search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குடும்ப அரசியலில் ஈடுபடுவோருக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்: பிரதமர் மோடி
    X

    குடும்ப அரசியலில் ஈடுபடுவோருக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்: பிரதமர் மோடி

    • புதிய சிந்தனையோடு இந்தியாவோடு சேர்ந்து தமிழகமும் சிந்திக்கிறது.
    • காங்கிரசும், தி.மு.க.வும் நாட்டை பிளவுபடுத்தி வருகின்றன.

    நெல்லை:

    நெல்லையில் நடந்த பாரதிய ஜனதா பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-

    நெல்லையப்பர், காந்திமதி அம்மனுக்கு எனது நமஸ்காரங்கள். நாட்டுக்காக உழைக்க நெல்லையப்பர், காந்திமதி அம்மன் நல்லாசி தர வேண்டும். திருநெல்வேலி அல்வா போலவே நெல்லை மக்களும் மிகவும் இனிப்பானவர்கள். திருநெல்வேலி வந்துள்ளதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.

    தமிழக மக்கள் பா.ஜ.க. மீது வைத்துள்ள நம்பிக்கையை நாங்கள் காப்பாற்றுவோம். தமிழகத்திற்காக நான் அளித்த அத்தனை உறுதிமொழிகளையும் கண்டிப்பாக நிறைவேற்றுவேன். இது எனது உத்தரவாதம். பா.ஜ.க.வின் சமூக நீதி, நேர்மையான அரசியலை தமிழக மக்கள் கவனித்து வருகிறார்கள்.

    புதிய சிந்தனையோடு இந்தியாவோடு சேர்ந்து தமிழகமும் சிந்திக்கிறது. நாடு ஒரு புதிய சிந்தனையோடு செயல்பட்டு வருகிறது. இதன் பலன் தமிழகத்துக்கு கிடைக்கும்.

    புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகித்து வருகிறது. உலககெங்கிலும் வசிக்கும் தமிழ் மக்கள் அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையை நினைத்து பெருமைப்படுகிறார்கள். தமிழக மக்களின் அன்பு எங்களுக்கு உற்சாகத்தை அளிக்கிறது.

    தமிழக மக்கள் எதிர்காலத்தை பற்றிய தெளிவுடன் இருப்பார்கள். அவர்கள் தொழில்நுட்ப அறிவில் மிகவும் சிறந்தவர்கள். இதுதான் தமிழகத்தை பா.ஜனதாவுடன் நெருக்கமாக்குகிறது. பா.ஜனதா கட்சியின் அணுகுமுறையும் சித்தாந்தமும் தமிழக மக்களின் எண்ணத்தோடு ஒத்துப்போகிறது.

    உலகெங்கிலும் வசிக்கும் தமிழக மக்கள் அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையை நினைத்து பெருமைப்படுகிறார்கள். இது மத்திய அரசின் செயல்பாடுகளால் வருகிறது. பா.ஜ.க. ஆட்சியில் தமிழகம் டெல்லிக்கு மிக அருகே வந்திருக்கிறது.

    5 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் 21 லட்சம் வீடுகளில் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. இன்று 1 கோடியாக உயர்ந்துள்ளது. இன்று தமிழகத்தில் 40 லட்சம் மகளிருக்கு உஜ்வாலா எரிவாயு சிலிண்டர் கிடைக்கிறது. இதனால் எனக்கு தமிழகத்தில் பெண்களின் ஆதரவு அதிகரித்துள்ளது.

    இன்று நாடு 100 அடி முன்னேறுகிறது என்றால் தமிழகமும் மிக வேகமாக 100 அடி முன்னேறும். இது மோடியின் உத்தரவாதம்.

    தமிழகத்தில் 50 லட்சம் பேர் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் இலவச மருத்துவ உதவி பெறுகிறார்கள். மக்கள் விருப்பத்திற்கு எதிராக மாநில அரசிடம் கணக்கு கேட்க வேண்டிய நேரம் இது. உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை படுகுழியில் தள்ளி விட்டார்கள். நான் இதை தொடர விட மாட்டேன். இது மோடியின் உத்தரவாதம்.

    பல ஆண்டு காத்திருப்புக்கு பிறகு அயோத்தியில் குழந்தை ராமர் ஆலயம் அமைந்திருக்கிறது. அயோத்தி ராமர் கோவில் பற்றி பாராளுமன்றத்தில் விவாதம் நடந்தபோது தி.மு.க. எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். தமிழக மக்களிடம் நாங்கள் பாரபட்சம் காட்டவில்லை.

    காங்கிரசும், தி.மு.க.வும் நாட்டை பிளவுபடுத்தி வருகின்றன. தமிழகத்தில் இருந்து ஒருவரை நாங்கள் பாராளுமன்ற உறுப்பினராக்கி உள்ளோம். அவரை மத்திய பிரதேசத்தில் இருந்து தேர்வு செய்துள்ளோம்.

    தமிழகத்தின் மீது அதிக அன்பு எங்களுக்கு இருக்கிறது. கத்தாரில் இருந்து தண்டனை பெற்ற 8 முன்னாள் ராணுவ வீரர்களை இந்தியா அழைத்து வந்துள்ளோம்.

    எங்களுக்கு நாடுதான் முதலிடம், மக்கள்தான் முக்கியம். இது வலிமையான பாரதம், தமிழகத்தைச் சேர்ந்த அபிநந்தன் பாகிஸ்தான் எல்லையில் விமானத்தில் விழுந்தார். அவரை ஒரு கீறல் கூட இல்லாமல் கூட்டிட்டு வந்தோம். இலங்கையில் 5 மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்தனர். அவர்களை மீட்டு வந்தோம்.

    நம் நாட்டு மக்கள் மீது யாரும் கை வைக்க முடியாது. ஏனென்றால் இங்கு இருப்பது மோடி. மோடியை மீறி யாரும் இந்தியன் மீது கை வைக்க முடியாது.

    தவறானவர்களை திருத்த வேண்டிய நேரம் இது. இந்த அரசுகளை மாற்ற வேண்டிய காலம் வந்து விட்டது. தி.மு.க. பொய் வேஷம் போடுகிறது. தி.மு.க. பிரித்தாளும் சூழ்ச்சியை செய்கிறது. இதை நாம் தெளிவாக பார்க்க முடிகிறது. ஆனால் இனி தி.மு.க.வை பார்க்க முடியாது. இனி தி.மு.க. இங்கு இருக்க முடியாது. ஏனென்றால் இங்கு அண்ணாமலை வந்து விட்டார். உங்கள் கூட அண்ணாமலை இருக்கிறார். இனி தி.மு.க.வை நீங்கள் எங்கு தேடினாலும் கிடைக்காது. தி.மு.க. இங்கு முற்றிலுமாக அகற்றப்படும்.

    நெல்லை, சென்னை வந்தே பாரத் ரெயில் மூலம் வணிகம் பெருகி இருக்கிறது. தமிழ்நாட்டில் இனி தி.மு.க. என்ற ஒரு கட்சி இருக்காது. அக்கட்சியின் வேஷம் விரைவில் கலையும்.

    மத்திய அரசின் திட்டங்களுக்கு மாநிலத்தில் உள்ள தி.மு.க. அரசு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. நெல்லை, தூத்துக்குடியில் சோலார் மின் உற்பத்தி நிலையம், காற்றாலை, விருதுநகரில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும். ராமர் கோவில் விவகாரத்தில் தி.மு.க. வெறுப்பு அரசியலை பரப்பியது.

    தமிழ் வேறு, இந்தி வேறு என்னும் பிரித்தாளும் சூழ்ச்சியை தி.மு.க. கையாள்கிறது. இந்தி பேசும் மாநிலத்தில் இருந்து தமிழரான எல்.முருகனை பா.ஜனதா எம்.பி.யாக்கி உள்ளது.

    மத்திய அரசின் மீது குற்றம் சொல்வதை தி.மு.க. வேலையாக வைத்துள்ளது. அதையும் தாண்டி மக்களுக்கு நன்மை செய்துள்ளோம்.

    தனது குடும்ப வளர்ச்சியை தவிர மாநிலத்தின் வளர்ச்சியை தி.மு.க. கண்டு கொள்வதில்லை.

    தமிழக மாணவர்கள் மருத்துவம், பொறியியல் கல்வியை தாய் மொழியில் படிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தென் தமிழக மக்களின் பிரச்சினைகளை பா.ஜ.க. நன்கு அறிந்துள்ளது. தங்கள் குடும்பத்தை வளர்ப்பதற்காகவே சிலர் ஆட்சிக்கு வர விரும்புகிறார்கள். என்ன வளர்ச்சி பணிகளை செய்ய போகிறோம் என அவர்களுக்கு எந்த திட்டமும் இல்லை.

    ஆட்சிக்கு வந்தால் யார் அமைச்சர் ஆவார்கள் என்ற திட்டம் மட்டும் அவர்களிடம் இருக்கிறது. தமிழ்நாடு எப்போதும் நாட்டுக்கு வழிகாட்டியாக இருந்திருக்கிறது. எனக்கு நம்பிக்கை இருக்கிறது. தங்களுடைய குழந்தைகளின் நல்வாழ்வுக்கு பாடுபடுபவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.

    இங்கு எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்கள் வளர்ச்சிக்கான பாதையை வகுத்தார்கள். தங்கள் வாரிசுகளை முன்னிலைப்படுத்துவதை மட்டுமே சிலர் நோக்கமாக வைத்துள்ளனர்.

    தமிழ் மொழியில் பேச முடியவில்லையே என்ற ஏக்கம் எனக்கு இருக்கிறது. அவ்வப்போது ஒரு சில வார்த்தைகளை தமிழில் பேசுகிறேன். ஆனால் முழுமையாக தமிழில் பேச முடியவில்லையே என்கிற வருத்தம் எனக்குள் இருக்கிறது.

    நான் என்ன பேசுகிறேன் என்று ஆர்வத்தோடு கேட்கிறீர்கள். அதற்காக உங்களுக்கு என்னுடைய 100 கோடி வணக்கம்.

    நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை 2 கை எடுத்து கும்பிடுகிறேன். தலைவணங்குகிறேன். நீங்கள் எனக்கு ஆசியும், வாழ்த்தும் கொடுக்க வேண்டும்.

    எதிர்க்கட்சி தலைவர்கள் கூட இன்று பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு வாக்காளரிடமும் நமது திட்டங்களை கொண்டு சேர்க்க வேண்டும். தமிழ்நாடு எனக்கு இத்தகைய ஆதரவு, ஆசீர்வாதம் தருவது எனது பாக்கியம்.

    ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி தி.மு.க.வும், காங்கிரசும் சம்பாதிக்க நினைக்கிறது. தமிழகத்தில் தி.மு.க. வாரிசு அரசியலை முன்னெடுக்கிறது. குடும்ப அரசியலில் ஈடுபடுவோருக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். நீங்கள் எவ்வளவு உழைக்கிறீர்களோ அதை விட அதிகமாக நான் உங்களுக்காக உழைப்பேன்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    Next Story
    ×