என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சைபர் குற்றப்பிரிவு போலீசார் மோசடி செய்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க தொழில் நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டனர்.
- தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண். 5-ல் ஆஜர்படுத்தி தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு ஐ.எம்.ஓ. என்ற செயலி மூலமாக சொக்கநாதன் என்ற முகவரியில் இருந்து தொடர்பு கொண்டு ஒருவர் பேசினார்.
அவர், மதம் மாறினால் ரூ.10 கோடி தருவதாக கூறி அதற்காக அமெரிக்காவில் வங்கி கணக்கு தொடங்க, வருமானவரி செலுத்த உள்ளிட்ட காரணங்களுக்காக பணம் கேட்டு உள்ளார்.
அதனை நம்பிய இளைஞர் ரூ. 4 லட்சம் 88 ஆயிரத்து 159 பணத்தை 'ஜிபே' மூலம் அனுப்பி உள்ளார்.
பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த இளைஞர் இதுகுறித்து தேசிய குற்ற ஆவண காப்பகத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்படி சைபர் குற்றப்பிரிவு போலீஸ் கூடுதல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன் மேற்பார்வையில் சைபர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜோஸ்லின் அருள் செல்வி தலைமையிலான சைபர் குற்றப்பிரிவு போலீசார் மோசடி செய்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க தொழில் நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டனர்.

இதில் தஞ்சாவூர் ரெட்டி பாளையம் ரோடு, ஆனந்தம் நகர் பகுதியை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் மகன் ராஜவேல் (வயது31) என்பவர், பாதிக்கப்பட்ட இளைஞரிடம் பண மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் தஞ்சாவூர் சென்று ராஜவேலை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை தூத்துக்குடி அழைத்து வந்து தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண். 5-ல் ஆஜர்படுத்தி தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைத்தனர்.
மேலும் இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீ சார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாம்பன் ரெயில் தூக்கு பாலத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
- வரும் செப்டம்பர் மாதம் ரெயில் போக்குவரத்து தொடங்கிட பணிகள் தீவிர மடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்-ராமேசுவரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையில் 2.2 கிலோ மீட்டர் தொலைவில் கடலில் 1914-ம் ஆண்டு கப்பல்கள் வந்து செல்ல திறந்து மூடும் வகையில் மீட்டர் கேஜ் ரெயில் பாதை அமைக்கப்பட்டது.
இந்த வழித்தடத்தில் தொடர்ந்து ரெயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் 2007-ம் ஆண்டு மீட்டர் கேஜ் பாதை மாற்றப்பட்டு அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டு ரெயில் போக்குவரத்து நடைபெற்று வந்தது.
இந்நிலையில், பாம்பன் ரெயில் தூக்கு பாலத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதன் பின்னர் 2019-ம் ஆண்டு ரூ.560 கோடி மதிப்பிட்டில் அதிநவீன தொழில் நுட்பத்துடன் தூக்கி இறக்கும் வகையில் புதிய ரெயில் பாலம் கட்டுமான பணி தொடங்கியது.
இதில் மண்டபத்தில் இருந்து பாலத்தின் மையப் பகுதி வரை ரெயில் தண்டவாளங்கள் முழுமையாக அமைக்கப்பட்டுள்ளது. பாம்பனில் இருந்து மையப் பகுதி வரை பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கப்பல்கள் வந்து செல்லும் வகையில் மையப்பகுதியில் அமைக்கப்படும் தூக்கி இறக்கும் பாலம் 600 டன் எடை உள்ளதால் கொண்டு செல்லும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் 10 நாட்களுக்குள் அந்த பணி நிறைவடைந்து அதிக குதிரை திறன்கொண்ட மின் மோட்டர் மூலம் தூக்கி இறக்கிடும் வகையில் இணைப்புகள் பொருத்தப்பட்டு அதற்கான பணிகள் நடைபெறும்.
இதன் பின்னர் பாம்பன் பகுதியில் இருந்து மையப் பகுதிக்கு தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறும் என ஊழியர்கள் தெரிவித்தனர். மேலும் வரும் செப்டம்பர் மாதம் ரெயில் போக்குவரத்து தொடங்கிட பணிகள் தீவிர மடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஐதராபாத் அணி 5 வெற்றி, 3 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற 4-வது இடத்தில் உள்ளது.
- ரகானே நன்றாக விளையாடக் கூடியவர் ஒரு சில ஆட்டத்தை வைத்து முடிவு செய்துவிடக் கூடாது.
சென்னை:
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டித் தொடரின் 46-வது 'லீக்' ஆட்டமாகும். சேப்பாக்கத்தில் நடைபெறும் 5-வது போட்டியாகும்.
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 4 வெற்றி, 4 தோல்வியுடன் 84 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. ஐதராபாத்துக்கு பதிலடி கொடுத்து சி.எஸ்.கே. 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்துடன் உள்ளது. அந்த அணி தொடர்ச்சியாக 2 ஆட்டத்தில் தோற்றது. இதனால் ஹாட்ரிக் தோல்வியை தவிர்ப்பது அவசியமாகும்.
ஐதராபாத் அணி 5 வெற்றி, 3 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணி சென்னையை மீண்டும் வீழ்த்தி 6-வது வெற்றியை பெறும் வேட்கையில் இருக்கிறது.

இன்றைய போட்டி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்சி கூறியதாவது:-
சேப்பாக்கம் மைதானத் தில் தற்போது வரை சென்னை சூப்பர் கிங்சின் சாதனை நன்றாகவே இருந்தது. ரசிகர்களின் ஆதரவு கூடுதல் பலமாக இருக்கிறது. கடந்த சில ஆட்டத்தில் பனித்துளி தாக்கத்தை ஏற்படுத்தி இருந்ததாக கருதுகிறேன். பனியின் தாக்கம் சி.எஸ்.கே. பந்து வீச்சாளர்களுக்கு சவாலாக இருந்தது. லக்னோவுக்கு எதிரான போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்கள் நேர்த்தியுடன் வீச இயலவில்லை.
ஜடேஜா கடந்த சில ஆண்டுகளாக பின் வரிசையில் ஆடி வருகிறார். தற்போது 4-வது வீரராக ஆடி வருகிறார். சூழ்நிலைக்கு தகுந்தவாறு களம் இறக்கப்படும் வரிசையில் ஜடேஜா சிறப்பாக செயல் படுகிறார்.
ரகானே நன்றாக விளையாடக் கூடியவர் ஒரு சில ஆட்டத்தை வைத்து முடிவு செய்துவிடக் கூடாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கடந்த சில நாட்களுக்கு முன் விவசாயிகள் வங்கி முன் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினார்கள்.
- திருச்செங்கோடு துணைப்பதிவாளர் பி.கிருஷ்ணன் முறை கேடுகள் தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்தார்.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம் ஒன்றியம் கோக்கலை ஊராட்சியில் கோக்கலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இதில் 2700-க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். உறுப்பினர்கள் அனைவரும் விவசாயிகளாக உள்ள நிலையில் வங்கியில் வரவு செலவு வைத்து தங்களது பணத்தை டெபாசிட் செய்தும் வைத்துள்ளனர்.
அவ்வாறு வைத்திருந்த பணத்தை அவர்களது கவனத்திற்கு வராமலேயே வங்கியில் வேலை செய்த எழுத்தர் சி.பெரியசாமி என்பவரும், வங்கி செயலாளர் அ.பெரியசாமி என்பவரும் மோசடி செய்து சுமார் ரூ.1 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக தெரிய வந்தது. இதன் அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன் விவசாயிகள் வங்கி முன் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினார்கள்.
அப்போது அவர்களை சமாதானப்படுத்திய கூட்டுறவு துறை அதிகாரிகள் அனைத்து உறுப்பினர்களையும் அழைத்து அவரவர் கணக்குகளில் எவ்வளவு மோசடி நடைபெற்றிருக்கிறது என்று கணக்கெடுத்து உரிய தொகையை பெரிய சாமியின் சொத்துக்களை பறிமுதல் செய்து ஏலம் விட்டு திருப்பி தருவதாக உத்தரவாதம் அளித்தனர்.
அதன் அடிப்படையில் பொதுமக்கள் அமைதியாக இருந்த நிலையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் மீண்டும் பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த மாதம் 21-ந் தேதி வங்கியை முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களது பணத்தை உடனடியாக திருப்பி தர வேண்டும் என வலியுறுத்தினர். இது குறித்த தகவல் அறிந்த சரக கூட்டுறவு பதிவாளர் கிருஷ்ணன் வங்கிக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
இந்நிலையில் பொதுமக்களின புகாரின் பேரில் விசாரனை செய்த கூட்டுறவு துறை அதிகாரிகள் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சரகம் எளச்சிபாளையம் வட்டாரத்திற்குட்பட்ட கோக்கலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சேமிப்பு கணக்கு பயிர்க்கடன், நகைக்கடன், மத்தியகாலக் கடன், மாற்றுத்திறனாளி கடன், இட்டுவைப்பு கடன், உரம் மற்றும் உறுப்பினரிடம் தொகை வசூலித்து சங்கத்தில் வரவு வைக்காதது உள்ளிட்ட இனங்களில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு ரூ.1 கோடியே 17 லட்சத்து 79 ஆயிரத்து 644 அளவிற்கு முறைகேடுகள் கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் க.பா.அருளரசு அறிவுரையின் படி திருச்செங்கோடு துணைப்பதிவாளர் பி.கிருஷ்ணன் முறை கேடுகள் தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்தார்.
இதனைத் தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்ட சங்கச் செயலாளர் அ.பெரியசாமி மற்றும் எழுத்தர் சி.பெரியசாமி ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
- இவான் ஜோஸ்வா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
- மாணவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தாம்பரம்:
சென்னை தாம்பரம் சேலையூரை அடுத்த திருவஞ்சேரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பென்னிவர்ட். அவருடைய மகன் இவான் ஜோஸ்வா (வயது 17). சேலையூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் தற்போது பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருந்தார். ஐ.ஐ.டி., என்.ஐ.டி. போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர்வதற்காக கட்டாயமாக்கப்பட்டுள்ள ஜே.இ.இ. நுழைவுத்தேர்வும் எழுதி இருந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் தந்தை பென்வர்ட் வேலைக்கு சென்று விட்ட நிலையில், அவருடைய மனைவி தோழியை பார்ப்பதாக சென்று விட்டார். மகன் இவான் ஜோஸ்வா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
மாலையில் வீடு திரும்பிய அவரது பெற்றோர் கதவு உள்பக்கம் பூட்டப்பட்டதால், கதவை தட்டியுள்ளனர். நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்த அவர்கள், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் பின்பக்கம் உள்ள கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் இவான்ஜோஸ்வா தூக்குப்போட்டு தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக சேலையூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவரின் சாவு குறித்து பெற்றோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு முடிவுகள் கடந்த 24-ந்தேதி வெளியான நிலையில் இவான் ஜோஸ்வா அதில் மதிப்பெண் குறைவாக பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது.
- மே 2ம் தேதி வரை வெப்ப அலை வீசும் என எச்சரிக்கை .
- அதிகபட்சமாக ஈரோட்டில் 108.32 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவு.
நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கோடை வெயில் நாள்தோறும் சுட்டெரிக்கிறது.
அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்துகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.
நாடு முழுவதும் கோடை வெயில் கொளுத்துவதோடு மட்டுமல்லாமல் வெப்ப அலையும் வீசுகிறது. இதனால் பகல் நேரத்தில் பொதுமக்கள் வெளியே தலை காட்ட முடியவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் மே 2-ந்தேதி வரை வெப்ப அலை வீசும் என்று இந்த வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த நாட்களில் வெப்ப அலை வீசுவதற்கான 'மஞ்சள் அலர்ட்' எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் மே 2-ந்தேதி வரை வெப்ப அலை வீசும். தமிழகத்தில் வெப்ப அலை வீசுவதற்கான 'மஞ்சள் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகாவின் உள் மாவட்டங்கள், ஜார்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்.
மேற்கு வங்காளம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் கடும் வெப்ப அலை வீச வாய்ப்பு இருப்பதற்கான 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை வானிலை மையம்
இதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையமும் தமிழகத்துக்கு வெப்ப அலை எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மே 2-ந்தேதி வரை வெப்ப அலை வீசக்கூடும். இந்த நாட்களில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 3 டிகிரியும், வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 5 முதல் 8 டிகிரியும் வெப்பநிலை அதிகரிக்கும்.
மேலும், தமிழ்நாட்டில் 95 டிகிரி முதல் 107 டிகிரி வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு 80 முதல் 98 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 107.6 டிகிரி வெப்பநிலை பதிவாகிஉள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கேரளாவில் வழக்கத்தை விட வெயில் வெளுத்தி வாங்கி வருகிறது. இந்த வெயிலின் காரணமாக நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தல் வாக்குப்பதிவின்போது மாநிலம் முழுவதும் சுருண்டு விழுந்து 9 பேர் பலியானார்கள்.
இந்த நிலையில் நேற்று மேலும் ஒருவர் வெயில் தாக்கத்தால் இறந்தார். இதனால் வெயிலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
இந்த சூழலில் வெப்பத்தின் தாக்கம் வரும் நாட்களில் இன்னும் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொல்லம் மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் வெப்பச் சலனம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், அடுத்த 3 நாட்களில் 104 டிகிரி வரை வெப்பம் பதிவாகலாம். பாலக்காட்டில் வெப்பநிலை 106 டிகிரியை எட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வெப்ப அலையின்போது சூரிய ஓளி மற்றும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் மரணம் கூட ஏற்படலாம் என்பதால் பகல் 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே வர வேண்டாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- மாணவ-மாணவிகள் மட்டுமல்லாது கிராமத்தில் உள்ள பொது மக்களின் அன்பையும் பெற்றார்.
- உசிலம்பட்டியில் நடந்த இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உசிலம்பட்டி:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சின்னக்குறவடி கிராமத்தில் அமைந்துள்ளது அரசு தொடக்கப்பள்ளி. இந்த பள்ளியில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் தலைமை ஆசிரியையாக வடுகப் பட்டியைச் சேர்ந்த செல்வ சிரோன்மணி என்பவர் பணியாற்றி வந்தார். அரசு தொடக்கப்பள்ளியில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏழை மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
5-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் மாணவ-மாணவிகளின் கல்வி தரத்தை மேம்படுத்த தலைமை ஆசிரியை செல்வ சிரோன்மணி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். மேலும் மாணவர்களை பல்வேறு போட்டிகளில் பங்கேற்க வைத்து அவர் களின் தனித்திறமைகளையும் ஊக்குவித்தார். ஒவ்வொரு மாணவ-மாணவிகளின் கல்வித்திறன் செயல்பாடுகளை கண்காணித்து தகுந்த முறையில் அவர்கள் கல்வி கற்க தலைமை ஆசிரியை நடவடிக்கை எடுத்தார். இதனால் அப்பகுதி மக்களின் நன்மதிப்பையும் செல்வ சிரோன்மணி பெற்றார்.
இந்த அரசு பள்ளியில் பயின்ற மாணவ-மாணவிகள் இன்று மருத்துவர்களாகவும், பொறியாளர்கள், அரசு பணிகள் உள்ளிட்ட பல்வேறு உயர் பணிகளில் உள்ளனர். மேலும் இங்கு படித்துவிட்டு உயர்கல்விக்கு செல்லும் மாணவ-மாணவிகளுக்கும் பல்வேறு வழிகாட்டுதல்களை தலைமை ஆசிரியை வழங்கி வந்தார்.
இதனால் மாணவ-மாணவிகள் மட்டுமல்லாது கிராமத்தில் உள்ள பொது மக்களின் அன்பையும் பெற்றார். பள்ளிக் கட்டிட வளர்ச்சி, பள்ளிக்கான உபகரணங்களின் வளர்ச்சிகள் என பலவற்றையும் தன் முயற்சியால் பெற்று கொடுத்துள்ளார்.
இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய தலைமையாசிரியை செல்வ சிரோன்மணி பணி நிறைவு பெற்றார். இதை அறிந்த கிராம மக்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் அவருக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் மாலை, கிரீடம் அணிவித்தும், தாய்வீட்டு சீதனமாக சீர் செய்வதை போன்று பல்வேறு பரிசுகளை கிராமத்தின் சார்பாக ஊர்வலமாக எடுத்து வந்து வழங்கினர்.
தொடர்ந்து மேள தாளத்துடன் கிராமத்தில் உள்ள முக்கிய கோவில்களுக்கு அழைத்து சென்று சிறப்பு பூஜைகள் செய்து, அவரது நினைவாக மரக் கன்றுகளையும் நடவைத்து தலைமை ஆசிரியைக்கு பிரியாவிடை கொடுத்து அனுப்பினர்.
உசிலம்பட்டியில் நடந்த இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- வாய்ப்பாடி வழியாக தினமும் ஏராளமான டிப்பர் லாரிகள் சென்று வருகிறது.
- சிறை பிடிக்கப்பட்ட டிப்பர் லாரிகளை 3 மணி நேரத்திற்கு பிறகு பொதுமக்கள் விடுவித்தனர்.
சென்னிமலை:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள வாய்ப்பாடி வழியாக சிறுக்களஞ்சி, கூத்தம்பாளையம் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளுக்கு குழாய் வழியாக காவிரி குடிநீர் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
வாய்ப்பாடி வழியாக தினமும் ஏராளமான டிப்பர் லாரிகள் சென்று வருகிறது. இதில் அதிக பாரம் ஏற்றி சென்ற டிப்பர் லாரிகளால் காவிரி குடிநீர் குழாய் கடந்த 6 மாதத்திற்கு முன்பே உடைந்து தண்ணீர் வெளியேறி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் வாய்ப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட சாலப்பாளையம் பகுதிக்கு காவிரி குடிநீர் முழுமையாக செல்லவில்லை என பொது மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் வாய்ப்பாடியை சேர்ந்த பொதுமக்கள் அந்த வழியே சென்ற டிப்பர் லாரிகளை சிறை பிடித்தனர்.
அப்போது உடைந்த குழாயை சரி செய்தால்தான் லாரிகளை விடுவிப்போம் என பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால் லாரி உரிமையாளர்கள் உடைந்த குடிநீர் குழாயை சரி செய்து தருவதாக உறுதியளித்தனர்.
மேலும் உடைந்த குடிநீர் குழாயை உடனடியாக சரி செய்யும் பணி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து சிறை பிடிக்கப்பட்ட டிப்பர் லாரிகளை 3 மணி நேரத்திற்கு பிறகு பொதுமக்கள் விடுவித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- நல்ல சீதோஷ்ணம் நிலவும் கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் முதலமைச்சர் நாளை செல்கிறார்.
- மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. அதற்கு முன்பாக தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் கடும் வெயிலில் பயணம் செய்து, தீவிரமாக ஓட்டு வேட்டையாடினார். வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4-ந் தேதி நடைபெறவுள்ளது.
இதற்கிடையே தமிழகத்தில் 22 மாவட்டங்களில் நிலவும் கடுமையான வறட்சி மற்றும் குடிநீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கான ஆய்வு கூட்டத்தை நடத்தி, அதிகாரிகளுக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் வரும் மே 1-ந் தேதி முதல் கடுமையான வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஏற்கனவே வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் இந்த அறிவிப்பு, மக்களை மேலும் அச்சுறுத்தி உள்ளது.
இந்த நிலையில், நல்ல சீதோஷ்ணம் நிலவும் கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை செல்கிறார். அதற்காக நாளை சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் செல்கிறார். பின்னர் மதுரையில் இருந்து காரில் அவர் புறப்பட்டு கொடைக்கானலுக்கு செல்கிறார். மே 4-ந் தேதி வரை அவர் அங்கு தங்கி இருப்பார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி ஏப்.29-ந்தேதி முதல் மே 4-ந்தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல் பகுதிகளில் ட்ரோன்கள், பலூன்கள் பறக்க தடை விதித்து திண்டுக்கல் எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.
- சட்டசபை தொகுதிக்கும் தலா 14 டேபிள்களில் ஓட்டு எண்ணப்படும். ஒரு டேபிளில் 4 பேர் பணியில் ஈடுபடுவர்.
- கலெக்டர், தேர்தல் பொது பார்வையாளர்கள், டி.ஆர்.ஓ., ஆர்.டி.ஓ நிலை அதிகாரிகள் பொதுவான பணியில் ஈடுபடுவர்.
ஈரோடு:
ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் (இ.வி.எம்), கட்டுப்பாட்டு எந்திரங்கள், வி.வி. பேட் ஆகியவை சித்தோடு ஐ.ஆர்.டி.டி கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
அங்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போட ப்பட்டுள்ளது. மேலும் சி.சி.டி.வி கேமரா மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஜூன் 4-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது.
இதற்கான முன்னேற்பாடு பணி நடந்து வருகிறது. இது குறித்து தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறியதாவது:- ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் தலா 14 டேபிள்களில் ஓட்டு எண்ணப்படும். ஒரு டேபிளில் 4 பேர் பணியில் ஈடுபடுவர்.
இது தவிர ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கான இ.வி.எம்.கள் பாதுகாப்பு அறையில் இருந்து வரிசைப்படி சரிபார்த்து அனுப்ப ஒரு மண்டல உதவி அதிகாரி, ஒரு அலுவலக உதவியாளர் குறைந்தபட்சம் 20 பேர் இருப்பார்கள்.
இதுதவிர ஒரு தொகுதி க்கு ஒரு டைப் செய்பவர், ஒரு கம்ப்யூட்டர் பதிவாளர், 2 அலுவலக உதவியாளர்கள், போர்டில் எழுதுபவர், மைக்கில் அறிவிப்பாளர், பிரிண்டர்களில் நகல் எடுப்பவர்கள் தனியாக பணி செய்வார்கள்.
இந்தப் பணிகளில் ஈடுபடும் அனைத்து நிலையிலும் 20 சதவீதம் கூடுதல் அலுவலர் பணியாளர் உடன் இருப்பார்கள். கலெக்டர், தேர்தல் பொது பார்வை யாளர்கள், டி.ஆர்.ஓ., ஆர்.டி.ஓ நிலை அதிகாரிகள் பொதுவான பணியில் ஈடுபடுவர்.
ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் ஒரு தாசி ல்தார் நிலையில் ஏ.ஆர்.ஒ. க்கள் அவர்களுடன் உதவியாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். இவ்வாறாக ஒரு சட்டசபை தொகுதிக்கு தலா 80 முதல் 100 பேர் வரை பணியில் ஈடுபடுவார்கள்.
இதற்காக வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி த்துறை, கல்வித்துறை, மத்திய அரசு பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்பு அலுவலர்கள், உதவியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். இப்பணிகள் அடுத்த ஒரு வாரத்தில் நிறைவு செய்து தேர்தல் ஆணைய ஒப்புதல் பெறப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்.
- 40 ஆண்டுகளாய்ப் பார்த்தும் பழகியும் வருகிறேன்.
- பருவம் கூடக் கூடப் பக்குவம் கூடிவருகிறது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேர மேலாண்மையில் சர்வதேச ஒழுங்கைக் கடைப்பிடிப்பவர் என்று கவிஞர் வைரமுத்து புகழ்ந்துள்ளார்.
இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
முதலமைச்சரை நேற்று
முகாம் அலுவலகத்தில்
சந்தித்தேன்
குறித்த நேரம் காலை 10.15
நான் அடைந்த நேரம் 10.14
முதலமைச்சர்
வந்து வரவேற்ற நேரம் 10.15
நேர மேலாண்மையில்
சர்வதேச ஒழுங்கைக்
கடைப்பிடிக்கிறார்
40 ஆண்டுகளாய்ப்
பார்த்தும் பழகியும் வருகிறேன்
பருவம் கூடக் கூடப்
பக்குவம் கூடிவருகிறது
வயது கூடக் கூட
மரம்
வைரம் பாய்வது மாதிரி
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கோடை விடுமுறை என்பதாலும் பயணிகளின் வசதிக்காகவும் வந்தே பாரத் சிறப்பு ரெயில்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
- வந்தே பாரத் ரெயில் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இயக்கப்படும்.
சென்னை:
பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் தெற்கு ரெயில்வே சார்பில் பல்வேறு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், வந்தே பாரத் சிறப்பு ரெயில்கள் பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது. எனவே, பல்வேறு வந்தே பாரத் சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
அந்த வகையில், சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே வாரந்திர வந்தே பாரத் சிறப்பு ரெயில்கள் மற்றும் வாரத்தில் 3 நாள் மட்டும் இயக்கும் வகையில் வந்தே பாரத் சிறப்பு ரெயில்கள் என தெற்கு ரெயில்வே சார்பில் ஏற்கனவே இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கோடை விடுமுறை என்பதாலும் பயணிகளின் வசதிக்காவும் இந்த வந்தே பாரத் சிறப்பு ரெயில்கள் நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை எழும்பூரில் இருந்து வரும் மே 2, 9, 16, 23, 30 மற்றும் ஜூன் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) காலை 5.15 மணிக்கு புறப்பட்டு செல்லும் வாராந்திர வந்தே பாரத் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06067) அதேநாள் மதியம் 2.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமாா்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து இதே தேதிகளில் மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு வரும் வாராந்திர வந்தே பாரத் சிறப்பு ரெயில் (06068) அதேநாள் இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
இதேபோல, சென்னை எழும்பூரில் இருந்து வரும் மே 3, 4, 5, 10, 11, 12, 17, 18, 19, 24, 25, 26,31 மற்றும் ஜூன் 1, 2, 7, 8, 9, 14, 15, 16, 21, 22, 23, 28, 29, 30 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) காலை 5.15 மணிக்கு புறப்பட்டு செல்லும் வந்தே பாரத் சிறப்பு ரெயில் (06057) அதேநாள் மதியம் 2.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கமாக, இதே தேதிகளில் நாகர்கோவில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு வரும் வந்தே பாரத் சிறப்பு ரெயில் (06058) அதேநாள் இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். இந்த ரெயில் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






