என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • அனைத்து தேர்வுகளிலும், கட்டாய தமிழ்மொழி தகுதித்தாள் இடம்பெறும்.
    • ஒளிவுமறைவற்ற வகையில் தேர்வுகளை நடத்தி முடிக்க மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    சென்னை:

    2024-ம் ஆண்டில் மருத்துவ துறையில் 21 பிரிவுகளில், 3,645 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் வரும் டிசம்பருக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சட்டசபையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    அவர் சட்டசபையில் தாக்கல் செய்த கொள்கை விளக்கக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    உதவி மருத்துவர் (பொது) பதவியில் உள்ள 2,553 பணியிடங்கள், உதவி மருத்துவ அலுவலர் (சித்தா) பதவியில் உள்ள 26 பணியிடங்கள், மருந்தாளுநர் பதவியில் உள்ள 425 இடங்கள், கிராம சுகாதார செவிலியர்/தாய்மை துணை செவிலியர் பதவியில் உள்ள 367 இடங்கள், கண் மருத்துவ உதவியாளர் பதவியில் உள்ள 100 இடங்கள், மருந்தாளுநர் (சித்தா) பதவியில் உள்ள 49 இடங்கள், உள்ளிட்ட 21 வகை பதவிகளில் காலியாக உள்ள 3,645 இடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளை வரும் டிசம்பருக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    அனைத்து தேர்வுகளிலும், கட்டாய தமிழ்மொழி தகுதித்தாள் இடம்பெறும். தேர்வுகளை நெறிப்படுத்தி, வலுவான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒளிவுமறைவற்ற வகையில் தேர்வுகளை நடத்தி முடிக்க மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    இவ்வாறு கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பிடிபட்ட வாலிபரை போலீசார் அழைத்து சென்றபோதும் அவர் பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்து சென்று உள்ளார்.
    • கஞ்சா போதை கும்பல் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், இந்திரா நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. மாலை பள்ளி முடிந்து மாணவி ஒருவர் அப்பகுதி வழியாக வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார் . அப்போது மாணவியை பினதொடர்ந்து 3 வாலிபர்கள் வந்தனர். கஞ்சா போதையில் இருந்த அவர்கள் மாணவியை கிண்டல் செய்தபடியும், தங்களிடம் பேசும்படியும் வற்புறுத்தினர்.

    இதனை அப்பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் தட்டிக்கேட்டார். அவர் போதை கும்பலை எச்சரித்தார். இதனால் அந்த வாலிபருக்கும் போதை கும்பலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    அந்த நேரத்தில் மாணவி அங்கிருந்து அச்சத்துடன் சென்றுவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த போதை கும்பல் தங்களை தட்டி கேட்ட வாலிபரை பின்தொடர்ந்து அவரது வீடுவரை சென்று மிரட்டினர். மேலும் அங்கு நின்று ரகளையில் ஈடுபட்டனர். சத்தம்கேட்டு திரண்ட அப்பகுதி மக்கள் போதை வாலிபர்கள் 3 பேரையும் சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கினர்.

    இதையடுத்து 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். ஒருவன் மட்டும் பொதுமக்களிடம் சிக்கினான். இதுகுறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் விரைந்து வந்து பிடிபட்ட வாலிபரை விசாரணைக்காக அழைத்து செல்ல முயன்றனர். ஆனால் அவர், வரமறுத்து அங்கிருந்து கண்காணிப்பு கேமரா கம்பத்தில் தனது தலையை மோதி ஆவேசம் ஆனார். பின்னர் ஒருவழியாக போதை வாலிபரை மடக்கி பிடித்து போலீசார் அழைத்து சென்றனர். விசாரணியில் பிடிபட்டவர் காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த அருண் என்பது தெரிந்தது. மேலும் தப்பி ஓடிய கூட்டாளிகள் ஷியாம், தீனா என்பதும் தெரியவந்தது. அவர்களை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பிடிபட்ட வாலிபரை போலீசார் அழைத்து சென்றபோதும் அவர் பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்து சென்று உள்ளார். நான் விரைவில் திரும்பி வருவேன், விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்து உள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, தினந்தோறும் இந்த பகுதியில் போதை வாலிபர்கள் மாணவிகள் மற்றும் பெண்களை கிண்டல் செய்வது அதிகரித்து உள்ளது. கஞ்சா விற்பனை அதிகரித்து அச்சுறுத்தல் நிலவுகிறது. எனவே கஞ்சா போதை கும்பல் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    கடந்த ஆண்டும் இதே பகுதியில், பூந்தமல்லி போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர் விசாரணைக்காக சென்றபோது கஞ்சா போதை கும்பலால் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • மதுரை மாவட்ட உரிமையியல் நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார்.
    • விளக்கம் அளிக்க கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

    மதுரை:

    சங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இரண்டாம் பாகமாக வெளியாக இருக்கும் படம் இந்தியன்-2. இந்த திரைப்படம் ஜூலை 12-ந்தேதி வெளியாகும் என படத்தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில் அதற்கான வேலைகளை படக்குழு தீவிரமாக நடத்தி வருகிறது.

    இதற்கிடையே மதுரை எச்.எம்.எஸ். காலனியை சேர்ந்த வர்மக்கலை, தற்காப்புக்கலை மற்றும் ஆராய்ச்சி அகாடமியின் தலைமை ஆசான் ராஜேந்திரன் என்பவர் மதுரை மாவட்ட உரிமையியல் நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார்.

    அந்த மனுவில், லைகா புரெடக்ஸன்ஸ் சுபாஷ்கரன் தயாரிப்பில் சங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன்-2 திரைப்படம் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக உள்ளது.

    இந்தியன் படத்தின் முதலாம் பாகம் தயாரித்த போது, அந்த படத்தில் கமல்ஹாசன் பயன்படுத்தும் வர்மக்கலை குறித்து தன்னிடம் ஆலோசித்து அந்த முத்திரை பயன்படுத் தப்பட்டது. அதற்காக எனது பெயரும் அந்த படத்தில் இடம் பெற்றது. ஆனால் தற்போது, இந்தியன்-2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

    அதில் கமல்ஹாசன் முதலாம் பாகத்தின் வர்மக் கலை முத்திரையை பயன்படுத்தி உள்ளது போன்ற படங்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இது தொடர்பாக எங்களிடம் எந்த ஆலோசனையும் நடத்த வில்லை. எனவே படத்தை எந்த தளம் வாயிலாகவும் வெளியிடக்கூடாது. குறிப்பாக திரையரங்குகள் மற்றும் ஓ.டி.டி. தளங்கள் என எந்த வகையிலும் வெளியிட நிரந்தர தடை விதித்து உத்தரவிடவேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இந்த மனுவை மதுரை மாவட்ட உரிமையியல் கோர்ட்டு நீதிபதி செல்வ மகேஸ்வரி வழக்கு விசாரணைக்கு உகந்ததாக கருதி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    மேலும் இது தொடர்பாக எதிர் மனுதாரர்களான கமல்ஹாசன், இயக்குனர் சங்கர், லைகா நிறுவனத்தை சேர்ந்த சுபாஷ்கரன் ஆகியோர் மனு குறித்து தங்களது ஆட்சேபனையை நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாக அளிக்க கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை வருகிற 9-ந்தேதி நடைபெற உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஆட்சியாளர்கள் மதுபான ஆலைகளை நடத்துகிறார்கள். மதுபான ஆலைகளை மூட வேண்டும்.
    • குடியைக் கொடுத்து கோடிகளில் சம்பாதிக்கிறார்கள். மக்கள் உயிரிழக்கிறார்கள்.

    சென்னை:

    சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்தபின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * ஆட்சியாளர்கள், அதிகாரிகள் உதவியோடு கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுகிறது.

    * 6 கோரிக்கைகள் அடங்கிய மனுவை கவர்னரிடம் கொடுத்துள்ளோம்.

    * சிபிசிஐடி போலீசார் விசாரிப்பதால் உண்மை வெளிவரப் போவதில்லை.

    * கள்ளச்சாராயம் விவகாரம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்.

    * அமைச்சர் முத்துச்சாமி பதவி விலக வேண்டும்.

    * ஆட்சியாளர்கள் மதுபான ஆலைகளை நடத்துகிறார்கள். மதுபான ஆலைகளை மூட வேண்டும்.

    * கவர்னர் நாங்கள் கூறிய கருத்துகளை மிக கவனமாக கேட்டார்.

    * போதைப்பொருள் பழக்கம் மற்றும் நடவடிக்கைகள் குறித்து கவர்னர் வேதனை தெரிவித்தார்.

    * கவர்னர் உரிய தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.

    * குடியைக் கொடுத்து கோடிகளில் சம்பாதிக்கிறார்கள். மக்கள் உயிரிழக்கிறார்கள்.

    * இலக்கு வைத்து மதுபானம் விற்றால் மக்களை காப்பாற்ற முடியாது என்று கூறினார்.

    • கல்வியை அனைவருக்கும் தரமாக, சரியாக, சமமாக வழங்க வேண்டியது ஒரு நல்ல அரசின் தலையாயக் கடமை!
    • கல்விக் கட்டணம் என்ற பெயரில் பெரும் பகற்கொள்ளை நடக்கின்றது.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    கல்வி என்பது மானுட உரிமை! அதைக் கொடுக்க மறுப்பது மாபெரும் கொடுமை; கல்வியை அனைவருக்கும் தரமாக, சரியாக, சமமாக வழங்க வேண்டியது ஒரு நல்ல அரசின் தலையாயக் கடமை!

    ஆனால், தற்காலச்சூழலில் கல்வி என்பது தனியார் மயமாக்கப்பட்டு, மதிப்புக்கூட்டப்பட்ட விற்பனை பண்டம்போல, கல்விக் கட்டணம் என்ற பெயரில் பெரும் பகற்கொள்ளை நடக்கின்றது;

    'பணம் படைத்தவர்களால் மட்டுமே தரமான கல்வியைப் பெற முடியும், ஏழைகளுக்கு நல்ல கல்வி என்பது எட்டாக்கனி' எனும் ஏற்றத்தாழ்வு மிகுந்த சமகாலத்தில், ஏழை - பணக்காரர் என்ற எவ்வித பாகுபாடுமின்றி, தமிழ்நாடு முழுவதும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ - மாணவியரை அழைத்து, பாராட்டுச்சான்றிதழுடன், உயர்கல்விக்கான உதவித்தொகையும் வழங்கி ஊக்கப்படுத்துகின்ற உன்னதப்பணியைச் செய்யும், என்னுயிர் இளவல், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர், என் அன்புத்தளபதி விஜய் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்! என்று கூறியுள்ளார்.

    • வாழ்க்கைத் தரம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.
    • கடந்த 3 ஆண்டுகளில் 6 மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    தமிழ்நாடு நாட்டிலேயே அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது.

    2011-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, மாநிலத்தில் நகர்ப்புற மக்கள்தொகையின் சதவீதம் 48.45 ஆகும். தற்போது, மொத்த மக்கள்தொகையில் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள்தொகை சதவீதம் 53 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளதாக மதிப்பிடப் பட்டுள்ளது.

    கடந்த 3 ஆண்டுகளில், 28 புதிய நகராட்சிகள் மற்றும் தாம்பரம், காஞ்சிபுரம், கடலூர், கும்பகோணம், கரூர், சிவகாசி ஆகிய 6 மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

    தரம் உயர்த்தப்பட்ட இந்நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் போதுமான நிதியை ஒதுக்கீடு செய்து, மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்துவதற்கான பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில், வரலாற்றுத் தலைநகரமாக விளங்கிய புதுக்கோட்டை, கோவில் நகரமான திருவண்ணாமலை, தொழில் நகரமான நாமக்கல், கல்வி நகரமான காரைக்குடி போன்ற நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டுமென பெறப்பட்ட கோரிக்கைகளை ஏற்று அந்நகரங்களையும், அவற்றின் அருகாமையில் அமைந்துள்ள விரைந்து நகரமயமாகி வரும் பேரூராட்சிகள், ஊராட்சிகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளையும் ஒன்றிணைத்து புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    அதன்படி, புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் காரைக்குடி நான்கு நகராட்சிகளையும் மாநகராட்சியாக உயர்த்துவதற்கான வரையறைகளை மக்கள் தொகை மற்றும் வருமான அளவுகோல் தடையாக இருப்பது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

    எனவே மாநகராட்சிக்கான வரையறைகளை தளர்த்தி மக்கள்தொகை மற்றும் ஆண்டு வருமானத்தை பொருட்படுத்தாமல் நான்கு நகராட்சிகளையும் மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த சட்டத்தின்படி முன்பு இருந்த மக்கள் தொகை 3 லட்சத்திற்கு பதிலாக இரண்டு லட்சமாகவும், அந்த பகுதியின் ஆண்டு வருமானம் ரூ.30 கோடியில் இருந்து 20 கோடி ரூபாயாக குறைத்து மாநகராட்சியாக மாற்றம் என்று சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.

    அதன்படி, புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை மாநகராட்சி, திருவண்ணாமலை நகராட்சி மற்றும் 18 ஊராட்சிகள், அடி அண்ணாமலையில் உள்ள பகுதிகள் ஆகிவற்றை ஒன்றிணைத்து திருவண்ணாமலை மாநகராட்சி, நாமக்கல் நகராட்சி மற்றும் 12 ஊராட்சிகளை ஒன்றிணைத்து நாமக்கல் மாநகராட்சி, காரைக்குடி நகராட்சி மற்றும் இரண்டு பேரூராட்சிகள், ஐந்து ஊராட்சிகளை ஒன்றிணைத்து காரைக்குடி மாநகராட்சி என மொத்தம் 4 புதிய மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இதன்மூலம், புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை, காரைக்குடி ஆகிய மாநகராட்சிகள் மற்றும் அதன் அருகாமையில் அமைந்துள்ள உள்ளாட்சி பகுதிகளில் சாலைகள், பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக மேற்கொள்ளப்படுவதோடு, இப்பகுதியில் வசிக்கும் மக்கள், பல்வேறு தேவைகளுக்காக இப்பகுதிகளுக்கு வந்து செல்வோர், சுற்றுலாப் பயணிகள், வணிக நிறுவனங்கள், தொழில் துறையினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் வாழ்க்கைத் தரம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த சட்ட மசோதா நாளை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படுகிறது.

    • 150 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
    • தகுதியான இடம் தேர்வு செய்யப்பட்ட பின்பு கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும்.

    சென்னை:

    சட்டசபையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், சீர்காழி சட்டமன்ற எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், சீர்காழி சார்பதிவாளர் அலுவலகத்தை சீரமைக்க அரசு முன்வருமா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கூறியதாவது:-

    பதிவுத்துறையில் 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான கட்டிடங்களில் செயல்படும் 150 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதனை செயல்படுத்தும் விதமாக, பதிவுத்துறை தொடங்கிய 1865-ம் ஆண்டு முதல் 150 ஆண்டுகளாக பழமையான கட்டிடத்தில் செயல்படும் சீர்காழி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு 28.6.2023 அன்று 1.62 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய கட்டிட்டடம் கட்டும் பணிகள் 5.2.2024 அன்று தொடங்கப்பட்டு, தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.

    பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு உடனடியாக புதிய கட்டிடம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். அதேபோல், மயிலாடுதுறை மாவட்டம், பதிவு கொள்ளிடம் சார்பதிவாளர் அலுவலகம் தற்போது வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் நிலையில், இந்த அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக முதலமைச்சரால் கடந்த 21.7.2023 அன்று 1.86 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வரும் நிலையில், ஆவணப் பதிவிற்கு வரும் பொதுமக்களுக்கு வசதியான, தகுதியான இடம் தேர்வு செய்யப்பட்ட பின்பு கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதல்வன் திட்டத்திலும் அதிகளவில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
    • வடசென்னை வளர்ச்சியில் முதலமைச்சரின் திராவிட மாடல் அரசு உயர்ந்த அக்கறை கொண்டுள்ளது.

    சென்னை:

    சட்டசபையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், மாதவரம் தொகுதியில் போட்டி தேர்வுக்கான பயிற்சி மையம் அமைக்க அரசு முன்வருமா என சுதர்சனம் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்து நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கூறியதாவது:-

    சென்னையில் ஏற்கனவே வண்ணாரப்பேட்டையில் தியாகராஜா கல்லூரி, நந்தனம் கல்லூரியிலும் தலா ஒரு பயிற்சி மையம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மதுரை, கோயம்புத்தூர், சேலம் போன்ற இடங்களிலும் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.

    சென்னையை பொறுத்த வரை போட்டி தேர்வுக்கான பயிற்சி குடிமை தேர்வுக்கான பயிற்சி மையம் இயங்கி வருவதோடு, முதன்மை தேர்வாக இருந்தாலும் ஏறத்தாழ 300 மாணவர்கள் பயிற்சி கொடுக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், போட்டி தேர்வில் ஈடுபடும் மாணவர்களை அரசு கருத்தில் கொண்டு தான் பல நூலகங்களிலும் போட்டி தேர்வுக்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இதற்கான வசதி உள்ளதோடு, முதலமைச்சரின் கனவு திட்டமான நான் முதல்வன் திட்டத்திலும் அதிகளவில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

    அதேபோல் வடசென்னை வளர்ச்சியில் முதலமைச்சரின் திராவிட மாடல் அரசு உயர்ந்த அக்கறை கொண்டுள்ளது. சென்னை, மதுரை மட்டுமல்லாமல் கோவையிலும் திருச்சியிலும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்கப்படும் என்று தெரிவித்தது போல, எதிர்காலத்தில் வட சென்னையில் அறிவுசார் மையம் மற்றும் நூலகம் அமைக்கப்படும் என்றார்.

    • படிக்கும் போதே மாணவர்கள் மறைமுகமாக அரசியலில் ஈடுபட முடியும்.
    • தவறான பழக்கவழக்கத்தில் மட்டும் ஈடுபட வேண்டாம்.. ஈடுபட கூடாது என்றார்.

    கடந்த 22-ந் தேதி 50-வது பிறந்தநாளை கொண்டாடிய விஜய்க்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர். ஆனால், நடிகை த்ரிஷா ஒரு புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்தது சர்ச்சையானது. அதற்கு சமூக ஊடங்களில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டன. விஜயின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால், அப்போது சமூக வலைத்தள விமர்சனங்களுக்கு இருவருமே பதிலளிக்கவில்லை.

    இந்நிலையில், மாணவர்களை கவுரவிக்கும் விழாவில் சமூக ஊடகங்கள் குறித்து விஜய் பேசினார். த்ரிஷாவின் புகைப்படம் குறித்து சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக விஜய் பேசினார் என்றே பார்க்கப்படுகிறது.

    விழாவில் த.வெ.க. தலைவர் விஜய் கூறியதாவது,

    படிக்கும் போதே மாணவர்கள் மறைமுகமாக அரசியலில் ஈடுபட முடியும். தினமும் செய்திதாளை படிங்கள். ஒரே செய்திய ஒரு செய்தி பத்திரிகை ஒரு மாதிரியும், மற்றொரு செய்தி பத்திரிகை வேறு மாதிரியும் எழுதுவாங்க. இங்க செய்தி வேற கருத்து வேற என்பது உங்களுக்கு தெரியவரும். சமூக ஊடங்களில் இப்போ எல்லாம் நல்லதை கெட்டதாகவும், கெட்டதை நல்லதாகவும் காட்டுகிறது. இதை எல்லாம் பார்த்து எது உண்மை, எது பொய் என்பதை மட்டும் பார்க்க கற்றுக்கொள்ளுங்கள். அப்போதான் உண்மையிலேயே நாட்டில் என்ன பிரச்சனை, நாட்டு மக்களுக்கு என்ன பிரச்சனை, சமூக தீமைகள் பற்றி தெரியவரும். அது தெரிந்தாலே ஒரு சில அரசியல் கட்சிகள் செய்கிற பொய்யான பிரச்சாரங்களை நம்பாமல், எது சரி, எது பொய் என்று ஆராய்ந்து பார்த்து நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்கக் கூடிய விசாலமான உலக பார்வை உங்களால் வளர்த்துக்கொள்ள முடியும். பெற்றோருக்கு அடுத்தபடியாக நல்ல நண்பர்களை தேர்ந்தெடுங்கள்.. தவறான பழக்கவழக்கத்தில் மட்டும் ஈடுபட வேண்டாம்.. ஈடுபட கூடாது என்றார்.

    • எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் அலங்கோலமாக கிடக்கின்றன.
    • கோப்புகள் வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டையில் கடந்த 1989 -ம் ஆண்டு ஜூன் 24-ந் தேதி தாலுகா அலுவலகம் தொடங்கப் பட்டது. அப்போதைய வருவாய்த்துறை அமைச்சர் நாஞ்சில் மனோகரன் தாலுகா அலுவலகத்தை தொடங்கி வைத்தார்.

    சுமார் 200-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் வீட்டுமனை பட்டா, பட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை, பிறப்பு, இறப்பு சான்று, முதியோர், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை பெற இந்த அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்து பயன் அடைந்து வருகிறார்கள். சுமார் 150-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலைபார்த்து வருகிறார்கள்.

    2 அடுக்கு மாடியில் செயல்படும் இந்த தாலுகா அலுவலகத்தின் கட்டிட சுவர்களில் பல இடங்களில் விரிசல்கள் காணப்படுகின்றன. மாடிகளின் மேற்கூரை சேதம் அடைந்துள்ளதால் மழை பெய்தால் ஒழுகி தண்ணீர் அலுவலகத்தின் உள்ளே வருகிறது. இதனால் கோப்புகள் வீணாகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    கம்ப்யூட்டர் அறையில் உள்ள மின் விசிறிகள் உடைந்து காணப்படுகின்றன. கம்ப்யூட்டர் மற்றும் இதர எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் சின்னாபின்னமாக அகற்றப்படாமல் அலங்கோலமாக கிடக்கின்றன.

    மேலும் இங்கு செயல்படும் இ-சேவை மையத்தில் அடிக்கடி சர்வர் சரியாக வேலை செய்யவில்லை என்று கூறி அனுப்புவதால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள்.

    இதனால் அருகில் உள்ள தனியார் இ -ேசவை மையங்களில் பணம் கொடுத்து மனுக்களை பதிவு செய்யும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதேபோல் ஆதார் அட்டை விண்ணப்பிக்கும் அறை மேல்தளத்தில் உள்ளதால் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மேல்தளத்திற்கு நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

    எனவே ஆதார் பதிவு மையத்தை கீழ்தளத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் பல முறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தாலுகா அலுவலக வளாகத்தில் எங்கு பார்த்தாலும் முள்செடிகள், புதர்கள் வளர்ந்து காடு போல் காட்சி அளிக்கிறது.

    அலுவலகத்தில் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி சரிவர பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் மனு கொடுக்க வரும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலம் முறையாக பாராமரிப்பு இல்லாமல் அலங்கோலமாக காட்சி அளிக்கிறது. அங்கு சென்றால் அரசு அலுவலகத்துக்கு சென்றது போன்ற உணர்வு இல்லை. இதனை பராமரிக்க வேண்டும்.

    மேலும் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை வசதிகளை மேம்படுத்த வேண்டும். போதுமான கிராம நிர்வாகம், மற்றும் வருவாய் அலுவலர்கள் இல்லாததால் கோப்புகள் தேங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    மழை பெய்யும் போது தண்ணீர் செல்ல வழியில்லாததால் வளாகம் முழுவதும் தேங்கி நிற்கிறது. தாலுகா அலுவலகத்தை சுற்றிலும் முட்புதர்கள் அகற்றப்படாமல் கிடக்கின்றன.

    கடந்த ஆண்டில் மட்டும் 18 தாசில்தார்கள் இங்கு பணியாற்றிவிட்டு இடம்மாறுதல் பெற்று சென்று உள்ளனர். எனவே ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தை முறையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கள்ளச்சாராயம் விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கோரி கவர்னரிடம் பிரேமலதா மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • ஏற்கனவே கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கவர்னரை சந்தித்து மனு அளித்துள்ளனர்.

    சென்னை :

    சென்னை கிண்டில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து பேசி உள்ளார்.

    கள்ளச்சாராயம் விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கோரி கவர்னரிடம் பிரேமலதா மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஏற்கனவே கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கவர்னரை சந்தித்து மனு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஏற்றவாறு ஆராய்ந்து சிலையை நகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்படும் என்றார்.
    • கருணாநிதி சிலை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    சென்னை:

    சட்டசபையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், திருவாரூர் தொகுதி வாளவாய்க்கால் ரவுண்டானாவில் முத்தமிழறிஞர் கலைஞர் சிலையை நிறுவ அரசு முன்வருமா? என்று பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியாதவது:-

    திருவாரூர் தொகுதி வாளவாய்க்கால் ரவுண்டானா நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் நெடுஞ்சாலை துறையிடம் ஒப்புதல் பெற்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் பரிந்துரையுடன் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    அதேபோல். பொது இடத்திலோ சாலைகளிலோ சாலை ஓரத்திலோ சிலை வைப்பதற்கு தடை உள்ள காரணத்தினால் தான் உடனடியாக அனுமதி வழங்கப்பட முடியவில்லை. அதற்கு ஏற்றவாறு ஆராய்ந்து சிலையை நகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்படும் என்றார்.

    ×