என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பன்னீர் கரும்பு கொள்முதல் செய்ய அதிகாரி ராதாகிருஷ்ணன் நேரடி ஆய்வு
- பன்னீர் கரும்புகளை அரசே நேரடியாக கொள்முதல் செய்து ரேஷன் கடைகளுக்கு அனுப்ப உள்ளது.
- ரேஷன் கடைகளுக்கு 2¼ கோடி கரும்பு தேவைப்படும் பட்சத்தில் கூடுதலாகவே கரும்புகள் வயலில் உள்ளது.
சென்னை:
உழவர் திருநாள் பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்புடன் 1 முழுக் கரும்பு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையொட்டி பன்னீர் கரும்புகளை அரசே நேரடியாக கொள்முதல் செய்து ரேஷன் கடைகளுக்கு அனுப்ப உள்ளது. இதற்காக அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, மதுரை, மயிலாடுதுறை, நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சை, தேனி, திருவாரூர், திருச்சி, திருநெல்வேலி, விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 3 கோடியே 19 லட்சத்து 41 ஆயிரம் கரும்புகள் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக உள்ளது. ரேஷன் கடைகளுக்கு 2¼ கோடி கரும்பு தேவைப்படும் பட்சத்தில் கூடுதலாகவே கரும்புகள் வயலில் உள்ளது.
இவற்றை கொள்முதல் செய்ய கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதா கிருஷ்ணன் விழுப்புரம் மாவட்டம் சென்று அங்கு பயிரிடப்பட்டுள்ள பன்னீர் வகை கரும்புகளை பார்வையிட்டார். கரும்பு தரம் பற்றியும் ஆய்வு மேற்கொண்டார். உள்ளூர் விவசாயிகளுடன் கருத்துக்கள் பரிமாறி அவர்களின் பயனுள்ள உரையாடல்களில் ஈடுபட்டார்.
இந்த ஆய்வில் கூட்டுறவு இணை பதிவாளர் விஜயசக்தி, ஜே.ஆர்.ஸ்வர்ணா லட்சுமி, நந்தகுமார் (செங்கல்பட்டு), மண்டல மேலாளர் சந்திரசேகர், மனோ உடன் இருந்தனர்.






