என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தேவையான பாதுகாப்பு குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
    • கரூர் மாவட்ட காவல்துறைக்கு விவரங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    த.வெ.க. தலைவர் விஜய் விரைவில் கரூர் செல்ல முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கரூர் துயரத்தில் பாதிக்கப்பட்டோரை சந்தித்து நேரில் ஆறுதல் கூற த.வெ.க. தலைவர் விஜய் செல்ல உள்ளார். கரூர் செல்லும் அவருக்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி டி.ஜி.பி. அலுவலகத்தில் த.வெ.க.வினர் இன்று மனு அளித்தனர்.

    ஏற்கனவே நேற்று மெயில் மூலம் மனு அளித்த நிலையில் இன்று நேரில் மனு அளிக்க திட்டமிட்டனறக.

    இந்நிலையில், கரூர் செல்வதற்கு அனுமி கேட்டு தவெக சார்பில் டிஜிபி அலுவலகத்திற்கு மெயில் அனுப்பட்டட நிலையில், டிஜிபி அலுவலகத்தில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, தவெக சார்பில் ஒரு பிரதிநிதியை நியமித்து கரூர் எஸ்.பி-ஐ தொடர்பு கொள்ள டிஜிபி அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

    கரூர் செல்லும் தேதி, நேரம், இடம் வரும் வழிபோன்ற விவரங்களை கரூர் மாவட்ட காவல்துறைக்கு சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கரூர் போலீசுக்கு விவரங்கள் அளித்தவுடன் தேவையான பாதுகாப்பு குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திமுக அரசு திருச்செங்கோடு தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை.
    • கொரோனா பரவல் காலத்தில் மாணவர்களை ஆல் பாஸ் ஆக்கியது அதிமுக அரசு.

    மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    அந்த வகையில் இன்று மாலை, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதியில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை நடத்தினார்.

    அப்போது அவர் உரையாற்றியதாவது:-

    திருச்செங்கோடு தொகுதியில் அதிமுகவின் வெற்றி உறுதியாகிவிட்டது. அதிமுக எங்கு கூட்டம் நடத்தினாலும் அது வெற்றி கூட்டமாக இருக்கும்.

    திமுக அரசு திருச்செங்கோடு தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. திருச்செங்கோடு தொகுதிக்கு அதிமுக ஆட்சி காலத்தில் நிறைய திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

    கொரோனா பெருந்தொற்று காலத்திலும் அதிமுக அரசு மக்களை காப்பாற்றியது. கொரோனா பரவல் காலத்தில் மாணவர்களை ஆல் பாஸ் ஆக்கியது அதிமுக அரசு.

    அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஆட்டோ வாங்க ரூ.75,000 மானியம், தாலிக்கு தங்கம் திட்டத்தில் பட்டு வேட்டி, பட்டுச் சேலை வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சில மருத்துவமனைகளில் தெரு நாய்கள் சாவகாசமாக சுற்றித் திரிகின்றன.
    • மருத்துவர் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.

    நோயாளிகளை மருத்துவ பயனாளிகள் என அழைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் அரசாணைக்கு நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே?

    தமிழகத்தின் அரசு மருத்துவமனைகளில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட சுகாதார வசதிகள் இல்லை, முறையான லேப் வசதிகளும் மருந்துகளும் கிடைப்பதில்லை, சிறு மழை பெய்தாலும் மேற்கூரை ஒழுகுகிறது நோயாளிகளை வெள்ளம் சூழ்கிறது, சில மருத்துவமனைகளில் தெரு நாய்கள் சாவகாசமாக சுற்றித் திரிகின்றன, டார்ச் வெளிச்சத்தில் வைத்தியம் பார்க்கப்படுகிறது, மருத்துவர் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர், தரமற்ற சிகிச்சைகளால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன, இதற்கெல்லாம் என்ன தீர்வு என்று கேட்டால், நோயாளிகளை இனி "மருத்துவப் பயனாளிகள்" என அழையுங்கள் என்று அரசாணை வெளியிட்டு தனது வழக்கமான மடைமாற்று அரசியலைக் கையிலெடுத்துள்ளது இந்த திமுக அரசு. இதெல்லாம் என்ன பிழைப்பு?

    ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் அரசின் அனைத்துத் துறைகளையும் அங்குலம் அங்குலமாக சிதைத்து சீரழித்துவிட்டு, தேர்தல் நெருங்கும் சமயத்தில் கவர்ச்சிகரமாகப் பெயர்களை மாற்றி "பேச் ஒர்க்" செய்யும் உங்களை மக்கள் அத்தனை எளிதாக மன்னித்துவிடுவார்களா?

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஆதி திராவிடர் காலனி, ஹரிஜன் குடியிருப்பு, வண்ணான்குளம் போன்ற பெயர்களை தவிகர்க்கப்பட வேண்டும்.
    • சாதிப்பெயர்களை நீக்குதல், புதிய பெயரிடும் பணிகளை நவம்பர் 19ம் தேதிக்குள் முடிக்கவும் உத்தரவு.

    முதலமைச்சர் அறிவிப்பின்படி தமிழ்நாட்டில் குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர் நிலைகளுக்கு வைக்கப்பட்டுள்ள சாதிப் பெயர்களை நீக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, கிராமங்கள், குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர் நிலைகளுக்கு உள்ள சாதிப் பெயர்களை நீக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    ஆதி திராவிடர் காலனி, ஹரிஜன் குடியிருப்பு, வண்ணான்குளம் போன்ற பெயர்களை தவிகர்க்கப்பட வேண்டும்.

    பறையர் தெரு, சக்கிலியர் சாலை போன்ற பெயர்களை நீக்க வேண்டும் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    தெருக்கள் மற்றும் சாலைகளுக்கு திருவள்ளூவர், கபிலர், பாரதியார், பாரதிதாசன், தந்தை பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர் பெயர்களையும், குளம் மற்றும் நீர் நிலைகளுக்கு ரோஜா, மல்லி, முல்லை ஆகிய பூக்களின் பெயர்களை வைக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சாதிப்பெயர்களை நீக்குதல், புதிய பெயரிடும் பணிகளை நவம்பர் 19ம் தேதிக்குள் முடிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    • முதல் பட்டியலில் இருந்த பல பெயர்கள் இல்லாததால் வழக்கு தொடரப்பட்டது.
    • இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றி புதிய பட்டியலை வெளியிட நீதிபதி நியமனம்.

    காவலர்கள் பணிக்கு தேர்வானவர்கள் குறித்த இறுதிப்பட்டியலை 30 நாளில் வெளியிட தமிழ்நாடு சீருடை பணியாளர் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    121 எஸ்ஐ பணியிடம், 129 தீயணைப்புத்துறை அதிகாரிகள் காலி பணியிடங்களுக்கு தேர்வானர்கள் பட்டியலை வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது.

    2023-ம் ஆண்டில் அறிவிப்பு வெளியிட்டு தேர்வு நடத்தப்பட்டு 2024 ஜனவரியில் தற்காலிக தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது.

    காவலர்கள் பணித்தேர்வில் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றவிலலை என புகார் எழுந்தால் திருத்தி முறையாக வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது.

    திருத்தப்பட்ட பட்டியல் 2024 அக்டோபரில் வெளியிடப்பட்ட நிலையில் முதல் பட்டியலில் இருந்த பல பெயர்கள் இல்லாததால் வழக்கு தொடரப்பட்டது.

    இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றி புதிய பட்டியலை வெளியிட ஜம்மு ஐகோர்ட் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி நியமிக்கப்பட்டார்.

    ஓய்வுபெற்ற நீதிபதி தயாரித்த பட்டியல் முறையாக இல்லை; மீண்டும் தேர்வு நடத்த அனுமதிக்க வேண்டும் என ஆணையம் முறையிட்டது.

    இந்நிலையில், தமிழில் தேர்வெழுதியோருக்கு முன்னுரிமை, இடஒதுக்கீடு முறையாக பின்பற்றியுள்ளதால் நீதிபதி தயாரித்த பட்டியலை வெளியட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • விஜய் பிரசாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர்.
    • திருச்செந்தூரில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முருகனை தரிசித்தார்.

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தனது மனைவியுடன் வருகை தந்த கன்னட நடிகர் சிவராஜ்குமார் முருகனை தரிசித்தார்.

    அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சிவராஜ்குமார், "ஜெயிலர் 2'ல் ரஜினியுடன் நடித்து வருகிறேன். விஜய் அரசியலுக்கு வரும்போதே அவர் பேசியது எனக்கு பிடித்தது. விஜய் அரசியலுக்கு வந்ததை வரவேற்கிறேன். 41 உயிர் போனது கஷ்டமாக இருந்தது. விஜய் அரசியலில் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    த.வெ.க. தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27-ந் தேதி கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அந்த நேரத்தில், திடீர் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

    • தமிழகத்தில் நாளை மறுநாள் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
    • சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திண்டுக்கல், தேனி, திருச்சி, கரூர், திருப்பூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    தமிழகத்தில் நாளை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன்படி, கோவை, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.

    தமிழகத்தில் நாளை மறுநாள் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்படி, நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    வரும் 11-ந்தேதி 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன்படி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    வரும் 12-ந்தேதி 18 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு உள்ளது. அதன்படி, கோவை, நீலகிரி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வேதனையில் இருந்து மீள முடியவில்லை.. முடியாது என்றே தோன்றுகிறது.
    • அவர்களின் வலியில் பங்கெடுத்துக் கொள்வதாலேயே இந்த அமைதி.

    தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ராஜ் மோகன் கூறியிருப்பதாவது:-

    வேதனையில் இருந்து மீள முடியவில்லை.. முடியாது என்றே தோன்றுகிறது. அதே சமயம் உறவுகளை இழந்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, அவர்களின் வலியில் பங்கெடுத்துக் கொள்வதாலேயே இந்த அமைதி.

    இந்த அமைதியை பயன்படுத்தி என் மீது பரப்பப்படும் அரசியல் அவதூறுகளை, வதந்திகளை, வன்மங்களை, வெறுப்பை நம்ப வேண்டாம். அத்தனை கல்லடிகளையும் நான் தாங்க தான் வேண்டும்.

    நீதிக்கான முன்னெடுப்புகள் நெடியது. பாதிக்கப்பட்டவர்களோடு வாழ்நாள் முழுக்க பயணிப்பதும் அவர்களுக்கு நீதி பெற்றுதருவதுமே 41 உயிர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி. அதில் கவனம் செலுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரு சவரன் தங்கம் விலை காலையில் ரூ.800 உயர்ந்தது.
    • தங்கம் விலை இன்று 2-வது முறையாக விலை உயர்ந்துள்ளது.

    தங்கத்தின் விலை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

    தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.600 உயர்ந்து உள்ளது. நேற்று முன்தினம் ரூ.89 ஆயிரத்துக்கு விற்பனையான ஒரு சவரன் தங்கம் நேற்று ஒரே நாளில் ரூ.600 உயர்ந்து ரூ.89 ஆயிரத்து 600-க்கு விற்பனையானது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.11 ஆயிரத்து 125-ல் இருந்து ரூ.75 உயர்ந்து கிராம் ரூ.11 ஆயிரத்து 200-க்கு விற்பனையானது.

    சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்ந்து ரூ.90 ஆயிரத்து 400-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.11,300-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில் தங்கம் விலை இன்று 2-வது முறையாக விலை உயர்ந்துள்ளது. ஒரு சவரன் விலை காலையில் ரூ.800 உயர்ந்த நிலையில் தற்போது மேலும் ரூ.680 உயர்ந்துள்ளது.

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 680 உயர்ந்து ரூ.91 ஆயிரத்து 080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ரூ.11 ஆயிரத்து 385-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    • தொகுதியில் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என கேட்டறிந்தார்.
    • அரசின் திட்டங்களையும், சாதனைகளையும் மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

    சென்னை:

    தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ளன. இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'உடன் பிறப்பே வா' என்ற தலைப்பில் சட்டமன்ற தொகுதி வாரியாக தி.மு.க. நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இந்த சந்திப்பின்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அவர்களுக்கு முக்கிய ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.

    நேற்று அவர் மதுரை தெற்கு மற்றும் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கட்சி நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    அப்போது, தொகுதியில் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என கேட்டறிந்தார். தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும், அரசின் திட்டங்களையும், சாதனைகளையும் மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

    இந்த நிலையில், 'உடன் பிறப்பே வா' நிகழ்ச்சியில் விளாத்திகுளம் மற்றும் தென்காசி தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த ஆலோசனை நடைபெற்றது. தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு ஆகியவை தொடர்பாக அவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

    • கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாதவர்களுக்கு காசாவை பற்றிய கவலை எதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே?
    • கள்ளக்குறிச்சியில் மக்களை காவு கொடுத்த நீங்கள் காசாவிற்கு கருணை காட்ட சொல்வது ஆகச்சிறந்த நகைச்சுவை!

    சென்னை :

    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்தக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில்,

    காசாவில் உலகமே பார்க்க இஸ்ரேல் நடத்தி வரும் அப்பட்டமான மனித உரிமை மீறல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது; உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டியது!

    எங்கோ நடக்கிறது என்று உலகின் மிகப் பெரும் ஜனநாயகமான இந்தியா இந்த விவகாரத்தில் கண்மூடி இருக்கக் கூடாது. பாலஸ்தீனத்தைத் தொடக்கத்திலேயே அங்கீகரித்த கொள்கையுடைய இந்தியா மீண்டுமொருமுறை வரலாற்றில் சரியான முடிவை எடுக்க வேண்டிய நேரம் இது.

    இதற்காக ஒன்றிய அரசை வலியுறுத்தி, வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே தீர்மானம் கொண்டுவரப்படும்!

    மனிதம் காப்போம்! என்று பதிவிட்டு இருந்தார்.

    இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் எக்ஸ் தள பதிவை மேற்கொள்காட்டி, பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது:-

    கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாதவர்களுக்கு காசாவை பற்றிய கவலை எதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே?

    உள்ளூர் நிலைமையே ஊசலாடும் போது உலக அரசியல் உங்களுக்கு தேவைதானா?

    பாலஸ்தீனத்திற்கு விடிவு காலம் பிறக்க வேண்டும் என பேசும் உங்களால் வேங்கைவயல் போன்ற கொடுமைகளில் இருந்து மக்களை விடுவிக்க முடியவில்லையே ஏன்?

    கள்ளக்குறிச்சியில் மக்களை காவு கொடுத்த நீங்கள் காசாவிற்கு கருணை காட்ட சொல்வது ஆகச்சிறந்த நகைச்சுவை! என்று கூறியுள்ளார். 



    • காவல் துறையினர் உரிய அனுமதியையும் பாதுகாப்பையும் வழங்க வேண்டும் என்று விஜய் கேட்டுக்கொண்டு உள்ளார்.
    • த.வெ.க. முன்னணி நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோர் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வருகிறார்கள்.

    தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் கரூரில் கடந்த மாதம் 27-ந்தேதி மேற்கொண்ட பிரசாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்துக்கு பிறகு விஜய் வெளியில் வராமல் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள தனது வீட்டிலேயே இருந்து வருகிறார்.

    கரூர் சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவர்களில் கரூர் மாவட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    தமிழக வெற்றிக்கழகத்தின் முன்னணி நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோர் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வருகிறார்கள். அவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே விஜய் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்கு முடிவு செய்துள்ளார்.

    இதுதொடர்பாக விஜய் தமிழக போலீஸ் டி.ஜி.பி., மற்றும் மத்திய பாதுகாப்பு படை தலைமையகம் ஆகியவற்றுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதால் மத்திய பாதுகாப்பு படைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    கரூர் பிரசாரத்தில் 41 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்காக திட்டமிட்டு உள்ளேன். இதற்கு காவல் துறையினர் உரிய அனுமதியையும் பாதுகாப்பையும் வழங்க வேண்டும் என்று விஜய் கேட்டுக்கொண்டு உள்ளார்.

    இந்நிலையில் கரூர் செல்ல உள்ள விஜய்க்கு பாதுகாப்பு கோரி டி.ஜி.பி. அலுவலகத்தில் தமிழக வெற்றிக்கழக வழக்கறிஞர்கள் மனு அளித்தனர்.

    டி.ஜி.பி.யிடம் மனு அளித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த த.வெ.க. வழக்கறிஞர்கள், பாதுகாப்பு கோரியதாக கூறி விட்டு சென்றனர்.

    த.வெ.க. குறித்தும், விஜய் குறித்தும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுப்பு தெரிவித்தனர்.

    எதுவுமே கூறாமல் செல்கிறீர்களே என செய்தியாளர்கள் கேட்டபோது, சாரி சார் என கூறிவிட்டு புறப்பட்டு சென்றனர்.

    ×