என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வருவது எப்போது?- அன்புமணி கேள்வி
- தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது சாத்திய மற்றது அல்ல.
- தமிழக அரசு நினைத்தால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அடுத்த மாதமே செயல்படுத்தலாம்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசில் 2004-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றாக, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு இது ஈடு இல்லை என்றாலும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை விட சிறந்தது என்ற வகையில் வரவேற்கத்தக்கது.
மத்திய அரசு அறிவித்து உள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின்படி, 25 ஆண்டுகள் பணி செய்து ஓய்வு பெறுவோர் அனைவருக்கும் அவர்கள் கடைசி 12 மாதங்களில் பெற்ற சாராசரி ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஊதியமாக வழங்கப்படும்.
குறைந்தது பத்தாண்டுகள் பணியாற்றியவர்களுக்கு மாதம் ரூ.10ஆயிரம் உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். ஓய்வூதியர்கள் உயிரிழ்ந்தால், அவர் கடைசியாக பெற்ற ஓய்வூதியத்தில் 60சதவீதம் அவரது வாழ்விணையருக்கு வழங்கப்படும். அதே நேரத்தில் பணியாளர்கள் செலுத்தும் பங்களிப்புத் தொகையில் எந்த மாற்றமும் இல்லை. ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் என்பது பழைய ஓய்வூதியத்திற்கு மாற்றாக முடியாது. ஆனால், புதிய ஓய்வூதியத்துடன் ஒப்பிடும் போது சிறந்தத் திட்டம். உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் என்பது தான் அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு ஆகும்.
தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் போதிலும் அசைந்து கொடுக்க தமிழக அரசு மறுக்கிறது. தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது சாத்திய மற்றது அல்ல.
கடந்த இரு ஆண்டுகளில் ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், பஞ்சாப், இமாலயப் பிரதேசம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு நினைத்தால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அடுத்த மாதமே செயல்படுத்தலாம். ஆனால், அதை செய்ய தி.மு.க. அரசுக்கு மனம் இல்லை. பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட வில்லை என்றால் அடுத்து வரும் மாதங்களில் அரசு ஊழியர்கள் கடுமையான போராட்டங்களில் ஈடுபடுவதை தடுக்க முடியாது.
வாழ்நாளில் 30 முதல் 35 ஆண்டுகள் வரை அரசுக்காக பணியாற்றும் அரசு ஊழியர்கள், ஓய்வுபெற்ற பிறகு அவர்களுக்கான சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. அரசு ஊழியர்களின் வாக்குகளை வாங்குவதற்காக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய கடமையும் திமுக அரசுக்கு உண்டு. இந்த இரண்டையும் நிறைவேற்றும் வகையில் தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






