search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மக்களுக்கான உரிமை, சமத்துவத்தை திமுக எப்போதும் நிலைநாட்டும்- உதயநிதி ஸ்டாலின்
    X

    மக்களுக்கான உரிமை, சமத்துவத்தை திமுக எப்போதும் நிலைநாட்டும்- உதயநிதி ஸ்டாலின்

    • உங்களுடைய உழைப்புக்கு மதிப்பு கொடுக்கிற திட்டம் தான் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்.
    • நாம் எல்லோரும் சேர்ந்து தமிழகத்தை முன்னேற்றுவோம்.

    கோவை:

    பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கை தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழி வகுக்கும் வகையில் தமிழக அரசு கடந்த ஆண்டு கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

    இந்த திட்டமானது கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதி அண்ணாவின் பிறந்த நாள் அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது.

    தமிழகத்தில் உள்ள அனைத்து பெண்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000 அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதற்கான குறுஞ்செய்தியும் பயனாளிகளின் செல்போன் எண்ணுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    இந்த திட்டமானது தங்களது குடும்ப தேவைக்கு உதவும் என்றும் செல்போனில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தியை பார்க்கும் போது மன நிறைவாக உள்ளதாகவும் பயனாளிகள் கூறுகிறார்கள்.

    அத்துடன் நாளுக்கு நாள் விலைவாசி உயர்ந்து வரும் நிலையில் இந்த 1000 ரூபாயானது பெரிதும் உதவி வருவதாகவும் தெரிவிக்கின்றனர் பயனாளிகள்.

    மேலும் ஒவ்வொரு மாதமும் மகளிர் உரிமை தொகை கிடைத்த சில நாட்களில், அவர்களின் செல்போனுக்கு முதலமைச்சர் பேசும் வீடியோ மற்றும் ஆடியோக்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

    இந்த மாதம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையான ரூ.1000 பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது.

    இதையடுத்து வழக்கம் போல பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு வீடியோ வந்தது.

    அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் பேசுவார் என எதிர்பார்த்தனர். ஆனால் அவருக்கு பதிலாக அந்த வீடியோவில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும் வீடியோ வந்திருந்தது.

    அந்த வீடியோவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பதாவது:-

    தமிழக மக்களுக்கு வணக்கம். நான் உங்கள் உதயநிதி ஸ்டாலின் பேசுகிறேன். நீங்க எல்லாம் எப்படி இருக்கீங்க.

    மாண்புமிகு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் வழக்கம் போல இந்த மாதமும் உங்களுக்கு வந்திருக்கும்.

    உங்கள் பொருளாதாரத்திற்காக யாரையும் சார்ந்திருக்காமல், சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பது தான் நம்முடைய திராவிட மாடல் அரசுடைய ஒரே நோக்கம்.

    காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்குற வரைக்கும் ஓயாமால் உழைக்கும் உங்கள் உழைப்புக்கு ஈடு இணையானது எதுவுமே இல்லை.

    உங்களுடைய உழைப்புக்கு மதிப்பு கொடுக்கிற திட்டம் தான் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்.

    இது எதோ சலுகை தொகை கிடையாது. உங்களுக்கான உரிமை தொகை.

    இந்த தொகையானது உங்களது சொந்த தேவைக்கோ, உங்கள் பிள்ளைகளின் படிப்பு செலவுக்கோ, மருத்துவ செலவிற்கோ நிச்சயம் உதவும்.

    செலவு போக மீதமுள்ள பணத்தை முடிந்தவரை சேமித்து வையுங்கள். என்றைக்காவது ஒரு நாள் அது உங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

    தி.மு.க அரசு உங்களுக்கான உரிமையையும், சமத்துவத்தையும் எப்போதும் நிலைநாட்டும். உங்களுக்கு ஆதரவாக திராவிட மாடல் அரசு இருக்கிறது. முதலமைச்சரும் இருக்கிறார்.

    நாம் எல்லோரும் சேர்ந்து தமிழகத்தை முன்னேற்றுவோம்.

    திராவிட மாடல் அரசின் பிராண்ட் அம்பாசிட்டராக மக்களாகிய நீங்கள் தான் உள்ளீர்கள்.

    நம் முதலமைச்சரின் முகமாக இருந்து அரசின் திட்டங்களை எல்லாம் மக்களிடம் கொண்டு போய் சேருங்கள். கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மூலம் உங்கள் வாழ்வில் ஒளி பரவட்டும். நன்றி வணக்கம்.

    இவ்வாறு அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

    Next Story
    ×