என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சித்திரை திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • மாசி வீதிகளில் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.

    மதுரை:

    உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி-சுந்த ரேசுவரர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாக்கா லங்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் மீனாட்சி அம்மன், பிரியா விடை-சுந்தரேசுவரர் மதுரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். வீதி உலாவின் போது சிறுவர், சிறுமிகள் கடவுள் வேடமணிந்து கோலாட்டம் அடித்தபடி செல்வது பொதுமக்களை பரவசம் அடையச் செய்கிறது.

    மீனாட்சி அம்மன் பட்டா பிஷேகம், திக்கு விஜயம் போன்ற வைபவங்களை தொடர்ந்து 10-ம் திருநா ளான நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவை காண ஏராளமானோர் திரண்டனர். மீனாட்சி அம்ம னுக்கு மங்கலநாண் அணி விக்கப்பட்டதும் அங்கு கூடி யிருந்த பெண்கள் தங்களது தாலியை புதுப்பித்துக் கொண்டனர்.

    தொடர்ந்து அன்னதானம், திருக்கல்யாண விருந்து, மொய் செலுத்துதல் போன் றவையும் நடைபெற்றன. சித்திரை திருவிழாவின் மற்றொரு முத்தாய்ப்பு நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக 2 தேர்களும் மலர் மாலைக ளால் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தன.

    இன்று அதிகாலை 4 முதல் 4.30 மணிக்கு மீனாட்சி அம்மன், பிரியா விடை-சுந்தரேசுவரர் ஆகியோர் முத்தம்பல முதலியார் கட்டளை மண்டகப்படி, ராமநாதபுரம் சேதுபதி மகா ராஜா மண்டகப்படிக்கு எழுந்தருளினர். அங்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து ஒரே பல்லக்கில் மீனாட்சி அம்மன், பிரியாவிடை-சுந்தரேசுவரர் கீழமாசி வீதியில் உள்ள தேரடிக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு தீபாராதனைகள் நடத்தப்பட்டன.

    அதன்பிறகு பிரியாவிடை-சுந்தரேசுவரர் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர். அப்போது பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பினர். தேரோட்டம் தொடங்குவதற்கு முன்பு அங்குள்ள கருப்பண சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து பஞ்ச வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். காலை 5.15 மணிக்கு மேல் 5.40 மணிக்குள் மேஷ லக்கனத்தில் ரதாரோஹணம் நடைபெற்று காலை 6.30 மணிக்கு முதலில் சுவாமி தேரையும், தொடர்ந்து அம்மன் தேரையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

     தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து சுவாமி-அம்மன் தேரை இழுத்துச் சென்றனர். 4 மாசி வீதிகளிலும் தேர்கள் அசைந்தாடி செல்வதை பொதுமக்கள் சாலையின் இருபுறமும் உள்ள உயர்ந்த கட்டிடங்களில் நின்றும் தரிசனம் செய்தனர். தேருக்கு முன்பாக பக்தர்கள் மீனாட்சி-சுந்தரேசுவரர் பதிகம் பாடிச் சென்றனர். சுவாமி-அம்மன் தேருக்கு முன்பு அலங்கரிக்கப்பட்ட யானை அழைத்துச் செல்லப்பட்டது.

    அதன்பிறகு விநாயகர், முருகன், நாயன்மார்கள் தனித்தனி சிறிய சப்பரங்களில் சென்றனர். பகல் 11.30 மணியளவில் மாசி வீதிகளை வலம் வந்த தேர்கள் நிலையை வந்தடைந்தன. அதன் பிறகு சண்டிகேஸ்வரர் வீதி உலா நடைபெற்றது.

     தேரோட்ட விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றதை கருத்தில் கொண்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வெளி மாவட்டங்களில் இருந்தும் கூடுதலாக போலீ சார் வரவழைக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற் கொண்டனர்.

    திருவிழாவை காணவரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது. மக்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய வசதியாக போக்குவரத்தில் போலீசார் மாற்றங்கள் செய்து அதனை செயல்ப டுத்தினர்.

    தேரோட்டத்தை தொடர்ந்து இன்று மாலையில் மீனாட்சி அம்மன், பிரியாவிடை-சுந்தரேசுவரர் சப்தாவர்ண சப்பரத் தில் மாசி வீதிகளை வலம் வருகின்றனர். நாளை (22-ந்தேதி) உச்சிகங காலத்தில் பொற்றாமரை குளத்தில் தீர்த்த திருவிழா நடக்கிறது. இரவு 10.15 மணிக்கு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியும், பவளக்கனிவாய் பெருமாளும் 16 கால் மண்டபத்தில் இருந்து விடை பெற்றுச் செல்கின்றனர். இந்த நிகழ்ச்சியோடு மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

    • மதுரை நோக்கி புறப்பட்டுள்ளார் சுந்தர்ராஜ பெருமாள்.
    • மண்டகப்படிகளில் எழுந்தருளி அருள் செய்தார் கள்ளழகர்.

    மதுரை:

    மதுரைக்கு வடக்கே 21 கிலோ மீட்டர் தொலைவில் அழகர் கோவிலில் இயற்கை எழிலுடன், வற்றாத நூபுரகங்கையுடன் அமைந்துள்ளது பிரசித்திபெற்ற கள்ளழகர் கோவில். இந்த கோவிலில் நடைபெறும் சித்திரை திருவிழா தனி பெருமையுடையதாகும். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழாவானது கடந்த 19-ந்தேதி தொடங்கியது.

    3-ம் நாள் விழாவான நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலையில், அலங்கரிக்கப்பட்ட தங்கப்பல்லக்கில் கள்ளழகர் கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் நேரிக்கம்பு ஏந்தி எழுந்தருளினார். வேத மந்திரங்கள் முழங்க தீபாராதனை நடந்தது. தொடர்ந்து வெளிபிரகாரங்கள் வழியாக மேளதாளம் முழங்க வர்ணக்குடை, தீவட்டி, பரிவாரங்கள், மற்றும் கல்யாணசுந்தரவல்லி யானை முன் செல்ல அழகர் புறப்பாடு நடந்து, 18-ம்படி கருப்பணசுவாமி கோவிலை அடைந்தது.

    அங்கிருந்து மாலை 6.10 மணிக்கு அதிர்வேட்டுகள் முழங்க தங்கப்பல்லக்கில் கள்ளழகர் மதுரை நோக்கி புறப்பட்டார். அப்போது கோவிந்தா, கோவிந்தா என முழங்கிய பக்தர்கள் கள்ளழகரை புடை சூழ்ந்து வந்தனர். முன்னதாக தானியங்களையும், பணமுடிப்புகளையும் காணிக்கையாக செலுத்தினர்.

    பொய்கைக்கரைபட்டி, கள்ளந்தரி, அப்பன் திருப்பதி உள்பட பல்வேறு ஊர்களில் மண்டபங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மொத்தம் 483 மண்டபங்களில் அழகர் எழுந்தருள்கிறார்.

    இந்த நிலையில், அழகர் மலையில் இருந்து புறப்பட்ட கள்ளழகர், இன்று காலையில் மதுரை மாநகருக்குள் வந்தடைந்தார். மாநகரின் எல்லையான மூன்று மாவடி பகுதியில் 'கோவிந்தா' கோஷம் முழங்க எதிர்சேவை செய்து கள்ளழகரை திரளான பக்தர்கள் வரவேற்றனர்.

    நாளை (செவ்வாய்க்கிழமை) சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியாக அதிகாலையில் மதுரை வைகை ஆற்றில் தங்கக்குதிரையில் வீற்றிருந்து கள்ளழகர் இறங்குகிறார். இதைக்காண மதுரை உள்பட தென்மாவட்டங்களில் இருந்தும், பிறமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து குவிவார்கள்.

    விழாவில் 24-ந்தேதி மண்டூக முனிவருக்கு சாபம் தீர்க்கும் நிகழ்ச்சியும் அன்று இரவு தசாவதார காட்சியும், 26-ந் தேதி அதிகாலை பூப்பல்லக்கு விழாவும் நடைபெற உள்ளன.

    • திருத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
    • நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    திருச்சி:

    மலைக்கோட்டை தாயுமானவ சாமி கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 14--ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

     அன்று முதல் ஒவ்வொரு நாளும் சுவாமி அம்பாளுக்கு பகலில் சிறப்பு அபிஷே கமும், இரவில் சிறப்பு அலங்காரத்துடன் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடைபெற்று வருகிறது. இதில் 5-ம் நாள் அன்று சிவபக்தியில் சிறந்த செட்டிப் பெண் ரத்தினா வதிக்கு அவளது பேறுகா லத்தில் தாய் வர முடியாத காரணத்தால், அவளது தாயாக சிவபெருமான் வந்து பேறுகாலத்தில் மருத்துவம் பார்த்த ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது.

     6-ம் நாள் நிகழ்ச்சியாக சுவாமி-அம்பாளுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து 9-ம் நாளான இன்று அதிகாலை 4.30 மணிக்கு மேல் மேஷ லக்கனத்தில் சுவாமி-அம்பாள் கோவி லில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடு செய்யப்பட்டு மலைக்கோட்டை உள் வீதி வழியாக 5.40 மணிக்கு தாயுமானவ சாமி உடனுறை மட்டுவார் குழலம்மை பெரிய தேரிலும், தாயார் சிறிய தேரிலும் எழுந்தருளினர். பின்னர் 6.10 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடை பெற்றது.

     இந்த தேரோட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் புறப்பாடு சிறிய சப்பரத்தில் முன்னே செல்ல, அதை தொடர்ந்து கோவில் யானை லட்சுமியும் செல்ல, பெரிய தேரையும், சிறிய தேரையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

    இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட னர். பல்வேறு வகையான மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் வெகு விமரிசையாக தேரோட்டம் நடைபெற்றது.

    இந்த சித்திரை திருவிழாவில் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி யில் ஆரவா ரத்துடன் கலந்து கொண்டு சிவ சிவா, தாயுமான ஈசா, ஆரூரா என்ற கோஷங்களை எழுப்பினர். மேலும் தேர் செல்லும் பாதைகளில் ஆங்காங்கே பக்தர்களுக்கு பாலும், குளிர்பானங்களும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

    • விசாரணைக் கைதி சாந்தகுமார் என்பவர் காவல்நிலையத்தில் உயிரிழப்பு.
    • விசாரணையின்போது, கைதி சாந்தகுமார் உயிரிழக்கவில்லை என போலீசார் அறிவிப்பு.

    திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டையில் காவல்துறை விசாரணைக் கைதி சாந்தகுமார் என்பவர் காவல்நிலையத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

    பிரேத பரிசோதனையில் அவர் உடம்பில் ரத்தக்கட்டு, வீக்கம் உள்ளிட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

    இந்நிலையில், விசாரணை கைதி மரணம் தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

    அதன்படி, செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் விசாரணையின்போது, கைதி சாந்தகுமார் உயிரிழக்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    நெஞ்சுவலி என்று கூறிய சாந்தகுமாரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர் அறிவித்தார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து காவல்துறை மேலும் கூறியதாவது:-

    பிபிஜி சங்கர் கொலையில் முக்கிய குற்றவாளியான சாந்தகுமார், கடந்த 13ம் தேதி புட்லூர் பகுதியில் கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டார்.

    அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மற்றொரு குற்றச்செயல் புரிய அவர்கள் சதித்திட்டம் தீட்டியது தெரியவந்தது.

    சாந்தகுமாரின் இறப்பின் மீது சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டு திருவள்ளூர் குற்றவியல் நடுவர் விசாரணை நடத்தி வருகிறார்.

    சாந்தகுமாரின் மரணம் குறித்த விசாரணை நியாயமாக நடைபெற வேண்டி சாந்தகுமாரை விசாரித்த காவல் ஆய்வாளர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில், சாந்தகுமாருக்கு இதயத்தில் ரத்த குழாய் அடைப்பு உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

    கைதி சாந்தகுமாரின் இறப்பிற்கான காரணம் பிரேத பரிசோதனையின் இறுதி அறிக்கையில் தான் தெரிய வரும்.

    சாந்தகுமாரின் இறுதிச்சடங்குக்காக அவரது மனைவி மற்றும் உறவினர்கள், சாந்தகுமார் உடலை ஸ்ரீபெரும்புதூர் கொண்டு சென்றனர்.

    இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    • மொத்தம் 483 மண்டகப்படிகளில் எழுந்தருளுகிறார்.
    • வைகையில் கூடும் லட்சக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை தரிசனம் செய்வார்கள்.

    மதுரை அருகே உள்ள அழகர் கோவில் சித்திரை திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்வாக, நாளை மறுநாள் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதற்காக இன்று மாலையில் அழகர் மலையில் இருந்து மதுரை நோக்கி புறப்பட்டார்.

    பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோவில் முன்பு வையாழி ஆகி தங்கப்பல்லக்கில் புறப்பட்ட கள்ளழகர், வழியில் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளுகிறார். மொத்தம் 483 மண்டகப்படிகளில் எழுந்தருளுகிறார். நாளை அதிகாலையில் மதுரை புதூர் மூன்றுமாவடியில் கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நடக்கிறது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, நாளை மறுதினம் (23-ந்தேதி) காலை 5.51 மணியில் இருந்து 6.10 மணிக்குள் வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருள்கிறார். அப்போது அங்கு கூடியிருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை தரிசனம் செய்வார்கள்.

    மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. தங்கை மீனாட்சியின் திருமணத்தைக் காண அழகர் மலையிலிருந்து ஆவலாய் புறப்பட்டு வரும் கள்ளழகர், தங்கையின் திருமணம் முடிந்ததால் ஆற்றில் நீராடிவிட்டு, தங்கையை காணாமலேயே திரும்புவதாக ஐதீகம்.

    இதேபோல், வைகைக் கரையில் தவம் செய்துகொண்டிருந்த மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் கொடுப்பதற்காக அழகர், மதுரைக்கு வந்து வைகையில் இறங்கியதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

    அழகர் எந்த நிறத்தில் பட்டுப்புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் நல்லது, கெட்டது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பச்சைப்பட்டு கட்டி வந்தால் நாடு செழிப்பாக இருக்கும். சிவப்பு பட்டு கட்டிவந்தால் அந்த வருடம் போதிய விளைச்சலுமிருக்காது. நாட்டில் அமைதி இருக்காது. மஞ்சள் பட்டு கட்டி வந்தால், அந்த வருடத்தில் மங்களகரமான நிகழ்வுகள் நடக்கும். எனவே, அழகர் எந்த நிறத்தில் பட்டு உடுத்தி வரப்போகிறார்? என்பதை பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பது வழக்கம்.

    • காயமடைந்த டிரைவர் உள்பட 3 பேருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • பஸ்சில் புகுந்து டிரைவரை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கும்பகோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக பஸ் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி நேற்று இரவு வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை திருவாய்ப்பாடியை சேர்ந்த ரமேஷ் (வயது 45) என்பவர் ஓட்டி வந்தார். பஸ்சில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

    இந்த பஸ் கும்பகோணம் பாலக்கரை அருகே வந்து கொண்டிருந்த போது பஸ்சுக்கு முன்பு சிலர் தகராறில் ஈடுபட்டிருந்தனர். இதனை கண்ட டிரைவர் பஸ்சை நிறுத்தினார். அப்போது திடீரென பஸ்சை ஏன் நிறுத்தி இருக்கிறாய்? எனக்கூறி 8 பேர் கொண்ட மர்ம கும்பல் பஸ்சின் உள்ளே சென்று டிரைவர் ரமேஷை சரமாரியாக தாக்கினர். இதில் ரமேஷின் மூக்கு, கண், முகம் ஆகியவற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை கண்ட பயணிகள் அலறி அடித்துக்கொண்டு பஸ்சை விட்டு வெளியே ஓடினர்.

    அந்த கும்பல் டிரைவரை எட்டி உதைத்து கீழே தள்ளியதுடன், மேலும், 2 பேரையும் தாக்கினர். வலி தாங்காமல் டிரைவர் கூச்சலிடுவதை கண்ட அக்கம் பக்கத்தினர் டிரைவரை மீட்க சென்றனர். அப்போது 2 பேர் பொதுமக்களிடம் சிக்கினர்.

    தகவல் அறிந்து வந்த கும்பகோணம் நகர கிழக்கு போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் கும்பகோணம் பாலக்கரை பகுதியை சேர்ந்த சுதர்சன், ஜனார்த்தனன் என்பது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரின் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

    காயமடைந்த டிரைவர் உள்பட 3 பேருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தப்பி ஓடிய மேலும் 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பஸ்சில் புகுந்து டிரைவரை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகளில் ஏரி மற்றும் கடலில் சுழற்சி முறையில் மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர்.
    • திடீரென தீப்பற்றி எரிந்த மீன்பிடி பொருட்களால் அப்பகுதியில் மீனவர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த பழவேற்காடு ஏரி இந்தியாவின் மிகப்பெரிய 2-வது உவர்ப்பு நீர் ஏரியாகும். ஏரியை சுற்றிலும் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ள நிலையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகளில் ஏரி மற்றும் கடலில் சுழற்சி முறையில் மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர்.

    கோட்டைக்குப்பம் பகுதி மீனவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கன்னியம்மன் திட்டில் மீன்பிடி உபகரணங்கள், வலைகள், பிளாஸ்டிக்

    தடுப்பு, கம்பு, இறால் வலை ஆகியவற்றை பாதுகாப்பாக வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றனர்.

    இந்த நிலையில் நள்ளிரவு 1 மணி அளவில் மீன்பிடி வலைகள் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து அருகில் உள்ளவர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் அங்கு விரைந்தனர். அவர்கள் ஏரி தண்ணீர் மற்றும் மணலை கொண்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீயில் எரிந்து கருகி நாசமான பொருட்களின் மதிப்பு ரூ.15 லட்சத்திற்கும் மேல் இருப்பதாக திருப்பாலைவனம் போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகள் யாராவது தீ வைத்தார்களா அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரித்து வருகின்றனர். திடீரென தீப்பற்றி எரிந்த மீன்பிடி பொருட்களால் அப்பகுதியில் மீனவர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா பாலையம்பட்டி ஈ.பி. காலனியை சேர்ந்தவர் காளிராஜ் (வயது 45).

    இவர் நெல்லை சந்திப்பு பாபுஜி நகர் காட்டுப்பகுதியில் நேற்று மாலையில் பலத்த வெட்டுக் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து நெல்லை சந்திப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். தகவல் அறிந்து மாநகர துணை போலீஸ் கமிஷனர் கீதா, சந்திப்பு உதவி கமிஷனர் வெங்கடேசன் உள்ளிட்டவர்களும் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து காளிராஜை கொலை செய்த கும்பல் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

    சம்பவம் நடந்த இடத்தில் காளிராஜிக்கு சொந்தமான கார் நின்றது. அந்த காரை திறந்து பார்த்தபோது சில நில பத்திரங்கள், ஆதார் அட்டையின் நகல்கள், புகைப்படங்கள் உள்ளிட்டவை இருந்தது. அதன் மூலம் நடத்திய விசாரணையில் அவரது மனைவி வளர்மதியின் தொடர்பு எண் கிடைத்தது.

    அதன் மூலமாக அவரிடம் செல்போனில் நடத்திய விசாரணையில், காளிராஜ் மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் நிலங்களை வாங்கி விற்பனை செய்து வந்த ரியல் எஸ்டேட் அதிபர் என்பதும், சம்பவத்தன்று நிலம் வாங்கி விற்பனை செய்வதற்காக நெல்லையில் ஒருவர் அழைத்ததாகவும் அதன் பேரில் அங்கு வந்ததாகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து காளிராஜை கொலை செய்த கும்பல் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? நிலம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் இந்த கொலை நடந்ததா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களிலும் கொலை கும்பல் உருவங்கள் தெளிவாக தெரியவில்லை.

    இதனால் உதவி போலீஸ் கமிஷனர்கள் செந்தில் குமார், வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு காளிராஜை கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

    கொலை செய்யப்பட்ட காளிராஜ் மீது நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு மற்றும் நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    • குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட திமுகவினரை இன்னும் இந்த திமுக அரசு கைது செய்ததாகத் தெரியவில்லை.
    • உடனடியாக குற்றச் செயலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    கடலூர் மாவட்டம் ஶ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த கோமதி என்பவர், வாக்குப்பதிவு நாளன்று, குடும்பத்தினர் கண்முன்னே திமுகவினரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

    தேர்தலில், தங்கள் கூட்டணிக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக, திமுகவினர் இந்தப் பாதகச் செயலை செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட திமுகவினரை இன்னும் இந்த திமுக அரசு கைது செய்ததாகத் தெரியவில்லை.

    அரசியலமைப்புச் சட்டம், குடிமக்களுக்கு வழங்கியிருக்கும் அடிப்படை உரிமையான வாக்களிக்கும் உரிமையைக் கூட, தங்கள் விருப்பப்படிதான் நடத்த வேண்டும் என்ற திமுகவின் சர்வாதிகாரப் போக்கு, ஜனநாயகத்துக்கு மிகுந்த ஆபத்தானது.

    இந்தியாவைக் காப்பாற்றப் போவதாகக் கனவு கண்டு கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், முதலில் தனது கட்சிக்காரர்களிடம் இருந்து தமிழக மக்களைக் காப்பாற்றும் வேலையைப் பார்க்க வேண்டும். உடனடியாக, இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து, கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அண்ணாமலை அந்த பதிவில் கூறியுள்ளார்.

    • துபாயில் மழை ஓய்ந்ததால் வெள்ளம் வடிந்தது.
    • விமான நிலையத்தில் ஓடு பாதைகள் சரி செய்யப்பட்டு விமான போக்குவரத்துக்கு தயாரானது.

    சென்னை:

    துபாயில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கனமழை பெய்ததால் துபாய் நகரம் வெள்ளத்தில் சிக்கி தவித்தது. வரலாறு காணாத மழை காரணமாக துபாய் விமான நிலையம் பாதிப்புக்குள்ளானது. விமான ஓடுதளங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து சென்னையில் இருந்து துபாய்க்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டது.

    இந்த நிலையில் துபாயில் மழை ஓய்ந்ததால் வெள்ளம் வடிந்தது. இதையடுத்து விமான நிலையத்தில் ஓடு பாதைகள் சரி செய்யப்பட்டு விமான போக்குவரத்துக்கு தயாரானது. அதன் பிறகு துபாய்க்கு விமான போக்குவரத்து தொடங்கியது.

    சென்னையில் இருந்து துபாய்க்கு இன்று விமான போக்குவரத்து தொடங்கியது. சென்னையில் இருந்து இன்று காலை துபாய்க்கு விமானம் புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் 267 பயணிகள் பயணம் செய்தனர்.

    • தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்த காரணத்தால் அது எந்த கட்சிக்கு சாதகமாக அமையும்.
    • எந்த கட்சியின் வெற்றியை பாதிக்கும் என்று அரசியல் கட்சியினர் கணக்கு போட தொடங்கி விட்டனர்.

    சென்னை:

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 34 தொகுதிகளில் பதிவான வாக்கு சதவீதம் வெகுவாக குறைந்து விட்டது தற்போது விவாதமாகி வருகிறது.

    என்ன காரணத்தால் மக்கள் ஓட்டு போட வரவில்லை? வெயில் அதிகமாக இருந்ததால் ஓட்டு போட வரவில்லையா? அல்லது யார் ஜெயித்தால் நமக்கென்ன என்ற அலட்சியமா? அல்லது தேர்தல் கமிஷன் பூத் சிலிப் நிறைய வீடுகளுக்கு கொடுக்காதது ஒரு காரணமா? என பல்வேறு காரணங்களை முன் வைத்து மக்கள் பேச தொடங்கி விட்டனர்.

    இந்த தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்த காரணத்தால் அது எந்த கட்சிக்கு சாதகமாக அமையும். எந்த கட்சியின் வெற்றியை பாதிக்கும் என்று அரசியல் கட்சியினர் கணக்கு போட தொடங்கி விட்டனர்.

    இது பற்றி முக்கிய அரசியல் கட்சியினர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

    தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி:- தி.மு.க. கூட்டணிக்கு கிடைக்க வேண்டிய வாக்கு அப்படியே வந்து விடும். தேர்தலில் பெண்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர். இது தி.மு.க.வுக்கு சாதகமாக இருக்கும் என்பது எங்களது கணிப்பு.

    வாக்குப்பதிவு சதவீதம் அதிகம் வந்திருந்தால் வெற்றி வாய்ப்புக்கான லீடிங் அதிகமாக இருக்கும். இப்போது பதிவான வாக்கு சதவீதம் குறைந்திருப்பதால் 'லீடிங்' கொஞ்சம் குறைவாக அமையும். மொத்தத்தில் வெற்றி எங்களுக்குத்தான்.

    அ.தி.மு.க. பொருளாளர் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்:-

    இந்த தேர்தலில் அ.தி.மு.க.-தி.மு.க.-பாரதிய ஜனதா ஆகிய கூட்டணிகளுக்கிடையேதான் மும்முனை போட்டி நிலவுகிறது. இதில் அ.தி.மு.க.-தி.மு.க. இடையேதான் கடும் போட்டி உள்ளது. காரணம் இந்த இரு கட்சிகளுக்கு மட்டும்தான் ஒவ்வொரு தெருவிலும் கட்சிக்காரர்கள் உண்டு. பாரதிய ஜனதா கட்சிக்கு ஆட்கள் கிடையாது.

    கிராம அளவில் கிளை கழகம் முதற்கொண்டு அ.தி.மு.க.-தி.மு.க.வில் ஆட்கள் அதிகம் இருக்கிறார்கள். பாரதிய ஜனதா கட்சியில் அந்த அளவு தொண்டர்கள் கிடையாது.

    வாக்குப்பதிவு சதவீதம் இப்போது குறைந்துள்ள நிலையில் இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது பாரதிய ஜனதா கட்சிக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும். ஒரு தொகுதியில் கூட அக்கட்சி வெற்றி பெறாது.

    நாம் தமிழர் கட்சி ஒரு தொகுதிக்கு 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை ஓட்டு வாங்குவதால் அதை போட்டியாக கருதவில்லை. அந்த கட்சிக்கு கிடைக்கும் வாக்கு விழலுக்கு இறைத்த நீர் போன்ற கதைதான். அவர்கள் எதுக்கு போராடுகிறார்கள் என்று தெரியவில்லை. எனவே சீமானை ஒரு பொருட்டாக கருதுவதில்லை.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:-

    வாக்குப்பதிவு சதவீதம் பல தொகுதிகளில் குறைந்திருந்தாலும் எந்த கட்சி ஆட்சிக்கு வர வேண்டும், யார் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக ஓட்டு போட்டிருப்பார்கள்.

    அந்த வகையில் தி.மு.க. அணியின் வாக்கு வங்கி குறையுமா? என்று தெரியவில்லை. எங்கள் அணியில் அரசியல் ரீதியாக ஊசலாட்டத்தில் யாரும் இல்லை. எனவே ஒரு தெளிவான கொள்கையோடு, தெளிவான சிந்தனையில் இருப்பதால் எங்கள் அணிக்கு கிடைக்க வேண்டிய வாக்கு சதவீதம் குறைய வாய்ப்பில்லை.

    பி.ஜே.பி. அ.தி.மு.க.வுக்குதான் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இல்லை. ஆர்வம் இல்லை. அவர்களிடம் திட்டமிட்ட தேர்தல் வியூகம் இல்லை. அதனால் பாதிப்பு என்று பார்த்தால் பி.ஜே.பி., அ.தி.மு.க.வுக்குதான்.

    இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன்:-

    வாக்குப்பதிவு குறைந்திருந்தாலும் எங்கள் அணியை பொறுத்தமட்டில் தமிழகம்-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி கட்சிகள்தான் வெற்றி பெறும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. அதில் எந்த பிரச்சினையும் கிடையாது. குறைவாக வாக்குப்பதிவு நடந்துள்ளதால் எதிர்காலத்தில் அதை சரி செய்வதற்கான முயற்சியை அனைவரும் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடியது மகாவீரரின் போதனைகள்.
    • சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    பகவான் மகாவீரர் அவதரித்த தினத்தை மகாவீர் ஜெயந்தியாக கொண்டாடி மகிழும் சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அன்பு, அமைதி, அகிம்சை, வாழ்க்கை, மனிதநேயம் பற்றி அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய மகாவீரரின் போதனைகளை மக்கள் அனைவரும் பின்பற்றி உயரிய நெறிமுறைகளுடன் வாழ்ந்திட உறுதியேற்போம் எனக் கூறிக்கொண்டு, சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×