என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு.
- திருவள்ளுவர் தொடர்பான கண்காட்சிகள் இன்று முதல் நடத்தப்பட்டு வருகின்றன.
சென்னை:
கன்னியாகுமரி கடலில் உள்ள இரண்டு பாறை களில் ஒரு பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைக்கப் பட்டுள்ளது. மற்ெறாரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
1.1.2000-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த கருணாநிதி அந்த திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார். இந்த சிலை தமிழகத்தின் சுற்றுலா தலங்களில் தனித்துவமான சிறப்பை பெற்று உள்ளது.
கன்னியாகுமரி கடல் பாறையில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு தற்போது 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. இதையொட்டி தமிழக அரசு சார்பில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அரசு சார்பில் திருவள்ளுவர் தொடர்பான கண்காட்சிகள் இன்று முதல் நடத்தப்பட்டு வருகின்றன.
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

மேலும் திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும் இணைக்கும் வகையில் ரூ.37 கோடி செலவில் 97 மீட்டர் நீளம் 4 மீட்டர் அகலம் உள்ள கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.
தற்போது அந்த பாலம் பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளன. அந்த கண்ணாடி கூண்டு பாலத்தை வருகிற 30-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். மேலும் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்.
இதையொட்டி தமிழ கத்தின் பல பகுதிகளிலும் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா களை கட்டி உள்ளது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள நூலகத்தில் அரசு சார்பில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அந்த கண்காட்சியில் திருவள்ளுவரின் சிறப்பை தெரிவிக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்று இருந்தன. மாணவ-மாணவிகள் வரைந்த திருவள்ளுவரின் பல்வேறு வகையான படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. அதில் ஒரு மாணவர் வரைந்த படம் திடீரென சர்ச்சையை ஏற்படுத்தியது.
அந்த திருவள்ளுவர் படத்தை அந்த மாணவர் காவி உடையுடன் வரைந்து இருந்தார். திருவள்ளுவர் படத்துக்கு காவி நிறம் பூசப்பட்டு இருப்பது சரியானது அல்ல என்று கண்காட்சிக்கு வந்திருந்த பலரும் விமர்சித்தனர்.
கடந்த ஆண்டு காவி உடையுடன் கூடிய திருவள்ளுவர் படத்தை கவர்னர் ஆர்.என்.ரவி பயன்படுத்தியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. கவர்னருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் அதே போன்று காவி உடையில் திருவள்ளுவர் படம் இருந்ததால் கண்காட்சியில் சற்று சர்ச்சை எழுந்தது. இதையடுத்து அந்த திருவள்ளுவர் படம் கண்காட்சி அரங்கில் இருந்து உடனடியாக அகற்றப்பட்டது.
இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-
ஐயன் திருவள்ளுவர் சிலை 25 ஆண்டுகளுக்கு முன் கன்னியாகுமரியில் கலைஞரால் 2000-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி வைக்கப்பட்டது.
25 ஆண்டுகள் நிறைவடைந்து வெள்ளி விழா கொண்டாட்டமாக மட்டுமின்றி நம் பள்ளி பிள்ளைகளுக்கு ஓவியப் போட்டியாக இருந்தாலும் சரி, அதை சார்ந்துள்ள பல்வேறு ஒப்புவிப்பு போட்டியாக இருந்தாலும் இதுபோன்ற போட்டிகளை நடத்தி, பரிசுகள் வழங்க வேண்டும் என்று சொல்லி இருந்தார்.
அது மட்டுமின்றி ஒவ்வொரு மாவட்ட நூல கங்களிலும் இது போன்று வள்ளுவர் புத்தக கண்காட்சி ஓவிய கண்காட்சியாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு நூலகத்திலும் அந்தந்த மாவட்ட கலெக்டர் மூலமாக வள்ளுவர் புகைப்படம் வைக்கப்பட்டு மாலை மரியாதை செலுத்தும் நிகழ்வும் நடைபெறுகிறது.
திருவள்ளுவருக்கு மரியாதை என்று சொல்கிற போது அனைவருக்கும் பொதுமறையான ஒன்று. அந்த விதத்தில் பெருமை கொள்கின்ற ஒரு நிகழ்வாக அமைந்துள்ளது.
மாணவ-மாணவிகள் ஒவ்வொருவரையும் தனித் திறமையை வளர்த்தெடுக்கும் விதமாக தேர்ந்தெடுத்து பல்வேறு போட்டிகளை நடத்தி வருகிறோம்.
இதில் தேர்வு செய்யப்படு கிற மாணவ செல்வங் களை வெளிநாடுகளுக்கு அழைத்து செல்வதை ஒவ்வொரு ஆண்டும் செய்து வருகிறோம்.
கேள்வி:- பள்ளிக் கல்வி துறைக்கு ஒன்றிய அரசிடம் இருந்து நிதி வரவேண்டியது இன்னும் வராமல் இருக்கிறதே. நிதி பற்றி பேச மறுப்பதற்கு என்ன காரணம்?
பதில்:- நிதி பற்றி பேச ஒன்றிய அரசுதான் மறுக்கிறார்கள். சம்பளத்துக்கும் இண்டர்நெட்டுக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் இண்டர்நெட்டுக்கு பாக்கி வைக்க வேண்டிய அவசியம் இல்லை. எங்களுக்கும் அவர்களுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளது. ஒரு அரசாங்கம் நிலுவை வைக்குமா?
கேள்வி:- மும்மொழி கல்விக் கொள்கையை ஏற்காததால்தான் மத்திய அரசு நிதியை நிறுத்தி வைத்திருக்கிறார்களா?
பதில்:- இதுபற்றி மத்திய மந்திரி கூறும்போது அது மாதிரிதான் சொல்கிறார். அதனால்தான் கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று சொல்கிறோம்.
கேள்வி:- திருவள்ளுவர் ஓவியத்தை காவி நிறத்தில் வரைந்து வைத்திருந்தது குறித்து?
பதில்:- ஓவியம் வரைந்த அந்த பிள்ளையிடம் சொல்லி விட்டோம். இம்மாதிரி வரையக் கூடாது என்று சொல்லி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வேதாந்தா நிறுவனத்தார் அவ்வளவு எளிதில் டங்ஸ்டன் திட்டத்தை விட்டு விட்டு போக மாட்டார்கள்.
- பாராளுமன்றத்திற்குள் அதானி என்ற பெயரை கூற முடியவில்லை.
மதுரை:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்தை ரத்து செய்யக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் 3 நாட்கள் நடைபயண நிறைவு நிகழ்ச்சி பொதுக்கூட்டம் மேலூர் பஸ் நிலையம் முன்பு நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கலந்துகொண்டு பேசினார்.
டங்ஸ்டன் தொடர்பாக பாராளுமன்றத்தில், சட்ட மன்றத்தில் பேசலாம். ஆனால் சம்பந்தப்பட்ட ஊர்களில் பேசினால் தான் டங்ஸ்டன் திட்டம் ரத்தாகும். டங்ஸ்டன் குறித்த முழுவிவரமும் மேலூரின் ஒவ்வொரு கிராமத்தினருக்கு தெரிந்தால் தான் திட்டம் ரத்தாகும். டங்ஸ்டன் குறித்து நமக்காக சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், அதிகாரிகள் பேசுவார்கள் என்பதை விட நமக்காக நாம் பேசினால் தான் அரசு செவி மடுக்கும்.
வேதாந்தா நிறுவனத்தார் அவ்வளவு எளிதில் டங்ஸ்டன் திட்டத்தை விட்டு விட்டு போக மாட்டார்கள். இத்திட்டத்தை நிறைவேற்ற முயற்சி எடுப்பார்கள். டங்ஸ்டன் பிரச்சனையில் நமக்கு மிகப்பெரிய நம்பிக்கை சட்டமன்ற தீர்மானம். இவ்வளவு நடந்த பிறகும் ஒன்றிய அரசு இப்போது வரை டங்ஸ்டன் தொடர்பாக வாய் திறக்கவில்லை.
மத்திய அமைச்சரிடம் பேசும்போது, டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்வதில் என்ன பிரச்சனை உள்ளது எனக்கேட்டேன். அதற்கு மத்திய மந்திரி மொத்தம் 5,000 ஏக்கரில் அரிட்டாபட்டி பாரம்பரிய சின்னங்கள் வெறும் 500 ஏக்கர் தான், மீதமுள்ள 4,500 ஏக்கரில் திட்டத்தை நிறைவேற்றினால் உங்களுக்கு என்ன பிரச்சனை என கேட்கிறார்.
மத்திய அரசு டங்ஸ்டன் திட்டத்தை நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ளார்கள். டங்ஸ்டன் ஏல உத்தரவு ரத்து என மத்திய அரசு அவ்வளவு எளிதாக அறிவிக்க மாட்டார்கள். நம் எதிர்ப்பு நடவடிக்கைகள் போதாது. போராட்டம் அடுத்தகட்டத்திற்கு நகர்ந்தால் மட்டுமே டங்ஸ்டன் திட்டம் ரத்தாகும்.
பாராளுமன்றத்திற்குள் அதானி என்ற பெயரை கூற முடியவில்லை. அதானி என பேசினால் மைக் ஆப் செய்யப்படுகிறது. பெரு முதலாளிகளின் அரசியலை புரிந்து கொள்ள வேண்டும். நமக்கு வந்திருப்பது சாதாரண ஆபத்து அல்ல. மேலூர் மக்கள் பெருமுதலாளிகளின் அரசியலை புரிந்து கொள்ள வேண்டும். மேலூர் போராட்டம் இந்தியளவில் கவனம் பெற்றுள்ளது. இந்தியா முழுவதும் மேலூரின் சத்தம் கேட்டுக்கொண்டு உள்ளது.
கூடங்குளம், மீத்தேன், ஸ்டெர்லைட் போன்று மதுரை மேலூர் ஆகிவிடக்கூடாது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் 14 பேர் சுடப்பட்டார்கள். அங்கெல்லாம் ஜனநாயக சக்திகள் கோட்டை விட்டு விட்டார்கள். கவனக்குறைவாக இருந்துவிட்டார்கள். மேலூரை எந்த தலைவர்களும் காப்பாற்ற மாட்டார்கள்.
மக்கள், தலைவர்களை நம்ப வேண்டாம். மக்களே விழிப்புணர்வு பெற்று போராடுங்கள். டங்ஸ்டன் ஏலம் ஒப்பந்த அறிவிப்பு ரத்து என்பதை அறிவிக்கிற வரை போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இந்த நாட்டின் அரசமைப்பு சட்டம், ஒன்றிய அரசு என எல்லாமே வேதாந்தா நிறுவனத்திற்கு ஆதரவாக உள்ளது. ஆனால் மக்கள் சக்தி வேதாந்தா நிறுவனத்திற்கு எதிராக உள்ளது.
ஒரு கேடயம் போல சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றிய முதல்வருக்கு நன்றி. ஒப்பந்தம் ரத்து என மத்திய அரசு அறிவிக்கும் வரை போராட்டத்தை தொடர்ந்து நடத்தவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.
- என்ஜின் டிரைவர் உடனடியாக தகவல் தெரிவித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது
திண்டிவனம்:
சென்னை எழும்பூரிலிருந்து இன்று காலை 6மணிக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு பாண்டிச்சேரி ரெயில் திண்டிவனம் நோக்கி வந்து கொண்டிருந்தது.
திண்டிவனம் அருகே உள்ள ஓங்கூர் தண்டவாளத்தில் திடீரென அதிகப்படியான சத்தம் கேட்டதால் என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். இது குறித்து ரெயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ரெயில்வே ஊழியர்கள் வந்து பார்த்தபோது தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து பாண்டிச்சேரி ரெயில் அங்கேயே நிறுத்தப்பட்டது.
ஒரு மணி நேரத்திற்கு மேலாக தண்டவாளத்தில் ரெயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும் பயணிகள் உரிய நேரத்திற்கும் செல்ல முடியாமல் கடும் அவதியடைந்து வந்தனர்.
தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தண்டவாளத்தை ரெயில்வே ஊழியர்கள் சரி செய்த பின் திண்டிவம் நோக்கி ரெயில் வந்து கொண்டிருக்கிறது. என்ஜின் டிரைவர் உடனடியாக தகவல் தெரிவித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
- ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலர்கள் பயன்பாட்டிற்காக 95 வாகனங்களின் சேவைகளை முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- தமிழகத்தின் 21 மாவட்டங்களில் கட்டப்பட்ட 400 வகுப்பறை கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலர்கள் பயன்பாட்டிற்காக ரூ.8.46 கோடி மதிப்பிலான 95 வாகனங்களின் சேவைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழகத்தின் 21 மாவட்டங்களில் ரூ.64.44 கோடி செலவில் கட்டப்பட்ட 400 வகுப்பறை கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் மானியக் கோரிக்கையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 3 சதவீத விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ், நடப்பாண்டில் 100 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்ட காலிப்பணியிடங்களில் அவர்களது சாதனைகள் மற்றும் கல்வித்தகுதியின் அடிப்படையில் பணி ஆணை வழங்கப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி, முதற்கட்டமாக, சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சார்ந்த 84 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 3 சதவீத விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பள்ளிக்கல்வித் துறை, தொழில் துறை, எரிசக்தித் துறை, கூட்டுறவுத் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நெடுஞ்சாலைத் துறை போன்ற 14 அரசுத் துறைகளில் இளநிலை உதவியாளர், உதவியாளர், இளநிலை வரைவு அலுவலர், கூட்டுறவு சங்கங்களில் இளநிலை மற்றும் முதுநிலை ஆய்வாளர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- உற்சவத்தில் 9 நாட்களும் விஷேச 21 தீபாராதனை நடைபெறும்.
- 13-ந் தேதி மார்கழி ஆருத்ரா தரிசன மகோற்சவ ஞானாகாச சித்சபா பிரவேசம் நடைபெறும்.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் மார்கழி ஆருத்ரா தரிசன விழா நடைபெறுவது வழக்கம்
இந்த ஆண்டுக்கான மார்கழி ஆருத்ரா தரிசன விழா வருகிற 4-ந்தேதி (சனிக்கிழமை) காலை 6.15 மணிமுதல் 7 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
5-ந் தேதி வெள்ளிசந்திர பிரபைவாகன காட்சி,6-ந் தேதி தங்க ஸர்யபிரபை வாகன காட்சி, 7-ந் தேதி வெள்ளி பூத வாகனகாட்சி, 8-ந்தேதி வெள்ளி ரிஷப வாகன காட்சி (தெருவடைச்சான்) ஆகியவை நடக்கிறது.
9-ந்தேதி வெள்ளி யானை வாகன காட்சி, 10-ந்தேதி தங்க கைலாஸ வாகன காட்சி,11-ந்தேதி தங்க ரதத்தில் பிஷாடன மூர்த்தி காட்சி, பின்னர் சோமாஸ் கந்தர் வெட்டுங்கு திரையில் வீதியுலா நடக்கிறது.
12-ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) காலை 5 மணிமுதல் 5.30 மணிக்குள் ரதயாத்ராதானம் நடராஜர், அம்பாள், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ரதோத்றவக் காட்சி தேர் உற்சவம் நடக்கிறது.
13-ந் தேதி அதிகாலை 2 மணி முதல் 6 மணிவரை ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாம சுந்தரி சமேத நடராஜர் மகாபிஷேகம் நடைபெறும்.
6 மணி முதல் 10 மணி வரை திருவாபரண அலங்காரம், பஞ்ச மூர்த்தி வீதி உலா காட்சி, சித்சபையில் விஷேக ரகசிய பூஜை, 2 மணிக்கு மேல் மார்கழி ஆருத்ரா தரிசன மகோற்சவ ஞானாகாச சித்சபா பிரவேசம் நடைபெறும்.
14-ந்தேதி இரவு முத்துப்பல்லக்கு காட்சி நடைபெறுகிறது. உற்சவத்தில் 9 நாட்களும் மாலை சாயரட்சை காலத்தில் மாணிக்க வாசகர், நடராஜர் சன்னதிக்கு வந்தவுடன் திருவெம்பாவை பாடி விஷேச 21 தீபாராதனை நடைபெறும்.
இவ் வைபவத்தில் 10 நாட்களும் இரு வேளைகளிலும் யாகங்களும் 4 வேத (ரிக், யஜூர், சாம, அதர்வண) பாராயணங்களும், பன்னிரு திருமுறைகளும் பஞ்சமூர்த்தி வீதி உலா காட்சியும், நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சிகளும் மற்றும் ருத்ராபிஷேகம், அன்னதானமும் நடைபெறும்.
விழாவுக்கான ஏற்பாடுகளை சபாநாயகர் கோவில் டிரஸ்டி பாஸ்கர தீட்சிதர் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
- ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது ஜனநாயக விரோதமானது.
- அரசியலில் வீட்டில் இருந்து வேலை செய்ய முடியாது.
கோவை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 24-வது கோவை மாவட்ட மாநாடு கோவை வரதராஜபுரம் பகுதியில் நேற்று தொடங்கியது. இன்று 2-வது நாளாக மாநாடு நடந்தது.
மாநாட்டுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தொடக்க நிகழ்ச்சியாக கோவையின் வரலாற்றை விளக்கும் வகையில் புகைப்பட கண்காட்சியை அந்த கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன் திறந்துவைத்தார்.
பின்னர் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட நினைவு ஜோதிகளை அக்கட்சி நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர்.
இதையடுத்து முன்னாள் எம்.பி. பி.ஆர். நடராஜன், கட்சிக்கொடியை ஏற்றி வைத்தார். மாநாட்டில் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி கலந்து கொண்டு பேசியதாவது:-
இந்தியாவில் 3-வது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள பா.ஜ.க. தனது சொந்த காலில் நிற்க முடியாமல் பிற கூட்டணி கட்சிகளை சார்ந்து தான் ஆட்சியமைக்க முடியும் என்ற நிலைவந்துள்ளது.
பா.ஜ.க. அரசு பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், வகுப்புவாத கொள்கையை கடைபிடிக்கும் அரசாகவும் உள்ளது. பல இடங்களில் சிறுபான்மையின மக்கள் குறிவைத்து தாக்கப்படுகிறார்கள்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது ஜனநாயக விரோதமானது. மாநில உரிமைகளுக்கு எதிரானது. டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கக் கூடாது என தமிழ்நாடு அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி இருப்பது வரவேற்கத்தக்கது.
பாசிசத்துக்கும், பாயாசத்துக்கும் வித்தியாசம் தெரியாத தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், ஆட்சியை பிடித்தால் என்ன செய்வார் என நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது. ஒரு கம்பெனிக்கு வொர்க்பிரம் ஹோம் பண்ணலாம். அரசியலில் வீட்டில் இருந்து வேலை செய்ய முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து உழைப்பாளர் பேரணியும், மசக்காளிபாளையத்தில் பொதுக்கூட்டமும் நடந்தது.
- வேனை பொன்னேரியைச் சேர்ந்த குமார் என்பவர் ஓட்டி வந்தார்.
- வேன் விபத்தில் சிக்கி 15-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயம் அடைந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திண்டிவனம்:
சென்னை பொன்னேரியில் இருந்து 28 பக்தர்களை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று திருச்செந்தூர் முருகன் கோவில் மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் பொன்னேரி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த வேனை பொன்னேரியைச் சேர்ந்த குமார் என்பவர் ஓட்டி வந்தார்.
இந்த வேன் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் அருகே சென்று கொண்டிருக்கும்போது, முன்னாள் சென்ற அரசு பஸ் மீது மோதாமல் இருப்பதற்காக திடீரென்று வேன் டிரைவர் எதிர்பாராத விதமாக பிரேக் அடித்ததால் தனியார் பஸ் மீது வேன் மோதியதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் வேன் சென்டர் மீடியனில் மோதியதில் 15-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒலக்கூர் போலீசார் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்ததுடன், இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பிய பக்தர்கள் சென்ற வேன் விபத்தில் சிக்கி 15-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயம் அடைந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- தனது சூழ்ச்சிகளை மறைக்க அதிமுக மீது வீண் பழி போட்டு தப்பிக்க நினைப்பது அறிவார்ந்த தமிழ்நாட்டு மக்களிடம் ஒருபோதும் எடுபடாது.
- தமிழ்நாட்டை பொறுத்தவரை, மக்கள் மன நிலையை பிரதிபலிப்பதும், வெல்வதும் அதிமுக-வின் கணக்கு மட்டுமே.
சென்னை:
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அண்ணா அறிவாலயத்தில் திமுக செயற்குழு நடந்தாலும் மு.க.ஸ்டாலின் உட்பட அனைத்து திமுகவினரின் எண்ணம் முழுவதும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகையிலேயே இருந்துள்ளது.
ஆளுங்கட்சியாக இருக்கும் போதே முழு எண்ணமும் அதிமுக குறித்தே இருக்கின்றது, இதுவே அதிமுக ஆட்சி வரப்போகிறது என்ற பயம் திமுகவிற்கு இப்போதே வந்துவிட்டதற்கான வெளிப்பாடு.
இக்கூட்டத்தில் பேசிய திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, டங்ஸ்டன் விவகாரம் குறித்து விமர்சனம் செய்துள்ளார்.
மதுரை , மேலூர் டங்ஸ்டன் சுரங்கத்திற்கான ஏலம் பிப்ரவரி 2024ல் அறிவிக்கப்பட்டது. அப்போது ஏன் எந்த எதிர்ப்பையும் இந்த திமுக அரசு பதிவு செய்யவில்லை?
ஏலம் அறிவிக்கப்பட்டது முதல் 07.11.2024 அன்று ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு ஏலம் இறுதி செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகும் வரை, 10 மாத காலம் வாயை இறுக்க மூடிக்கொண்டு ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்த திமுக அரசு,
மக்கள் கொதித்து எழுந்து போராட்டம் நடத்தியதன் விளைவாக , வேறுவழியின்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமருக்கு சுரங்க அனுமதியை ரத்து செய்யுமாறு 29.11.2024 அன்று கடிதம் எழுதியுள்ளார்,
அந்த கடிதம் கிடைக்க பெற்றவுடன் மத்திய சுரங்கத் துறை அமைச்சகம் தனது எக்ஸ் தள பதிவு மூலமாக,
"இதுவரை மாநில அரசிடம் எந்தவித எதிர்ப்போ, ஏலத்தை கைவிடுமாறு கோரிக்கையோ எங்களுக்கு வரவில்லை" என்ற பதிலை அதே நாளில் பூமராங் போன்று திருப்பி அனுப்பியதை பற்றி இன்று வரை திமுக பேச மறுப்பது ஏன்?
விடியா திமுக அரசின் நீர்வளத்துறை அமைச்சர் மத்திய சுரங்கத்துறை அமைச்சருக்கு அக்டோபர் 3 2023 அன்று எழுதிய கடிதத்தில் , டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை எதிர்க்காமல், மாறாக சுரங்கத்தை மாநில அரசே ஏற்று நடத்தும் வகையில் கோரி கடிதம் எழுதியது ஏன்? இது மதுரை, மேலூர் மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகம் இல்லையா?
திமுக பங்கு வகித்த முந்தைய UPA ஆட்சிக்காலத்தில் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு உரிமங்களை வழங்கி, கனிம வளங்கள் முறையற்ற வகையில் இயற்கைக்கு மாறாக சுரண்டபட்டதால், அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டது, ஆதலால் தற்போதைய NDA அரசு கொண்டு வந்த கனிமவள திருத்த சட்ட விவாதத்தின் போது கனிமங்களுக்கான ஏலத்தை நடத்துவதுதன் மூலமாக முறைகேடுகளை தடுக்கவும், மத்திய அரசிற்கு வருவாய் கிடைப்பதற்காகவும் மட்டுமே தம்பிதுரை எம்.பி. தனது கருத்தை தெரிவித்தார்.
மேலும், என்.எல்.சி. இந்தியா நிறுவனம் நெய்வேலி சுற்றியுள்ள கிராமங்களில் சுரங்க விரிவாக்கத்திற்கான நிலகையெடுப்பை மேற்கொள்வது தமிழ்நாட்டு விவசாயிகளை பாதிப்பது குறித்து தெளிவாக பேசியுள்ளார். இவை அனைத்தும் பாராளுமன்றப் பதிவில் உள்ள உண்மைகளாக இருக்க, திருச்சி சிவா திரித்து பேசுவது ஏன்?
இதே மசோதா மாநிலங்களவையில் விவாதத்திற்கு வந்தபோது, எந்த எதிர்ப்பையும் திமுக எம்.பி.-க்கள் தெரிவிக்காமல் மவுனமாக கடந்தது ஏன்? திருச்சி சிவா இதற்கான விளக்கத்தை அளிப்பாரா?
கனிமவள திருத்த சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவருடைய அருமை மைந்தர் உதயநிதி ஸ்டாலினும், பிரதமர் மோடியை சந்தித்த போதெல்லாம் மதுரை டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக பேசாதது ஏன்?
இதுதான் நீங்கள் தமிழ்நாட்டின் உரிமைகளை காக்கும் லட்சணமா?
இப்படி டங்ஸ்டன் விவகாரத்தில், முழுக்க முழுக்க தமிழ்நாட்டு மக்களுக்கு, குறிப்பாக மதுரை மேலூர் மக்களுக்கு எதிராகவே செயல்பட்ட திமுக அரசு, தனது சூழ்ச்சிகளை மறைக்க அதிமுக மீது வீண் பழி போட்டு தப்பிக்க நினைப்பது அறிவார்ந்த தமிழ்நாட்டு மக்களிடம் ஒருபோதும் எடுபடாது.
திருச்சி சிவா அவர்களே, எங்களுக்கு கணக்கு பாடம் எடுக்கவேண்டிய அவசியம் இல்லை என்பதை உங்கள் தலைவரிடம் சொல்லவும். 87+8+1=107 என்ற அரிய Theory மூலம் நோபல் ஆராய்ச்சியாளர்களையே திகைக்கச் செய்த "கணக்குமாமணி" ஸ்டாலின், என்பதை தமிழ்நாடு நன்கறியும்.
மேலும், மக்கள் பிரச்சனைகளில் கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் ஸ்டாலினின் திமுக அரசை, மக்களின் உண்மையான விடியல் ஒளியாக, குரல் ஒலியாக இருந்து ஒவ்வொரு முறையும் தட்டி எழுப்பி, ஆளுங்கட்சியின் பணிகளை செய்யவைப்பதே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் அவர்கள் தான் என்ற உண்மையை நீங்கள் உணரவில்லை என்றாலும் கூட , தமிழ்நாட்டின் மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர் .
கருணாநிதி போட்ட தப்புக்கணக்குகள் தவிடுபொடியானதே தமிழ்நாட்டு அரசியல் வரலாறு. தமிழ்நாட்டை பொறுத்தவரை, மக்கள் மன நிலையை பிரதிபலிப்பதும், வெல்வதும் அதிமுக-வின் கணக்கு மட்டுமே.
இந்நிலையில், எடப்பாடியார் போட்டு இருக்கும் ஒரே கணக்கு, மக்கள் கணக்கு! மக்களின் எண்ணக் கணக்கை அறிந்த ஒரே இயக்கமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 2026ல் அரியணை ஏறும் நாளில் திமுகவுக்கு இது புரியும்!
தூங்குபவனை எழுப்பி விடலாம் , ஆனால் கும்பகர்ணன் போல தூங்குபவனை எப்படி எழுப்பவது?
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மகா தீபம் இன்று மாலை 11-வது நாளாக ஏற்றப்பட உள்ளன.
- பக்தர்களுக்கு தீப மை பிரசாதம் வழங்கப்பட உள்ளன.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலையில் 2,668 அடி உயரம் உள்ள திரு அண்ணாமலையின் உச்சியில் மகா தீப தரிசனம் நாளை அதிகாலையுடன் நிறைவுபெற உள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா, துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த 1-ந்தேதி தொடங்கியது. பிடாரி அம்மன், விநாயகர் உற்சவங்கள் அடுத்தடுத்த நாட்களில் நடை பெற்றது.
பின்னர், மூலவர் சன்னிதி முன்பு தங்கக் கொடி மரத்தில் கடந்த 4-ந்தேதி கொடியேற்றம் நடைபெற்றதும், 10 நாள் உற்சவம் ஆரம்பமானது. விழாவின் முக்கிய நிகழ்வாக கடந்த 10-ந்தேதி மகா தேரோட்டம் நடைபெற்றது.
13-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு மூலவர் சன்னிதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டன. ஜோதிப்பிழம்பாக அருணாசலேஸ்வரர் காட்சி கொடுத்ததால், கோவில் நடை அடைக்கப்பட்டது.
பின்னர் அண்ணாமலையாரைக் குளிர்விக்கும் வகையில், ஐயங்குளத்தில் 3 நாள் தெப்பல் உற்சவம் நடைபெற்றது. இதற்கிடையில், உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்த நிலையில் அண்ணாமலை உச்சியில் மகா தீபத்தை 11 நாட்கள் பக்தர்கள் தரிசிப்பது வழக்கம். அதன்படி, மகா தீபம் இன்று மாலை 11-வது நாளாக ஏற்றப்பட உள்ளன.
இதையடுத்து மகா தீப மலையிலிருந்து, தீபக் கொப்பரை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு நாளை கொண்டு வரப்பட உள்ளது. பின்னர், அதிலிருந்து சேகரிக்கப்படும் கரு மையுடன், வாசனைத் திரவியம் சேர்க்கப்பட்டு, ஆரூத்ரா தரிசனத்தின்போது, ஸ்ரீ நடராஜருக்கு சாத்தப்படும். பிறகு, பக்தர்களுக்கு தீப மை பிரசாதம் வழங்கப்பட உள்ளன.
- காலை முதல் மாலை வரை நன்றாக வெயிலும் இரவு முதல் அதிகாலை வரை கடும் குளிரும் நிலவுகிறது.
- தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சுவர்ட்டர் அணிந்தபடி தோட்டங்களில் தங்கள் பணியில் ஈடுபட்டனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை பனிக்காலம் நிலவும். ஆரம்பத்தில் நீர்ப்பனி பொழிவும், அதன் தொடர்ச்சியாக உறைபனியும் காணப்படும்.
ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் கடும் உறைபனி காணப்படும். ஆனால் பருவமழை தாமதமாக தொடங்கியதால் பனிக்காலமும் தாமதமாகவே தொடங்கியது.
தற்போது மழை குறைந்துள்ளதால் பனிப்பொழிவின் தாக்கமும் அதிகரித்துள்ளது. காலை முதல் மாலை வரை நன்றாக வெயிலும் இரவு முதல் அதிகாலை வரை கடும் குளிரும் நிலவுகிறது.
குறிப்பாக உறைபனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. கடும் உறைபனியால் ஊட்டி தாவரவியல் பூங்கா புல் மைதானம் வெள்ளை கம்பளம் விரித்தாற் போல உறைபனி படர்ந்து இருந்தது.
ஊட்டி எச்.ஏ.டி.பி., மைதானம், ரேஸ்கோர்ஸ் மைதானம், காந்தல் கால்பந்து மைதானத்திலும் உறை பனி படிந்திருந்தது.
இதுதவிர சூட்டிங்மட்டம், கோரகுந்தா, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் உறைபனியின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. சாலையோரம் மற்றும் வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார், மோட்டார் சைக்கிள், வேன், வாகனங்களின் மீது உறைபனி காணப்பட்டது.
உறைபனியுடன் கடும் குளிரும் நிலவியது. குளிரில் இருந்து தப்பிக்க மக்கள், வாகன டிரைவர்கள், வீடுகள் மற்றும் ஆங்காங்கே நெருப்பு மூட்டி குளிர் காய்ந்து வருகிறார்கள். தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சுவர்ட்டர் அணிந்தபடி தோட்டங்களில் தங்கள் பணியில் ஈடுபட்டனர்.
அதிகாலையில் வேலைக்கு செல்வோர் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் ஸ்வெட்டர் அணிந்தபடி சென்றதையும் காண முடிந்தது.
ஊட்டியில் பனிப்பொழிவு அதிகரித்துள்ள நிலையில், தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள மலர் செடிகள் கருகாமல் இருக்க கோத்தகிரி மிலார் செடிகள் கொண்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா தாழ்வான பகுதியில் உள்ளதால், இங்கு பனியின் தாக்கம் எப்போதும் சற்று அதிகமாக காணப்படும். இதனால் தற்போது மலர் தொட்டிகளில் நடவு செய்யப்பட்டுள்ள சால்வியா உட்பட பல்வேறு மலர் நாற்றுக்கள் கருகும் நிலை உருவாகியுள்ளது.
எனவே, இந்த மலர் செடிகள் கருகாமல் இருக்க கோத்தகிரி மிலார் செடிகள் கொண்டு மறைக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பூங்காவில் உள்ள புல் மைதானங்களும் கருகாமல் இருப்பதற்கு தண்ணீர் பாய்ச்சும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 129.40 அடியாக உள்ளது.
- மஞ்சளாறு பகுதியில் மட்டும் 5 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
வைகை அணைக்கு முல்லைப்பெரியாறு, போடி கொட்டக்குடி ஆறு, வருசநாடு, மூல வைகையாறு ஆகியவற்றின் மூலம் நீர்வரத்து அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து பாசனத்திற்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை மற்றும் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் 12ந் தேதி 49 அடியாக இருந்த நீர்மட்டம் 16ந் தேதி 60.79 அடியாக உயர்ந்தது. அதனைத் தொடர்ந்தும் நீர்வரத்து அதிகரித்ததால் இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 64.40 அடியை எட்டியுள்ளது. அணைக்கு 1546 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1499 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 4499 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 129.40 அடியாக உள்ளது. 664 கன அடி நீர் வருகிற நிலையில் 1400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 4568 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.90 அடியாக உள்ளது. வரத்து 66 கன அடி. திறப்பு 90 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 31.29 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. மஞ்சளாறு பகுதியில் மட்டும் 5 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
- திராவிட மாடல் ஆட்சியின் தொடர் வெற்றிகள் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.
- எடப்பாடி பழனிசாமிக்கு குற்றச்சாட்டு வைப்பதே வேலையாக உள்ளது.
உதயநிதி ஸ்டாலின் - ஆதவ் அர்ஜூனா - விஜய்
சென்னையில் நடந்த அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், இறுமாப்புடன் 200 தொகுதிகளில் வெல்வோம் என்ற தி.மு.க.வின் கூட்டணி கணக்கை மக்களே 'மைனஸ்' ஆக்கிவிடுவார்கள் என்று கூறினார்.
அதே மேடையில் பேசிய ஆதவ் அர்ஜூனா, தமிழ்நாட்டில் மன்னராட்சி நடைபெறுவதாகவும் யாரும் முதல்வராக பிறப்பதில்லை என்றும் திமுகவை விமர்சித்து பேசினார்.
இதற்கு பதில் அளித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மக்களால் தான் முதலமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அந்த அறிவு கூட அந்த ஆளுக்கு இல்லையா. தமிழகத்தில் மக்களாட்சி தான் நடைபெறுகிறது என்று கூறினார்.

இதேபோல் விஜய் பேசியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், சினிமா செய்திகளை தான் பார்ப்பதில்லை என தெரிவித்தது சர்ச்சையானது.
இதுதொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், சினிமா துறையிலிருந்து வந்த உதயநிதி ஸ்டாலின், சினிமா செய்தியைப் பார்ப்பதில்லை என்று பேசுகிறார். இன்று உதயநிதி ஸ்டாலின் இல்லாமல் ஒரு திரைப்படம் வெளியிட முடியாது. மக்களுக்கு ஒன்றுமே தெரியாது என்று நினைக்கிறார்கள் என்று கூறினார்.
சிதம்பரம் நடராஜர் கோவில் - எச்.ராஜா
சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவில் வளாகத்தில் 10-க்கு மேற்பட்ட தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடிய சம்பவம் சர்ச்சையானது.

இதற்கு பதில் அளித்த பா.ஜ.க. மாநில ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் எச்.ராஜா, சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதில் தவறு ஒன்றும் இல்லை. அவர்கள் என்ன கோவிலின் கருவறையிலா கிரிக்கெட் விளையாடினார்கள். கருவறையில் விளையாடினால் தான் குற்றம் என்று கூறினார்.
சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் கிரிக்கெட் விளையாடிய தீட்சிதர்களுக்கு ஆதரவாக எச். ராஜா கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது.
உதயநிதி ஸ்டாலின் - செல்லூர் ராஜூ
திராவிட மாடல் ஆட்சியின் தொடர் வெற்றிகள் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. திமுக எனும் ஆலமரத்தை வெட்ட சிலர் பிளேடுடன் வருவதாக உதயநிதி ஸ்டாலின் பேசி இருந்தார்.
இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, "ஆலமரமே பிடுங்கிக் கொண்டு போயிருக்கு வெள்ளத்தில். உலகமே அழிந்திருக்கிறது. ஆலமரம் அழியாதா? உதயநிதிக்கு தெரியவில்லை. என்ன தான் கூட்டணி பலமாக இருந்தாலும், மக்கள் பலம் இருந்தால் மட்டும் தான் வெற்றி பெற முடியும்" என்று கூறினார்.
விஜய் - சீமான்
திராவிடமும், தமிழ் தேசியமும் தமிழக வெற்றிக் கழகத்தின் 2 கண்கள் என்று கொள்கை விளக்க மாநாட்டில் கட்சியின் தலைவர் விஜய் பேசினார்.

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சீமான் பேசுகையில், திராவிடமும், தமிழ் தேசியமும் இரண்டு கண்கள் என விஜய் சொன்னவுடன் நான் மிகவும் பயந்துவிட்டேன். திராவிடம் வேறு, தமிழ் தேசியம் வேறு.
தமிழ் தேசிய அரசியல் பேரரசன் மணியரசன் கூறுவார். ஒன்று சாம்பார் என்று சொல்லு. இல்லை கருவாட்டுக் குழம்பு என்று சொல். இரண்டும் சேர்த்து கருவாட்டு சாம்பார் என்று சொல்லாதே.
நீங்கள் இனிமேல்தான் பெரியார், அம்பேத்கரை படிக்க வேண்டும். நாங்கள் அதைப் படித்து பி.எச்டி வாங்கிவிட்டோம்.
75-வது ஆண்டு கொண்டாடிய கட்சிக்கே திராவிடம் என்றால் என்னவென்று தெரியவில்லை.
எங்கள் லட்சியத்திற்கு எதிராக பெற்ற தகப்பனே வந்தாலும் எதிரி எதிரி தான் அதில் தம்பியும் கிடையாது, அண்ணனும் கிடையாது. இந்த பூச்சாண்டி எல்லாம் என்கிட்ட காட்ட வேண்டாம். 2026ம் ஆண்டு என் ஆட்டத்தை யாராலும் சமாளிக்க முடியாது என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
உதயநிதி ஸ்டாலின்
அரசு நிகழ்ச்சிகளில் உதயசூரியன் சின்னம் பொறித்த டி-சர்ட் அணிந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருவது எதிர்க்கட்சியினரிடையே பேசுபொருளானது.
இதுதொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், உலகத்திலேயே அரசு நிகழ்ச்சிக்கு டி சர்ட் போட்டு செல்வது உதயநிதி ஸ்டாலின் தான். டி-சர்ட் போடுவதை நான் குறை சொல்லவில்லை. கட்சி நிகழ்ச்சிக்கு மட்டும் போட்டு செல்லுங்கள். உதயநிதியிடம் சட்டை இல்லை என்றால் நாங்கள் வாங்கி தருகிறோம் என்று கூறி இருந்தார்.

இதற்கு பதில் அளித்த திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி-சர்ட் அணியக்கூடாது என்ற சட்டம் இருந்தால் அதனை அமல்படுத்துவதற்கு தயாராகவே இருக்கிறோம் என்று கூறினார்.
இதையடுத்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது, தி.மு.க.வின் தேர்தல் சின்னமான உதயசூரியன் சின்னம் பொறிக்கப்பட்ட டி-சர்ட் அணிந்து வருவதாகவும், இது தலைமைச் செயலக ஊழியர்கள் ஆடை கட்டுப்பாட்டு விதிகளுக்கு எதிராக உள்ளதாக சென்னை ஐகோர்ட்டில், சத்தியகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மு.க.ஸ்டாலின்- எடப்பாடி பழனிசாமி
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை கொளத்தூர் தொகுதியில் ஏற்பட்ட பாதிப்புகள், மழை நீர் வெளியேற்றும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

அப்போது மழை பாதிப்புகள் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து முதலமைச்சரிடம் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு,
எடப்பாடி பழனிசாமிக்கு குற்றச்சாட்டு வைப்பதே வேலையாக உள்ளது. அதை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. இதை பலமுறை சொல்லிவிட்டேன். எங்கள் வேலையை நாங்கள் செய்து வருகிறோம். ஓட்டு போட்டவர்கள் மட்டுமல்லாது, ஓட்டு போடாதவர்களுக்கும் சேர்த்துத்தான் பணிகளை செய்து வருகிறோம். அதுதான், எங்கள் குறிக்கோள். அதுதான் எங்கள் கொள்கை. அதைத்தான் செய்து வருகிறோம். அதனால், எடப்பாடி பழனிசாமிக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் கிடையாது, தேவையும் இல்லை என்று கூறினார்.






