என் மலர்
உள்ளூர் செய்திகள்
- குடியரசு தினம், தெலுங்கு பிறப்பு, மொகரம் ஆகியவை ஞாயிற்று கிழமைகளில் வருகிறது.
- அதிகபட்சமாக ஜனவரி மாதத்தில் 5 நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 2025ம் ஆண்டில் 24 நாட்கள் பொது விடுமுறை என அரசு விடுமுறைக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் உள்துறை விவகாரங்கள் அமைச்சகத்தின் பொது விடுமுறை நாட்களாக குறிப்பிடப்பட்ட "ஞாயிற்றுக் கிழமைகளுடன்" பின்வரும் நாட்களும், 2025- ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களாக கருதப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, குடியரசு தினம், தெலுங்கு பிறப்பு, மொகரம் ஆகியவை ஞாயிற்று கிழமைகளில் வருகிறது.
அதிகபட்சமாக ஜனவரி மாதத்தில் 5 நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மற்றும் அக்டோபரில் தலா 4 நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

- அதிகவிற்கு வேறு வேலை என்பதால் பகுதி நேரமாக ஆருடம் சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்.
- நாட்டின் முக்கிய பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்ப வேண்டியது எதிர்க்கட்சிகளின் கடமை.
வரும் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு திமுகவிற்கு வனவாசம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதற்கு திமுக எம்.பி கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் கூறியதாவது:-
ஜெயக்குமாருக்கு வேறு வேலைக்கு போக முடியவில்லை என்பதாலும், அதிமுகவிற்கு வேறு வேலை என்பதாலும் பகுதி நேரமாக ஆருடம் சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்.
அவ்வாறு பார்க்கக்கூடியவர்கள் இப்படி பேசவும் செய்வார்கள். ஒரு பயத்தில் இருந்து வரக்கூடிய கருத்துகள்தான் இது.
நாடாளுமன்ற கூட்டத் தொடரில், நாட்டின் முக்கிய பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்ப வேண்டியது எதிர்க்கட்சிகளின் கடமை. என்னென்ன பிரச்சினைகள் குறித்து பேசப்படும் என்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படியும், அங்கு இருக்கக்கூடிய மற்ற கட்சிகளிடமும் கலந்து பேசிதான் முடிவு எடுக்க முடியும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- ரெயில்களில் தினமும் லட்சக்கணக்கானவர்கள் பயணம் செய்கிறார்கள்.
- போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
சென்னை:
பராமரிப்புகள் பணிகள் காரணமாக சென்னை கடற்கரை-செங்கல்பட்டு மார்க்கத்தில் 28 மின்சார ரெயில்கள் இன்று முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அதிகாலையில் இருந்து சேவை ரத்து செய்யப்பட்டாலும் அதனை ஈடு செய்வதற்காக புதிய கால அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது.
காலை மற்றும் மாலை பீக் அவர்சில் பொதுமக்கள் பாதிக்காத வகையில் ரெயில்கள் நேரம் மாற்றி அமைக்கப்பட்டு இயக்கப்பட்டுகின்றன.
சென்னை மாநகரத்தோடு புறநகர் பகுதியை இணைக்கும் பாலமாக விளங்கும் மின்சார ரெயில்களில் தினமும் லட்சக்கணக்கானவர்கள் பயணம் செய்கிறார்கள்.
அரசு, தனியார் அலுவகங்களில் பணிபுரிவோர் நீண்ட தூரத்தில் இருந்து வருவதற்கு மின்சார ரெயில் சேவை மிகவும் பயன் உள்ளதாக இருப்பதால் பராமரிப்பு பணிக்காக ரத்துசெய்யும் போது சிரமங்கள் ஏற்படுகின்றன.
இன்று தொடங்கி உள்ள பராமரிப்பு பணிகள் நாள் குறிப்பிடாமல் நடைபெறுவதால் கடற்கரை-செங்கல்பட்டு மார்க்கத்தில் புதிய அட்டவணை தயாரிக்கப்பட்டு அதன்படி ரெயில்கள் இயக்கப்பட்டன.
பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகயில் 200-க்கும் மேற்பட்ட ரெயில் சேவை இந்த மார்க்கத்தில் இயக்கப்படுவதாகவும் குறிப்பாக நெரிசல் மிகுந்த வேளையில் சேவை குறைக்கப்படாமல் இயக்கப்படுகிறது என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனாலும் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு 10 பஸ்களும், பாரிமுனைக்கும் பஸ்களும் இயக்கப்பட்டன.
ஏற்கனவே கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு போதுமான பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் பயணிகளின் தேவை அறிந்து பஸ்கள் அதிகரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மின்சார ரெயில் ரத்தால் தாம்பரம், எழும்பூர், பூங்காநகர், கோட்டை ரெயில் நிலையங்களில் சிறிது கூட்டம் காணப்பட்டது. பெரிய அளவில் பாதிப்பு இல்லை. கடற்கரை ரெயில் நிலையத்தில் 5 ரெயில்கள் சிங்கப்பெருமாள் கோவில் வரை இயக்கப்படும் என்று அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டிருந்தது.
மெட்ரோ ரெயிலை பொறுத்தவரையில் பீக் அவர்சில் அதிகபட்க அளவில் ரெயில்கள் இயக்கப்பட்டன. இன்னும் தேவைப்பட்டால் இயக்கவும் தயாராக இருப்பதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- போலீசாரின் புலன் விசாரணை வளையத்தில் 10-க்கும் மேற்பட்டவர்கள் கொண்டு வரப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தனர்.
- 2 பேரும் நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
நெல்லை:
நெல்லை மேலப்பாளையம் அலங்கார் தியேட்டரில் அமரன் திரைப்படம் இரவு காட்சிகளாக வெளியிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 16-ந் தேதி அதிகாலை 3 மணி அளவில் மர்மநபர்கள் 2 பேர் அந்த தியேட்டர் வளாகத்தில் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச்சென்றுவிட்டனர்.
இதுகுறித்து மேலப்பாளையம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி. கேமராவில் பதிவான 2 நபர்களின் உருவங்களை வைத்து விசாரணை நடத்தி தேடி வந்தனர்.
மேலும் தென்மண்டல தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரும் அதன் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் குமார் தலைமையில் விசாரணையை தொடங்கினர்.
மேலப்பாளையம் போலீசார் மற்றும் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரின் புலன் விசாரணை வளையத்தில் 10-க்கும் மேற்பட்டவர்கள் கொண்டு வரப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட வர்களில் ஒருவரை போலீசார் நேற்று முன்தினம் கண்டு பிடித்தனர். அவர் மேலப்பாளையம் பஷீரப்பா தெருவை சேர்ந்த முகமது யூசுப் ரசின் என்பது தெரியவந்து. அவரை கைது செய்தனர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவருடன் சேர்ந்து பெட்ரோல் குண்டுகளை வீசியது மேலப்பா ளையம் ஆசிரான் மேலத் தெருவை சேர்ந்த செய்யது முகமது புகாரி(29) என்பது தெரியவந்தது. அவரை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
பின்னர் 2 பேரும் நேற்று நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு இரவோடு இரவாக சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனிடையே, அவர்களிடம் பெட்ரோல் குண்டுகளை வீசியது குறித்து விசாரித்தபோது அமரன் திரைப்படம் இஸ்லாமியர்களுக்கு எதிராக காட்சிகள் இருப்பதால் அதற்கு ஏதாவது ஒன்று செய்யவேண்டும் என்பதற்காக இவ்வாறு ஈடுபட்டதாக தெரிவித்ததாக போலீசார் கூறினர்.
இந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் தயார் நிலையில் இருந்த வாலிபர் இவர்கள் 2 பேரின் கூட்டாளி என்பதும், அவரும் மேலப்பாளையத்தில் தான் பதுங்கி இருக்கிறார் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த வாலிபரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
- கோவில்கள் மற்றும் தனியார் வசம் இருந்து மீட்கப்படும் யானைகளுக்கு இங்கு புத்துணர்வு அளிக்கப்படுகிறது.
- காட்டுக்குள் இருப்பது போன்று யானைகள் இங்கு சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன.
திருச்சி:
திருச்செந்தூர் முருகன் கோவிலில் கோவில் யானை தெய்வானை தாக்கியதில் பாகன் உள்பட 2 பேர்பலியான சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது கோவில் யானைகளை பராமரிப்பவர்கள், தனியார் யானை பராமரிப்பாளர்கள் மற்றும் பொதுமக்களையும் அதிர்ச்சி அடைய செய்தது.
இதுபோன்ற துயர சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கோவில் யானை மற்றும் தனியார் யானை பராமரிப்புகளுக்கு தமிழக அரசின் வனத்துறை வழிகாட்டி நெறிமுறைகளை வகுத்துள்ளது.
அதனை பின்பற்றாதது விபரீதங்களுக்கு காரணமாக அமைகிறது. கோவில் யானைகள் மற்றும் 24 மணி நேரமும் கட்டிப் போடப்படும் தனியார் யானைகளுக்கு புத்துணர்வு அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
திருச்சி அருகே எம்.ஆர். பாளையத்தில் யானைகள் மறுவாழ்வு மையம் அமைந்துள்ளது. 50 ஏக்கர் பரப்பளவில் விசாலமாக அமைந்துள்ள இந்த மையத்தில் உள்ள யானைகள் தினமும் உற்சாக குளியல், நடைப்பயிற்சி என குதூகலமாக இருக்கின்றன. வனச்சரக அலுவலர் வி பி சுப்பிரமணியம் தலைமையிலான வனவர் மற்றும் வனக்காப்பாளர்கள் மேற்பார்வையில் இந்த யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
கோவில்கள் மற்றும் தனியார் வசம் இருந்து மீட்கப்படும் யானைகளுக்கு இங்கு புத்துணர்வு அளிக்கப்படுகிறது. தினமும் யானைகளூக்கு காலை 6 மணிக்கு யானைகள் எழுந்தவுடன் 8 முதல் 12 கிலோமீட்டர் தூரம் வரை நடை பயிற்சி அளிக்கப்படுகிறது. பின்னர் சிறிய குளியல் போடுகிறது.

அதன் பின்னர் கால் நகத்துக்கு இடையில் வியர்வை சுரப்பி இருப்பதால் புட் கேர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் வேப்ப எண்ணெய், கட்டி கற்பூரம், பூண்டு உள்ளிட்டவை கலந்து காய்ச்சி டெக்காமலி ஆயில் போட்டு தடவி விடுகிறார்கள். இதன் மூலம் கிருமிகள் அதனை அண்டாமல் பாதுகாக்கிறார்கள். அதன் பின்னர் காலை 9 மணிக்கு திட உணவு அளிக்கப்படுகிறது. அதன் பின்னர் மண் குளியல் குளியல், நடைப்பயிற்சி அளிக்கப்படுகிறது. அவ்வப்போது சோளத்தட்டை மர இலை போன்ற தீவனங்கள் வழங்கப்படுகிறது.
இவ்வாறு நாள் முழுவதும் யானைகள் புத்துணர்வுடன் பராமரிக்கிறார்கள். இது தொடர்பாக வனச்சரக அலுவலர் வி பி சுப்பிரமணியம் கூறியதாவது:-
தற்போது எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் 10 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு 11 யானைகள் இருந்தன. அதில் ஒரு யானை சமீபத்தில் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டது. அதனை காப்பாற்ற பலகட்ட முயற்சிகள் எடுத்தோம். பலனளிக்கவில்லை.

வனத்துறை சார்பில் 7 பேர் இங்கு பணியாற்றி வருகிறோம். ஒவ்வொரு யானையையும் பராமரிக்க மாவூத், காவடி என 2 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். காட்டுக்குள் இருப்பது போன்று யானைகள் இங்கு சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன. பொதுவாகவே வனத்துறை சார்பில் கோவில் மற்றும் தனியார் யானைகளுக்கு விதிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.
அதில் யானைகளை வேறு நபர்கள் தொடுவது ,உணவு கொடுப்பது, ஆசீர்வாதம் வாங்குவது போன்றவை கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கோவில் யானை பராமரிப்பாளர்கள் மற்றும் தனியார் யானை பாகன்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் இந்த விதிமுறைகளை பின்பற்றினால் அசம்பாவிதங்களை தடுக்கலாம் .
இவ்வாறு அவர் கூறினார்.
- மீனவர்கள் மீன் பிடிக்க செல்லக் கூடாது என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
- கடல் அலை சுமார் 50 அடிக்கு வந்து செல்வதால் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி உள்ளனர்.
கடலூர்:
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. கேரள கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும்.
நவம்பர் 25-ந்தேதி முதல் பருவமழை வலுவடையும். 26 மற்றும் 27-ந் தேதிகளில் ஒருசில இடங்களில் மிககனமழைக்கு வாய்ப்புகள் உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வந்த நிலையில் , கடலில் வழக்கத்தை விட சீற்றம் அதிகமாக காணப்படும் என்பதால் நேற்று முதல் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லக் கூடாது என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இதனால் கடலூர் மாவட்டத்தில் இருந்து மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. தற்போது கடலில் வழக்கத்தை விட கடல் சீற்றமாக காணப்பட்டு வருகின்றது. மேலும் கடலூர் தாழங்குடா பகுதியில் கடல் சீற்றம் காரணமாக முன்னோக்கி கடல் அலை சுமார் 50 அடிக்கு வந்து செல்வதால் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி உள்ளனர். இது மட்டுமின்றி அதிகளவில் கடல் சீற்றம் ஏற்பட்டால் படகுகள் இழுத்துச் செல்லப்பட்டு விடும் என்ற அச்சத்தில் மீனவர்கள் கடற்கரை ஓரமாக பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
- மாணவனுக்கு திடீரென வயிற்றுப் போக்கு ஏற்படவே உடனடியாக ஆசிரியரிடம் தகவல்களை தெரிவித்துள்ளார்.
- மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
கடலூர்:
கடலூர் அடுத்த குறிஞ்சிப்பாடி பெரிய கண்ணாடி கிராமத்தை சேர்ந்த 12 வயது மாணவன் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இப்பள்ளியில் வாரந்தோறும் வியாழக்கிழமை சத்து மாத்திரைகள் வழங்கப்படுவது வழக்கம். நேற்று வியாழக்கிழமை காலை பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும். சத்து மாத்திரைகள் (போலிக் ஆசிட் இரும்பு சத்து மாத்திரை)அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. மாத்திரைகளை சாப்பிடாத மாணவர்கள் தண்ணீர் குடிக்கும் இடத்தில் மாத்திரைகளை வைத்துவிட்டு சென்றதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் தண்ணீர் குடிக்கும் இடத்திற்கு வந்த 8-ம் வகுப்பு மாணவன் ஒரே நேரத்தில் அதிக மாத்திரைகள் சாப்பிட்டால் உடம்பில் சத்து அதிகரிக்கும் என எண்ணி அங்கிருந்த 15 மாத்திரைகளை மொத்தமாக ஒரே நேரத்தில் உட்கொண்டு உள்ளார். இதில் மாணவனுக்கு திடீரென வயிற்றுப் போக்கு ஏற்படவே உடனடியாக ஆசிரியரிடம் தகவல்களை தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சென்னையில் மட்டுமின்றி சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களிலும் நியாய விலைக்கடைகளில் பருப்பு வினியோகிக்கப்படவில்லை.
- ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பசியாறுவதற்கு நியாயவிலைக்கடைகளில் மலிவு விலையில் வழங்கப்படும் பருப்பு மிகவும் முக்கியம்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை மாநகரில் உள்ள பெரும்பான்மையான நியாய விலைக்கடைகளில் நவம்பர் மாதத்திற்கான துவரம்பருப்பு இதுவரை வழங்கப்படவில்லை.
சென்னையில் மட்டுமின்றி சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களிலும் நியாய விலைக்கடைகளில் பருப்பு வினியோகிக்கப்படவில்லை. நவம்பர் மாதம் தொடங்கி 22 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், பல நியாயவிலைக்கடைகளுக்கு வெறும் 200 கிலோ துவரம் பருப்பு மட்டுமே வழங்கப்பட்டதாகவும், பெரும்பாலான கடைகளுக்கு துவரம் பருப்பே வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
கடந்த மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்களில் துவரம்பருப்பு, பாமாயில் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. மக்களவைத் தேர்தல் வந்ததால், பருப்பு, பாமாயில் ஆகியவற்றை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை இறுதி செய்ய முடியாததால் தான் தாமதம் ஏற்பட்டதாகவும், இனி தாமதம் ஏற்படாது என்றும் அரசுத் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், இப்போது அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களுக்குத் தேவையான துவரம் பருப்புக்கான கொள்முதல் ஆணைகள் கடந்த செப்டம்பர் மாதமே வழங்கப்பட்டு விட்டதாக தமிழக அரசே தெரிவித்த பிறகும் கூட நவம்பர் மாதத்தில் பற்றாக்குறை நிலவுவது ஏன்?
வெளிச்சந்தையில் பருப்பு விலை உயருவதற்காகவே தமிழக அரசு திட்டமிட்டு நியாயவிலைக்கடைகளில் பருப்பு வழங்கலை தாமதப்படுத்துகிறதா? என்பது தெரியவில்லை.
ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பசியாறுவதற்கு நியாயவிலைக்கடைகளில் மலிவு விலையில் வழங்கப்படும் பருப்பு மிகவும் முக்கியம் ஆகும். இதை உணர்ந்து கொண்டு அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் நவம்பர் மாதத்திற்கான துவரம் பருப்பு தடையின்றியும், தாமதமின்றியும் வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- பாராளுமன்றத்தில் பலவிதமான மோசமான திட்டங்களை கொண்டு வருவதாக அறிவித்துள்ளனர்.
- தனிநபர் பிரச்சனைக்கு எல்லாம் தமிழக அரசு பொறுப்பு ஏற்க முடியாது.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் சி.பி.எம். மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களிடம் அதானி ரூ.2,200 கோடி லஞ்சம் கொடுத்து தான் முதலீட்டை ஏற்றுள்ளார். இது தொடர்பாக அமெரிக்க நீதிமன்றம் அதானி, அவரது மருமகன் உட்பட 7 பேர் மீது பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது. இவ்வளவு பெரிய முறைகேடு நடந்ததை அங்குள்ள பங்கு சந்தை நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. ஆனால் இந்தியாவில் உள்ள சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை இதனை கண்டு கொள்ளவில்லை. ஏன் இவ்வளவு பெரிய முறைகேட்டை இவர்கள் கண்டுபிடிக்கவில்லை. அமெரிக்க நிறுவனம் சொன்ன பின்பாவது மத்திய அரசு ஏன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கும், எங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என அந்த நிறுவனம் சார்பில் பதில் கூறப்பட்டுள்ளது. இதனை மோடி அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
அதானி என்பது முகம் தான், பின்னால் இருப்பது நரேந்திர மோடி தான். அவரது பினாமியாக இருப்பதால்தான் அதானி மீது எவ்வளவு பெரிய ஊழல் குற்றச்சாட்டு வந்தாலும் மோடி அரசாங்கம் அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுப்பது கிடையாது. அவர்கள் மீது சம்மன் அனுப்புவதில்லை. விசாரணைக்கு கூட அழைப்பது இல்லை. எனவே மத்திய அரசு உடனடியாக அதானியை கைது செய்ய வேண்டியும், முறையான விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும்.
இந்த முறைகேடு பட்டியலில் தமிழ்நாடு அரசு இடம் பெற்றுள்ளது. தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி, நாங்கள் அதானியுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை எனக் கூறியுள்ளார்.
தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சாரத்தை மத்திய அரசு வாங்கி, மாநிலங்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள். நான் தமிழக முதலமைச்சரை கேட்டுக் கொள்வது, தமிழ்நாடு பெயர் அந்தப் பட்டியலில் வந்துள்ளதால் இது சம்பந்தமாக தமிழக அரசு விசாரணையை தெளிவுபடுத்த வேண்டும். முழுமையான விவரங்கள் என்னவென்று தெரிவிக்க வேண்டும்.
பாராளுமன்றத்தில் பலவிதமான மோசமான திட்டங்களை கொண்டு வருவதாக அறிவித்துள்ளனர். அவர்களுக்கு பாராளுமன்றத்தில் அறுதி பெரும்பான்மை இல்லாத சூழ்நிலையில் கூட ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற சட்டத்தை முன்மொழிவதாக கூறுகின்றனர்.
ஏதோ ஒரு முறைகேடு மூலமாக பாராளுமன்றத்தில் இந்த சட்ட திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு சதி திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற துடிக்கிறது.
தமிழக சட்டமன்றம் விரைவில் கூட உள்ளது. தமிழக சட்டமன்றத்தை 3 அல்லது 4 நாட்கள் நடத்துவதற்கு பதிலாக, எதிர்க்கட்சிகள் தோழமைக் கட்சிகள் கருத்துக்களை பேசுவதற்கும், நாட்டில் உள்ள பல முக்கியமான பிரச்சனைகளை விவாதிப்பதற்கும் உரிய அவகாசத்துடன் சட்டமன்றத்தை நடத்த வேண்டும். முதலமைச்சரும் சபாநாயகரும் சட்டமன்றத்தை போதுமான அவகாசம் கொடுத்து நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காலி பணி இடங்களை நிரப்ப வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் உள்ள தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யும் அறிவிப்பினை சட்டமன்றத்தில் தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.
பள்ளியில் ஆசிரியர்கள், நீதிமன்றத்தில் வக்கீல்கள், மருத்துவமனையில் டாக்டர்கள் தாக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும் வன்மையான கண்டனத்துக்குரியது. இது தனிமனித விரோதம் காரணமாக நடைபெறுகிறது. தனிநபர் பிரச்சனைக்கு எல்லாம் தமிழக அரசு பொறுப்பு ஏற்க முடியாது. போதைப்பொருள் ஒழிப்பதில் அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் இந்த விஷயத்தில் மெத்தனமாக உள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிக்கட்டான்பட்டியில் மத்திய அரசு 2000க்கும் மேற்பட்ட இடங்களில் கனிம வளங்களை எடுப்பதற்கு ஏலம் விட்டுள்ளது. அந்த இடத்தை பல்லுயிர் பாதுகாப்பு மையம் என்கின்ற முறையில் தமிழக அரசு 6 மாதத்திற்கு முன்பே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு உடனடியாக அந்த டெண்டரை ரத்து செய்ய வேண்டும்.
2026 தேர்தலில் கூட்டணிகள் மாறும் என பலர் அவர்கள் யூகத்தின் அடிப்படையில் கூறி வருகின்றனர். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கு மேல் உள்ளது. கூட்டணி மாறுவதற்கான முகாந்திரம் இருப்பதாக தெரியவில்லை .
அ.தி.மு.க.வில் உள்ள தலைவர்களுக்கிடையே கடுமையான கருத்து வேறுபாடுகள் உள்ளது. அ.தி.மு.க. பாராளுமன்ற தேர்தலில் தோற்றத்துக்கு சரியான கூட்டணி இல்லாதது தான் காரணம் என கூறுகின்றனர்.
மீண்டும் அ.தி.மு.க. பா.ஜ.க.வுடன் கூட்டணிக்கு சென்றால் அ.தி.மு.க. என்ற ஒரு கட்சியே இருக்காது.
முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும் போது, கூட்டணி கட்சிகளுக்கு சீட்டு மற்றும் கோடிக்கணக்கில் பணம் கொடுக்க வேண்டும் என பேசி உள்ளார். பொத்தாம் பொதுவாக சொல்லாமல் உங்களிடம் யார் பணம் கேட்டார்கள் என பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.
யார் பணம் கேட்டார்கள்? நீங்கள் எவ்வளவு பணம் கொடுத்தீர்கள்? என்பதை வெளிப்படையாக சொல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது சச்சிதானந்தம் எம்.பி. மதுக்கூர் ராமலிங்கம் மற்றும் பலர் உடனிருந்தனர்.
- நாம் தமிழர் கட்சியினர் யாரும் விலகவில்லை, நாங்கள் தான் அனுப்பி வைக்கிறோம்.
- மற்ற கட்சிகளில் உளவு பார்ப்பதற்காக நாங்கள் தான் எங்கள் கட்சியினரை அனுப்பி வைக்கிறோம்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் நாதக கட்சியில் இருந்து விலகுவோர் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதுதொடர்பாக சீமான் கூறியதாவது:
* நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுபவர்கள் எங்களின் ஸ்லீப்பர் செல்.
* நாம் தமிழர் கட்சியினர் யாரும் விலகவில்லை, நாங்கள் தான் அனுப்பி வைக்கிறோம்.
* மற்ற கட்சிகளில் உளவு பார்ப்பதற்காக நாங்கள் தான் எங்கள் கட்சியினரை அனுப்பி வைக்கிறோம்.
கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து விலகுவது தொடர்பான கேள்விக்கு சிரித்துக்கொண்டே அவர் பதில் அளித்தார்.
- மாணவர் ஆசிரியரை அசிங்கமாக திட்டி கொலை மிரட்டல் விட்டதாக ஆசிரியர் கொடுத்த புகாரின் பேரில் மாணவர் சேட்டு மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
- 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
உளுந்தூர்பேட்டை:
உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் கெடிலம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 கணித ஆசிரியர் ஜெய்சங்கர் மீது வழக்கு பதிவு செய்ததால் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநாவலூர் கெடிலம் ஆற்றுப்பகுதியில் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு கணித ஆசிரியராக ஜெய்சங்கர் பணி ஆற்றி வருகிறார். அவரை அதே பள்ளியில் படிக்கும் 12-ம் வகுப்பு சி குரூப் மாணவன் சேட்டு ஜெய்சங்கரை அசிங்கமாக திட்டியதாக தெரிகிறது. அவர் அந்த மாணவனை அழைத்துக் கொண்டு தலைமை ஆசிரியர் அலுவலகத்தில் ஒப்படைத்தார்.
இந்த நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணவன் ஆசிரியர் ஜெய்சங்கர் அடித்து விட்டதாக கூறி உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதேபோல் மாணவர் ஆசிரியரை அசிங்கமாக திட்டி கொலை மிரட்டல் விட்டதாக ஆசிரியர் கொடுத்த புகாரின் பேரில் மாணவர் சேட்டு மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த சம்பவம் அந்தப் பள்ளியில் மாணவர்களுக்கிடையே கிடைத்த தகவலின் பேரில் ஆசிரியர் பள்ளிக்கு வராததால் ஆசிரியர் மீது ஏன் பொய் வழக்கு போட்டீர்கள் என்று மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சம்பவம் தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெ க்டர் இளையராஜா, சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன், சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜாபர் அலி, ஜெயா, அஷ்டலட்சுமி தனி பிரிவு போலீசார் செந்தமிழ் செல்வன், சரவணன் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை உருவாகி வருகிறது.
- சனாதன எதிர்ப்பு என்பது பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வை நம்புவது.
- ஒருபோதும் எங்கள் நம்பிக்கை தான் சரியானது என்று காயப்படுத்தி அதை திணிக்க முயன்றதில்லை.
சென்னை விமான நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சனாதனம் வேறு... கடவுள் நம்பிக்கை என்பது வேறு.
கடவுள் நம்பிக்கை, மத நம்பிக்கை இது சாதாரண மக்களுடைய உணர்வுகள். சாதாரண மக்களுடைய உணர்வுகளை மதிக்க வேண்டியது எங்களை போன்றவர்களது கடமை.
தேவாலயத்திற்கு அழைக்கின்றபோது நாங்கள் அங்கு செல்கிறோம். மசூதிகளுக்கு அழைக்கின்றபோது அங்கே செல்கிறோம். இதேபோன்று ஏராளமான தோழர்கள் கோவில்களுக்கு அழைக்கிறார்கள். கோவில்களுக்கும் செல்கிறோம். இது உணர்வுகளை மதிக்கிற ஒரு நிலைப்பாடு அவ்வளவு தான்.
சனாதன எதிர்ப்பு என்பது பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வை நம்புவது. ஆண்கள் மேலானவர்கள். பெண்கள் கீழானவர்கள். வருண அடிப்படையிலே ஒரு குறிப்பிட்ட வர்ணம் மேலானது. மற்ற வர்ணங்கள் கீழானவை என்று போதிக்கின்ற அந்த முறையும் அதை நம்புகின்ற நடவடிக்கைகளும் தான் விமர்சனத்திற்கு உரியவை. அவற்றை தான் நாங்கள் எதிர்க்கிறோம். அதைத்தான் நாங்கள் அம்பலப்படுத்துகிறோம்.
மக்களுடைய உணர்வுகள், நம்பிக்கைகள் அவரவருக்கானது. ஒருபோதும் எங்கள் நம்பிக்கை தான் சரியானது என்று காயப்படுத்தி அதை திணிக்க முயன்றதில்லை.
அதனுடைய ஒரு வெளிப்பாடு தான் பழனிக்கு சென்று இருந்தபோது இயக்க தோழர்கள் விடுத்த அழைப்பை ஏற்று 30 ஆண்டுகளுக்கு பிறகு அந்த மலைக்கு சென்று வந்து இருக்கிறேன். இதில் எந்த முரண்பாடும் இல்லை என்று நம்புகிறேன் என்று கூறினார்.






