என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • உடன்பிறப்பே வா - நிகழ்ச்சி மூலம் முதலமைச்சர் தொகுதிவாரியாக நிர்வாகிகளை அழைத்து கட்சி நிலவரங்களை கேட்டறிந்து வருகிறார்.
    • பகுதி-நகர-ஒன்றிய-பேரூர் கழகச் செயலாளர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து கருத்து கேட்டார்.

    சென்னை:

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் உடன்பிறப்பே வா - நிகழ்ச்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதிவாரியாக நிர்வாகிகளை அழைத்து கட்சி நிலவரங்களை கேட்டறிந்து வருகிறார். அந்த வகையில் இன்று 80-வது தொகுதியாக ஒசூர் நிர்வாகிகளை அழைத்துப் பேசினார். பகுதி-நகர-ஒன்றிய-பேரூர் கழகச் செயலாளர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து கருத்து கேட்டார்.

    அவர்கள் வைக்கும் கோரிக்கைகள் பெரும்பாலான வற்றுக்கு உடனடியாக அமைச்சர்களிடம் பேசித் தீர்வு காண்கிறார். நேற்று ராஜபாளையத்தில் கட்டி முடிக்கப்பட்ட மருத்துவமனை திறக்கப்படவில்லை என்ற கோரிக்கையைத் தீர்க்க அமைச்சர் மா.சுப்பிரமணியனை உடனடியாக அறிவாலயத்திற்கு அழைத்து ஆலோசனை செய்தார்.

    உட்கட்சிப்பூசல்கள் கவனத்திற்கு வந்தால் இரு தரப்பையும் அழைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கிறார். மண்டல பொறுப்பாளர்கள் அனைத்து பிரச்சனைகளையும் கண்காணித்து அவ்வப்போது ரிப்போர்ட் தர வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    • 18 ஆண்டுகள் உயிரை கொடுத்து ஒவ்வொருவரும் உழைத்தனர்.
    • ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரு தி.மு.க.தான்.

    சென்னை:

    முற்போக்கு புத்தக காட்சி மற்றும் தி.மு.க. "இரு வண்ணக் கொடிக்கு வயது 75" என்ற பெயரில் தி.மு.க. இளைஞரணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று விழா நடந்தது.

    இந்த விழாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலாளர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    துணை முதலமைச்சரும் தி.மு.க. இளைஞரணி மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இந்த விழாவை ஒருங்கிணைத்து இருந்தார்.

    விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முற்போக்கு புத்தக காட்சியை தொடங்கி வைத்தார். காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு என்ற நூலை வெளியிட்டார். அதனை அமைச்சர் துரைமுருகன் பெற்றுக் கொண்டார். பின்னர் 2 நாள் கருத்தரங்கையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    முன்னதாக தி.மு.க. 75 அறிவு திருவிழா வரலாற்று கண்காட்சியை பார்வையிட்டு திராவிட இயக்கத் தலைவர்கள் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தன்மானம் காக்கும் கழகம் மேடை நாடகம் நடைபெற்றது.

    விழாவில் பங்கேற்ற கூட்டணிக் கட்சி தலைவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.

    பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    திருவள்ளுவர் கோட்டமே திராவிட கோட்டமாக மாறி இருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். காலத்தின் நிறம் 'கருப்பு சிவப்பு' என்னும் அறிவு கருவூலத்தை தமிழ் சமூகத்திற்கு அளிக்கின்ற நூல் வெளியீட்டு விழா, தமிழ் நாட்டின் லட்சிய கொடியாய் விளங்குகிற நம்முடைய கருப்பு சிவப்பு இரு வண்ணக் கொடிக்கு வயது 75 என்பதை முன்னிட்டு வரலாற்று கண்காட்சி, இருநாள் கருத்தரங்கம், முற்போக்கு புத்தக கண்காட்சி என்று இந்த கொள்கை திருவிழாவில் இளைஞர் அணி முன்னெடுத்திருக்கிறது.

    இந்த கொள்கை திரு விழாவுக்கு வித்திட்டு திக்கெட்டும் திராவிடம் எதிரொலிக்க இளைஞர் அணி செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி கடுமையாக களப்பணியாற்றி வருகிறார்.

    தி.மு.க.வின் 75-ம் ஆண்டு பயணத்தை நினைவு கூரக்கூடிய இந்த விழாவுக்கு அறிவு திருவிழா என்று தொடங்கி பெயர் வைத்திருக்கிறார். இதைவிட பொருத்தமான தலைப்பு வேறு இருக்க முடியாது என்றுதான் சொல்ல வேண்டும்.

    கழகத்தை தொடங்கியவர் அறிஞர் அண்ணா. அதை 50 ஆண்டுகள் கட்டிக் காத்தவர் கலைஞர். கழகத்தின் முதல் தலைமையகம் அறிவகம். கலைஞர் கட்டிய தற்போதைய தலைமையகத்தின் பெயர் அறிவாலயம். இப்படி அறிவை மையப்படுத்தி அறிவொளியை பரப்புவதையே தலையாய கடமையாக நினைத்து இயங்கி வரக்கூடிய கட்சியின் 75-ம் ஆண்டு கொண்டாட்டத்தை அறிவுத் திருவிழா என்று சொல்லாமல் வேறு என்ன சொல்லி அழைக்க முடியும்.

    உலக பொதுமறை வழங்கிய வள்ளுவருக்கான இந்த கோட்டத்தில் கலைஞர் விரும்பிய அறிவுத் திருவிழாவை ஏற்பாடு செய்து உள்ள இளைஞர் அணி செயலாளர் கொள்கை இளவல் உதயநிதியையும், அவருக்கு துணை நிற்கக்கூடிய இளைஞர் அணியின் தம்பிமார்களையும் மனதார பாராட்டுகிறேன். தலைமை கழகத்தின் சார்பில் அவர்களை மனதார வாழ்த்துகிறேன்.

    நான் நினைத்ததை விட சிறப்பாக இதை ஏற்பாடு செய்திருக்கிறீர்கள். அய்யன் வள்ளுவர் சொன்னது போல் 'மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல்' என்ற குறளுக்கேற்ப உதயநிதி செயல்படுகிறார் என்று பெருமையோடு சொல்கிறேன். அந்த பெருமையோடு அவருக்கு ஒரு வேண்டுகோளும் வைக்க விரும்புகிறேன். என் அன்பு கட்டளை என்று கூட சொல்லலாம். இந்த அறிவுத் திருவிழாவை இத்தோடு நிறுத்தாமல் தொடர்ந்து ஆண்டுதோறும் நடத்த வேண்டும்.

    முழுக்க முழுக்க சாமானியர்களால் தொடங்கப்பட்டு 1967-ல் முதல் மாநில கட்சியாக ஆட்சியை பிடித்து சாதனை படைத்த கழக வரலாற்றை இன்று வரை மீண்டும் மீண்டும் பல்வேறு கோணங்களில் பல ஆய்வாளர்கள் ஆர்வத்தோடு ஆராய்ச்சி செய்து கொண்டே இருக்கிறார்கள்.

    ஏதோ கட்சியை தொடங்கினோம். அடுத்த முதலமைச்சர் நான் தான் என அறிவித்தோம் என்று நாம் ஆட்சிக்கு வரவில்லை. கழகத்தின் தலைவர்களில் இருந்து கடைகோடி தொண்டர்கள் வரை சுற்றி சுழன்று பணியாற்றினார்கள்.

    18 ஆண்டுகள் உயிரை கொடுத்து ஒவ்வொருவரும் உழைத்தனர். எத்தனை பத்திரிகைகள், எத்தனை புத்தகங்கள், எத்தனை கூட்டங்கள், எத்தனை கொள்கை வகுப்பெடுப்புகள், நாடகங்கள், திரைப்படங்கள், எத்தனை போராட்டங்கள், எத்தனை சிறைவாசங்கள், எத்தனை தியாகங்கள், எத்தனை துரோகங்கள். அன்று தி.மு.க. உழைத்த உழைப்பு. சாதாரண உழைப்பு அல்ல. சமூகத்தில் சரிபாதி மக்கள் படிப்பறிவு கூட இல்லாமல் இருந்த காலகட்டத்தில் குக்கிராமத்தில் இருக்கக்கூடிய முடிதிருத்தக்கூடிய சலூன்கூட மக்களின் சிந்தனைகளை திருத்துகிற மையமாக செயல்பட்டது.

    சைக்கிள் கடை, டீக்கடை என ஒரு இடம் விடாமல் திராவிட இயக்க இதழ்களை ஒரு தி.மு.க.காரர் வாசித்து அவரை சுற்றி 10 பேர் செவி வழியாக கேட்டு உலக வரலாற்றை தெரிந்து கொண்டனர்.

    கிராமத்தில் இருப்பவர்களும் கியூபா புரட்சியை தெரிந்து வைத்திருந்தனர். ரஷிய புரட்சி பற்றி படித்து ஊக்கமும், உறுதியும் பெற்றனர். இப்படி நாம் பெற்ற வெற்றி என்பது இனி யாரும் படைக்க முடியாத வரலாற்று சாதனை. இந்த வரலாறு பற்றியெல்லாம் தெரியாத சிலர் நம்மை மிரட்டி பார்க்கிறார்கள்.

    இன்னும் சில அறிவிலிகள் தி.மு.க.வை போல வெற்றி பெறுவோம் என்று பகல் கனவு காண்கிறார்கள். தி.மு.க.வை போல் வெற்றி பெற, தி.மு.க.வை போல உழைப்பும், அறிவும் தேவை. ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரு தி.மு.க.தான். இப்படி ஒரு இயக்கம் இனி இந்த மண்ணில் தோன்ற முடியாது.

    இந்த வரலாற்றையும், நமது கொள்கையையும் தொடர்ந்து இளைய தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கிற காரணத்தால்தான் இளைஞர் அணி செயலாளராக உதயநிதி பொறுப்பேற்றதில் இருந்து லட்சக்கணக்கான இளைஞர்களை கழகத்திற்குள் கொண்டு வந்திருக்கிறார்.

    இப்போது இந்த அறிவு திருவிழா மூலமாக இளம் எழுத்தாளர்கள், ஆராய்ச்சியாளர்களை உதயநிதி உருவாக்கிக் கொண்டிருக்கிறார். இதுதான் தந்தை பெரியார் செய்த பணி, கலைஞர் செய்த பணி, நான் விரும்பும் பணி. இதை உதயநிதி செய்கிற காரணத்தால்தான் தந்தை என்பதை விட இந்த இயக்கத்தின் முதன்மை தொண்டன் என்ற வகையில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

    இந்த நேரத்தில் இளைஞர் அணியினருக்கு நான் ஒரு கோரிக்கை வைக்க விரும்புகிறேன். இங்கு வெளியிடப்பட்ட புத்தகங்களில் இருக்கின்ற கட்டுரைகளை காலத்திற்கு ஏற்ற மாதிரி வீடியோக்களாக மாற்றி சமூக வலைதளங்களில் இளைஞர்களுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும்.

    'காலத்தின் நிறம் கருப்பு-சிவப்பு' நூலை அனைவரும் படிக்க வேண்டும். சோனியா காந்தி முதல் அகில இந்திய தலைவர்கள் அனைவரும் தங்கள் பார்வையில் நம்மை அளவிட்டு எழுதி இருக்கிறார்கள். ஒரு மாநில கட்சியை அகில இந்திய தலைவர்களும், மற்ற மாநில தலைவர்களும் புகழ்ந்து எழுதுவது சாதாரணமாக நடந்து விடாது.

    ராகுல்காந்தி, "ஒடுக்குமுறையில் இருந்து மக்களை மீட்ட இயக்கம்" என்று சொல்லி இருக்கிறார். லல்லு பிரசாத் யாதவ், "சமூக நீதிக்காக 75 ஆண்டுகள் போராடிய இயக்கம்" என்று பாராட்டி இருக்கிறார்.

    பீகார் மாநிலத்தின் முதல்-மந்திரியாக விரைவில் வர இருக்கக்கூடிய, எதிர்பார்த்துக் கொண்டிருக்கக் கூடிய தேஜஸ்வி, "நம்மை ஜனநாயகத்தின் தோழனாக" பார்க்கிறார்.

    இந்தியாவே போற்றும் இயக்கமாக நமது தி.மு.க. வளர்ந்திருக்கிறது. இந்த சாதனைகளும், வளர்ச்சிகளும்தான் பலருடைய கண்களை உறுத்துகிறது. நாம் பேசும் சமூக நீதி, சுயமரியாதை, மாநில சுயாட்சி, கூட்டாட்சி ஆகிய கருத்துக்கள் இன்றைக்கு இந்தியா முழுமைக்கும் பரவி விட்டது.

    என்னடா, இவர்களை தமிழ்நாட்டிலேயே முடக்க நினைத்தால் இந்தியா முழுக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறார்களே என்று கோபப்படுகிறார்கள். நான் திரும்பவும் சொல்கிறேன். இந்த அறிவுத் திருவிழா, திராவிடம் வெல்லும். அதை காலம் சொல்லும் என்று முழங்கக் கூடிய திருவிழா இது.

    இது கூடி கலையும் கூட்டம் அல்ல, காலம் தோறும் கொள்கைகளை கூறிட்டுக் கொள்ளும் கூட்டமாக இருக்கிற காரணத்தால்தான் எத்தனை பெரிய எதிரிகள் வந்தாலும், எத்தனை பெரிய தந்திரங்களை கொண்டும் நம்மை வீழ்த்த முடியவில்லை.

    கொள்கை ரீதியாக தி.மு.க.வை வீழ்த்த முடியாத காரணத்தால்தான், இப்போது தேர்தல் ஆணையம் மூலமாக திருட்டுத் தனமாக குறுக்கு வழியில் வீழத்த முடியுமா? என்று முயற்சி செய்து பார்க்கிறார்கள். அதுதான் எஸ்.ஐ.ஆர். மறந்து விடாதீர்கள்.

    ஏன் அந்த எஸ்.ஐ.ஆர்.-ஐ அவசர அவசரமாக நடத்த வேண்டும்? தேர்தல் நேரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடியது. இதை வேண்டாம் என்று எல்லா அரசியல் கட்சிகளும் சொல்லியும் ஏன் நடத்த வேண்டும். இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் இதையெல்லாம் காது கொடுத்து கேட்காமல் தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆர். பணிகளை தொடங்கி விட்டது.

    இதற்கு எதிராக சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். தொடர்ந்து போராட போகிறோம்.

    இந்த நேரத்தில் இங்கிருக்கக் கூடிய இளைஞர் அணி தம்பிமார்களை நான் கேட்க விரும்புவது களத்தில் வேலை செய்யும் நீங்கள் எந்தவொரு போலி வாக்காளரும் இருந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    உண்மையான நமது வாக்காளர்கள் விடுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். யாருடைய வாக்குரிமையும் பறி போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    கருப்பு-சிவப்பு நிறம் சேர்ந்திருக்கிற போது எந்த காவியாலும் நம்மை எதுவும் செய்ய முடியாது. இந்தியாவையும் ஜனநாயகத்தையும், தமிழ்நாட்டின் எதிர்காலத்தையும் காக்க 2019 முதல் தொடரக்கூடிய நமது பயணம் 2026-லும் மாபெரும் வெற்றியை பெற்று திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும்.

    தந்தை பெரியாரின், பேரறிஞர் அண்ணாவின், தலைவர் கலைஞரின் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொள்கை வாரிசுகள் இருக்கும் வரை தமிழ்நாடு தலைகுனியாது, தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, மற்றும் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன், மேயர் பிரியா, துணைமேயர் மகேஷ் குமார், எம்.எல்.ஏ.க்கள் கருணாநிதி, பரந்தாமன், ஆவடி சேகர், எபினேசர், மாவட்டச் செயலாளர் சிற்றரசு.

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் வீரபாண்டியன், இரா. முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காதர் மொய்தீன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, அப்துல் சமது, இந்து ராம், நக்கீரன் கோபால், இளைஞர் அணி துணை செயலாளர் எஸ்.ஜோயல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த கருத்தரங்கு நாளை மாலை வரை நடைபெறுகிறது. முடிவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிறைவுரை நிகழ்த்துகிறார்.

    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    நாளை தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    10-ந்தேதி தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    11 மற்றும் 12-ந்தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    13-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    • இடைக்கால தீர்வாக வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்.
    • டிச.5-ந்தேதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் டிச.12-ந்தேதி நடைபெறும்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அந்தந்த சாதியின் மக்கள்தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இடைக்கால தீர்வாக வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்.

    டிச.5-ந்தேதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் டிச.12-ந்தேதி நடைபெறும்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் பகுதி நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

    • சீமான் வீட்டில் நாம் தமிழர் கட்சியினருக்கு சுடச்சுட அசைவ விருந்து சமைத்து பரிமாறப்பட்டது.
    • நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சீமான் வீட்டில் குவிந்தனர்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனது 59-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சீமான் வீட்டில் நாம் தமிழர் கட்சியினருக்கு சுடச்சுட அசைவ விருந்து சமைத்து பரிமாறப்பட்டது.

    மட்டன் பிரியாணி, மட்டன் சுக்கா, நல்லி எலும்பு குழம்பு, வஞ்சிரம் மீன் வறுவல், மீன் குழம்பு, முட்டை வறுவல் என விதவிதமான அசைவ உணவுகள் சீமான் வீட்டிலேயே தயாரிக்கப்பட்டு கட்சியினருக்கு பரிமாற்றப்பட்டது. இதற்காக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சீமான் வீட்டில் குவிந்தனர். அவர்கள் சீமானுக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு சூடாக பரிமாறப்பட்ட பிரியாணி உள்பட அசைவ உணவுகளை ருசித்து சாப்பிட்டனர்.

    கைதேர்ந்த சமையல் கலைஞர்களை கொண்டு சீமான் வீட்டு வளாகத்திலேயே அசைவ உணவுகள் சமைக்கப்பட்டன. அதனை கல்யாண வீடுகள் போன்று சேர், டேபிள்கள் போட்டு அசைவ உணவு பரிமாறப்பட்டது.

    • திரைத்துறை ஒரு சாராரிடம் மட்டுமே சிக்கி உள்ளது.
    • திரைத்துறை மீண்டும் முழு மூச்சாக செயல்பட வேண்டும்.

    சென்னை:

    பா.ஜ.க.வின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நடிகை கஸ்தூரி பேசியதாவது:-

    வந்தே மாதரம் என்கிற முழக்கம் முதல் முதலாக ஒலித்து 150 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. இந்த எழுச்சிமிகு வார்த்தைகளை ஒவ்வொரு மக்களுக்கும் எப்படி கொண்டு சேர்க்க வேண்டும் என வந்தே மாதரம் பாடலுக்கு தெலுங்கானா மாநிலத்தில் மிகப்பெரிய விழா எடுத்து விட்டனர். ஆனால் வ.உ.சி., கொடி காத்த குமரன் வாழ்ந்த அவர்கள் முழங்கிய வந்தே மாதரம் பாடலுக்கு தமிழகத்தில் ஒன்றுமே செய்யவில்லை. எப்போதெல்லாம் தி.மு.க.வுக்கு பிரச்சனை வருகிறதோ, அப்போதெல்லாம் இங்கே தமிழகத்தில் இனம், பிரிவினை என ஒவ்வொரு ஆயுதமாக கையில் எடுத்து வருகின்றனர்.

    தமிழ் பற்றை பேசாமல் திராவிடத்தை முன்னிறுத்தி தி.மு.க. பேசுகிறது.

    ஆனால் தமிழ் பற்று, தேசப்பற்றை பேசும் பொறுப்பு நமக்கு உள்ளது. கலை கலாச்சார பிரிவுக்கு முக்கிய பங்கு உள்ளது.

    இங்கே திரையுலகில் பூதம் பிடித்துள்ளது. திரைத்துறை ஒரு சாராரிடம் மட்டுமே சிக்கி உள்ளது. திரைத்துறையை விடுவிக்க என்ன வழியோ அதனை செய்ய வேண்டும்.

    இங்கே ஒரு சிறிய படத்தை எடுத்தால் அதனை ரிலீஸ் செய்யும் வரை போதும் போதும் என்றாகி விடுகிறது. தீபாவளிக்கு கூட நல்ல படம் வரவில்லை. நல்ல படம் வருவதற்கு ஒருவரை மட்டுமே ஏன் பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும்? திரைத்துறை மீண்டும் முழு மூச்சாக செயல்பட வேண்டும். அதற்கு பா.ஜ.க. கலை கலாச்சார அணி முயற்சி செய்ய வேண்டும் என பேசினார். 

    • போலீசார் நைஜீரிய நாட்டை சேர்ந்த 4 பேரின் ஆவணங்களை பரிசோதனை செய்தனர்.
    • அவர்களிடம் இருந்த பாஸ்போர்ட் மற்றும் விசா தேதி காலாவதியாகி விட்டது

    அவினாசி:

    திருப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் பின்னலாடை சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகிறார்கள்.

    குறிப்பாக வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் இங்கு வந்து பல்வேறு பகுதிகளில் லட்சக்கணக்கில் தங்கியுள்ளனர். இவர்களில் சிலர் சட்ட விரோதமாக தங்கியிருப்பதாக தகவல் கிடைத்து அவ்வப்போது போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்வதும் நடந்து வருகிறது.

    அந்த வகையில், அவினாசியை அடுத்த கணேசபுரம் வைஷ்ணவி கார்டன் பகுதியில் நைஜீரிய நாட்டை சேர்ந்தவர்கள் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருப்பதாக அவினாசி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையொட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அங்கு தங்கி இருந்த நைஜீரிய நாட்டை சேர்ந்த 4 பேரின் ஆவணங்களை பரிசோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் இருந்த பாஸ்போர்ட் மற்றும் விசா தேதி காலாவதியாகி விட்டது தெரியவந்தது. ஆனாலும் அவர்கள் சட்ட விரோதமாக தங்கி இருந்தனர்.

    இதையடுத்து நைஜீரிய நாட்டை சேர்ந்த ஐகென்னா மேக்னஸ் (வயது 50), அவரது மனைவி ரீட்டா அவியான்போ (43), பிடிலிஸ் ஓனெரெக்லோ (46), இசுசுக்குவு ஜான் (40) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் இவர்கள் 4 பேரும் அவினாசி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். 

    • பொதுவாக அப்பாவின் நண்பர்களோடு பிள்ளைகள் நெருக்கம் காட்ட மாட்டார்கள்.
    • நேற்றைய மாலை விருந்தில் மகிழ்ந்தோம், நெகிழ்ந்தோம்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் அடையாறு போட் கிளப்பில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் எம்.பி.யின் வீட்டுக்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இந்த புகைப்படங்களை தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டு கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    என்னுடைய அழைப்பை ஏற்று எனது இல்லத்துக்கு வருகை தந்து, என்னையும் என் மூத்த சகோதரர் சாருஹாசன் அவர்களையும் கவுரவப்படுத்திய தமிழ்நாடு முதல்வர், அன்புக்குரிய நண்பர் மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் தம்பதியருக்கும், துணை முதலமைச்சர், என் அன்புக்குரிய இளவல் உதயநிதி ஸ்டாலின், கிருத்திகா தம்பதியருக்கும், என் அன்புக்குரிய நண்பர் சபரீசனுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பொதுவாக அப்பாவின் நண்பர்களோடு பிள்ளைகள் நெருக்கம் காட்ட மாட்டார்கள். மரியாதையுடனான சிறு விலகல் இருக்கும். ஆனால், முத்தமிழறிஞர் உடனான எனது உறவு 3 தலைமுறைத் தாண்டிய நெருக்கம் கொண்டது. நிபந்தனைகளற்ற தூய பேரன்பினால், அளவு கடந்த மரியாதையால் பிணைத்துக்கட்டப்பட்டது எங்கள் உறவு. அதை உறுதி செய்யும் வகையில் அமைந்தது இந்த சந்திப்பு.

    நேற்றைய மாலை விருந்தில் மகிழ்ந்தோம், நெகிழ்ந்தோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



    • தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
    • தொடர்ந்து இன்று காலையிலும் திருச்செந்தூர் பகுதியில் லேசான சாரல் மழை பெய்தது.

    திருச்செந்தூர்:

    வடகிழக்கு பருவமழை மீண்டும் தொடங்கி உள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டம் உள்பட 4 மாவட்டங்களில் இன்று பரவலான மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான ஆறுமுகநேரி, ஆத்தூர், காயல்பட்டினம் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் பரவலாக பலத்த மழை பெய்தது.

    இதன் காரணமாக திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு உட்பட்ட சிவன் கோவில் வளாகத்திற்குள் மழைநீர் புகுந்தது. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். அங்கு தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து இன்று காலையிலும் திருச்செந்தூர் பகுதியில் லேசான சாரல் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கியது.

    • 2-வது நாளாக நேற்று 7 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், உரிமையாளர் என 8 பேரிடம் விசாரணை.
    • கரூர் கலெக்டர் அலுவலக பொதுப்பணித் துறை விருந்தினர் மாளிகைக்கு வரவழைத்து வாக்குமூலம் பெற்றனர்.

    கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ம் தேதி விஜய் பங்கேற்ற தமிழக வெற்றிக்கழக பிரச்சார கூட்டம் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சில நாட்களுக்கு முன்பு ஆம்புலன்ஸ் டிரைவர்கள் அதன் உரிமையாளர்கள் வீடியோகிராபர்கள் காவல்துறை அதிகாரிகள் என 306 பேருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பினர். தொடர்ந்து அவர்களை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அந்த வகையில் நேற்று 2-வது நாளாக 7 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் ஒரு ஆம்புலன்ஸ் உரிமையாளர் என 8 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து இன்று 3-வது நாளாக ஆம்புலன்ஸ் டிரைவர்களிடம் விசாரனை நடத்தப்பட்டது.

    இதில் 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஆஜர் ஆகி விளக்கம் அளித்தனர். அவர்களை கரூர் கலெக்டர் அலுவலக பொதுப்பணித் துறை விருந்தினர் மாளிகைக்கு வரவழைத்து வாக்குமூலம் பெற்றனர்.

    சம்பவம் நடைபெற்ற போது உங்களை தொடர்பு கொண்டது யார்? எந்த செல்போன் எண்ணில் இருந்து உங்களுக்கு அழைப்பு வந்தது?

    நெரிசலில் சிக்கி ஆம்பு லன்சில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட போது எத்தனை பேர் மருத்துவ மனைக்கு செல்லும் வழியில் இறந்தனர்? எத்தனை பேர் பிணமாக சம்பவ இடத்திலிருந்து ஏற்றி சென்றீர்கள்? என பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

    தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    • வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக நாளை தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக நாளை காலை 9 மணியளவில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும்.

    தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக நாளை தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக நாளை காலை 9 மணியளவில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும்.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் பங்கேற்குமாறு வலியுறுத்தி உள்ளார்.

    • ஜனவரி முதல் ஜூலை வரையிலான கால கட்டத்தில் மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்து 25 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது.
    • ஒவ்வொரு வாரமும் 80 வீடுகள் என்ற அடிப்படையில் 2600 ஊழியர்கள் வீடு வீடாக சென்று கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சென்னை:

    பருவகால மாற்றத்தின் போது டெங்கு காய்ச்சல் பரவுவது வழக்கம். இந்த ஆண்டு சென்னையில் கடந்த மாதம் வரை 1633 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. ஜனவரி முதல் ஆகஸ்டு வரை சராசரி 200 பேருக்குள் இருந்த பாதிப்பு செப்டம்பர் மாதம் 237 ஆக உயர்ந்தது. கடந்த மாதம் 600 ஆக உயர்ந்திருக்கிறது.

    கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடும் போது டெங்கு பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 2023-ம் ஆண்டு 2029 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. அது 2024-ல் 1403 ஆக குறைந்தது. இந்த ஆண்டு சற்று உயர்ந்துள்ளது.

    ஜனவரி முதல் ஜூலை வரையிலான கால கட்டத்தில் மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்து 25 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது.

    டெங்கு பாதித்தவர்கள் பெரும்பாலும் விரைவாக குணம் அடைந்து விடுவதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    டெங்குவை பரப்பும் கொசுக்களை லார்வா பருவத்திலேயே அழிக்க அவை உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து மருந்துகள் தெளிக்கப்படுகிறது.

    ஒவ்வொரு வாரமும் 80 வீடுகள் என்ற அடிப்படையில் 2600 ஊழியர்கள் வீடு வீடாக சென்று கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    வீடுகளில் தேங்காய் சிரட்டைகள், கழிவு பொருட்களில் தேங்கும் நல்ல தண்ணீரில்தான் இந்த கொசுக்கள் உற்பத்தியாகிறது. எனவே அந்த மாதிரி பொருட்களை அப்புறப்படுத்தி சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிக்கும் படி சுகாதாரத் துறை அறிவுறுத்தி இருக்கிறது.

    ×