என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது.
    • மேகதாது அணை விவகாரத்தில் தி.மு.க. அரசு நிலையான கொள்கையை கடைபிடிக்கவில்லை.

    மதுரை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மதுரையில் இன்று நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டார். பின்னர் சென்னை புறப்படும் முன்பு மதுரை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க.வின் கடந்த 3 ஆண்டுகால ஆட்சியில் மதுரையின் வளர்ச்சிக்கு எந்த ஒரு திட்டத்தையும் கொண்டுவரவில்லை. மதுரை நெல்பேட்டையில் இருந்து அவனியாபுரம் வரை உயர்மட்ட பாலம் அமைக்க வெளியிடப்பட்ட அறிவிப்பு பின்னர் போதிய நிதி ஒதுக்காமல் வாபஸ் பெறப்பட்டது.

    அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.1,296 கோடி மதிப்பீட்டில் முல்லை-பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டம் என்பதால் தி.மு.க. அரசு தொடர்ந்து தாமதப்படுத்தி வருகிறது.

    இதேபோல் விருதுநகரில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என்று இந்த பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்கள். இது ஏற்கனவே அ.தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டமாகும். நாங்கள் கொண்டு வந்த திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டி மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.

    இதேபோல் வைகையாற்றின் கரையோரம் எங்களது ஆட்சியில் தான் காங்கிரீட் தடுப்பு சுவர் அமைத்தோம். வைகையாற்றின் குறுக்கே 2 தடுப்பணைகளையும் கட்டி திறந்தோம். அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட "ஸ்மார்ட் சிட்டி" திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை மதுரையில் நிறைவேற்றி இருக்கிறோம். மதுரை-நத்தம் பறக்கும் பாலம் திட்டமும் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டது தான். இப்படி நாங்கள் கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் புதிய பெயர் வைத்து தி.மு.க. பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:

    கேள்வி:-அ.தி.மு.க. தலைமையில் இன்னும் கூட்டணி அமையவில்லையே?

    பதில்:- தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனவே விரைவில் எங்கள் கூட்டணி குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும். தி.மு.க.விலும் இன்னும் கூட்டணி உறுதி செய்யப்படாமலேயே இருக்கிறது. அங்கும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டு தான் இருக்கிறது. கூட்டணி உறுதி செய்யப்பட்ட பின்னர் தான் அங்கு யார்? யார்? இருப்பார்கள் என்பது தெரியவரும். தற்போது தி.மு.க. கூட்டணியில் இருக்கும் சில கட்சிகள் வெளியேறும். நீங்கள் பொறுத்திருந்து பாருங்கள். எங்கள் தலைமையில் வலுவான கூட்டணி உருவாகும். இந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி பிரமாண்ட வெற்றியை தரும்.

    2021 சட்டமன்ற தேர்தலில் 75 இடங்களில் நாங்கள் அமோக வெற்றி பெற்றோம். அதன் அடிப்படையில் பார்த்தால் தற்போது 7 தொகுதிகளில் எங்கள் வெற்றி உறுதியாக இருக்கிறது. நாமக்கல், கள்ளக்குறிச்சி, சிதம்பரம் உள்ளிட்ட தொகுதிகளில் சொற்ப வாக்குகளிலேயே வெற்றி வாய்ப்பை இழந்தோம்.

    கேள்வி:- அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்களையும், விலக்கியவர்களையும் ஒன்றாக இணைத்து கட்சியின் சின்னம் முடக்கப்படும் என்று கூறப்படுகிறதே?

    பதில்:- எங்களுக்கான அங்கீகாரத்தை சுப்ரீம் கோர்ட்டே உறுதி செய்துவிட்டது. தேர்தல் ஆணையமும் அ.தி.மு.க.வை அங்கீகரித்து இரட்டை இலை சின்னத்தையும் வழங்கியுள்ளது. எனவே இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது. சின்னத்தை முடக்க நினைப்பவர்களுக்கு அது பகல் கனவாகவே உள்ளது.

    கேள்வி:- ஒரே நாடு, ஒரே தேர்தல் கொள்கைக்கு முதலில் ஆதரவு தெரிவித்தீர்கள். தற்போது எதிர்க்க காரணம் என்ன?

    பதில்:- ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கொள்கை கோட்பாட்டில் சில திருத்தங்களை கொண்டு வரவே நாங்கள் வலியுறுத்தி இருக்கிறோம். எங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படும் பட்சத்தில் இந்த திட்டத்தை நாங்கள் ஆதரிப்போம். பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளரை முன்நிறுத்தி வாக்கு சேகரிக்க தேவையில்லை. ஒடிசா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மாநில கட்சிகளின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது.

    கேள்வி:- மேகதாது அணை விவகாரம் பற்றி...

    பதில்:- மேகதாது அணை விவகாரத்தில் தி.மு.க. அரசு நிலையான கொள்கையை கடைபிடிக்கவில்லை. நாங்கள் ஆட்சியில் இருந்தபோது காவிரி நீரை பெற கடுமையாக போராடினோம். ஆனால் இந்த அரசு மேகதாது அணை விவகாரத்தில் கையாண்டு வரும் ஓட்டெடுப்பு முறை தவறானது. மேலும் அந்த பிரச்சனையில் இருந்து தி.மு.க. அரசு பின்வாங்கி விட்டது. மேகதாது அணைக்கு எதிராக தமிழக அரசு கண்டன தீர்மானம் கொண்டு வர வேண்டும். எனவே தி.மு.க. அரசு மீண்டும் வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரெயில்வே கேட் கீப்பரிடம் விசாரித்த போது 6 மர்மநபர்கள் அந்த பகுதியில் சுற்றிந்திரிந்ததாக தெரிவித்தார்.
    • சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    நெல்லைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் புறப்பட்டது. இந்த ரெயில் நேற்று இரவு நாகர்கோவில் பார்வதிபுரம் மேம்பாலம் பகுதியில் வந்த போது தண்டவாளத்தில் பெரிய கற்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.

    இதைப்பார்த்த என்ஜின் டிரைவர் ரெயிலை சாமர்த்தியமாக நிறுத்த முயன்றார். ஆனால் தண்ட வாளத்தில் வைக்கப்பட்டிருந்த கற்கள் மீது ரெயில் பயங்கர சத்தத்துடன் மோதியது. பின்னர் டிரைவர் ரெயிலை நடுவழியில் நிறுத்தினார். தண்ட வாளத்தில் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது குறித்து ரெயில்வே போலீசாருக்கும், ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    நாகர்கோவில் ரெயில்வே போலீசார் மற்றும் இரணியல் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது தண்டவாளத்தில் மாட்டின் தலை, கொம்பு மற்றும் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ரெயில் தண்டவாளத்தில் கற்களை அடுக்கி வைத்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அந்த பகுதியில் உள்ள ரெயில்வே கேட் கீப்பரிடம் விசாரித்த போது 6 மர்மநபர்கள் அந்த பகுதியில் சுற்றிந்திரிந்ததாக தெரிவித்தார். ரெயில் கற்கள் மீது மோதிய பிறகு அந்த நபர்கள் அங்கிருந்து 3 மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்றதாக கூறினார்.

    அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தண்ட வாளத்தில் கற்களை எதற்காக அடுக்கி வைத்தார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வாலிபர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.


    அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் இது பற்றிய தகவல் வந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற் கொண்டார்.

    இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகிறார்கள். இன்று காலையிலும் சம்பவம் நடந்த பகுதியில் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் சந்தேகப்படும்படியாக நபர்கள் யாராவது தங்கி உள்ளார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும் லாட்ஜ்களிலும் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சோதனை சாவடிகளிலும் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    மதுபோதையில் வாலிபர்கள் கற்களை தூக்கி வைத்தார்களா? ரெயிலை கவிழ்க்க சதி நடந்ததா? என்று கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • கோவில் நிர்வாகத்தின் தரப்பில் இருந்து புகார் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்து விட்டனர்.
    • கோவில் சொத்துகள் பராமரிப்பு குறித்து இந்து சமய அறநிலைத்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை வருகிற வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்தார்.

    மதுரை:

    திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    கரூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பல்வேறு கோவில்கள் உள்ளன. குறிப்பாக வரதராஜ பெருமாள் கோவில், புஷ்பநாத சுவாமி கோவில், கல்யாண பசுபதி ஈஸ்வரர் கோவில், மகா பலேஸ்வரர் கோவில், வழங்கியம்மன் வாஞ்சி அம்மன் கோவில், மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு சொந்தமான பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன.

    ஆனால் இந்த கோவில்களை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வருவாய் துறையினர் உதவியுடன் கடந்த 2018-ம் ஆண்டு ஆவணங்களை நேரடி ஆய்வு செய்தபோது அதிகமான பல்வேறு சொத்துகள் தனியாருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டும் பட்டா வழங்கப்பட்டும் உள்ளது கண்டறியப்பட்டது.

    அதன் பின் இந்த ஆய்வு அறிக்கை திருச்சி இணை ஆணையர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த சொத்துக்களை மீட்க வேண்டும் என இணை ஆணையர் சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். ஆனால் அந்த உத்தரவு இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

    இந்த கோவில் சொத்துக்கள் பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் ஆகும். இந்நிலையில் கோவில் பராமரிப்புக்கு போதிய நிதி இல்லை என்று கூறி தனி நபர்கள் சம்பந்தப்பட்ட கோவில்களுக்குள் உண்டியல் வைத்து வசூல் செய்வது, ஆன்லைனில் பணம் வசூலிப்பது போன்ற சட்டவிரோத செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்தும் கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் கோவில் நிர்வாகத்தின் தரப்பில் இருந்து புகார் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்து விட்டனர். எனவே கரூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான பல நூறு கோடி மதிப்புள்ள சொத்துக்களை மீட்டு முறையாக பராமரிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். கோவிலில் தனி நபர்கள் உண்டியல் வைத்து வசூல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது கோவில் தரப்பில் ஆஜரான வக்கீல், சம்பந்தப்பட்ட கோவிலில் அன்னதானம் வழங்க உண்டியல் வைக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் ஆய்வு செய்து அவை அகற்றப்பட்டன. இதுகுறித்து அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    இதனைப் பார்த்த நீதிபதி, கோவில்களில் தனி நபர்கள் உண்டியல் வைத்தது சம்பந்தமாக விசாரணை செய்து அது குறித்து அரவக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில் தனி நபர் உண்டியல் வைத்து வசூல் செய்தது எப்படி என்றும் கேள்வி எழுப்பினார்.

    மேலும் கோவில் சொத்துகள் பராமரிப்பு குறித்து இந்து சமய அறநிலைத்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை வருகிற வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்தார்.

    • திருமணம் நடந்தபோது, 600 சவரன் தங்கம், ரூ.1.65 கோடி மதிப்புள்ள 2 கார்கள், 20 கிலோ வெள்ளி ஆகியவை கொடுக்கப்பட்டது.
    • மகளின் வாழ்க்கைக்காக நேரில் சென்று பேசினால் மேலும் 500 சவரன், ரூ.10 கோடி கே.பி.கந்தன் கேட்கிறார்.

    சென்னை:

    சோழிங்கநல்லூர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.கந்தன் மீது அவரது மருமகள் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் வரதட்சணை புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில்,

    திருமணத்தின்போது 1000 சவரன் வரதட்சணை கேட்டனர். 2018ம் ஆண்டு திருமணம் நடந்தபோது, 600 சவரன் தங்கம், ரூ.1.65 கோடி மதிப்புள்ள 2 கார்கள், 20 கிலோ வெள்ளி ஆகியவை கொடுக்கப்பட்டது. மேலும் 400 சவரன் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

    கே.பி.கந்தனின் மருமகள் ஸ்ருதி பிரியதர்ஷினி மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். அவரது தந்தை கூறுகையில்,

    வரதட்சணை கேட்டு, தனது மகளை கே.பி.கந்தன் குடும்பத்தினர் அடித்து துன்புறுத்தினர்.

    பெண் குழந்தை பிறந்த பிறகு 2021ல் தனது மகளை கே.பி.கந்தன் குடும்பத்தினர் வீட்டை விட்டு விரட்டி விட்டனர்.

    மகளின் வாழ்க்கைக்காக நேரில் சென்று பேசினால் மேலும் 500 சவரன், ரூ.10 கோடி கே.பி.கந்தன் கேட்கிறார்.

    மகள் மருத்துவம் படித்தபோது, சக மருத்துவர்களுடன் எடுத்த புகைப்படங்களை தவறாக சித்தரித்து அவதூறு பரப்புகிறார்கள்.

    கே.பி.கந்தன், அவரது மனைவி, மகன் கே.பி.கே.சதீஷ்குமார் மற்றும் மகள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • உங்களுடைய உழைப்புக்கு மதிப்பு கொடுக்கிற திட்டம் தான் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்.
    • நாம் எல்லோரும் சேர்ந்து தமிழகத்தை முன்னேற்றுவோம்.

    கோவை:

    பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கை தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழி வகுக்கும் வகையில் தமிழக அரசு கடந்த ஆண்டு கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

    இந்த திட்டமானது கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதி அண்ணாவின் பிறந்த நாள் அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது.

    தமிழகத்தில் உள்ள அனைத்து பெண்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000 அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதற்கான குறுஞ்செய்தியும் பயனாளிகளின் செல்போன் எண்ணுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    இந்த திட்டமானது தங்களது குடும்ப தேவைக்கு உதவும் என்றும் செல்போனில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தியை பார்க்கும் போது மன நிறைவாக உள்ளதாகவும் பயனாளிகள் கூறுகிறார்கள்.

    அத்துடன் நாளுக்கு நாள் விலைவாசி உயர்ந்து வரும் நிலையில் இந்த 1000 ரூபாயானது பெரிதும் உதவி வருவதாகவும் தெரிவிக்கின்றனர் பயனாளிகள்.

    மேலும் ஒவ்வொரு மாதமும் மகளிர் உரிமை தொகை கிடைத்த சில நாட்களில், அவர்களின் செல்போனுக்கு முதலமைச்சர் பேசும் வீடியோ மற்றும் ஆடியோக்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

    இந்த மாதம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையான ரூ.1000 பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது.

    இதையடுத்து வழக்கம் போல பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு வீடியோ வந்தது.

    அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் பேசுவார் என எதிர்பார்த்தனர். ஆனால் அவருக்கு பதிலாக அந்த வீடியோவில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும் வீடியோ வந்திருந்தது.

    அந்த வீடியோவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பதாவது:-

    தமிழக மக்களுக்கு வணக்கம். நான் உங்கள் உதயநிதி ஸ்டாலின் பேசுகிறேன். நீங்க எல்லாம் எப்படி இருக்கீங்க.

    மாண்புமிகு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் வழக்கம் போல இந்த மாதமும் உங்களுக்கு வந்திருக்கும்.

    உங்கள் பொருளாதாரத்திற்காக யாரையும் சார்ந்திருக்காமல், சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பது தான் நம்முடைய திராவிட மாடல் அரசுடைய ஒரே நோக்கம்.

    காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்குற வரைக்கும் ஓயாமால் உழைக்கும் உங்கள் உழைப்புக்கு ஈடு இணையானது எதுவுமே இல்லை.

    உங்களுடைய உழைப்புக்கு மதிப்பு கொடுக்கிற திட்டம் தான் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்.

    இது எதோ சலுகை தொகை கிடையாது. உங்களுக்கான உரிமை தொகை.

    இந்த தொகையானது உங்களது சொந்த தேவைக்கோ, உங்கள் பிள்ளைகளின் படிப்பு செலவுக்கோ, மருத்துவ செலவிற்கோ நிச்சயம் உதவும்.

    செலவு போக மீதமுள்ள பணத்தை முடிந்தவரை சேமித்து வையுங்கள். என்றைக்காவது ஒரு நாள் அது உங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

    தி.மு.க அரசு உங்களுக்கான உரிமையையும், சமத்துவத்தையும் எப்போதும் நிலைநாட்டும். உங்களுக்கு ஆதரவாக திராவிட மாடல் அரசு இருக்கிறது. முதலமைச்சரும் இருக்கிறார்.

    நாம் எல்லோரும் சேர்ந்து தமிழகத்தை முன்னேற்றுவோம்.

    திராவிட மாடல் அரசின் பிராண்ட் அம்பாசிட்டராக மக்களாகிய நீங்கள் தான் உள்ளீர்கள்.

    நம் முதலமைச்சரின் முகமாக இருந்து அரசின் திட்டங்களை எல்லாம் மக்களிடம் கொண்டு போய் சேருங்கள். கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மூலம் உங்கள் வாழ்வில் ஒளி பரவட்டும். நன்றி வணக்கம்.

    இவ்வாறு அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

    • வட சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் விளையாட்டுத் திடல், தேவையான அளவு அரசு பள்ளிகள் இல்லை.
    • தென் சென்னையில் இருப்பதுபோல அரசின் எந்த சேவைகளும் வடசென்னையில் இல்லை.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை ஆண்ட அரசுகள், வட சென்னை பகுதியை புறக்கணித்தே வந்துள்ளன. தென் சென்னையையும், வட சென்னையையும் ஒருமுறை சுற்றிப் பார்த்தாலே வட சென்னையை எந்த அளவுக்கு 'மாற்றான்தாய்' மனப்பான்மையுடன் தமிழக அரசு நடத்தியிருக்கிறது என்பது தெரியவரும். சரியான சாலை வசதிகள், முக்கியமான இடங்களில் கூட மேம்பாலங்கள் இல்லாதது, சுகாதாரமான குடிநீர் கிடைக்காதது, கழிவுநீர் கால்வாய் வசதிகள் இல்லாதது, அதிக மாசு ஆகியவைதான் வட சென்னையின் முக்கிய பிரச்சனைகள்.

    வடசென்னை பகுதியில்தான் அதிக மாசை ஏற்படுத்தும் அனல் மின் நிலையங்கள், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், ரசாயன ஆலைகள் அதிக அளவில் உள்ளன. சமீபத்தில்கூட மழைநீரில் கச்சா எண்ணெய் கலந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. உர ஆலை ஒன்றில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால், ஆயிரக்கணக்கான மக்கள் நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    வட சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் விளையாட்டுத் திடல், தேவையான அளவு அரசு பள்ளிகள் இல்லை. தென் சென்னையில் இருப்பதுபோல அரசின் எந்த சேவைகளும் வடசென்னையில் இல்லை. வியாசர்பாடி கணேசபுரம் ரெயில்வே சுரங்கப்பாதையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது அரை நூற்றாண்டுக்கும் மேலாக வட சென்னை மக்களின் கோரிக்கை. இப்போதுதான் பணிகள் தொடங்கப் பட்டுள்ளன. அது எப்போது முடியும் என்று தெரியவில்லை.

    பெரம்பூரில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலம், பேப்பர்மில்ஸ் சாலை, மாதவரம் நெடுஞ்சாலை, ஐ.சி.எப்., அயனாவரத்தை இணைக்கவில்லை. இதனால் அரசு பேருந்துகள் மட்டுமே மேம்பாலத்தில் செல்கின்றன. இப்படி, வட சென்னையில் பல்வேறு கட்டமைப்புகள் அரைகுறையாகவே உருவாக்கப்பட்டுள்ளன. புளியந்தோப்பில் உள்ள ஆடுகள் வெட்டும் இடம் இன்னும் நவீன மயமாக்கப்படவில்லை. வடசென்னை பகுதியில் குறிப்பாக முதலமைச்சரின் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கூட மயானங்களின் பராமரிப்பு படுமோசமாக உள்ளது.

    வட சென்னையின் பெரும்பான்மையான இடங்களில் குடிநீரில் சாக்கடை கலந்துதான் வருகிறது. கழிவுநீர் கால்வாய்கள், மழைநீர் வடிகால்கள் போதுமானதாக இல்லை. மழைநீர் கால்வாய்கள், கழிவுநீர் கால்வாய்களாக மாறியுள்ளன. இதனால் மழை நீர் வெளியேற முடியாமல், மழை காலங்களில் வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

    வட சென்னையின் இதுபோன்ற பிரச்சனைகளை பட்டியலிட்டு அதற்கு தீர்வு காண வேண்டும் என பா.ஜ.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 'என் மண் என் மக்கள்' யாத்திரை வட சென்னை பகுதிக்கு வந்தபோது, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, வட சென்னை எப்படி வஞ்சிக்கப்படுகிறது என்பதை ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டி பேசினார்.

    ஆனால், 2024-25-ம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கையில், வட சென்னையின் பிரச்சனைகள், தேவைகளுக்கு தீர்வு காண எந்தத் திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. இது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. வட சென்னை வளர்ச்சித் திட்டத்திற்கு ரூ. 1,000 கோடி வழங்கப்படும் என, நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு புதிதாக கேட்பவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால், கடந்த நிதிநிலை அறிக்கையிலும் இதே ரூ. 1000 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், எந்த வளர்ச்சித் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டதற்கான தடயங்களே இல்லை. மக்களை ஏமாற்ற மீண்டும் அதே அறிவிப்பை செய்துள்ளனர். இப்படி மக்களை ஏமாற்ற நினைக்காமல், வட சென்னையின் வளர்ச்சிக்கு, அம்மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வாயு கசிவை கண்டறிந்ததும் 20 நிமிடங்களில் குழாயில் ஏற்பட்ட வாயு கசிவு முற்றிலும் நிறுத்தப்பட்டது.
    • தொழிற்சாலையை ஆய்வு செய்து உர உற்பத்தியை நிறுத்த உத்தரவிட்டனர்.

    சென்னை:

    எண்ணூரில் உள்ள தனியார் உரத் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது குறித்து வேல்முருகன், ஜெகன் மூர்த்தி, எம்.எச்.ஜவாஹிருல்லா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்கள்.

    இதற்கு சுற்றுச்சூழல் கால நிலை மாற்றத்துறை அமைச்சர் சி.வி.மெய்யநாதன் தாக்கல் செய்த விவர அறிக்கையில் கூறி இருந்ததாவது:-

    இந்த உரத்தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவினால் அங்கு குடியிருப்பு பகுதிகளில் வசித்த மக்களுக்கு கண் எரிச்சல், தோல் அரிப்பு, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற உபாதைகள் ஏற்பட்டன.

    வாயு கசிவை கண்டறிந்ததும் 20 நிமிடங்களில் குழாயில் ஏற்பட்ட வாயு கசிவு முற்றிலும் நிறுத்தப்பட்டது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தொழிற்சாலையை ஆய்வு செய்து உர உற்பத்தியை நிறுத்த உத்தரவிட்டனர். அதன்படி உற்பத்தி நிறுத்தப்பட்டது.

    தற்போது விசாரணை குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கூடம் 1986 பிரிவு 5-ன் கீழ் சுற்றுச்சூழல் இழப்பீடாக 5 கோடியே 92 லட்சத்து 50 ஆயிரத்து 888 ரூபாயை அந்த உர நிறுவனத்திடம் இருந்து ஏன் வசூலிக்க கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஒரே பணியை செய்யும் ஆசிரியர்களுக்கு இருவகையான ஊதியம் வழங்குவது பெரும் அநீதியாகும்.
    • தமிழக அரசு உணர்ந்து கொண்டு, இடைநிலை ஆசிரியர்களின் பிரதி நிதிகளை அழைத்து பேச வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் இருவகையான காலகட்டங்களில் நியமிக்கப்பட்ட தங்களுக்கு தகுதி அடிப்படையில் ஒரே ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்களை தமிழக அரசு கைது செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை அழைத்துப் பேசுவதற்கு பதிலாக அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது கண்டிக்கத்தக்கது.

    ஒரே பணியை செய்யும் ஆசிரியர்களுக்கு இருவகையான ஊதியம் வழங்குவது பெரும் அநீதியாகும். தங்களுக்கு இழைக்கபட்ட அநீதிக்கு நீதி கேட்டு போராடுபவர்கள் மீது அடக்குமுறையை கட்ட விழ்த்து விடுவது அதைவிடக் கொடுமையான அநீதியாகும். இதை தமிழக அரசு உணர்ந்து கொண்டு, இடைநிலை ஆசிரியர்களின் பிரதி நிதிகளை அழைத்து பேச வேண்டும். சமவேலைக்கு சம ஊதியம் என்ற அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம் அவர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சென்னையில் ஏற்கெனவே மொத்த விலையில் கிலோ ரூ.60-க்கு விற்ற புழுங்கல் அரிசி தற்போது ரூ.68 ஆக உயர்ந்துள்ளது.
    • பிராண்டட் அரிசி கிலோவுக்கு ரூ.10 வரை அதிகரித்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி பருவங்களில் 15 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு குறுவை பருவத்தின்போது போதிய மழை பெய்யாததால் தண்ணீர் இல்லாத நிலையில் அக்டோபர் மாதமே மேட்டூர் அணை மூடப்பட்டது. இதனால் இருந்த தண்ணீரை வைத்து குறுவை அறுவடையை விவசாயிகள் முடித்தனர்.

    அதே நேரத்தில் சம்பா சாகுபடிக்கு மழை கைகொடுக்கும் என நம்பி விவசாயிகள் சாகுபடியில் ஈடுபட்டனர். ஆனால் போதிய மழை பெய்யவில்லை. மேலும், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் ஓரிரு நாட்கள் பெய்த மழையால் வயலில் தண்ணீர் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் போதிய விளைச்சல் இல்லாததால் கர்நாடகா, ஆந்திரா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு அரிசி சப்ளை செய்யப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த 4 மாதங்களாகவே அரிசி விலை அதிகரித்து வருகிறது.

    சென்னையில் ஏற்கெனவே மொத்த விலையில் கிலோ ரூ.60-க்கு விற்ற புழுங்கல் அரிசி தற்போது ரூ.68 ஆக உயர்ந்துள்ளது. ரூ.60-க்கு விற்ற வேகவைத்த அரிசி ரூ.70 ஆக உயர்ந்துள்ளது. பாஸ்மதி அரிசி ரூ.120-க்கு விற்கப்படுகிறது. பழுப்பு அரிசி ரூ.39-க்கு விற்கப்படுகிறது. ரூ.37-க்கு விற்ற இட்லி அரிசி ரூ.40 ஆக உயர்ந்துள்ளது. பிராண்டட் அரிசி கிலோவு க்கு ரூ.10 வரை அதிகரித்துள்ளது.

    அதே நேரத்தில் சென்னையில் சில்லரை விற்பனையில் அரிசியின் விலை கிலோவுக்கு ரூ.15 முதல் ரூ.17 வரை உயர்ந்துள்ளது. அரிசி விலை உயர்ந்துள்ள நிலையில் சென்னையில் ஓட்டல்களில் இட்லி, தோசை உள்ளிட்ட உணவுகளின் விலையும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    • குடவாசல் பகுதியில் தயாராக உள்ள இடத்தை கொடுக்க பகுதி மக்கள் தயாராக உள்ளனர்.
    • குடவாசல் தொகுதிக்கு அருகிலேயே கல்லூரி கட்டிடம் நிச்சயம் கட்டப்படும் எனவும் உறுதியளித்தார்.

    சென்னை:

    சட்டசபையில் இன்று நேரமில்லா நேரத்தில், குடவாசல் தொகுதியில் கல்லூரி கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினர். அவர் பேசுகையில், 'குடவாசல் தொகுதியில் 2017-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் கல்லூரி கட்ட நடவடிக்கை மேற் கொண்டதாகவும், ஆனால் நீதிமன்ற வழக்கால் கட்ட முடியாமல் போய்விட்டது.

    குடவாசல் பகுதியில் தயாராக உள்ள இடத்தை கொடுக்க பகுதி மக்கள் தயாராக உள்ளனர். குடவாசலிலேயே அரசு கலைக்கல்லூரி இயங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'என்றார்.

    இதற்கு பதிலளித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், குடவாசல் தொகுதிக்கு அருகிலேயே கல்லூரி கட்டிடம் கட்ட டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. சட்டமன்ற உறுப்பினர் பகுதியில் எந்த பாதிப்பும் இல்லை குடவாசலில் இடம் கிடைக்காததால் அருகில் இருக்கக்கூடிய இடத்தில் கட்டிடம் கட்ட டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    10 ஆண்டுகளாக என்ன செய்திருந்தீர்கள். குடவாசல் தொகுதிக்கு அருகிலேயே கல்லூரி கட்டிடம் நிச்சயம் கட்டப்படும் எனவும் உறுதியளித்தார்.

    • புகழ்பெற்ற சட்டவியல் அறிஞரும் முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுமான பாலி நாரிமன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.
    • பல முக்கியத் தீர்ப்புகளுக்குக் கருவியாக விளங்கிய பாலி நாரிமன் சட்டவியலுக்கு ஆற்றிய பங்களிப்புகள் தலைமுறை தலைமுறைகளுக்கும் நினைவுகூரப்படும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    புகழ்பெற்ற சட்டவியல் அறிஞரும் முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுமான பாலி நாரிமன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.

    வழக்கறிஞராக எழுபதாண்டுகளுக்கும் மேலான தனது பயணத்தில் சுமார் ஐம்பதாண்டுகள் அவர் உச்சநீதிமன்றத்தில் வாதாடியுள்ளார் என்பது வரலாற்றுச் சிறப்புமிக்கதும், குறிப்பிடத்தகுந்த ஒன்றும் ஆகும். பல முக்கியத் தீர்ப்புகளுக்குக் கருவியாக விளங்கிய பாலி நாரிமன் சட்டவியலுக்கு ஆற்றிய பங்களிப்புகள் தலைமுறை தலைமுறைகளுக்கும் நினைவுகூரப்படும்.

    அன்னாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக வழக்கறிஞர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • 1300 வருடங்களுக்கு முன்பாகவே பல்கலைக் கழகம் வைத்து தத்துவம் பரப்பிய மண் காஞ்சி.
    • போதி தர்மரின் சீன பயணத்தில் மருத்துவ அறிவால் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தினார்.

    சட்டசபையில் இன்று, வினாக்கள் விடைகள் நேரத்தில் பேசிய எழிலரசன் எம்.எல்.ஏ., பழைய நகரமாகவும் உலக தத்துவவாதிகள் இருக்க கூடிய மண்ணாக காஞ்சிபுரம் இருந்து கொண்டிருக்கிறது. 1300 வருடங்களுக்கு முன்பாகவே பல்கலைக் கழகம் வைத்து தத்துவம் பரப்பிய மண் காஞ்சி.

    இங்கு அரச குடும்பத்தில் பிறந்த போதி தர்மரின் சீன பயணத்தில் மருத்துவ அறிவால் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தினார். உலகமே அவரின் மருத்துவ அறிவு போதனைகளை பாராட்டி வருகிறது.

    மேலும், மதவாதம் மன நோயாக மாறி வரும் நிலையில் ஆன்மபலம் பெறுவதற்கு போதி தத்துவங்களையும் மருத்துவ அறிவையும் அறிந்து கொள்ளக் கூடிய வகையில் காஞ்சியில் அரங்கம் அமைக்க வேண்டும் என்றார்.

    அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மு.பெ.சாமிநாதன், முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து நிதி நிலைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    ×