என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பொங்கல் பண்டிகையையொட்டி ஈரோடு ஜவுளிச்சந்தையில் விடிய விடிய நடந்த விற்பனை
    X

    தைப்பொங்கலை முன்னிட்டு ஈரோடு ஜவுளி சந்தைகளில் ஜவுளி விற்பனை நடந்தபோது எடுத்த படம்.

    பொங்கல் பண்டிகையையொட்டி ஈரோடு ஜவுளிச்சந்தையில் விடிய விடிய நடந்த விற்பனை

    • வாரந்தோறும் திங்கள்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை இரவு வரை ஜவுளி வார சந்தை நடைபெற்று வருகிறது.
    • குளிர் காலத்துக்கான சால்வை, பெட்ஷீட், கம்பளி ரகங்களும் அதிக அளவில் விற்பனையாகின.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் கனி மார்க்கெட் ஜவுளி வணிக வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளான மணிக்கூண்டு ரோடு, டி.வி.எஸ். வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, என்.எம்.எஸ்.காம்பவுண்ட், காமராஜர் வீதி, பிருந்தாவீதி உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளி மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை நடைபெற்று வருகிறது.

    இங்கு வாரந்தோறும் திங்கள்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை இரவு வரை ஜவுளி வார சந்தை நடைபெற்று வருகிறது. இந்த ஜவுளி வாரச்சந்தை தென்னிந்திய அளவில் மிகவும் புகழ் பெற்றது. இங்கு மகாராஷ்டிரா ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வெளி மாநில வியாபாரிகளும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து துணிகளை கொள்முதல் செய்வார்கள்.

    இந்த நிலையில் இந்த வார ஜவுளிச்சந்தை நேற்று இரவு தொடங்கியது. கடந்த வாரங்களில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு ஜவுளி விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தொடர்ந்து தற்போது பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒருவாரகாலமே உள்ள நிலையில், இதற்கான ஜவுளி விற்பனை இந்த வாரமும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

    இதில் ஆண்கள், பெண்கள் குழந்தைகளுக்கான புதிய ரக ஆடைகள், ஜீன்ஸ் பேண்ட், வேட்டி, பனியன் ரகங்கள், உள்ளாடைகள் மற்றும் புடவை, சுடிதார், குர்தீஸ் உள்ளிட்ட துணி ரகங்கள் அதிக அளவில் விற்பனையாகின. மேலும், குளிர் காலத்துக்கான சால்வை, பெட்ஷீட், கம்பளி ரகங்களும் அதிக அளவில் விற்பனையாகின.

    அடுத்தவாரம் வர உள்ள பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த வார ஜவுளிச்சந்தையில் மொத்த மற்றும் சில்லறை விற்பனை அதிக அளவில் நடைபெற்றதாக ஜவுளி வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் கேரளா, தெலுங்கானா மாநிலத்தில் இருந்து அதிகளவில் வெளி மாநில வியாபாரிகள் வந்து குவிந்ததால் விடிய விடிய ஜவுளி விற்பனை விறு விறுப்பாக நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×