என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • மேடையில் அமர்ந்திருந்த எம்.எல்.ஏ. புகேழந்தி மயக்கம் ஏற்பட்டு மேடையிலேயே மயங்கி விழுந்தார்.
    • அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் புகழேந்திக்கு முதல் உதவி செய்தனர்.

    விக்கிரவாண்டி:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    இதற்காக வேட்பாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் முன்னதாகவே வருகை தந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வருகைக்கு காத்திருந்தனர். நேற்று முன்தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்திருந்தார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருவதற்கு முன்பு மேடையில் அமர்ந்திருந்த எம்.எல்.ஏ. புகேழந்தி மயக்கம் ஏற்பட்டு மேடையிலேயே மயங்கி விழுந்தார். உடனே அருகில் இருந்த அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் புகழேந்திக்கு முதல் உதவி செய்தனர்.

    இதையடுத்து லட்சுமணன் எம்.எல்.ஏ. பதட்டத்துடன் அங்கு ஓடி வந்து மேடைக்கு கீழே அமர்ந்திருந்த அவரது மகன் செல்வகுமாருக்கு தகவல் தெரிவித்து மேடைக்கு அழைத்தார்.

    பின்னர் புகழேந்தி எம்.எல்.ஏ.வை கைத்தாங்கலாக அழைத்து சென்று முதலமைச்சருக்காக அமைக்கப்பட்டிருந்த சிறப்பு ஏ.சி. அறையில் ஓய்வெடுக்க வைத்தனர். ஆனாலும் அவருக்கு சரியாகாததால் பின்னர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை அனுமதித்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை 10.35 மணியளவில் புகழேந்தி எம்.எல்.ஏ. பரிதாபமாக உயிரிழந்தார்.

    மரணம் அடைந்த புகழேந்திக்கு கடந்த 4 வருடங்களாகவே கல்லீரல் பிரச்சனை இருந்து வந்தது. அதற்கு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் அவர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற பிறகுதான் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்றார். இந்த நிலையில்தான் அவர் மேடையில் மயங்கி விழுந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.

    புகழேந்தி எம்.எல்.ஏ. தற்போது விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராகவும் பதவி வகித்து வந்தார்.

    புகழேந்தி எம்.எல்.ஏ. மரணம் அடைந்ததை அறிந்ததும் அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு விரைந்து சென்றார். அங்கு அவரது உடலை பார்வையிட்டார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

    • அணை நீர்மட்டம் 48 அடியாக குறையும்போது டணாய்க்கன் கோட்டை, மாதவராய பெருமாள் கோவில், சோமேஸ்வரர் மற்றும் மங்களாம்பிகை கோவில்கள் வெளியே தெரியும்.
    • கடைசியாக கடந்த 2018-ம் வருடம் நீர்மட்டம் 48 அடியாக சரிந்த போது கோவில்கள் வெளியே தெரிந்தன.

    ஈரோடு:

    தமிழகத்தில் டெல்டா பாசனத்திற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய பாசன பரப்பு, தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையை பெற்றது பவானிசாகர் அணை. 105 அடி உயரம் கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    பவானி ஆறு, மாயாறு ஒன்று சேரும் இடத்தில் 1948-ல் பவானிசாகர் அணை கட்டுமான பணி தொடங்கியது. நீர்தேக்க பகுதியில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த டணாய்க்கன் கோட்டையில் உள்ள மாதவராய பெருமாள் கோவில், சோமேஸ்வரர் மற்றும் மங்களாம்பிகை கோவில் அப்பகுதி மக்களின் வழிபாட்டுத்தலமாக திகழ்ந்தது.

    கட்டுமான பணி தொடங்கிய போது நீர்த்தேக்க பகுதியில் வசித்த கிராம மக்கள் பவானிசாகர், ராஜன்நகர், பண்ணாரி சுற்றுவட்டாரத்தில் குடியேறினர். அணைக்குள் இருந்த பழமை வாய்ந்த சிலைகள் எடுத்து வரப்பட்டு பவானிசாகர், கீழ்பவானி வாய்க்கால் கரையோரம் கோவில் கட்டப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டன. 1955-ல் கட்டுமான பணி முடிந்த பின் கற்களால் கட்டப்பட்ட கோவில் மற்றும் மண்டபங்கள் அணை நீரில் மூழ்கி சிதிலமடைந்தன.

    அணை நீர்மட்டம் 48 அடியாக குறையும்போது டணாய்க்கன் கோட்டை, மாதவராய பெருமாள் கோவில், சோமேஸ்வரர் மற்றும் மங்களாம்பிகை கோவில்கள் வெளியே தெரியும்.

    கடைசியாக கடந்த 2018-ம் வருடம் நீர்மட்டம் 48 அடியாக சரிந்த போது கோவில்கள் வெளியே தெரிந்தன. அதன் பிறகு 6 ஆண்டுகள் நீர்மட்டம் குறையாததால் வெளியே தெரியவில்லை.

    தற்போது பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 47.50 அடியாக சரிந்துள்ளதால் மாதவராய பெருமாள் கோவில் முழுவதும் காட்சியளிக்கிறது.

    இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறும்போது, பவானிசாகர் அணை நீர்மட்டம் தற்போது 47 அடியாக சரிந்துள்ளதால் மாதவராய பெருமாள் கோவில் வெளியே தெரிகிறது. நீர்மட்டம் 35 அடியாக குறையும் பட்சத்தில் சோமேஸ்வரர் மற்றும் மங்களாம்பிகை கோவில்கள் மற்றும் பீரங்கி திட்டு பகுதிகள் வெளியே தெரியும் என்றனர்.

    • தேர்தலில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 92 வயது முதியவர் முதல் முறையாக வாக்களிக்க இருக்கிறார்.
    • “வருகிற பாராளுமன்ற தேர்தலில் நான் முதல் முறையாக வாக்களிக்க உள்ளேன்” என்றார்.

    சாஹிப்கஞ்ச்:

    நாட்டின் 18-வது பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்படுகின்றன.

    இந்த தேர்தலில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 92 வயது முதியவர் முதல் முறையாக வாக்களிக்க இருக்கிறார்.

    ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இருந்து சுமார் 450 கி.மீ. தொலைவில் உள்ள சாஹிப்கஞ்ச் மாவட்ட வாக்குச்சாவடி மையங்களில் மாநில தலைமை தேர்தல் ஆணையர் ரவிக்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    பல்வேறு கிராமங்களுக்கு சென்று அங்கு வசிக்கும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளிடம் தேர்தல் நடைமுறையில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், சவால்கள் குறித்து ரவிக்குமார் கேட்டறிந்தார்.

    அப்போது ராஜ்மகால் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பத்கோரி கிராமத்தில் வசிக்கும் முதியவரான அன்சாரியிடம் நீங்கள் வாக்காளரா? எனத் தேர்தல் ஆணையர் கேட்டார்.

    அதற்கு பதில் அளித்த அன்சாரி, 'வாக்காளர் பட்டியலில் எனது பெயர் இல்லாததால் நான் இதுவரை வாக்களித்தது இல்லை' என்றார்.

    இதைக் கேட்டு ஆச்சரியம் அடைந்த தேர்தல் ஆணையர் ரவிகுமார், அன்சாரியின் பெயரை வாக்காளர் பட்டியலில் உடனடியாக சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    தேர்தல் ஆணையருக்கு நன்றி தெரிவித்த அன்சாரி, "வருகிற பாராளுமன்ற தேர்தலில் நான் முதல் முறையாக வாக்களிக்க உள்ளேன்" என்றார்.

    • திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் வசந்த திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
    • சுவாமி தங்க தேரில் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து கோவில் சேர்கிறார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை வசந்த திருவிழா வருகிற 14-ந் தேதி தொடங்குகிறது.

    இதுகுறித்து கோவில் இணை ஆணையர் கார்த்திக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் வசந்த திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு சித்திரை வசந்த திருவிழா வருகிற 14-ந் தேதி தொடங்கி 23-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.

    விழா நாட்களில் கோவில் நடை வழக்கம்போல் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வ ரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    மதியம் உச்சிகால பூஜையை தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் தங்கசப்பரத்தில் எழுந்தருளி கிரிப்பிரகாரத்தில் ராஜகோபுர வாசல் எதிரே உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருள்வார்.

    மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையை தொடர்ந்து வசந்த மண்டபத்தில் சுவாமி ஜெயந்தி நாதருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரமாகி தங்க சப்பரத்தில் எழுந்தருளி, மேளதாளம் முழங்க, பக்தர்கள் கப்பல் பாடல்கள் பாடி வசந்த மண்டபத்தை 11 முறை சுவாமி சுற்றி வலம் வந்து தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி தங்க தேரில் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து கோவில் சேர்கிறார்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன், இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில்முருகன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று பிரசாரம் செய்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.
    • இரவு பிரசாரத்தை முடிக்கும் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து கார் மூலம் கடலூர் வழியாக புதுச்சேரி சென்றடைகிறார்.

    கடலூர்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று பிரசாரம் செய்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

    அதன்படி நேற்று கடலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத், விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை.ரவிக்குமார் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் அருகே வி.சாலையில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    தொடர்ந்து பிரசார பொதுக்கூட்டத்தை முடித்து விட்டு, அங்கிருந்து கார் மூலம் கடலூர் வந்தடைந்தார். அவருக்கு மாவட்டசெயலாளரும், அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதன்பிறகு அவர் இரவு கடலூரில் தங்கி ஓய்வு எடுத்தார். 

    சிதம்பரத்தில் இன்று மு.க.ஸ்டாலின் பேசும் பொதுக்கூட்ட மேடை.

    சிதம்பரத்தில் இன்று மு.க.ஸ்டாலின் பேசும் பொதுக்கூட்ட மேடை.

    இன்று மாலை 6 மணிக்கு மேல் சிதம்பரம் அருகே லால்புரத்தில், சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் திருமாவளவன், மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வக்கீல் சுதா ஆகியோரை ஆதரித்து நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகிறார். இரவு பிரசாரத்தை முடிக்கும் அவர், அங்கிருந்து கார் மூலம் கடலூர் வழியாக புதுச்சேரி சென்றடைகிறார்.

    அங்கு அவர் அக்கார்டு ஓட்டலில் இரவு தங்கி ஓய்வெடுக்கிறார். நாளை (ஞாயிற்றுக்கிழமை) புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடலூர், சிதம்பரம் வருகையையொட்டி விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. திஷா மிட்டல் மேற்பார்வையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

    • ரம்ஜான் பண்டிகையையொட்டி ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆடுகள் விற்பனைக்காக வர தொடங்கியுள்ளன.
    • ரெட்டேரி, வில்லிவாக்கம், சைதாப்பேட்டை, புளியந்தோப்பு ஆகிய இடங்களில் உள்ள சந்தைகளில் ஆடுகள் விற்பனை நடைபெறும்.

    சென்னை:

    ரம்ஜான் பண்டிகை வருகிற 11-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் சந்தைகளில் ஆடுகள் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    சென்னையிலும் இன்று முதல் ஆடுகள் விற்பனை களை கட்ட தொடங்கி உள்ளது. பண்டிகை காலங்களில் சென்னை மக்களின் இறைச்சி தேவையை வட மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்படும் ஆடுகளே பூர்த்தி செய்கின்றன.

    அந்த வகையில் மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ரம்ஜான் பண்டிகைக்காக 30 ஆயிரம் ஆடுகள் வரவழைக்கப்படுகின்றன. இன்று முதல் சென்னையில் 4 இடங்களில் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    இது தொடர்பாக தமிழ்நாடு அனைத்து இறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்கள் நல சங்கத்தின் பொதுச்செயலாளரான ராயபுரம் அலி கூறியதாவது:-

    ரம்ஜான் பண்டிகையையொட்டி ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆடுகள் விற்பனைக்காக வர தொடங்கியுள்ளன. ரெட்டேரி, வில்லிவாக்கம், சைதாப்பேட்டை, புளியந்தோப்பு ஆகிய இடங்களில் உள்ள சந்தைகளில் ஆடுகள் விற்பனை நடைபெறும். வருகிற 9-ந்தேதி வரையில் வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் செல்வார்கள். ஒரு ஆடு ரூ.7 ஆயிரம் முதல் ரூ.7500 வரை விற்பனையாக வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதன் மூலம் சென்னையில் மட்டும் ரூ.21 கோடி அளவுக்கு ஆடுகள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் 4 சந்தைக்கும் இன்று காலை முதல் ஆடுகள் விற்பனைக்காக வந்து கொண்டிருக்கின்றன. இந்த சந்தைகளுக்கு வரும் ஆடுகளை வியாபாரிகள் தரம் பார்த்து வாங்கிச் செல்கிறார்கள்.

    இதனால் வெளி மாவட்டங்களை போன்று சென்னையிலும் ரம்ஜான் பண்டிகையையொட்டி ஆடு வியாபாரம் சூடுபிடித்து உள்ளது.

    • வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரமும் வினியோகித்தனர்.
    • பஸ் நிலையத்தில் கூடியிருந்த ஏராளமானோர் கண்டு ரசித்ததோடு விழிப்புணர்வு அடைந்தனர்.

    தஞ்சாவூா்:

    தமிழ்நாட்டில் வருகிற 19-ம் தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தலில் 100 சதவீதம் நேர்மையாக வாக்களிப்பை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    அதன்படி தஞ்சை மாவட்டத்திலும் கோலமிடுதல், கிரிக்கெட் போட்டி, பலூன் பறக்க விடுதல் உள்பட பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் ஒருங்கிணைந்த கழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஏராளமான அங்கன்வாடி பெண் ஊழியர்கள் 100 சதவீதம் அனைவரும் வாக்களிப்போம் வாரீர் என்ற வாசகத்தை கோலமாக வரைந்து அதில் 1000 தீபங்கள் ஏற்றினர்.

    அப்போது வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரமும் வினியோகித்தனர். மேலும் ஒலி பெருக்கியில் விழிப்புணர்வு பாடலும் போடப்பட்டன.

    இந்த நூதன விழிப்புணர்வை பஸ் நிலையத்தில் கூடியிருந்த ஏராளமானோர் கண்டு ரசித்ததோடு விழிப்புணர்வு அடைந்தனர்.

    • சோதனையானது சுமார் 15 மணி நேரத்திற்கும் மேலாக இன்று காலையும் தொடர்ந்து வருகிறது.
    • சோதனையில் கிடைத்த சில ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நெல்லை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்யப்படுவதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் அரசியல் கட்சியினர் மூலம் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக அரசு ஒப்பந்ததாரர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டவர்கள் கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைத்துள்ளதாகவும், அதனை அரசியல் கட்சியினருக்கு நன்கொடையாக வழங்க திட்டமிட்டிருப்பதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் வருவமான வரித்துறையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நெல்லை மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறையின் டெண்டர்களை எடுக்கும் அரசு ஒப்பந்ததார் ஆர்.எஸ்.முருகன் என்பவருக்கு சொந்தமான நாங்குநேரி அருகே உள்ள விஜயநாராயணத்தில் அவரது பண்ணை வீட்டில் நேற்று மதியம் வருமானவரித்துறை அதிகாரிகள் 6 பேர் குழுவினர் சோதனையை தொடங்கினர்.

    தொடர்ந்து பாளை பெருமாள்புரத்தில் உள்ள ஆர்.எஸ்.முருகனின் அலுவலகத்திலும், என்.ஜி.ஓ. காலனியில் உள்ள அவரது வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

    இதில் என்.ஜி.ஓ. காலனி வீட்டில் சுமார் 2 மணி நேரம் மட்டுமே சோதனை நடத்தப்பட்ட நிலையில், விஜயநாராயணம் பண்ணை வீட்டில் இன்று காலை வரையிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த சோதனையானது சுமார் 15 மணி நேரத்திற்கும் மேலாக இன்று காலையும் தொடர்ந்து வருகிறது. சோதனையில் கிடைத்த சில ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பெருமாள்புரம் அலுவலகத்தில் நேற்று நள்ளிரவு 11 மணி வரையிலும் சோதனை நடத்தப்பட்ட நிலையில் அதன் பின்னர் வருமான வரித்துறையினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். அதே நேரத்தில் அந்த அலுவலகத்தை வருமான வரித்துறையினர் தங்களது கட்டுப்பாட்டிலேயே வைத்துள்ளனர்.

    அங்கு அதிகாரி ஒருவர் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வேறு யாரும் அந்த அலுவலகத்திற்குள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நேற்று முன்தினம் தி.மு.க. நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் அலுவலகத்தில் நடந்த சோதனையில் கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில் தற்போது அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் சோதனை நடப்பதாக கூறப்படுகிறது.

    • தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • சர்வீஸ் வாகனத்தில் வந்தவர்களிடம் 45 பெட்டிகளில் இருந்த தங்க நகைகளுக்கு மட்டுமே உரிய ஆவணம் இருந்துள்ளது.

    ஓசூர்:

    பாராளுமன்றத் தேர்தலையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குறிப்பாக ஓசூர் அருகே மாநில எல்லையோர பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் நேற்று இரவு ஓசூர் அருகே தமிழக எல்லையான ஜூஜூவாடி சோதனை சாவடி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த கூரியர் சர்வீஸ் வாகனத்தை அவர்கள் மடக்கி சோதனை செய்தபோது, அதில் உரிய ஆவணங்கள் இன்றி, தங்க நகைகள் கொண்டு சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து அதிகாரிகள் அந்த வாகனத்தை ஓசூர் சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு சென்று அதில் இருந்த பொருட்களை வெளியே எடுத்து சோதனை செய்தனர். மேலும் கூரியர் சர்வீஸ் வாகனத்தில் வந்தவர்களிடம் வாகனத்தில் கொண்டு சென்ற பொருட்களுக்கான ஆவணங்களை சோதனை செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தங்க நகைகளை இந்த கூரியர் சர்வீஸ் நிறுவனத்தினர் பெற்று கொண்டு ஓசூரில் உள்ள பிரபல ஜுவல்லரிக்கு எடுத்து சென்றது தெரிய வந்தது.

    அதிகாரிகள் சோதனை செய்ததில், கூரியர் சர்வீஸ் வாகனத்தில் மொத்தம் 69 பெட்டிகளில் தங்க நகைகள் இருந்தது. ஆனால் கூரியர் சர்வீஸ் வாகனத்தில் வந்தவர்களிடம் 45 பெட்டிகளில் இருந்த தங்க நகைகளுக்கு மட்டுமே உரிய ஆவணம் இருந்துள்ளது. மீதமுள்ள 24 பெட்டிகளில் இருந்த தங்க நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து 69 பெட்டிகளில் இருந்த தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதன் மதிப்பு சுமார் 15 கோடி ரூபாய் எனவும் தங்க நகைகளின் மொத்த எடை 30 கிலோ எனவும் கூறப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகளை சீல் வைத்து, வாகனத்தின் மூலம் ஓசூர் அரசு கருவூல அலுவலகத்திற்கு அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். இந்த சம்பவம் ஓசூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 23-ந்தேதி இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா வருகிறார்கள்.
    • சித்திரை திருவிழாவை முன்னிட்டு மீனாட்சி அம்மன் கோவிலில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    மதுரை:

    சித்திரை மாதத்தில் முத்திரை பதிக்கும் உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை பெருவிழா ஒவ்வொரு வருடமும் விமரிசையாக நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். சித்திரை திருவிழாவால் மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும்.

    தமிழகத்தில் நடக்கும் திருவிழாக்களில் முதன்மையான மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இந்த ஆண்டு வருகிற 12-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் சுவாமி சன்னதி முன்புள்ள கொடிமரம் அலங்கரிக்கப்பட்டு காலை 9.55 மணி முதல் 10.19 மணிக்குள் மீனாட்சி-சுந்தரேசுவரர் முன்னிலையில் கொடியேற்றம் நடைபெறும்.

    அன்று மாலை கற்பக விருட்சக வாகனத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் சிம்ம வாகனத்தில் மீனாட்சி அம்மனும் 4 மாசி வீதிகளில் உலா வருகின்றனர்.

    2-ம் நாள் (13-ந்தேதி) திருவிழாவில் காலையில் சுவாமி-அம்பாள் தங்க சப்பரத்திலும், இரவு பூதம்-அன்னம் வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர்.

    3-ம் நாள் (14-ந்தேதி) காலையில் 4 சப்பர வாகனங்களிலும், இரவு கைலாசபர்வதம்-காமதேனு வாகனங்களில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி வீதி உலா வந்து அருள்பாலிக்கின்றனர்.

    4-ம் நாள் திருவிழாவான 15-ந் தேதியன்று காலை 9 மணிக்கு தங்கப்பல்லக்கில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி சின்னக்கடை தெரு, தெற்குவாசல் வழியாக வில்லாபுரம் பாகற்காய் மண்டகப்படியில் எழுந்தருளுகிறார்கள். பின்னர் மாலை 6 மணிக்கு அங்கிருந்து சுவாமி-அம்பாள் கோவிலுக்கு திரும்புகிறார்கள்.

    5-ம் நாள் 16-ந் தேதி காலையில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி வடக்கு மாசி வீதியில் உள்ள ராமாயணச்சாவடி, நவநீத கிருஷ்ணசுவாமி தேவஸ்தான மண்டகப்படியில் எழுந்தருளுகிறார்கள். இரவு 7 மணிக்கு அங்கிருந்து தங்க குதிரை வாகனத்தில் புறப்பாடாகி கோவிலுக்கு சுவாமி-அம்பாள் திரும்புகிறார்கள்.

    6-ம் நாள் (17-ந் தேதி) திருவிழாவில் காலையில் தங்க சப்பரத்திலும், இரவு தங்க ரிஷபம்-வெள்ளி ரிஷபம் வாகனத்திலும் வீதி உலா நடைபெறுகிறது. 7-ம் நாளான 18-ந் தேதி காலை தங்கசப்பரத்திலும், இரவு நந்திகேசுவரர்-யாளி வாகனத்திலும் சுவாமி-அம்பாள் வீதி உலா வருகிறார்கள்.

    விழாவில் 8-ம்நாளான 19-ந் தேதியன்று காலையில் தங்கப்பல்லக்கு வீதி உலா நடைபெறுகிறது. அன்று இரவு 7.35 மணியளவில் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடைபெறும். கோவில் அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் ரத்தின ஆபரணங்கள் இழைத்த ராயர் கீரிடம் சாற்றி, செங்கோல் வழங்கி மதுரை நகரின் ஆட்சி பொறுப்பை ஏற்கும் வகையில் மீனாட்சி அம்மனுக்கு செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் நடக்கும். அதனை தொடர்ந்து இரவு 9 மணிக்கு வெள்ளி சிம்மாசனத்தில் (கைபாரம்) வீதி உலா நடக்கும்.

    20-ந் தேதி காலை மரவர்ண சப்பரத்திலும் வீதி உலா நடக்கிறது. அன்று மாலை மீனாட்சி அம்மன் இந்திர விமானத்தில் எழுந்தருளி 4 மாசி வீதிகளில் வந்து அஷ்டதிக்கு பாலகர்களை போரிட்டு வெற்றி கொள்ளும் வகையில் திக்கு விஜயம் நடக்கிறது.

    விழாவில் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் மறுநாள் (21-ந்தேதி) விமரிசையாக நடைபெறுகிறது. அன்று இரவு மணக்கோலத்தில் சுவாமி-அம்பாள் யானை, ஆனந்த ராயர் பூப்பல்லக்கில் வீதி உலா வருகின்றனர்.

    22-ந்தேதி காலை திருத்தோரோட்டம் நடக்கிறது. 23-ந்தேதி இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா வருகிறார்கள்.

    சித்திரை திருவிழாவை முன்னிட்டு மீனாட்சி அம்மன் கோவிலில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    • தங்கம் கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,615-க்கும் விற்பனை.
    • தங்கம் விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் 28-ந்தேதி சவரன் விலை ரூ.50 ஆயிரத்தை எட்டியது. இதையடுத்து வந்த நாட்களிலும் தங்கம் விலை உயர்ந்து வந்தது.

    இந்த நிலையில் இன்று தங்கம் விலை ஜெட் வேகத்தில் ஏறியுள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,615-க்கும் சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.52,920-க்கும் விற்பனையாகிறது.

    தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 2ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.87-க்கும் பார் வெள்ளி ரூ.87,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதால் மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

    • நாய் கடித்து அந்த ஆடு இறந்திருக்கலாம் எனவும் தகவல்.
    • வன ஊழியர்கள் இருவரும் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மயிலாடுதுறையில் போக்கு காட்டி வரும் சிறுத்தையின் புகைப்படம் வெளியாகி உள்ளது.

    5வது நாளாக சிறுத்டதையை தேடும் பணியில் வனத்துறை தீவிரம் காட்டி வருகிறது.

    முதல் நாள் கண்காணிப்பு கேமராவில் சிக்கிய சிறுத்தையின் புகைப்படம் முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது.

    கடந்த இரண்டு நாட்களாக வனத்துறையின் கேமராவில் சிறுத்தை சிக்காமல் இருந்து வந்தது. 

    மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் கொல்லப்பட்ட ஆட்டை சிறுத்தை கொல்லவில்லை. நாய் கடித்து அந்த ஆடு இறந்திருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து நிபுணத்துவம் வாய்ந்த வன ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். வன ஊழியர்கள் இருவரும் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ×