என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ரேசில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை இயக்க கூடாது என அறிவுறுத்தல்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக சென்னை காவல்துறை பொது மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.
குறிப்பாக, பைக் வீலிங், ரேஸ் உள்ளிட்டவற்றில் ஈடுபட போலீசார் தடை விதித்திருந்தனர். மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மதுபோதை, அதிவேகத்தில் வாகனம் ஓட்டுதல், சாலையில் ரேஸ் சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞர்களிடம் இருந்து 242 பைக்குகளை பறிமுதல் செய்துள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் ரேசில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பைக்குகளுக்கு அபராதம் விதிக்காமல் அவர்களிடமே திரும்ப ஒப்படைக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை இயக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
- ஏரி வண்டல் மண்ணை விவசாயம் மற்றும் பானை செய்வதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வேலூர்:
வேலூர் மாவட்டம், கணியம்பாடி அடுத்த பாப்பான் தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் ஜெய் சாமி. இவர் கணியம்பாடி ஒன்றிய விவசாய சங்க தலைவராக இருந்து வருகிறார்.
இன்று காலை பழைய பஸ் நிலையம் வந்த ஜெய் சாமி அங்குள்ள திருவள்ளுவர் சிலையின் முன்பு அரை நிர்வாண நிலையில் அமர்ந்து நெற்பயிரை வைத்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயியிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர் காட்டுப்புத்தூர் அடுத்த பாப்பான் தோப்பு கிராமத்தில் உள்ள ஏரி வண்டல் மண்ணை அங்குள்ள ரியல் எஸ்டேட் அதிபர்கள் கடத்திச் சென்று கிணறு போல் வெட்டி அதில் பதுக்கி வைத்துள்ளனர்.
ஏரி வண்டல் மண்ணை விவசாயம் மற்றும் பானை செய்வதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ரியல் எஸ்டேட் அதிபர்கள் வண்டல் மண்ணை பதுக்கி வைப்பதால் விவசாயத்திற்கு வண்டல் மண் கிடைக்காமல் அவதி அடைந்து வருகிறோம்.
இது குறித்து கலெக்டர் அலுவலகம் மற்றும் கணியம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தார்.
போலீசாரின் சமாதானத்தை ஏற்காமல் ஜெய் சாமி தொடர்ந்து அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பழைய பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- பன்னீர் கரும்புகளை அரசே நேரடியாக கொள்முதல் செய்து ரேஷன் கடைகளுக்கு அனுப்ப உள்ளது.
- ரேஷன் கடைகளுக்கு 2¼ கோடி கரும்பு தேவைப்படும் பட்சத்தில் கூடுதலாகவே கரும்புகள் வயலில் உள்ளது.
சென்னை:
உழவர் திருநாள் பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்புடன் 1 முழுக் கரும்பு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையொட்டி பன்னீர் கரும்புகளை அரசே நேரடியாக கொள்முதல் செய்து ரேஷன் கடைகளுக்கு அனுப்ப உள்ளது. இதற்காக அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, மதுரை, மயிலாடுதுறை, நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சை, தேனி, திருவாரூர், திருச்சி, திருநெல்வேலி, விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 3 கோடியே 19 லட்சத்து 41 ஆயிரம் கரும்புகள் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக உள்ளது. ரேஷன் கடைகளுக்கு 2¼ கோடி கரும்பு தேவைப்படும் பட்சத்தில் கூடுதலாகவே கரும்புகள் வயலில் உள்ளது.
இவற்றை கொள்முதல் செய்ய கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதா கிருஷ்ணன் விழுப்புரம் மாவட்டம் சென்று அங்கு பயிரிடப்பட்டுள்ள பன்னீர் வகை கரும்புகளை பார்வையிட்டார். கரும்பு தரம் பற்றியும் ஆய்வு மேற்கொண்டார். உள்ளூர் விவசாயிகளுடன் கருத்துக்கள் பரிமாறி அவர்களின் பயனுள்ள உரையாடல்களில் ஈடுபட்டார்.
இந்த ஆய்வில் கூட்டுறவு இணை பதிவாளர் விஜயசக்தி, ஜே.ஆர்.ஸ்வர்ணா லட்சுமி, நந்தகுமார் (செங்கல்பட்டு), மண்டல மேலாளர் சந்திரசேகர், மனோ உடன் இருந்தனர்.
- தந்தை ராமதாசுக்கு வயதாகி விட்டதால் அவர் ஓய்வு எடுக்க வேண்டும்.
- கவுரவம் பட பாணியில் வீட்டுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் எதிர்த்து வருகிறார்கள்.
சென்னை:
வட மாவட்டங்களில் பா.ம.க.வுக்கு தனி செல்வாக்கு உள்ளது. இந்த செல்வாக்கை மனதில் வைத்துதான் தேர்தல் நேரங்களில் கூட்டணி அமைப்பதற்கும் கட்சிகள் ஆர்வம் காட்டுகின்றன.
அதிலும் குறிப்பாக வட மாவட்டங்களில் கூட்டணிகளின் வெற்றி, தோல்விக்கு காரணமாக இருப்பது பா.ம.க.தான். அந்த கட்சிக்கான வாக்கு வங்கியும் அப்படியே உள்ளது.
சமீபத்தில் புதுச்சேரியில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் கட்சி தொண்டர்கள் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோரிடம் தான் கட்டுக்கோப்பாக இருக்கிறார்கள். அவர்களை பொறுத்தவரை இருவரையும் எதிர்பார்க்கிறார்கள்.
மாநில தலைவராக இருந்து கட்சியை வழி நடத்தும் அன்புமணி கட்சிக்கு இளரத்தம் என்ற ரீதியில் கட்சியை தன் கட்டுப்பாட்டில் வைத்து நடத்த வேண்டும் என்று விரும்புகிறார். இதற்காக அவர் நேற்று 9 மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
தந்தை ராமதாசுக்கு வயதாகி விட்டதால் அவர் ஓய்வு எடுக்க வேண்டும். வேண்டுமானால் கட்சிக்கு ஆலோசனை வழங்கட்டும். நிர்வாகிகள் நியமனங்களில் தலையிடக்கூடாது என்று எதிர்பார்க்கிறார்.
ஆனால் அதற்கு ராமதாஸ் உடன்படவில்லை. தான் தொடங்கிய கட்சி. தான் விரும்பும் வரை தன் விருப்பப்படிதான் எல்லாம் நடக்க வேண்டும் என்று நினைக்கிறார்.
இருவரும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால் கவுரவம் பட பாணியில் வீட்டுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் எதிர்த்து வருகிறார்கள்.
வன்னியர்கள் முன்னேற்றத்துக்காக குரல் கொடுத்தும் போராடியும் வருவது பா.ம.க. எனவே வன்னியர்களை பொறுத்தவரை இவர் மீதும் தீவிர பற்றோடு இருக்கிறார்கள்.
ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, வக்கீல் பானு, பு.த.அருள்மொழி போன்ற மூத்த நிர்வாகிகள் பலரும் இந்த பிரச்சனைக்கு மனம் ஒத்து இருவரும் முடிவெடுக்க வேண்டும் என்று இருவரையும் சந்தித்து தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
தொண்டர்களை பொறுத்தவரை விரைவில் நல்ல சேதி வரும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.
- கன்னியாகுமரியில் இன்று காலை பாலசுப்பிரமணியம் என்பவர் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.
- சுற்றுலா வந்தவர்கள் தங்களை குழுப் புகைப்படம் எடுத்து தருமாறு பாலசுப்பிரமணியத்திடம் கேட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 4 வழிச்சாலையில் இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட பாலசுப்பிரமணியம் (50) என்பவர் கார் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இன்று காலை பாலசுப்பிரமணியம் நடைப்பயிற்சி செல்லும் போது சுற்றுலா வாகனத்தில் வந்தவர்கள் தங்களை குழுப் புகைப்படம் எடுத்து தருமாறு அவரிடம் கேட்டுள்ளனர்.
அவரும் சாலையின் நடுவே நின்று அவர்களை புகைப்படம் எடுத்துள்ளார். அப்போது அவ்வழியே வந்த கார் அவர் மீது வேகமாக மோதியுள்ளது. இதனால் நிகழ்விடத்திலேயே பாலசுப்பிரமணியம் பரிதாபமாக உயிரிழந்தார்.
- உச்சத்தில் இருந்து வரும் முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.150-க்கு விற்கப்படுகிறது.
- தக்காளி விலை குறைந்து ஒரு கிலோ ரூ.20 முதல் ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
போரூர்:
கோயம்பேடு, மார்க்கெட்டில் வரத்து குறைவால் சின்ன வெங்காயம் விலை கடும் உயர்ந்து உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை மொத்த விற்பனையில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.70க்கு மட்டுமே விற்கப்பட்டது.
இந்த நிலையில் வரத்து குறைவால் சின்ன வெங்காயம் விலை திடீரென அதிகரித்து உள்ளது. மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.110-க்கும் வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.150 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதேபோல் பரவலாக பெய்து வரும் மழையால் வரத்து குறைந்து உள்ளதால் பீன்ஸ், அவரைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் கடந்த வாரத்தை காட்டிலும் மொத்த விற்பனையில் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை அதிகரித்து உள்ளது. தொடர்ந்து உச்சத்தில் இருந்து வரும் முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.150-க்கு விற்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.200-க்கும், பீன்ஸ் மற்றும் அவரைக்காய் கிலோ ரூ.80-க்கும், ஊட்டி கேரட் மற்றும் பீட்ரூட் கிலோ ரூ.70-க்கும், உஜாலா கத்தரிக்காய் கிலோ ரூ.60-க்கும், வெண்டைக்காய் கிலோ ரூ.50-க்கும் விற்கப்படுகிறது. தக்காளி விலை குறைந்து ஒரு கிலோ ரூ.20 முதல் ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- மதுபோதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற வடமாநிலத்தை சேர்ந்த தீபக் என்ற வாலிபர் சுவற்றில் மோதி விழுந்து பலியானார்.
- கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த பள்ளத்தில் பாய்ந்தது.
சென்னை:
சென்னையில் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
மதுபோதையில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் என்று போலீசார் கேட்டுக்கொண்டிருந்த போதிலும் அதனை காதில் வாங்கி கொள்ளாமல் 4 வாலிபர்களும் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றதே விபத்துக்கு காரணமாக அமைந்துள்ளது.
சென்னை சேத்துப்பட்டு கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை வழியாக மதுபோதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற வடமாநிலத்தை சேர்ந்த தீபக் என்ற வாலிபர் சுவற்றில் மோதி விழுந்து பலியானார். பின்னால் அமர்ந்திருந்த பாபு என்பவர் காயத்துடன் உயிர் தப்பினார்.
சென்னை, வடபழனியை சேர்ந்தவர் சாருகேஷ் (வயது19). கல்லூரி மாணவர். இவர் நேற்று இரவு கிழக்கு கடற்கரை சாலையில் நண்பர்களுடன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் அதிகாலை அங்கிருந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்து கொண்டு இருந்தார்.
நீலாங்கரை அடுத்த வெட்டுவாங்கேனி அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் திடீரென கண்டெய்னர் லாரி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சாருகேஷ் பலியானார். அதிவேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்ததே விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
பெரும்பாக்கம், நூக்கம்பாளையம், பெரியபாளையத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெகதீஷ். இவரது மகன் நித்திஷ் (18). இவர் புத்தாண்டை முன்னிட்டு மோட்டார் சைக்கிளில் நண்பர்களுடன் வெளியில் சென்று இருந்தார்.
நள்ளிரவு 12 மணியளவில் நித்திஷ் தனது மோட்டார் சைக்கிளில் அதே பகுதியில் உள்ள சிவன் கோவில் அருகே வந்து கொண்டு இருந்தார். இதில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த பள்ளத்தில் பாய்ந்தது. இதில் பலத்த காயம் அடைந்த நித்திஷை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நித்திஷ் பரிதாபமாக இறந்தார்.
கேளம்பாக்கம் அருகே நாவலூர் சிப்காட் பழைய மாமல்லபுரம் சாலையில் நேற்று இரவு வாலிபர் ஒரு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தார். வி.டி.என் டவர்ஸ் அருகே வந்தபோது கட்டுபாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி சாலையோரம் பாய்ந்து சரிந்தது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபர் பலியானார். அவர் யார்? என்ற விபரம் உடனடியாக தெரியவில்லை. மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணை வைத்து கேளம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தமிழக மக்களுக்கு விடியல் கிடைப்பதற்கான பயணத்தை அ.தி.மு.க. முன்னெடுத்துச் செல்லும்.
- தமிழகம் அமைதி பூங்காவாக திகழ அ.தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும்.
மதுரை:
2025 புத்தாண்டை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், 2025 ஆம் ஆண்டு அ.திமு.க.விற்கு எழுச்சியான ஆண்டாக இருக்கும். இந்த ஆண்டில் விடியா அரசிடமிருந்து தமிழக மக்களுக்கு விடியல் கிடைக்கும். தமிழக மக்களுக்கு விடியல் கிடைப்பதற்கான பயணத்தை அ.தி.மு.க. முன்னெடுத்துச் செல்லும்.
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ஏற்பட்ட வன்கொடுமை இனி தமிழகத்தில் எந்த பெண்ணுக்கும் நடக்கக்கூடாது. தமிழகம் அமைதி பூங்காவாக திகழ அ.தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும். சட்டமன்றத் தேர்தல் கூட்டணி அமைவதையும், ஒருங்கிணைந்த அ.தி.மு.க. தேர்தல் களத்தை சந்திப்பதையும் எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார். தமிழக மக்களுக்காக அரசியல் செய்யக்கூடிய கட்சியாக அ.தி.மு.க. திகழ்ந்து வருகிறது என 63 சதவீத மக்கள் வாக்களித்து உள்ளனர்.
2025 ஆண்டு அ.தி.மு.க.விற்கு எழுச்சி தருகிற ஆண்டாகவும் மகிழ்ச்சி தருகிற ஆண்டாகவும் திகழும். தி.மு.க. அரசு உண்மையாகவே மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என்றால் ஒரு குடும்பத்திற்கு ரூ.30 ஆயிரம் பொங்கல் பரிசு வழங்க வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியில் 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்களுக்கு உரிய இழப்பீடும், காப்பீடும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
- நீலகிரி மற்றும் கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம்) பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது.
- அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி மற்றும் கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம்) பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
3-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
7-ந்தேதி கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இன்று முதல் 4-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- தற்போது அனைத்து பள்ளி மாணவர்களும் அரையாண்டு விடுமுறையில் உள்ளனர்.
- இன்று 2025 ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ளது.
சென்னை:
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு டிச. 23-ந்தேதியுடன் அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்தது. டிச. 24-ந்தேதி முதல் அரையாண்டு விடுமுறை விடப்பட்டது. தற்போது அனைத்து பள்ளி மாணவர்களும் அரையாண்டு விடுமுறையில் உள்ளனர்.
அனைத்து பள்ளிகளும் ஜனவரி 2-ந்தேதி மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது. இதன் மூலம் மாணவர்களுக்கு 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை கிடைத்தது.
2024-ம் ஆண்டு விடைபெற்று இன்று 2025 ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ளது.
இந்நிலையில் ஜன.2-ந்தேதியான நாளை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் அரையாண்டு விடுமுறை முடிந்து திறக்கப்பட உள்ளது. விடுமுறை முடிந்து நாளை மாணவர்கள் பள்ளிக்கு திரும்ப உள்ளனர்.
- விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு சென்றிருந்த பயணிகள் 'தக்கல்' டிக்கெட் எடுக்க முடியாமல் தவித்தனர்.
- டிசம்பரில் இருந்து இதுவரை 4 முறை ரெயில்வே இணையதள சர்வர் முடங்கியதால் பொதுமக்கள் ரெயில்வே துறைக்கு புகார் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை:
நாடு முழுவதும் ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ஐ.ஆர்.சி.டி.சி.யின் இணையதளம் மற்றும் மொபைல் போன் செயலியை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் சர்வர் கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 3 முறை முடங்கியது. இந்த நிலையில் ஆண்டின் தொடக்க நாளான புத்தாண்டில் இன்றும் இந்த இணையதளம் முடங்கிவிட்டது. இதனால் முன்பதிவு செய்ய காத்திருந்த ரெயில் பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.
அதிலும் விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு சென்றிருந்த பயணிகள் 'தக்கல்' டிக்கெட் எடுக்க முடியாமல் தவித்தனர்.
முன்பதிவு செய்வதற்கு இ-சேவை மையங்களுக்கு சென்றவர்கள் பல மணி நேரம் காத்திருந்து கடும் சிரமத்துக்கு ஆளானார்கள். டிசம்பரில் இருந்து இதுவரை 4 முறை ரெயில்வே இணையதள சர்வர் முடங்கியதால் பொதுமக்கள் ரெயில்வே துறைக்கு புகார் தெரிவித்து வருகின்றனர்.
- தேனியை நோக்கி வந்த சரக்கு வாகனம் பைக் மீது பயங்கரமாக மோதியது.
- தேவதானப்பட்டி போலீசார் விரைந்து வந்து இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திண்டுக்கல்:
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே ஜி.கல்லுப்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது55). தனது மகன் வீரமுத்து (30)வுடன் பைக்கில் பெரியகுளத்தில் இருந்து வந்து கொண்டிருந்தார்.
இன்று அதிகாலை தேனி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் டி.வாடிப்பட்டி பிரிவு பகுதியில் வந்தபோது தேனியை நோக்கி வந்த சரக்கு வாகனம் பைக் மீது பயங்கரமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட ராஜேந்திரன் மற்றும் அவரது மகன் வீரமுத்து ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியாகினர். இதை பார்த்ததும் சரக்கு வாகன டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேவதானப்பட்டி போலீசார் விரைந்து வந்து இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய சரக்கு வாகன டிரைவரை தேடி வருகின்றனர். புத்தாண்டு தினமான இன்று விபத்தில் தந்தை மகன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






