search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இரண்டாம் உலகப்போரில் உயிர்நீத்த தமிழர்களுக்கு நடுகல்: திறப்பு விழாவிற்கு முதல்வருக்கு அழைப்பு
    X

    இரண்டாம் உலகப்போரில் உயிர்நீத்த தமிழர்களுக்கு நடுகல்: திறப்பு விழாவிற்கு முதல்வருக்கு அழைப்பு

    • இரண்டாம் உலகப்போரின்போது அங்கு உயிர்நீத்த தமிழர்களுக்கு “நடுகல்” அமைத்திட 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.
    • முதலமைச்சரிடம், தாய்லாந்து காஞ்சனபுரியில் நடைபெற இருக்கும் “நடுகல்” திறப்பு விழாவில் பங்கேற்றுச் சிறப்பிக்குமாறு அழைப்பிதழ் வழங்கி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    சென்னை:

    1939 முதல் 1945 வரை இரண்டாம் உலகப்போர் நடைபெற்றது. அப்போது, ஜப்பானிய ராணுவத்திடம் போர்க் கைதிகளாக இருந்தவர்கள், மலேசியா, இந்தோனேசியா, பர்மா நாடுகளிலிருந்து கட்டாயப்படுத்தி ஆங்கிலேயர்களால் அழைத்துச் செல்லப்பட்டவர்களில், தாய்லாந்து நாட்டினைப் பர்மா நாட்டுடன் இணைக்கும் ரெயில் பாதையின் கட்டுமானப் பணிகளில் ஏறத்தாழ 1.50 லட்சம் தமிழர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இப்பணியின்போது வேலைச்சுமை, போதிய உணவு கிடைக்காமை, நோய் முதலிய காரணங்களால் ஏறத்தாழ 70 ஆயிரம் தமி ழர்கள் இறந்துள்ளனர்.

    இந்நிலையில் தாய்லாந்து நாட்டின் காஞ்சனாபுரியில் உள்ள தவாவோர்ன் என்ற புத்தர் கோவில் வளாகத்தில் இக்கட்டுமானப் பணியில் ஈடுபட்டு உயிரிழந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களின் உடல்கள் மொத்தமாகப் புதைக்கப்பட்ட இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

    அங்குப் புதைக்கப்பட்டவர்கள் அனைவரும் தமிழர்கள் என்பது அங்குக் கண்டெடுக்கப்பட்டுள்ள எலும்புக்கூடுகள் மூலமும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    எந்தவிதமான அங்கீகாரமும் இன்றி அங்குப் புதைக்கப்பட்ட தமிழர்களுக்கு மரியாதை செய்யும் பொருட்டு – தமிழ்ச் சமுதாய மரபுப்படி "நடுகல்" அமைத்திட தாய்லாந்து நாட்டுத் தமிழ்ச் சங்கம் முடிவு செய்துள்ளது. இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவிக்கப்பட்டது.

    அயலகத் தமிழர் நலத்துறையின் சார்பில் கடந்த 12.1.2024 அன்று சென்னையில் கொண்டாடப்பட்ட அயலகத் தமிழர் தின விழாவில் அயல்நாடுகளிலிருந்து வருகைபுரிந்த தமிழர்களுக்கு பாராட்டுகளும், பரிசுகளும் வழங்கிப் பெருமைப்படுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தாய்லாய்ந்து தமிழ்ச் சங்கத்தினர் விடுத்த கோரிக்கையினை ஏற்று, இரண்டாம் உலகப்போரின்போது அங்கு உயிர்நீத்த தமிழர்களுக்கு "நடுகல்" அமைத்திட 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.

    இதனைத் தொடர்ந்து, தாய்லாந்து நாட்டில் இருந்து வருகைபுரிந்துள்ள தாய் லாந்து தமிழ்ச் சங்கத்தின் தலைவர் ரமேஷ் தர்மராஜன், துணைத்தலைவர் ரமணன், ஒருங்கிணைப்பாளர் சுந்தர குமார், செய்தி தொடர்பாளர் மகேந்திரன் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (புதன் கிழமை) நேரில் சந்தித்து, தாய்லாந்தில் உயிரிழந்த தமிழர்களுக்கு "நடுகல்" அமைத்திட வழங்கிய நிதியுதவிக்காக நன்றி தெரிவித்தனர்.

    மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அயல்நாடுகளில் வாழும் தமிழர்களின் நலனைப் பாதுகாத்திட அயலகத் தமிழர் நலத்துறை ஒன்றை உருவாக்கி, உலகத் தமிழர்களுக்குப் பாதுகாப்பு அரணாகத் திகழ்வதற்காக தாய்லாந்து நாட்டின் சார்பில் நன்றியுடன் பாராட்டுவதாகவும் தெரிவித்தனர்.

    இந்தச் சந்திப்பின்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், தாய்லாந்து காஞ்சனபுரியில் 1.5.2024 அன்று நடைபெற இருக்கும் "நடுகல்" திறப்பு விழாவில் பங்கேற்றுச் சிறப்பிக்குமாறு அழைப்பிதழ் வழங்கி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    தற்போது தேர்தல் நடைபெற்று வரும் பரபரப்பான சூழ்நிலையிலும், எங்களை வரவேற்று, அன்புடன் எங்களுடைய உணர்வுகளைப் பகிர்ந்து கொண்ட உலகத் தமிழர்களின் நலன் காக்கும் முதலமைச்சரை என்றும் நினைவில் வைத்து நன்றியுடன் போற்றிக் கொண்டாடுவோம் என்று தாய்லாந்து தமிழ்ச் சங்க நிர்வாகிகள் மகிழ்ச்சியுடனும், பெருமிதத்துடனும் குறிப்பிட்டு நெகிழ்ந்தனர்.

    Next Story
    ×