search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தி.மு.க.-காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் எதிர்பாராத தேக்கம்
    X

    தி.மு.க.-காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் எதிர்பாராத தேக்கம்

    • கடந்த தடவை போட்டியிட்ட தொகுதிகளில் சிலவற்றை இந்த தடவை தர இயலாது.
    • 12 தொகுதிகள் தரவேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. மற்றும் இடது சாரி கட்சிகள் பிரதானமாக இடம் பிடித்துள்ளன.

    இந்த கூட்டணியில் முஸ்லிம் லீக், கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி ஆகிய இரு கட்சிகளுக்கு மட்டுமே ராமநாதபுரம், நாமக்கல் தொகுதி பங்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    மற்ற கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் முடிவுக்கு வரவில்லை. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. மற்றும் இடது சாரி கட்சிகள் கடந்த தேர்தலை விட இந்த தடவை கூடுதல் தொகுதி கள் கேட்பதால் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை நடத்த முடிவு செய்துள்ளனர்.

    காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் அந்த கட்சி கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஆரணி, திருவள்ளூர், கரூர், திருச்சி, கன்னியாகுமரி, சிவகங்கை, தேனி ஆகிய 9 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் தேனி தொகுதியை தவிர மற்ற 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

    இந்த தடவை தங்களுக்கு 12 தொகுதிகள் தரவேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது. 3 வாரங்களுக்கு முன்பு தி.மு.க.-காங்கிரஸ் தலைவர்கள் தொகுதி பங்கீடு சம்பந்தமாக சந்தித்து பேசியபோது 15 தொகுதிகள் கொண்ட பட்டியலை கொடுத்து அதில் 12 தொகுதிகளை ஒதுக்கி தர வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கேட்டுக் கொண்டனர்.


    ஆனால் இதை தி.மு.க. ஏற்கவில்லை. தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் சேர்த்து மொத்தம் 8 தொகுதிகள் மட்டுமே தர இயலும் என்று தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் சந்தித்து பேசலாம் என்று முடிவு செய்தனர்.

    ஆனால் 3 வாரம் கடந்த நிலையில் தி.மு.க.- காங்கிரஸ் தலைவர்கள் இன்னமும் 2-வது கட்ட பேச்சுவார்த்தைக்கு உட்காரவில்லை. மற்ற தோழமை கட்சிகளுடன் தி.மு.க. தலைவர்கள் 2-வது கட்ட பேச்சுவார்த்தையை நிறைவு செய்து விட்ட நிலையில் காங்கிரசுக்கு மட்டும் இன்னமும் அழைப்பு அனுப்பப்படவில்லை. இதன் காரணமாக தி.மு.க.-காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் எதிர்பாராத தேக்கம் ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி மாற்றப்பட்டு புதிய தலைவராக செல்வபெருந்தகை பொறுப்பு ஏற்றதும் மீண்டும் பேச்சு வார்த்தையை தீவிரப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தி.மு.க. தரப்பில் 8 தொகுதிகள் மட்டுமே தர இயலும் என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டதால் இந்த இழுபறியை முடிவுக்கு கொண்டு வர தமிழக காங்கிரஸ் தலைவர்கள் செல்வபெருந்தகை, ராஜேஷ்குமார், ரூபி மனோகரன் ஆகியோர் நேற்று முன்தினம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.

    நேற்று அவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேலிட பொறுப்பாளர் அஜோய்குமாருடன் ஆலோசனை நடத்தினார்கள். பிறகு அஜோய்குமார், செல்வபெருந்தகை, ராஜேஷ்குமார், ரூபி மனோகரன் ஆகிய 4 பேரும் நேற்று மாலை 6.30 மணிக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து பேசினார்கள். சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக அவர்களது ஆலோசனை கூட்டம் நீடித்தது.

    கூட்டம் முடிந்ததும் நிருபர்களிடம் அஜோய்குமாரும், செல்வபெருந்தகையும் பேசுகையில், "தொகுதி பங்கீட்டில் எந்த பிரச்சினையும் இல்லை" என்று கூறினார்கள். ஆனால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பது தெரிய வந்துள்ளது.


    தற்போதைய சூழ்நிலையில் தி.மு.க.-காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் ஏற்பட்டுள்ள தேக்கத்துக்கு 3 விதமான பிரச்சினைகளே முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. இந்த 3 முக்கிய பிரச்சினைகள் வருமாறு:-

    1. காங்கிரஸ் கேட்கும் 12 தொகுதிகளை தர இயலாது என்று தி.மு.க. உறுதிப்பட கூறி இருக்கிறது. 8 தொகுதிகள் மட்டுமே தர இயலும் என்று தெளிவுப்படுத்தி உள்ளது.

    2. கடந்த தடவை போட்டியிட்ட தொகுதிகளில் சிலவற்றை இந்த தடவை தர இயலாது. சுழற்சி முறையில் இந்த தடவை வேறு தொகுதிகள் ஒதுக்கப்படும். அதை ஏற்க வேண்டும் என்று தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதை காங்கிரஸ் ஏற்க தயங்குகிறது.

    3. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியையும் கூட்டணியில் சேர்க்க சம்மதித்து உள்ள தி.மு.க. கமல்ஹாசனுக்கான தொகுதியை காங்கிரஸ் ஒதுக்கி கொடுக்க வேண்டும் என்று கூறி உள்ளது. இது காங்கிரஸ் தலைவர்களை கூடுதல் நெருக்கடிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

    இந்த 3 பிரச்சினைகளும் நாளுக்கு நாள் இடியாப்ப சிக்கலாகவே மாறி வருகிறது. உதாரணத்துக்கு தொகுதிகளை மாற்றுவதால் காங்கிரஸ் தலைவர்கள் தவிப்புக்குள்ளாகி இருப்பது தெரிய வந்துள்ளது. திருச்சி தொகுதியை துரை வைகோவுக்காக ம.தி.மு.க. கேட்கிறது. இதனால் அந்த தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட முடிவு செய்தார்.

    ஆனால் அதற்குள் ராமநாதபுரம் தொகுதி முஸ்லிம் லீக்குக்கு ஒதுக்கப்பட்டு விட்டது. அதுபோல கமல்ஹாசனுக்கு எந்த தொகுதி கொடுப்பது என்பதில் இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்த தேக்கத்துக்கு யார் காரணம்? என்பது தி.மு.க.விலும், காங்கிரசிலும் தலைவர்கள் மட்டத்தில் புரியாத புதிராக இருந்து கொண்டு இருக்கிறது.

    இந்த நிலையில் காங்கிரசுக்கு 5 தொகுதிகள் மட்டுமே தர இயலும் என்று தி.மு.க. புதிதாக உறுதி செய்யப்படாத ஒரு தகவலும் உலா வந்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய யூகங்களுக்கும், தேக்கத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் தி.மு.க. தலைவர்களும், காங்கிரஸ் தலைவர்களும் மீண்டும் அமர்ந்து பேச வேண்டும். ஆனால் தி.மு.க. இதுவரை காங்கிரஸ் தலைவர்களை அழைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    அவர்கள் அழைக்காமல் நாம் எப்படி மீண்டும் செல்வது என்று காங்கிரஸ் தலைவர்கள் தடுமாற்றத்துடன் தயங்கி கொண்டு இருக்கிறார்கள். டெல்லி மேலிட காங்கிரஸ் தலைவர்களும் இந்த சூழ்நிலையை சற்று கவலையுடன் பார்க்கிறார்கள். நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் கூட, "தி.மு.க. என்ன முடிவு செய்யும்? அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும்?" என்பது பற்றிதான் நீண்ட நேரம் விவாதம் செய்து இருக்கிறார்கள்.

    கடைசியில் இன்னும் 2 நாட்கள் பொறுமையாக காத்திருக்கலாம். ஓரிரு நாட்களில் தி.மு.க.விடம் இருந்து நல்ல பதில் வரும் என்று டெல்லி மேலிட காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கையுடன் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து தமிழக காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் இருந்து நேற்று இரவே சென்னைக்கு புறப்பட்டு வந்துள்ளனர்.

    அவர்கள் தி.மு.க.வுடன் மீண்டும் எப்போது பேசுவார்கள் என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது இதே மாதிரியான சூழ்நிலைதான் தி.மு.க.-காங்கிரஸ் கட்சிகள் இடையே நிலவியது. அந்த சமயத்தில் மத்திய மந்திரியாக இருந்த ப.சிதம்பரத்தின் மீது தி.மு.க. தலைவர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர்.

    இதன் காரணமாகவே காங்கிரசுடன் பேச்சுவார்த்தையில் நீண்ட இழுபறி நீடித்தது. கடைசியில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று அதிரடியாக தி.மு.க. அறிவித்தது. இதனால் வேறு வழியில்லாமல் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது.

    மீண்டும் அத்தகைய நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மிகவும் கவலைப்படுகிறார்கள். எனவே தி.மு.க.வுடன் சுமூகமான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை முடிக்க எதிர்பார்ப்புடன் உள்ளனர். சென்னையிலும், டெல்லியிலும் மாறி மாறி நடந்த ஆலோசனையில் இதுவரை எந்த உறுதியான முடிவும் எடுக்கப்படாத நிலையில் இந்த தேக்கத்துக்கு எப்போது விடை கிடைக்கும் என்ற கேள்விக்குறி தி.மு.க.-காங்கிரஸ் இரு கட்சி நிர்வாகிகளிடமும் எழுந்து உள்ளது.

    Next Story
    ×