என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தி.மு.க. அரசு தமிழ்நாட்டு மக்களையே தனது குடும்பமாக மதித்து, திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.
- மாநில அரசிடம் இருந்த வரி வருவாய் உள்ளிட்ட பல சொந்த வருவாய்களை மத்திய பா.ஜனதா அரசு பறித்துக்கொண்டுவிட்டது.
சென்னை:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில், தி.மு.க. 21, காங்கிரஸ் 10, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலா 2, ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலா 1 என போட்டியிடுகின்றன.
மேலும், இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் நீதிமய்யத்துக்கு ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் (மார்ச்) 23-ந் தேதி முதல் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதுவரை 11 இடங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் அவர் பங்கேற்று ஆதரவு திரட்டி வருகிறார். இந்த பரபரப்புக்கு இடையே 'தினத்தந்தி' சார்பில் அவரிடம் கேட்கப்பட்ட விறுவிறுப்பான கேள்விகளுக்கு சுறுசுறுப்பாக பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
கேள்வி:- பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக நீங்கள் எல்லா தொகுதிகளுக்கும் சென்று வருகிறீர்கள். பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசுவது மட்டுமல்லாமல், நடைப்பயிற்சியின்போதும் பொதுமக்களை சந்தித்து வருகிறீர்கள். மக்களின் எண்ண ஓட்டம் எப்படி இருக்கிறது? வெற்றி வாய்ப்பு எந்த வகையில் உள்ளது?
பதில்:- 2024 பாராளுமன்ற தேர்தலுக்கான அடிப்படை பணிகளை தி.மு.க. 2022-ம் ஆண்டு செப்டம்பர் 15 அண்ணா பிறந்தநாளில் விருதுநகரில் நடைபெற்ற முப்பெரும் விழாவிலேயே தொடங்கிவிட்டது. 'நாற்பதும் நமதே! நாடும் நமதே!' என்ற இலக்கு அந்த நிகழ்வில்தான் முன்னெடுக்கப்பட்டது. அதற்கேற்ப பாக முகவர்கள், வாக்குச்சாவடி குழுக்கள், ஒருங்கிணைப்பாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான பயிற்சி பாசறைக் கூட்டங்களும் நடத்தி முடிக்கப்பட்டு விட்டன. எப்போதும் மக்களுடன் இருக்கும் இயக்கமான தி.மு.க., கடந்த 3 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டு மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு, மாணவர்களுக்கு செய்த திட்டங்களால் பயன்பெற்றவர்களை நேரில் சந்தித்து வாக்குகளைச் சேகரித்து வருகிறது.
களப்பணியில் தி.மு.க. தொண்டர்கள் தங்கள் அடிப்படையான பணியை முழுமையாக மேற்கொண்ட நிலையில்தான், தேர்தல் களப் பிரசார பணிகளில் தி.மு.க. தலைவரான நானும், கட்சியின் மூத்த நிர்வாகிகளும் ஈடுபடுகிறோம். ஒவ்வொரு வீட்டுக்கும் பயன் தந்து வரும் திராவிட மாடல் ஆட்சி என்பதால் தி.மு.க.வுக்கு மக்களிடம் பெரும் ஆதரவு உள்ளது.
10 ஆண்டுகால பா.ஜனதா அரசு தமிழ்நாட்டை வஞ்சித்திருப்பதையும், அதற்கு அ.தி.மு.க. முழுமையாக துணை போயிருப்பதையும் தமிழ்நாட்டு மக்கள் அறிந்திருக்கிறார்கள். காலையில் அடுப்பை பற்ற வைக்கும்போது கியாஸ் விலை அவர்கள் மனதில் அனலாக கொதிக்கிறது. தி.மு.க. ஆட்சியின் சாதனைகளும், பா.ஜனதா அரசின் துரோகங்களும் தமிழ்நாட்டில் 'இந்தியா' கூட்டணிக்கு முழுமையான வெற்றியைத் தரும்.
கேள்வி:- கச்சத்தீவு பிரச்சனை தற்போது பா.ஜனதா மூலம் விசுவரூபம் எடுத்துள்ளதே. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்டதாக கூறி, கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததற்கு முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திரா காந்தி, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆகியோர்தான் காரணம் என்று குற்றம் சாட்டுகிறார்கள். கச்சத்தீவு தொடர்பான இந்த புதிய தகவல்கள் தி.மு.க.வின் இரட்டை நிலைப்பாடு முகத்திரையை கிழித்துவிட்டது என்று பிரதமர் நரேந்திரமோடி கூறியிருக்கிறார். இதற்கு உங்களின் பதில் என்ன?.
பதில்:- கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி 27-ம் நாள் பிரதமர் மோடி தலைமையிலான இதே பா.ஜனதா ஆட்சியில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டது. அப்போது, ஜெய்சங்கர் வெளியுறவுத்துறை செயலாளராக இருந்தார். இப்போது அவர் மத்திய வெளியுறவுத்துறை மந்திரியாக உள்ள நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, கச்சத்தீவை நேரு, இந்திராகாந்தி போன்ற முன்னாள் பிரதமர்கள் தாரை வார்த்துக் கொடுத்து விட்டதாகவும், அன்றைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அதனை எதிர்க்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இருந்து கச்சத்தீவு விவகாரத்தில் இரட்டை வேடம் போடுவது பா.ஜனதாதான் என்பதும், திட்டமிட்டே தேர்தல் நேரத்தில் வதந்திகளை பரப்பி, தமிழ்நாட்டில் அரசியல் லாபம் பெற முயற்சிக்கிறார்கள் என்பதும் மக்களுக்கு நன்றாக தெரியும். இந்த விவகாரம் விசுவரூபமும் எடுக்கவில்லை. வேறு எந்த ரூபமும் எடுக்கவில்லை.
10 ஆண்டுகால சாதனைகள் என்று தமிழ்நாட்டு மக்களிடம் சொல்வதற்கு ஒற்றைச் செங்கல்லை தாண்டி வேறு எதுவும் இல்லாத பா.ஜனதாவில் பிரதமர், நிதி மந்திரி, வெளியுறவுத்துறை மந்திரி தொடங்கி கத்துக்குட்டிகள் வரை கச்சத்தீவு பற்றிய வதந்திகளை பரப்பிக் கதறுகிறார்கள். இந்த விவகாரத்தில் தி.மு.க.வின் உறுதியான நிலைப்பாடு என்ன என்பது பாராளுமன்ற விவாதங்களிலும், சட்டமன்றத் தீர்மானத்திலும், மத்திய மந்திரிகளுடன் கருணாநிதி நடத்திய ஆலோசனைகள் பற்றிய குறிப்புகளிலும் தெளிவாக உள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு நேரு ஸ்டேடியத்தில் நடந்த விழாவிலும் பிரதமர் முன்னிலையில் கச்சத்தீவை மீட்டுத்தர வேண்டும் என முதலமைச்சர் என்ற முறையில் கோரிக்கை வைத்தேன். 10 ஆண்டு கால பா.ஜனதா ஆட்சியில் இம்மியளவில்கூட செயல்படவில்லை. இலங்கைத் தலைநகர் கொழும்புவில் கடந்த 2-ந் தேதி நடைபெற்ற அந்நாட்டு அரசின் மந்திரி சபை கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் பேசிய அந்நாட்டு மந்திரி பந்துல குணவர்த்தனே, "கச்சத்தீவு விவகாரம் குறித்து மந்திரிசபையில் விவாதிக்கப்படவில்லை. ஏனெனில் அந்த பிரச்சனை ஒருபோதும் எழுப்பப்படவில்லை" என்று தெரிவித்திருந்ததை 'தினத்தந்தி' முதல் பக்கத்தில் செய்தியாக வெளியிட்டிருந்தது.
இதில் இருந்தே கடந்த 10 ஆண்டுகளில் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு கச்சத்தீவை இந்தியாவிடம் ஒப்படைக்கக் கோரி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது அம்பலமாகியுள்ளது. 'கெட்டிக்காரன் புளுகு 8 நாளைக்கு' என்பார்கள். அந்த கெட்டிக்காரத்தனம் கூட இல்லாமல் புளுகிய சில மணி நேரங்களிலேயே அம்பலப்பட்டுப் போய்விடுகிறது பா.ஜனதா.
கேள்வி:- நீங்கள் குடும்ப அரசியல் செய்வதாக தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் பிரதமர் மோடி குற்றம் சாட்டுகிறாரே. அதுபற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:- நான் கருணாநிதியின் மகன் என்பதும் - உதயநிதி என்னுடைய மகன் என்பதும் ஊரறிந்த உண்மை. ஒரு கலைஞர் குடும்பம் மட்டுமல்ல, ஒவ்வொரு தொண்டரின் குடும்பமும் தி.மு.க.வைத்தான் முதல் குடும்பமாக நினைக்கிறது. தி.மு.க. அரசு தமிழ்நாட்டு மக்களையே தனது குடும்பமாக மதித்து, திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. குமரி அனந்தனின் மகள் தமிழிசை, கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா உள்ளிட்ட பலருக்கும் இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்துள்ள மோடி, தமிழ்நாடு வந்ததும் ஞாபகமறதி ஏற்பட்டு, குடும்ப அரசியல் என்று குற்றம்சாட்டுகிறார். கதையை (ஸ்க்ரிப்ட்) மாற்றட்டும்.
கேள்வி:- புதிய திட்டங்களை அரசு செயல்படுத்தும்போது, கடன் வாங்குகிறோம். தற்போதைய நிலையில் ரூ.7.26 லட்சம் கோடி கடன் இருப்பதாக சொல்லப்படுகிறது. சொந்த வருவாயும் ரூ.3 லட்சத்து 3 ஆயிரத்து 814 கோடி என்ற அளவில்தான் இருக்கிறது. உயர்ந்து கொண்டிருக்கும் கடன் அளவைக் குறைக்க சொந்த வருவாயைப் பெருக்கும் வகையில் திட்டம் எதுவும் வகுக்கப்பட்டுள்ளதா?.
பதில்:- மாநில அரசிடம் இருந்த வரி வருவாய் உள்ளிட்ட பல சொந்த வருவாய்களை மத்திய பா.ஜனதா அரசு பறித்துக்கொண்டுவிட்டது. தமிழ்நாட்டுக்கு திருப்பி அளிக்கக்கூடிய வரிப்பங்கீடும் மிகக் குறைவாக உள்ளது. அதனால்தான் புதிய திட்டங்களுக்காக கடன் வாங்க வேண்டியுள்ளது. அதுவும், நிர்ணயிக்கப்பட்ட அளவுக்குள்தான் இருக்கிறது.
கேள்வி:- 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக தி.மு.க. அறிவித்தது. ஆனால், இந்த தேர்தலில் யாரையும் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவில்லை. 'இந்தியா' கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? தேர்தலுக்கு முன்பே பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்து அறிவிக்க வாய்ப்பு இருக்கிறதா?
பதில்:- 'இந்தியா' என்ற பெயர்தான் எங்கள் வேட்பாளர். ஜூன் 4-ந் தேதிக்கு பிறகு இந்தியாவுக்கு புதிய திறமையான மக்கள் மேல் அக்கறைக் கொண்ட நல்ல பிரதமர் கிடைப்பார்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
- வடமதுரை ஒன்றியத்தில் 19 நாட்களுக்கு ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- பிற படிகளை ஒரே தவணையில் பிடித்தம் செய்யவும் உத்தரவு.
அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி முதல் மார்ச் 8ம் தேதி வரை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் 19 நாட்களுக்கு ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், போராட்டத்தில் கலந்துகொண்ட நாட்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.
19 நாட்களுக்கு உரிய ஊதியம், பிற படிகளை ஒரே தவணையில் பிடித்தம் செய்யவும் வடமதுரை வட்டார கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
- வாக்குப்பதிவு நெருங்கி வருவதால், போட்டி கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
- இந்தியாவை அழிக்கத் திட்டம்போடும் நாசகார சக்தியான பா.ஜ.க வீட்டுக்கு, நாட்டுக்குக் கேடு.
மக்களவை தேர்தல் முதற்கட்டமாகவும், தமிழகத்தில் ஒரே கட்டமாகவும் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. வாக்குப்பதிவு நெருங்கி வருவதால், போட்டி கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிமுக, பாஜக ஆட்சியை கடுமையாக சாடியுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது:-
ஒரே உணவு, ஒரே மொழி, ஒரே மதம் என 'ஒரே'யடியாக இந்தியாவை அழிக்கத் திட்டம்போடும் நாசகார சக்தியான பா.ஜ.க வீட்டுக்கு, நாட்டுக்குக் கேடு!
பிரதமர் மோடி எத்தனை முறை படையெடுத்து வந்தாலும் அவரால் கைப்பற்றவே முடியாத திராவிட எஃகுக் கோட்டையாகவே தமிழ்நாடு என்றும் இருக்கும்!
இந்த இரண்டாவது விடுதலைப் போரில், எதிரிகளோடு, அவர்களுக்குத் துணைபோகும் கட்சிகளையும், தமிழ்நாட்டை வஞ்சித்த அ.தி.மு.க.வையும் சேர்த்து விரட்டியடிப்போம்! தென்னகத்தின் விடியல் ஒளி டெல்லியிலும் பரவிட இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- மயிலாடுதுறையில் கடந்த 2-ந்தேதி இரவு சிறுத்தை ஒன்று நடமாடியதை பார்த்து பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர்
- இந்த நிலையில் இன்று 3-வது நாளாகவும் சிறுத்தையை தேடும் பணி தீவிரப்படுத்தபட்டு உள்ளது.
மயிலாடுதுறை கூறைநாடு செம்மங்குளம் பகுதியில் கடந்த 2-ந்தேதி இரவு சிறுத்தை ஒன்று நடமாடியதை பார்த்து பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து வனத்துறை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்து சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்தனர்.
இதனை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக நாகை மாவட்ட வனஅலுவலர் அபிஷேக் தோமர் மேற்பார்வையில் வனத்துறை, காவல்துறை, தீயணைப்பு துறை வீரர்கள் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே சிறுத்தை நடமாட்டத்தால் மயிலாடுதுறை ரெயிலடி ஆரோக்கியநாதபுரம் பகுதியில் 7 பள்ளிகளுக்கு கடந்த 2 நாட்களாக விடுமுறை அறிவித்து கலெக்டர் மகாபாரதி உத்தரவிட்டார். நேற்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவ-மாணவிகள் பலத்த பாதுகாப்புடன் எழுதி சென்றனர்.
இந்த நிலையில் இன்று 3-வது நாளாகவும் சிறுத்தையை தேடும் பணி தீவிரப்படுத்தபட்டு உள்ளது. இதற்காக ஏற்கனவே 10 கேமராக்கள் பொருத்தப்பட்ட நிலையில் இன்று கூடுதலாக 14 அதிநவீன சென்சார் கேமராக்கள் பொருத்தப்பட்டு உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் 3 கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே மயிலாடுதுறை சித்தர்காடு பகுதியில் ஆடு ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதையடுத்து ஆட்டை மீட்ட வனத்துறையினர் மற்றும் கால்நடை டாக்டர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். சிறுத்தை கடித்து ஆடு இறந்ததா ? என்று பரிசோதனை செய்து வருகின்றனர். அதன் முடிவில் தான் ஆடு இறப்பிற்கு உண்மையான காரணம் தெரியவரும். இருந்தாலும் இந்த சம்பவத்தால் பொதுமக்கள் மேலும் அச்சமடைந்துள்ளனர். பெரும்பாலன பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். 3 நாட்களாகவே இரவில் சரியாக தூங்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.
சிறுத்தை பிடிப்படாததால் நடமாட்டம் உள்ள பகுதிகளில் நேற்று 7 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் இன்று 9 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மயிலாடுதுறையில் குடியிருப்பு பகுதிகளில் 3 நாட்களாக சுற்றித் திரியும் சிறுத்தையைப் பிடிக்க, நீலகிரி முதுமலையில் இருந்து மயிலாடுதுறைக்கு சிறப்புக் குழு சென்றுள்ளது. மசினகுடியில் டி23 புலியைப் பிடித்தது உள்ளிட்டவற்றில் சிறப்பாக செயல்பட்ட பொம்மன், காளன் ஆகியோர் இந்த குழுவில் உள்ளனர்.
- நாளை பிற்பகல் 1.30 மணிக்குள் புதிய உத்தரவை பிறப்பிக்க உத்தரவு.
- சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி அனுமதி மறுத்தால் காவல் துறை எதற்கு, அரசு எதற்கு
அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து அவசர வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் எடுக்கப்பட்டது.
குறிப்பிட்ட உள்ளரங்கில் கடந்த முறை நிகழ்ச்சி நடைபெற்றபோது சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டதால் அனுமதி மறுக்கப்பட்டது என காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.
கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை கலந்து கொள்ளும் புத்தக வௌியீட்டு விழாவுக்கு அனுமதி மறுத்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், நாளை பிற்பகல் 1.30 மணிக்குள் புதிய உத்தரவை பிறப்பிக்க கோவை மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
உள்ளரங்கில் நடக்கும் நிகழ்ச்சிக்கு சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி அனுமதி மறுத்தால் காவல் துறை எதற்கு, அரசு எதற்கு ? என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
- விழுப்புரம், கடலூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.
- பா.ஜ.க.வுக்கு பா.ம.க. பல்லக்கு தூக்குகிறது என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
விழுப்புரம்:
விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை.ரவிக்குமார், கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணுபிரசாத் ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். அப்போது பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
நாடு ஆபத்தில் சிக்கியுள்ளது; இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
ஜனநாயகம், சமூக நீதியைப் பாதுகாக்கும் வகையில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தியாவை பா.ஜ.க.விடம் இருந்து மீட்க இந்தியா கூட்டணி வென்றாக வேண்டிய தேர்தல் இது.
அரசு பணிகளில் இட ஒதுக்கீட்டை போராடி பெறவேண்டிய நிலைக்கு பா.ஜ.க. அரசு தள்ளியிருக்கிறது.
போராடி பெற்ற இடஒதுக்கீடு, சமூக நீதிக்கு எதிரான கட்சி பா.ஜ.க.தான்.
பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் இட ஒதுக்கீடு முறை இருக்காது.
சமூக நீதிக்கு சவக்குழி தோண்டி விடுவர் பிரதமர் மோடி.
தி.மு.க.விற்கு சமூக நீதி என்பது உயிர்மூச்சான கொள்கை. சமூகநீதி, சமத்துவத்தை நோக்கி தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது.
பா.ஜ.க.வுக்கு பா.ம.க. பல்லக்கு தூக்குகிறது.
பா.ஜ.கவை கடுமையாக விமர்சித்த பா.ம.க. தற்போது அவர்களுடனேயே கூட்டணி வைத்துள்ளது.
நாம் செயல்படுத்திய காலை உணவு திட்டம் கனடா வரை சென்றுள்ளது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால், கிராம பொருளாதாரம் உயர்கிறது.
எடப்பாடி பழனிசாமி வாயை திறந்தாலே பொய் தான் வருகிறது. வெள்ளம் வந்தபோது தமிழகம் வராத பிரதமர் மோடி, தற்போது தேர்தலுக்காக வருகிறார் என தெரிவித்தார்.
- 3 ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு திமுக என்ன செய்தது?
- அதிமுக ஆட்சியில் ஏரி, குளம், குட்டைகள் முழுமையாக தூர்வாரப்பட்டன.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அடுத்த கவுந்தப்பாடியில் அதிமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதில், திருப்பூர் அதிமுக வேட்பாளர் அருணாச்சலத்தை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
மக்களோடு மக்களாக இருந்து பிரச்சனைகளை உணர்ந்தவர் அருணாச்சலம். அதிமுகவை வீழ்த்த திமுக பல அவதாரங்களை எடுத்தது.
அதிமுகவை அழிக்க திமுக போட்ட திட்டங்கள் தூள் தூளாக்கப்பட்டன. அதிமுகவுக்கு யார் துரோகம் செய்தாலும், அவர்களுக்கு தகுந்த தண்டனை கிடைக்கும்.
அதிமுகவை முடக்க நினைத்த திமுகவின் திட்டங்கள் தவிடு பொடியாக்கப்பட்டன.
3 ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு திமுக என்ன செய்தது?
தமிழகத்தில் மற்ற தொகுதிகளை விட ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொகுதிகளை நன்கு அறிவேன். அதிமுக ஆட்சியில் குடிமராமத்து திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது.
அதிமுக ஆட்சியில் ஏரி, குளம், குட்டைகள் முழுமையாக தூர்வாரப்பட்டன.
அதிமுக ஆட்சியில் அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கு ரூ.1652 கோடி ஒதுக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் அத்திக்கடவு அவினாசி திட்டம் 85 சதவீத பணிகள் முடிக்கப்பட்டன.
அதிமுக ஆட்சியில் அனைத்து ஏரிகளும் தூர்வாரப்பட்டு நீர் சேமிக்கப்பட்டது.
அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு முன்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. எவ்வளவு தொழிற்சாலைகள் இருந்தாலும், உணவு கொடுப்பவர் விவசாயிதான்.
விவசாயிகளை திமுக அரசு புறக்கணிக்கிறது. விவசாயிகளை காக்கும் ஒரே இயக்கம் அதிமுக தான். திமுக எம்பிக்கள் தமிழக மக்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கவில்லை.
அதிமுகவின் அழுத்தத்தால் தான் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. காவிரியில் இருந்து தமிழகத்திற்கான நீரை கர்நாடகாவிடம் பேசி பெற வேண்டும்.
இந்தியா கூட்டணி கூட்டத்தில், கர்நாடகாவிடம் பேசி தண்ணீரை பெற முயற்சிக்காதது ஏன்?
10 சதவீத வாக்குறுதிகளை கூட திமுக நிறைவேற்றவில்லை. அதிமுக அழுத்தம் கொடுத்ததால் தான், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை நிறைவேற்றினார்கள்.
அதிமுக ஆட்சியில் நீரை சேமிக்க பல தடுப்பணைகள் கட்டப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.
- காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியானது.
- ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவு அறிவிக்கப்படுகிறது.
இதற்கிடையே, காங்கிரஸ் கட்சி இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில், மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். நீட் தேர்வு நடத்தலாமா, வேண்டாமா என மாநில அரசுகள் முடிவு செய்யலாம். மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்து புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும். மகாலட்சுமி திட்டத்தில் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் உள்பட பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், காங்கிரசின் நீட் வாக்குறுதி நாடகம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், கரும்பு விவசாயி சின்னத்தை சுயேச்சைக்கு கொடுத்துள்ளனர். நாம் தமிழர் கட்சியை போட்டியாக பார்க்கவில்லை என பா.ஜ.க. கூறுகிறது. போட்டியில் இல்லாதவனிடம் எதற்காக சின்னத்தைப் பறித்தீர்கள்? மாநிலங்கள் விருப்பத்திற்கேற்ப நீட் தேர்வு நடைபெறும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறுவது நாடகம். நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதற்கு பொறுப்பேற்பது யார்? பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவோம் என பேசுவதே முட்டாள்தனம் என்றார்.
- இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்தால், கேஸ் விலை 500 ரூபாயாக குறைக்கப்படும்.
- இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்.
கும்பகோணத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் சுதாவை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கும்பகோணத்தை மாவட்டமாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். கும்பகோணம் ஸ்மார்ட் சிட்டியாக மாற்றப்படும்.
கேஸ் விலையை 10 ஆண்டுகளில் 800 ரூபாய் உயர்த்திவிட்டு, 100 ரூபாய் குறைத்துள்ளனர்.
இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்தால், கேஸ் விலை 500 ரூபாயாக குறைக்கப்படும்.
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்.
முரசொலியையும், உதயசூரியனையும் பிரிக்க முடியாது. மோடி நமக்கு பல முறை வேட்டு வைத்துள்ளார். தற்போது நாம் அவருக்கு வேட்டு வைக்க வேண்டும்.
5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்ல வையுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் 17-ந்தேதி மாலையுடன் ஓய்கிறது
- ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் போலீசாருடன் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் 17-ந்தேதி மாலையுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் வைத்திருப்போர் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு சென்றால் அப்பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. மேலும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோரின் காரிலும் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் போலீசாருடன் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பா.ஜ.க. வேட்பாளர் ஏ.பி. முருகானந்தம் காரில் வந்துகொண்டிருந்தார். அந்த நேரத்தில் டிராபிக் ஏற்படும் என்று கருதிய கண்காணிப்பு நிலைக்குழுவினர் அவரது காரை ஓரமாக நிறுத்துமாறு கூறினர்.
அப்போது கோபமடைந்த ஏ.பி.முருகானந்தம் வாழ்நாள் முழுக்க கோர்ட்டுக்கு அலைய வைத்துவிடுவேன் என்று சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் கண்காணிப்பு குழுவினரை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த திருப்பூர் பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் மீது குன்னத்தூர் காவல் நிலையத்தில் பறக்கும் படை அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
- கோயம்பேடு சந்தைக்கு தினசரி 10லாரிகள் வரை சுமார் 80 முதல் 100டன் எலுமிச்சை பழங்கள் விற்பனைக்கு வருவது வழக்கம்.
- கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் எலுமிச்சை பழத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
போரூர்:
கோயம்பேடு, காய்கறி மார்கெட்டுக்கு ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து எலுமிச்சை பழம் விற்பனைக்கு வருகிறது. தற்போது கோடைவெயில் சுட்டெரித்து வரும் நிலையில் எலுமிச்சை பழம் தேவை அதிகரித்து உள்ளது.
கோயம்பேடு சந்தைக்கு தினசரி 10லாரிகள் வரை சுமார் 80 முதல் 100டன் எலுமிச்சை பழங்கள் விற்பனைக்கு வருவது வழக்கம். கோடை சீசன் தொடங்கி உள்ளதால் பல்வேறு மாநிலங்களுக்கு ஆந்திர மாநிலத்தில் இருந்து எலுமிச்சை பழங்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் கோயம்பேடு சந்தைக்கு வரும் எலுமிச்சை பழங்களின் வரத்து வெகுவாக குறைந்துவிட்டது.
கடந்த சில நாட்களாகவே 40 டன் எலுமிச்சை பழங்கள் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் எலுமிச்சை பழத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அதன் விலையும் தொடர்ந்து ஏறு முகமாகவே இருந்து வருகிறது. மொத்த விற்பனையில் எலுமிச்சை பழம் கிலோ ரூ.100-க்கு விற்கப்படுகிறது. அதேபோல் சில்லரை விற்பனையில் ஒரு கிலோ எலுமிச்சை ரூ.130வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கடைகளில் எலுமிச்சை பழச்சாறு, குளிர்பானங்கள், சர்பத்தை பலர் விரும்பி குடித்து வருகிறார்கள். இதனால் சாலையோரங்களிலும் எலுமிச்சை சர்பத் கடைகள் பல இடங்களில் முளைத்து உள்ளன.
- சென்னை சிங்கப்பூராக மாறும் என்றார்கள். மாறியதா? சிங்கப்பூர் நிறுவனத்துக்கு காண்டிராக்ட் மாறியது.
- வெள்ளத்துக்கு தீர்வு கண்டார்களா? குப்பைக்கு தீர்வு கண்டார்களா? தொகுதிக்கு என்ன மாற்றத்தை தந்தார்கள்.
சென்னை:
வேளச்சேரியில் பிரசாரம் செய்த தென்சென்னை பா.ஜனதா வேட்பாளர் டாக்டர் தமிழிசையிடம் பெருங்குடி குப்பை கிடங்கை பொதுமக்கள் காட்டி தீர்வு காண வலியுறுத்தினார்கள்
இது தொடர்பாக அவர் பேசியதாவது:-
திராவிடமாடலின் பெருமையும், அடையாளமும் பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கிடங்குகள்தான். ஒவ்வொரு தேர்தலிலும் தீர்வு காண்பதாக சொல்லி ஏமாற்றினார்கள். தீர்வு காண முடியாத பிரச்சினையா? அவர்கள் செய்யமாட்டார்கள். சென்னை சிங்கப்பூராக மாறும் என்றார்கள். மாறியதா? சிங்கப்பூர் நிறுவனத்துக்கு காண்டிராக்ட் மாறியது. அவர்களுக்கு பணம் கைமாறியது. அவ்வளவு தான். நான் புதுவை கவர்னராக இருந்தபோது அங்கும் இதே போல் 20 ஆண்டுகளாக தீர்க்க முடியாத குப்பை கிடங்கு பிரச்சினை இருந்தது.
அதற்கான நிபுணர்களை வரவழைத்து ஆய்வு செய்து மத்திய அரசு துறைகளும் பரிசீலித்து 9 மாதங்களில் பிரச்சினை தீர்ந்தது. இப்போது மேலாண்மை தொழிற்சாலை போல் செயல்படுகிறது. மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள்.
60 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்தும் குப்பையை கூட கையாள தெரியாத கையாலாகாத அரசுகளாகத்தான் இரு கழக அரசுகளும் இருந்து உள்ளன. இதே தென் சென்னையில் ஏழெட்டு தடவை தி.மு.க. எம்.பி.க்கள் வெற்றி பெற்றுள்ளார்கள்.
ஆனால் வெள்ளத்துக்கு தீர்வு கண்டார்களா? குப்பைக்கு தீர்வு கண்டார்களா? தொகுதிக்கு என்ன மாற்றத்தை தந்தார்கள். நீங்கள் மாற்றி யோசியுங்கள். மாற்றமா? ஏமாற்றமா? முடிவு செய்யுங்கள்.
குப்பையை கூட சீராக்காத திராவிட கட்சிகளுக்கு குட்பை சொல்லுங்கள். நாடே முன்னேறும் போது சென்னையும் முன்னேற வேண்டாமா? எனக்கு ஒரு வாய்ப்பு தந்தால் ஒரே வருடத்தில் குப்பை பிரச்சினைக்கு தீர்வு காண்பேன். தாமரைக்கு வாக்களியுங்கள். வளர்ச்சிக்கு வித்திடுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.






