என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டத்தில் விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு
- மதுபோதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற வடமாநிலத்தை சேர்ந்த தீபக் என்ற வாலிபர் சுவற்றில் மோதி விழுந்து பலியானார்.
- கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த பள்ளத்தில் பாய்ந்தது.
சென்னை:
சென்னையில் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
மதுபோதையில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் என்று போலீசார் கேட்டுக்கொண்டிருந்த போதிலும் அதனை காதில் வாங்கி கொள்ளாமல் 4 வாலிபர்களும் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றதே விபத்துக்கு காரணமாக அமைந்துள்ளது.
சென்னை சேத்துப்பட்டு கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை வழியாக மதுபோதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற வடமாநிலத்தை சேர்ந்த தீபக் என்ற வாலிபர் சுவற்றில் மோதி விழுந்து பலியானார். பின்னால் அமர்ந்திருந்த பாபு என்பவர் காயத்துடன் உயிர் தப்பினார்.
சென்னை, வடபழனியை சேர்ந்தவர் சாருகேஷ் (வயது19). கல்லூரி மாணவர். இவர் நேற்று இரவு கிழக்கு கடற்கரை சாலையில் நண்பர்களுடன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் அதிகாலை அங்கிருந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்து கொண்டு இருந்தார்.
நீலாங்கரை அடுத்த வெட்டுவாங்கேனி அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் திடீரென கண்டெய்னர் லாரி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சாருகேஷ் பலியானார். அதிவேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்ததே விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
பெரும்பாக்கம், நூக்கம்பாளையம், பெரியபாளையத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெகதீஷ். இவரது மகன் நித்திஷ் (18). இவர் புத்தாண்டை முன்னிட்டு மோட்டார் சைக்கிளில் நண்பர்களுடன் வெளியில் சென்று இருந்தார்.
நள்ளிரவு 12 மணியளவில் நித்திஷ் தனது மோட்டார் சைக்கிளில் அதே பகுதியில் உள்ள சிவன் கோவில் அருகே வந்து கொண்டு இருந்தார். இதில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த பள்ளத்தில் பாய்ந்தது. இதில் பலத்த காயம் அடைந்த நித்திஷை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நித்திஷ் பரிதாபமாக இறந்தார்.
கேளம்பாக்கம் அருகே நாவலூர் சிப்காட் பழைய மாமல்லபுரம் சாலையில் நேற்று இரவு வாலிபர் ஒரு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தார். வி.டி.என் டவர்ஸ் அருகே வந்தபோது கட்டுபாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி சாலையோரம் பாய்ந்து சரிந்தது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபர் பலியானார். அவர் யார்? என்ற விபரம் உடனடியாக தெரியவில்லை. மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணை வைத்து கேளம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






