என் மலர்
உள்ளூர் செய்திகள்
- திமுக பொறியாளர் அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றது.
- நேற்றைய விழாவில் சுமார் 45 நிமிடங்கள் நமது தலைவர் பற்றியும் , கலைஞர் பற்றியும் ரஜினி பாராட்டி பேசினார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் திமுக பொறியாளர் அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றது.
இதில், கலந்துக் கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தின் பேச்சைக் குறிப்பிட்டு தனது உரையைத் தொடங்கினார்.
அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்றைய விழாவில் சுமார் 45 நிமிடங்கள் நமது தலைவர் பற்றியும் , கலைஞர் பற்றியும் பாராட்டி பேசினார்.
அவர் குறிப்பிட்டு ஒரு விஷயத்தை மட்டும் இங்கு பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.
எவ்வளவோ தலைவர்கள் வந்திருக்கிறார்கள், வாழ்ந்திருக்கிறார்கள், சாதித்திருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் மட்டுமல்ல.. இந்தியாவில் மட்டுமல்ல.. உலகத்திலேயே எந்த ஒரு தலைவருக்கும் இப்படி ஒரு நூற்றாண்டு நிகழ்ச்சியை எந்த ஒரு இயக்கமும் இதுவரை நடத்தியதும் இல்லை இனி நடத்தப்போவதும் இல்லை என்று கூறினார்.
அந்த அளவிற்கு திமுக கலைஞர் நூற்றாண்டை வெகு சிறப்பாக கொண்டாடி இருக்கிறது. அதற்கு வாழ்த்துகள். இதற்கு காரணம் நம்முடைய கழகத் தலைவர் முதல்வர் மட்டுமல்ல, கழக நிர்வாகிகள் மட்டுமல்ல, முத்தமிழ் டாக்டர் கலைஞரின் உயிரினும் மேலான உடன் பிறப்புகள் தான் காரணம் என்று குறிப்பிட்டிருந்தார்.
இளைஞர்கள் நம் பக்கம் வர தயாராக இருக்கிறார்கள். நாம் தான் அவர்களுக்கு வழிவிட்டு அரவணைத்து வழிநடத்தி கைப்பிடித்து கூட்டிச் செல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.
நேற்றைய நிழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த பேசும்போது எதற்கு அதிக கைத்தட்டல் எழுந்தது என்று உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
நான் அதை சொன்னால் மனதில் வைத்துக் கொண்டு பேசிகிறார் என்று நினைத்துக் கொள்வீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை உரை.
- திராவிட அரசியலை அடியோடு ஒழிக்க, 2026 தேர்தல்தான் சரியான தருணம்.
திமுகவுடன் எப்போதும் பாஜக கூட்டணி வைக்காது. தொண்டர்களை கேட்டுத்தான் தேசிய கட்சியான பாஜக முடிவு எடுக்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது:-
திராவிட அரசியலை அடியோடு ஒழிக்க, 2026 தேர்தல்தான் சரியான தருணம்.
2024 தேர்தலில், ஒரு மாற்று சக்தியாக தமிழகத்தில் பாஜக நிரூபித்துள்ளது. கருணாநிதியின் அரசியல், தனிமனித வாழ்க்கையை பிரித்துப் பார்க்கும் பக்குவம் பாஜகவுக்கு உள்ளது.
திமுகவுடன் எப்போதும் பாஜக கூட்டணி வைக்காது. தொண்டர்களை கேட்டுத்தான் தேசிய கட்சியான பாஜக முடிவு எடுக்கும்.
திமுக அரியணை உதயநிதி ஸ்டாலினுக்கு போகும்போது கவலரம் வெடிக்கும் என்று நடிகர் ரஜினிகாந்த் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரஜினிகாந்த் அவரது பாணியில் முதலமைச்சரிடம் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
மேலும், எனக்கு பாடம் எடுக்க நீங்கள் வர வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமிக்கு தெரிவித்துக் கொள்கிறேன். தவழ்ந்து காலில் விழுந்து முதலமைச்சரானவர் ஈபிஎஸ்.
பிரதமர் மோடியை போலவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடந்துக் கொள்ள ஆசைப்படுகிறார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் பலியாகினர்.
- உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
திண்டுக்கல் நத்தம் அருகே மலை அடிவாரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் பலியாகினர்.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம், நத்தம், ஆவிச்சிப்பட்டி கிராமத்தில் அனுமதியின்றி செயல்பட்டுவந்த தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம், ஆவிச்சிப்பட்டி கிராமத்தில் அனுமதியின்றி செயல்பட்டுவந்த பட்டாக ஆலையில் நேற்று (24.08.2024) பிற்பகல் சுமார் 03.30 மணியளவில் வெடிமருந்து தயாரிக்கும் பணியின்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் விருதுநகர் மாவட்டம், சிவகாசி, திருத்தங்கல் முத்துமாரியம்மன் காலனியைச் சேர்ந்த திரு.கண்ணன் (எ) சின்னன் (வயது 42) த/பெ. குருசாமி மற்றும் விருதுநகர் மாவட்டம், சிவகாசி, விஸ்வநத்தம் பகுதியைச் சேர்ந்த திரு.முனீஸ்வரன் (எ) மாசா (வயது 30) த/பெ.மாரிமுத்து ஆகிய இருவரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியாக பெரு முயற்சிக்கு கமல் வாழ்த்து.
- அருமை நண்பர் மக்கள் நீதி மய்யம் தலைவர் 'கலைஞானி' கமல்ஹாசனின் வாழ்த்துக்கு நன்றி.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
"கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியாக பெரு முயற்சி எடுத்த முதலமைச்சருக்கு பாராட்டுகள்" என கமல்ஹாசன் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், கருணாநிதியின் நெஞ்சத்தில் தனக்கெனத் தனி இடம்பெற்றவரும், என் மீது அளவறற அன்பு கொண்டவருமான கமல்ஹாசனுக்கு நன்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தலைவர் கலைஞரின் நெஞ்சத்தில் தனக்கெனத் தனி இடம்பெற்றவரும் - என் மீது அளவற்ற அன்புகொண்டவருமான அருமை நண்பர் மக்கள் நீதி மய்யம் தலைவர் 'கலைஞானி' கமல்ஹாசனின் வாழ்த்துக்கு நன்றி.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- இறைவன் முருகனை பற்றி புகழ்வதற்கோ அல்லது பேசுவதற்கோ நாள் கிழமை என்பது கிடையாது.
- எல்லாமே ஓட்டுக்கான யுக்தி என்று சொல்ல முடியாது.
முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற்றதை பற்றி விஜய் வசந்த் எம்.பி.யிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதில் கூறியிருப்பதாவது:-
இறைவன் முருகனை பற்றி புகழ்வதற்கோ அல்லது பேசுவதற்கோ நாள் கிழமை என்பது கிடையாது. ஒவ்வொரு வழிபாட்டு தளங்களிலும் ஒவ்வொருடைய இறைவன் வழிபாடுகள் இருக்கும்.
அதில் முருக பெருமனை வைத்து ஒரு கூட்டம் நடக்கிறது. எல்லாவற்றையுமே விமர்சனம் செய்வது என்பது தவறான விஷயம் என்பதை பதிவு செய்கிறேன். பழனி கோவிலில் முருகனை பற்றி கருத்தரங்கம் நடை பெற்றது. இதை அரசியல் ஆக்கவேண்டாம் என்று தான் சொல்வேன். இதற்கும் தேர்தலுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை. இது அரசங்கம் நடத்தும் ஒரு நிகழ்ச்சியகவே நான் கருதுகிறேன்.
கேள்வி- முத்தமிழ் முருகன் மாநாடு பற்றி இது ஓட்டுக்கான யுக்தி என்று தமிழசை சொல்கிறார். இதை பற்றி உங்கள் கருத்து என்ன.
பதில்- எல்லாமே ஓட்டுக்கான யுக்தி என்று சொல்ல முடியாது. தமிழக அரசை குறை சொல்வது தவறானது. அது அவர்களுடைய கருத்து சொல்லி இருக்கிறார். ஆனால் தேர்தலுக்கான ஒரு பணியாக கருதவில்லை. இதை இறைவனுக்கு செய்கிற பணியாகவே கருதுகிறேன்.
கேள்வி- தமிழக வெற்றி கழகம் சார்பில் கொடி அறிமுகம் செய்து இருக்கிறார்கள். பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதை பற்றி உங்கள் கருத்து?
பதில்- விமர்சனங்கள் இல்லாமல் எதுவும் இல்லை. மக்களும் அரசியல் வட்டராங்களும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள தருணத்தில் விமர்சனங்கள் இயற்கையானது. இந்த விமர்சனங்களை தாண்டி வருவது தான் வெற்றிக்கான இலக்கு. வருங்காலங்களில் இந்த விமர்சனங்களை எப்படி கையாளுகிறார் என்பதை பார்ப்போம்.
கேள்வி- பிரதமரின் உக்ரைன் பயணம் எந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்ததாக அமையும்.
பதில்- உக்ரைனுக்கு பிரதமர் மோடி முதல் முறையாக சென்றார். அங்குள்ள பிரதமரை சந்தித்து பேசியுள்ளார். அதன் நிலைப்பாடு இனிமேல் தான் தெரியும்.

இதனிடையே விஜய் வசந்த் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள மற்றொரு பதிவு-
கொல்லங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நன்றி கூறும் பயணம் நடைபெற்று வருகிறது. வழிநெடுகிலும் அன்பும் ஆதரவும் தந்து கொண்டிருக்கும் பொது மக்களுக்கும், காங்கிரஸ் மற்றும் இந்திய கூட்டணி நிர்வாகிகளுக்கும் நன்றி.
- விபத்தின்போது, 8 கார்கள், 4 லாரிகள், ஒரு பேருந்து மோதிக்கொண்டுள்ளன.
- 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பேரண்டப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 13 வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தின்போது, 8 கார்கள், 4 லாரிகள், ஒரு பேருந்து மோதிக்கொண்டுள்ளன. இந்த விபத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாகனத்தின் வகையைப் பொறுத்து ஒரு பயணத்திற்கான கட்டணம் ரூ.5 முதல் ரூ.150 வரை உயரும்.
- அனைத்து வகை வாகனங்களுக்கும் சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை இந்த உயர்வு இருக்கும்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பயனீட்டாளர் கட்டணத்தை உயர்த்த உள்ளதால், தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வது செப்டம்பர் 1-ந் தேதி முதல் விலை அதிகரிக்க உள்ளது.
வாகனத்தின் வகையைப் பொறுத்து ஒரு பயணத்திற்கான கட்டணம் ரூ.5 முதல் ரூ.150 வரை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளின் கூறியதாவது:-
சலுகை ஒப்பந்தத்தின்படி கட்டண உயர்வு ஆண்டுதோறும் அமலுக்கு வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகள் கட்டணம் (விகிதங்கள் மற்றும் வசூல் நிர்ணயம்) விதிகள், 2008-ன் படி மொத்த விற்பனை விலைக் குறியீட்டின் அடிப்படையில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டது.
தற்போது மாநிலத்தில் 67 செயல்பாட்டு சுங்கச்சாவடிகள் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ளன.
அவற்றில் 25 சுங்கச்சாவடிகளில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 1 -ந் தேதி பயனர் கட்டணம் மாற்றியமைக்கப்படுகிறது.
அதன்படி, அனைத்து வகை வாகனங்களுக்கும் சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை இந்த உயர்வு இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகள் மூலம் 2023- 2024-ல் ரூ.4,221 கோடி வசூலித்துள்ளது. இது 2022- 23ல் வசூலான ரூ.3,817 கோடியை விட 10 சதவீதம் அதிகம்.
மாநில வாரியாக வசூலிக்கப்பட்ட கட்டணங்களில் தமிழ்நாடு 5வது இடத்தில் உள்ளது. உத்தரபிரதேசம் வசூலில் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது.
6,961 கோடி, ராஜஸ்தான் ரூ.5,954 கோடி, மகாராஷ்டிரா ரூ.5,352 கோடி மற்றும் குஜராத் ரூ. 4,781 கோடி வசூலிக்கப்பட்டது.
தமிழகத்தில் எல் அண்ட் டி கிருஷ்ணகிரி தோப்பூர் சுங்கச்சாவடியில் அதிகபட்சமாக ரூ.269 கோடி வசூலித்து உள்ளது. கிருஷ்ணகிரி சுங்கச் சாவடியில் ரூ.257 கோடி வசூலித்து 2-வது இடத்தில் உள்ளது.
- தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது சாத்திய மற்றது அல்ல.
- தமிழக அரசு நினைத்தால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அடுத்த மாதமே செயல்படுத்தலாம்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசில் 2004-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றாக, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு இது ஈடு இல்லை என்றாலும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை விட சிறந்தது என்ற வகையில் வரவேற்கத்தக்கது.
மத்திய அரசு அறிவித்து உள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின்படி, 25 ஆண்டுகள் பணி செய்து ஓய்வு பெறுவோர் அனைவருக்கும் அவர்கள் கடைசி 12 மாதங்களில் பெற்ற சாராசரி ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஊதியமாக வழங்கப்படும்.
குறைந்தது பத்தாண்டுகள் பணியாற்றியவர்களுக்கு மாதம் ரூ.10ஆயிரம் உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். ஓய்வூதியர்கள் உயிரிழ்ந்தால், அவர் கடைசியாக பெற்ற ஓய்வூதியத்தில் 60சதவீதம் அவரது வாழ்விணையருக்கு வழங்கப்படும். அதே நேரத்தில் பணியாளர்கள் செலுத்தும் பங்களிப்புத் தொகையில் எந்த மாற்றமும் இல்லை. ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் என்பது பழைய ஓய்வூதியத்திற்கு மாற்றாக முடியாது. ஆனால், புதிய ஓய்வூதியத்துடன் ஒப்பிடும் போது சிறந்தத் திட்டம். உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் என்பது தான் அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு ஆகும்.
தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் போதிலும் அசைந்து கொடுக்க தமிழக அரசு மறுக்கிறது. தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது சாத்திய மற்றது அல்ல.
கடந்த இரு ஆண்டுகளில் ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், பஞ்சாப், இமாலயப் பிரதேசம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு நினைத்தால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அடுத்த மாதமே செயல்படுத்தலாம். ஆனால், அதை செய்ய தி.மு.க. அரசுக்கு மனம் இல்லை. பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட வில்லை என்றால் அடுத்து வரும் மாதங்களில் அரசு ஊழியர்கள் கடுமையான போராட்டங்களில் ஈடுபடுவதை தடுக்க முடியாது.
வாழ்நாளில் 30 முதல் 35 ஆண்டுகள் வரை அரசுக்காக பணியாற்றும் அரசு ஊழியர்கள், ஓய்வுபெற்ற பிறகு அவர்களுக்கான சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. அரசு ஊழியர்களின் வாக்குகளை வாங்குவதற்காக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய கடமையும் திமுக அரசுக்கு உண்டு. இந்த இரண்டையும் நிறைவேற்றும் வகையில் தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- உதயநிதி ஸ்டாலின் மூலம் இன்று பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது.
- 50 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை உதயநிதி வழங்கினார்.
சென்னை:
மெரினா கடற்கரை- பெசன்ட் நகர் கடற்கரைப் பகுதிகளுக்கு தினந்தோறும் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பொதுமக்களாலும், அங்குள்ள கடைகளாலும் மணற்பரப்பு அசுத்தம் ஆகிறது.
எனவே, மாநகராட்சி பணியாளர்கள் மெரினா பெசன்ட் நகர் கடற்கரையினை பொலிவுடன் கண்காணிக்க ஏதுவாகவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தவும், மணற்பரப்பில் உள்ள கடைகளை கண்காணித்து துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாக, அனைத்து விதமான நிலப்பரப்பிலும் இயக்கக்கூடிய நான்கு சக்கர அதிநவீன கடற்கரை மோட்டார் வாகனங்கள் தலா ரூ.16 லட்சம் வீதம் ரூ.48 லட்சம் மதிப்பில் 3 ரோந்து வாகனங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பயன்பாட்டிற்கு வழங்கினார்.
மேலும், மாநகராட்சியின் சார்பில் பராமரிக்கப்படும் நீர்நிலைகளில் 3.5 மீ. கீழ் அகலம் குறைவாக உள்ள கால்வாய்களை பராமரிக்க மனிதர்களை பயன்படுத்தாமல் ரோபோடிக் மல்டி பர்பஸ் எக்ஸ்கவேட்டர் போன்ற அதிநவீன எந்திரங்களை பயன்படுத்தி தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதனடிப்படையில் தூய்மை இந்தியா திட்ட சேமிப்பு நிதியின் கீழ், 2 ரோபோடிக் மல்டிபர்பஸ் எக்ஸ்கவேட்டர் ரூ.22.80 கோடி மதிப்பில் லிச்டென்ஸ் டைன் நாட்டில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மூலம் இன்று பயன்பாட்டிற்கு வழங்கப் பட்டது.
மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை மணற்பரப்பை சுத்தம் செய்ய 7 எந்திரங்கள் 2019 ஆண்டு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த எந்திரங்களின் தேய்மானத்தின் காரணமாக எந்திரங்களின் முழு திறனைபெறுவதற்கு ஏதுவாக, முதற்கட்டமாக 2 எந்திரங்களில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டு தற்பொழுது பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது. இதனால் கடற்கரை மணற் பரப்பினை சுத்தம் செய்யும் பணிகள் திறம்படவும், துரிதமாகவும் மேற்கொள்ளப்படும்.
சென்னை மாநகராட்சி யில் பணிபுரிந்து பணியிடை காலமான பணியாளர்களின் குடும்ப நலனைக் கருத்தில் கொண்டு, அப்பணியாளர்களின் வாரிசுதாரர்களான 253 ஆண்கள், 158 பெண்கள் என மொத்தம் 411 நபர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருணை அடிப்படையில் 50 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
- நாடு முழுவதும் நடைபெறும் அனைத்து நடவடிக்கைகளும் தமிழக மக்களுக்கு எதிராக உள்ளது.
- தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது.
திருப்பூர்:
அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி திருப்பூர் வடக்கு தொகுதிக்குட்பட்ட பகுதியில் இன்று நடை பெற்றது. நிகழ்ச்சியில் உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டையை வழங்கி மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., பேசியதாவது:-
கடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., மற்றும் அதன் கூட்டணிக்கு ஏன் வாக்களித்தோம் என்று பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். தேர்தலுக்கு பின்பு நாடு முழுவதும் நடைபெறும் அனைத்து நடவடிக்கைகளும் தமிழக மக்களுக்கு எதிராக உள்ளது.
தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. இது தான் தி.மு.க.வின் பரிசாக உள்ளது. திருப்பூரில் தொழில் மிகவும் நசிந்து விட்டது. இதனை சரிசெய்ய தமிழக முதலமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தனது திரைப்படங்கள் தமிழ்நாட்டில் ரிலீசாக வேண்டும் என்பதற்காகவே ரஜினி, தி.மு.க.வை பாராட்டி பேசி வருகிறார். தி.மு.க.,-பா.ஜ.க., இடையே ரகசிய கூட்டணி உருவாகியுள்ளது. 2 கட்சிகளும் நெருங்கி வரத் தொடங்கியுள்ளது.
அமெரிக்கா செல்லும் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அரசின் உதவிகள் தேவைப்படுகிறது. தமிழகத்தில் ஸ்டாலின் தலைமைக்கு கீழ் உள்ள காவல்துறை செயல்படவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
- சிண்டிகேட் கூடி முடிவெடுக்கும் வரை கட்டணம் உயராது என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு.
- தேர்வு கட்டணத்தை உயர்த்துவது மாணவர்களை பாதிக்கும் என்பதால் நிறுத்தி வைப்பு.
அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுக் கூட்டண உயர்வு ந நிறுத்தி வைக்கப்படுவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை கிண்டியில் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அண்ணா பல்கலைக்கழக பொறியியல் தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சிண்டிகேட் கூடி முடிவெடுக்கும் வரை கட்டணம் உயராது. தற்போது கட்டக்கூடிய தேர்வு கட்டணமே இனி நடைமுறையில் இருக்கும்.
தேர்வு கட்டணத்தை உயர்த்துவது மாணவர்களை பாதிக்கும் என்பதை கருத்தில் கொண்டு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- முத்தமிழ் முருகன் மாநாடு திருமூலரை எனக்கு நினைவுப்படுத்துகிறது.
- இறைவனை எத்தனையோ வகையில் பார்த்திருக்கிறார்கள்.
பழனி:
பழனியில் நடந்த முத்தமிழ் முருகன் மாநாட்டில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சிவஞானம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
முத்தமிழ் முருகன் மாநாடு திருமூலரை எனக்கு நினைவுப்படுத்துகிறது. அவனை ஒழிய அமரரும் இல்லை, அவன் இன்றி செய்யும் அருந்தவம் இல்லை, அவன் இன்றி ஆவதுமில்லை, அவனின்றி ஊர் போகுமாறு அடியேனே... என்ற திருமூலர் சொன்னதை ஆசியாவில் இருந்து வந்தவர்களும் வெளிநாட்டினரும் உணர்ந்து கொண்டுள்ளனர். அவன் இன்றி நாம் எதுவும் செய்ய முடியாது என்பதை உணர்த்துவதன் பயன்தான் இந்த மாநாடு.
இறைவனை எப்படி எல்லாம் பாடுவோம் என்று நம்முடைய முன்னோர்களும், அறிஞர்களும் பாடிக்காட்டி இருக்கின்றார்கள். சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். இறைவனை எத்தனையோ வகையில் பார்த்திருக்கிறார்கள்.
பொன்னுலகு வேண்டுமா பொருள் வேண்டுமா இவைகள் எல்லாம் அழிந்து போகும். அழியாத முத்தியும் வேண்டுமா வந்து பாருங்கள் என்று அனைவரும் வாருங்கள் முருகனிடம் வேண்டியதை பெற்றுக் கொள்ளுங்கள். பொன் பெற்றுக் கொள்ளுங்கள் பொருள் பெற்றுக் கொள்ளுங்கள் என வேண்டாம் என்றால் முத்தியும் பெற்றுக் கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் நீதிபதி சுப்பிரமணியன் பேசியதாவது:-
கடம்பத்து தன் பரங்குன்றத்து என்ற குறிப்பிடுதல் மூலம் திருப்பரங்குன்றத்தில் முருக பெருமான் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார் என்ற குறிப்பு உள்ளது. இவ்வாறு அனைத்து பண்டைய தமிழ் நூல்களிலும் முருகனைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. முத்தமிழும் முருகனும் என்றும் பிரிக்க முடியாதவை. அருணகிரிநாதர் புகழிலே கிட்டத்தட்ட 90 பாடல்களில் இந்த பழனி முருகனைப் பற்றி பாடி இருக்கிறார். அதில், 110-வது பாடல் திருப்புகலில் அருணகிரிநாதர் பாடுகிறார், அவனிதனிலே பிறந்து, மதலை எனவே தவழ்ந்து, அழகு பெறவே நடந்து, இளைஞனாய் அழகு மலையே விகழ்ந்து, முதலை மொழியை புகழ்ந்து, அது விதம் அதாய் வளர்ந்து, பதினாறாய் சிவகலைகள் ஆகமங்கள் மிகவும் அரியோர் அன்பு திருவடிகளை நினைத்து துதியாமல் இதுவரைக்கும், என அவரை பற்றி சொல்லியிருக்கிறார்.
இவ்வாறு முருகனை பற்றிய குறிப்புகள் பல தமிழ் நூல்களில் இருக்கின்றன. இவற்றை ஒரு மிகப்பெரிய ஆராய்ச்சி நடத்தி, ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்து பல தமிழ் அறிஞர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அனைவரையும் ஒன்றிணைத்து இந்த மாநாட்டை நடத்துவது தமிழக அரசுக்கு பெருமிதம் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






