என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • மோடி ஒரு யோகி என்றும் நாட்டு மக்கள் நன்றாக இருக்க வேண்டுமென அவர் உழைத்து கொண்டிருப்பதாகவும் டாக்டர் பாரிவேந்தர் புகழாரம் சூட்டினார்
    • தேர்தலில் நல்லவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாட்டு அரசியல் வாதிகள் அனைவரும் ஊழல்வாதிகள் என குற்றஞ்சாட்டினார்

    திருச்சி மாவட்டம் வாளசிராமணி பகுதியில் பெரம்பலூர் தொகுதி ஐஜேகே வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் ஆதரவு திரட்டினார். அப்போது பேசிய அவர், தான் செய்த பணிகள் குறித்து Progress Report போல தொகுதி மக்களுக்கு புத்தகமாக வழங்கி உள்ளதாக குறிப்பிட்டார்.

    இந்த புத்தகத்தை நீங்கள் படித்தீர்களானால் தனக்கு 100க்கு 100 மதிப்பெண்கள் போடுவீர்கள் என கூறினார். எம்.பி தொகுதி நிதியான 17 கோடி ரூபாயில் 42 வகுப்பறைகள், சமூக கூடங்கள், ரேசன் கடை, உள்ளிட்டவை கட்டி கொடுத்து உள்ளதாக கூறினார்.

    தேர்தலில் நல்லவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாட்டு அரசியல் வாதிகள் அனைவரும் ஊழல்வாதிகள் என குற்றஞ்சாட்டினார். மோடி ஒரு யோகி என்றும் நாட்டு மக்கள் நன்றாக இருக்க வேண்டுமென அவர் உழைத்து கொண்டிருப்பதாகவும் டாக்டர் பாரிவேந்தர் புகழாரம் சூட்டினார்.

    தொடர்ந்து வேலம்பட்டி பகுதியில் பரப்புரை மேற்கொண்ட டாக்டர் பாரிவேந்தருக்கு, கிராம மக்கள் திரளாகக்கூடி உற்சாக வரவேற்பு அளித்தனர். தான் எம்.பி ஆனால் ஆயிரத்து 500 ஏழைக் குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து இலவச மருத்துவம் வழங்கப்படும் என உறுதி அளித்தார். மோடி, நாட்டு மக்கள் வறுமையில் இருக்க கூடாது என்பதற்காக உழைத்து கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். தான் வெற்றி பெற்று வரும்போது நிச்சயமாக உங்கள் ஊர் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என டாக்டர் பாரிவேந்தர் உறுதி அளித்தார்.

    தொடர்ந்து ஊரக்கரை பகுதியில் ஆதரவு திரட்டிய டாக்டர் பாரிவேந்தருக்கு, அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது வாக்குறுதிகளைத் தெரிவித்து அவர் வாக்கு சேகரித்தார். தா.பேட்டை பகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட டாக்டர் பாரிவேந்தருக்கு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அரியலூர் வழியாக நாமக்கல்லுக்கு நிச்சயமாக ரயில்வே திட்டம் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார். இத்திட்டம் நிறைவேறினால் விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்றும், இத்திட்டம் வந்தால் 60 ஆண்டு கால கனவு திட்டம் நிறைவேறும் எனவும் குறிப்பிட்டார்.

    தேர்தலில் ஊழல் செய்யாதவர்களாக, லஞ்சம் வாங்காத நல்லவர்களை, தேர்ந்தெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். திமுகவினர் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறி மக்களை ஏமாற்றி,குழப்பி விடுவதாக குற்றஞ்சாட்டினார்.

    விவேகானந்தர் போன்றவர் மோடி எனவும், நாட்டு மக்கள் கஷ்டப்படகூடாது என இரவு பகலாக உழைத்து கொண்டு இருப்பதாகவும் டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்தார்.

    தொடர்ந்து மேட்டுப்பாளையம் கிராமத்தில் பிரசாரம் செய்த டாக்டர் பாரிவேந்தருக்கு வானவேடிக்கை முழங்க தேசிய ஜனநாயக கூட்டணியினர் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். அப்போது பேசிய அவர், 2019 வாக்குறுதியின்படி 118 கோடி ரூபாய் செலவில் ஆயிரத்து 200 மாணவர்களை பட்டதாரியாக்கியதாகக் குறிப்பிட்டார்.

    தான் மீண்டும் எம்பி ஆனால் ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு இலவச மருத்துவம் வழங்கப்படும் என உறுதி அளித்தார். தமிழகத்தில் ஊழல் தலை விரித்தாடுவதாகவும், தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்படும் எம்பி, மோடியின் கரத்தை வலுப்படுத்துபவர்களாக இருக்க வேண்டும் என டாக்டர் பாரிவேந்தர் வலியுறுத்தினார்.

    2. மக்களுக்கு, தான் செய்த பணிகள் குறித்து புத்தகமாக வெளியிட ஒரு துணிவு வேண்டும் என பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி ஐ.ஜே.கே. வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.

    மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் ஐ.ஜே.கே. வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். துறையூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொட்டையூர் பகுதியில் அவர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது ஐஜேகே நிர்வாகிகள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து பேசிய டாக்டர் பாரிவேந்தர், பிரதமர் மோடி தூய்மையான ஆட்சியை கொடுத்துள்ளதாகவும், உலக நாடுகள் அவரை பெருமை கொள்வதாகவும் புகழாரம் சூட்டினார். மேலும் தமிழ்நாட்டில் எல்லா அமைச்சர்களும் ஊழல் செய்துள்ளதாகவும், தமிழ்நாட்டை ஆளும் கட்சி ஊழலில் அதிகமாக ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் கடந்த 5 ஆண்டுகளில், தான் செய்த பணிகள் குறித்து புத்தகமாக வெளியிட்டுள்ளதாகவும், அவ்வாறு புத்தகத்தை வெளியிட ஒரு துணிவு வேண்டும் என்றும் டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்தார்.

    அதனை தொடர்ந்து, கோணப்பாதை கிராமத்தில் டாக்டர் பாரிவேந்தர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். அங்கு பேசிய அவர், கல்விக்கான தெய்வம் சரஸ்வதி என்றும், அதற்காக தாமரையை மறந்துவிடக் கூடாது எனவும் அறிவுறுத்தினார். சுட்டெரிக்கும் சூரியனை மறந்துவிட வேண்டும் என்றும் கூறினார். மேலும், தேர்தலில் வாக்களிக்க வேண்டியது ஒவ்வொருவரின் தலையாய கடமை என அறிவுறுத்திய டாக்டர் பாரிவேந்தர், அனைவரும் வரும் 19-ஆம் தேதி தவறாமல் வாக்களிக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

    திருச்சி மாவட்டம் சிக்கத்பூர் பகுதியில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி ஐஜேகே வேட்பாளர் டாக்டர். பாரிவேந்தர், தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தேசிய ஜனநாயக கூட்டணியினர் மற்றும் பெண்கள் ஆரத்தி எடுத்து பாரிவேந்தருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைதொடர்ந்து பேசிய அவர், ஆயிரத்து 200 மாணவர்களை பட்டதாரிகளாக்கி, அவர்கள் குடும்பங்களில் விளக்கேற்றி உள்ளதாகக் கூறினார். பிரதமர் மோடி வந்த பிறகு இந்தியாவின் பெயரும், பெருமையும் அதிகரித்து உள்ளதாகவும், நல்லவர்களை MPயாக தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் ஊழல் கட்சிதான் இன்று தமிழ்நாட்டை ஆள்கிறது எனவும், ஊழல் கட்சியிலிருந்து வருபவர்கள் ஊழல் வாதிகள் எனவும் விமர்சித்தார். இதையடுத்து தன்னை வெற்றி பெறச் செய்தால் சிக்கதம்பூர் கிராமத்தில் இளைஞர்களுக்கான உடற்பயிற்சி கூடம், மாவீரன் சுந்தரலிங்கத்திற்கு சிலை அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

    • இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார்
    • கொட்டையூர் , ரெங்கநாதபுரம், சிக்கத்தம்பூர் ஆகிய பகுதியில் பாரிவேந்தர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

    இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். தேர்தல் நெருங்கி வருவதால், பாரிவேந்தர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

    அந்த வகையில், இன்று பெரம்பலூர் தொகுதியில் உள்ள கொட்டையூர் , ரெங்கநாதபுரம், சிக்கத்தம்பூர் ஆகிய பகுதியில் பாரிவேந்தர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    அப்போது பொது மக்களுக்கு மத்தியில் அவர் பேசியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் அனைவரும் தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். 2019-ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தீர்கள். வெற்றி பெற செய்த நான் உங்களுக்காக என்ன செய்தேன் என்று கேட்கலாம். உங்களுக்காக பாராளுமன்றத்திலே பேசிருக்கிறேன், ரெயில்வே மந்திரி, நிதிமந்திரி, பிரதமர் ஆகியோரை சந்தித்து பேசியிருக்கிறேன் இவை அனைத்தையும் உங்களுக்கு புத்தமாக போட்டு கொடுத்திருக்கிறேன்.

    இந்த புத்தகம் எல்லாருடைய வெற்றிக்கும் வந்து சேர்ந்திருக்கும். இல்லையென்றாலும் விரைவில் வரும். மற்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற எம்பிக்கள் இது போன்ற புத்தகங்கள் போடுவதில்லை. பாராளுமன்ற உறுப்பினரின் பணிக்கு மதிப்பெண்கள் கொடுத்தால் எனக்கு நீங்கள் 100 மதிப்பெண்கள் கொடுப்பேர்கள். அந்த அளவிற்கு இந்த பகுதியில் நான் வேலை செய்துள்ளேன்.

    ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் வேலை உங்களின் பிரச்சனைகளை பாராளுமன்றத்தில் பேசுவது. உங்களின் பிரச்சினைகளை தீர்க்க மத்திய அரசு 17 கோடி கொடுத்தது. அந்த 17 கோடி ரூபாயில் எனது பாராளுமன்ற தொகுதிக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்துள்ளேன்.

    குறிப்பாக இந்த தொகுதியில் உள்ள அரசுப்பள்ளிகளில் போதுமான வகுப்பறைகள் இல்லாமல் இருந்தது. பெண்கள் மரத்தடியில் அமர்ந்து படித்து கொண்டிருந்தார்கள். அதனால் அரசுப்பள்ளிகளுக்கு 42 வகுப்பறைகளை கட்டி கொடுத்துள்ளேன். எந்தெந்த ஊருக்கு சமுதாய கூட்டங்கள் கேட்டீர்களா அங்கெல்லாம் சமுதாய கூடங்கள் கட்டி கொடுத்துள்ளேன்.

    இதேபோல் நியாயவிலை கடைகள், நீர்த்தேக்க தொட்டிகள், கழிப்பறைகள் கட்டி கொடுத்துள்ளேன்.

    பெரம்பலூர் தொகுதியில் ஏழை மாணவர்களால் உயர்கல்வி பெற முடியாமல் தவித்தனர். அதனால் ஏழை மாணவர்களை தேர்வு செய்து அவர்களில் 1200 மாணவர்களுக்கு மருத்துவம் , எஞ்ஜினியர், விவசாயம் ஆகிய உயர்கல்விகளை படிக்க வைத்துள்ளேன். எனது தொகுதியில் 1200 மாணவ, மாணவிகள் பட்டாதாரிகளாக ஆக்கியுள்ளோம். இதுவரை எந்த எம்பி செய்யாத ஒன்றை நான் செய்திருக்கிறேன். இதுவரை 118 கோடி மாணவர்களுக்காக செலவு செய்திருக்கிறேன்.

    கொரோனா காலகட்டத்தில் ஒவ்வொரு பகுதிகளிலும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 150- 200 படுக்கை வசதிகள் செய்து கொடுத்துள்ளேன். 2 ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுத்து கொரோனா காலகட்டத்தில் எண்ணற்ற மக்களை காப்பாற்றி உள்ளேன்.

    நீங்கள் மீண்டும் என்னை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தால், 1500 ஏழை குடும்பங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உயர் மருத்துவம் செய்து தருவேன். குறிப்பாக இதய நோய், சிறுநீரக செயல் இழப்பு, போன்ற பல லட்சம் செய்ய கூடிய மருத்துவ சிகிச்சைகளுக்கு உயர் மருத்துவம் செய்து தருவேன் .

    இந்த 1500 குடும்பங்களுக்கு 10 லட்சம் மதிப்பிலான இன்சூரன்ஸ் செய்து இந்த சிகிக்சை கிடைக்க வழிவகை செய்வேன். இவை அனைத்தும் என் தனிப்பட்ட வாக்குறுதிகள்.

    கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்து வருகிறது. மோடி பிரதமராக உள்ளார். பாஜக ஆட்சியில் எந்த அமைச்சர் மீதும் எந்த ஊழல் குற்றசாட்டும் இல்லை. அந்த வகையில் ஊழல் இல்லா ஆட்சியை மோடி கொடுத்திருக்கிறார்.

    மீண்டும் மோடி 3-வது முறையாக பிரதமராக மக்கள் வாக்களிக்க போகிறார்கள். வட மாநிலங்களில் மோடிக்கு பெரும் ஆதரவு உள்ளது. இந்த முறை தமிழ்நாட்டில் இருந்து பாஜக சார்பாக நாம் எம்.பிக்களை அனுப்ப வேண்டும்.

    இந்தியா முழுவதும் ஊழல் செய்த கட்சி என்றால் திமுகவை தான் அழைக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை டெல்லிக்கு அனுப்பாதீர்கள்.திமுக அமைச்சர்கள் பலர் மீது ஊழல் குற்றசாட்டு உள்ளது. எப்போது வேண்டுமானாலும் அவர்கள் கைது செய்யப்படலாம். ஆகவே ஊழல் கட்சிகளுக்கு வாக்களிக்காதீர்கள்.

    யார் மக்களுக்கு சேவை செய்கிறார்கள் என்பதை பார்த்து அவர்களுக்கு வாக்களியுங்கள் . ஆகவே தாமரையில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள்.

    • நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக எஸ்.ஜி.எம்.ரமேஷ் என்பவர் போட்டியிடுகிறார்
    • பாஜக வேட்பாளர் எஸ்.ஜி.எம்.ரமேஷ் புதிய நம்பியார் நகர் மீனவ கிராமத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்காக சென்றார்

    நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக எஸ்.ஜி.எம்.ரமேஷ் என்பவர் போட்டியிடுகிறார். அவர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில் இன்று அவர், புதிய நம்பியார் நகர் மீனவ கிராமத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்காக சென்றார். அப்போது பா.ஜ.க.வினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    எஸ்.ஜி.எம். ரமேஷை வரவேற்க வைத்த பட்டாசுகள் வெடித்ததில் 2 குடிசை வீடுகள் தீக்கிரையானது. இதில், வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது.

    இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த தீ விபத்து குறித்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்த வருவாய் அலுவலர், வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின.

    நாகை மாவட்ட பாஜக தலைவர் கார்த்திகேயன் எரிந்த வீடுகளை பார்வையிட வந்த நிலையில், அவரை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.

    • அனைத்து தடைகளையும் உடைத்து மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும்.
    • தி.மு.க.வின் 3 ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு வேதனை மட்டுமே பரிசாக கிடைத்துள்ளது.

    ஆரணி:

    ஆரணி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கஜேந்திரனை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருவண்ணாமலை சேவூர் புறவழிச்சாலையில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

    அனைத்து தடைகளையும் உடைத்து மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும்.

    நான் ஒரு விவசாயி; விவசாயிகள் மட்டுமே யாருக்கும் பயப்பட மாட்டார்கள். என்னை விமர்சிக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு விவசாயத்தைப் பற்றி என்ன தெரியும்?

    அ.தி.மு.க. ஆட்சியில் மட்டுமே விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் தரப்பட்டது. உணவு உற்பத்தி அதிகரிப்பிற்கு தேசிய அளவில் அ.தி.மு.க. அரசுக்கு விருது கிடைத்தது. இந்தியாவிலேயே 140 விருதுகளை பெற்ற அரசு அ.தி.மு.க. அரசுதான்.

    தமிழகத்தில் நடப்பது திராவிட மாடல் அரசு அல்ல; குழு அரசாங்கம்.

    ஒவ்வொரு திட்டத்திற்கும் குழு போடும் அரசாகவே தி.மு.க. அரசு உள்ளது.

    தி.மு.க.வின் 3 ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு வேதனை மட்டுமே பரிசாக கிடைத்துள்ளது.

    முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த வாக்குறுதிகளில் 10 சதவீதம் கூட இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

    பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக அளித்த வாக்குறுதியை தி.மு.க. நிறைவேற்றவில்லை.

    அ.தி.மு.க. கொண்டு வந்த நலத்திட்டங்களை ரத்து செய்ததே தி.மு.க.வின் ஒரே சாதனை என தெரிவித்தார்.

    • எடப்பாடி பழனிசாமி, திராட்சைப் பழத்தை எடுக்க முடியாததால், அந்தப் பழம் புளிக்கும் என நரி சொல்வதைப் போலச் சொல்கிறார் - அண்ணாமலை
    • அண்ணாமலையை ஓநாய் என்றால் அதை பாஜக ஏற்றுக்கொள்ளுமா? அண்ணாமலைக்கு தான் நரி மற்றும் ஓநாயின் குணம் இருக்கிறது - செம்மலை

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று பொள்ளாச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது பேசிய அவர், "மத்தியில் இருந்து தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வந்துவிட்டு செல்கிறார்கள். இதனால் என்ன பயன்?. வருகிறீர்கள். அதனால் ஒரு திட்டத்தை கொடுத்து மக்கள் நன்மை பெற்றிருந்தால் ஒரு பிரயோஜனம் உண்டு. அதைவிட்டு நேராக வருகிறர்கள். ரோட்டில் செல்கிறார்கள். அதோடு கதை முடிந்து விட்டது.

    மக்கள் ஓட்டு போட்டுவிடுவார்களா?. தமிழ்நாட்டு மக்கள் என்ன சாதாரண மக்களா?. அறிவுத்திறன் படைத்தவர்கள். எது சரி? தவறு? என எடைபோட்டு தீர்ப்பு அளிக்கக்கூடிய மக்கள் தமிழக மக்கள். இந்த ஏமாற்று வேலைகள் ஒன்றும் தமிழகத்தில் எடுபடாது என்று பேசியிருந்தார்.

    கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளரும், பா.ஜ.க. மாநில தலைவருமான அண்ணாமலை இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்துக்கு அவர் பதில் அளித்தார்.

    "கருத்துச் சொல்ல முடியாத எடப்பாடி பழனிசாமி, திராட்சைப் பழத்தை எடுக்க முடியாததால், அந்தப் பழம் புளிக்கும் என நரி சொல்வதைப் போலச் சொல்கிறார். நான் சொல்வதைத் தான் மோடியும் சொல்கிறார்.

    எடப்பாடி பழனிசாமி பழைய பஞ்சாங்கத்தையே பேசி வருகிறார். இ.பி.எஸ். ரோடு ஷோ நடத்த தயாராக இருக்கிறாரா?. அவர் ரோடு ஷோ நடத்தட்டும் எவ்வளவு கூட்டம் வருகிறது என்று பார்ப்போம். பணத்தை கொடுத்து கூட்டம் கூட்டுபவர்கள் ரோடு ஷோ நடத்தலாமே?. அதற்கு மக்கள் யாரும் வரமாட்டார்கள்.

    நாங்கள் ரோடு ஷோவை வெறும் ரோடு ஷோவாக கருதவில்லை. அதனை நாங்கள் மக்கள் தரிசன யாத்திரையாக கருதுகிறோம். எங்கள் தலைவர்கள் மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் ஆசியை பெற்று வருகின்றனர்" என்று அண்ணாமலை தெரிவித்தார்.

    இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியை நரியுடன் ஒப்பிட்டு அண்ணாமலை பேசியதற்கு திமுகவின் முன்னாள் அமைச்சர் செம்மலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சியில் பேசிய செம்மலை, "நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு பாஜகவின் நிலை நரியின் நிலைமைபோல் தான் இருக்கும். இது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. அண்ணாமலையை ஓநாய் என்றால் அதை பாஜக ஏற்றுக்கொள்ளுமா? அண்ணாமலைக்கு தான் நரி மற்றும் ஓநாயின் குணம் இருக்கிறது. தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஒன்றரை சதவீதம் தான் வாக்கு வங்கி உள்ளது. எனவே தோல்வி பயத்தால் அண்ணாமலை உளறி கொண்டு வருகிறார். இந்த மக்களவை தேர்தலில் பாஜக என்ன செய்தாலும் 5 சதவீதத்துக்கும் மேல் வாக்கு வாங்கமாட்டார்கள் என தெரிவித்தார்.

    இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அண்ணாமலையின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சியில் பேசிய ஜெயக்குமார், " அண்ணாமலை ஒரு வால் அறுந்த நரி, அரசியலில் கத்துக்குட்டி. தேர்தலில் போட்டியே திமுகவும் அதிமுகவும். அதனால் நானும் தேர்தல் போட்டியில் இருக்கிறேன் என்பதற்காக நானும் ரவுடிதான் என்ற பாணியில் அதிமுகவை அண்ணாமலை சீண்டி வருகிறார். தேசிய கட்சியை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தனியாக நின்று பாஜகவால் ஒரு எம்.எல்.ஏ சீட்டு வெல்ல முடியுமா? தமிழ்நாட்டில் பாஜகவால் காலூன்ற முடியுமா?

    பாஜகவுடன் 2019 ஆம் ஆண்டு கூட்டணி வைத்ததால் தான் அந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தது. பாஜக கூட்டணியால்தான் இதுவரை தோல்வியே காணாத நான் ராயபுரம் தொகுதியில் தோல்வியடைந்தேன்.

    ஒரு அண்ணாமலை அல்ல ஓராயிரம் அண்ணாமலை வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது. 31 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆண்ட கட்சி அதிமுக. இனிமேலும் ஆட்சி செய்ய போகிற கட்சி அதிமுக" என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.

    • பா.ஜ.க. வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
    • காரைக்குடியில் நாளை நடைபெற இருந்த ரோடு ஷோ திடீரென ரத்து செய்யப்பட்டது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் 8 நாட்களே உள்ளன. தமிழ்நாட்டில் பிரதமர் மோடி தொடர் பிரசாரம் செய்து வருகிறார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நாளை நெல்லை, கோவை மாவட்டங்களில் பிரசாரம் செய்கிறார்.

    இதற்கிடையே, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாளை தமிழ்நாட்டில் பிரசாரம் செய்ய உள்ளார்.

    மதுரைக்கு நாளை பிற்பகல் 3.05 மணிக்கு வருகை தரும் அமித்ஷா, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சிவகங்கை சென்று காரைக்குடியில் ரோடு ஷோ மூலம் பிரசாரம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

    சிவகங்கை பா.ஜ.க. வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து இந்த ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    இந்நிலையில், அமித்ஷாவின் ரோடு ஷோ நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

    சிவகங்கை பா.ஜ.க. வேட்பாளர் தேவநாதன் ரூ.525 கோடி நிதி மோசடி செய்ததாக காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளதால் அமித்ஷாவின் ரோடு ஷோ ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதேபோல், மதுரையில் 12-ம் தேதி பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து பரப்புரை செய்தபிறகு மீனாட்சியம்மன் கோயிலுக்கு செல்லும் நிகழ்வையும் ரத்து செய்துள்ளார் அமித்ஷா.

    • பெரம்பூர் மேம்பாலம் கீழ்பகுதியில் சாமுண்டீஸ்வரி என்ற பெண்ணிடம் இருந்து மர்ம நபர்கள் 2.5 சவரன் தாலி செயின் பறித்து சென்றுள்ளனர்
    • செயின் பறிப்பில் ஈடுபட்ட வழக்கில் ஹரியானாவைச் சேர்ந்த மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர

    கடந்த 7-ம் தேதி சென்னை பெரம்பூர் பகுதியில் தலைமைக் காவலர் சுரேஷ் பாபுவின் மனைவி சுபாஷினி தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு இருசக்கர வாகனம் மூலம் வீட்டிற்கு திரும்பினார். அப்போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இரண்டு பேர் அவரது கழுத்தில் இருந்த நான்கு சவரன் தாலி செயினை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

    இதுதொடர்பாக சுபாஷினி ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், மீண்டும் கடந்த 9ம் தேதி அன்று பெரம்பூர் மேம்பாலம் கீழ்பகுதியில் சாமுண்டீஸ்வரி என்ற பெண்ணிடம் இருந்து மர்ம நபர்கள் 2.5 சவரன் தாலி செயின் பறித்து சென்றுள்ளனர்.

    இந்த செயின் பறிப்பில் ஈடுபட்ட வழக்கில் ஹரியானாவைச் சேர்ந்த மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

    ஹரியானாவைச் சேர்ந்த சச்சின் குமார் (24), அங்கித் (24), அங்கித் யாதவ் (26) ஆகிய மூவரும் சுற்றுலா செல்வதாக சென்னை வந்து, இரு பைக்குகளை வாடகைக்கு எடுத்து நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளனர் என்று போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

    மேலும் இவர்களை பிடிக்க முயன்ற போது மூவரும் கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 

    • மக்கள் போலீஸ் நிலையத்திற்கே பூட்டு போட்டால் தங்கள் குறைகளை யாரிடம் தெரிவிப்பது என கூறினர்.
    • போலீஸ் நிலையத்திற்கு பூட்டு போட்ட சம்பவம் சமூக வளைதலங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி போலீஸ் சரகத்திற்கு உள்பட்ட ஏத்தகோவில் போலீஸ் நிலையம் மாவட்டத்தின் கடைசி எல்லையில் அமைந்துள்ளது. இதற்கு அடுத்து கரடு பகுதியை கடந்தால் ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர் நகரங்களை அடையலாம்.

    இந்த போலீஸ் நிலையத்தில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 3 போலீசார் பணியில் உள்ளனர். தேனி மாவட்டத்தின் பெரும்பாலான போலீஸ் நிலையங்களில் காவலர்கள் பற்றாக்குறை காரணமாக ஒருசிலர் மட்டுமே பணியில் இருப்பது வாடிக்கையாக உள்ளது.

    இந்நிலையில் நேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்திற்காக தேனி வருகை தந்தார். இதனையொட்டி பாதுகாப்பு பணிக்காக பெரும்பாலான போலீஸ் நிலையங்களில் போலீசார் அங்கு சென்றுவிட்டனர். இதேபோல் ஏத்தகோவில் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் அனைத்து போலீசாரும் அங்கு சென்றுவிட்டதால் போலீஸ் நிலையத்திற்கு பூட்டு போட்டனர்.

    இதைபார்த்த அப்பகுதி மக்கள் போலீஸ் நிலையத்திற்கே பூட்டு போட்டால் தங்கள் குறைகளை யாரிடம் தெரிவிப்பது என கூறினர். மேலும் போலீஸ் நிலையத்திற்கு பூட்டு போட்ட சம்பவம் சமூக வளைதலங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

    • இரண்டாம் உலகப்போரின்போது அங்கு உயிர்நீத்த தமிழர்களுக்கு “நடுகல்” அமைத்திட 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.
    • முதலமைச்சரிடம், தாய்லாந்து காஞ்சனபுரியில் நடைபெற இருக்கும் “நடுகல்” திறப்பு விழாவில் பங்கேற்றுச் சிறப்பிக்குமாறு அழைப்பிதழ் வழங்கி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    சென்னை:

    1939 முதல் 1945 வரை இரண்டாம் உலகப்போர் நடைபெற்றது. அப்போது, ஜப்பானிய ராணுவத்திடம் போர்க் கைதிகளாக இருந்தவர்கள், மலேசியா, இந்தோனேசியா, பர்மா நாடுகளிலிருந்து கட்டாயப்படுத்தி ஆங்கிலேயர்களால் அழைத்துச் செல்லப்பட்டவர்களில், தாய்லாந்து நாட்டினைப் பர்மா நாட்டுடன் இணைக்கும் ரெயில் பாதையின் கட்டுமானப் பணிகளில் ஏறத்தாழ 1.50 லட்சம் தமிழர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இப்பணியின்போது வேலைச்சுமை, போதிய உணவு கிடைக்காமை, நோய் முதலிய காரணங்களால் ஏறத்தாழ 70 ஆயிரம் தமி ழர்கள் இறந்துள்ளனர்.

    இந்நிலையில் தாய்லாந்து நாட்டின் காஞ்சனாபுரியில் உள்ள தவாவோர்ன் என்ற புத்தர் கோவில் வளாகத்தில் இக்கட்டுமானப் பணியில் ஈடுபட்டு உயிரிழந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களின் உடல்கள் மொத்தமாகப் புதைக்கப்பட்ட இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

    அங்குப் புதைக்கப்பட்டவர்கள் அனைவரும் தமிழர்கள் என்பது அங்குக் கண்டெடுக்கப்பட்டுள்ள எலும்புக்கூடுகள் மூலமும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    எந்தவிதமான அங்கீகாரமும் இன்றி அங்குப் புதைக்கப்பட்ட தமிழர்களுக்கு மரியாதை செய்யும் பொருட்டு – தமிழ்ச் சமுதாய மரபுப்படி "நடுகல்" அமைத்திட தாய்லாந்து நாட்டுத் தமிழ்ச் சங்கம் முடிவு செய்துள்ளது. இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவிக்கப்பட்டது.

    அயலகத் தமிழர் நலத்துறையின் சார்பில் கடந்த 12.1.2024 அன்று சென்னையில் கொண்டாடப்பட்ட அயலகத் தமிழர் தின விழாவில் அயல்நாடுகளிலிருந்து வருகைபுரிந்த தமிழர்களுக்கு பாராட்டுகளும், பரிசுகளும் வழங்கிப் பெருமைப்படுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தாய்லாய்ந்து தமிழ்ச் சங்கத்தினர் விடுத்த கோரிக்கையினை ஏற்று, இரண்டாம் உலகப்போரின்போது அங்கு உயிர்நீத்த தமிழர்களுக்கு "நடுகல்" அமைத்திட 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.

    இதனைத் தொடர்ந்து, தாய்லாந்து நாட்டில் இருந்து வருகைபுரிந்துள்ள தாய் லாந்து தமிழ்ச் சங்கத்தின் தலைவர் ரமேஷ் தர்மராஜன், துணைத்தலைவர் ரமணன், ஒருங்கிணைப்பாளர் சுந்தர குமார், செய்தி தொடர்பாளர் மகேந்திரன் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (புதன் கிழமை) நேரில் சந்தித்து, தாய்லாந்தில் உயிரிழந்த தமிழர்களுக்கு "நடுகல்" அமைத்திட வழங்கிய நிதியுதவிக்காக நன்றி தெரிவித்தனர்.

    மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அயல்நாடுகளில் வாழும் தமிழர்களின் நலனைப் பாதுகாத்திட அயலகத் தமிழர் நலத்துறை ஒன்றை உருவாக்கி, உலகத் தமிழர்களுக்குப் பாதுகாப்பு அரணாகத் திகழ்வதற்காக தாய்லாந்து நாட்டின் சார்பில் நன்றியுடன் பாராட்டுவதாகவும் தெரிவித்தனர்.

    இந்தச் சந்திப்பின்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், தாய்லாந்து காஞ்சனபுரியில் 1.5.2024 அன்று நடைபெற இருக்கும் "நடுகல்" திறப்பு விழாவில் பங்கேற்றுச் சிறப்பிக்குமாறு அழைப்பிதழ் வழங்கி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    தற்போது தேர்தல் நடைபெற்று வரும் பரபரப்பான சூழ்நிலையிலும், எங்களை வரவேற்று, அன்புடன் எங்களுடைய உணர்வுகளைப் பகிர்ந்து கொண்ட உலகத் தமிழர்களின் நலன் காக்கும் முதலமைச்சரை என்றும் நினைவில் வைத்து நன்றியுடன் போற்றிக் கொண்டாடுவோம் என்று தாய்லாந்து தமிழ்ச் சங்க நிர்வாகிகள் மகிழ்ச்சியுடனும், பெருமிதத்துடனும் குறிப்பிட்டு நெகிழ்ந்தனர்.

    • 50 கிலோ அளவிலான 452 மூட்டைகளில் 22 ஆயிரத்து 600 கிலோ ரேசன் அரிசி கடத்த முயன்றது தெரிந்தது.
    • அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

    தருமபுரி:

    உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் காவேரிப்பட்டணம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சேலம்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வந்த மினி லாரியை மடக்கி சோதனையிட்டனர்.

    அதில், 50 கிலோ அளவிலான 452 மூட்டைகளில் 22 ஆயிரத்து 600 கிலோ ரேசன் அரிசி கடத்த முயன்றது தெரிந்தது. அதை தொடர்ந்து லாரிக்கு பாதுகாப்பாக கார் வந்ததும் தெரிந்தது. இதையடுத்து லாரி, கார்களில் இருந்த விருதுநகர் மாவட்டம், வெள்ளியம்பலத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 48), தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை சேர்ந்த சேட்டு (28), ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த சுதாகர் (34), கர்நாடக மாநிலம் பங்காருபேட்டை நாகராஜ் (58), சேலம் மாவட்டம், ஓமலூர் ராமச்சந்திரன் (28) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் ரேசன் அரிசியை வாங்கி, கர்நாடக மாநிலத்தில் அதிக விலைக்கு விற்பதற்காக கொண்டு சென்றது தெரிந்தது. அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் ரேசன் அரிசி, லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

    • கண்காணிப்பு குழுவினர் 28 மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.
    • பறிமுதல் செய்யப்பட்ட புதிய ஆடைகளை கடலூர் தாசில்தார் அலுவலகத்தில் வைத்தனர்.

    கடலூர்:

    பாராளுமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 19-ந்தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழு சார்பில் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கடலூர் மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரி ஆனந்தி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி சரக்கு வாகனம் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்தபோது பல்வேறு மூட்டைகள் இருந்தன. இதில் சந்தேகம் அடைந்த கண்காணிப்பு குழுவினர் அதனை பிரித்து பார்த்தபோது புதிய ஆடைகள் இருந்தது தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து டிரைவரிடம் ஆடைகள் கொண்டு செல்வதற்கு உரிய ஆவணம் உள்ளதா? என கேட்டனர். அப்போது ஆவணம் இல்லாததால் உடனடியாக கண்காணிப்பு குழுவினர் 28 மூட்டைகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 8 லட்சமாகும்.

    பறிமுதல் செய்யப்பட்ட புதிய ஆடைகளை கடலூர் தாசில்தார் அலுவலகத்தில் வைத்தனர். இதனை வருவாய் கோட்டாட்சியர் அபிநயா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தாசில்தார் பலராமன் உடன் இருந்தார்.

    • அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    12.04.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    13.04.2024: தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    14.04.2023 முதல் 16.04.2024 வரை; தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    17.04.2024: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    இன்று முதல் வருகிற 15-ந்தேதி வரை: அடுத்த ஐந்து தினங்களில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.

    இன்று அதிகபட்ச வெப்பநிலை வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் 2°- 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 37°-40° செல்சியஸ் மற்றும் கடலோரப்பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் 33°-37° செல்சியஸ் இருக்கக்கூடும்

    ஈரப்பதம்:

    இன்று காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-70 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80 % ஆகவும் இருக்கக்கூடும்.

    அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    ×