என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பிரதம மந்திரி கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்ட பணிகள்.
- நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் ஜூபிடர் உதயம், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.டி.உதயம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
கட்டிமாங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பிரதம மந்திரி கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 2.25 கோடி மதிப்பிலான 2 சாலை திட்ட பணிகளை தொடங்கி வைத்தேன்.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் ஜூபிடர் உதயம், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.டி.உதயம், அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- இரட்டை மின் ஆதாரங்களின் செயலிழப்பு காரணமாக சென்னையின் சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.
- நள்ளிரவு 2 மணியளவில் சென்னை மாநகரம் முழுவதும் 100% மின்சாரம் சீரமைக்கப்பட்டது.
சென்னை:
நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
சென்னையின் முக்கியமான மின்சார மையமான மணலி துணை மின் நிலையத்தில் நேற்று (செப்டம்பர் 12, 2024) இரவு சுமார் 09:58 மணி அளவில், மின்சாரம் வழங்கும் இரண்டு மின்னூட்டி ஆதாரங்களும் இயக்கத்தில் இருந்த போதும் எதிர்பாராத விதமாக ஒரு மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக, மணலி துணை மின்நிலையத்திற்கு மின்சாரம் வழங்கும் இரண்டு 400 கிலோ வோல்ட் மின் ஆதாரங்களின் (அலமாதி மற்றும் NCTPS II) அடுத்தடுத்த மின்தடைக்கு வழிவகுத்தது, ஒரு ஜம்பர் துண்டிப்பும் கண்டறியப்பட்டது. தீ உடனடியாக அணைக்கப்பட்டது. இருப்பினும், இந்த இரட்டை மின் ஆதாரங்களின் செயலிழப்பு காரணமாக சென்னையின் சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.
மின் தடை காரணமாக, பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை நீக்கி, மாற்று வழியில் மின்சாரம் விநியோகம் வழங்கிட அனைத்து நடவடிக்கைகளும் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் துரிதமாக மேற்கொள்ளப்பட்டது. நள்ளிரவு 2 மணியளவில் சென்னை மாநகரம் முழுவதும் 100% மின்சாரம் சீரமைக்கப்பட்டது.
மேற்கண்ட மின்தடை காரணமாக, சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து மருத்துவமனைகள் மற்றும் அனைத்து அத்தியாவசிய சேவைகளிலும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்த தீ விபத்தில் ஏற்பட்ட சேதங்களைப் போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய பணிகளை முடுக்கிவிட்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
- திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற பேரியக்கம் தொடங்கப்பட்ட நாள்.
- தோழனாகத் திகழ்கிற இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம்.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமெரிக்காவில் இருந்து இன்று தமிழகம் புறப்படும் முன்பு தி.மு.க. தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் அரசுமுறைப் பயணத்தில் ஏறத்தாழ இரண்டு வாரகாலமாக தொடர்ச்சியான பணிகளில் இருந்தாலும், என் உள்ளம் ஒவ்வொரு நொடியும் தமிழ்நாட்டைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறது.
உலகின் முன்னணித் தொழில் நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஒவ்வொன்றும் தமிழ்நாட்டின் தொழில் முதலீட்டினைப் பெருக்கி, இளைய தலைமுறையினருக்கான வேலைவாய்ப்பை வழங்கிட வழிவகுக்கின்றன.
முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்பதை வெறும் சொற்களாக இல்லாமல், முழுமையான செயல்களாக மாற்றிக் கொண்டிருக்கிறது திராவிட மாடல் அரசு.
அதை அமெரிக்காவில் வாழும் தமிழர்களும் நன்றாகப் புரிந்துகொண்டு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தங்களின் ஒத்துழைப்பை வழங்குவதில் ஆர்வமாக இருக்கிறார்கள்.
சிகாகோ நகரின் ரோஸ்மாண்ட் அரங்கத்தில் செப்டம்பர் 7-ம் நாள் அமெரிக்கத் தமிழர்களுடனான சந்திப்பு பெரும் உற்சாகத்தை அளித்தது.
அமெரிக்காவில் இருக்கிறோமா, அன்னைத் தமிழ்நாட்டில்தான் இருக்கிறோமா என்கிற அளவிற்கு, 5000 தமிழர்களுக்கு மேல் திரண்ட ஒரு மினி தமிழ்நாடாக அந்த அரங்கம் அமைந்திருந்தது.
இன-மொழி உணர்வால் அவர்களுக்கு நானும், எனக்கு அவர்களும் உறவாக அமைந்த சிறப்பான நிகழ்வு அது.
அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சிகாகோவில் நடந்த சந்திப்புக்கு வருகை தந்த தமிழர்களும், பணிச்சுமை உள்ளிட்ட காரணங்களால் வர இயலாமல் போனவர்களும் தமிழ்நாட்டில் கடந்த மூன்றாண்டு களில் திராவிட மாடல் அரசு நிறைவேற்றியுள்ள சாதனைத் திட்டங்களைப் பாராட்டத் தவறவில்லை.
அவர்களின் பாராட்டுகள், உங்களில் ஒருவனான எனக்கு தமிழ்நாட்டின் நினைவுகளையே மீண்டும் மீண்டும் கிளறின. திராவிட முன்னேற்றக் கழகம் என்ற ஜனநாயகப் பேரியக்கம் என்றென்றும் தமிழையும் தமிழர்களையும் காக்கின்ற இயக்கமல்லவா!
இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மாநிலக் கட்சி, முக்கால் நூற்றாண்டு காலத்தைக் கடந்து, மக்களின் பேராதரவுடன் ஆட்சிப் பொறுப்பில் இருப்பதுடன், இந்திய அளவில் கொள்கை வலிமைமிக்க தாக்கங்களை ஏற்படுத்தக் கூடிய இயக்கமாகவும் திகழ்கிறதென்றால், அது தி.மு.க. தான்.

செப்டம்பர் 15-இந்த மாபெரும் இயக்கத்தை உருவாக்கித் தந்து, இந்த மாநிலத்தின் உரிமைகளைக் காத்து, தமிழ்நாடு என்று நம் மாநிலத்திற்குப் பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள். செப்டம்பர் 17-கொள்கைப் பேராசான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்தநாள்.
அதே நாள்தான், திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற பேரியக்கம் தொடங்கப்பட்ட நாள். இந்த மூன்றையும் இணைத்து, முப்பெரும் விழா என்று பெயர்சூட்டி திராவிடத் திருவிழாவாகக் கொண்டாடும் வழக்கத்தை உருவாக்கியவர் நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர்.
வருகிற 17-ந்தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெறவுள்ள பவளவிழா நிகழ்வுகள் குறித்தும், மாவட்டங்கள் தோறும் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் குறித்தும் அமெரிக்காவில் இருந்தபடியே, கழகத்தின் ஒருங்கிணைப்புக் குழுவினருடன் காணொலியில் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதுடன், மாவட்டக் கழகச் செயலாளர்கள் பலரிடமும் தொடர்ந்து பேசி வருகிறேன்.
ஆகஸ்ட் 16-ஆம் நாள் நடைபெற்ற மாவட்டக் கழக செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, கழக மாவட்டங்கள் பலவற்றிலும் கழகத்தின் பவள விழாவிற்கான சுவர் விளம்பரங்கள் எழில்மிகுந்த முறையிலே எழுதப்பட்டிருப்பதை காணொலிகளாக நம் கழக நிர்வாகிகள் அனுப்பியிருந்தார்கள். சிறப்பான முறையிலே சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டிருப்பதைக் கண்டு மகிழ்ந்தேன்.
தி.மு.க.வின் கடைக்கோடி உறுப்பினரின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் உட்கட்சி ஜனநாயகத்தன்மையின் அடிப்படையில் கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் பங்கேற்கும் பொது உறுப்பினர்கள் கூட்டம் தொடர்ந்து நடைபெறுவதையும் அறிந்து கொண்டேன்.
வட்ட வாரியாக-கிளைவாரியாக நடைபெற்ற இத்தகைய பொது உறுப்பினர் கூட்டங்கள் பெரும்பாலான கழக மாவட்டங்களில் முழுமையாக நிறைவு பெற்றிருக்கின்றன.
பொது உறுப்பினர்கள் கூட்டங்களில், தொண்டர்களின் ஆழ்மனக் கருத்துகள் அடி வயிற்றிலிருந்து வெளிப்பட்ட குரலாக ஒலித்ததையும், தி.மு.க.வின் தலைவர் என்ற முறையில் நான் கவனிக்கத் தவறவில்லை.
தொண்டர்களின் குரலில் ஒலிக்கும் நியாய உணர்வுக்கு மதிப்பளிக்கத் தலைமை தவறுவதில்லை என்ற உறுதியை உங்களில் ஒருவனாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தி.மு.க.வின் பவள விழா பொதுக்கூட்டம் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் வருகிற 17-ந்தேதி எழுச்சிகரமாக நடைபெற இருக்கிறது.
இந்த 75 ஆண்டுகாலத்தில், தெற்குதான் வடக்கிற்கு வழிகாட்டுகிறது என்கிற அளவிற்கு தி.மு.க.வின் கொள்கைத் தாக்கம் நாடு முழுவதும் பேசப்படுகிறது. திராவிட மாடல் என்பது இந்திய மாநிலங்கள் பின்பற்றும் கோட்பாடாக மாறியிருக்கிறது.
உலகத்தில் தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்களின் நம்பிக்கைக்குரிய இயக்கமாக-அவர்களின் நண்பனாகத் தோழனாகத் திகழ்கிற இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். இதுதான் 75 ஆண்டுகாலப் பயணத்தின் சாதனை.
இந்த வெற்றிப் பயணம் தொடர்ந்திட, 17-ந்தேதி அன்று வரலாற்றுப் பெருவிழாவான கழகத்தின் பவள விழாவில் படையெனத் திரண்டு, கொண்டாடி மகிழ்வோம்.
இது உங்களில் ஒருவனான என்னுடைய அழைப்பு மட்டு மல்ல; இந்த இயக்கத்தை உருவாக்கிய பேரறிஞர் அண்ணாவும், பேணிப் பாதுகாத்து வளர்த்த முத்தமிழறிஞர் கலைஞரும் நம்மை அழைக்கிறார்கள்! அணி திரள்வோம்! பணி தொடர்வோம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- சீக்கிய சமுதாய மக்களை காங்கிரஸ் கட்சி படுகொலை செய்தது.
- ராகுல் காந்தி இந்தியாவுக்கே எதிரி போல செயல்படுகிறார்.
மதுரை:
மதுரையில் பா.ஜ.க. மூத்த தலைவரும், அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளருமான எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
ராகுல் காந்தி அமெரிக்காவில் இந்தியாவுக்கு எதிரான நபர்களை சந்தித்து பேசி உள்ளார். இந்தியாவில் உள்ள பட்டியல் சமுதாய மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக் கீட்டை ரத்து செய்வேன் எனவும் கூறியுள்ளார்.
இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டதற்கு ஆயிரக்கணக்கான சீக்கிய சமுதாய மக்களை காங்கிரஸ் கட்சி படுகொலை செய்தது.
ராகுல் காந்தி இந்தியாவிற்கு எதிரான சக்திகளை ஒருங்கிணைத்து சாதி, மத கலவரங்களை உண்டாக்கி ஆட்சியை பிடிக்க நினைக்கிறார். ராகுல் காந்தி இந்தியாவுக்கே எதிரி போல செயல்படுகிறார்.
இந்தியா குறித்து மிக தவறான கருத்துக்களை ராகுல் காந்தி அமெரிக்காவில் பேசி உள்ளார். ராகுல் காந்தியின் செயல்பாடுகள் தேச விரோத செயலாகும்.
இந்தியா முழுதும் 16,000 பள்ளிகளை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் மத்திய அரசு தமிழகத்திற்கு ரூ.4,000 கோடிக்கு மேலாக நிதி தர வேண்டும். திட்டத்தின் விதிகளின் படி தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே நிதி கிடைக்கும்.
முன்னாள் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்கிறோம் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
தமிழக அரசு தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்து பிடிவாதம் செய்கிறது. அமைச்சர் மகேஷ் பொய்யா மொழி குடும்ப பிள்ளைகளுக்கு மும்மொழி வேண்டும், தமிழக மக்களின் பிள்ளைகளுக்கு இருமொழி கற்றுக் கொடுக்கிறார்கள். 1985 -ம் ஆண்டு ராஜீவ் காந்தி தேசிய கல்விக் கொள்கையை கொண்டு வந்தார்.
தமிழக மக்களை தி.மு.க. ஏமாற்றி வருகிறது. தமிழக அரசு தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மறுநாள் காலை மத்திய அரசின் கல்வி நிதி வந்தடையும்.
நீட் தேர்வு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அமல்படுத்தப்பட் டது, நீட் விலக்கு வேண்டுமானால் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யவேண்டும்.
பா.ஜ.க. மது அருந்ததாத உறுப்பினர்களை கொண்ட கட்சி என்பதால் மது ஒழிப்பு மாநாட்டுக்கு அழைக்க வேண்டாம் என திருமாவளவன் நினைத்து இருக்கலாம்.
மகாவிஷ்ணு எந்தவொரு தவறும் செய்யவில்லை. மகாவிஷ்னுவை மிரட்டும் அமைச்சர் மகேஷ் பொய்யா மொழி திருச்சியில் ஏராளமான குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றவாளி மீது ஏன் நடவடிக்கைகள் எடுக்கவில்லை.
விஜய்யின் கொள்கை என்பது நீட்டை எதிர்ப்பது, கல்வியை பொது பட்டியலுக்கு கொண்டு வருவதாகும்.
ஆகவே விஜய் திராவிட கட்சிகளுக்கு தான் போட்டியாளராக இருப்பார். விஜய் அரசியலுக்கு வருவதால் பா.ஜ.க.விற்கு பாதிப்பில்லை, திராவிட கட்சிகளின் வாக்குகளைத் தான் விஜய் பிரிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து அணைகள் நிரம்பியது.
- டெல்டா பாசனத்துக்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
சேலம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து அங்குள்ள அணைகள் நிரம்பியது. இதையடுத்து உபரிநீர் அதிகளவில் வெளியேற்றப்பட்டு வந்ததால் மேட்டூர் அணையும் கடந்த ஜூலை மாதம் 30-ந் தேதி நிரம்பியது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் தீவிரத்தை பொறுத்து அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் வேகமாக குறைந்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் மழையின் காரணமாக மீண்டும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. நேற்று மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 619 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 11 ஆயிரத்து 631 கனஅடியாக அதிகரித்து காணப்பட்டது. மேலும் அணையின் நீர்மட்டம் 112.39 அடியாக இருந்தது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 23 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 700 கனஅடியும் திறக்கப்பட்டு வருகிறது.
நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டாலும், அதை விட அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. தற்போது அணையில் 81.85 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- ஒரு சில காவல் துறையினர் மக்களை பாதுகாப்பதற்கு பதிலாக, சமூக விரோதிகளுக்கு உடந்தையாக இருப்பதாக வரும் செய்திகள் வெட்கக் கேடானதாகும்.
- விடியா திமுக ஆட்சியில் தமிழகம் போதைப் பொருள் கேந்திரமாக மாறியுள்ளது.
சென்னை:
அ.திமு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தான் ஆட்சி செய்யும் மாநிலத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் அமெரிக்காவில் மோட்டார் பொருத்திய சைக்கிளை மிதிப்பது போல் நடிக்கும் பொம்மை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் நடவடிக்கை விடியா திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையைக் காட்டுகிறது. கடந்த 40 மாதங்களாக தமிழகத்தில் நாள்தோறும் சமூக விரோதச் செயல்களும், குற்றச் செயல்களும் அரங்கேறி வருகின்றன.
திமுக ஆட்சியில் கொலைகாரர்களும், கொள்ளைக்காரர்களும், பாலியல் வன்கொடுமையாளர்களும் சுதந்திரமாக, சர்வ சாதாரணமாக குற்றம் புரிவது வாடிக்கையாக இருக்கிறது. 6 வயது சிறுமி முதல் 60 வயதைக் கடந்த பெண்கள் வரை, யாருக்குமே பாதுகாப்பில்லாத சூழ்நிலை விடியா திமுக ஆட்சியில் ஏற்பட்டுள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது. தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் குற்றச் செயல்களை, குறிப்பாக பாலியல் குற்றச் செயல்கள் பற்றி, நான் பலமுறை சட்டமன்றத்திலும், அறிக்கைகள் வாயிலாகவும், பேட்டிகள் வாயிலாகவும் விடியா திமுக அரசின் கவனத்தை ஈர்த்தும், அதைத் தடுக்க இந்த அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதை நாளிதழ்களும், ஊடகங்களும் தினசரி நிகழ்வுகளாகச் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.
காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், பாலியல் குற்றங்களைத் தடுக்கவும், சட்டப்படி உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் தமிழக காவல்துறைக்கு முழு சுதந்திரத்தை இன்றுவரை வழங்கவில்லை. மேலும், விடியா திமுக அரசின் முதலமைச்சருடைய செயலற்றத் தன்மையால் ஒருசில காவல் துறையினர் மக்களை பாதுகாப்பதற்கு பதிலாக, சமூக விரோதிகளுக்கு உடந்தையாக இருப்பதாக வரும் செய்திகள் வெட்கக் கேடானதாகும்.
விடியா திமுக ஆட்சியில் தமிழகம் போதைப் பொருள் கேந்திரமாக மாறியுள்ளது. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு முக்கிய காரணம் தமிழகத்தில் அதிகரித்து வரும் கஞ்சா, போதை மாத்திரைகள், மெத்தபெட்டமைன் போன்ற போதைப் பொருட்களின் நடமாட்டம் மற்றும் பயன்பாட்டால், குற்றவாளிகள் தங்கள் நிலையை மறந்து திருட்டு, பாலியல் வன்கொடுமைகள், கொலை, கொள்ளை போன்ற குற்றச் செயல்களில் சர்வசாதாரணமாக ஈடுபடுகின்றனர்.
11.9.2024 அன்று சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணையின்போது, "தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாகவும், இதனை கட்டுப்படுத்த முடியவில்லையெனில் சிறப்புக் குழு போடுவோம்" என்று விடியா திமுக அரசை எச்சரித்துள்ளது. இதுபோன்ற நிலைமை இதுவரை தமிழகத்திற்கு ஏற்பட்டதில்லை. ஊடகங்களில் நாள்தோறும் வரும் செய்திகளில் பெண்களும், சிறுமிகளும் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகிறார்கள் என்பது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும். தங்களுடைய உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் மக்கள் அன்றாடம் அல்லல்பட்டு வருவது கண்கூடாகத் தெரிகிறது. அந்த வகையில், ஊடகங்கள் மற்றும் நாளிதழ்களில் வெளிவந்த பாலியல் குற்றச்சாட்டுகளில் ஒருசிலவற்றை இங்கே குறிப்பிடுகிறேன்.
* கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே கந்திகுப்பம் கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் தேசிய மாணவர் படை பயிற்சியாளர், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று புகார்.
* கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே ஆலாங்கொம்பு அரசுப் பள்ளி மாணவிகளுக்கு (12 வயதுக்குட்பட்ட 9 மாணவிகளுக்கு) பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் நடராஜன்,
* சிவகங்கை, மாவட்டம் காரைக்குடி அருகே 3 ஆம் வகுப்பு மாணவிக்கு, முத்து என்ற 72 வயது முதியவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவர் மேலும் பல சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
* கோவை மாவட்டம், வால்பாறை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தற்காலிக பேராசிரியர்கள் சதீஸ்குமார், ராஜபாண்டி, முரளிராஜ் மற்றும் லேப் டெக்னீஷியன் அன்பரசு ஆகிய 4 நபர்கள் மீது மாணவிகள் புகார்.
* திருச்சி, மேலப்புதூர் பகுதியில், டிஇஎல்சி நிர்வாகத்திற்குட்பட்ட பிஷப் ஹைமன் நினைவு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியராக உள்ளவர் கிரேஸ் சகாயராணி. இவரது மகன் சாம்சன் டேனியல் (வயது 31) லால்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். பள்ளி ஹாஸ்டலில் தங்கியுள்ள விடுதி மாணவிகளுக்கு மருத்துவம் பார்ப்பதுபோல 6 மாதங்களாகவே, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
* தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள பாப்பாநாடு பகுதியைச் சேர்ந்த 23 வயது பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து 17 வயது சிறுவன் உள்பட 4 பேர் மீது புகார்.
* 17 வயது கல்லூரி மாணவி திருச்சி சூப்பிரண்டு அலுவலகத்தில் செப்டம்பர் 3-ஆம் தேதி புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், லால்குடி அருகே சிறுமருதூர் கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவர் அமைச்சர் ஒருவரின் ஓட்டுநர் எனக் கூறி அவரது 5 நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்ததாகப் புகார்.
* சென்னை அண்ணாநகரில், 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ஆம் தேதி அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர். இதன்படி, அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சிறுமியின் பெற்றோரைத் தாக்கியதாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் வந்ததையடுத்து குற்றவாளி கைது செய்யப்பட்டார் என்று கூறப்படுகிறது.
ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து, தமிழகத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருவதை அனைவரும் அறிவோம். சமீப காலங்களில் ஊடகம் மற்றும் நாளிதழ்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தினசரி செய்திகளாக வெளிவருவதைப் பார்த்து தமிழக மக்களுடன் நானும் மிகுந்த வருத்தமும், மன வேதனையும் அடைந்துள்ளேன். சமூக விரோத சக்திகளைக் கட்டுப்படுத்தத் தவறிய இந்த விடியா திமுக ஆட்சியில், தமிழக மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 40 மாதகால திராவிட மாடல் ஆட்சியில் அதிகரித்து வரும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கத் தவறிய; சமூக விரோதச் செயல்களை கட்டுப்படுத்தத் தவறிய விடியா திமுக அரசைக்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மகளிர் அணி மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில், 24.9.2024 செவ்வாய் கிழமை காலை 9.30 மணியளவில், சென்னை - மாநகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், கழக மகளிர் அணிச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பா. வளர்மதி அவர்கள் தலைமையிலும்; கழக அமைப்புச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திரா அவர்கள் முன்னிலையிலும் நடைபெறும்.
விடியா திமுக அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கழக மகளிர் அணியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், இளம் பெண்கள் பாசறையைச் சேர்ந்த நிர்வாகிகளும், மகளிரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
- அனைத்து தொகுதிகளிலும் வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும்.
- புதிய வாக்காளர்களை நாம் சேர்க்க வேண்டும்.
வேலூர்:
வேலூர் மாவட்டம், காட்பாடி தெற்கு பகுதி தி.மு.க. சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டு பேசியதாவது:-
தி.மு.க. முப்பெரும் விழா நடைபெற உள்ளது. கட்சியினர் அனைவரும் தங்களுடைய வீடுகளில் தி.மு.க. கொடி ஏற்ற வேண்டும். வருகிற 15, 16, 17 ஆகிய 3 தேதிகளில் அனைவரும் கருப்பு, சிவப்பு அணிந்த துண்டை அணிந்து செல்ல வேண்டும்.
தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது அனைவரும் கடைசி வரை இருக்க வேண்டும். ஒரு ஓட்டு என்பது கூட முக்கியமானது. காட்பாடி தொகுதியை பொறுத்தவரை உழைத்தோம். ஆனால் அதிகமான நேரத்தில் ஓய்வு எடுத்து விட்டோம். இப்பொழுது உள்ள முறைகள் சரியில்லை. வருகிற 20-ந் தேதிக்கு பிறகு அனைத்து பஞ்சாயத்துகளுக்கும் நான் நேரில் வந்து மக்களுடைய குறைகளை கேட்டு அதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன்.
வாக்குச்சாவடிகளில் பழைய முகவர்கள் சரியில்லை என்றால், அவர்களை நீக்கி விட்டு புதியவர்களை சேர்க்க வேண்டும். அப்படி செய்தால் காட்பாடி தொகுதி பழைய முறைப்படி தமிழகத்திலேயே அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலைமை மீண்டும் ஏற்படும்.
கடந்த முறை என்ன நடந்தது? தோற்றுவிடுவோம் என்ற நிலை இருந்தது. அதை நான் சவாலாக எடுத்துக் கொண்டேன். வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் 200 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என முதலமைச்சர் கூறியுள்ளார். ஏன் அனைத்து தொகுதிகளிலும் சொல்லவில்லை என்றால் எதிர்க்கட்சி 34 தொகுதியிலாவது வரட்டுமே என்ற எண்ணம் தான். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதியாக இருந்து வெற்றி பெற்று விடுவார்.
இப்பொழுது புதிய வாக்காளர்களை நாம் சேர்க்க வேண்டும். அமெரிக்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணத்தில் உள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் வந்த பிறகு கட்சியில் பல மாறுதல்கள் செய்ய வேண்டும்.
அனைத்து தொகுதிகளிலும் வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும். ஒளிமயமான எதிர்காலம் வந்துள்ளது. அதனை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.54,600-க்கு விற்பனையானது.
- வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.
சென்னை:
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.54,600-க்கு விற்பனையானது.
இந்நிலையில் சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.54,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.6,825-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3.50 உயர்ந்து ரூ. 95-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- வில்லூரில் தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
- நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
விருதுநகர்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடியை அடுத்துள்ள வில்லூரில் தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்த பின் நிர்வாகிகளுக்கு சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணி உணவு வழங்கப்பட்டது. சிலர் கூட்டம் நடந்த இடத்தில் சாப்பிட்டனர். பலர் வீட்டிற்கு கொண்டு சென்று குடும்பத்துடன் சாப்பிட்டனர்.

பிரியாணி சாப்பிட்ட சிறிது நேரத்தில் 50-க்கும் மேற்பட்டோருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
17 பெண்கள், குழந்தைகள் உள்பட 39 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பாதிக்கப்பட்ட 39 பேரை விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் மற்றும் அதிகாரிகள் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர்.
தி.மு.க. பொதுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட பிரியாணி சாப்பிட்ட கட்சியினரும், அவர்களது குடும்பத்தினரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பொதுக்கூட்டத்தில் விநியோகம் செய்யப்பட்ட பிரியாணி தரம் குறைந்து இருந்ததால் கெட்டுபோன இறைச்சி சேர்க்கப்பட்டதா? என தெரியவில்லை. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என தி.மு.க.வினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
- கடவுளாக இருந்தால்கூட “நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே” என்று வாதாடிய மண் இந்த மண்.
- இந்த மண்ணின் உயிர்நாடியே “அதிகாரத்தை கேள்வி கேட்பதுதான்”.
கோவை கொடிசியாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில் முனைவோர்களுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். அப்போது ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் பேசுகையில், "இனிப்புக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. இருக்கிறது. ஆனால் காரத்துக்கு 12 சதவீதம் இருக்கிறது. இந்த முரண்பாடு களையப்பட வேண்டும். அதே போல, Bun-க்கு ஜி.எஸ்.டி. இல்ல.. அதுக்குள்ள வைக்குற க்ரீமுக்கு 18 சதவீதம் ஜி.எ.ஸ்.டி.. வாடிக்கையாளர் சொல்றாரு.. க்ரீமை கொண்டு வா.. நானே வச்சிக்கிறேன்னு சொல்றாரு... கடை நடத்த முடியல மேடம்... ஒரே மாதிரி வையுங்கள். ஒரு குடும்பத்துக்கு பில் போடணும்னா கம்யூட்டரே திணறுது மேடம்..'' என்று தனது ஆதங்கத்தை தெரிவித்தார். சீனிவாசன் பேசியது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்நிலையில், ஜி.எஸ்.டி. குறித்து தனது ஆதங்கத்தை தெரிவித்த அன்னபூர்ணா சீனிவாசன்.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்டதாக சமூக வலைத்தளங்களில் தற்போது வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
இதற்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் செயல்பாட்டாளர் சுந்தரராஜன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
"இது தமிழ்நாட்டின் மாண்பை குறைக்கும் செயல்மட்டுமல்ல, தமிழ் தொழில்முனைவோரின் மாண்பை அழிக்கும் செயல்".
கடவுளாக இருந்தால்கூட "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே" என்று வாதாடிய மண் இந்த மண்.
இந்த மண்ணின் உயிர்நாடியே "அதிகாரத்தை கேள்வி கேட்பதுதான்".
இதுதான் தமிழ்நாட்டின் உயிர்துடிப்பு. கொங்கு பெருமை பேசுவோர் இப்படி மன்னிப்பு கேட்கவைக்கப்பட்டதற்கு என்ன எதிர்வினை?
நீங்கள் மன்னிப்பு கேட்டு இருக்கக்கூடாது "அன்னப்பூர்னா சீனிவாசன்".
நீங்கள் சொல்லிய அல்லது கேட்ட எதுவும் தவறு கிடையாது.
மன்னிப்பு கேட்டதுதான் தவறு என்று கூறியுள்ளார்.
- தமிழக முதலமைச்சரை தலைவராக கொண்ட நிறுவனத்தின் துணைத்தலைவராக சுதா சேஷையன் 3 ஆண்டுகள் செயல்படுவார்.
- சுதா சேஷையன் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத்தலைவராக டாக்டர். சுதா சேஷையனை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைவராக கொண்ட நிறுவனத்தின் துணைத்தலைவராக சுதா சேஷையன் 3 ஆண்டுகள் செயல்படுவார்.
சுதா சேஷையன் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பயணிகள் நிழற்குடை மேற்கூரையின்றி காட்சி அளிக்கிறது.
- நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொட்டாம்பட்டி:
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே திண்டுக்கல்-காரைக்குடி சாலை உள்ளது. இந்த சாலையில் காரியேந்தல்பட்டி விலக்கு பஸ் நிறுத்தத்தில் நெடுஞ்சாலைத்துறையால் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு சிமெண்டால் ஆன பயணிகள் இருக்கையும், தகர செட்டால் ஆன மேற்கூரையும் அமைக்கப்பட்டு இருந்தன.
இந்த பஸ் நிறுத்தத்தை சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் பயணிகள் நிழற்குடையின் மேற்கூரையில் பொருத்தப்பட்டிருந்த தகர செட்டை காணவில்லை. அதனை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
இதனால் பயணிகள் நிழற்குடை மேற்கூரையின்றி காட்சி அளிக்கிறது. பஸ்சுக்கு காத்திருப்பவர்கள் வெயிலிலும், மழையிலும் நிற்க வேண்டிய நிலை உள்ளது. இதுதொடர்பாக நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.






