என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • மதுரையில் 2 விமானங்கள் கனமழையால் தரையிறங்க முடியாமல் தவித்தன.
    • சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வானில் வட்டமடித்த 2 விமானங்களும் தரையிறங்கின.

    மதுரை:

    மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.

    இதற்கிடையே, சென்னை மற்றும் பெங்களூருவில் இருந்து 2 இண்டிகோ விமானங்கள் இன்று 9 மணியளவில் மதுரை விமான நிலையம் வந்தன.

    மதுரையில் கனமழை பெய்து வருவதால் 2 விமானங்களும் தரையிறங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் இரு விமானங்களும் வானத்தில் வட்டமடித்துக் கொண்டிருந்தன.

    இந்நிலையில், மோசமான வானிலை மற்றும் கனமழையால் நடுவானில் வட்டமடித்துக்கொண்டிருந்த இரு இண்டிகோ விமானங்களும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு மதுரை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கின.

    • தமிழகத்தில் நாளை கன்னியாகுமரி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
    • கனமழை எதிரொலியாக கன்னியாகுமரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் நாளை கன்னியாகுமரி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையை எதிர்பார்க்கலாம் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    • 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    ஏர் இந்தியா, இண்டிகோ, விஸ்தரா மற்றும் ஆகாச நிறுவனங்களின் 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து,பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி வருவதாக விமான நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

    இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் இன்று 3 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், கோவை விமான நிலையத்தில் 2 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, மும்பை- கோவை விஸ்தாரா விமானம், டெல்லி- கோவை விஸ்தாரா விமானங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    • முதலமைச்சர் கோப்பை 2024 போட்டிக்கான நிறைவு விழா நடைபெற்று வருகிறது.
    • இந்தியாவே உற்று நோக்கும் துறையாக மாற்றிக் காட்டியிருக்கிறார் உதயநிதி.

    சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பை 2024 போட்டிக்கான நிறைவு விழா நடைபெற்று வருகிறது.

    கடந்த 21 நாட்களாக நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு இன்று பரிசு வழங்கப்படுகிறது.

    இந்நிலையில், முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நிறைவு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    முதலமைச்சர் கோப்பை 2024 விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்குவதில் மகிழ்ச்சி அளிக்கிறது.

    உதயநிதி துணை முதல்வரானதில் விளையாட்டு துறையினரின் பங்கும் உண்டு. உதயநிதி பொறுப்பேற்ற பிறகு விளையாட்டு துறையும் வளர்ந்துள்ளது, அவரும் வளர்ந்துள்ளார்.

    செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழகத்தில் சிறப்பாக நடத்தி காட்டினோம். செஸ், ஸ்குவாஷ் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை சிறப்பாக நடத்தி காட்டியுள்ளோம்.

    வெளிநாட்டு வீரர்கள் தமிழக அரசை நிறைவாக பாராட்டினார்கள்.

    விளையாட்டு துறை பல்வேறு சாதனைகளை நிகழ்ச்சி வருகிறது. விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த ஏராளமான உதவிகள் வழங்கப்படுகிறது.

    விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, துணை முதலமைச்சர் ஆனதில் விளையாட்டு வீரர்களான உங்கள் பங்கும் உண்டு.

    விளையாட்டுத்துறையை சிறப்பாக கவனித்து, இந்தியாவே உற்று நோக்கும் துறையாக மாற்றிக் காட்டியிருக்கிறார் உதயநிதி.

    உங்க பசங்களுக்கு விளையாட்டில் ஆர்வம் இருந்தா ஊக்கமளிங்க. அதுவே அவங்களுக்கு உற்சாகம் அளிக்கும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தனியார் மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை.
    • சென்னைக்கு புறப்பட இருந்த நிலையில், அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு.

    அமைச்சர் துரைமுருகனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    வேலூரில் இருந்து சென்னைக்கு புறப்பட இருந்த நிலையில், அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    • முதலமைச்சர் கோப்பை 2024 போட்டிகளில் 105 தங்கம் வென்று சென்னை முதலிடம் பெற்றது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நினைவுச் சின்னம் வழங்கினார்.

    சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த 21 நாட்களாக நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு இன்று பரிசு வழங்கப்படுகிறது.

    முதலமைச்சர் கோப்பை 2024 போட்டிகளில் 105 தங்கம், 80 வெள்ளி, 69 வெண்கலப் பதக்கங்கள் வென்று சென்னை முதலிடம் பெற்றது.

    இதில், 31 தங்கத்துடன் செங்கல்பட்டு 2ம் இடமும், 23 தங்கத்துடன் கோவை 3ம் இடமும், 21 தங்கத்துடன் சேலம் 4வது இடமும் பிடித்துள்ளன.

    இந்த விழாவிற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் வருகை தந்தனர். அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நினைவுச் சின்னம் வழங்கினார்.

    பின்னர், 'முதலமைச்சர் கோப்பை' பரிசு வழங்கும் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டின் ஒலிம்பிக் என சொல்லும் அளவிற்கு முதலமைச்சர் கோப்பை உயர்ந்துள்ளது. அந்த அளவிற்கு போட்டிகளை பிரமாண்டமாக நடத்திக் காட்டியுள்ளோம்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளையாட்டை Extra curricular ஆக்டிவிட்டியாகவோ, Co curricular ஆக்டிவிட்டியாகவோ பார்க்கவில்லை. அவர் விளையாட்டை Main curricular ஆக்டிவிட்டியாகவே பார்க்கிறார்.

    முதலமைச்சர் கோப்பை 2024 போட்டிகளுக்கு ரூ.83 கோடி ஒதுக்கப்பட்டு, ரூ.37 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது.

    இந்தியாவிலேயே ஒரு மாநில அரசால் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டியில் அதிக வீரர்கள் கலந்து கொள்வதிலும், அதிக பரிசுத் தொகை வழங்கப்படுவதிலும் தமிழ்நாடு நம்பர் 1 மாநிலமாக திகழ்கிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மாநாட்டு பணிகள் தொடர்பாக சில அறிவுரைகளையும் வழங்குவதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
    • மாநாட்டு திடலில் 100 அடி உயர கம்பத்தில் விஜய் கொடி ஏற்ற உள்ளார்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு பணிகளை காணொலி காட்சி வாயிலாக விஜய் கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மாநாட்டு திடலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் அவ்வப்போது பணிகளை விஜய் கவனித்து வருவதாக கூறப்படுகிறது.

    தொடர் கண்காணிப்பில் உள்ள விஜய் அவ்வப்போது மாநாட்டு பணிகள் தொடர்பாக சில அறிவுரைகளையும் வழங்குவதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும், குடிநீர், பார்க்கிங் உள்ளிட்ட வசதிகள் குறித்து நிர்வாகிகளுடன் விஜய் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.

    பொது மக்களுக்கு எந்தவித சிரமமும் இல்லாத அளவிற்கு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என அறிவுரை வழங்கி உள்ளார்.

    மாநாட்டு திடலில் 100 அடி உயர கம்பத்தில் விஜய் கொடி ஏற்ற உள்ளார். விஜய் கொடியேற்ற உள்ள கொடி கம்பத்தை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    மாநாட்டு திடலில் விஜய் கொடியேற்றும் கொடிக்கம்பத்தை 10 ஆண்டுகளுக்கு அகற்றாதபடி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

    • தமிழக அரசு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.
    • ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்.

    தீபாவளி பண்டிகை வரும் 31ம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளி முன்னிட்டு இரண்டு நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் சனி, ஞாயிறு என தொடர் விடுமுறை காரணமாக மக்கள் தங்களது சொந்த ஊருக்க படையெடுக்க திட்டமிட்டுள்ளனர்.

    இதற்காக, தமிழக அரசு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது. மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்து வருகிறது.

    இதுதொடர்பாக, தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பண்டிகைக் காலங்களில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பேருந்துகளை தொடர்ந்து நடத்துகின்ற ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இதுபோன்று கூடுதல் கட்டணம் வசூலிப்பதில்லை.

    தனியார் செயலிகள் மூலமாகவும், புதிதாக பேருந்து இயக்குபவர்களும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் தொடர்பில் இல்லாதவர்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர்.

    அவர்கள் மீதான புகார்கள் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதற்காக அரசு தரப்பில் கட்டணமில்லா எண் வெளியிடப்பட்டுள்ளது.

    ஆம்னி பேருந்துகளுக்கான பணிமனை கட்டுமான வேலை இன்னும் முடிவடையாமல் இருக்கிறது. விரைவில் முடிவடையும். அதுவரை, ஆம்னி பேருந்துகள் அவர்களின் சொந்த பணிமனையில் இருந்து இயக்குவார்கள். அந்த பேருந்துகள் 400 அடி புறவழிச்சாலை வழியாக செல்லும்.

    அரசுக்கு சில கடமைகள் இருக்கிறது. பொது மக்களுக்கு தேவையான வசதிகளை செய்திக் கொடுக்கும் கடமை. அரசு கூடுதலாக எத்தனை பேருந்துகள் இயக்குகிறது என்பதை ஏற்கனவே சொல்லி இருக்கிறோம்.

    அந்த கூடுதல் பேருந்துகளில் அரசு பேருந்துகள் மட்டுமல்லாமல் தனியார் பேருந்துகளையும் ஒப்பந்தம் அடிப்படையில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு செயலிகளையும் அரசு கண்காணிக்க முடியாது. மக்களின் பிரச்சினைகளை கவனிக்க வேண்டிய இடத்தில்தான் இந்த துறை இருக்கிறது. செயலிகளில் குறிப்பிட்ட பிரச்சினை இருக்கிறது என்று சொன்னால் நடவடிக்கை எடுக்கப்படும்.

    விழுப்புரம் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தனியார் பேருந்துகள் இயக்கப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மூத்த குடிமக்கள் நலனை தினசரி பராமரித்து உயர் அதிகாரிக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.
    • தமிழகத்தின் எந்த மாவட்டத்திலும் இந்த விதிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்படவில்லை.

    மதுரை:

    மதுரை புதுமாகாளிபட்டி ரோடு பகுதியைச் சேர்ந்த வக்கீல் மணிபாரதி,  ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    தற்போது பெரும்பாலான மூத்த குடிமக்கள், பெற்றோர்களுக்கு அவர்களின் பிள்ளைகளால் எந்த பாதுகாப்பும் கிடைக்காமல் உள்ளனர். இதனால் தனி மையில் வசிக்கும் பல முதியவர்கள் சமூக விரோதிகளின் தொந்தரவுகளை அனுபவிக்கின்றனர். இவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும் வகையில் தமிழக அரசு, மூத்த குமடிக்கள் மற்றும் பெற்றோர் நல விதி முறைகளை 2009-ம் ஆண்டில் ஏற்படுத்தியது.

    அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மூத்த குடிமக்கள், பெற்றோர்களின் பாதுகாப்பை அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அல்லது மாநகர போலீஸ் கமிஷனர் உறுதிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு போலீஸ் நிலைய அதிகாரியும், தனது எல்லைக்கு உள்பட்ட பகுதியில் உள்ள மூத்த குடிமக்கள் நலனை தினசரி பராமரித்து உயர் அதிகாரிக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.


    குறிப்பாக ஆதரவற்ற மூத்த குடிமக்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர வேண்டும். மேலும் மாதத்துக்கு ஒரு முறையாவது மூத்த குடிமக்களை போலீஸ் நிலைய அதிகாரி சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

    இதற்காக அந்தந்த போலீஸ் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் குழு அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன. ஆனால் தமிழகத்தின் எந்த மாவட்டத்திலும் இந்த விதிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்படவில்லை. இதனால் முதியவர்கள் சமூக விரோதிகளின் தொந்தரவுகளை சந்தித்து வருகின்றனர். எனவே ஐகோர்ட்டு மதுரை கிளை எல்லைக்கு உள்பட்ட மாவட்டங்களின் ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் இந்த விதிமுறைகளை கடைபிடித்து மூத்த குடிமக்களை பாதுகாக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து தமிழக அரசின் உள்துறை செயலாளர், டி.ஜி.பி. மாவட்ட கலெக்டர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி உத்தரவிட்டு, அடுத்தகட்ட விசாரணையை நவம்பர் மாதம் 20-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

    • தவெக மாநாடு விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வருகிற 27-ந்தேதி நடைபெற இருக்கிறது.
    • மாநாட்டுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் 95 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

    தமிழக வெற்றிக் கழகத்துக்கு மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்த மாநிலம் தழுவிய முதல் அரசியல் மாநாட்டை நடத்த நடிகர் விஜய் முடிவு செய்துள்ளார்.

    அதன்படி தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கிறது.

    மாநாட்டுக்காக நூற்றுக்கணக்கான ஏக்கரில் பார்வையாளர்கள் அமர தனி இடம், வாகனங்கள் நிற்க தனி இடம் என்று அனைத்து வசதிகளும் செய்யும் பணி கடந்த ஒரு மாதமாக நடந்து வந்தது. மாநாட்டுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் 95 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

    லட்சக்கணக்கான மக்கள் பங்குபெற உள்ள தவெக கட்சியின் முதல் மாநாடு எந்த ஒரு இடையூறும் இல்லாமல் வெற்றிப்பெற வேண்டும் என்று விஜய்யின் ரசிகர்கள் கோவிலில் வழிபாடு செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், தவெக மாநாடு வெற்றி பெற, விஜய்யின் சொந்த கோவிலான கொரட்டூர் சாய் பாபா கோவிலுக்கு அவரது பெற்றோர் நேரில் வந்து சிறப்பு வழிபாடு செய்தனர்.

    மேலும், கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு விஜய்யின் தந்தை சந்திரசேகர் மற்றும் தாய் சோபா ஆகியோர் பிரசாதம் வழங்கினர்.

    • தொழிற்பயிற்சி நிலையங்களுக்கான அகில இந்திய தொழிற் தேர்வுகள் நடைபெற்றது.
    • டாடா டெக்னாலஜீஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து தொழில் 4.0 தரத்திலான தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தப்பட்டன.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டு தலின்படி, தமிழ்நாடு அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கி வரும் 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் 2877.43 கோடி ரூபாய் செலவில் டாடா டெக்னாலஜீஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து தொழில் 4.0 தரத்திலான தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தப்பட்டன.

    தொழிற்பயிற்சி நிலையங்களுக்கான அகில இந்திய தொழிற் தேர்வுகள் நடைபெற்றது. இத்தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 26,236 அரசு தொழிற்பயிற்சி மாணவ, மாணவியரும் மற்றும் 19,097 தனியார் தொழிற்பயிற்சி மாணவ, மாணவியரும் என மொத்தம் 45,333 மாணவ மாணவியர் பங்கேற்றனர்.

    இத்தேர்வில் 24,853 அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ மாணவியரும், 16,738 தனியார் தொழிற்பயிற்சி நிலைய மாணவ மாணவியரும், என மொத்தம் 41,591 மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதில், தமிழ்நாட்டில் தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களில் பயிற்சி தொடங்கப்பட்ட முதல் ஆண்டிலேயே இண்டஸ்டி ரியல் ரோபாடிக்ஸ் தொழிற் பிரிவில் வேப்பலோடை அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பயின்ற மாணவர் என்.அந்தோணி சேசுராஜ் மற்றும் திருச்சி, அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பயின்ற மாணவி என்.மோகன பிரியா மற்றும்

    மேனுபேக்சரிங் பிராசஸ் கன்ட்ரோல் அன்ட் ஆட்டோ மேஷன் தொழிற் பிரிவில் சிதம்பரம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பயின்ற மாணவி யு.பிரசிதா மற்றும் வேப்பலோடை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயின்ற மாணவர் எஸ்.மணிமுருகன் ஆகியோர் அகில இந்திய அளவில் முதலிடத்தை பெற்றுள்ளனர்.

    இன்பர்மேஷன் டெக்னாலஜி தொழிற் பிரிவில் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் (மகளிர்), கோயம்புத்தூரை சார்ந்த கே.இந்துஸ்ரீ அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். மேலும் நவீன கால தொழிற்பிரிவுகள் உட்பட பல்வேறு தொழிற் பிரிவுகளிலும் தமிழ்நாட்டை சேர்ந்த 19 அரசு தொழிற் பயிற்சி நிலைய மாணவ, மாணவிகளும் மற்றும் 5 தனியார் தொழிற் பயிற்சி நிலைய மாணவ, மாணவிகளும் என மொத்தம் தமிழ்நாட்டை சேர்ந்த 29 மாணவ- மாணவிகள் அகில இந்திய அளவில் முதலிடத்தை பெற்றுள்ளனர்.

    பயிற்றுநர்களுக்கான பயிற்சியில் பயிற்சி பெற்ற காட்டுமன்னார் கோவில் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தை சேர்ந்த பயிற்றுனர் வி.ஸ்வேதா, வெல்டர் தொழிற்பிரிவில் அகில இந்திய அளவில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

    இவ்வாறு, அகில இந்திய அளவில் முதலிடம் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த 29 மாணவ மாணவிகளும் மற்றும் 1 பயிற்றுநரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    இந்நிகழ்ச்சியில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலாளர் கொ.வீரராகவ ராவ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் பா.விஷ்ணு சந்திரன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • தமிழக மீனவர்கள் 16 பேர் இலங்கை கடற்படையால் நேற்று சிறைபிடிக்கப்பட்டனர்.
    • கைது சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து மீனவர்களின் குடும்பங்களுக்கு துயரத்தை ஏற்படுத்துகிறது.

    இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 16 தமிழக மீனவர்கள், படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 16 பேர் இலங்கை கடற்படையால் நேற்று சிறைபிடிக்கப்பட்டனர்.

    நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மற்றும் விசைப்படகை இலங்கை கடற்பனையினர் சிறைப்பிடித்தனர்.

    இதுகுறித்து கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில், " இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 16 தமிழக மீனவர்கள், படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதுபோன்ற கைது சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து மீனவர்களின் குடும்பங்களுக்கு துயரத்தை ஏற்படுத்துகிறது.

    கைது நடவடிக்கைகள் தடையின்றி தொடர்வது, மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கு இடையூறாக உள்ளது.

    இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 128 பேர் மற்றும் 199 மீன்பிடி படகுகளை விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×