என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தமிழக பா.ஜனதா பாராளுமன்ற தேர்தல் களத்தில் பரபரப்பாக பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- பொதுக்கூட்ட ஏற்பாடு பணிகளில் தமிழக பா.ஜனதா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. தி.மு.க. கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சில கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்துள்ளது. அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த சூழலில், தமிழக பா.ஜனதா பாராளுமன்ற தேர்தல் களத்தில் பரபரப்பாக பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மாநில தலைவர் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள் யாத்திரை' நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்று தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளார்.
இந்த நிலையில் வருகிற (மார்ச்) 4-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு மீண்டும் வருகை தர உள்ளார். சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பா.ஜனதா சார்பில் நடத்தப்பட உள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
இந்த பொதுக்கூட்ட ஏற்பாடு பணிகளில் தமிழக பா.ஜனதா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மாநாட்டு பந்தல் அமைப்பதற்கான பூமி பூஜையும் நேற்று போடப்பட்டது. மேலும், பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தொடர்பாக பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், அரும்பாக்கத்தில் உள்ள பாராளுமன்ற தேர்தல் தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
- போலீசார் தேடுவதை அறிந்ததும் ஜாபர்சாதிக் தலைமறைவாகிவிட்டார்.
- புரசைவாக்கம் டவுட்டன் பகுதியில் உள்ள அவரது அலுவலகத்திலும் சம்மன் ஒட்டப்பட்டு உள்ளது.
சென்னை:
டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் குடோன் ஒன்றில் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
உணவுப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஒன்றின் குடோன் அது என்பது தெரிய வந்தது. அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சூடோ பெட்ரின் என்கிற போதைப்பொருள் பிடிபட்டது. மெத்தாம் பெட்டமைன் போதைப் பொருளை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் சூடோ பெட்ரின் போதைப்பொருளை கடத்தி குடோனில் பதுக்கி வைத்திருந்த குற்றத்துக்காக சென்னையை சேர்ந்த முகேஷ், முஜிபுர் ரகுமான் விழுப்புரத்தை சேர்ந்த அசோக் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தன. டெல்லி குடோனில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.75 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான ஜாபர் சாதிக்குக்கு தொடர்பு இருப்பது அம்பலமானது.
இந்த போதைப் பொருட்களை கடத்துவற்கு ஜாபர் சாதிக்குக்கு முக்கிய மூளையாக செயல்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு இவர்கள் உணவுப் பொருட்கள் என்று கூறி போதைப் பொருட்களை அனுப்பி வைத்திருந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த 3ஆண்டுகளில் ஜாபர் சாதிக் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு வெளிநாடுகளுக்கு போதைப் பொருட்களை கடத்தி அனுப்பி வைத்திருப்பதும் தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்து சென்னை சாந்தோம் அருளானந்தம் தெருவில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டில் போலீசார் சம்மனை ஒட்டினார்கள்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த ஜாபர் சாதிக் தனது சகோதாரர்கள் முகமது சலீம், மைதீன் ஆகியோருடன் சாந்தோமில் 3 அடுக்குமாடி வீட்டில் வசித்து வருகிறார். இந்த வீட்டில்தான் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சம்மனை ஒட்டி இருந்தனர்.
அதில் கடந்த 26-ந் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜாபர் சாதிக் ஆஜராகவில்லை. இந்த நிலையில் சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். வீட்டை பூட்டிவிட்டு ஜாபர் சாதிக் தலைமறைவாக இருக்கும் நிலையில் பூட்டை உடைத்துக் கொண்டு அதிகாரிகள் வீட்டுக்குள் புகுந்த னர்.
பின்னர் அங்கு சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினார்கள். நேற்று பகல் 12 மணி அளவில் தொடங்கிய இந்த சோதனை இரவு 8 மணி வரை நீடித்துள்ளது. இந்த சோதனையின்போது போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சோதனை முடிந்து வீட்டைவிட்டு வெளியேறிய அதிகாரிகள் அதிரடியாக வீட்டுக்கு சீல் வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். இதற்கிடையே தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக் எங்கிருக்கிறார்? என்பது தெரியவில்லை.
அவரை கைது செய்வதற்காக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அதிரடி வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஜாபர் சாதிக்கின் நண்பர்கள், உறவினர்களிடம் விசாரணை நடத்தி அவர் இருக்கும் இடத்தை கண்டு பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜாபர் சாதிக்கின் செல்போன் எண்ணை வைத்தும் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் சரக்கு வாகனம் ஒன்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த வெள்ளோடு அருகே உள்ள நல்லகவுண்டன் பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக பெருந்துறை டி.எஸ்.பி.க்கு ரகசிய தகவல் வந்தது.
இதனைத்தொடர்ந்து பெருந்துறை டி.எஸ்.பி. கோபாலகிருஷ்ணன் உத்தரவின் பெயரில் இன்ஸ்பெக்டர் ராஜகண்ணா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ருத்ராஜ், வீரமணிகண்டன் மற்றும் தனிப்பிரிவு போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்று அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வீட்டில் 800 கிலோ குட்கா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இந்த வீட்டின் உரிமையாளர் பிரசாத் என்பதும், காய்கறி வியாபாரம் செய்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் வீட்டில் சோதனை செய்ததில் ரூ.3.40 லட்சம் ரொக்க பணம், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் சரக்கு வாகனம் ஒன்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தற்போது பிரசாத் தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அவர் பிடிப்பட்டால் தான் எங்கிருந்து குட்கா கொண்டு வரப்படுகிறது. அதை யாருக்கு விற்க கொண்டு செல்கிறார்கள் என்ற விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
- அப்படி சொல்பவர்களை செருப்பால அடிப்பேன் என்று காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் பதில் அளித்துள்ளார்.
- அதிமுகவை பாஜக கூட்டணிக்குள் இழுப்பதற்காகவும், அதிமுக வாக்குவங்கியை தன பக்கம் இழுப்பதற்கும் தான் பிரதமர் அவ்வாறு பேசி வருகிறார்
திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் எம்.பி திருநாவுக்கரசர்.
அப்போது, பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வந்தால் பிற கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் சேர்வார்கள் என்று பாஜகவினர் சொல்கிறார்கள் அதன் வரிசையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணையப்போவதாக உங்களது பெயரையும் சொல்கிறார்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, "அப்படி சொல்பவர்களை செருப்பால அடிப்பேன். இனிமேல் சீமான் போல பேசலாம் என்று முடிவெடுத்து விட்டேன் என்று காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் பதில் அளித்துள்ளார்.
மேலும், தமிழ்நாட்டிற்கு பிரதமர் வரும் போது எல்லாம் மறைந்த தலைவர்களை பாராட்டி பேசி வருகிறார். குறிப்பாக ஜெயலலிதா எம்ஜிஆர் அவர்களை பாராட்டி பேசியது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், "அதிமுகவை பாஜக கூட்டணிக்குள் இழுப்பதற்காகவும், அதிமுக வாக்குவங்கியை தன்பக்கம் இழுப்பதற்கும் தான் பிரதமர் அவ்வாறு பேசி வருகிறார்" என அவர் பேசியுள்ளார்.
- நீடிஷோவின் பெற்றோர் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்-ஐ சந்தித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
- கரு மாணிக்கம் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இந்த சந்திப்பின் போது உடன் இருந்தனர்.
குவைத் நாட்டில் கொடுமைக்கு உள்ளாகி அங்கிருந்து கடல் வழி தப்பித்து மும்பை வந்து போலீசார் கைது செய்து பின்னர் விடுதலை செய்யப்பட்ட மீனவர்களில் ஒருவரான ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த நீடிஷோவின் பெற்றோர் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்-ஐ சந்தித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்ணான்டோ, சட்டமன்ற உறுப்பினர் கரு மாணிக்கம் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இந்த சந்திப்பின் போது உடன் இருந்தனர்.
- கடந்த தடவை போட்டியிட்ட தொகுதிகளில் சிலவற்றை இந்த தடவை தர இயலாது.
- 12 தொகுதிகள் தரவேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. மற்றும் இடது சாரி கட்சிகள் பிரதானமாக இடம் பிடித்துள்ளன.
இந்த கூட்டணியில் முஸ்லிம் லீக், கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி ஆகிய இரு கட்சிகளுக்கு மட்டுமே ராமநாதபுரம், நாமக்கல் தொகுதி பங்கீடு செய்யப்பட்டு உள்ளது.
மற்ற கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் முடிவுக்கு வரவில்லை. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. மற்றும் இடது சாரி கட்சிகள் கடந்த தேர்தலை விட இந்த தடவை கூடுதல் தொகுதி கள் கேட்பதால் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை நடத்த முடிவு செய்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் அந்த கட்சி கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஆரணி, திருவள்ளூர், கரூர், திருச்சி, கன்னியாகுமரி, சிவகங்கை, தேனி ஆகிய 9 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் தேனி தொகுதியை தவிர மற்ற 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இந்த தடவை தங்களுக்கு 12 தொகுதிகள் தரவேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது. 3 வாரங்களுக்கு முன்பு தி.மு.க.-காங்கிரஸ் தலைவர்கள் தொகுதி பங்கீடு சம்பந்தமாக சந்தித்து பேசியபோது 15 தொகுதிகள் கொண்ட பட்டியலை கொடுத்து அதில் 12 தொகுதிகளை ஒதுக்கி தர வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கேட்டுக் கொண்டனர்.

ஆனால் இதை தி.மு.க. ஏற்கவில்லை. தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் சேர்த்து மொத்தம் 8 தொகுதிகள் மட்டுமே தர இயலும் என்று தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் சந்தித்து பேசலாம் என்று முடிவு செய்தனர்.
ஆனால் 3 வாரம் கடந்த நிலையில் தி.மு.க.- காங்கிரஸ் தலைவர்கள் இன்னமும் 2-வது கட்ட பேச்சுவார்த்தைக்கு உட்காரவில்லை. மற்ற தோழமை கட்சிகளுடன் தி.மு.க. தலைவர்கள் 2-வது கட்ட பேச்சுவார்த்தையை நிறைவு செய்து விட்ட நிலையில் காங்கிரசுக்கு மட்டும் இன்னமும் அழைப்பு அனுப்பப்படவில்லை. இதன் காரணமாக தி.மு.க.-காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் எதிர்பாராத தேக்கம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி மாற்றப்பட்டு புதிய தலைவராக செல்வபெருந்தகை பொறுப்பு ஏற்றதும் மீண்டும் பேச்சு வார்த்தையை தீவிரப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தி.மு.க. தரப்பில் 8 தொகுதிகள் மட்டுமே தர இயலும் என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டதால் இந்த இழுபறியை முடிவுக்கு கொண்டு வர தமிழக காங்கிரஸ் தலைவர்கள் செல்வபெருந்தகை, ராஜேஷ்குமார், ரூபி மனோகரன் ஆகியோர் நேற்று முன்தினம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.
நேற்று அவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேலிட பொறுப்பாளர் அஜோய்குமாருடன் ஆலோசனை நடத்தினார்கள். பிறகு அஜோய்குமார், செல்வபெருந்தகை, ராஜேஷ்குமார், ரூபி மனோகரன் ஆகிய 4 பேரும் நேற்று மாலை 6.30 மணிக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து பேசினார்கள். சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக அவர்களது ஆலோசனை கூட்டம் நீடித்தது.
கூட்டம் முடிந்ததும் நிருபர்களிடம் அஜோய்குமாரும், செல்வபெருந்தகையும் பேசுகையில், "தொகுதி பங்கீட்டில் எந்த பிரச்சினையும் இல்லை" என்று கூறினார்கள். ஆனால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பது தெரிய வந்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் தி.மு.க.-காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் ஏற்பட்டுள்ள தேக்கத்துக்கு 3 விதமான பிரச்சினைகளே முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. இந்த 3 முக்கிய பிரச்சினைகள் வருமாறு:-
1. காங்கிரஸ் கேட்கும் 12 தொகுதிகளை தர இயலாது என்று தி.மு.க. உறுதிப்பட கூறி இருக்கிறது. 8 தொகுதிகள் மட்டுமே தர இயலும் என்று தெளிவுப்படுத்தி உள்ளது.
2. கடந்த தடவை போட்டியிட்ட தொகுதிகளில் சிலவற்றை இந்த தடவை தர இயலாது. சுழற்சி முறையில் இந்த தடவை வேறு தொகுதிகள் ஒதுக்கப்படும். அதை ஏற்க வேண்டும் என்று தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதை காங்கிரஸ் ஏற்க தயங்குகிறது.
3. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியையும் கூட்டணியில் சேர்க்க சம்மதித்து உள்ள தி.மு.க. கமல்ஹாசனுக்கான தொகுதியை காங்கிரஸ் ஒதுக்கி கொடுக்க வேண்டும் என்று கூறி உள்ளது. இது காங்கிரஸ் தலைவர்களை கூடுதல் நெருக்கடிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
இந்த 3 பிரச்சினைகளும் நாளுக்கு நாள் இடியாப்ப சிக்கலாகவே மாறி வருகிறது. உதாரணத்துக்கு தொகுதிகளை மாற்றுவதால் காங்கிரஸ் தலைவர்கள் தவிப்புக்குள்ளாகி இருப்பது தெரிய வந்துள்ளது. திருச்சி தொகுதியை துரை வைகோவுக்காக ம.தி.மு.க. கேட்கிறது. இதனால் அந்த தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட முடிவு செய்தார்.
ஆனால் அதற்குள் ராமநாதபுரம் தொகுதி முஸ்லிம் லீக்குக்கு ஒதுக்கப்பட்டு விட்டது. அதுபோல கமல்ஹாசனுக்கு எந்த தொகுதி கொடுப்பது என்பதில் இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்த தேக்கத்துக்கு யார் காரணம்? என்பது தி.மு.க.விலும், காங்கிரசிலும் தலைவர்கள் மட்டத்தில் புரியாத புதிராக இருந்து கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் காங்கிரசுக்கு 5 தொகுதிகள் மட்டுமே தர இயலும் என்று தி.மு.க. புதிதாக உறுதி செய்யப்படாத ஒரு தகவலும் உலா வந்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய யூகங்களுக்கும், தேக்கத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் தி.மு.க. தலைவர்களும், காங்கிரஸ் தலைவர்களும் மீண்டும் அமர்ந்து பேச வேண்டும். ஆனால் தி.மு.க. இதுவரை காங்கிரஸ் தலைவர்களை அழைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அவர்கள் அழைக்காமல் நாம் எப்படி மீண்டும் செல்வது என்று காங்கிரஸ் தலைவர்கள் தடுமாற்றத்துடன் தயங்கி கொண்டு இருக்கிறார்கள். டெல்லி மேலிட காங்கிரஸ் தலைவர்களும் இந்த சூழ்நிலையை சற்று கவலையுடன் பார்க்கிறார்கள். நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் கூட, "தி.மு.க. என்ன முடிவு செய்யும்? அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும்?" என்பது பற்றிதான் நீண்ட நேரம் விவாதம் செய்து இருக்கிறார்கள்.
கடைசியில் இன்னும் 2 நாட்கள் பொறுமையாக காத்திருக்கலாம். ஓரிரு நாட்களில் தி.மு.க.விடம் இருந்து நல்ல பதில் வரும் என்று டெல்லி மேலிட காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கையுடன் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து தமிழக காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் இருந்து நேற்று இரவே சென்னைக்கு புறப்பட்டு வந்துள்ளனர்.
அவர்கள் தி.மு.க.வுடன் மீண்டும் எப்போது பேசுவார்கள் என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது இதே மாதிரியான சூழ்நிலைதான் தி.மு.க.-காங்கிரஸ் கட்சிகள் இடையே நிலவியது. அந்த சமயத்தில் மத்திய மந்திரியாக இருந்த ப.சிதம்பரத்தின் மீது தி.மு.க. தலைவர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர்.
இதன் காரணமாகவே காங்கிரசுடன் பேச்சுவார்த்தையில் நீண்ட இழுபறி நீடித்தது. கடைசியில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று அதிரடியாக தி.மு.க. அறிவித்தது. இதனால் வேறு வழியில்லாமல் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது.
மீண்டும் அத்தகைய நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மிகவும் கவலைப்படுகிறார்கள். எனவே தி.மு.க.வுடன் சுமூகமான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை முடிக்க எதிர்பார்ப்புடன் உள்ளனர். சென்னையிலும், டெல்லியிலும் மாறி மாறி நடந்த ஆலோசனையில் இதுவரை எந்த உறுதியான முடிவும் எடுக்கப்படாத நிலையில் இந்த தேக்கத்துக்கு எப்போது விடை கிடைக்கும் என்ற கேள்விக்குறி தி.மு.க.-காங்கிரஸ் இரு கட்சி நிர்வாகிகளிடமும் எழுந்து உள்ளது.
- முஹம்மது ஷரீபும் பணத்தை கட்டி விட்டு ரசீதுடன் சென்றபோது சேவுகப்பெருமாள் ஒப்புதல் அளிக்க ரூ.60 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
- கைதான அதிகாரி சேவுகப்பெருமாளின் வீடு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை விவேகானந்தபுரம் பகுதியில் உள்ளது.
தேவகோட்டை:
ராமநாதபுரம் பாரதிநகரை சேர்ந்தவர் முகமது சரீப் (வயது45). இவருக்கு சொந்தமாக கூரியூர் பகுதியில் நிலம் உள்ளது. இதனை வீட்டு மனைகளாக்கி விற்பனை செய்ய முடிவு செய்தார். இதற்காக ராமநாதபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சேவுக பெருமாளிடம் மனு செய்தார்.
அவர் 8 மனைகளுக்கு வளர்ச்சி கட்டணமாக ரூ.28 ஆயிரத்து 192 மற்றும் வரன்முறை படுத்துதல் கட்டணமாக ரூ.50 ஆயிரத்து 745 ராமநாதபுரம் பாரத ஸ்டேட் வங்கியில் பணம் செலுத்தி ரசீது கொண்டு வரும்படி கூறியுள்ளார்.
அதன்படி முஹம்மது ஷரீபும் பணத்தை கட்டி விட்டு ரசீதுடன் சென்றபோது சேவுகப்பெருமாள் ஒப்புதல் அளிக்க ரூ.60 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.
போலீசாரின் அறிவுரைப்படி லஞ்ச பணத்தை கொடுக்க முயன்றபோது சேவுகப்பெருமாளை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
கைதான அதிகாரி சேவுகப்பெருமாளின் வீடு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை விவேகானந்தபுரம் பகுதியில் உள்ளது. நேற்று இரவு முதல் அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இன்று காலை அங்கு லஞ்ச ஒழிப்பு துறையினர் வருவாய்த்துறை முன்னிலையில் வீட்டில் சோதனை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சேவுகப்பெருமாள் வருகிற அக்டோபர் மாதம் பணியில் இருந்து ஓய்வு பெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
- தீப அக்க்ஷயாவின் தாய்மாமன்கள் 3 பேர் சேர்ந்து மலை கிராம மக்களை வியக்க வைக்கும் வகையில் சீர்வரிசைகளை வழங்கினர்.
- கேரள பாரம்பரிய நடனம் ஆடியபடி வந்த கலைஞர்கள் வெகுவாக கவர்ந்தனர்.
பெரும்பாறை:
தமிழகத்தில் திருமணம், காதணி, பூப்புனித நீராட்டு விழா, கிரஹபிரவேசம் உள்ளிட்ட எந்த விஷேசங்கள் நடந்தாலும் அதில் தாய்மாமன் பங்கு என்பது முக்கிய இடம் பெறும். அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்களில் தாய்மாமன் வழங்கும் சீர் என்பது மிகவும் பிரபலமாகும். அவரவர் வசதிக்கேற்ப சீர்வரிசை வழங்குவார்கள்.
மொய் நோட்டில் முதலில் தாய்மாமன் மொய் எழுதிய பிறகுதான் மற்றவர்கள் மொய் எழுதும் பழக்கம் இன்றுவரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. விழாக்களில் தாய்க்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறதோ அதே அளவிற்கு தாய்மாமனுக்கு முக்கியத்துவம் தரப்படும்.
குடும்பத்தில் எத்தகைய பிரச்சனைகள் இருந்தாலும் தனது சகோதரியின் மகள் அல்லது மகனுக்கு தாய்மாமன் அளிக்கும் சீர்வரிசைதான் சபையில் பேசப்படும். இந்த பழக்கம் இன்றுவரை தென்மாவட்டங்களில் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருவது உறவுகளை மேலும் வலுவாக்கும் நிகழ்வாக இருந்து வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மழை பகுதியான கே.சி.பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஐயப்பன். இவர் மாவட்ட மரம் வியாபார சங்க தலைவராக உள்ளார். இவரது மகள் தீப அக்க்ஷயாவுக்கு பூப்புனித நீராட்டு விழா நடத்த முடிவு செய்தார். இதற்காக உறவினர்கள் அனைவருக்கும் அழைப்பிதழ் கொடுத்து தனது வீட்டின் அருகிலேயே மிக பிரமாண்டமான பந்தல் அமைத்திருந்தார்.

தீப அக்க்ஷயாவின் தாய்மாமன்கள் 3 பேர் சேர்ந்து மலை கிராம மக்களை வியக்க வைக்கும் வகையில் சீர்வரிசைகளை வழங்கினர். உறவினர்கள் அனைவரும் வாழை, மாதுளை, திராட்சை, அரிசி, பருப்பு, சுவீட்ஸ், மிட்டாய் வகைகள், மலைத்தேன், மலைக்காய்கறிகள், பழங்கள், புத்தாடை, நகைகள் உள்ளிட்ட 300 வகை சீர்வரிசைகளை தலையில் சுமந்தபடியும், லாரியில் ஏற்றியும் செண்டைமேளம் மற்றும் அதிர் வேட்டுகள் முழங்க கொண்டு வந்தனர்.
மேலும் கேரள பாரம்பரிய நடனம் ஆடியபடி வந்த கலைஞர்கள் வெகுவாக கவர்ந்தனர். இப்பகுதியில் பெரும்பாலும் மலை கிராம மக்கள், ஆதிவாசி மக்கள் அதிக அளவு வசித்து வரும் நிலையில் இதுபோன்ற தாய்மாமன் சீர்வரிசை வரவேற்பு ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 3 கி.மீ. தூரம் சாரட் வண்டியில் தீப அக்க்ஷயாவை அமரவைத்து ஊர்வலமாக அழைத்துச் செல்ல அதன்பின்னர் சீர்வரிசை எடுத்து வரப்பட்டது.
விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.
- புதிய சிந்தனையோடு இந்தியாவோடு சேர்ந்து தமிழகமும் சிந்திக்கிறது.
- காங்கிரசும், தி.மு.க.வும் நாட்டை பிளவுபடுத்தி வருகின்றன.
நெல்லை:
நெல்லையில் நடந்த பாரதிய ஜனதா பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-
நெல்லையப்பர், காந்திமதி அம்மனுக்கு எனது நமஸ்காரங்கள். நாட்டுக்காக உழைக்க நெல்லையப்பர், காந்திமதி அம்மன் நல்லாசி தர வேண்டும். திருநெல்வேலி அல்வா போலவே நெல்லை மக்களும் மிகவும் இனிப்பானவர்கள். திருநெல்வேலி வந்துள்ளதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.
தமிழக மக்கள் பா.ஜ.க. மீது வைத்துள்ள நம்பிக்கையை நாங்கள் காப்பாற்றுவோம். தமிழகத்திற்காக நான் அளித்த அத்தனை உறுதிமொழிகளையும் கண்டிப்பாக நிறைவேற்றுவேன். இது எனது உத்தரவாதம். பா.ஜ.க.வின் சமூக நீதி, நேர்மையான அரசியலை தமிழக மக்கள் கவனித்து வருகிறார்கள்.
புதிய சிந்தனையோடு இந்தியாவோடு சேர்ந்து தமிழகமும் சிந்திக்கிறது. நாடு ஒரு புதிய சிந்தனையோடு செயல்பட்டு வருகிறது. இதன் பலன் தமிழகத்துக்கு கிடைக்கும்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகித்து வருகிறது. உலககெங்கிலும் வசிக்கும் தமிழ் மக்கள் அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையை நினைத்து பெருமைப்படுகிறார்கள். தமிழக மக்களின் அன்பு எங்களுக்கு உற்சாகத்தை அளிக்கிறது.
தமிழக மக்கள் எதிர்காலத்தை பற்றிய தெளிவுடன் இருப்பார்கள். அவர்கள் தொழில்நுட்ப அறிவில் மிகவும் சிறந்தவர்கள். இதுதான் தமிழகத்தை பா.ஜனதாவுடன் நெருக்கமாக்குகிறது. பா.ஜனதா கட்சியின் அணுகுமுறையும் சித்தாந்தமும் தமிழக மக்களின் எண்ணத்தோடு ஒத்துப்போகிறது.
உலகெங்கிலும் வசிக்கும் தமிழக மக்கள் அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையை நினைத்து பெருமைப்படுகிறார்கள். இது மத்திய அரசின் செயல்பாடுகளால் வருகிறது. பா.ஜ.க. ஆட்சியில் தமிழகம் டெல்லிக்கு மிக அருகே வந்திருக்கிறது.
5 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் 21 லட்சம் வீடுகளில் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. இன்று 1 கோடியாக உயர்ந்துள்ளது. இன்று தமிழகத்தில் 40 லட்சம் மகளிருக்கு உஜ்வாலா எரிவாயு சிலிண்டர் கிடைக்கிறது. இதனால் எனக்கு தமிழகத்தில் பெண்களின் ஆதரவு அதிகரித்துள்ளது.
இன்று நாடு 100 அடி முன்னேறுகிறது என்றால் தமிழகமும் மிக வேகமாக 100 அடி முன்னேறும். இது மோடியின் உத்தரவாதம்.
தமிழகத்தில் 50 லட்சம் பேர் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் இலவச மருத்துவ உதவி பெறுகிறார்கள். மக்கள் விருப்பத்திற்கு எதிராக மாநில அரசிடம் கணக்கு கேட்க வேண்டிய நேரம் இது. உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை படுகுழியில் தள்ளி விட்டார்கள். நான் இதை தொடர விட மாட்டேன். இது மோடியின் உத்தரவாதம்.
பல ஆண்டு காத்திருப்புக்கு பிறகு அயோத்தியில் குழந்தை ராமர் ஆலயம் அமைந்திருக்கிறது. அயோத்தி ராமர் கோவில் பற்றி பாராளுமன்றத்தில் விவாதம் நடந்தபோது தி.மு.க. எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். தமிழக மக்களிடம் நாங்கள் பாரபட்சம் காட்டவில்லை.
காங்கிரசும், தி.மு.க.வும் நாட்டை பிளவுபடுத்தி வருகின்றன. தமிழகத்தில் இருந்து ஒருவரை நாங்கள் பாராளுமன்ற உறுப்பினராக்கி உள்ளோம். அவரை மத்திய பிரதேசத்தில் இருந்து தேர்வு செய்துள்ளோம்.
தமிழகத்தின் மீது அதிக அன்பு எங்களுக்கு இருக்கிறது. கத்தாரில் இருந்து தண்டனை பெற்ற 8 முன்னாள் ராணுவ வீரர்களை இந்தியா அழைத்து வந்துள்ளோம்.
எங்களுக்கு நாடுதான் முதலிடம், மக்கள்தான் முக்கியம். இது வலிமையான பாரதம், தமிழகத்தைச் சேர்ந்த அபிநந்தன் பாகிஸ்தான் எல்லையில் விமானத்தில் விழுந்தார். அவரை ஒரு கீறல் கூட இல்லாமல் கூட்டிட்டு வந்தோம். இலங்கையில் 5 மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்தனர். அவர்களை மீட்டு வந்தோம்.
நம் நாட்டு மக்கள் மீது யாரும் கை வைக்க முடியாது. ஏனென்றால் இங்கு இருப்பது மோடி. மோடியை மீறி யாரும் இந்தியன் மீது கை வைக்க முடியாது.
தவறானவர்களை திருத்த வேண்டிய நேரம் இது. இந்த அரசுகளை மாற்ற வேண்டிய காலம் வந்து விட்டது. தி.மு.க. பொய் வேஷம் போடுகிறது. தி.மு.க. பிரித்தாளும் சூழ்ச்சியை செய்கிறது. இதை நாம் தெளிவாக பார்க்க முடிகிறது. ஆனால் இனி தி.மு.க.வை பார்க்க முடியாது. இனி தி.மு.க. இங்கு இருக்க முடியாது. ஏனென்றால் இங்கு அண்ணாமலை வந்து விட்டார். உங்கள் கூட அண்ணாமலை இருக்கிறார். இனி தி.மு.க.வை நீங்கள் எங்கு தேடினாலும் கிடைக்காது. தி.மு.க. இங்கு முற்றிலுமாக அகற்றப்படும்.
நெல்லை, சென்னை வந்தே பாரத் ரெயில் மூலம் வணிகம் பெருகி இருக்கிறது. தமிழ்நாட்டில் இனி தி.மு.க. என்ற ஒரு கட்சி இருக்காது. அக்கட்சியின் வேஷம் விரைவில் கலையும்.
மத்திய அரசின் திட்டங்களுக்கு மாநிலத்தில் உள்ள தி.மு.க. அரசு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. நெல்லை, தூத்துக்குடியில் சோலார் மின் உற்பத்தி நிலையம், காற்றாலை, விருதுநகரில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும். ராமர் கோவில் விவகாரத்தில் தி.மு.க. வெறுப்பு அரசியலை பரப்பியது.
தமிழ் வேறு, இந்தி வேறு என்னும் பிரித்தாளும் சூழ்ச்சியை தி.மு.க. கையாள்கிறது. இந்தி பேசும் மாநிலத்தில் இருந்து தமிழரான எல்.முருகனை பா.ஜனதா எம்.பி.யாக்கி உள்ளது.
மத்திய அரசின் மீது குற்றம் சொல்வதை தி.மு.க. வேலையாக வைத்துள்ளது. அதையும் தாண்டி மக்களுக்கு நன்மை செய்துள்ளோம்.
தனது குடும்ப வளர்ச்சியை தவிர மாநிலத்தின் வளர்ச்சியை தி.மு.க. கண்டு கொள்வதில்லை.
தமிழக மாணவர்கள் மருத்துவம், பொறியியல் கல்வியை தாய் மொழியில் படிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தென் தமிழக மக்களின் பிரச்சினைகளை பா.ஜ.க. நன்கு அறிந்துள்ளது. தங்கள் குடும்பத்தை வளர்ப்பதற்காகவே சிலர் ஆட்சிக்கு வர விரும்புகிறார்கள். என்ன வளர்ச்சி பணிகளை செய்ய போகிறோம் என அவர்களுக்கு எந்த திட்டமும் இல்லை.
ஆட்சிக்கு வந்தால் யார் அமைச்சர் ஆவார்கள் என்ற திட்டம் மட்டும் அவர்களிடம் இருக்கிறது. தமிழ்நாடு எப்போதும் நாட்டுக்கு வழிகாட்டியாக இருந்திருக்கிறது. எனக்கு நம்பிக்கை இருக்கிறது. தங்களுடைய குழந்தைகளின் நல்வாழ்வுக்கு பாடுபடுபவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.
இங்கு எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்கள் வளர்ச்சிக்கான பாதையை வகுத்தார்கள். தங்கள் வாரிசுகளை முன்னிலைப்படுத்துவதை மட்டுமே சிலர் நோக்கமாக வைத்துள்ளனர்.
தமிழ் மொழியில் பேச முடியவில்லையே என்ற ஏக்கம் எனக்கு இருக்கிறது. அவ்வப்போது ஒரு சில வார்த்தைகளை தமிழில் பேசுகிறேன். ஆனால் முழுமையாக தமிழில் பேச முடியவில்லையே என்கிற வருத்தம் எனக்குள் இருக்கிறது.
நான் என்ன பேசுகிறேன் என்று ஆர்வத்தோடு கேட்கிறீர்கள். அதற்காக உங்களுக்கு என்னுடைய 100 கோடி வணக்கம்.
நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை 2 கை எடுத்து கும்பிடுகிறேன். தலைவணங்குகிறேன். நீங்கள் எனக்கு ஆசியும், வாழ்த்தும் கொடுக்க வேண்டும்.
எதிர்க்கட்சி தலைவர்கள் கூட இன்று பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு வாக்காளரிடமும் நமது திட்டங்களை கொண்டு சேர்க்க வேண்டும். தமிழ்நாடு எனக்கு இத்தகைய ஆதரவு, ஆசீர்வாதம் தருவது எனது பாக்கியம்.
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி தி.மு.க.வும், காங்கிரசும் சம்பாதிக்க நினைக்கிறது. தமிழகத்தில் தி.மு.க. வாரிசு அரசியலை முன்னெடுக்கிறது. குடும்ப அரசியலில் ஈடுபடுவோருக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். நீங்கள் எவ்வளவு உழைக்கிறீர்களோ அதை விட அதிகமாக நான் உங்களுக்காக உழைப்பேன்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
- அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு.
- விசாரணை விழுப்புரம் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.
விழுப்பரம் மாவட்டத்தில் செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக, அனுமதியை மீறீ சுமார் 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுக்கப்பட்டுள்ளது.
இதனால், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக, முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்பட 8 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணை விழுப்புரம் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இதில், குற்றம்சாட்டப்பட்ட சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத் ஆகிய 4 பேர் ஆஜராகினர். மூன்று பேர் ஆஜராகாததை அடுத்து, இந்த வழக்கின் விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி, இன்றைய வழக்கு மீதான விசாரணை நீதிபதி முன் வந்தது. இதில், மேலும் ஒரு முக்கிய சாட்சி , பிறழ் சாட்சியமானது.
இதுவரை 9 பேர் பிறழ் சாட்சியம் ஆன நிலையில் மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம் அளித்துள்ளார். ஓய்வு பெற்ற விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ராதாகிருஷ்ணன் பிறழ் சாட்சியம் அளித்ததால் பரபப்பு ஏற்பட்டுள்ளது.
- ஒவ்வொரு வீட்டில் உள்ளவர்களிடமும் ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற பரப்புரை குறித்து சில நிமிட நேரங்கள் விளக்கி பேசுகின்றனர்.
- 26-ந் தேதி ஒரே நாளில் மட்டும் 1 லட்சம் வீடுகளுக்கு சென்று தி.மு.க.வினர் திண்ணைப் பிரசாரம் செய்துள்ளனர்.
சென்னை:
தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரையை முதலில் தொடங்கிய தி.மு.க. பிப்ர வரி 16, 17, 18-ந்தேதிகளில் 'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில் நாடாளுமன்றத் தொகுதிவாரியாக மிகப்பிரமாண்டமாக கூட்டங்களை நடத்தி முடித்தது. இந்த கூட்டங்கள் மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக 'இல்லந்தோறும் ஒலிக்கும் ஸ்டாலினின் குரல்' என்ற பரப்புரை தொடங்கப்பட்டுள்ளது.
திராவிட மாடல் ஆட்சியின் மூன்றாண்டு சாதனைகளையும், தமிழ்நாடு அரசின் பட்ஜெட் அறிக்கையின் சிறப்பம்சங்களையும் வீடுதோறும் கொண்டு சேர்க்கவும், ஒன்றிய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டுக்கு செய்து வரும் அநீதிகளை ஒவ்வொருவருக்கும் எடுத்துரைக்கும் வகையில், நேற்று முன்தினம் முதல் (26-ந் தேதி) 'இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில் திண்ணைப் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளது.
தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுச்சேரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் 40 தொகுதிகளிலும் தி.மு.க. பெறுகிற வெற்றி மகத்தான வெற்றியாக இருக்க வேண்டும் என்றும் கூறி வருகிறார்.
அதன் அடிப்படையில் கட்சி நிர்வாகிகள் திண்ணை பிரசாரத்தை எளிமையாக மேற்கொள்ள வேண்டும் என்று கூறி இருந்தார்.
இதைத் தொடர்ந்து பிப்ரவரி 26-ந் தேதி முதல் தி.மு.க.வின் மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஒன்றிய செயலாளர்கள், மாநகர, பகுதி கழக, பேரூர் கழக செயலாளர்கள், பூத் கமிட்டியினர் ஒவ்வொரு வீடாக சென்று துண்டறிக்கைகளை வழங்கி ஒவ்வொரு வீட்டில் உள்ளவர்களிடமும் 'இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்' என்ற பரப்புரை குறித்து சில நிமிட நேரங்கள் விளக்கி பேசுகின்றனர்.
அப்போது பாரதிய ஜனதா கட்சியையும், அ.தி.மு.க.வையும் விமர்சித்து பேசுகின்றனர்.
26-ந் தேதி ஒரே நாளில் மட்டும் 1 லட்சம் வீடுகளுக்கு சென்று தி.மு.க.வினர் திண்ணைப் பிரசாரம் செய்துள்ளனர். 'பாசிசம் வீழட்டும்', 'இந்தியா வெல்லட்டும்' ஸ்டிக்கர்களையும் வீடுகள் முன்பாக ஒட்டி வருகின்றனர். காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் இன்று முழுவதும் கட்சி நிர்வாகிகள் வீடு வீடாக சென்று திண்ணைப் பிரசாரம் செய்து வருகின்றனர். இதேபோல் தமிழ்நாடு முழுவதும் திண்ணைப் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- “வருகிற 1-ந் தேதி நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் கழகத்தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 71-ம் அகவையில் அடியெடுத்து வைக்கிறார்.
- தமிழினத் தலைவர் கலைஞரின் சமூகநலத் திட்டங்களையும் மனதில் தாங்கி திராவிட மாடல் ஆட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறார்.
சென்னை:
தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
"வருகிற 1-ந் தேதி நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் கழகத்தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 71-ம் அகவையில் அடியெடுத்து வைக்கிறார்.
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரரான நம் தலைவர், கழகத்தை 6-வது முறையாக ஆட்சிப் பொறுப்பில் அமர வைத்த பெருமையைப் பெற்றுத் தந்துள்ளார்.
தந்தை பெரியாரின் சமூகநீதியையும், பேரறிஞர் அண்ணாவின் மாநில சுயாட்சிக் கொள்கையையும், தமிழினத் தலைவர் கலைஞரின் சமூகநலத் திட்டங்களையும் மனதில் தாங்கி திராவிட மாடல் ஆட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறார்.
அத்தகைய பெருமைமிகு தலைவரின் பிறந்தநாளை நாம் அனைவரும் சீரிய வகையில் கொண்டாடும் விதமாக திராவிட மாடல் அரசின் சாதனைகள் மற்றும் அரசின் நிதிநிலை அறிக்கை விளக்கும் பொதுக் கூட்டங்களை தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சிகளில் தலைமைக் கழக அறிவிப்பின்படி நடத்திடுவது" என நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, வருகிற மார்ச் 2, 3 மற்றும் 4-ந்தேதிகளில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள மாநகரம் மற்றும் நகரங்களில் அறிவிக்கப்பட்டுள்ள பேச்சாளர்களைக் கொண்டு, "எல்லோருக்கும் எல்லாம்" "திராவிட மாடல் நாயகர் கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டங்கள்" நடத்திட வேண்டும்.
2-ந்தேதி: ஈரோடு-கனிமொழி எம்.பி., திருவெறும்பூர்-அமைச்சர் ஐ.பெரியசாமி, நாமக்கல்-திருச்சி சிவா, திண்டுக்கல்-பொன்முடி, நாகை-அமைச்சர் எ.வ.வேலு, நாகர்கோவில்-அமைச்சர் தங்கம் தென்னரசு, வேலூர்-அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மதுரை-தயாநிதி மாறன், கோபிசெட்டி பாளையம்-ஆ.ராசா, கிருஷ்ணகிரி-காசிமுத்து மாணிக்கம் மற்றும் முக்கிய நகரங்களில் பேசுபவர்கள் விவரம்.
3-ந்தேதி: திருமங்கலம்-அமைச்சர் கே.என்.நேரு, கோவை-ஆ.ராசா, கடலூர்-அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, விருதாச்சலம்-அமைச்சர் எ.வ.வேலு, காஞ்சிபுரம்-அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பேசும் இடங்கள்.
4-ந்தேதி: துரைமுருகன் செங்கல்பட்டு-கழகப் பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன், எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி. மற்றும் பல்வேறு ஊர்களில் பேசுபவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






