என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சென்னையில் இருந்தும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • ஞாயிற்றுக்கிழமை அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கு ஏற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    வார இறுதி நாளான நாளை (சனிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை), வருகிற 19-ந்தேதி (திங்கட்கிழமை) சுபமுகூர்த்தம் உள்ளிட்ட விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்தும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்கள் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளது.

    சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கும் மற்றும் சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் இயக்கப்படுகிறது.

    தினசரி இயக்க கூடிய பஸ்களுடன் இன்று கூடுதலாக 550 சிறப்பு பஸ்களும், மேற்கூறப்பட்ட இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூருவிலிருந்தும் பிற இடங்களுக்கு 200 சிறப்பு பஸ்களும் சேர்த்து ஆக மொத்தம் 750 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    ஞாயிற்றுக்கிழமை அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கு ஏற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) பயணம் செய்ய இதுவரை 9 ஆயிரத்து 679 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். அதேபோல் நாளை (சனிக்கிழமை) 5 ஆயிரத்து 468 மற்றும் வருகிற 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) 8 ஆயிரத்து 481 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.

    இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் செல்போன் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம். சிறப்பு பஸ்கள் இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பஸ் நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    • பிறந்த பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதற்காக இன்குபேட்டர் வசதி உள்ளது.
    • குழந்தைகளின் தீவிர சிகிச்சை பிரிவான இன்குபேட்டர் சிகிச்சையிலேயே இதுபோன்ற அவல நிலை ஏற்பட்டுள்ளதால் பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

    கள்ளக்குறிச்சி:

    குறை பிரசவம் அல்லது உடல் எடை குறைவாக பிறந்த குழந்தைகளை வைத்து பாதுகாப்பதற்காக தற்போது அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் இன்குபேட்டர் வசதிகள் உள்ளன. அதாவது பிரிமெச்சூர் குழந்தைக்கு தேவையான உடல் வெப்பநிலையை பராமரிக்க இன்குபேட்டர் பயன்படுத்தப்படும். இதில் குழந்தையின் ரத்த அழுத்தம், இதயதுடிப்பு, சுவாசம் மற்றும் வெப்பநிலையை கண்காணிக்க சென்சார்கள் பயன்படுத்தப்படும். அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியிலும், பிறந்த பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதற்காக இன்குபேட்டர் வசதி உள்ளது.

    ஆனால் அந்த இன்குபேட்டர் எந்திரத்தின் கருவியின் 4 புறத்திலும் இரும்பில் ஆன கால்கள் அமைக்கப்பட்டு, அதை தள்ளிக்கொண்டு செல்வதற்காக சக்கரம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்ள இன்கு பேட்டரில் 3 பகுதிகளில் மட்டும் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 1 இடத்தில் சக்கரம் இல்லாததால், அந்த எந்திரத்திற்கு 2 கல் வைத்து முட்டுக்கொடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளின் தீவிர சிகிச்சை பிரிவான இன்குபேட்டர் சிகிச்சையிலேயே இதுபோன்ற அவல நிலை ஏற்பட்டுள்ளதால் பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். மேலும் மருத்துவக்கல்லூரி பெயர் அளவிற்கு மட்டுமே மருத்துவக் கல்லூரியாக செயல்படுவதாகவும், அங்கு முறையாக சிகிச்சை அளிப்பதில்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இதற்கிடையே இன்குபேட்டரில் ஒரு குழந்தை வைத்திருக்கும் நிலையில், அதை தாங்கி நிற்கும் கம்பியில் ஒரு பகுதியில் மட்டும் கல் வைத்து முட்டுக்கொடுத்துள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • கோயம்பேடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • டிக்கெட் பையில் ரூ.20 ஆயிரம் ரொக்கம் இருந்ததாக தகவல்.

    சென்னை கோயம்பேட்டில் இருந்து புதுச்சேரி சென்ற அரசுப் பேருந்தில், நடத்துனரின் டிக்கெட் பை கொள்ளையடிக்கப்பட்டது.

    பின்னர், நடத்துனர் அளித்த புகாரின் பேரில் கோயம்பேடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    டிக்கெட் பையில் ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.38 ஆயிரம் மதிப்பிலான டிக்கெட் இருந்ததாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதைதொடர்ந்து, போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

    • முஸ்லீம்கள் சவுதி அரேபியா செல்வதால் அந்த நாட்டிற்கு வருமானம் அதிகரித்துள்ளது.
    • இந்தியாவிலேயே அதிகம் கடன் வாங்கிய மாநிலம் தமிழகம்.

    என் மண் என் மக்கள் யாத்திரை மற்றும் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் அண்ணாமலை ஆட்டோ ஓட்டுநரில் காக்கிச்சட்டை அணிந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    இந்தியா, உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் வரிசையில் இடம்பெற்றுள்ளது. முஸ்லீம்கள் சவுதி அரேபியா செல்வதால் அந்த நாட்டிற்கு வருமானம் அதிகரித்துள்ளது.

    அயோத்திக்கு 5 கோடி பேர் செல்வார்கள் என ஆய்வறிக்கை கூறுகிறது. 5 கோடி பேர் வருகையால் உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு 4 லட்சம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும்.

    உ.பி அரசுக்கு மட்டும் 25 ஆயிரம் கோடி வரியாக கிடைக்கும். ராமர் கோவில் நமக்கு வழிகாட்டுகிறது.

    இந்தியாவிலேயே அதிகம் கடன் வாங்கிய மாநிலம் தமிழகம். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மக்கள் அவதிப்படுகின்றனர்.

    முழுமையாக சென்னை மாநகரை மாற்ற வேண்டிய நேரம் இது. பள்ளி, சாலை, மருத்துவமனை உள்பட அனைத்தையும் சரிசெய்ய வேண்டிய நேரம் இந்த தேர்தல்.

    மத்தியில் அமைப்புச்சார தொழிலாளர்களுக்கு பென்ஷன் வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 20-வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • குற்றச்சாட்டு பதிவுக்காக நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு.

    சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தில் தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அவருக்கு ஜாமின் மறுக்கப்பட்டுள்ளதால் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நீதிமன்றம் காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.

    சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஜனவரி 22-ந்தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுவதாக தேதி குறிப்பிடப்பட்டது.

    இந்த நிலையில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள மூன்று வழக்குகள் முடியும் வரை அமலாக்கத்துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை தொடங்க தடைவிதிக்க வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

    அந்த மனு மீதான விசாரணை முடிவடைந்து இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தீர்ப்பு அளித்தார். அப்போது அமலாக்கத்துறை வழக்கு விசாரணையை தொடங்கக் கூடாது என்ற செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்தார்.

    அதோடு குற்றச்சாட்டு பதிவுக்காக செந்தில் பாலாஜியை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

    தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதால் விசாரணையை தள்ளி வைக்கக்கோரி மெமோ தாக்கல் செய்கிறோம். அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    மெமோ குறித்து பின்னர் முடிவெடிக்கப்படும் என தெரிவித்த நீதிபதி, இன்றுடன் நீதிமன்ற காவல் முடிவடையும் நிலையில், நாளை வரை காவலை நீட்டித்தும் நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இத்துடன் அவரது நீதிமன்ற காவல் 20-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கக் கூடாது என அமலாக்கத்துறை சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. வழக்கு தொடர்பான டிஜிட்டல் ஆதாரங்களை திருத்தவில்லை. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை தவிர வேறு எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஜாமின் மனு விசாரணைக்கு வருவதற்கு ஒருநாள் முன்தான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். சாட்சிகள் இன்னும் விசாரிக்கப்படாததால் ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைக்கக் கூடும். அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தாலும், செந்தில் பாலாஜி செல்வாக்கான நபர்தான் என அமலாக்கத்துறை தெரிவித்தனர்.

    • திருச்சியில் பணியாற்றிய 9 கல்வி அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு.
    • சாந்தி மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் தற்போது பள்ளிக் கல்வித் துறையில் இணை இயக்குனர்களாக உள்ளனர்.

    கல்வி மேம்பாட்டிற்கான மத்திய அரசு நிதியில் முறைகேடு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    திருச்சியில் பணியாற்றிய 9 கல்வி அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில், அதிமுக ஆட்சியில் முதன்மை கல்வி அலுவலராக இருந்த அறிவழகன், சில தலைமை ஆசிரியர்கள் மீது புகார் எழுந்துள்ளது.

    விதிகளுக்கு புறம்பாக பெரு நிறுவனங்களிடம் ஒட்டுமொத்தமாக தேவையற்ற பொருட்களை கொள்முதல் செய்து பள்ளிகளுக்கு விநியோகித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    மேலும், பள்ளி தலைமை ஆசிரியர்களாக இருந்த முத்துச்சாமி, சாந்தி, ராஜேந்திரன், சற்குணம், அகிலா, டெய்சி ராணி, ஜெய்சிங், கண்ணன் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சாந்தி மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் தற்போது பள்ளிக் கல்வித் துறையில் இணை இயக்குனர்களாக உள்ளனர்.

    முக கவசம், கிருமி நாசினி உள்ளிட்ட கல்வி மேம்பாட்டுக்கு தொடர்பு இல்லாத பொருள்களை அதிகம் விலை கொடுத்து வாங்கியுள்ளனர்.

    • பழனி முருகன் கோயிலிலும் திருப்பதியை போல பக்தர்களை அழைத்துச் செல்ல கிரிவல வீதிகளில் பேட்டரி மற்றும் மின்சார வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
    • கிரிவலப் பாதையில் வணிக நிறுவனங்களை முற்றிலும் ஏன் தடுக்கக் கூடாது? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது

    பழனி முருகன் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக பேட்டரி மற்றும் மின்சார வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    பழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான இடங்கள், கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அவ்வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அதில், கிரிவல வீதிகளில் ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டால் காவல்துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வரும் காலங்களில் கிரிவல வீதிகளில் ஆக்கிரமிப்பு இல்லாத அளவுக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    மேலும், கிரிவலப் பாதையில் வணிக நிறுவனங்களை முற்றிலும் ஏன் தடுக்கக் கூடாது? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

    பழனி முருகன் கோயிலிலும் திருப்பதியை போல பக்தர்களை அழைத்துச் செல்ல கிரிவல வீதிகளில் பேட்டரி மற்றும் மின்சார வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச பார்க்கிங் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

    • காவல்துறையினரைக் கொண்டு அப்புறப்படுத்திய தமிழக அரசு, அவர்களுடன் பேச்சு நடத்த எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
    • பார்வை மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கை ஏற்கப்படாதது வருத்தமளிக்கிறது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அரசு வேலைவாய்ப்புகளில் 1 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், பார்வையற்றோருக்கு டி.என்.பி.எஸ்.சி மூலம் சிறப்புத் தேர்வு நடத்தி பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 கோரிக்கைகளை முன்வைத்து சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் மறியல் செய்திருக்கின்றனர். அவர்களை காவல்துறையினரைக் கொண்டு அப்புறப்படுத்திய தமிழக அரசு, அவர்களுடன் பேச்சு நடத்த எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறை முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளது. முதலமைச்சரை சந்தித்து பேச அனுமதிக்க வேண்டும் என்ற பார்வை மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கை ஏற்கப்ப டாதது வருத்தமளிக்கிறது.

    பார்வை மாற்றுத்திறனாளிகளின் நலன்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை ஆகும். அவர்களின் கோரிக்கைகள் கொள்கை முடிவு தொடர்பானவை தான். அதற்காக அரசுக்கு கூடுதல் செலவு எதுவும் ஏற்படப் போவது இல்லை. எனவே, பார்வை மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை குறித்து அவர்களுடன் தமிழக அரசு பேச்சு நடத்தி, சாத்தியமானவற்றை நிறைவேற்ற முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • சூர்யா சிவா, தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.
    • “இப்போதெல்லாம் ஒருவர் 2 போலீஸ் பாதுகாப்பு வைத்துக்கொள்வது பேஷனாக மாறிவிட்டது"

    பாஜகவில் ஓபிசி அணியின் மாநில பொதுச்செயலாளராக உள்ள சூர்யா சிவா, தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.

    பொதுமக்கள் சேவைக்காக மாநிலம் முழுவதும் பயணம் செய்து வருவதாகவும், தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால், போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டுமென சூர்யா சிவா மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    சூர்யா சிவா மீது குற்ற வழக்குகள் இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு அளிக்க முடியாது என அரசுத் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பேசிய நீதிபதி தண்டபாணி, "இப்போதெல்லாம் ஒருவர் 2 போலீஸ் பாதுகாப்பு வைத்துக்கொள்வது பேஷனாக மாறிவிட்டது" என கூறி சூர்யா சிவாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    திருச்சி சூர்யா சிவா மீது பல்வேறு கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. திருச்சி பகுதியில் உள்ள தனியார் பள்ளி இடத்தை ஆக்கிரமித்து, வாடகை தராமல் ஏமாற்றி வருவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அவர் மீது பெண் ஒருவர் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, ஆம்னி பேருந்தை கடத்திய வழக்கில் சூர்யா சிவா கைது செய்யப்பட்டிருக்கிறார்.

    திமுகவின் மாநிலங்களவை உறுப்பினரான திருச்சி சிவாவின் மகனான சூர்யா சிவா கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதத்தில் அண்ணாமலை முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.

    பாஜகவில் இணைந்த சூர்யா சிவாவிற்கு ஓபிசி அணியில் மாநில பொறுப்பு வழங்கப்பட்டது. அதன் பின்னர் சூர்யா சிவா, பாஜகவின் சிறுபான்மை அணியைச் சேர்ந்த டெய்சியை ஆபாசமாக பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.madurai highcourt dismisses trichy surya siva plea

    இதையடுத்து இருவரும் சமரசம் செய்து கொண்டாலும், சூர்யா சிவா தற்காலிகமாக பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் பாஜகவில் இருந்து நிரந்தரமாக விலகுவதாக திருச்சி சூர்யா அறிவித்தார். கடந்த நவம்பர் மாதம் மீண்டும் சூர்யா சிவா பாஜகவில் சேர்க்கப்பட்டு, முன்பு அவர் வகித்து வந்த ஓபிசி அணி மாநில பொதுச் செயலாளராக தொடர்வார் என பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஒவ்வொரு முறையும் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டு நகருக்கு வெளியே கொண்டு போய் போலீசார் விட்டாலும் மீண்டும் வந்து மறியலில் ஈடுபடுகிறார்கள்.
    • பூந்தமல்லி சாலை சிக்னல் போராட்ட களமாக மாறியதால் உடனடியாக அங்கு போலீசார் விரைந்து வந்தனர்.

    சென்னை:

    பார்வையற்ற பட்டதாரிகள் சங்கத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் கடந்த 12-ந் தேதி முதல் சென்னையில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பார்வையற்ற பட்டதாரிகளை நியமன தேர்வு இல்லாமல் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஒவ்வொரு முறையும் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டு நகருக்கு வெளியே கொண்டு போய் போலீசார் விட்டாலும் மீண்டும் வந்து மறியலில் ஈடுபடுகிறார்கள். கோடம்பாக்கம் பாலத்தில் நேற்று காலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

    இந்த நிலையில் இன்று மீண்டும் போராட்ட களத்தை மாற்றினர். காலை 10 மணியளவில் வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் அதாவது பூந்தமல்லி சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலையில் படுத்து கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சென்னை நகரின் முக்கிய சாலையில் நடந்த போராட்டத்தால் போலீசார் பரபரப்பு அடைந்தனர். பூந்தமல்லி சாலை சிக்னல் போராட்ட களமாக மாறியதால் உடனடியாக அங்கு போலீசார் விரைந்து வந்தனர்.

    அவர்களிடம் சமாதானமாக பேசி போராட்டத்தை கைவிடுமாறு கேட்டனர். ஆனால் அவர்கள் அதனை ஏற்க மறுத்து மறியலில் ஈடுபட்டதால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அலாக்காக தூக்கி வேனில் ஏற்றினர். பெண்களை மகளிர் போலீசார் ஒன்று சேர்ந்து தூக்கி சென்றனர். இதனால் 45 நிமிடங்கள் வரை பூந்தமல்லி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சரியானதே.
    • அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனநாயக சமநிலையை மீட்டெடுத்துள்ளது.

    தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தேர்தல் பத்திரம் செல்லாது. பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் பத்திரம் வினியோகிப்பதை உடனடியான நிறுத்த வேண்டும் என அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

    இந்நிலையில், தேர்தல் பத்திரம் ரத்து தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு அளித்துள்ளார்.

    இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில்," தேர்தல் பத்திரம் சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சரியானதே" என குறிப்பிட்டுள்ளார்.

    மேலும்," உச்சநீதிமன்ற தீர்ப்பு, தேர்தல் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும். இந்த தீர்ப்பு, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனநாயக சமநிலையை மீட்டெடுத்துள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.

    • 100 படகுகளுடன் கடல் தாமரை யாத்திரையை கடலில் நடத்த முடிவு செய்திருந்தனர்.
    • நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் வெட்டியாக கடற்கரை வெயிலில் நிறுத்தப்பட்டிருந்தார்கள்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் நடைபயணம் சென்று வருகிறார்.

    200-வது தொகுதியாக துறைமுகம் தொகுதியில் கடந்த 11-ந்தேதி அண்ணாமலை நடை பயணம் செய்வதாக இருந்தது. அதைத் தொடர்ந்து மற்ற தொகுதிகளிலும் நடை பயணம் செல்ல திட்டமிட்டிருந்தார்.

    ஆனால் சென்னையில் எந்த பகுதியிலும் நடை பயணம் செல்வதற்கு போலீஸ் அனுமதி வழங்கவில்லை. இதனால் அரங்க கூட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது.

    தரைப்பகுதியில் சென்றால்தான் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் போலீசார் அனுமதி மறுக்கிறார்கள். தண்ணீரில் சென்றால் யாருக்கும் எந்த இடையூறும் ஏற்படாதே என்று நினைத்து பா.ஜனதா மீனவர் அணி சார்பில் இன்று நீலாங்கரையில் இருந்து பாலவாக்கம் வரை கடலில் படகுகளில் கடல் தாமரை யாத்திரை நடத்த திட்டமிட்டு இருந்தனர்.

    இதற்கு எப்படி அனுமதி மறுக்க முடியும் என்ற எண்ணத்தோடு போலீஸ் அனுமதிக்காக அணுகி இருக்கிறார்கள். உடனே போலீஸ் தரப்பில் எத்தனை படகுகள் கலந்து கொள்கிறது என்று கேட்டுள்ளார்கள்.

    300 என்றதும், 100 ஆக குறைத்து கொள்ளுங்கள் என்று போலீஸ் தரப்பில் கூறியிருக்கிறார்கள். அதனால் பரவாயில்லை. இனி பிரச்சினை இல்லை என்று கருதி 100 படகுகளுடன் கடல் தாமரை யாத்திரையை கடலில் நடத்த முடிவு செய்திருந்தனர்.

    இந்நிலையில் போலீஸ் தரப்பில் இருந்து 8 கேள்விகள் கேட்டு அவர்களை திணற வைத்தனர்.

    * எத்தனை படகுகள் யாத்திரையில் கலந்து கொள்கின்றன?

    * யாத்திரையில் பங்கெடுக்கும் படகுகள் அனைத்தும் மீன்வளத்துறையில் பதிவு செய்யப்பட்டதா? பதிவு எண் என்ன?

    * யாத்திரையில் கலந்து கொள்வதற்கு மீன்வளத் துறை அனுமதித்துள்ளதா?

    * கடற்கரையில் கூடுவதற்கு சென்னை மாநகராட்சி அனுமதி பெறப்பட்டு உள்ளதா?

    * கடலில் செல்வதால் கடற்படை, கடலோர காவல் படையிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா?

    * யாத்திரையில் கலந்து கொள்ளும் மீனவர்கள் எத்தனை பேர்? அவர்களுக்கு நீச்சல் தெரியுமா?

    * பொதுமக்கள் எத்தனை பேர் கலந்து கொள்வார்கள்?

    * விபத்தை தவிர்க்க எடுக்கப்பட்டுள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கை என்னென்ன?

    கேள்விகளை பார்த்து மீனவர்கள் மயங்கி விழாத குறைதான். மீனவர்களிடம் நீந்த தெரியுமா? என்று கேட்டால் யாரிடம் போய் சான்றிதழ் வாங்க முடியும். படகுகளின் பதிவு எண்ணை கொடுத்தால் மானியம் ரத்தாகி விடுமோ என்ற பயம். மொத்தத்தில் தரையிலோ? தண்ணீரிலோ? எங்கும் யாத்திரை நடத்த தடைதான் போங்கள் என்று சொல்லாமல் சொல்லி அனுப்பிவிட்டார்கள்.

    இதையடுத்து இன்று நடைபெற இருந்த கடல் தாமரை யாத்திரை ரத்து செய்யப்பட்டது. ஆனால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் வெட்டியாக கடற்கரை வெயிலில் நிறுத்தப்பட்டிருந்தார்கள்.

    ×