என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரஜினியை சந்தித்ததை வைத்து என்னை சங்கி என்று திராவிட கருத்தாக்கிகள் முத்திரை குத்துகிறார்கள்.
    • ரஜினி உடனான எனது தனிப்பட்ட சந்திப்பிற்கு காவிச்சாயம் பூசுவதேன்?

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:

    * ரஜினியை சந்தித்ததை வைத்து என்னை சங்கி என்று திராவிட கருத்தாக்கிகள் முத்திரை குத்துகிறார்கள்.

    * ரஜினிகாந்தை அழைத்து 'கலைஞர் எனும் தாய்' நூலை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சங்கியாகவில்லையா?

    * கலைஞர் சிலையை வெங்கையா திறந்தது, கலைஞர் நாணயத்தை ராஜ்நாத் வெளியிட்டதற்கு அரசியல் சாயம் பூசாதது ஏன்?

    * அதனை அரசியல் நாகரிகம் என கதையளந்தவர்கள் ரஜினி உடனான எனது தனிப்பட்ட சந்திப்பிற்கு காவிச்சாயம் பூசுவதேன்?

    * நேர்மையான என்னையும் எனது அரசியலையும் எதிர்கொள்ள முடியாத வக்கற்ற கோழைகள் அவதூறுகள் மூலம் வீழ்த்த துடிக்கின்றனர் என்று கூறினார்.

    • தாக்குதல் நடத்தப்பட்டு பெண் வருவாய் ஆய்வாளர் அனிதா செல்போன் பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
    • வி.சி.க.வினர் 21 பேர் மீது சத்திரப்பட்டி போலீசார் 8 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    மதுரை:

    மதுரை வடக்கு தாலுகாவுக்கு உட்பட்ட கிழக்கு சட்டமன்ற தொகுதி வெளிச்சநத்தம் கிராமத்தில் கடந்த 7-ந்தேதி வி.சி.க. தலைவர் திருமாவளவன் கொடியேற்றுவதற்காக, ஏற்கனவே இருந்த 25 அடி உயர கொடி கம்பத்தை அகற்றிவிட்டு, அனுமதியின்றி கூடுதல் உயரமுள்ள 45 அடி உயர கொடிக்கம்பத்தை கட்சியினர் நிறுவியுள்ளனர்.

    இதனை அகற்றுமாறு வருவாய் அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் அறிவுறுத்திய போது கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் வருவாய்த்துறை அலுவலர்கள் ராஜேஷ் மற்றும் பரமசிவம், பழனியாண்டி ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு பெண் வருவாய் ஆய்வாளர் அனிதா செல்போன் பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதில் வருவாய்த்துறை அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியதாக வி.சி.க.வினர் 21 பேர் மீது சத்திரப்பட்டி போலீசார் 8 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • ஜனவரி மாதம் வரை பாதிப்பு இருக்கும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் தெரிவித்தார்.
    • வீடுகளை சுற்றி தேங்கி நிற்கும் தண்ணீரால் கொசுக்கள் உற்பத்தியாகி பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    தமிழகம் முழுவதும் டெங்கு பாதிப்பு தற்போது அதிகரித்துள்ளது. சென்னை உள்பட எல்லா மாவட்டங்களிலும் பரவலாக நோய் பாதிப்பு உள்ளது. ஜனவரி மாதம் முதல் இதுவரையில் 23 ஆயிரம் பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் 180 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்படுகிறது.

    ஜனவரி மாதம் வரை பாதிப்பு இருக்கும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் தெரிவித்தார்.

    வீடுகளை சுற்றி தேங்கி நிற்கும் தண்ணீரால் கொசுக்கள் உற்பத்தியாகி பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே தண்ணீர் தேங்காமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பெரிய அளவில் பாதிப்பு இல்லை. கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.

    கொசு ஒழிப்பு, மருந்து தெளித்தல் போன்ற பணிகள் சுகாதாரத்துறை மூலம் எடுக்கப்பட்டாலும் வீடுகளை சுற்றி மழைநீர் தேங்காமல் இருந்தால்தான் கொசு உற்பத்தி குறையும். இதுவரையில் டெங்கு பாதிப்பால் 10 பேர் உயிர் இழந்துள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    • வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு எளிதாக பரவக்கூடியது என்பதால் வீட்டில் ஒரு குழந்தைக்கு வந்தால் அனைவருக்கும் பரவி விடுகிறது.
    • காய்ச்சல் மாத்திரை சாப்பிட்ட பிறகும் கடுமையான சோர்வு இருந்தால் எக்ஸ்ரே போன்ற பரிசோதனை செய்வது நல்லது.

    சென்னை:

    பருவ மழை காலத்தில் சளி, இருமல், காய்ச்சல் பாதிப்பு வழக்கமானதுதான். அக்டோபர் மாதம் கொஞ்சம் கொஞ்சமாக கூடி நவம்பரில் அதிகரித்த 'புளூ' வைரஸ் காய்ச்சல் பாதிப்பு டிசம்பரில் பெரு மளவில் பாதிப்பை ஏற்ப டுத்தி வருகிறது.

    சளியில் தொடங்கி இருமல், தொண்டை வலி உடல் சோர்வு என படிப்படியாக பல்வேறு கஷ்டங்களை 'புளூ' வைரஸ் பாதிப்பு ஏற்படுத்தி விடும். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இத னால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த வைரஸ் பாதிப்பு பெரியவர்களை விட சிறு குழந்தைகளை அதிகளவில் பாதித்துள்ளன. சென்னையில் காய்ச்சல் பாதிப்பு இல்லாத வீடே இல்லை என்ற நிலையில் புளூ காய்ச்சல் பரவி வருகிறது.

    இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு எளிதாக பரவக்கூடியது என்பதால் வீட்டில் ஒரு குழந்தைக்கு வந்தால் அனைவருக்கும் பரவி விடுகிறது. எல்லாருமே இருமல், தொண்டை வலியால் பாதிக்கப்படுகிறார்கள்.

    இதனால் அரசு ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் பிரிவில் கூட்டம் அலைமோதுகிறது. காய்ச்சல் உபாதையால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் மருத்துவர்களை அணுகி மாத்திரை வாங்கி செல்ல காத்து நின்றனர்.

    இதே போல் தனியார் மருத்துவமனைகள், கிளி னிக்குகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. குழந்தைகளுடன் பெற்றோர்கள் நள்ளிரவு வரை காத்து நின்று சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    ஒவ்வொரு பகுதியிலும் உள்ள தனியார் மருத்துவர்களிடமும், குழந்தைகள் டாக்டர்களிடமும் நோயாளி கள் கூட்டம் காத்திருப்பதை காண முடிகிறது.

    இதுகுறித்து ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி பொதுநல மருத்துவர் சந்திரசேகர் கூறியதாவது:-

    புளூ வைரஸ் காய்ச்சல் 95 சதவீதம் மருந்து இல்லாமலே தானாகவே குணமாகி விடும். தற்போது பெரியவர்களை விட குழந்தைகள்தான் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். இந்த வைரஸ் மழை-குளிர் காலத்தில் வரக்கூடியதுதான். இணை நோய் உள்ளவர்களுக்கு உடல் வலி, இருமல், தலைவலி போன்ற பாதிப்புகள் கடுமையாக இருக்கும். எதிர்ப்பு சக்தி குறைவின் காரணமாக புளூ வைரஸ் தொற்றி விடுகிறது.

    'பாரசிட்டமால்' உள்ளிட்ட காய்ச்சல் மாத்திரை சாப்பிட்ட பிறகும் கடுமையான சோர்வு இருந்தால் எக்ஸ்ரே போன்ற பரிசோதனை செய்வது நல்லது.

    காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளை தனிமைப்படுத்த வேண்டும். முகக்கவசம் அணிவது, சளியை கண்ட இடங்களில் துப்பாமல் பிளாஸ்டிக் கவரில் சேகரித்து அப்புறப்படுத்துவது, இருமல் வந்தால் மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க முகத்தை கை விரல்களால் மூடுவது போன்றவற்ளை பின்பற்ற வேண்டும்.

    புளூ காய்ச்சல் பாதிப்பில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க தடுப்பூசி ஒவ்வொரு ஆண்டும் போட வேண்டும். பெரியவர்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டால் காய்ச்சல் பாதிப்பு வராது. வந்தாலும் கூட தீவிரம் குறையும். வீசிங், ஆஸ்துமா உள்ளவர்கள் போட்டுக்கொண்டால் 95 சதவீதம் பாதுகாப்பாகும். இருதய நோய் பாதிப்பு உள்ளவர்களும் போட்டுக் கொள்ளலாம்.

    இந்த காய்ச்சல் பாதிப்பு 3 முதல் 5 நாட்களில் குணமாகி விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
    • பெண் உள்பட 4 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்திநகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் முருகன். தொழிலாளி. இவரது மனைவி பாலசுந்தரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இளையமகன் கருப்பசாமி. அப்பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் பெற்றோர் வேலைக்கும், அவர்களது மூத்த மகன் பள்ளிக்கு சென்று விட்டனர். கருப்பசாமிக்கு உடல்நிலை சரியில்லாததால் அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டில் இருந்த மாணவன் திடீரென மாயமானார்.

    இது தொடர்பான புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 தனிப்படைகள் அமைத்து சிறுவனை தேடி வந்த நிலையில் நேற்று காலையில் சிறுவனின் வீட்டின் அருகே இருந்த பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் சிறுவன் கருப்பசாமி சடலமாக மீட்கப்பட்டார்.

    சிறுவன் மாயமான போது அவர் அணிந்திருந்த 1½ பவுன் நகைகள் மாயமாகி இருந்ததால் அவர் நகைக்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

    கருப்பசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் சிறுவனின் உடல் நேற்று இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது.

    இந்நிலையில் அதிக அழுத்தம் காரணமாக சிறுவன் கருப்பசாமி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும், வாய் மற்றும் உதடு பகுதியில் காயங்கள் இருப்பதாகவும் பிரேதபரிசோதனை தகவலில் தெரிய வந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதை போலீசார் உறுதிபடுத்துகின்றனர்.

    அதன்படி குற்றவாளிகளை பிடிக்கும் நோக்கில் நேற்று இரவும் சிறுவனின் வீட்டு பகுதியில் உள்ள வீடுகளில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. மோப்பநாய் அந்த வீட்டு பகுதியில் சுற்றி வந்தது.

    மேலும் கடந்த 2 நாட்களாக அப்பகுதியில் இருந்த செல்போன் அழைப்பு விவரங்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக பெண் உள்பட 4 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசுவதால் அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து போலீசார் கூறும்போது, இந்த வழக்கில் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க போதிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும், 3 தனிப்படைகள் அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருவதாகவும் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தனர்.

    • டிசம்பர் 13, 16, 17-ந்தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதாவது:-

    தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது.

    இது இன்று மேற்கு-வடமேற்கு திசையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை-தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நெருங்கி வருகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பல இடங்களில் 5 நாட்கள் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 12 முதல் 20 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் 2 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுஉள்ளது. இன்று கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    நாளை (12-ந்தேதி) தஞ்சாவூர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கரூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களின் ஓரிரு இடங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    டிசம்பர் 13, 16, 17-ந்தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த 3 நாட்களும் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும்.

    தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும், கேரள கடலோர பகுதிகளில் நாளையும் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுவதற்கு சாதகமான சூழல் எதுவும் தற்போது இல்லை. தமிழகத்தில் கனமழை பெய்யும். ஆனால் பொதுமக்கள் அச்சப்படும் அளவுக்கு காற்று, வெள்ள பாதிப்பு ஏற்படாது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 1-ந்தேதி முதல் டிசம்பர் 10-ந்தேதி வரை இயல்பாக 39.4 செ.மீ. பெய்யும் நிலையில் இந்த ஆண்டு இதுவரை 45 செ.மீ. பெய்துள்ளது. இது இயல்பை விட 16 சதவீதம் அதிகம் ஆகும்.

    • தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவி வருகிறது.
    • ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக நேற்று வலுப்பெற்றது. இது தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவி வருகிறது. இன்று இது மேற்கு வடமேற்கு திசையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை-தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில், தமிழகத்தின் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை என ஆறு மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்டா உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    • மனுதாரர் அளித்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்து, வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
    • வழக்கு நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன், முன்பாக விசாரணைக்கு வந்தது.

    மதுரை:

    தஞ்சாவூர் மாவட்டம் கரந்தையைச் சேர்ந்த பத்மநாபன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    தஞ்சாவூர் மாவட்டம் அருளானந்தம்மாள் நகரில் உள்ள பல ஏக்கர் நிலம் நகராட்சி பள்ளி கட்டுவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த இடம் வருவாய் ஆவணங்களில் தஞ்சை மாநகராட்சியின் ஆணையர் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு பொன்னுமணி எனும் தனிநபரின் பெயரில் இந்த இடம் சட்ட விரோதமாக மாற்றப்பட்டிருந்தது. சட்ட விரோதமாக, முறைகேடு செய்து தனி நபரின் பெயரில் அந்த இடத்திற்கு பட்டா வாங்கப்பட்டிருந்தது.

    இந்த நடவடிக்கையை நகராட்சி அலுவலர்கள் எதிர்த்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தஞ்சை மாநகராட்சியின் ஆணையர், மேயர், வருவாய் அலுவலர்கள் ஆகியோர் இணைந்து சுயநல நோக்கில் சட்ட விரோதமாக அந்த இடத்தை விற்பனை செய்து, தற்போது மேயரின் மனைவியின் பெயரில் அந்த இடம் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    தற்போதைய தஞ்சை மாநகராட்சி மேயர் ஆளும் கட்சியை சேர்ந்தவர் என்பதால் இந்த விவகாரத்தை தமிழக காவல்துறை விசாரித்தால் விசாரணை நியாயமான முறையில் நடைபெறாது. எனவே இந்த விவகாரம் தொடர்பாக மனுதாரர் அளித்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்து, வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன், முன்பாக விசாரணைக்கு வந்தது. விசாரணை செய்த நீதிபதி இந்த வழக்கில், வழக்கின் முக்கியத்துவம் கருதி பொன்னுமணி, தஞ்சை மேயரின் மனைவி சங்கீதா, தஞ்சை மாவட்ட வருவாய் மண்டல அலுவலர் ஆகிய 3 பேரையும், நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கில் சேர்ப்பதாகவும், வழக்கு தொடர்பாக அவர்களது தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவும், தஞ்சை மாவட்ட வருவாய் அலுவலர் சம்பந்தப்பட்ட இடம் குறித்த ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.

    • சி.எஸ்.டி மும்பை விரைவு ரெயில் (16340) ஆகியவை விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்று பாதையில் இயக்கப்படும்.
    • கச்சக்குடா விரைவு ரெயில் (16354) திருச்சி வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக திண்டுக்கல், கரூர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.

    நெல்லை:

    தென்னக ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திண்டுக்கல்-திருச்சி ரெயில் பாதை பிரிவில் ரெயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெற இருக்கின்றது. இதன் காரணமாக மதுரை கோட்டம் சார்பில் ரெயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

    அதன்படி செங்கோட்டையில் இருந்து நாளை (வியாழக்கிழமை) மற்றும் வருகிற 14, 17, 28, 31 ஆகிய தேதிகளில் காலை 7.05 மணிக்கு புறப்பட வேண்டிய மயிலாடுதுறை விரைவு ரெயில் (16848), நாகர்கோவிலில் இருந்து நாளை புறப்பட வேண்டிய சி.எஸ்.டி மும்பை விரைவு ரெயில் (16352), குருவாயூரில் இருந்து இன்று மற்றும் 13, 16, 27, 30 ஆகிய தேதிகளில் புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் விரைவு ரெயில் (16128), கன்னியாகுமரியில் இருந்து வருகிற 14, 28 ஆகிய தேதிகளில் புறப்பட வேண்டிய கொல்கத்தா ஹவுரா விரைவு ரெயில் (12666), நாகர்கோவிலில் இருந்து டிசம்பர் 13-ந்தேதி புறப்பட வேண்டிய சி.எஸ்.டி மும்பை விரைவு ரெயில் (16340) ஆகியவை விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்று பாதையில் இயக்கப்படும்.

    நாகர்கோவிலில் இருந்து வருகிற14, 28 ஆகிய தேதிகளில் புறப்பட வேண்டிய கச்சக்குடா விரைவு ரெயில் (16354) திருச்சி வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக திண்டுக்கல், கரூர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.

    மயிலாடுதுறையில் இருந்து வருகிற 14-ந்தேதி புறப்பட வேண்டிய செங்கோட்டை விரைவு ரெயில் (16847), கச்சக்குடாவில் இருந்து நாளை மறுநாள் புறப்பட வேண்டிய நாகர்கோவில் சிறப்பு ரெயில் (07435), சென்னை எழும்பூரில் இருந்து 14-ந்தேதி புறப்பட வேண்டிய குருவாயூர் விரைவு ரெயில் (16127) ஆகியவை திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.

    நாகர்கோவில் மற்றும் கோயம்புத்தூரில் இருந்து வருகிற 28, 31-ந்தேதிகளில் புறப்பட வேண்டிய கோயம்புத்தூர் மற்றும் நாகர்கோவில் பகல் நேர விரைவு ரெயில்கள் (16321-16322) கரூர், திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • தேவநூர மஹாதேவா ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலர்.
    • சாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராகச் வைக்கம் விருதுசெயல்பட்டவர்.

    சென்னை:

    2024-ம் ஆண்டிற்கான "வைக்கம் விருது" கர்நாடக மாநிலம், மைசூரு மாவட்டத்தை சேர்ந்த புகழ் பெற்ற எழுத்தாளர் தேவநூர மஹாதேவாவுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தேவநூர மஹாதேவா ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். மக்களின் மொழியியல் உரிமைகளின் மீதான நிலைப்பாட்டில் அதிக ஈடுபாடு கொண்டவர். மேலும், சாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராகச் செயல்பட்டவர். இவர் ஒன்றிய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ மற்றும் சாகித்ய அகாடமி விருது போன்ற பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

    வைக்கம் விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தேவநூர மஹாதேவாவுக்கு 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் தங்க முலாம் பூசிய பதக்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரள மாநிலம் வைக்கத்தில் நாளை (12-ந்தேதி) நடைபெற உள்ள வைக்கம் நினைவகம் திறப்புவிழா நிகழ்ச்சியில் வழங்குகிறார்.

    • ஒரு சில இடங்களில் அதிகளவில் மழை பெய்து வருவதையும் காண முடிந்தது.
    • மீண்டும் மழை பெய்து வருவதால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழும் அபாயமும் நிலவி வருகின்றது.

    கடலூர்:

    தென்மேற்கு வங்க கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புதுச்சேரிக்கு சுமார் 500 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு இல்லை.

    இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, 12-ந் தேதி காலை பலவீனமடையும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு புயல் காரணமாக மழை மற்றும் தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூர் மாவட்டத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டிருந்த நிலையில் கடலூர், நெல்லிக்குப்பம், சிதம்பரம், பெண்ணாடம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பரவலாக காலை முதல் மழை பெய்து வருகின்றது.

    ஒரு சில இடங்களில் அதிகளவில் மழை பெய்து வருவதையும் காண முடிந்தது. இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் குடைப்பிடித்த படியும், மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் மழையில் பலர் நனைந்த படி சென்றதைக் காண முடிந்தது.

    இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தற்போது சிறிதளவு தண்ணீர் குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள நிலையில் மீண்டும் மழை பெய்து வருவதால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழும் அபாயமும் நிலவி வருகின்றது.

    இந்த நிலையில் தென்பெண்ணை கரையோரம் ஆங்காங்கே கரைகள் சேதமடைந்து தற்போது மணல் மூட்டைகள் அடுக்கும் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றது. இருந்தபோதிலும் சாத்தனூர் அணையிலிருந்து மீண்டும் 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் முன்னெச்சரிக்கை பணிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றது.

    மேலும், இன்று முதல் 13-ந் தேதி வரை மழை இருக்கும் என்பதால் ஏற்கனவே பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் தண்ணீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டு உள்ள நிலையில், தற்போது மீண்டும் மழை பெய்து வருவதால் விவசாயிகள் பெரும் கலக்கம் அடைந்து உள்ளனர்.

    • வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததன் 1000-ம் நாள் வருகிற 24-ந் தேதி வருகிறது.
    • காஞ்சிபுரம் நகரில் நடைபெறும் போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையேற்று நடத்துவார்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததன் 1000-ம் நாள் வருகிற 24-ந் தேதி வருகிறது. அன்று தான் சமூகநீதிக்காக குரல் கொடுத்த தந்தைப் பெரியாரின் நினைவு நாள். அந்த நாளில், அதாவது வருகிற 24-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு, வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், வட்டத் தலைநகரங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மாபெரும் மக்கள்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.

    தந்தைப் பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ம் நாள் வன்னிய மக்கள் தொடங்கிய போராட்டத்தால் 21 இன்னுயிர்களை இழந்தாலும் கூட, 20 சதவீத இட ஒதுக்கீட்டை வென்றெடுத்துக் கொடுத்தது. இப்போது அவரது நினைவு நாளில் தொடங்கும் அடுத்தக்கட்ட போராட்டமும் வெற்றியில் தான் முடியும்; வன்னியர் சமூகத்திற்கு சமூகநீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையும், உறுதியும் எனக்கு அதிகமாகவே இருக்கின்றன.

    காஞ்சிபுரம் நகரில் நடைபெறும் போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையேற்று நடத்துவார். மற்ற இடங்களில் நடைபெறும் இந்த போராட்டங்களை பா.ம.க.வின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் தலைமையேற்று நடத்துவர். தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலைநிறுத்த வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக நடைபெறும் இந்தப் போராட்டங்களில் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×