search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தி.மு.க. அழைப்புக்காக காத்திருக்கும் திருமாவளவன்
    X

    தி.மு.க. அழைப்புக்காக காத்திருக்கும் திருமாவளவன்

    • முதலமைச்சரை சந்திக்க திருமாவளவன் நேரம் கேட்டிருந்தார்.
    • தி.மு.க. தரப்பில் இருந்து அழைப்பு எதுவும் வரவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் தரப்பில் கூறப்படுகிறது.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது. கடந்த முறை போல் அல்லாமல் 2 தனித் தொகுதியில் தனி சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு கொடுத்துள்ளது.

    ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கூடுதலாக ஒரு தொகுதி ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுவதால் தொகுதி உடன்பாடு ஏற்படாமல் இழுபறி நீடித்தது.

    தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திட அழைத்தது. ஆனால் அவர் செல்லவில்லை. உயர் மட்டக் குழுவை கூட்டி சில முக்கிய முடிவுகளை எடுத்தனர். 2 தனி தொகுதியையும், ஒரு பொதுத் தொகுதியையும் கேட்டு பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்று உயர்மட்ட நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

    மேலும் இதுபற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நிலையை விளக்க வேண்டும் என்றும் அக்கூட்டத்தில் பேசப்பட்டது.


    அதன்படி முதலமைச்சரை சந்திக்க திருமாவளவன் நேரம் கேட்டிருந்தார். வெளியூர் சென்று இருந்த முதலமைச்சர் சென்னை திரும்பியதும் தன்னை அழைப்பார் என்று திருமாவளவன் எதிர் பார்த்தார்.

    ஆனால் இன்று காலை வரையில் விடுதலை சிறுத்தைக்கு எந்த தகவலும் வரவில்லை. இதனால் கட்சி நிகழ்ச்சிகளில் அவர் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.

    முதலமைச்சரை சந்தித்த பிறகுதான் தொகுதி பங்கீட்டு உடன்பாட்டில் கையெழுத்திடுவதாகவும் உறுதியாக உள்ளார்.

    முதலமைச்சரிடம் இருந்து கட்டாயம் அழைப்பு வரும் என்ற நம்பிக்கையில் திருமாவளவன் காத்து இருக்கிறார்.

    முதலமைச்சரை நேரில் சந்திக்கும் போது, கூடுதலாக கேட்கப்படும் பொதுத் தொகுதியில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடவும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கூடுதலாக ஒதுக்கப்படும் தொகுதிகூட தி.மு.க. சின்னம்தான்.


    அதனால் கூடுதலாக ஒரு தொகுதியை ஒதுக்குவதால் தி.மு.க.விற்கு எவ்வித இழப்பும் ஏற்படாது என்பதை விளக்கவும் உள்ளார்.

    விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் சிக்கல் நீடித்து வருவதால் பேச்சுவார்த்தை தள்ளிப் போகிறது.

    இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    சனாதன சக்தியான பா.ஜனதாவை இத்தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும்.

    கடந்த தேர்தலை விட கூடுதலாக ஒரு தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். அதுவும் பொதுத் தொகுதி. கூட்டணி கட்சிகளை தி.மு.க. அலட்சியப்படுத்தக் கூடாது. தங்கள் முடிவை பரிசீலிக்க வேண்டும்.

    முதலமைச்சர் தலையிட்டால் தான் உடன்பாடு இறுதியாகும். முதலமைச்சரை சந்திக்கும் வரை இப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையில் தொகுதி பங்கீட்டு குழுவுடன் விடுதலை சிறுத்தைகள் இன்று சந்தித்து பேசுவதற்கு அழைப்பு கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் தி.மு.க. தரப்பில் இருந்து அழைப்பு எதுவும் வரவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் தரப்பில் கூறப்படுகிறது.

    கூடுதலாக ஒரு தொகுதிக்கு வரிந்து கட்டும் விடுதலை சிறுத்தையின் கோரிக்கையை முதலமைச்சர் பரிசீலனை செய்வாரா? இல்லை 2 தொகுதிகள் தான் ஒதுக்கப்படும் என்பதில் உறுதியாக இருப்பாரா? என்பது ஓரிரு நாட்களில் தெரிந்து விடும்.

    Next Story
    ×