search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கூட்டுறவு வங்கியில் ரூ.1 கோடியே 17 லட்சம் மோசடி செய்த சங்க செயலாளர், எழுத்தர் கைது
    X

    கூட்டுறவு வங்கியில் ரூ.1 கோடியே 17 லட்சம் மோசடி செய்த சங்க செயலாளர், எழுத்தர் கைது

    • கடந்த சில நாட்களுக்கு முன் விவசாயிகள் வங்கி முன் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினார்கள்.
    • திருச்செங்கோடு துணைப்பதிவாளர் பி.கிருஷ்ணன் முறை கேடுகள் தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்தார்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம் ஒன்றியம் கோக்கலை ஊராட்சியில் கோக்கலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இதில் 2700-க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். உறுப்பினர்கள் அனைவரும் விவசாயிகளாக உள்ள நிலையில் வங்கியில் வரவு செலவு வைத்து தங்களது பணத்தை டெபாசிட் செய்தும் வைத்துள்ளனர்.

    அவ்வாறு வைத்திருந்த பணத்தை அவர்களது கவனத்திற்கு வராமலேயே வங்கியில் வேலை செய்த எழுத்தர் சி.பெரியசாமி என்பவரும், வங்கி செயலாளர் அ.பெரியசாமி என்பவரும் மோசடி செய்து சுமார் ரூ.1 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக தெரிய வந்தது. இதன் அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன் விவசாயிகள் வங்கி முன் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினார்கள்.

    அப்போது அவர்களை சமாதானப்படுத்திய கூட்டுறவு துறை அதிகாரிகள் அனைத்து உறுப்பினர்களையும் அழைத்து அவரவர் கணக்குகளில் எவ்வளவு மோசடி நடைபெற்றிருக்கிறது என்று கணக்கெடுத்து உரிய தொகையை பெரிய சாமியின் சொத்துக்களை பறிமுதல் செய்து ஏலம் விட்டு திருப்பி தருவதாக உத்தரவாதம் அளித்தனர்.

    அதன் அடிப்படையில் பொதுமக்கள் அமைதியாக இருந்த நிலையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் மீண்டும் பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த மாதம் 21-ந் தேதி வங்கியை முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தங்களது பணத்தை உடனடியாக திருப்பி தர வேண்டும் என வலியுறுத்தினர். இது குறித்த தகவல் அறிந்த சரக கூட்டுறவு பதிவாளர் கிருஷ்ணன் வங்கிக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    இந்நிலையில் பொதுமக்களின புகாரின் பேரில் விசாரனை செய்த கூட்டுறவு துறை அதிகாரிகள் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சரகம் எளச்சிபாளையம் வட்டாரத்திற்குட்பட்ட கோக்கலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சேமிப்பு கணக்கு பயிர்க்கடன், நகைக்கடன், மத்தியகாலக் கடன், மாற்றுத்திறனாளி கடன், இட்டுவைப்பு கடன், உரம் மற்றும் உறுப்பினரிடம் தொகை வசூலித்து சங்கத்தில் வரவு வைக்காதது உள்ளிட்ட இனங்களில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு ரூ.1 கோடியே 17 லட்சத்து 79 ஆயிரத்து 644 அளவிற்கு முறைகேடுகள் கண்டறியப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் க.பா.அருளரசு அறிவுரையின் படி திருச்செங்கோடு துணைப்பதிவாளர் பி.கிருஷ்ணன் முறை கேடுகள் தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்தார்.

    இதனைத் தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்ட சங்கச் செயலாளர் அ.பெரியசாமி மற்றும் எழுத்தர் சி.பெரியசாமி ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×