search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கடந்த பட்ஜெட்டில் வட சென்னைக்கு ஒதுக்கிய நிதி எங்கே போனது? பா.ஜனதா கேள்வி
    X

    கடந்த பட்ஜெட்டில் வட சென்னைக்கு ஒதுக்கிய நிதி எங்கே போனது? பா.ஜனதா கேள்வி

    • வட சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் விளையாட்டுத் திடல், தேவையான அளவு அரசு பள்ளிகள் இல்லை.
    • தென் சென்னையில் இருப்பதுபோல அரசின் எந்த சேவைகளும் வடசென்னையில் இல்லை.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை ஆண்ட அரசுகள், வட சென்னை பகுதியை புறக்கணித்தே வந்துள்ளன. தென் சென்னையையும், வட சென்னையையும் ஒருமுறை சுற்றிப் பார்த்தாலே வட சென்னையை எந்த அளவுக்கு 'மாற்றான்தாய்' மனப்பான்மையுடன் தமிழக அரசு நடத்தியிருக்கிறது என்பது தெரியவரும். சரியான சாலை வசதிகள், முக்கியமான இடங்களில் கூட மேம்பாலங்கள் இல்லாதது, சுகாதாரமான குடிநீர் கிடைக்காதது, கழிவுநீர் கால்வாய் வசதிகள் இல்லாதது, அதிக மாசு ஆகியவைதான் வட சென்னையின் முக்கிய பிரச்சனைகள்.

    வடசென்னை பகுதியில்தான் அதிக மாசை ஏற்படுத்தும் அனல் மின் நிலையங்கள், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், ரசாயன ஆலைகள் அதிக அளவில் உள்ளன. சமீபத்தில்கூட மழைநீரில் கச்சா எண்ணெய் கலந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. உர ஆலை ஒன்றில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால், ஆயிரக்கணக்கான மக்கள் நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    வட சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் விளையாட்டுத் திடல், தேவையான அளவு அரசு பள்ளிகள் இல்லை. தென் சென்னையில் இருப்பதுபோல அரசின் எந்த சேவைகளும் வடசென்னையில் இல்லை. வியாசர்பாடி கணேசபுரம் ரெயில்வே சுரங்கப்பாதையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது அரை நூற்றாண்டுக்கும் மேலாக வட சென்னை மக்களின் கோரிக்கை. இப்போதுதான் பணிகள் தொடங்கப் பட்டுள்ளன. அது எப்போது முடியும் என்று தெரியவில்லை.

    பெரம்பூரில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலம், பேப்பர்மில்ஸ் சாலை, மாதவரம் நெடுஞ்சாலை, ஐ.சி.எப்., அயனாவரத்தை இணைக்கவில்லை. இதனால் அரசு பேருந்துகள் மட்டுமே மேம்பாலத்தில் செல்கின்றன. இப்படி, வட சென்னையில் பல்வேறு கட்டமைப்புகள் அரைகுறையாகவே உருவாக்கப்பட்டுள்ளன. புளியந்தோப்பில் உள்ள ஆடுகள் வெட்டும் இடம் இன்னும் நவீன மயமாக்கப்படவில்லை. வடசென்னை பகுதியில் குறிப்பாக முதலமைச்சரின் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கூட மயானங்களின் பராமரிப்பு படுமோசமாக உள்ளது.

    வட சென்னையின் பெரும்பான்மையான இடங்களில் குடிநீரில் சாக்கடை கலந்துதான் வருகிறது. கழிவுநீர் கால்வாய்கள், மழைநீர் வடிகால்கள் போதுமானதாக இல்லை. மழைநீர் கால்வாய்கள், கழிவுநீர் கால்வாய்களாக மாறியுள்ளன. இதனால் மழை நீர் வெளியேற முடியாமல், மழை காலங்களில் வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

    வட சென்னையின் இதுபோன்ற பிரச்சனைகளை பட்டியலிட்டு அதற்கு தீர்வு காண வேண்டும் என பா.ஜ.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 'என் மண் என் மக்கள்' யாத்திரை வட சென்னை பகுதிக்கு வந்தபோது, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, வட சென்னை எப்படி வஞ்சிக்கப்படுகிறது என்பதை ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டி பேசினார்.

    ஆனால், 2024-25-ம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கையில், வட சென்னையின் பிரச்சனைகள், தேவைகளுக்கு தீர்வு காண எந்தத் திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. இது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. வட சென்னை வளர்ச்சித் திட்டத்திற்கு ரூ. 1,000 கோடி வழங்கப்படும் என, நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு புதிதாக கேட்பவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால், கடந்த நிதிநிலை அறிக்கையிலும் இதே ரூ. 1000 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், எந்த வளர்ச்சித் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டதற்கான தடயங்களே இல்லை. மக்களை ஏமாற்ற மீண்டும் அதே அறிவிப்பை செய்துள்ளனர். இப்படி மக்களை ஏமாற்ற நினைக்காமல், வட சென்னையின் வளர்ச்சிக்கு, அம்மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×