என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததும், தாங்களும் எதிர்ப்பு தெரிவிப்பது போல நாடகமாடியது.
    • டங்ஸ்டன் சுரங்கத்தைக் கைவிடும் எண்ணம் திமுகவுக்கு இல்லை என்பதையே காட்டுகிறது.

    சென்னை:

    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதில், ஆரம்பம் முதலே நாடகமாடிக் கொண்டிருக்கிறது திமுக அரசு. டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கலாம் என்று, மத்திய அரசுக்குக் குறிப்பு அனுப்பி, சுரங்க ஒப்பந்தம் வழங்கப்படும் வரையில், எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்து விட்டு, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததும், தாங்களும் எதிர்ப்பு தெரிவிப்பது போல நாடகமாடியது.

    மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன்ரெட்டி சுரங்கம் அமைக்கும் பணிகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்து, தமிழக அரசு மேற்கொண்டு டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்தங்களைப் பரிசீலிக்கக் கூடாது என்று தெரிவித்த பின்னர், திமுக அரசு அது குறித்து அரிட்டாப்பட்டி விவசாயிகளுக்கு எந்த உறுதியும் அளிக்கவில்லை என்பது தெளிவாகிறது.

    தற்போது அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் விவசாயிகளைத் தடுத்து நிறுத்த முற்படுவது, டங்ஸ்டன் சுரங்கத்தைக் கைவிடும் எண்ணம் திமுகவுக்கு இல்லை என்பதையே காட்டுகிறது. விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் கோரிக்கைகளைப் பரிசீலிப்பது திமுக அரசின் கடமை. அதை விடுத்து, மத்திய அமைச்சர் அறிவிப்பு வெளியிட்ட பிறகும், டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக எந்த உறுதியும் அளிக்காமல், நாட்களைக் கடத்திவிட்டு, தற்போது விவசாயிகள் போராட்டத்திற்குக் காரணமாக இருக்கிறது திமுக.

    உடனடியாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், விவசாயிகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

    • விருதுத் தொகையாக ரூபாய் இரண்டு லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப்படும்.
    • விருது முதலமைச்சரால் திருவள்ளுவர் திருநாளான 15.1.2025 அன்று சென்னையில் வழங்கப்படவுள்ளது.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,

    பெருந்தலைவர் காமராசர் விருது 2006-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வரிசையில் 2024ஆம் ஆண்டுக்கான விருதுக்கு, அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினராகவும், தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும், தமிழக காங்கிரஸ் கட்சிப் பொதுச்செயலாளராகவும், கட்சித் தலைவராகவும் மத்திய இணை அமைச்சராகவும், ஒரு முறை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், இருமுறை பாராளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றியதோடு கடந்த 50 ஆண்டு காலமாக பொது வாழ்க்கையில் ஈடுபட்டுவரும் கே.வி.தங்கபாலு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு விருதுத் தொகையாக ரூபாய் இரண்டு லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப்படும். இவ்விருது முதலமைச்சரால் திருவள்ளுவர் திருநாளான 15.1.2025 அன்று சென்னையில் வழங்கப்படவுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளார்.

    • இப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஏன் கைது செய்யவில்லை? இதற்கு தமிழக அரசு பதில் சொல்ல வேண்டும்.
    • 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுக்கு பெரிய அடி கிடைக்கும்.

    கோவை:

    பா.ஜ.க மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தேசிய கீதத்துக்கு மரியாதை கொடுக்க சொன்னால், கவர்னர் பிரிவினை வாதம் பேசுவதாக தி.மு.க.வினர் சொல்கிறார்கள். கவர்னர் தேசிய கீதம் பாட வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைத்தார்.

    ஆனால் அதற்கு அனுமதிக்கவில்லை. மாறாக அவருக்கு எதிராக தி.மு.க.வினர் போராட்டம் நடத்தி கொண்டிருக்கின்றனர்.

    ஆளுங்கட்சியான தி.மு.க. போராட்டம் செய்வதற்கு அனுமதி இருக்கிறது. ஆனால் நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்தால் மட்டும் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

    இப்போது இவர்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். இவர்களது ஆர்ப்பாட்டத்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படவில்லையா?

    கடந்த 10 நாட்களாக தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் போராட்டம் நடத்தினர். அவர்களை எல்லாம் அப்போது கைது செய்தீர்கள்.

    இப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஏன் கைது செய்யவில்லை? இதற்கு தமிழக அரசு பதில் சொல்ல வேண்டும்.

    அண்ணா பல்கலைக்கழகம் விவகாரத்தை திசை திருப்பவும், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை மறைக்கவே தி.மு.க. இந்த போராட்டத்தை நடத்துகிறது.

    முதலமைச்சர், கவர்னர் குறித்து வரம்பு மீறி டுவிட் செய்துள்ளார்.

    அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இதுகுறித்து எதிர்கட்சிகள் கேட்டாலோ அல்லது போராட்டம் நடத்தினாலோ நாங்கள் தான் ஏற்கனவே கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். நீங்கள் எதற்காக போராட்டம் நடத்துகிறீர்கள் என கேட்கின்றனர்.

    தமிழக அரசு தவறான போக்கில் சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில் எல்லா குரல்வலையும் நசுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது எமர்ஜென்சியே நடந்து கொண்டிருக்கிறது.

    இவ்வளவு நாட்களாக காவியை பார்த்து பயந்த தி.மு.க. தற்போது கருப்பு நிறத்தை பார்த்தும் பயப்பட தொடங்கியது. உடை என்பது அவரவர் தனிப்பட்ட உரிமை. தி.மு.க.வுக்கு எதை பார்த்தாலுமே பயமாக உள்ளது.

    தி.மு.க கூட்டணியில் தற்போது குழப்பம் வந்து வெடவெடுத்து போய் இருக்கிறது. அதை மறைக்கவே இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் நடத்துகிறார்கள். இதுவரை பொங்கல் பண்டிகைக்கு கொடுத்து வந்த ரூ.1000-த்தை இந்த ஆண்டு கொடுக்கவில்லை. தேர்தல் நெருங்கும் போது பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கி விடுவார்கள். இப்போது கொடுத்தால் தேர்தலுக்குள் சூரியனை மறந்து விடுவார்கள் என்பதால் இப்போது கொடுக்கவில்லை.

    2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுக்கு பெரிய அடி கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வாரந்தோறும் திங்கள்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை இரவு வரை ஜவுளி வார சந்தை நடைபெற்று வருகிறது.
    • குளிர் காலத்துக்கான சால்வை, பெட்ஷீட், கம்பளி ரகங்களும் அதிக அளவில் விற்பனையாகின.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் கனி மார்க்கெட் ஜவுளி வணிக வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளான மணிக்கூண்டு ரோடு, டி.வி.எஸ். வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, என்.எம்.எஸ்.காம்பவுண்ட், காமராஜர் வீதி, பிருந்தாவீதி உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளி மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை நடைபெற்று வருகிறது.

    இங்கு வாரந்தோறும் திங்கள்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை இரவு வரை ஜவுளி வார சந்தை நடைபெற்று வருகிறது. இந்த ஜவுளி வாரச்சந்தை தென்னிந்திய அளவில் மிகவும் புகழ் பெற்றது. இங்கு மகாராஷ்டிரா ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வெளி மாநில வியாபாரிகளும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து துணிகளை கொள்முதல் செய்வார்கள்.

    இந்த நிலையில் இந்த வார ஜவுளிச்சந்தை நேற்று இரவு தொடங்கியது. கடந்த வாரங்களில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு ஜவுளி விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தொடர்ந்து தற்போது பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒருவாரகாலமே உள்ள நிலையில், இதற்கான ஜவுளி விற்பனை இந்த வாரமும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

    இதில் ஆண்கள், பெண்கள் குழந்தைகளுக்கான புதிய ரக ஆடைகள், ஜீன்ஸ் பேண்ட், வேட்டி, பனியன் ரகங்கள், உள்ளாடைகள் மற்றும் புடவை, சுடிதார், குர்தீஸ் உள்ளிட்ட துணி ரகங்கள் அதிக அளவில் விற்பனையாகின. மேலும், குளிர் காலத்துக்கான சால்வை, பெட்ஷீட், கம்பளி ரகங்களும் அதிக அளவில் விற்பனையாகின.

    அடுத்தவாரம் வர உள்ள பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த வார ஜவுளிச்சந்தையில் மொத்த மற்றும் சில்லறை விற்பனை அதிக அளவில் நடைபெற்றதாக ஜவுளி வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் கேரளா, தெலுங்கானா மாநிலத்தில் இருந்து அதிகளவில் வெளி மாநில வியாபாரிகள் வந்து குவிந்ததால் விடிய விடிய ஜவுளி விற்பனை விறு விறுப்பாக நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • போராட்டம் என்பது மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமை;
    • திமுக நேற்று அறிவித்து இன்று நடத்தும் ஒரு நாடகப் போராட்டத்திற்கு அனுமதியை வழங்கியிருப்பது எப்படி?

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து லட்சக்கணக்கான பொதுமக்கள் சார்பில் நடைபெறும் நடைபயணப் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதியை மறுத்துள்ள ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    போராட்டம் என்பது மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமை; ஆனால் இங்கு நடக்கும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுகவின் பாசிச ஆட்சியோ, ஜனநாயகத்தின் உரிமைகளை ஒட்டுமொத்தமாக விழுங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள், சமூக அமைப்புகள், பொதுமக்கள் என யாரும் எதற்கும் போராடக் கூடாது என்றும், அதையும் மீறி மக்கள் உணர்வுப்பூர்வமாகப் போராடினால், காவல்துறை கொண்டு அடக்குமுறையைக் கையாள்வது என்றும் அவசர நிலை ஆட்சியையே நடத்திவருகிறது.

    முறையாக அனுமதி கோரப்பட்டு, மிகவும் அமைதியாக அறவழியில் பொதுமக்கள் நடத்தும் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கும் ஸ்டாலின் மாடல் அரசு, யாரையோ காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கில், அண்ணா பல்கலை. வளாக பாலியல் வன்கொடுமை வழக்கை திசைதிருப்பும் வகையில் திமுக நேற்று அறிவித்து இன்று நடத்தும் ஒரு நாடகப் போராட்டத்திற்கு அனுமதியை வழங்கியிருப்பது எப்படி?

    டங்ஸ்டன் சுரங்கத்தை எதிர்ப்பதாக சட்டப்பேரவையில் ஸ்டாலின் மாடல் அரசு நடத்திய தீர்மான நாடகமே அம்பலமாகிவிட்ட நிலையில், தற்போது இந்த போராட்டத் தடை மூலம் திமுக அரசு டங்ஸ்டன் சுரங்கம் அமைய ஆதரவாகவே இருக்கின்றது என்ற உண்மை மக்களிடையே உறுதியாகிவிட்டது.

    மக்கள் போராட்டங்களைக் கண்டு நடுங்காமல், அவற்றிற்கான உரிய அனுமதிகளை வழங்குமாறு ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 



    • சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க கவர்னர் ஆர்.என்.ரவிக்கு தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
    • கவர்னரின் இந்தச் செயல் சட்டப்பேரவையின் மாண்பை அவமதிப்பதாக கூறி தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    இந்த ஆண்டுக்கான சட்டமன்ற முதல் கூட்டத்தொடர் நேற்று தொட ங்கியது. இந்த நிலையில் சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க கவர்னர் ஆர்.என்.ரவிக்கு தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

    சட்டமன்றத்துக்கு வந்த கவர்னர் ஆர்.என்.ரவி, சட்டமன்றத்தில் முதலில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்று கூறி, சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினார்.

    கவர்னரின் இந்தச் செயல் சட்டப்பேரவையின் மாண்பை அவமதிப்பதாக கூறி தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும், தி.மு.க சார்பில் இன்று தமிழக முழுவதும் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து, ஈரோடு மாநகரில் நகர், பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகள், பன்னீர்செல்வம் பூங்கா, மீனாட்சி சுந்தரனார் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கெட்அவுட் ரவி எனும் ஹேஷ்டேக்குடன் "தமிழ் நாட்டில் அத்துமீறும் கவர்னர், அவரை காப்பாற்றும் அ.தி.மு.க-பா.ஜ.க. கள்ளக்கூட்டணி" எனும் வாசகங்கள் அச்சிடப்பட்டு, எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, கவர்னர் ஆர்.என்.ரவி ஆகியோரின் கார்டூன் படங்களுடன் எடப்பாடி பழனிசாமி-கவர்னர் ஆர்.என்.ரவி பேசிக்கொள்வது போல் போஸ்டர்கள் அதிக அளவில் ஒட்டப்பட்டுள்ளது.

    • கவர்னரைக் கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாக நேற்று பிற்பகல் 2.48 மணிக்கு தான் திமுக அறிவித்தது.
    • தமிழக காவல்துறையின் இந்த அப்பட்டமான இரட்டை வேடம் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுளள் பதிவில்,

    தமிழ்நாட்டில் கவர்னரைக் கண்டித்து திமுக சார்பில் இன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. பொது நலனைப் பற்றிக் கவலைப்படாமல், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி நடத்தப்பட்ட இந்த போராட்டத்தால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு வகையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இவை அனைத்துக்கும் தமிழக காவல்துறை மவுன சாட்சியாக இருந்து வேடிக்கைப் பார்த்திருக்கிறது.

    தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு வேகமாக சீர்குலைந்து வருகிறது, பெண்களால் அச்சமின்றி நடமாட முடியவில்லை, அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் அத்துமீறி நுழைந்த திமுகவின் ஆதரவு பெற்ற மனித மிருகம் ஒன்று அங்கு பயிலும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறது. அந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி பெற்றுத் தர வேண்டிய காவல்துறை, குற்றவாளிகளைக் காப்பாற்றும் முயற்சியில் தான் ஈடுபட்டது. அதைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கடந்த 2-ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கான அனுமதி கோரி 4 நாட்களுக்கு முன்பாக விண்ணப்பமும் செய்யப்பட்டிருந்தது.

    ஆனால், சென்னை பெருநகர காவல்துறை சட்ட விதி 41-இன் படி ஐந்து நாட்களுக்கு முன்பாக விண்ணப்பித்தால் மட்டும் தான் அனுமதி வழங்க முடியும் என்று கூறி காவல்துறை அனுமதி மறுத்து விட்டது. அதுமட்டுமின்றி, வள்ளுவர் கோட்டத்தில் 500-க்கும் கூடுதலான காவலர்களைக் குவித்து போராட்டக்களத்திற்கு எவரும் வராமல் தடுத்தது. போராட்டத்திற்கு தலைமையேற்க வந்த பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி அவர்களை மகிழுந்தை விட்டுக் கூட இறங்க விடாமல் கைது செய்து அழைத்துச் சென்றது. பா.ம.க. போராட்டத்தின் போது கோர முகத்தைக் காட்டிய காவல்துறை, இப்போது அடிமை முகத்தைக் காட்டியிருக்கிறது.

    கவர்னரைக் கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாக நேற்று பிற்பகல் 2.48 மணிக்கு தான் திமுக அறிவித்தது. அதன் பின்னர் நேற்று முன்னிரவில் தான் போராட்டத்திற்கு அனுமதி கோரி திமுக சார்பில் விண்ணப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதையேற்றுக் கொண்டு அடுத்த சில நிமிடங்களில் அனுமதி அளிக்கப்பட்டதாக தெரிகிறது. திமுகவினரின் போராட்டங்களின் போது பல இடங்களில் விதிமீறல்கள் நடந்தாலும் கூட அதற்காக எவரும் கைது செய்யப்படவில்லை. தமிழக காவல்துறையின் இந்த அப்பட்டமான இரட்டை வேடம் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

    திமுகவினரின் போராட்டத்திற்கு சட்டவிரோதமாக அனுமதி அளிக்கப்பட்டிருக்கும் விஷயத்தில் எவரேனும் நீதிமன்றத்திற்கு செல்வார்களோ, நீதிமன்றம் தடை விதித்து விடுமோ? என்ற அச்சத்தில், அறிவிக்கப்பட்ட நேரமாக காலை 10.00 மணிக்கு பதிலாக காலை 9.00 மணிக்கே சென்னை சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. அதனால் கல்லூரிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் செல்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டத்திற்கு அனுமதி கோரி 5 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும் என்பதற்கு என்னென்ன நியாயங்கள் உள்ளனவோ, அந்த நியாயங்கள் அனைத்தும் திமுகவின் போராட்டங்களுக்கும் உண்டு. ஆனால், பாமக போராட்டத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறை, திமுக போராட்டத்திற்கு மட்டும் அனுமதி வழங்கியது ஏன்? ஆட்சியாளர்கள் என்றால் வானத்திலிருந்து குதித்தவர்களா? அவர்களுக்கு மட்டும் அஞ்சி நடுங்கி அனுமதி தர வேண்டுமா? என்றெல்லாம் மக்கள் வினா எழுப்புகிறார்கள். அவற்றுக்கு காவல்துறையும், தமிழக அரசும் பதிலளிக்க வேண்டும்.

    காவல்துறை என்பது மக்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டது. அது பாமகவுக்கு காவல்துறை என்றால், திமுகவுக்கும் காவல்துறையாகத் தான் இருக்க வேண்டும். தமிழக காவல்துறை திமுகவின் ஏவல் துறையாக மாறிவிடக் கூடாது. பாமகவுக்கு ஒரு நீதியையும், திமுகவுக்கு ஒரு நீதியையும் காவல்துறை கடைபிடிக்கக்கூடாது. திமுக அரசின் அதிகாரக் கரங்களுக்குள் சிக்கிக் கொண்டிருக்கும் காவல்துறை எப்படியெல்லாம் ஆட்டுவிக்கப்படுகிறது என்பதை தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்கள் சரியான நேரத்தில், சரியான முறையில் பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்துள்ளார். 

    • எதிர்க்கட்சிகளின் போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கும் தமிழக போலீஸ்.
    • காவல்துறை சட்டத்தின்படி 5 நாட்களுக்கு முன் அனுமதி பெற வேண்டும் என்ற விதியெல்லாம் திமுகவுக்கு கிடையாதா?

    அ.தி.மு.க.வின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது,

    எதிர்க்கட்சிகளின் போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கும் தமிழக போலீஸ், கவர்னருக்கு எதிராக மேடை, மைக் செட்டுடன் ஆர்ப்பாட்டம் நடத்த தி.மு.க.வுக்கு மட்டும் இரவோடு இரவாக அனுமதி அளித்தது எப்படி?

    காவல்துறை சட்டத்தின்படி 5 நாட்களுக்கு முன் அனுமதி பெற வேண்டும் என்ற விதியெல்லாம் திமுகவுக்கு கிடையாதா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

    • ஆந்திரா மற்றும் தெலுங்கான மாநிலங்களில் மகர சங்கராந்தி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.
    • பொங்கல் விடுமுறையில் யுஜிசி-நெட் தேர்வை நடத்தினால், ஏராளமான தேர்வர்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடும்.

    சென்னை:

    தைப்பொங்கல் அன்று நடத்தப்படும் யுஜிசி நெட் தேர்வை வேறொரு நாளுக்கு மாற்றி அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

    இந்த ஆண்டு தமிழ்நாட்டின் மிக முக்கியமான பண்டிகையான பொங்கல் பண்டிகை ஜனவரி 14 அன்று கொண்டாடப்படுகிறது என்றும் இந்தப் பண்டிகை தமிழ்நாட்டின் மிக முக்கியமான பண்டிகை என்றும், தமிழ்ச் சமுதாயத்தின் அனைத்துக் தரப்பினராலும் அறுவடைத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது என்றும் தமிழ்நாட்டின் உயர்கல்வித் துறை அமைச்சர் 23.12.2024 அன்று மத்திய கல்வி அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டிய முதலமைச்சர் ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பண்டிகை ஜனவரி 13 முதல் ஜனவரி 16 வரை நான்கு நாட்கள் கொண்டாடப்படுவதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    பொங்கல் பண்டிகையை அனைத்து தமிழ்ச் சமூகத்தினரும் நான்கு நாட்கள் உற்சாகமாக கொண்டாடுவர் என்றும் எனவே, இந்தப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2025 ஜனவரி 14 முதல் 17 வரை அரசு விடுமுறை நாட்களாக தமிழ்நாடு அரசால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    தமிழ்நாட்டில் அறுவடைத் திருவிழாவாக கொண்டாடப்படும் பொங்கல், ஒரு பண்டிகையாக மட்டுமல்லாது ஏறக்குறைய 3000 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் காட்டுவதாகவும், இந்தப் பொங்கல் பண்டிகையையப் போலவே, ஆந்திரா மற்றும் தெலுங்கான மாநிலங்களில் மகர சங்கராந்தி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது என்றும் தனது கடிதத்தில் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    ஆகவே, திட்டமிட்டபடி பொங்கல் விடுமுறையில் யுஜிசி-நெட் தேர்வை நடத்தினால், ஏராளமான தேர்வர்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடும் என்றும் இதே காரணத்திற்காக ஜனவரி 2025இல் நடைபெறவிருந்த பட்டயக் கணக்காளர்கள் தேர்வு ஏற்கனவே மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    எனவே, யுஜிசி-நெட் தேர்வுகள் மற்றும் பிற தேர்வுகளை வேறொரு பொருத்தமான நாட்களில் மாற்றியமைக்க தேவை உள்ளது என்று தாம் கருதுவதாகவும். அறுவடைத் திருவிழா கொண்டாடப்படும் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களின் மாணவர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள் தேர்வுகளுக்கு எளிதில் வர இயலும் என்றும் முந்தைய ஆண்டுகளில் பொங்கல் பண்டிகை காலங்களில் தேசிய தேர்வு முகமை யுஜிசி-நெட் தேர்வை நடத்தவில்லை என்று தரவுகள் காட்டுகிறது என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    ஆகவே, இத்தகைய சூழ்நிலையில், யுஜிசி-நெட் தேர்வுகள் மற்றும் பிற தேர்வுகளை ஜனவரி 13 முதல் 16 வரையிலான நாட்களில் நடத்துவதைத் தவிர்த்து பொருத்தமான வேறு நாட்களுக்கு மாற்றியமைக்குமாறும் இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சர் தலையிட்டு தமிழ்நாட்டில் மற்றும் மாநிலங்களில் அறுவடைத் திருவிழா கொண்டாடப்படும் காலங்களில் யுஜிசி-நெட் தேர்வுகள் நடத்தும் திட்டத்தை மாற்றியமைக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

    • எமர்ஜென்சி காலத்திற்கு திரும்பவும் மக்களை தி.மு.க. அரசு எடுத்துக்கொண்டு செல்கிறது.
    • தமிழ்த்தாய் வாழ்த்து பாடக்கூடாது என்று கவர்னர் சொல்லவில்லை.

    சென்னையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    எங்கெங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் ஆளுநரை அவமானப்படுத்த வேண்டும் என்று தி.மு.க. நினைக்கிறது. அதுமட்டுமல்ல எப்படியாவது அவரை அச்சுறுத்தி அவருடைய செயல்பாடுகளில் இருந்து பின்வாங்க வைக்க வேண்டும் என மறைமுகமாக ஒரு அழுத்தத்திற்காக இந்த மாதிரி வேலைகளை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

    இந்த on twitst practice என்பது தி.மு.க.விற்கு புதிதல்ல.

    கருத்து சுதந்திரம் அல்லது அரசியலமைப்பு சட்டத்திற்கான மரியாதை என்பதில் எல்லாம் எந்த நம்பிக்கையும் இல்லாத தி.மு.க. அரசு இப்படி தான் நடந்துகொள்ளும்.

    இங்கு அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினால் கூட அது கூட்டணி கட்சிகளாக இருந்தாலும் கூட சமீப காலங்களில் அனுமதி மறுக்கப்படுகிறது.

    சட்டசபைக்குள் உறுப்பினர்கள் பேசுகின்ற பேச்சுக்கள் அல்லது அவர்கள் காட்டுகின்ற எதிர்ப்பை கூட லைவ்வை கட் செய்கிறார்கள். மீடியாக்கள் போடக்கூடாது என்று சொல்கிறார்கள்.

    எமர்ஜென்சி காலத்திற்கு திரும்பவும் மக்களை தி.மு.க. அரசு எடுத்துக்கொண்டு செல்கிறது.

    போஸ்டர், ஆர்ப்பாட்டம் எல்லாம் கவர்னருக்கு எதிரான ஆர்ப்பாட்டம் இல்லை. இவர்கள் தேசிய கீதம், அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரான நடத்துகிற போராட்டமாகத்தான் மக்கள் பார்ப்பார்கள்.

    மரியாதைக்குரிய கவர்னரை வரவழைத்து, அவர் என்ன கேட்டார். தேசிய கீதம் பாட வேண்டும் என்று சொன்னார்.

    தேசிய கீதம் தமிழக சட்டசபைக்கு மட்டும் அவர் கேட்டாரா? தி.மு.க. கூட்டணியில் இருக்கின்ற மற்ற மாநிலத்தில் பா.ஜ.க. அல்லாத அரசாங்கங்கள் இருக்கிறது.

    கவர்னர் வருகை தரும்போதும், அவர் நிகழ்ச்சி முடிந்து செல்லும் போதும் தேசிய கீதம் இசைக்கப்படுவது என்பது மரபு. அதனால் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று கேட்கிறார். இதை ஏன் மறுக்க வேண்டும்.

    தமிழ்த்தாய் வாழ்த்து பாடக்கூடாது என்று கவர்னர் சொல்லவில்லை. அதையும் பாடுவோம். ஆனால் தேசிய கீதத்தை பாடுவதில் இவர்களுக்கு ஏன் இவ்வளவு தூரம் எரிச்சல் வருகிறது என்று தெரியவில்லை.

    தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது மரபு என்பது முதன்முதலில் தி.மு.க. அரசு வரும்போது கூட இங்கு கொண்டுவரவில்லை. அதற்கு பின்னால் இருந்து தான் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படுகிறது. பெருமை கொள்கிறோம். தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடணும். தேசிய கீதமும் பாடணும் இதுதான் நாங்கள் எதிர்பார்ப்பது.

    ஆனால் கவர்னரை அவமானப்படுத்த வேண்டும். கவர்னர் சொன்னால் நாம ஏன் கேட்கணும் அப்படி நினைக்கிற தி.மு.க. அரசு இந்த பிரச்சனையை பெரிதாக்குகிறது.

    அண்ணா பல்கலை. பிரச்சனை, பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள், பல்வேறு இடங்களில் சட்டம் ஒழுங்கு பாதிப்புக்குள்ளாகி இருக்கும் சூழல், இந்த அரசு இந்தியாவிலேயே அதிகமாக கடன் வாங்குகின்ற அரசாக இருப்பது இவற்றை எல்லாம் சுட்டிக்காட்டி பேசுவதற்காக சட்டசபையில் கூடுகிறபோது, அந்த கவனத்தை எல்லாம் திசை திருப்பவே கவர்னருடன் மோதல் போக்கை கையாண்டு, அதை மட்டுமே மக்களை பேச வைக்கிறார்கள்.

    மக்களின் பிரச்சனைகளை திசை திருப்பவே வேண்டுமென்றே தி.மு.க. அரசு சட்டசபை நிகழ்வுகளை சாக்காக வைத்துக்கொண்டு செய்கின்ற முயற்சியாகத்தான் நாங்கள் பார்க்கிறோம்.

    தொழில்நுட்ப கோளாறை நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறோம். நாங்கள் சட்டசபையில் பேசினால் கூட முழுமையாக வராது. அதை அவர்கள் கட் செய்து, வெட்டி ஒட்டி வெளியே வரும்.

    நேற்று உங்களுக்கு லைவ் கொடுக்கவில்லை. கேட்டால் தொழில்நுட்பக்கோளாறு. எதிர்க்கட்சிகள் ஆளும்கட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தும்போது எல்லாம் தொழில்நுட்பக்கோளாறு வந்துவிடும்.

    திராவிட மாடல் அரசில் நன்றி சொல்லி பாராட்டினால் அனுமதிப்போம். எதிராக பேசினால் தொழில்நுட்பக்கோளாறு வந்துவிடும். உடனே ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வந்துவிடும்.

    நாட்கள் செல்ல செல்ல தங்களுடைய நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது என்பதை தி.மு.க. அரசு உணர்ந்து கொண்டிருக்கிறது. அதனால் மக்கள் பிரச்சனைகளை யார் பேசினாலும் பதட்டம் அடைகிறார்கள்.

    மாணவி கருப்பு துப்பட்டா போட்டால் கூட அரசாங்கம் பயப்படுகிறது. அவர்களுக்கு தெரிகிறது தமிழக மக்கள் எந்த அளவிற்கு அவர்கள் மீது கோபமாக இருக்கிறார்கள் என்று உணர்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்று கூறினார்.

    • வாகனங்களில் மதுரைக்கு சென்று ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு.
    • 500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைப்பு.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாப்பட்டி, அ.வல்லாளப்பட்டி, நாயக்கர்பட்டி உள்பட 11 கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க இந்துஸ்தான் நிறுவனத்திற்கு மத்திய அரசு ஏல உரிமை வழங்கியதாக கூறப்படுகிறது.

    அரிட்டாப்பட்டி பல்லுயிர் தலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைத்தால் வன விலங்குகள் பாதிக்கும். இயற்கை சூழல் கெடுவதோடு விவசாயம், மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படையும். எனவே டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட வேண்டும் என பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக கடந்த சில மாதங்களாக தொடர் போராட்டங்கள், மறியல்கள் நடைபெற்றன. டங்ஸ்டன் சுரங்க திட்ட போராட்டத்திற்கு வணிகர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. கடந்த மாதம் மேலூரில் கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

    இதற்கிடையில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு எதிராக தமிழக சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை எந்த வகையிலும் தமிழக அரசு அனுமதிக்காது என அறிவித்தது.

    இருப்பினும் மத்திய அரசு தற்போது வரை டங்ஸ்டன் சுரங்க ஏல உரிமை ரத்து குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

    இதன் காரணமாக மேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக கிராம மக்கள் தொடர்ந்து போராட்டங்களை தற்போது வரை நடத்தி வருகின்றனர்.

    அதன்படி மேலூர் ஒருபோக பாசன விவசாய சங்கம் சார்பில் இன்று விவசாயிகள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்களை திரட்டி 4 வழிச்சாலையில் நடைப்பயணமாக பேரணியாக சென்று மதுரை தமுக்கத்தில் உள்ள தலைமை தபால் தந்தி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் 4 வழிச்சாலையில் பேரணியாக சென்றால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் என கூறி போலீசார் அதற்கு அனுமதி மறுத்தனர். இதையடுத்து விவசாயிகள் மேலூரில் இருந்து வாகனங்களில் மதுரைக்கு சென்று ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர்.


    மேலூர் அருகே உள்ள நரசிங்கம்பட்டியில் இன்று காலை 9 மணி அளவில் பொதுமக்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டனர். அவர்கள் நூற்றுக்கணக்கான வாகனங்களில் மதுரைக்கு புறப்பட்டனர். விவசாயிகள் போராட்டத்தையொட்டி வழிநெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலூரில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. மேலூர் நகரில் காய்கறி, நகைக்கடை, பேன்சி ஸ்டோர், பல் பொருள் அங்காடி, கட்டுமான பொருட்கள் வியாபாரம் செய்யும் கடைகள் உட்பட 500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.


    அதேபோல் மேலூர் அருகில் உள்ள வல்லாளபட்டி, வெள்ளலூர் நாடு, கருங்காலக்குடி, கீழவளவு மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த அனைத்து வியாபாரிகளும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தங்கள் கடைகளை அடைத்துள்ளனர்.

    ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் விவசாயிகள் தங்கள் ஊர்களிலிருந்து வாகனங்களில் புறப்பட்டு நரசிங்கம்பட்டி வந்தடைந்தனர். அங்கிருந்து 10 மணி அளவில் புறப்பட்டு ஆயிரக்கணக்கான வாகனங்களில் மதுரை தமுக்கம் புறப்பட்டுச் சென்று அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் இப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • தமிழகம் முழுவதுமே, சுகாதாரத்துறையில், உயிரிழப்புகள் மிகவும் அதிகரித்துள்ளது.
    • தமிழக சுகாதாரத் துறையில் குறைந்தது வாரம் ஒரு உயிரைப் பறிகொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

    சென்னை:

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் மின்சாரம் தாக்கி, அவசர சிகிச்சைக்காக வந்த பாண்டித்துரை என்பவர், மருத்துவர் இல்லாததால், முதலுதவி கூடக் கிடைக்காமல் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழகம் முழுவதுமே, சுகாதாரத்துறையில், உயிரிழப்புகள் மிகவும் அதிகரித்துள்ளது. இதன் அடிப்படைக் காரணம் என்னவென்றால், போதிய அளவு மருத்துவர்கள் நியமனம் செய்யாமல் இருப்பது தான். தமிழகம் முழுவதும், 1,467 மருத்துவர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது, சமீபத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வியின் மூலம் தெரிய வந்துள்ளது.

    அனைத்து அரசுத் துறைகளிலுமே காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது ஒரு புறம் இருக்க, பொதுமக்கள் உயிருக்குப் பொறுப்பான சுகாதாரத் துறையில் கூட, போதிய மருத்துவர்களை நியமிக்காமல் இருப்பது, அரசு மருத்துவமனைகளை நாடும் ஏழை, எளிய பொதுமக்கள் உயிரை திமுக அரசு கிள்ளுக்கீரையாகப் பார்க்கிறது என்பதை வெளிக்காட்டுகிறது.

    தமிழக சுகாதாரத் துறையில் குறைந்தது வாரம் ஒரு உயிரைப் பறிகொடுத்துக் கொண்டிருக்கிறோம். இதைக் கவனிப்பதை விட, சுகாதாரத் துறையில் அப்படி என்ன முக்கியமான வேலை செய்து கொண்டிருக்கிறார் அமைச்சர்? உயிர்கள் பலியான பிறகு, நீங்கள் ஆடும் நிவாரண உதவி நாடகம், போன உயிரை மீட்டுக் கொண்டு வருமா? என்று கூறியுள்ளார். 



    ×