search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஓட்டுப்பதிவு குறைந்ததால் பாதிப்பு யாருக்கு? அரசியல் கட்சியினர் கருத்து
    X

    ஓட்டுப்பதிவு குறைந்ததால் பாதிப்பு யாருக்கு? அரசியல் கட்சியினர் கருத்து

    • தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்த காரணத்தால் அது எந்த கட்சிக்கு சாதகமாக அமையும்.
    • எந்த கட்சியின் வெற்றியை பாதிக்கும் என்று அரசியல் கட்சியினர் கணக்கு போட தொடங்கி விட்டனர்.

    சென்னை:

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 34 தொகுதிகளில் பதிவான வாக்கு சதவீதம் வெகுவாக குறைந்து விட்டது தற்போது விவாதமாகி வருகிறது.

    என்ன காரணத்தால் மக்கள் ஓட்டு போட வரவில்லை? வெயில் அதிகமாக இருந்ததால் ஓட்டு போட வரவில்லையா? அல்லது யார் ஜெயித்தால் நமக்கென்ன என்ற அலட்சியமா? அல்லது தேர்தல் கமிஷன் பூத் சிலிப் நிறைய வீடுகளுக்கு கொடுக்காதது ஒரு காரணமா? என பல்வேறு காரணங்களை முன் வைத்து மக்கள் பேச தொடங்கி விட்டனர்.

    இந்த தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்த காரணத்தால் அது எந்த கட்சிக்கு சாதகமாக அமையும். எந்த கட்சியின் வெற்றியை பாதிக்கும் என்று அரசியல் கட்சியினர் கணக்கு போட தொடங்கி விட்டனர்.

    இது பற்றி முக்கிய அரசியல் கட்சியினர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

    தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி:- தி.மு.க. கூட்டணிக்கு கிடைக்க வேண்டிய வாக்கு அப்படியே வந்து விடும். தேர்தலில் பெண்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர். இது தி.மு.க.வுக்கு சாதகமாக இருக்கும் என்பது எங்களது கணிப்பு.

    வாக்குப்பதிவு சதவீதம் அதிகம் வந்திருந்தால் வெற்றி வாய்ப்புக்கான லீடிங் அதிகமாக இருக்கும். இப்போது பதிவான வாக்கு சதவீதம் குறைந்திருப்பதால் 'லீடிங்' கொஞ்சம் குறைவாக அமையும். மொத்தத்தில் வெற்றி எங்களுக்குத்தான்.

    அ.தி.மு.க. பொருளாளர் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்:-

    இந்த தேர்தலில் அ.தி.மு.க.-தி.மு.க.-பாரதிய ஜனதா ஆகிய கூட்டணிகளுக்கிடையேதான் மும்முனை போட்டி நிலவுகிறது. இதில் அ.தி.மு.க.-தி.மு.க. இடையேதான் கடும் போட்டி உள்ளது. காரணம் இந்த இரு கட்சிகளுக்கு மட்டும்தான் ஒவ்வொரு தெருவிலும் கட்சிக்காரர்கள் உண்டு. பாரதிய ஜனதா கட்சிக்கு ஆட்கள் கிடையாது.

    கிராம அளவில் கிளை கழகம் முதற்கொண்டு அ.தி.மு.க.-தி.மு.க.வில் ஆட்கள் அதிகம் இருக்கிறார்கள். பாரதிய ஜனதா கட்சியில் அந்த அளவு தொண்டர்கள் கிடையாது.

    வாக்குப்பதிவு சதவீதம் இப்போது குறைந்துள்ள நிலையில் இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது பாரதிய ஜனதா கட்சிக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும். ஒரு தொகுதியில் கூட அக்கட்சி வெற்றி பெறாது.

    நாம் தமிழர் கட்சி ஒரு தொகுதிக்கு 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை ஓட்டு வாங்குவதால் அதை போட்டியாக கருதவில்லை. அந்த கட்சிக்கு கிடைக்கும் வாக்கு விழலுக்கு இறைத்த நீர் போன்ற கதைதான். அவர்கள் எதுக்கு போராடுகிறார்கள் என்று தெரியவில்லை. எனவே சீமானை ஒரு பொருட்டாக கருதுவதில்லை.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:-

    வாக்குப்பதிவு சதவீதம் பல தொகுதிகளில் குறைந்திருந்தாலும் எந்த கட்சி ஆட்சிக்கு வர வேண்டும், யார் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக ஓட்டு போட்டிருப்பார்கள்.

    அந்த வகையில் தி.மு.க. அணியின் வாக்கு வங்கி குறையுமா? என்று தெரியவில்லை. எங்கள் அணியில் அரசியல் ரீதியாக ஊசலாட்டத்தில் யாரும் இல்லை. எனவே ஒரு தெளிவான கொள்கையோடு, தெளிவான சிந்தனையில் இருப்பதால் எங்கள் அணிக்கு கிடைக்க வேண்டிய வாக்கு சதவீதம் குறைய வாய்ப்பில்லை.

    பி.ஜே.பி. அ.தி.மு.க.வுக்குதான் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இல்லை. ஆர்வம் இல்லை. அவர்களிடம் திட்டமிட்ட தேர்தல் வியூகம் இல்லை. அதனால் பாதிப்பு என்று பார்த்தால் பி.ஜே.பி., அ.தி.மு.க.வுக்குதான்.

    இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன்:-

    வாக்குப்பதிவு குறைந்திருந்தாலும் எங்கள் அணியை பொறுத்தமட்டில் தமிழகம்-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி கட்சிகள்தான் வெற்றி பெறும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. அதில் எந்த பிரச்சினையும் கிடையாது. குறைவாக வாக்குப்பதிவு நடந்துள்ளதால் எதிர்காலத்தில் அதை சரி செய்வதற்கான முயற்சியை அனைவரும் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×