என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
    • காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள பொடவூர் கிராமத்தில் நிலம் எடுப்பதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 20 கிராம பகுதிகளை உள்ளடக்கிய 5,476 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் எடுப்பதற்கான, முதல்நிலை அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

    காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள பொடவூர் கிராமத்தில் நிலம் எடுப்பதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. நிலம் குறித்து பாத்தியதை உள்ளவர்கள் தங்களின் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என்றும் ஆட்சேபனைகள் மீது ஏப்ரல் 4ம் தேதி விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விழிப்புணர்வு மாரத்தான் 10 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர் மற்றும் 3 கிலோ மீட்டர் என 3 பிரிவுகளில் நடக்கிறது.
    • சர்வதேச விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்.

    சென்னை:

    தமிழக விளையாட்டு வீரர்கள் சங்கம் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வுக்கான மாரத்தான் ஓட்டப் பந்தயம் நடத்தப்படுகிறது.

    இந்தப் போட்டி சென்னை பெசன்ட் நகர் ராஜாஜி மாளிகை அருகே நாளை (25-ந்தேதி) காலை 5.45 மணிக்கு தொடங்குகிறது.

    இந்த விழிப்புணர்வு மாரத்தான் 10 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர் மற்றும் 3 கிலோ மீட்டர் என 3 பிரிவுகளில் நடக்கிறது. இதில் 2,200-க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    போலீஸ் முன்னாள் ஐ.ஜி. சொக்கலிங்கம், ஜேப்பியார் பல்கலைக் கழக இயக்குனர் ரெஜினா, துணை கமிஷனர் பொன் கார்த்திக் குமார், தமிழக விளையாட்டு வீரர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஐ.ஐயப்பன் ஆகியோர் கொடியசைத்து மாரத்தான் பந்தயத்தை தொடங்கி வைக்கிறார்கள். சர்வதேச விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்.

    • முதலமைச்சரின் தூத்துக்குடி வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கவும் தி.மு.க.வினர் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

    தூத்துக்குடி:

    சமீபத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும் பொருட்டு மின்சார வாகனத்தை உற்பத்தி செய்ய வியநட்நாமின் வின்பாஸ்ட் நிறுவனம் சார்பில் தூத்துக்குடியில் புதிய மின்கார் தொழிற்சாலை அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

    இதைத்தொடர்ந்து தூத்துக்குடி சிப்காட்டில் வின்பாஸ்ட் நிறுவனத்தின் கார் தொழிற்சாலை அமைக்கப்படுகிறது. அங்கு மின்சார கார் மற்றும் மின்சார வாகனங்களுக்கு தேவையான பேட்டரிகள் தயாரிக்கப்படுகிறது.

    சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த தொழிற்சாலை அமைகிறது. இங்கிருந்து ஆண்டுக்கு 1 லட்சம் எலக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்த கார் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டு விழா தூத்துக்குடியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார்.

    இதற்காக அவர் நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வருகிறார். அங்கு மாவட்ட நிர்வாகம், அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் தி.மு.க.வினர் சார்பில் வரவேற்பு கொடுக்கப்படுகிறது.

    பின்னர் அங்கிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி சில்லாங்குளத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். அப்போது புதிய மின்கார் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்கிறார்.

    தொடர்ந்து அவர் அங்கிருந்து புதுக்கோட்டை சூசைபாண்டியாபுரம் பகுதியில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்கிறார். அப்போது கடந்த டிசம்பர் மாதம் நெல்லை, தூத்துக்குடியில் பெய்த கனமழையால் வீடுகளை இழந்தவர்கள், சேதமடைந்தவர்கள், மீன்பிடி படகுகள் சேதமடைந்த மீனவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குகிறார்.

    முதலமைச்சரின் தூத்துக்குடி வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கவும் தி.மு.க.வினர் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

    இந்நிலையில் புதுக்கோட்டை பகுதியில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்காக பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்றது. அதனை அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இந்த நிகழ்ச்சிக்காக 5 ஏக்கர் பரப்பளவில் 20 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் மிக பிரமாண்டமாக பந்தல் அமைக்கப்படுகிறது. மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஜெயலலிதாவை நினைவு கூர்ந்து எக்ஸ் தளத்தில் பதிவு.
    • தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் பிறந்த தினம் இன்று.

    சென்னை :

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் பிறந்த தினம் இன்று.

    தமிழக மக்கள் நலனுக்காகவும், சமூக நலனுக்காகவும், அவர் செயல்படுத்திய நலத்திட்டங்கள் என்றும் அவரது புகழைக் கூறும் என பதிவிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை கடற்கரையில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு, அரக்கோணம் செல்லும் மின்சார ரெயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது.
    • மின்சார ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் குறைந்த எண்ணிக்கையிலேயே இயக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை கோடம்பாக்கம்- தாம்பரம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதே போல, தாம்பரத்தில் இருந்து காலை 10.05 மணி முதல் மாலை 4.30 மணி வரை சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை கடற்கரையில் இருந்து காலை 11 மணி முதல் மதியம் 2.15 மணி வரை செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது. அதே போல, செங்கல்பட்டில் இருந்து காலை 9.40 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை கடற்கரையில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு, அரக்கோணம் செல்லும் மின்சார ரெயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது. அதே தேதியில் காஞ்சீபுரத்தில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. திருமால்பூரில் இருந்து காலை 11.05 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரெயில் 25-ந் தேதி ரத்து செய்யப்படுகிறது. மொத்தம் 44 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மின்சார ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் குறைந்த எண்ணிக்கையிலேயே இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பராமரிப்பு பணி காரணமாக கடந்த 2 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதால் ரெயில் பயணிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.

    • மேயர் சென்ற கார் முன்னால் சென்ற காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
    • விபத்து நடந்த வாகனங்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை.

    சென்னை மேயர் பிரியா ராஜன் சென்ற கார் விபத்தில் சிக்கியது.

    பூந்தமல்லி நெடுஞ்சாலை சென்னை குப்பம் அருகே நிகழ்ந்த விபத்தில் மேயர் பிரியா காயமின்றி தப்பினார்.

    மேயர் சென்ற கார் முன்னால் சென்ற காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    முன்னால் சென்ற வாகனம் திடீரென பிரேக் போட்டதால் மேயரின் கார் மோதியதாக கூறப்படுகிறது.

    மேயரின் கார் நின்றதும், பின்னால் வந்த லாரி மோதியதால், மேயரின் கார் இருபுறமும் சேதம் அடைந்தது.

    இதையடுத்து, மாற்று வாகனம் வரவழைக்கப்பட்டு மேயர் பிரியா புறப்பட்டு சென்றார்.

    விபத்து நடந்த வாகனங்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • பா.ஜ.க. அரசின் அநீதிகள் ஆகியவற்றை ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு செல்லும்.
    • உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் எனத் தொடங்கிய தேர்தல் பரப்புரை.

    40 தொகுதிகளிலும் நாம்தான் வெற்றி பெறுவோம் என்பதில் சந்தேகமில்லை. ஒவ்வொரு திட்டம் பற்றியும் படித்து எளிமையாக பரப்புரை செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் எனத் தொடங்கிய தேர்தல் பரப்புரை,

    நமது சாதனைகள் - நிதிநிலை அறிவிப்புகள் - ஒன்றிய பா.ஜ.க. அரசின் அநீதிகள் ஆகியவற்றை ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு செல்லும்

    'இல்லம்தோறும் ஸ்டாலினின் குரல்' என இனி....

    இந்தியாவைக் காக்க #INDIA-வை வெற்றி பெறச் செய்வோம்!

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • சமூக வலைதளங்களில் கட்சியின் உறுப்பினர் படிவம் என வதந்தி.
    • அதிகாரப்பூர் செயலி வாயிலாக மட்டுமே உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறும்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகே விஜய் மக்களை சந்திப்பார் என தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.

    சமூக வலைதளங்களில் கட்சியின் உறுப்பினர் படிவம் என பரவி வந்த நிலையில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதிகாரப்பூர் செயலி வாயிலாக மட்டுமே உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறும்.

    கட்சியின் அதிகாரப்பூர்வமான சமூக வலைத்தளங்களில் மட்டுமே அறிவிப்புகள் வெளியாகும்.

    யூகத்தின் அடிப்படையில் பரப்பப்படும் செய்திகளை கழகத் தோழர்களும், பொது மக்களும் நம்ப வேண்டாம்.

    கடந்த பிப்ரவரி 2ம் தேதி விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே பொதுமக்கள் சந்திப்பு குறித்து தெளிவாக விளக்கியுள்ளார்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • காரும், டிராக்டரும் நேருக்கு நேர் மோதியதால் மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • சம்பவ இடத்திற்கு கடையநல்லூர் போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை சீரமைத்தனர்.

    கடையநல்லூர்:

    திருச்சியில் இருந்து சிலர் தென்காசி மாவட்டம் குற்றாலத்திற்கு ஒரு காரில் வந்தனர். காரை திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் ஓட்டி வந்தார்.

    கார் கடையநல்லூர் அருகே அட்டைகுளம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை வந்தபோது மேலகடையநல்லூரில் இருந்து விவசாய பணிக்காக சென்ற டிராக்டர் மீது எதிர்பாராதவிதமாக நேருக்கு நேராக மோதியது.

    இதில் கார் மற்றும் டிராக்டரின் முற்பகுதி நொறுங்கியது. அப்போது காரில் இறந்த பலூன் வெடித்ததால் காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இதேபோல் டிராக்டரை ஓட்டி வந்த சேகர் என்பவரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.

    காரும், டிராக்டரும் நேருக்கு நேர் மோதியதால் மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு கடையநல்லூர் போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை சீரமைத்தனர்.

    • தன்னை கட்சியில் இருந்து நீக்கிய அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
    • அதிமுக உட்கட்சி விதிப்படி விளக்கம் கேட்டு நோட்டீஸ் எதுவும் அனுப்பாமல் நடவடிக்கை.

    சமீபத்தில் கூவத்தூர் விவகாரம் குறித்து சர்ச்சையான கருத்துகளை கூறிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஏ.வி.ராஜூவுக்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

    இந்நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஏ.வி.ராஜூ, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    அதில்,"தன்னை கட்சியில் இருந்து நீக்கிய அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும். நீக்கம் தொடர்பான அறிவிப்பை திரும்ப பெறவில்லை என்றால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    அதிமுக உட்கட்சி விதிப்படி விளக்கம் கேட்டு நோட்டீஸ் எதுவும் அனுப்பாமல் நேரடியாக நீக்கியது தவறு.

    தன்னை நீக்குவதாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் கட்சி விரோத நடவடிக்கை என்ன என்று விளக்கவில்லை" என குறிப்பிட்டுள்ளார்.

    • திருமணம் செய்து வைப்பதாக கூறி ஏமாற்றி ரூ.3.50 லட்சம் பணத்தை பெற்ற பெண் புரோக்கர் தனலட்சுமி மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என புகார் மனு.
    • புகாரின் பேரில் போலீசார் பெண் புரோக்கர் தனலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள வீரப்பகவுண்டனூரை சேர்ந்தவர் தணிகாசலம் (வயது 43). பிட்டர். இவர் கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    நான் தனியார் நிறுவனத்தில் பிட்டராக வேலை பார்த்து வருகிறேன். எனக்கு ஒரு அண்ணன் மற்றும் தம்பி ஆகியோர் உள்ளனர். எனக்கு 43 வயதாகியும் திருமணம் ஆகவில்லை. இந்தநிலையில் எனக்கு தங்கை முறையான திருப்பூரை சேர்ந்த உமா மகேஸ்வரி என்பவர் மூலம் மதுரையை சேர்ந்த திருமண புரோக்கர் தனலட்சுமி என்பவர் அறிமுகமானார்.

    அவரிடம் எனக்கு திருமணம் செய்வதற்கு பெண் பார்க்கும்படி கூறினேன். அதற்கு அவர் பெண் ஒருவர் இருப்பதாகவும், புரோக்கர் கமிஷனாக ரூ.3.50 லட்சம் பணம் தர வேண்டும் என்றார். இதனை உண்மை என நம்பிய நான் ரூ.3.50 லட்சம் பணத்தை புரோக்கர் தனலட்சுமியிடம் கொடுத்தேன்.

    கடந்த 21-ந்தேதி எனக்கும், 30 வயது பெண் ஒருவருக்கும் திருப்பூர் அவினாசி நகர் கோவிலில் வைத்து திருமணம் நடந்தது. பின்னர் நான் மணப்பெண்ணுடன் வீட்டிற்கு சென்றேன். நேற்று மதியம் கோவிலுக்கு செல்வதற்காக புறப்பட்டு கொண்டு இருந்தேன். அப்போது நான் திருமணம் செய்த பெண், என்னிடம் வந்து அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டதாக தெரிவித்தார்.

    மேலும் பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில் நின்று கொண்டு இருந்த போது அங்கு வந்த புரோக்கர் தனலட்சுமி ரூ.20 ஆயிரம் பணம் தருவதாக கூறி திருமணம் செய்து வைத்ததாக கூறினார். இதனை கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன்.

    எனவே எனக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறி ஏமாற்றி ரூ.3.50 லட்சம் பணத்தை பெற்ற பெண் புரோக்கர் தனலட்சுமி மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் போலீசார் பெண் புரோக்கர் தனலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பொது மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரியிலும் இயக்கத்தின் மூலம் செய்து வந்தார் புஸ்சி ஆனந்த்.
    • விஜய் அடிக்கடி புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    சென்னை:

    விஜய் ரசிகர் மன்றத்தில் 24 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார் புஸ்சி ஆனந்த். இவர் புதுச்சேரியில் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.

    விஜய் மக்கள் இயக்கத்தில் அகில இந்திய பொதுச்செயலாளராக விஜய் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மக்கள் இயக்க பணிகளை தீவிரப்படுத்தினார். மக்கள் இயக்கத்தின் மூலம் நடைபெற்ற அன்னதானம், பொது மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரியிலும் இயக்கத்தின் மூலம் செய்து வந்தார்.

    தற்போது 'தமிழக வெற்றிக் கழகம்' என விஜய் அரசியல் கட்சி தொடங்கியதும் கட்சியின் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். விஜய் அடிக்கடி புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இதையொட்டி புதுச்சேரியில் தனது வாக்காளர் அட்டை முகவரியை வைத்திருந்த புஸ்சி ஆனந்த் கட்சி பணிகளுக்காக தற்போது தென்சென்னை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சோழிங்கநல்லூர் முகவரிக்கு மாற்றியுள்ளார்.

    ×