search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நாடே பேசும் வகையில் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் இருக்கும்: ஆர்.பி.உதயகுமார்
    X

    நாடே பேசும் வகையில் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் இருக்கும்: ஆர்.பி.உதயகுமார்

    • எடப்பாடியார் செய்யும் மக்கள் சேவைக்கும், மகத்தான பணிக்கும் ஊடகங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.
    • மத்திய, மாநில இரண்டு ஆளும் கட்சிகள் ராட்சத பலத்தோடு உள்ளன.

    மதுரை:

    சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற மாபெரும் மக்கள் இயக்கத்தை, இன்றைக்கு ஒரு சாமானியராக இந்த இயக்கத்தை தலைமை தாங்கி, தொண்டர்களுடைய ஆதரவோடு, மக்களுடைய செல்வாக்கோடு, வழிநடத்திக் கொண்டிருக்கிறார் எடப்பாடியார்.

    அ.தி.மு.க. தலைமை கழகத்தில் ஆர்வத்துடன், கிளைக்கழக நிர்வாகிகள் முதல் தலைமைக்கழக நிர்வாகிகள் வரை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விண்ணப்பத்தை செலுத்தி வருகிறார்கள். ஏறத்தாழ 40 தொகுதிகளில் போட்டியிட 3,500-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்யப்பட்டதாக தகவல் வருகிறது.

    அம்மாவுடைய காலத்திலே எப்படி 40 தொகுதிகளுக்கும் போட்டியிடுவதற்கு விண்ணப்பங்கள் அளிப்பார்களோ, அதே போல் இன்றைக்கு ஒவ்வொரு தொகுதிகளிலும் எடப்பாடியார் நிற்பதுபோல அ.தி.மு.க.வினர் விண்ணப்பங்களை அளித்து வருகிறார்கள்.

    வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்ட பிறகு வேட்பாளர் பட்டியலை எடப்பாடியார் அறிவிக்கும்போது, நாடே பேசும் வகையில், கவனத்தை ஈர்க்கும் வகையில் வேட்பாளர்கள் பட்டியல் இருக்கும். யாரையோ திருப்திபடுத்த சில ஊடகங்கள் அ.தி.மு.க.வை மட்டம் தட்டி செய்தி வெளியிடுவது தொண்டர்களின் மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. எடப்பாடியார் செய்யும் மக்கள் சேவைக்கும், மகத்தான பணிக்கும் ஊடகங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

    இன்றைக்கு 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளும், ஒவ்வொரு பூத்துகளிலும் 69 பேர் கொண்ட பூத் கமிட்டி நிர்வாகிகளை அமைத்துள்ளார். இன்று தமிழகத்திலேயே அதிக உறுப்பினர்கள் கொண்ட இயக்கமாக உருவாக்கி வலுவான கட்டமைப்பை எடப்பாடியார் உருவாக்கியுள்ளார்

    இன்றைக்கு மாணவர்கள், தொழிலாளர்கள், தாய்மார்கள் என அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பு கவசமாக எடப்பாடியார் உள்ளார். தி.மு.க.வின் அவலங்களை எல்லாம் நெஞ்சுரத்துடன் அறிக்கையாக வெளியிட்டு வருகிறார். பல்வேறு பிரச்சனைகளுக்கு கண்டன போராட்டங்களை நடத்தி வருகிறார்.

    மத்திய, மாநில இரண்டு ஆளும் கட்சிகள் ராட்சத பலத்தோடு உள்ளன. அதை எதிர்த்து களம் கண்டு வருகிறார். அதில் நிச்சயம் வெற்றியும் பெறுவார். அ.தி.மு.க.வை ஒரு ஜனநாயக பாதையில் அழைத்துச் சென்று வருகிறார் எடப்பாடியார்.

    தமிழகத்தின் ஜீவாதாரப் பிரச்சனையான முல்லைப் பெரியாறு, காவிரி, பாலாறு போன்றவற்றில் அணை கட்ட அங்குள்ள அரசுகள் முயற்சிக்கிறது. அதை எதிர்த்து எடப்பாடியார் கடுமையாக குரல் கொடுக்கிறார். வேறு எந்த கட்சியும் வாய் திறந்து போராடுகிறார்களா?

    அ.தி.மு.க.வை அழிக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் இருந்து காணாமல் செய்ய வேண்டும் என்று நினைத்த எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் மரண அடி கொடுக்கும் வகையில் எடப்பாடியார் நெருப்பாற்றில் நீந்தி மக்களுக்கு சேவை செய்து வருகிறார். வருகிற பாராளுமன்ற தேர்தலில், எடப்பாடியார் தலைமையிலான அ.தி.மு.க. கூட்டணி 40 இடங்களிலும் மாபெரும் வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×