ஆக்கிரமித்து, வாடகை தராமல் ஏமாற்றி வருவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அவர் மீது பெண் ஒருவர் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, ஆம்னி பேருந்தை கடத்திய வழக்கில் சூர்யா சிவா கைது செய்யப்பட்டிருக்கிறார்.
திமுகவின் மாநிலங்களவை உறுப்பினரான திருச்சி சிவாவின் மகனான சூர்யா சிவா கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதத்தில் அண்ணாமலை முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.
பாஜகவில் இணைந்த சூர்யா சிவாவிற்கு ஓபிசி அணியில் மாநில பொறுப்பு வழங்கப்பட்டது. அதன் பின்னர் சூர்யா சிவா, பாஜகவின் சிறுபான்மை அணியைச் சேர்ந்த டெய்சியை ஆபாசமாக பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.madurai highcourt dismisses trichy surya siva plea
இதையடுத்து இருவரும் சமரசம் செய்து கொண்டாலும், சூர்யா சிவா தற்காலிகமாக பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் பாஜகவில் இருந்து நிரந்தரமாக விலகுவதாக திருச்சி சூர்யா அறிவித்தார். கடந்த நவம்பர் மாதம் மீண்டும் சூர்யா சிவா பாஜகவில் சேர்க்கப்பட்டு, முன்பு அவர் வகித்து வந்த ஓபிசி அணி மாநில பொதுச் செயலாளராக தொடர்வார் என பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஒவ்வொரு முறையும் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டு நகருக்கு வெளியே கொண்டு போய் போலீசார் விட்டாலும் மீண்டும் வந்து மறியலில் ஈடுபடுகிறார்கள்.
- பூந்தமல்லி சாலை சிக்னல் போராட்ட களமாக மாறியதால் உடனடியாக அங்கு போலீசார் விரைந்து வந்தனர்.
சென்னை:
பார்வையற்ற பட்டதாரிகள் சங்கத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் கடந்த 12-ந் தேதி முதல் சென்னையில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பார்வையற்ற பட்டதாரிகளை நியமன தேர்வு இல்லாமல் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஒவ்வொரு முறையும் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டு நகருக்கு வெளியே கொண்டு போய் போலீசார் விட்டாலும் மீண்டும் வந்து மறியலில் ஈடுபடுகிறார்கள். கோடம்பாக்கம் பாலத்தில் நேற்று காலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
இந்த நிலையில் இன்று மீண்டும் போராட்ட களத்தை மாற்றினர். காலை 10 மணியளவில் வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் அதாவது பூந்தமல்லி சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலையில் படுத்து கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை நகரின் முக்கிய சாலையில் நடந்த போராட்டத்தால் போலீசார் பரபரப்பு அடைந்தனர். பூந்தமல்லி சாலை சிக்னல் போராட்ட களமாக மாறியதால் உடனடியாக அங்கு போலீசார் விரைந்து வந்தனர்.
அவர்களிடம் சமாதானமாக பேசி போராட்டத்தை கைவிடுமாறு கேட்டனர். ஆனால் அவர்கள் அதனை ஏற்க மறுத்து மறியலில் ஈடுபட்டதால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அலாக்காக தூக்கி வேனில் ஏற்றினர். பெண்களை மகளிர் போலீசார் ஒன்று சேர்ந்து தூக்கி சென்றனர். இதனால் 45 நிமிடங்கள் வரை பூந்தமல்லி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சரியானதே.
- அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனநாயக சமநிலையை மீட்டெடுத்துள்ளது.
தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தேர்தல் பத்திரம் செல்லாது. பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் பத்திரம் வினியோகிப்பதை உடனடியான நிறுத்த வேண்டும் என அதிரடி உத்தரவை பிறப்பித்தது.
இந்நிலையில், தேர்தல் பத்திரம் ரத்து தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு அளித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில்," தேர்தல் பத்திரம் சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சரியானதே" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும்," உச்சநீதிமன்ற தீர்ப்பு, தேர்தல் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும். இந்த தீர்ப்பு, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனநாயக சமநிலையை மீட்டெடுத்துள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.
- 100 படகுகளுடன் கடல் தாமரை யாத்திரையை கடலில் நடத்த முடிவு செய்திருந்தனர்.
- நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் வெட்டியாக கடற்கரை வெயிலில் நிறுத்தப்பட்டிருந்தார்கள்.
சென்னை:
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் நடைபயணம் சென்று வருகிறார்.
200-வது தொகுதியாக துறைமுகம் தொகுதியில் கடந்த 11-ந்தேதி அண்ணாமலை நடை பயணம் செய்வதாக இருந்தது. அதைத் தொடர்ந்து மற்ற தொகுதிகளிலும் நடை பயணம் செல்ல திட்டமிட்டிருந்தார்.
ஆனால் சென்னையில் எந்த பகுதியிலும் நடை பயணம் செல்வதற்கு போலீஸ் அனுமதி வழங்கவில்லை. இதனால் அரங்க கூட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது.
தரைப்பகுதியில் சென்றால்தான் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் போலீசார் அனுமதி மறுக்கிறார்கள். தண்ணீரில் சென்றால் யாருக்கும் எந்த இடையூறும் ஏற்படாதே என்று நினைத்து பா.ஜனதா மீனவர் அணி சார்பில் இன்று நீலாங்கரையில் இருந்து பாலவாக்கம் வரை கடலில் படகுகளில் கடல் தாமரை யாத்திரை நடத்த திட்டமிட்டு இருந்தனர்.
இதற்கு எப்படி அனுமதி மறுக்க முடியும் என்ற எண்ணத்தோடு போலீஸ் அனுமதிக்காக அணுகி இருக்கிறார்கள். உடனே போலீஸ் தரப்பில் எத்தனை படகுகள் கலந்து கொள்கிறது என்று கேட்டுள்ளார்கள்.
300 என்றதும், 100 ஆக குறைத்து கொள்ளுங்கள் என்று போலீஸ் தரப்பில் கூறியிருக்கிறார்கள். அதனால் பரவாயில்லை. இனி பிரச்சினை இல்லை என்று கருதி 100 படகுகளுடன் கடல் தாமரை யாத்திரையை கடலில் நடத்த முடிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் போலீஸ் தரப்பில் இருந்து 8 கேள்விகள் கேட்டு அவர்களை திணற வைத்தனர்.
* எத்தனை படகுகள் யாத்திரையில் கலந்து கொள்கின்றன?
* யாத்திரையில் பங்கெடுக்கும் படகுகள் அனைத்தும் மீன்வளத்துறையில் பதிவு செய்யப்பட்டதா? பதிவு எண் என்ன?
* யாத்திரையில் கலந்து கொள்வதற்கு மீன்வளத் துறை அனுமதித்துள்ளதா?
* கடற்கரையில் கூடுவதற்கு சென்னை மாநகராட்சி அனுமதி பெறப்பட்டு உள்ளதா?
* கடலில் செல்வதால் கடற்படை, கடலோர காவல் படையிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா?
* யாத்திரையில் கலந்து கொள்ளும் மீனவர்கள் எத்தனை பேர்? அவர்களுக்கு நீச்சல் தெரியுமா?
* பொதுமக்கள் எத்தனை பேர் கலந்து கொள்வார்கள்?
* விபத்தை தவிர்க்க எடுக்கப்பட்டுள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கை என்னென்ன?
கேள்விகளை பார்த்து மீனவர்கள் மயங்கி விழாத குறைதான். மீனவர்களிடம் நீந்த தெரியுமா? என்று கேட்டால் யாரிடம் போய் சான்றிதழ் வாங்க முடியும். படகுகளின் பதிவு எண்ணை கொடுத்தால் மானியம் ரத்தாகி விடுமோ என்ற பயம். மொத்தத்தில் தரையிலோ? தண்ணீரிலோ? எங்கும் யாத்திரை நடத்த தடைதான் போங்கள் என்று சொல்லாமல் சொல்லி அனுப்பிவிட்டார்கள்.
இதையடுத்து இன்று நடைபெற இருந்த கடல் தாமரை யாத்திரை ரத்து செய்யப்பட்டது. ஆனால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் வெட்டியாக கடற்கரை வெயிலில் நிறுத்தப்பட்டிருந்தார்கள்.
- வழக்கில் அங்கித் திவாரியிடம் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டில் அமலாக்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
- வழக்கு விசாரணையை வருகிற 20-ந்தே திக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
மதுரை:
திண்டுக்கல் அரசு மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் சுரேஷ்பாபுவிடம், சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுவிப்பதாக கூறி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்றதாக மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார். தற்போது மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் அங்கித் திவாரியிடம் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டில் அமலாக்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை தள்ளுபடி செய்து திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டின் உத்தரவை ரத்து செய்து, அங்கித் திவாரியிடம் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது.
இந்த மனு விசாரணைக்கு உகந்ததா என முடிவு செய்வதற்காக இன்று நீதிபதிகள் கிருஷ்ண குமார், விஜயகுமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு சம்பந்தமான மாவட்ட கோர்ட்டு உத்தரவுகளை அமலாக்கதுறை அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தர விட்டு, வழக்கு விசாரணையை வருகிற 20-ந்தே திக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
- விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மார்ச் 1-ந்தேதி முதல் மார்ச் 7-ந்தேதி மாலை 6 மணிக்குள் கட்சி தலைமையகத்தில் சேர்க்க வேண்டும்.
- வேட்பாளர் விண்ணப்ப கட்டணமாக ரூ.50 ஆயிரம் செலுத்திட வேண்டும்.
சென்னை:
தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
* வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளுக்கு வரும் 19-ந்தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும். தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.
* விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மார்ச் 1-ந்தேதி முதல் மார்ச் 7-ந்தேதி மாலை 6 மணிக்குள் கட்சி தலைமையகத்தில் சேர்க்க வேண்டும்.
* வரும் 19-ந்தேதி முதல் அண்ணா அறிவாலயத்தில் விண்ணப்ப படிவங்கள் கிடைக்கும்.
* வேட்பாளர் விண்ணப்ப கட்டணமாக ரூ.50 ஆயிரம் செலுத்திட வேண்டும்.
* ரூ.2000 செலுத்தி, தி.மு.க. வேட்பாளருக்கான விண்ணப்ப படிவத்தை கட்சி தலைமையகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

- வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனு மீதான வழக்கு.
- கடும் கட்டுப்பாடுகளுடன் ஆலையை மீண்டும் இயக்குவது தொடர்பாக நிபுணர் குழு.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடல் விவகாரத்தில் வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனு மீதான வழக்கில் இறுதி விசாரணை வரும் 20ம் தேதிக்கு ஒத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விசாரணையின்போது, கடும் கட்டுப்பாடுகளுடன் ஆலையை மீண்டும் இயக்குவது தொடர்பாக நிபுணர் குழுவை அமைக்கலாம் என்ற யோசனை குறித்து ஆலோசிக்க அவகாசம் தேவை என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
- திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா இன்று மலைக்கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- திருப்போரூரில் உள்ள கந்தசாமிகோயில் மாசி மாத பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி லட்சுமி சரஸ்வதி தேவியருடன் உற்சவர் காமாட்சி அம்மன் அலங்கார மண்டபத்தில், இருந்து கொடிக்கம்பம் அருகில் உள்ள மண்டபத்திற்கு எழுந்தருளினார். விழாவையொட்டி கோவில் முழுவதும் வண்ண விளக்குகளாலும், வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தினமும் காலை, மாலையில் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் ராஜ வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 18-ந் தேதி தங்க ஹம்ச வாகனம், 20-ந் தேதி தங்க கிளி வாகனம், 21-ந்தேதி ரதம் உற்சவம், 23-ந்தேதி வெள்ளி ரத உற்சவம், 26-ந்தேதி காலை விஸ்வரூப தரிசனமும் நடைபெறுகிறது. அன்று இரவு விடையாற்றி உற்சவத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.
திருத்தணி
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா இன்று மலைக்கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இன்று இரவு 7 மணிக்கு முருகப்பெருமான் கேடய உலா உற்சவத்தில் எழுந்தருளி மலைக்கோவிலில் மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் அன்ன வாகனம், புலி வாகனம், வெள்ளி மயில் வாகனம், சிங்க வாகனம், ஆட்டுக்கடா வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வள்ளி-தெய்வயானை சமேதராய் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 21-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. 22-ம் தேதி வள்ளியம்மை திருக்கல்யாணம், 23-ந் தேதி கதம்ப பொடி விழா 24-ந் தேதி தீர்த்தவாரி நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ரமணி, அறங்காவல் குழு தலைவர் ஸ்ரீதரன். மற்றும் அறங்காவலர்கள் உஷாரவி, மோகனன் சுரேஷ் பாபு, நாகன் செய்து வருகிறார்கள்.
திருப்போரூர்
திருப்போரூரில் உள்ள கந்தசாமிகோயில் மாசி மாத பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 13 நாட்கள் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 21-ந் தேதி காலை தேரோட்டம் நடைபெறுகிறது. விழாவையொட்டி தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானையுடன் மாட வீதியில் வலம் வந்து அருள்பாலிக்கிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் லட்சுமி காந்த பாரதிதாசன், செயல் அலுவலர் குமரவேல் செய்துள்ளனர்.
- தி.மு.க. கூட்டணியில் 3 தொகுதிகளை கேட்டுப் பெற்றுவிட வேண்டும் என்பதில் கமல்ஹாசன் உறுதியாக இருப்பதாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
- மக்கள் நீதி மய்யம் போட்டியிட விரும்பும் 4 தொகுதிகளையும் கூட்டணி கட்சிகள் விட்டுக் கொடுக்க மறுத்து வருகின்றன.
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுடன் தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினருடன் முதல் கட்ட பேச்சு வார்த்தையை நடத்தி முடித்துள்ளனர். தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலையும் கூட்டணி கட்சிகள் கொடுத்துள்ளன.
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சு வார்த்தை எதுவும் இதுவரை நடத்தப்படவில்லை.
வெளிநாட்டில் உள்ள கமல்ஹாசன் இன்னும் 2 நாட்களில் சென்னை திரும்புவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதன் பின்னர் அடுத்த வாரத்தில் கமல்ஹாசனுடன் தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தை நடைபெற வாய்ப்பு இருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தி.மு.க. கூட்டணியில் 3 தொகுதிகளை கேட்டுப் பெற்றுவிட வேண்டும் என் பதில் கமல்ஹாசன் உறுதியாக இருப்பதாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தி.மு.க. தரப்பில் கேட்டபோது, "கூட்டணியில் இடம் பெற்றுள்ள பிரதான கட்சியான காங்கிரசுக்கே இந்த முறை 5 தொகுதிகளை மட்டுமே கொடுக்க திட்டமிட்டுள்ளோம். எனவே, மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு இடம் மட்டுமே ஒதுக்குவதற்கு வாய்ப்பு உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்படி ஒரு சீட் மட்டுமே கிடைக்கும் பட்சத்தில் அந்த தொகுதியில் கமல்ஹாசனே களம் இறங்க முடிவு செய்துள்ளார்.
தென் சென்னை, கோவை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் கட்சியினர் விரும்புகிறார்கள். இதில் எந்த தொகுதியை கமல்ஹாசனுக்கு ஒதுக்கி கொடுப்பது என்பதில் கடுமையான இழுபறி ஏற்பட்டுள்ளது.
தென் சென்னை பாராளுமன்ற தொகுதி தற்போது தி.மு.க. வசம் உள்ளது. கோவை, மதுரை தொகுதி கள் கம்யூனிஸ்டு கட்சிகள் வெற்றி பெற்ற தொகுதிகளாகும். ராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனி யன் முஸ்லிம் லீக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
இப்படி மக்கள் நீதி மய்யம் போட்டியிட விரும்பும் 4 தொகுதிகளையும் கூட்டணி கட்சிகள் விட்டுக் கொடுக்க மறுத்து வருகின்றன. தென்சென்னை தொகுதியை விட்டுக்கொடுக்க தி.மு.க.வுக்கு மனமில்லை. கோவை, மதுரை தொகுதிகள் நாங்கள் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதிகளாகும். அதனை எப்படி விட்டுக் கொடுக்க முடியும்? என்று கம்யூனிஸ்டு கட்சிகளும் கேள்வி எழுப்பியுள்ளன.
ராமநாதபுரம் தொகுதியை எந்த சூழலிலும் நாங்கள் விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தெரிவித்துள்ளது. இதனாலேயே சிக்கல் நிலவி வருகிறது.
இதுபோன்ற குழப்பங்களால் தி.மு.க. கூட்டணியில் கமல்ஹாசனுக்கு எந்த தொகுதி ஒதுக்கப்படும் என்பது மிகப்பெரிய கேள்வியாகவே மாறி இருக்கிறது. இது தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் பேச்சு நடத்தி தீர்வு காண்பதற்கு தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இதன் மூலம் அடுத்த வாரம் கமல்ஹாசனுடன் நடத்தப்படும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் தொகுதி இறுதியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பட்டாபிராமில் இருந்து சென்ட்ரலுக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமை அதிகாலை 3.50 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும்.
- பயணிகள் வசதிக்காக இந்த தேதிகளில் அதிகாலை 4 மற்றும் அதிகாலை 4.05 மணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.
சென்னை:
சென்னை ரெயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை கடற்கரையில் இருந்து பட்டாபிராமுக்கு இரவு 11.15 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், பட்டாபிராமில் இருந்து ஆவடிக்கு இரவு 11.55 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் இன்று மற்றும் நாளை (வெள்ளிக்கிழமை) முழுவதுமாக ரத்து செய்யப்படும்.
பட்டாபிராமில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு (மூா் மாா்க்கெட் வளாகம்) அதிகாலை 3.20 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (சனிக்கிழமை) முழுவதுமாக ரத்து செய்யப்படும்.
இதற்கு பதிலாக பட்டாபிராமில் இருந்து சென்ட்ரலுக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமை அதிகாலை 3.50 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும். இதுபோல் ஆவடியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு அதிகாலை 3.50 மற்றும் அதிகாலை 4 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (சனிக்கிழமை) முழுவதுமாக ரத்து செய்யப்படும்.
பயணிகள் வசதிக்காக இந்த தேதிகளில் அதிகாலை 4 மற்றும் அதிகாலை 4.05 மணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். மேலும், பட்டாபிராமில் இருந்து சென்னை கடற்கரைக்கு இரவு 10.25 மணிக்கு செல்லும் மின்சார ரெயில் இன்று மற்றும் நாளை (வெள்ளிக்கிழமை) ஆவடியுடன் நிறுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நீலகிரி தொகுதியில் எல்.முருகன் போட்டியிடுவதற்கான வேலைகள் நடந்து வந்தன.
- காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜய தாரணியும் பா.ஜனதா பக்கம் போகலாம் என்ற பேச்சு அடிபடுகிறது.
சென்னை:
பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜனதாவோடு கூட்டணி சேரும் கட்சிகள் பற்றி இன்னும் அதிகாரப் பூர்வமாக தெரியவில்லை.
ஆனால் பா.ஜனதா தரப்பில் வெற்றி இலக்கை எட்ட புது புது வியூகங்களை வகுத்து வருகிறார்கள். நீலகிரி தொகுதியில் எல்.முருகன் போட்டியிடுவதற்கான வேலைகள் நடந்து வந்தன. இந்நிலையில் அவர் டெல்லி மேல்சபை எம்.பி. யாக தேர்வு செய்யப்பட உள்ளார்.
எனவே நீலகிரியில் தி.மு.க. சார்பில் ஆ.ராசா போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிட வலுவான வேட்பாளரை களம் இறக்க திட்டமிட்டு உள்ளார்கள்.
மற்றொரு புறத்தில் மாற்று கட்சிகளை சேர்ந்தவர்களையும் கண்காணித்து வருகிறார்கள். அதிருப்தியில் இருப்பவர்கள், ஓரங்கட்டப்பட்டவர்கள், மாற்று கட்சிகளில் இருந்தாலும் பிரதமர் மோடி என்ற வலிமையான தலைமை நாட்டுக்கு தேவை என்ற உணர்வுடன் இருப்பவர்கள், ஆகியோரை கண்காணித்து அவர்களில் பா.ஜனதாவுக்கு வர ஒத்துக் கொள்பவர்களை இணைப்பது இல்லாவிட்டால் தேர்தலில் அவர்களின் ஆதரவை பெறுவது என்ற அடிப்படையில் பணிகளை தொடங்கி உள்ளார்கள்.
ஏற்கனவே தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளை சேர்ந்த முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ. க்கள் 15 பேர் சமீபத்தில் டெல்லிக்கு சென்று பா.ஜனதாவில் இணைந்தனர்.
காங்கிரஸ் கட்சியிலும் உழைப்பவர்களுக்கு பதவிகள் கிடைப்பதில்லை என்ற ஆதங்கம் மற்றும் கட்சியின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கை இன்மை ஆகிய காரணங்களால் பலர் அதிருப்தியில் இருக்கிறார்கள். அவர்களை பா.ஜனதாவுக்கு இழுப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக நடக்கிறது. அந்த வரிசையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜய தாரணியும் பா.ஜனதா பக்கம் போகலாம் என்ற பேச்சு அடிபடுகிறது.
கொங்கு மண்டலத்தில் பா.ஜனதா வலிமையோடு இருப்பது போல் அ.தி.மு.க. வும் வலிமையாக இருக்கிறது. அதற்கு வலிமையான தலைவர்களாக இருப்பது எஸ்.பி.வேலுமணியும், கே.டி.தங்கமணியும் தான்.
ஏற்கனவே பா.ஜனதா தலைவர்களுடன் நெருங்கிய நட்பு கொண்ட அவர்கள் இருவரையும் பா.ஜனதா வெற்றிக்கு பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளார்கள். வருகிற 27-ந் தேதி பல்லடத்துக்கு வரும் பிரதமர் மோடியின் பொதுக் கூட்டத்துக்கு தேவையான உதவிகளையும் மாற்றுக் கட்சிகளை சேர்ந்தவர்கள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
- கேரளாவை சேர்ந்த சயானிடம் கடந்த 1-ந் தேதி சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தினர்.
- மற்றொரு குற்றவாளியான மனோஜ் சாமி என்பவரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீசார் திட்டமிட்டனர்.
கோவை:
நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017-ல் கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது.
இந்த சம்பவம் தொடர்பாக தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சி.பி.சி.ஐ.டி போலீசார் இதுவரை 500க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும், கேரளாவை சேர்ந்த சயானிடம் கடந்த 1-ந் தேதி சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தினர். 6 மணி நேரம் நடந்த விசாரணையின் போது அவர் பல்வேறு தகவல்களை போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான மனோஜ் சாமி என்பவரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீசார் திட்டமிட்டனர்.
இதற்காக அவருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு கடந்த சில தினங்களுக்கு முன்பு சம்மனும் அனுப்பப்பட்டது.
இதையடுத்து இன்று காலை கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் மனோஜ் சாமி விசாரணைக்கு ஆஜரானார்.
அவரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார், கொள்ளை சம்பவத்தின் போது அங்கு நடந்தது என்ன? யார் உங்களை அங்கு அழைத்து சென்றது? யாருக்காக கொள்ளையடிக்க சென்றீர்கள் என பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.






