என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சொத்து வரி இரண்டு அரையாண்டு வீதம் வசூலிக்கப்படும்.
    • சென்னை குடிநீர் வாரியத்தில், 13.96 லட்சம் பேர் வரியும், 9.13 லட்சம் பேர் கட்டணமும் செலுத்துகின்றனர்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியில் மொத்தம் 13.74 லட்சம் சொத்து உரிமையாளர்களிடம் இருந்து, 2024 - 25ம் நிதியாண்டில், 2,000 கோடி ரூபாய் வசூலிக்க நிர்ணயம் செய்யப்பட்டது.

    சொத்து வரி ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மற்றும் அக்டோபர் முதல் மார்ச் வரை என இரண்டு அரையாண்டு வீதம் வசூலிக்கப்படும்.

     

    முதல் அரையாண்டுக்குள் வரி செலுத்தாமல், அதை, இரண்டாம் அரையாண்டில் செலுத்தினால் அபராதம் விதிக்கப்படும்.

    முதல் அரையாண்டில் செப்டம்பர் 28-ந்தேதி வரை 835 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது.

    அதேபோல் சென்னை குடிநீர் வாரியத்தில், 13.96 லட்சம் பேர் வரியும், 9.13 லட்சம் பேர் கட்டணமும் செலுத்துகின்றனர்.

    ஆண்டுக்கு 895 கோடி ரூபாய் வசூலாக வேண்டும். முதல் அரையாண்டில் 28-ந்தேதி வரை 375 கோடி ரூபாய் மட்டுமே வசூலாகி உள்ளது.

    சென்னை மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரியத்திற்கு முதல் அரையாண்டு வரியை செலுத்த இன்று கடைசி நாள் ஆகும்.

    • திடீரென கனமழை பெய்தது.
    • ஏராளமான இடங்களில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 1 மாதமாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் திடீரென மழை பெய்தது.

    தொடர்ந்து நேற்று பகலில் வழக்கம்போல் வெயில் அடித்த நிலையில் நேற்று மாலையில் தொடங்கி இன்று அதிகாலை வரையிலும் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று மாலையில் இருந்து இன்று அதிகாலை வரை யிலும் கனமழை பெய்தது. இந்த மழையால் ஏராளமான இடங்களில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது. களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது.

    நாங்குநேரி, மூலக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இரவில் தொடங்கிய மழை நள்ளிரவு வரையிலும் விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது.

    சேரன்மகாதேவியில் 29.60 மில்லிமீட்டர் மழை பெய்தது. அம்பை, வி.கே.புரம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர் பகுதிகளிலும் இன்று அதிகாலை வரையிலும் கனமழை பெய்தது. மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் இரவு முழுவதும் பயங்கர இடி-மின்னலும் காணப்பட்டது. அம்பையில் 40.40 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. ராதாபுரத்தில் 21 மில்லிமீட்டரும், நாங்கு நேரியில் 16 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    அணை பகுதிகளை பொறுத்தவரை பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 40 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 35 மில்லிமீட்டரும் மழை பெய்தது. மணிமுத்தாறு அணை பகுதியில் 23.80 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 251 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணை நீர்மட்டம் 98 அடியாக உள்ளது. பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிகளில் தண்ணீர் தொடர்ந்து ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து ஆனந்த குளியலிட்டு வருகின்றனர்.

    மாஞ்சோலை எஸ்டேட் பகுதிகளிலும் கனமழை பெய்தது. குறிப்பாக நாலுமுக்கு, காக்காச்சி, ஊத்து பகுதிகளில் கனமழை கொட்டியது. அதிகபட்சமாக நாலுமுக்கில் 26 மில்லி மீட்டரும், ஊத்து எஸ்டேட்டில் 21 மில்லி மீட்டரும் மழை பெய்தது. காக்காச்சியில் 18 மில்லி மீட்டர், மாஞ்சோலையில் 15 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    மாநகரில் டவுன், பேட்டை, சந்திப்பு, வண்ணார்பேட்டை, பாளை சமாதானபுரம், மார்க்கெட் பகுதிகள், கே.டி.சி. நகர், என்.ஜி.ஓ. காலனி, டக்கம்மாள் புரம், மேலப்பாளையம் என மாநகரின் அனைத்து பகுதிகளிலும் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இரவில் சென்ற வாகனங்கள் கடும் மழையால் சாலைகளில் ஊர்ந்தபடி சென்றதால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    பாளை பகுதியில் விடிய விடிய பெய்த மழை காரணமாக இரவில் தொடங்கி இன்று அதிகாலை 3 மணி வரையிலும் மின்சார வினியோகம் இல்லை. அதன்பின்னரும் மின்சாரம் வருவதும், போவதுமாக இருந்தது. மாநகரில் பல்வேறு இடங்களிலும் கடுமையான மின்வெட்டு இருந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    பாளை பகுதியில் மட்டும் அதிகபட்சமாக 84 மில்லிமீட்டரும், நெல்லையில் 49 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது.

    தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, ஆய்க்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை கொட்டியது. சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வெளியேற வழியின்றி தேங்கியது.

    மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டது. மழை நின்ற பின்னர் மீண்டும் மின்சாரம் வினியோகிக்கப்பட்டது.

    தென்காசி, ஆய்க்குடியில் தலா 42 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது .மாவட்டத்தில் அதிகபட்சமாக செங்கோட்டையில் 48.40 மில்லிமீட்டர் மழை பெய்தது. இந்த திடீர் மழையால் மாவட்டம் முழுவதும் குளிர்ச்சி நிலவியது.

    கருப்பாநதி அணை பகுதியில் 67 மில்லிமீட்டர் மழை பெய்தது. 85 அடி கொண்ட கடனா அணை நீர்மட்டம் 59 அடியாக உள்ளது. அந்த அணைக்கு வரும் 55 கனஅடி நீரும் அப்படியே வெளியேற்றப்படுகிறது. கடனா அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 43 மில்லிமீட்டரும், குண்டாறு அணை பகுதியில் 46 மில்லிமீட்டரும், அடவிநயினார் அணை பகுதியில் 35 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மாலையில் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்ய தொடங்கியது. குறிப்பாக காயல்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது.

    காயல்பட்டினம் பகுதியில் இரவு முழுவதும் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டது. அங்கு அதிகபட்சமாக 93 மில்லிமீட்டர் மழை பெய்தது. கயத்தாறு, மணியாச்சி பகுதிகளில் 65 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 55 மில்லிமீட்டரும், ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழையும் கொட்டியது. இடி-மின்னலுடன் பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    விளாத்திகுளம், கீழஅரசடி, வேடநத்தம், குலசேகரப்பட்டினம், சாத்தான்குளம், கழுகுமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பரவலாக மழை பெய்தது. இரவில் விட்டு விட்டு சாரல் மழையாக மாறி பெய்தது. ஓட்டப்பிடாரம் பகுதியில் இரவில் பெய்த மழையால் வெப்பம் நீங்கி குளிர்ச்சி நிலவியது.

    • 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி.
    • சோதனை செய்த பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என மாதத்திற்கு 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    மகாளய அமாவாசையை முன்னிட்டு இன்று முதல் வருகிற 3-ந் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இன்று புரட்டாசி மாத பிரதோஷத்தையொட்டி சென்னை, மதுரை, கோவை, தூத்துக்குடி, விருதுநகர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வாகனங்களில் பக்தர்கள் வருகை தந்து தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு குவிந்தனர்.

    காலை 6.15 மணிக்கு வனத்துறை கேட் திறந்து விடப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களின் உடைமைகளை வனத்துறையினர் சோதனை செய்து பாலித்தீன் கேரிப்பை போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

    அதோடு மது மற்றும் போதை வஸ்து பொருட்கள் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என சோதனை செய்த பிறகு அனுமதிக்கப்பட்டனர்.

    காலையில் வெயில் இல்லாமல் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் பக்தர்கள் வேகமாக மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் பகுதியில் சரிவர மழை பெய்யாததால் தாணிப்பாறையில் உள்ள வழுக்குப் பாறையில் தண்ணீர் இன்றி காட்சி அளிக்கிறது.

    புரட்டாசி மாத பிரதோஷத்தையொட்டி இன்று மாலை 4.30 மணியிலிருந்து 6 மணிக்குள் சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெறுகிறது. அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

    மொட்டை உள்ளிட்ட நேர்த்தி கடன்களை பக்தர்கள் செலுத்தினர். காலாண்டு விடுமுறை தினமாக இருந்தும் மழை பெய்தால் அனுமதிக்க மாட்டார்கள் என்பதால் பக்தர்கள் கூட்டம் ஓரளவு குறைந்து காணப்பட்டது.

    நாளை மறுநாள் மகாளய அமாவாசை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. 3-ந் தேதியுடன் 4 நாள் அனுமதி முடிவடைகிறது.

    • நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை நின்றதால் நீர்வரத்து குறைந்தது.
    • இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 95.30 அடியாக இருந்தது.

    சேலம்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையை பொறுத்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கடந்த ஜூலை மாதம் தொடக்கத்தில் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணை நிரம்பியது.

    பின்னர் நீர்வரத்து குறைந்ததாலும், அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வந்ததாலும் அணையின் நீர்மட்டம் குறைந்தது. பின்னர் மீண்டும் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து இந்த ஆண்டில் 2-வது முறையாகவும் மேட்டூர் அணை நிரம்பியது.

    இதற்கிடையே நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை நின்றதால் நீர்வரத்து குறைந்தது. ஆனாலும் பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது. கடந்த 3 நாட்களாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 95.30 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு நேற்று 2 ஆயிரத்து 718 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 3 ஆயிரத்து 284 கனஅடியாக அதிகரித்து காணப்பட்டது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 15 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசன திட்டத்துக்கு 700 கனஅடியும் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 58.92 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
    • கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் பண்ணாரியம்மன் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் அதிகளவில் பக்தர்கள் வந்து அம்மனை வழிபடுகிறார்கள்.

    மேலும் அமாவாசை, பவுர்ணமி மற்றும் விடுமுறை நாட்களில் பண்ணாரியம்மன் கோவிலுக்கு வழக்கத்தை விட ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு செல்கிறார்கள்.

    ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து அம்மனை வழிபட்டு கோவில் வளாகத்தில் உள்ள குண்டத்தில் உப்பு, மிளகு, மஞ்சள், குங்குமம் போட்டு வழிபாடு நடத்திவிட்டு செல்கிறார்கள்.

    குறிப்பாக கர்நாடக மாநில எல்லையை யொட்டிய பகுதியில் கோவில் அமைந்து உள்ளதால் அந்த மாநில பக்தர்களும் அதிகளவில் வந்து அம்மனை வழிபடுகின்றனர். இதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதால் எப்போதும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

    கோவிலில் பக்தர்களுக்கு குடிநீர் உள்பட ஏராளமான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அப்போது கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் பலர் கூட்டம் காரணமாக வெயிலில் நிற்க வேண்டிய நிலை இருந்து வந்தது.

    இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பக்தர்கள் நடந்து செல்வது மற்றும் தரிசனத்துக்கு வருபவர்களும் வெயிலால் சிரமம் அடைந்து வந்தனர்.

    இதையடுத்து பக்த ர்களின் சிரமத்தை தவி ர்க்கும் வகையில் கோவில் நிர்வாகம் சார்பில் உப்பு குண்டத்தை சுற்றி தரைக்கம்பளம் விரிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் கோவில் வளாகத்தில் நகரும் நிழற்குடைகளும் நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த நிழற்குடைகள் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் போது அவர்கள் வசதிக்காக பயன்படுத்தப்படும். வெயில் மற்றும் மழை காலங்களில் பக்தர்களின் தேவைக்கு பயன்படுத்தும் வகையில் வரவழைக்கப்பட்டுள்ளது.

    • அகழாய்வில் தற்போது வரை 11 குழிகள் தோண்டப்பட்டுள்ளன.
    • 3-ம் கட்ட அகழாய்வில் முதல் முறையாக தங்க நாணயம் கிடைத்துள்ளது.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. அகழாய்வில் தற்போது வரை 11 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. அதில் ஏராளமான மண்பாண்ட ஓடுகள், ஆட்ட காய்கள், சுடுமண் முத்திரைகள், ஆபரணங்கள், செப்புக்காசுகள், சூது பவளம், செவ்வந்திக்கல் உள்பட 1,800-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் புதிதாக தோண்டப்பட்ட அகழாய்வு குழியில் 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஏற்றுமதி வணிகத்திற்கு பயன்படுத்திய தென்னிந்திய பணம் என்று சொல்லப்படும் தங்க நாணயம் சேதமடையாமல் முழுமையாக கிடைத்துள்ளது.

    இதுகுறித்து அகழாய்வு இயக்குனர் பொன்பாஸ்கர் கூறுகையில், 'தங்க நாணயத்தின் ஒரு பகுதி இதழ்கள் வடிவிலும், மறுபகுதியில் புள்ளி கோடுகளுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பண்டைய தமிழர்கள் தங்க ஆபரணம் போன்று தங்க நாணயத்தையும் நுணுக்கமான வேலைபாடுகளுடன் செய்துள்ளனர். 3-ம் கட்ட அகழாய்வில் முதல் முறையாக தங்க நாணயம் கிடைத்துள்ளது.

    இந்த தங்க நாணயத்தை பார்க்கும்போது முன்னோர்கள் அதிகமாக ஏற்றுமதி வணிகத்தில் ஈடுபட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது' என்றார்.

    • கடந்த ஆண்டு ஜூலை மாதம் முடிவில் 10 ஆயிரத்து 589 உயிரிழப்பு சாலை விபத்துகள் நடந்தன.
    • குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 777 பேர் வழக்கில் சிக்கி உள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் இந்த ஆண்டு ஜூலை வரை சாலை விபத்தில் 10 ஆயிரத்து 536 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதுதொடர்பாக டி.ஜி.பி. அலுவலகம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

    தமிழகம் முழுவதும் விபத்துகளை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், கடந்த ஆண்டு ஜூலை மாதத்தோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஜூலை மாதம் உயிரிழப்புகளை ஏற்படுத்திய சாலை விபத்துகளின் எண்ணிக்கை 5 சதவீதம் குறைந்துள்ளது. இந்த ஆண்டு கடந்த ஜூலை மாதம் வரை தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்து 66 உயிரிழப்பு விபத்துகள் நடந்தன. அந்த விபத்துகள் மூலம் 10 ஆயிரத்து 536 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் முடிவில் 10 ஆயிரத்து 589 உயிரிழப்பு சாலை விபத்துகள் நடந்தன. அதன் மூலம், 11 ஆயிரத்து 106 பேர் உயிரை விட்டனர். கடந்தாண்டு ஒப்பிடும்போது இந்த ஆண்டு உயிரிழப்பு சாலை விபத்துகள் 5 சதவீதம் குறைவாகும். அதாவது 523 உயிரிழப்பு விபத்துகள் குறைந்துள்ளன. இதன் மூலம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை 570 உயிரிழப்புகள் குறைந்துள்ளது. 570 உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

    இதேபோல, இந்தாண்டு ஜூலை மாதம் வரை வேகமாக வாகனங்களை ஓட்டி சென்றதாக ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 97 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. செல்போன்களில் பேசிக் கொண்டே வாகனங்களை ஓட்டி சென்றதாக இந்த ஆண்டு இதுவரை 2 லட்சத்து 31 ஆயிரத்து 624 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. அதேபோல், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 777 பேர் வழக்கில் சிக்கி உள்ளனர்.

    அதிக பொருட்களை ஏற்றி சென்றதாக 6 ஆயிரத்து 944 வழக்குகளும், சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றி சென்றதாக 74 ஆயிரத்து 13 வழக்குகளும் பதிவாகி உள்ளது. இதேபோல், ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டி சென்றவர்கள் மீதும், பின்னால் உட்கார்ந்து சென்றவர்கள் மீதும் மொத்தம் 35 லட்சத்து 78 ஆயிரத்து 760 வழக்குகள் பதிவாகி உள்ளது. காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றதற்காக 3 லட்சத்து 39 ஆயிரத்து 434 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்த ஆண்டு இதுவரை மோட்டார் வாகன சட்டத்தை மீறி வாகனங்களை ஓட்டியதற்காக 76.15 லட்சம் வழக்குகள் போடப்பட்டுள்ளது.

    விதிகளை மீறி வாகனங்களை ஓட்டி சென்றதற்காக ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 375 பேர்களின் டிரைவிங் லைசென்ஸ்சை தற்காலிகமாக ரத்து செய்யுமாறு போக்குவரத்து துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அந்த பரிந்துரைகளை ஏற்று, 39 ஆயிரத்து 924 பேர்களின் டிரைவிங் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • சிறப்பு ரெயில்கள் மூலம் மொத்தம் 302 ரெயில் சேவைகள் இயக்கப்பட உள்ளது.
    • 6 ஆயிரம் சிறப்பு ரெயில்கள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பண்டிகை காலத்தை முன்னிட்டு, இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தெற்கு ரெயில்வே சார்பில் 34 சிறப்பு ரெயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரெயில்கள் மூலம் மொத்தம் 302 ரெயில் சேவைகள் இயக்கப்பட உள்ளது.

    இதேபோல, இந்திய ரெயில்வே துறை மூலம் இந்த ஆண்டு மொத்தம் 6 ஆயிரம் சிறப்பு ரெயில்கள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் விழாக்கால கூட்டநெரிசலை தவிர்க்க ஏதுவாக அமையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மந்திரி சபை மாற்றப்படுவது அதிசயமான நிகழ்வு அல்ல, வாடிக்கையான ஜனநாயக நிகழ்வுதான்.
    • முதலமைச்சர் எடுக்கின்ற நிர்வாக முடிவு, இதில் விமர்சனம் செய்வது என்னை பொறுத்தவரையில் சரியானது அல்ல.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

    முதலமைச்சரின் அதிகாரத்திற்கு உட்பட்டு உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது முதலமைச்சர் எடுக்கின்ற நிர்வாக முடிவு, இதில் விமர்சனம் செய்வது என்னை பொறுத்தவரையில் சரியானது அல்ல. ஒரு முதலமைச்சருக்கோ பிரதம மந்திரிக்கோ முழு அதிகாரம் உண்டு, யாரை வேண்டுமானாலும் அவர்கள் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளலாம்.

    மந்திரி சபை மாற்றப்படுவது அதிசயமான நிகழ்வு அல்ல, வாடிக்கையான ஜனநாயக நிகழ்வுதான். இந்திய அளவில் குடும்பங்களை மையமாக வைத்துதான் அரசியல் கட்சிகள் இயங்குகின்றன. காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் சரி மாநில கட்சிகள் பலவாக இருந்தாலும் சரி இது புரிவதில்லை. கட்சியில் இருப்பவர்கள் ஒருவரை தலைவராக ஏற்றுக் கொண்டு விட்டால் அதனை கட்சிக்கு வெளியே உள்ளவர்கள் விமர்சனம் செய்வது என்னை பொறுத்தவரையில் உகந்ததாக இருக்காது.

    செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர எந்த விதமான தடையும் கிடையாது, தண்டனை பெற்றால் மட்டுமே அமைச்சர் பதவியை ஏற்க முடியாது. அப்படி வழக்கு போட்டவர்கள் எல்லாம் அமைச்சராக முடியாது என்றால் பாஜக நினைத்தால் எல்லோர் மீதும் வழக்கு போட்டு யாரையுமே அமைச்சராக பதவி ஏற்க விடாமல் செய்துவிடும். கூட்டணி என்ற முறையில் நாங்கள் (காங்கிரஸ்) திமுகவோடு தோலோடு தோலாகதான் நிற்கின்றோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பைபர் படகு மீனவர்கள் மீது இரும்பு குண்டுகளை வீசி, விசைப்படகு மீனவர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர்.
    • கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    நாகை:

    நாகப்பட்டினம் மாவட்டம், தோப்புத்துறை அருகே நடுக்கடலில் இருதரப்பு மீனவர்களிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பைபர் படகு மீனவர்கள் மீது இரும்பு குண்டுகளை வீசி, விசைப்படகு மீனவர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் காயமடைந்த செருதூரை சேர்ந்த பைபர் படகு மீனவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    நாகையில் பைபர், விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். சிறுதூர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் பைபர் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். அப்போது விசைப்படகு மீனவர்களுக்கும் பைபர் படகு மீனவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

    அந்த காட்சியில் சிறுதூர் கிராமத்தைச் சேர்ந்த 4 பைபர் படகு மீனவர்கள், இரண்டு விசை படகின் மீது மோதுவது போன்று பதிவாகி இருந்தது. நடுக்கடலில் இருதரப்பு மீனவர்களுக்கிடையே மீன் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டதாகவும், தகராறில் படகுகளை மோத செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. நங்கூரமிட்டு இருந்த பைபர் படகின் கயிற்றை, விசைப்படகு மாட்டி இழுத்துச் சென்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    இந்த சூழ்நிலையில் 4 பைபர் படகுகளில் 2 பைபர் படகுகள் கரை வந்து சேர்ந்துள்ளதாகவும் மற்ற 2 பைபர் படகுகள் கரைக்கு வந்து கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சிறுதூர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் மோதல் குறித்து ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அமைச்சரவையில் இணைந்துள்ள செந்தில் பாலாஜி, கோவி. செழியன், ராஜேந்திரன், சா.மு.நாசர் ஆகியோருக்கும் வாழ்த்துகள்.
    • மக்களின் நம்பிக்கையைக் காக்கும் வகையில் நாம் அனைவரும் செயல்பட வேண்டும்!

    அமைச்சர் உதயநிதிக்கு, துணை முதல்வர் பொறுப்பு வழங்கியது ஏன் ? என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகச் சிறப்பாகச் செயல்படும் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்குத் துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. எனக்குத் துணையாக அல்ல; நாட்டு மக்களுக்குத் துணையாக அவர் இருக்கப் போகிறார்!

    அமைச்சரவையில் இணைந்துள்ள செந்தில் பாலாஜி, கோவி. செழியன், ராஜேந்திரன், சா.மு.நாசர் ஆகியோருக்கும் வாழ்த்துகள்.

    மிகுந்த நம்பிக்கையோடு நமக்கு வாக்களித்துள்ள மக்களின் நம்பிக்கையைக் காக்கும் வகையில் நாம் அனைவரும் செயல்பட வேண்டும்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • அரசியல் கட்சிகளை தொடர்ந்து திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதைதொடர்ந்து, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் கட்சிகளை தொடர்ந்து திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அதன்படி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் சிலம்பரசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    அதில், " உதயநிதி ஸ்டாலின் அண்ணாவிற்கு எனது வாழ்த்துகள். இன்னும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகள்" என்றார்.

    நடிகர் தனுஷ் தனது வாழ்த்து செய்தியில், "தமிழகத்தின் துணை முதலமைச்சரான அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்றார்.

    நடிகர் சிவகார்த்திகேயன் கூறுகையில், "தமிழகத்தின் மாண்புமிகு துணை முதல்வராக புதிய பொறுப்பை ஏற்றுள்ள அன்புள்ள உதயஸ்டாலினுக்கு வாழ்த்துகள்" என்றார்.

    இயக்குனர் வெங்கட் பிரபு தனது வாழ்த்து செய்தியில், "உங்களை நினைத்து பெருமிதம் கொள்கிறேன் உதயநிதி! நீங்கள் துணை முதல்வராகவும், தலைவராகவும், நம் மக்களுக்கு அற்புதங்களைச் செய்வீர்கள் என்பதில் சந்தேகமில்லை" என்றார்.

    இயக்குனர் மாரி செல்வராஜ் தனது வாழ்த்து செய்தியில், "இன்று தமிழ்நாட்டின் துணைமுதல்வராக பொறுப்பேற்றிற்கும் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய

    உதயநிதி அவர்களின் பேராற்றல் மிக்க பணி சிறக்கவும் புகழ் சிறக்கவும் வாழ்த்தி மகிழ்கிறேன்" என்றார்.

    நடிகர் அருள்நிதி, " வாழ்த்துகள் உதயநிதி ஸ்டாலின் அண்ணா" என குறிப்பிட்டுள்ளார்.

    திரைப்பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, "வாழ்த்துக்கள் உதயநிதி ஸ்டாலின். நீங்கள் பலமாக வளர்ந்து வருவதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்" என்றார்.

    இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா கூறுகையில், "வாழ்த்துகள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சார். கடமையில் இளம் மற்றும் ஆற்றல் மிக்க அடக்கமான முடிவு சரியான நேரத்தில் சரியான விஷயம் நடந்தது " என்றார்.

    இசையமைப்பாளர், நடிகர் விஜய் ஆண்டனி கூறுகையில், "துணை முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் அன்பிற்குரிய உதயநிதி ஸ்டாலின் அவர்களின் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்" என்றார்.

    துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. இளைய சமுதாயத்திற்கு ஒரு விடிவெள்ளியாக ஒளிரவும், நம் தமிழகத்தை உலகமே உற்று நோக்கும் வகையில் சீரிய முறையில் தங்களின் பணி சிறக்க வாழ்த்துகிறோம்" என குறிப்பிட்டிருந்தது.

    ×