என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • முதலமைச்சரை சந்திக்க திருமாவளவன் நேரம் கேட்டிருந்தார்.
    • தி.மு.க. தரப்பில் இருந்து அழைப்பு எதுவும் வரவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் தரப்பில் கூறப்படுகிறது.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது. கடந்த முறை போல் அல்லாமல் 2 தனித் தொகுதியில் தனி சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு கொடுத்துள்ளது.

    ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கூடுதலாக ஒரு தொகுதி ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுவதால் தொகுதி உடன்பாடு ஏற்படாமல் இழுபறி நீடித்தது.

    தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திட அழைத்தது. ஆனால் அவர் செல்லவில்லை. உயர் மட்டக் குழுவை கூட்டி சில முக்கிய முடிவுகளை எடுத்தனர். 2 தனி தொகுதியையும், ஒரு பொதுத் தொகுதியையும் கேட்டு பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்று உயர்மட்ட நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

    மேலும் இதுபற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நிலையை விளக்க வேண்டும் என்றும் அக்கூட்டத்தில் பேசப்பட்டது.


    அதன்படி முதலமைச்சரை சந்திக்க திருமாவளவன் நேரம் கேட்டிருந்தார். வெளியூர் சென்று இருந்த முதலமைச்சர் சென்னை திரும்பியதும் தன்னை அழைப்பார் என்று திருமாவளவன் எதிர் பார்த்தார்.

    ஆனால் இன்று காலை வரையில் விடுதலை சிறுத்தைக்கு எந்த தகவலும் வரவில்லை. இதனால் கட்சி நிகழ்ச்சிகளில் அவர் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.

    முதலமைச்சரை சந்தித்த பிறகுதான் தொகுதி பங்கீட்டு உடன்பாட்டில் கையெழுத்திடுவதாகவும் உறுதியாக உள்ளார்.

    முதலமைச்சரிடம் இருந்து கட்டாயம் அழைப்பு வரும் என்ற நம்பிக்கையில் திருமாவளவன் காத்து இருக்கிறார்.

    முதலமைச்சரை நேரில் சந்திக்கும் போது, கூடுதலாக கேட்கப்படும் பொதுத் தொகுதியில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடவும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கூடுதலாக ஒதுக்கப்படும் தொகுதிகூட தி.மு.க. சின்னம்தான்.


    அதனால் கூடுதலாக ஒரு தொகுதியை ஒதுக்குவதால் தி.மு.க.விற்கு எவ்வித இழப்பும் ஏற்படாது என்பதை விளக்கவும் உள்ளார்.

    விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் சிக்கல் நீடித்து வருவதால் பேச்சுவார்த்தை தள்ளிப் போகிறது.

    இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    சனாதன சக்தியான பா.ஜனதாவை இத்தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும்.

    கடந்த தேர்தலை விட கூடுதலாக ஒரு தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். அதுவும் பொதுத் தொகுதி. கூட்டணி கட்சிகளை தி.மு.க. அலட்சியப்படுத்தக் கூடாது. தங்கள் முடிவை பரிசீலிக்க வேண்டும்.

    முதலமைச்சர் தலையிட்டால் தான் உடன்பாடு இறுதியாகும். முதலமைச்சரை சந்திக்கும் வரை இப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையில் தொகுதி பங்கீட்டு குழுவுடன் விடுதலை சிறுத்தைகள் இன்று சந்தித்து பேசுவதற்கு அழைப்பு கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் தி.மு.க. தரப்பில் இருந்து அழைப்பு எதுவும் வரவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் தரப்பில் கூறப்படுகிறது.

    கூடுதலாக ஒரு தொகுதிக்கு வரிந்து கட்டும் விடுதலை சிறுத்தையின் கோரிக்கையை முதலமைச்சர் பரிசீலனை செய்வாரா? இல்லை 2 தொகுதிகள் தான் ஒதுக்கப்படும் என்பதில் உறுதியாக இருப்பாரா? என்பது ஓரிரு நாட்களில் தெரிந்து விடும்.

    • இவ்வாண்டு கூடுதலாக 2 சிவத்திருத்தலங்கள் சார்பாக மகா சிவராத்திரி பெருவிழா வெகுவிமரிசையாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
    • கோவில்களில் வருகிற 8-ந் தேதி மகா சிவராத்திரி பெருவிழா ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளுடன் வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2023-2024-ம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பில், "மகா சிவராத்திரி விழா கடந்தாண்டு 5 சிவத் திருத்தலங்கள் சார்பாக பெருவிழாவாக ஆன்மிக கலை நிகழ்ச்சிகளுடன் பிரமாண்டமாக நடத்தப்பட்டதை போல், இவ்வாண்டு கூடுதலாக 2 சிவத்திருத்தலங்கள் சார்பாக மகா சிவராத்திரி பெருவிழா வெகுவிமரிசையாக நடத்தப்படும்" என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இந்தாண்டு கூடுதலாக மதுரை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மற்றும் திருவானைக்காவல், ஜம்புகேஸ்வரர் கோவில் ஆகிய 2 கோவில்களையும் சேர்த்து 7 கோவில்களில் வருகிற 8-ந் தேதி மகா சிவராத்திரி பெருவிழா ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளுடன் வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது.

    சென்னை, மயிலாப்பூர், கபாலீசுவரர் கோவில் சார்பில் நடத்தப்படும் மகா சிவராத்திரி பெருவிழாவை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு வருகிற 8-ந் தேதி தொடங்கி வைக்கிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சு வார்த்தையை தீவிரப்படுத்தி உள்ளன.
    • தி.மு.க.வின் அழைப்பை எதிர்பார்த்து ம.தி.மு.க. காத்திருக்கிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல்,மே மாதங்களில் தேர்தல் நடைபெறும் என்றும் இதற்கான தேர்தல் தேதி 10-ந்தேதிக்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படும் என்பதால், ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சு வார்த்தையை தீவிரப்படுத்தி உள்ளன.

    தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதி என உடன்பாடு ஏற்பட்டுள்ளன.


    இதன் அடுத்த கட்டமாக ம.தி.மு.க. விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் கட்சிகளுடனான பேச்சுவார்த்தையை சுமூகமாக முடிக்க தி.மு.க. முயன்று வருகிறது.

    ம.தி.மு.க. முதலில் 2 பாராளுமன்ற தொகுதி ஒரு மேல்சபை சீட் கேட்டது. ஆனால் தி.மு.க. அதற்கு சம்மதிக்கவில்லை. கடந்த முறை போல் ஒரு பாராளுமன்ற தொகுதி, ஒரு மேல் சபை சீட் தாருங்கள் என்று ம.தி.மு.க. இறங்கி வந்துள்ளது. ஆனால் பம்பரம் சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று நிபந்தனை விதித்தது.

    இதற்கு தி.மு.க. பிடி கொடுக்காமல் தலைவரிடம் கேட்டு சொல்கிறோம் என்று கூறி விட்டனர். இதனால் தி.மு.க.வின் அழைப்பை எதிர்பார்த்து ம.தி.மு.க. காத்திருக்கிறது.


    விடுதலை சிறுத்தைகள் கட்சி கடந்த தேர்தலில் சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த முறை கூடுதலாக ஒரு தொகுதி வேண்டும் என்று நிபந்தனை விதித்ததுடன் பானை சின்னத்தில் போட்டியிட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது.

    ஆனால் உங்களுக்கு 2 தொகுதிகள் தான். அதை வாங்கிச் செல்லுங்கள் என்று தி.மு.க. உறுதியான நிலைப்பாட்டில் இருக்கிறது. இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் என்ன செய்வது என யோசித்து கொண்டிருக்கிறார். அநேகமாக நாளை அறிவாலயம் சென்று தொகுதி உடன்பாடு ஏற்படுத்தி கொள்ள வாய்ப்பு உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை கடந்த முறை தந்த 10 தொகுதிகளை ஒதுக்கி தந்தால் போதும் என்ற மன நிலைக்கு வந்து விட்டனர். ஆனால் தி.மு.க. 8 தொகுதிக்கு மேல் ஒதுக்க இயலாது என்பதில் உறுதியாக உள்ளது.

    இந்த 8 தொகுதிகளில் ஒரு தொகுதியை கமல்ஹாசனுக்கு உள் ஒதுக்கீடாக காங்கிரஸ் கொடுத்து விட வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது.


    ஆனால் கமல்ஹாசன் எங்களிடம் எதுவும் கேட்கவில்லை என்று காங்கிரஸ் தொகுதி கொடுக்க மறுத்து வருகிறது. எங்களுக்கே 'சீட்' போதாது. இதில் கமல்ஹாசனுக்கு நாங்கள் எங்கே கொடுப்பது என்று காங்கிரஸ் கைவிரித்து விட்டது. இதனால் யாரிடம் சென்று தொகுதி கேட்பது என்று கமல்ஹாசன் விழி பிதுங்கி நிற்கிறார்.

    இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவாலயம் வந்து தி.மு.க. பேச்சுவார்த்தை குழுவினருக்கு சில ஆலோசனைகளை வழங்கினார். அதன்படி கூட்டணி கட்சிகள் கேட்கும் தொகுதிகள் எண்ணிக்கை அதில் எந்தெந்த தொகுதிகளை யார்-யாருக்கு வழங்குவது என்பது குறித்து சில யோசனைகளை தெரிவித்தார்.

    இதன்படி கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை விரைந்து முடிக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டி.ஆர்.பாலுவிடம் அறிவுறுத்தி உள்ளார்.

    அதன்படி தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி உன்பாடு காண முயற்சிகள் மேறகொள்ளப்பட்டு வருகிறது. தி.மு.க. 23 தொகுதிகளில் போட்டியிடும் வகையில் தொகுதிகளை வைத்துக் கொண்டு அதற்கேற்ப தொகுதி உடன்பாடு காணப்படும் என தெரிகிறது.

    இதன்படி காங்கிரஸ் கட்சிக்கு- 8 தொகுதி இந்திய கம்யூனிஸ்டு-2, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு-2, விடுதலை சிறுத்தைகள்-2, ம.தி.மு.க.-1 என்ற அளவில் தொகுதி உடன்பாடு அமையும் என தெரிகிறது. ஆனாலும் பேச்சுவார்த்தை இன்று தொடங்கப்படாததால் இழுபறி நிலைமை நீடித்து வருகிறது.

    கூட்டணி கட்சிகளுக்கு 17 தொகுதிகள் போக மீதம் உள்ள 23 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடும் வகையில் நாளைக்குள் உடன்பாடு காணப்பட்டு விடும் என்று அறிவாலய வட்டாரத்தில் தகவல்கள் வருகின்றன.

    • எடப்பாடியார் செய்யும் மக்கள் சேவைக்கும், மகத்தான பணிக்கும் ஊடகங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.
    • மத்திய, மாநில இரண்டு ஆளும் கட்சிகள் ராட்சத பலத்தோடு உள்ளன.

    மதுரை:

    சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற மாபெரும் மக்கள் இயக்கத்தை, இன்றைக்கு ஒரு சாமானியராக இந்த இயக்கத்தை தலைமை தாங்கி, தொண்டர்களுடைய ஆதரவோடு, மக்களுடைய செல்வாக்கோடு, வழிநடத்திக் கொண்டிருக்கிறார் எடப்பாடியார்.

    அ.தி.மு.க. தலைமை கழகத்தில் ஆர்வத்துடன், கிளைக்கழக நிர்வாகிகள் முதல் தலைமைக்கழக நிர்வாகிகள் வரை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விண்ணப்பத்தை செலுத்தி வருகிறார்கள். ஏறத்தாழ 40 தொகுதிகளில் போட்டியிட 3,500-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்யப்பட்டதாக தகவல் வருகிறது.

    அம்மாவுடைய காலத்திலே எப்படி 40 தொகுதிகளுக்கும் போட்டியிடுவதற்கு விண்ணப்பங்கள் அளிப்பார்களோ, அதே போல் இன்றைக்கு ஒவ்வொரு தொகுதிகளிலும் எடப்பாடியார் நிற்பதுபோல அ.தி.மு.க.வினர் விண்ணப்பங்களை அளித்து வருகிறார்கள்.

    வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்ட பிறகு வேட்பாளர் பட்டியலை எடப்பாடியார் அறிவிக்கும்போது, நாடே பேசும் வகையில், கவனத்தை ஈர்க்கும் வகையில் வேட்பாளர்கள் பட்டியல் இருக்கும். யாரையோ திருப்திபடுத்த சில ஊடகங்கள் அ.தி.மு.க.வை மட்டம் தட்டி செய்தி வெளியிடுவது தொண்டர்களின் மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. எடப்பாடியார் செய்யும் மக்கள் சேவைக்கும், மகத்தான பணிக்கும் ஊடகங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

    இன்றைக்கு 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளும், ஒவ்வொரு பூத்துகளிலும் 69 பேர் கொண்ட பூத் கமிட்டி நிர்வாகிகளை அமைத்துள்ளார். இன்று தமிழகத்திலேயே அதிக உறுப்பினர்கள் கொண்ட இயக்கமாக உருவாக்கி வலுவான கட்டமைப்பை எடப்பாடியார் உருவாக்கியுள்ளார்

    இன்றைக்கு மாணவர்கள், தொழிலாளர்கள், தாய்மார்கள் என அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பு கவசமாக எடப்பாடியார் உள்ளார். தி.மு.க.வின் அவலங்களை எல்லாம் நெஞ்சுரத்துடன் அறிக்கையாக வெளியிட்டு வருகிறார். பல்வேறு பிரச்சனைகளுக்கு கண்டன போராட்டங்களை நடத்தி வருகிறார்.

    மத்திய, மாநில இரண்டு ஆளும் கட்சிகள் ராட்சத பலத்தோடு உள்ளன. அதை எதிர்த்து களம் கண்டு வருகிறார். அதில் நிச்சயம் வெற்றியும் பெறுவார். அ.தி.மு.க.வை ஒரு ஜனநாயக பாதையில் அழைத்துச் சென்று வருகிறார் எடப்பாடியார்.

    தமிழகத்தின் ஜீவாதாரப் பிரச்சனையான முல்லைப் பெரியாறு, காவிரி, பாலாறு போன்றவற்றில் அணை கட்ட அங்குள்ள அரசுகள் முயற்சிக்கிறது. அதை எதிர்த்து எடப்பாடியார் கடுமையாக குரல் கொடுக்கிறார். வேறு எந்த கட்சியும் வாய் திறந்து போராடுகிறார்களா?

    அ.தி.மு.க.வை அழிக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் இருந்து காணாமல் செய்ய வேண்டும் என்று நினைத்த எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் மரண அடி கொடுக்கும் வகையில் எடப்பாடியார் நெருப்பாற்றில் நீந்தி மக்களுக்கு சேவை செய்து வருகிறார். வருகிற பாராளுமன்ற தேர்தலில், எடப்பாடியார் தலைமையிலான அ.தி.மு.க. கூட்டணி 40 இடங்களிலும் மாபெரும் வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதற்கட்டப் பயணம் கடந்த ஜன.28ம் தேதி சென்னை கந்தக்கோட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.
    • அறுபடை வீடு ஆன்மீகப் பயணத்தின் 2ம் கட்டப் பயணம் இன்று பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் இருந்து தொடங்கியது.

    பழனி:

    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மானசரோவர் மற்றும் முக்திநாத் ஆகியவற்றிற்கு ஆன்மிகப் பயணம் சென்று வருபவர்களுக்கு ஆண்டுதோறும் மானியம் வழங்கப்படும் என தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

    இதேபோல் தமிழ் கடவுள் என்று போற்றப்படுகின்ற முருகப் பெருமான் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவற்றிற்கு மூத்த குடிமக்கள், ஒரேமுறையாக சென்று தரிசனம் செய்திடும் வகையில் கட்டணமில்லாமல் 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்ட 200 பக்தர்கள் வீதம் ஆண்டிற்கு 5 முறை அதாவது 1,000 பக்தர்களை அழைத்து சென்று தரிசனம் செய்து வைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, இதன் முதற்கட்டப் பயணம் கடந்த ஜன.28ம் தேதி சென்னை கந்தக்கோட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.

    இதில் பங்கேற்ற 207 மூத்த குடிமக்களும் அறுபடை வீடு ஆன்மிகப் பயணம் சிறப்பாகவும், மிகுந்த மனநிறைவை தந்ததாகவும் தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து, திண்டுக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய மண்டலங்களை சேர்ந்த 200 மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் அறுபடை வீடு ஆன்மீகப் பயணத்தின் 2ம் கட்டப் பயணம் இன்று பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் இருந்து தொடங்கியது.

    பழனியில் சாமி தரிசனம் செய்த பக்தர்களை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பாரதி ஆகியோர் வரவேற்றனர். பின்னர் இந்தக்குழு திருச்செந்தூர், பழமுதிர்ச்சோலை, திருப்பரங்குன்றம், சுவாமிமலை மற்றும் திருத்தணி ஆகிய திருக்கோவில் தரிசனத்துக்கு பின் பழனியில் நிறைவடைகிறது. இந்த ஆன்மீகப் பயணத்தில் பங்கேற்கும் மூத்த குடிமக்களுக்கு தங்குமிடம், உணவு, போர்வை, துண்டு, குளியல் சோப், டூத் பிரஷ், பேஸ்ட், முகம் பார்க்கும் கண்ணாடி, தேங்காய் எண்ணெய், சீப்பு போன்ற பொருட்கள் அடங்கிய பயணவழிப்பைகள் வழங்கப்படுகின்றன. மேலும் அவர்களுக்கு உதவியாக செயல் அலுவலர்கள், திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் மருத்துவ குழுவினரும் உடன் சென்றனர்.

    • மாநில அரசுக்குத் தராமல் மக்களுக்கு நேரடியாக நிதி வழங்கி வருவதாக பிரதமர் மோடி பொய்.
    • எந்த மக்களுக்குக் கொடுத்தார் என்பதைச் சொல்லி இருந்தால் அந்த மக்களுக்குக் கிடைத்ததா என்று கேட்கலாம்.

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, நாள்தோறும் பார்த்துப் பார்த்து எத்தனையோ முத்திரைத் திட்டங்களைத் தொடங்கியுள்ளோம். அப்படியொரு திட்டம்தான் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள 'நீங்கள் நலமா?" என்ற புதிய திட்டம்.

    புதிய திட்டத்தின் இந்தத் தலைப்பே, மக்களின் மீதான எங்களது கனிவான சிந்தனையை, அன்பான அக்கறையைக் காட்டும். தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் நலமாக இருக்க வேண்டும் என்பதுதான் இந்தத் திட்டத்தின் முதன்மையான நோக்கம்.

    மக்கள் நல்வாழ்வுக்காக வகுக்கப்படும் திட்டங்களின் பயன்கள் உங்களுக்கு வந்து சேர்வதை உறுதி செய்வதற்காக இந்த "நீங்கள் நலமா" என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளேன். இதற்கு முன்பு தொடங்கி வைத்து மக்களின் வாழ்வினை மேம்படுத்திக் கொண்டிருக்கும் திட்டங்களைப் பட்டியலிட வேண்டுமென்றால்,

    * மகளிர் விடியல் பயணம் * புதுமைப் பெண் * முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் * கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் * இல்லம் தேடிக் கல்வி * மக்களைத் தேடி மருத்துவம் *ஒலிம்பிக் தேடல் * நான் முதல்வன் * உங்கள் தொகுதியில் முதலமைச்சர் * முதல்வரின் முகவரி * கள ஆய்வில் முதலமைச்சர் என இப்படி நான் அடுக்கிக்கொண்டே இருக்க முடியும்.

     இந்தத் திட்டங்கள் அனைத்தும் கோடிக்கணக்கான மக்களை மகிழ்வித்து வரும் திட்டங்கள். இவை அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால் அது ஒவ்வொரு குடும்பத்தையும் ஒவ்வொரு தனிமனிதரையும் மேம்படுத்தும் திட்டங்களாகும்.

    நமது திராவிட மாடல் அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்களால் பலன் அடையாதவரே இல்லை. நான் செல்லும் இடங்களில் எல்லாம் என்னைச் சந்திக்கும் மக்கள் முகங்களில் பார்க்கும் மகிழ்ச்சியில் இத்திட்டங்களின் வெற்றியைக் காண்கிறேன்.

    பயன்பெற்ற மக்களின் புள்ளிவிவரம் எனப் பார்த்தால், "கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்" மூலம் ஒரு கோடியே 15 லட்சத்து 16 ஆயிரத்து 292 மகளிர் ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையாகப் பெறுகிறார்கள்.

    "விடியல் பயணத் திட்டம்" மூலம் மகளிர் 445 கோடி முறை பயணித்து மாதம் ரூ. 888 வரை சேமித்துப் முறை பயனடைகின்றனர்.

    "மக்களைத் தேடி மருத்துவம்" திட்டத்தால் ஒரு கோடிப் பேர் இதுவரை பயனடைந்து உள்ளனர்.

    முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் நாள்தோறும் 16 லட்சம் மாணவர்கள் வயிறார காலைச் சிற்றுண்டி உண்கிறார்கள்.

    மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் பெயரிலான "புதுமைப்பெண்" திட்டத்தின் பயனாக 4 லட்சத்து 81 ஆயிரத்து 75 மாணவிகள் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெற்று பட்டதாரிகளாக உருவாகப் போகிறார்கள்.

    'நான் முதல்வன்' திட்டத்தில் 2 ஆண்டுகளில், 28 லட்சம் இளைஞர்கள் பயனடைந்துள்ளனர். தங்களது திறனை மேம்படுத்தி பயன் அடைந்துள்ளனர்.

    'இல்லம் தேடிக் கல்வி' திட்டத்தில் 24 லட்சத்து 86 ஆயிரம் பள்ளிக் குழந்தைகள் பயனடைந்திருக்கிறார்கள்.

    62 லட்சத்து 40 ஆயிரம் குடும்பங்கள் புதிய குடிநீர் இணைப்பைப் பெற்றுள்ளன.

    2 லட்சம் உழவர்கள் புதிதாக இலவச மின் இணைப்பு பெற்றுள்ளார்கள்.

    · உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தில் 30 இலட்சம் முதியோரும் இலட்சம் மாற்றுத்திறனாளிகளும் மாதந்தோறும் 5 பயனடைகின்றனர்.

    'நம்மைக் காக்கும் 48' திட்டத்தால் 2 லட்சம் பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

    'முதல்வரின் முகவரி' திட்டத்தினால் 19 லட்சத்து 69 ஆயிரம் பேர் பயனடையும் வகையில் தீர்வுகாணப்பட்டுள்ளது.

    'மக்களுடன் முதல்வர்' திட்டதின் மூலமாக, 3 லட்சத்து 40 ஆயிரம் மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டு உள்ளது.

    இப்படி, தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு குடும்பமும் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வெற்றி கண்டுள்ளது நமது திராவிட மாடல் அரசு.

    எங்களைச் சிலர் குடும்ப ஆட்சி என்று சொல்கிறார்கள். ஆம் இது குடும்ப ஆட்சிதான்! தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தையும் கை தூக்கிவிடும் ஆட்சி இது!

    ஆட்சிக்கு வந்த ஓராண்டு காலத்தில் ஏராளமான மனுக்கள் என்னைத் தேடித்தேடி வழங்கப்பட்டது. அப்படி வழங்கப்பட்ட கோரிக்கைகளை நமது அரசு நிறைவேற்றிக் கொடுத்த காரணத்தால்- இப்போது நான் செல்லும் பயணங்களில் மக்களின் கைகளில் மனுக்களைக் காண முடியவில்லை; மாறாக, அவர்களது முகங்களில் மகிழ்ச்சியைக் காண்கிறேன்!

    இன்னும் சொல்ல வேண்டுமென்றால், பேரறிஞர் பெருந்தகை அண்ணா, "ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்!" என்றாரே, அதனைத்தான் இப்போது மக்களின் முகங்களில் காண்கிறேன்.

    அந்த மகிழ்ச்சியை மேலும் உறுதிசெய்ய இப்போது துவங்கப்பட்டுள்ளதுதான், "நீங்கள் நலமா?" என்ற திட்டம். இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கென உருவாக்கப்பட்ட வலைத்தளத்தை நான் இன்று தொடங்கி வைத்து ஒரு சில பயனாளிகளிடம் உரையாடி அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தபோது உளம் மகிழ்ந்தேன். ஒவ்வொரு குடும்பத்தினரது குரலையும் கேட்டு அவர்களது குறைகளைப் போக்கும் அரசாகக் திமுக அரசு செயல்பட்டு வருகிறது.

    அதேபோல அமைச்சர்கள், உயர் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோரும் உங்களிடம் கலந்துரையாடி நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்துக் கருத்துகளைப் பெற்று, அதனடிப்படையில் அரசின் சேவைகளை மேம்படுத்துவதற்கான வழிவகைகள் உருவாக்கப்படும்.

    தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள் குறித்து உங்களிடமிருந்து பெறப்படும் கருத்துகள் இந்த வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். கோட்டையில் உட்கார்ந்து திட்டங்கள் தீட்டி அறிவிப்பதோடு எனது கடமை முடிந்து விட்டதாக நான் எப்போதும் நினைப்பது இல்லை. ஒவ்வொரு திட்டமும் எந்த நோக்கத்துக்காக அறிவிக்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேற்றப்பட்டு வருகிறதா என்பதுதான் எனக்கு முக்கியம்!

    ஏனென்றால் ஒவ்வொரு திட்டமும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலானவை. கடுமையான நிதி நெருக்கடிச் சூழலில் நிறைவேற்றப்படுபவை. ஆகவே, ஒதுக்கப்படும் நிதி ஒவ்வொரு குடிமகனையும் சென்று சேர வேண்டும்: நலத்திட்டம் ஒரு ரூபாய் என்றாலும் அது உங்களிடம் வந்து சேர வேண்டும் என்று நினைத்து திட்டங்களைத் தீட்டுபவன் நான்.

    அதேசமயம், ஒன்றிய அரசின் ஓரவஞ்சனையால் தமிழ்நாட்டுக்குத் வர வேண்டிய நிதி உதவிகள் படிப்படியாகக் குறைக்கப்பட்டு வருவதை நான் அதிகம் விளக்கத் தேவையில்லை.

    சில நாட்களுக்கு முன்னால் சென்னைக்கு வந்து பேசிய பிரதமர் மோடி, மாநில அரசுக்குத் தராமல் மக்களுக்கு நேரடியாக நிதி வழங்கி வருவதாக அப்பட்டமான ஒரு பொய்யைச் சொல்லி விட்டுச் சென்றுள்ளார்கள். எந்த மக்களுக்குக் கொடுத்தார் என்பதைச் சொல்லி இருந்தால் அந்த மக்களுக்குக் கிடைத்ததா என்று கேட்கலாம்.

    இரண்டு மாபெரும் இயற்கை பேரிடரை எட்டு மாவட்டத்து மக்கள் சந்தித்தார்கள். இதற்காக 37 ஆயிரம் கோடி ரூபாய் நிதி கேட்டோம். அதற்கு 1 ரூபாயையாவது ஒதுக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு உதவி செய்தாரா பிரதமர்? இப்படியா பொய்களைச் சொல்வது?

    மத்திய அரசிடம் இருந்து நிதி வரவில்லை என்றாலும் இந்த எட்டு மாவட்டத்துக்கு மக்களுக்காக, மாநிலப் பேரிடர் நிதி மற்றும் அரசுத் துறைகளில் இருந்து 3406.77 கோடி ரூபாய் அளவுக்கு நிதி வழங்கியும், நிவாரணப் பணிகளைச் செய்தும் மக்கள் நலம் காத்து வரும் அரசுதான் இந்த ஸ்டாலின் அரசு.

    உங்கள் ஒவ்வொருவர் நலமே எனது நலம்! திராவிட மாடல் அரசின் நலம்! தாய்த்திருத் தமிழ்நாட்டின் நலம்!

    அந்த நலனைக் காக்கவே நான் உழைக்கிறேன் என்பதன் மற்றுமோர் அடையாளமாகத்தான் இந்த 'நீங்கள் நலமா' திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளேன்.

    உங்கள் அரசு என்றும் உங்கள் ஒவ்வொருவருக்காகவும் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்கும் என்று உறுதி அளிக்கின்றேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    • மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் 1 கோடியே 15 லட்சத்து 16 ஆயிரத்து 292 மகளிர் பயன் பெறுகிறார்கள்.
    • நீங்கள் நலமா திட்டத்தை முதலமைச்சர் சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் தொடங்கி வைத்தார்.

    சென்னை:

    தமிழக அரசு மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

    ஒவ்வொரு மாதமும் மகளிருக்கு ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் 1 கோடியே 15 லட்சத்து 16 ஆயிரத்து 292 மகளிர் பயன் பெறுகிறார்கள்.

    மக்களை தேடி மருத்துவம் திட்டத்தால் 1 கோடி பேர் பயன் அடைகிறார்கள். பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டத்தில் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000, இல்லம் தேடி கல்வி திட்டத்தில் 24 லட்சத்து 86 ஆயிரம் மாணவ-மாணவிகள் பயன் அடைவது போன்று பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது.

    கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் ஒதுக்குவது போன்று மாணவர்களுக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம் உள்பட புதிய திட்டங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து வரும் நிதியாண்டில் செயல்படுத்த உள்ளார்.

    அரசு திட்டங்களின் பயன்கள் அனைத்தும் மக்களுக்கு சென்றடைந்துள்ளதா? என்பதை உறுதி செய்வதற்காக நீங்கள் நலமா? என்கிற புதிய திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.

    அதாவது முதலமைச்சர், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், அனைத்து துறை செயலாளர்கள், துறைத் தலைவர்கள், கலெக்டர்கள் ஆகியோர் பொதுமக்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மக்களின் கருத்தை அறிய உள்ளதாக தெரிவித்திருந்தார்.

    அதன்படி இன்று நீங்கள் நலமா திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் தொடங்கி வைத்தார்.

    அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பொதுமக்களை தொடர்பு கொண்டு, அரசாங்கத்தின் திட்டங்கள் உங்களுக்கு கிடைக்கிறதா? அதில் ஏதும் சிரமம் உள்ளதா? என்பதை கேட்டறிந்தார்.

    இதேபோல் அமைச்சர்களும் தங்கள் பகுதியில் உள்ள பொதுமக்களை தொடர்பு கொண்டு அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்தனர்.

    • இந்தியா ஒரே நாடு அல்ல. இந்தியா எப்போதும் ஒரு நாடாக இருந்ததில்லை.
    • ஆ.ராசாவின் இந்த பேச்சு பா.ஜ.க., காங்கிரஸ் தலைவர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை:

    முன்னாள் மத்திய மந்திரியும், தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவருமான ஆ.ராசா கோவையில் நடந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் சர்ச்சைக்குரிய சில கருத்துக்களை வெளியிட்டார். அவர் பேச்சு விவரம் வருமாறு:-


    இந்தியா ஒரே நாடு அல்ல. இந்தியா எப்போதும் ஒரு நாடாக இருந்ததில்லை. ஒரு நாடு என்றால், ஒரே மொழி, ஒரே கலாசாரம், ஒரே பாரம்பரியம் இருக்க வேண்டும். அப்போதுதான் அது நாடாக இருக்க முடியும். அதனால் இந்தியா ஒரு நாடல்ல. அது ஒரு துணைக் கண்டம். தமிழ் ஒரு நாடு, மலையாளம் ஒரு நாடு, ஒடியா ஒரு நாடு. இந்த நாடுகள் அடங்கியதுதான் இந்தியா என்ற துணைக் கண்டம்.

    நீங்கள் ஒன்றைக் காட்டி, இது கடவுள், இது ராமர் என்பீர்கள். பாரத் மாதா கி ஜே என்பீர்கள். ஆனால் நாங்கள் ஒரு போதும் ராமரை ஏற்க மாட்டோம். பாரத மாதாவையும் ஏற்க மாட்டோம். ராமருக்கு நாங்கள் எதிரி. இதை எங்கு வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆ.ராசாவின் இந்த பேச்சு பா.ஜ.க., காங்கிரஸ் தலைவர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் ஆ.ராசாவின் பேச்சை ஏற்றுக் கொள்கிறீர்களா? ராகுல் காந்தி இந்த விஷயத்தில் மவுனமாக இருப்பது ஏன்? என்று பாரதிய ஜனதா கேள்வி எழுப்பியுள்ளது.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி ஆ.ராசாவின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் சுப்ரியா டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும்போது கூறியதாவது:-


    ஆ.ராசாவின் பேச்சை 100 சதவீதம் நாங்கள் ஏற்க மாட்டோம். அவரது பேச்சுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். கடவுள் ராமர் அனைவருக்கும் பொதுவானவர். ஜாதி, மதம் அனைத்துக்கும் அப்பாற்பட்டவர்.

    ராமரின் வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் எடுத்துக் காட்டான ஒன்றாகும். ராமர் என்றால் பெருமை, ராமர் என்றால் அன்பு, ராமர் என்றால் நேர்மை என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

    எனவே ஆ.ராசாவின் பேச்சை நாங்கள் முழுமையாக கண்டிக்கிறோம். அவரது பேச்சுக்கு எந்த ஆதரவும் இல்லை.

    இவ்வாறு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா கூறினார்.

    • வெப்ப உணர்திறன் கொண்ட பவளப்பாறைகளின் அழிவுடன் 60 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது.
    • மன்னார் வளைகுடாவில் 2005-ம் ஆண்டில் 37 சதவீதமாக இருந்த பவளப்பாறைகளின் எண்ணிக்கை 2021-ம் ஆண்டில் 27.3 சதவீதமாக குறைந்துள்ளது.

    சென்னை:

    அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியார் ஆய்வு நிறுவனம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பவளப்பாறைகள் குறித்த அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:-

    தமிழகத்தில் உள்ள மன்னார் வளைகுடா கடல் மேற்பரப்பின் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருப்பதால் அங்குள்ள பவளப்பாறைகள் அழியும் அபாயம் உள்ளதாக சுற்றுச்சுழல் அமைப்பு சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டில் இதேபோன்று மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 16 சதவீதம் பவளப்பாறைகள் அழிந்தன.

    மன்னார் வளைகுடாவில் உள்ள இந்த பூங்கா 132 வகையான பவளப்பாறைகளின் தாயகமாகவும், உலகின் பணக்கார பல்லுயிர் உருவாக்கங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. தமிழகம் ஏற்கனவே வறண்ட வானிலையில் சிக்கித் தவிக்கும் நிலையில், ஈரப்பதமான காற்று மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக வெப்பம் மற்றும் அசவுகரியமான வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கடந்த செவ்வாய்க்கிழமை வெப்ப நிலை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மாநிலத்தின் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பசிபிக் பெருங்கடலில் வெப்ப அலை நாட்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உலகளாவிய வானிலை மாதிரியும் 2024 வெப்பமான ஆண்டாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

    இந்த ஆண்டு 30 டிகிரி செல்சியஸ் மற்றும் 33 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேலும் இருக்கலாம் என்று கடலியல் ஆராய்ச்சியாளர்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர். இதுபோன்ற கடுமையான நிலைமைகள் நீடித்தால், அது பெரும்பாலான பவளப்பாறை இனங்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளது.

    வளைகுடா பகுதிகளில் பவளப்பாறைகளை தீவிரமாக கண்காணிக்கும் தூத்துக்குடியை சேர்ந்த கடல் ஆராய்ச்சியாளர் சுகந்தி தேவதாசன் என்பவர் கூறுகையில், வெப்ப உணர்திறன் கொண்ட பவளப்பாறைகளின் அழிவுடன் 60 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்திய பவளப்பாறைகளில், லட்சத்தீவு மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மே கடைசி வாரம் முதல் ஜூன் இரண்டாவது வாரம் வரை எச்சரிக்கை நிலை-2 விடுக்கப்பட்டுள்ளது. அந்த மானின் சில பகுதிகள் மற்றும் நிக்கோபார் தீவுகள் எச்சரிக்கை நிலை-1 விடப்பட்டுள்ளது.

    காற்று, மழை, சூறாவளி போன்ற உள்ளூர் காலநிலை நிலைமைகளின் மாறுபாடுகளைப் பொறுத்து இந்த கணிப்புகளில் குறையவோ, அதிகரிக்கவோ வாய்ப்புள்ளது என்று எஸ்.டி.எம்.ஆர்.ஐ.யின் இணை பேராசிரியர் திராவிய ராஜ் கூறினார். அண்மையில் முடிவடைந்த தமிழ்நாடு பருவநிலை உச்சி மாநாடு 2.0-ன் போது, மன்னார் வளைகுடாவின் பவளப்பாறைகளில் பெருமளவு மாற்றங்கள் நிகழும் என்று தெரிவிக்கப்பட்டது.

    மன்னார் வளைகுடாவில் 2005-ம் ஆண்டில் 37 சதவீதமாக இருந்த பவளப்பாறைகளின் எண்ணிக்கை 2021-ம் ஆண்டில் 27.3 சதவீதமாக குறைந்துள்ளது. வெப்பம் உள்ளிட்ட பருவநிலை மாற்றங்களுக்கு பிறகு படிப்படியாக அதன் பாதிப்பு நிலை மாறியது. இதன் மூலம் மன்னார் வளைகுடா பவளப்பாறைகள் பாதுகாப்புடன் இருப்பதை காட்டியது.

    இருப்பினும், 2010 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் அதிகப்படியான பவளப்பாறைகள் அழிந்தன. 2005 ஆம் ஆண்டில் 1,11,060 ஹெக்டேராக இருந்த பவளப்பாறை பகுதி 2021-ம் ஆண்டில் 6,628 ஹெக்டேராக குறைந்துள்ளது. பவளப்பாறை பகுதிகளாக இருந்த பல பகுதிகள் இப்போது முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் 6,628 ஹெக்டேரில், 2,631 ஹெக்டேர் தற்போது சீரழிந்த நிலையில் உள்ளது.

    அமெரிக்க ஆய்வு நிறுவனம் கணித்தபடி மன்னார் வளைகுடாவில் இன்னொரு பவள வெளுப்பு நிகழ்வு ஏற்பட்டால், உயிருள்ள பவளப்பாறைகள் கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    • அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு சென்று தே.மு.தி.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.
    • தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகளை ஒதுக்குவதற்கு அ.தி.மு.க. முன் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களத்தில் தி.மு.க. கூட்டணிக்கு எதிராக வலுவான அணியை உருவாக்க அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது.

    இந்த கூட்டணியில் பா.ம.க. உள்பட மேலும் சில கட்சிகள் சேர உள்ளன. தே.மு.தி.க.வுடனான கூட்டணியை கடந்த 1-ந் தேதி அ.தி.மு.க. உறுதி செய்தது. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, பெஞ்சமின், கே.பி.அன்பழகன் ஆகியோர் விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டுக்கு சென்று தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதாவை சந்தித்து பேசினார்கள். அன்று நடைபெற்ற முதல்கட்ட பேச்சுவார்த்தையின்போது தே.மு.தி.க.வுக்கு 7 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு மேல்சபை எம்.பி. பதவியை ஒதுக்க வேண்டும் என்று பிரேமலதா கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.

    இது தொடர்பாக மீண்டும் சந்தித்து பேசிக் கொள்ளலாம் என அ.தி.மு.க. சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையே இன்று மாலை இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

    ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு சென்று தே.மு.தி.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். தே.மு.தி.க. மூத்த நிர்வாகிகளான பார்த்த சாரதி, இளங்கோவன், அழகாபுரம் மோகன் ராஜ் ஆகியோர் மாலை 4 மணி அளவில் அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு சென்று அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.

    இந்த பேச்சுவார்த்தையின்போது தே.மு.தி.க. போட்டியிடும் தொகுதிகள் முடிவாக உள்ளது. தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகளை ஒதுக்குவதற்கு அ.தி.மு.க. முன் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இது தொடர்பாக இன்றைய பேச்சுவார்த்தையின்போது இறுதி முடிவு எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது. தே.மு.தி.க.வுடன் பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் அடுத்தகட்டமாக பா.ம.க. உள்பட மற்ற கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்த அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது.

    • சென்னை ராஜாஜி சாலையில் உள்ள மத்திய அரசு அலுவலகமான போர்ட் டிரஸ்ட் வரி பாக்கி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
    • சொத்து வரி செலுத்தாத மற்ற நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

    சென்னை:

    சொத்து வரி பாக்கி வைத்துள்ள கட்டடங்கள் மீது, சென்னை மாநகராட்சி வருவாய்த் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    அந்த வகையில், சென்னை ராஜாஜி சாலையில் உள்ள மத்திய அரசு அலுவலகமான போர்ட் டிரஸ்ட் வரி பாக்கி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. வரி பாக்கி குறித்து பல முறை தகவல் தெரிவித்தும் இன்னும் அந்த தொகை செலுத்தப்படவில்லை என தெரிகிறது.

    இந்நிலையில், நிலுவையில் உள்ள ரூ.10.37 கோடி சொத்து வரியை செலுத்தவில்லை என்பதால், மத்திய அரசு அலுவலகமான போர்ட் டிரஸ்டுக்கு சென்னை மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. குறிப்பிட்ட அவகாசத்திற்குள் வரி செலுத்தவில்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

    வரி பாக்கி தொகை செலுத்தவில்லை எனில், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதேபோல், சொத்து வரி செலுத்தாத மற்ற நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

    • மத்திய அரசு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கும் மின்சாரத்தை ரத்து செய்து விட்டனர்.
    • டெல்லிக்குள் நுழைந்து விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளனர்.

    திருவோணம்:

    தஞ்சாவூர் அருகே திருவோணத்தில், காவிரி விவசாய சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    டெல்லியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக வருகிற 10-ம் தேதி தமிழ்நாடு காவிரி விவசாய சங்கம் சார்பாக, தமிழ்நாடு முழுவதும் மத்திய அரசை கண்டித்து 150க்கும் மேற்பட்ட இடங்களில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.


    தொடர்ந்து அமைதியான முறையில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு மத்திய அரசு துணை ராணுவத்தை கொண்டு போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதை வன்மையாக கண்டிக்கிறோம். தொடர்ந்து போராடிவரும் விவசாயிகளை மத்திய அரசு அழைத்து சுமூகமாக பேசி தீர்ப்போம் என்று கூறிவிட்டு இதுவரை முறையாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

    தொடர்ந்து மத்திய அரசு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கும் மின்சாரத்தை ரத்து செய்து விட்டனர். 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மீண்டும் டெல்லிக்குள் நுழைந்து விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு காவிரி விவசாய சங்கத்திலிருந்து 20-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×