என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பச்சையப்பன் கல்லூரியில் நடந்த விழாவில் தி.மு.க. எம்.பி. ஆ.ராசா பங்கேற்றார்.
    • அப்போது, கம்யூனிச தலைவர்கள் சுயநலவாதிகளாக மாறிவிட்டனர் என்றார்.

    சென்னை:

    சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற தி.மு.க. எம்.பி. ஆ.ராசா பேசுகையில், கம்யூனிச கொள்கை தோற்றுப்போய் விட்டது. கம்யூனிசத்தில் கோளாறு இல்லை, கம்யூனிசம் செம்மையானது. கம்யூனிச தலைவர்கள் சுயநலவாதிகளாக மாறிவிட்டதால் கம்யூனிச தத்துவங்கள் நீர்த்துப் போனது என தெரிவித்தார்.

    இந்நிலையில், சி.பி.எம். மாநில செயலாளர் பெ.சண்முகம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக்கு ஆதரவு அளிக்கப்படும்.

    கம்யூனிஸ்ட் தலைவர்கள் சுயநலவாதிகள் என தி.மு.க. எம்.பி. ஆ.ராசா பேசியது மிகவும் தவறானது என தெரிவித்தார்.

    • டங்ஸ்டன் போராட்டம் மோடி அரசுக்கு எதிரானது என்றுகூட தெரியாதவரா பழனிசாமி?
    • சுரங்கம் அமைக்க முயலும் ‘ஒன்றிய பாஜக அரசை’ ஒரு வார்த்தை கூட குறிப்பிட்டுவிடாதபடி பார்த்து பார்த்து பதிவிட்டுள்ளார்.

    சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    "டங்ஸ்டன் போராட்டம் மோடி அரசுக்கு எதிரானது என்றுகூட தெரியாதவரா பழனிசாமி? சுரங்கம் அமைக்க முயலும் 'ஒன்றிய பாஜக அரசை' ஒரு வார்த்தை கூட குறிப்பிட்டுவிடாதபடி பார்த்து பார்த்து பதிவிட்டுள்ளார் பழனிசாமி"

    'மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நடத்திய நடைபயணப் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதியை மறுத்துள்ளது' என சொல்லியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

    டங்ஸ்டன் சுரங்கத்தை எதிர்த்து மதுரை- திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள சிக்கம்பட்டி டோல்கேட் பகுதியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் நடை பயணமாக சென்று தல்லாகுளம் மத்திய தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

    இதனால், சிட்டம்பட்டி சுங்கச்சாவடி பகுதியில் போராட்டகாரர்கள் திரண்டனர். அங்கிருந்து நடை பயணம் செல்ல முயன்ற போராட்டக்காரர்களிடம் 'வாகனங்களில் சென்று மத்திய தபால் நிலையத்தில் போராட்டம் நடத்துங்கள்' என போலீஸ் அதிகாரிகள் வலியுறுத்தினர். ஆனால், அதனை போராட்டக்காரர்கள் ஏற்கவில்லை. அவர்களை காவல் துறை தடுத்து நிறுத்தியது. போராட்டம் நடத்த அனுமதி வழங்கிய காவல்துறை, அதற்கு சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதனைதான், 'காவல்துறை அனுமதியை மறுத்துள்ளது' என இட்டுக்கட்டி பொய் சொல்லியிருக்கிறார் பழனிசாமி.

    டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க முயலும் ஒன்றிய அரசுக்கு எதிராக விவசாயிகள் அமைதி வழியில் பேரணி மற்றும் போராட்டம் நடத்த தமிழ்நாடு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. அதோடு விவசாயிகளுக்கு எந்தவித அசம்பாவிதங்களும் நிகழாத வண்ணம் முழுமையான பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது.

    விவசாயிகள் போராட்டத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் அதை வைத்து, தன் சுயநல அரசியல் வண்டியை ஓட்டலாம் என கழகுபோல காத்திருந்த பழனிசாமிக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. இந்நிலையில் வழக்கம் போல பொய் பெட்டியை திறந்து தமிழ்நாடு அரசு விவசாயிகள் பேரணிக்கு அனுமதியே கொடுக்கவில்லை என விதைக்க ஆரம்பித்துவிட்டார் பொய்ச்சாமி பழனிசாமி.

    முதுகெலும்புள்ள எதிர்க்கட்சி தலைவராக இருந்திருந்தால் விவசாயிகள் ஒன்றிய அரசுக்கு எதிராக இன்று போராட்டம் நடத்தியதை குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆனால் தனது பதிவில் தப்பித்தவறி கூட டங்கஸ்டன் சுரங்கம் அமைக்க முயலும் 'ஒன்றிய பாஜக அரசை' பற்றி ஒரு வரி அல்ல ஒரு வார்த்தை கூட இடம்பெறாதபடி பார்த்து பார்த்து பதிவிட்டுள்ளார் பழனிசாமி. பழனிசாமியின் வீரம் எல்லாம் அவ்வளவுதான். நாம் அவரை கோழை என்று சொன்னால் குப்புறப்படுத்து அழுவார்!

    மோடி அரசை கண்டிக்கும் வகையில்தான் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தல்லாகுளம் மத்திய தபால் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டத்தை போராட்டக்காரர்கள் முன்னெடுத்தார்கள். இந்த விஷயம் எல்லம் லாவகமாக மறைத்துவிட்டு பொய் முலாம் பூச முற்பட்டிருக்கிறார் பழனிசாமி. ஆனால், அந்த பொய் ஒவ்வொரு முறையும் அம்பலப்பட்டு நிற்கிறது.

    மதுரை டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என சொன்னதோடு மட்டுமல்லாது தான் முதலமைச்சராக உள்ளவரை ஒன்றிய அரசு டங்கஸ்டன் சுரங்கம் அமைக்க விட மாட்டேன் என நெஞ்சுரத்தோடு கூறி டங்கஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானத்தையும் நிறைவேற்றினார் முதலமைச்சர்.

    ஆனால் அதிமுகவோ டங்கஸ்டன் சுரங்கம் அமைக்க காரணமான சட்ட திருத்தத்தை ஒன்றிய அரசு மாநிலங்களவையில் கொண்டு வந்தபோது வழிய சென்று ஆதரவு கொடுத்து தமிழ்நாட்டு உரிமையை ஒன்றிய அரசின் காலடியில் வைத்து தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்தது. பழனிசாமியின் அந்த துரோகத்தை காலம் உள்ளவரை மக்கள் மறக்கமாட்டார்கள்.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய அப்பாவி மக்களை கருணையேயின்றி காக்கை குருவிகளை சுடுவது போல சுட்டுக்கொன்ற எடப்பாடி பழனிசாமி, இன்று மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக பேசுகிறேன் என நடிப்பது "கொடூர கொலைகாரன் நல்லொழுக்க வகுப்பெடுப்பதற்கு ஒப்பானது.

    தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த ஆளுநரை கண்டிக்க துப்பில்லை, தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி, வெள்ள நிவாரண நிதி என எந்த நிதியையும் ஒதுக்காத ஒன்றிய அரசை கண்டிக்க வக்கில்லை. துணைவேந்தர் தேடுதல் குழுவை இனி ஆளுநரே நியமிப்பார் என UGC கொடுத்த ஷாக் புத்தியில் ஏறவில்லை. ஆனால், எதிர்க்கட்சி தலைவர் என்ற இருப்பை காட்டிக்கொள்ள மட்டும் ஆளாய் பறக்கிறார்.

    அதிமுகவின் பொது செயலாளர் என்பதையும் மறந்து பாஜக தலைவரைப் போல நடந்து கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டு நலனுக்காக எந்த குரலும் கொடுக்காமல் தனது அரசியல் ஆதாயத்தை மட்டுமே முதன்மையாக கொண்டு பாஜகவோடு கள்ளக் கூட்டணி வைத்து செயல்பட்டு வரும் பழனிசாமிக்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு ரகுபதி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    • டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக விவசாயிகள் பேரணி.
    • மதுரை சதுக்கத்தில் பேரணி நிறைவடைந்த நிலையில், 26-ந்தேதி கருப்புக்கொடி ஏந்திர பேராட்டம் என அறிவிப்பு.

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாப்பட்டி, அ.வல்லாளப்பட்டி, நாயக்கர்பட்டி உள்பட 11 கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க இந்துஸ்தான் நிறுவனத்திற்கு மத்திய அரசு ஏல உரிமை வழங்கியதாக கூறப்படுகிறது.

    அரிட்டாப்பட்டி பல்லுயிர் தலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைத்தால் வன விலங்குகள் பாதிக்கும். இயற்கை சூழல் கெடுவதோடு விவசாயம், மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படையும். எனவே டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட வேண்டும் என பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக கடந்த சில மாதங்களாக தொடர் போராட்டங்கள், மறியல்கள் நடைபெற்றன. டங்ஸ்டன் சுரங்க திட்ட போராட்டத்திற்கு வணிகர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. கடந்த மாதம் மேலூரில் கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

    இதற்கிடையில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு எதிராக தமிழக சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை எந்த வகையிலும் தமிழக அரசு அனுமதிக்காது என அறிவித்தது.

    இருப்பினும் மத்திய அரசு தற்போது வரை டங்ஸ்டன் சுரங்க ஏல உரிமை ரத்து குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

    இதன் காரணமாக மேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக கிராம மக்கள் தொடர்ந்து போராட்டங்களை தற்போது வரை நடத்தி வருகின்றனர்.

    அதன்படி மேலூர் ஒருபோக பாசன விவசாய சங்கம் சார்பில் இன்று விவசாயிகள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்களை திரட்டி 4 வழிச்சாலையில் நடைபயணமாக பேரணியாக சென்று மதுரை தமுக்கத்தில் உள்ள தலைமை தபால் தந்தி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்தது.

    அதனையொட்டி ஆயிரக்கணக்கானோர் இன்று 4 வழிச்சாலை வழியாக பேரணி சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அதையும் மீறி விவசாயிகள் பேரணியை தொடர்ந்தனர்.

    மதுரை தமுக்கம் அருகில் விவசாயிகள் முன்னேறிச் செல்ல முடியாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்ததது. ஆனால் விவசாயிகள் தடுப்புகளை தாண்டிச் சென்றனர். மதுரை தமுக்கத்தை தாண்டி விவசாயிகள் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் விவசாயிகள் அப்பகுதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இன்றைய பேரணி இத்துடன் நிறைவடைவதாக தெரிவித்தனர்.

    அத்துடன் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக வருகிற 26-ந்தேதி கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தப்படும் என பேராட்டக்குழு தெரிவித்துள்ளது.

    • நெல்லையில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது.
    • இதுவரை 8 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.

    நெல்லை- சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் 8 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. வருகிற 11-ந்தேதி முதல் 16 பெட்டிகளுடன் இயக்கப்படும். அதேபோல் சென்னையில் இருந்து நெல்லை செல்லும் வந்தே பாரத் ரெயிலும் 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    • 10 ஆண்டு காலம் பிரதமர் பொறுப்பில் இருந்து ஆட்சியை நடத்தி காட்டியவர் மன்மோகன்சிங்.
    • தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய தூணாக இருந்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

    சென்னை காமராஜர் அரங்கத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் திருவுருவ படங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் கலந்து கொண்டார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பேஸ்புக் செய்தியில், "முன்னாள் பாரத பிரதமர் டாக்டர். மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு புகழஞ்சலி செலுத்தி அவர்கள் திருவுருவ படங்களை திறந்து வைத்தார்.

    தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய்குமார், திராவிடர் கழக தலைவர் கி வீரமணி, வி.சி.க தலைவர் திருமாவளவன், ம தி மு க தலைவர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் முன்னாள் மத்திய அமைச்சர்கள், முன்னாள் மாநில தலைவர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் உட்பட எராளமானவர்களுடன் கலந்து கொண்டேன்" என்று பதிவிட்டுள்ளார். 

    • கம்யூனிசத்தில் கோளாறு இல்லை, கம்யூனிசம் செம்மையானது.
    • கம்யூனிச தலைவர்கள் சுயநலவாதிகளாக மாறிவிட்டனர் என்றார்.

    சென்னை:

    சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் தி.மு.க. எம்.பி. ஆ.ராசா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    கம்யூனிச கொள்கை தோற்றுப்போய் விட்டது.

    கம்யூனிசத்தில் கோளாறு இல்லை, கம்யூனிசம் செம்மையானது.

    கம்யூனிச தலைவர்கள் சுயநலவாதிகளாக மாறிவிட்டதால் கம்யூனிச தத்துவங்கள் நீர்த்துப் போனது.

    சி.பி.எம். முன்னாள் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சமீபத்தில், தமிழகத்தில் அவசர நிலையை அமல்படுத்தியுள்ளதா என தமிழக அரசை கேள்வி கேட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • சென்னை, சேலத்தில் தலா ஒருவர் எச்.எம்.பி.வி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
    • வைரஸ் தொற்று கட்டுப்படுத்தக்கூடியது என்பதால் பீதி அடையத் தேவையில்லை.

    சீனாவை அச்சுறுத்திய எச்.எம்.பி.வி தொற்று இந்தியாவுக்குள்ளும் நுழைந்தது. கர்நாடகா, குஜராத்தில் 3 குழந்தைகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையிலும் 2 குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    சென்னை, சேலத்தில் தலா ஒருவர் எச்.எம்.பி.வி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

    எச்.எம்.பி.வி. வைரஸ் குறித்து பீதி அடையவேண்டிய அவசியம் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

    தும்மல், இருமல் வரும்போது வாய், மூக்கை மூடுதல், கைகளை அடிக்கடி கழுவுதல், நெரிசல் மிகுந்த இடங்களில் முககவசம் அணிதல், தேவை ஏற்பட்டால் சுகாதார நிலையத்துக்கு தகவல் தெரிவிப்பது போன்ற பிற சுவாச நோய்த் தொற்றுகளுக்கு போன்ற தடுப்பு நடவடிக்கைதான் எச்.எம்.பி.வி. வைரஸ் தொற்றுக்கும் உள்ளது. இந்த வைரஸ் தொற்று கட்டுப்படுத்தக்கூடியது என்பதால் பீதி அடையத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு வருவோர் முககவசம் அணிவது கட்டாயம் என அம்மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார்.

    எச்.எம்.பி.வி தொற்று பரவி வருவதால் நீலகிரி மாவட்டத்திற்கு வருவோர் முககவசம் அணிவது கட்டாயமாகிறது.

    சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக முககவசம் அணிவது கட்டாயம் என அவர் அறிவுறுத்தி உள்ளார்.

    • விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்ட பிறகு சுற்றுலா பயணிகள் கண்ணாடி பாலம் வழியாக நடந்து சென்று திருவள்ளுவர் சிலையை பார்வையிடுகிறார்கள்.
    • திருவள்ளூர் சிலைக்கு படகில் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள்.

    இவற்றை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு போக்குவரத்து நடத்தி வருகிறது. இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.

    கடல் சீற்றம், கடல் நீர்மட்டம் தாழ்வு மற்றும் கடல் நீர்மட்டம் உயர்வு போன்ற இயற்கை மாற்றங்களின் காரணமாக திருவள்ளுவர் சிலைக்கு அடிக்கடி படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு வந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையை படகில் சென்று நேரில் பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற நிலைமை இருந்து வந்தது.

    இதைத்தொடர்ந்து தமிழக அரசு நெடுஞ்சாலை துறை மூலம் விவேகானந்தர் பாறைக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே ரூ.37கோடி செலவில் கண்ணாடி இழை கூண்டு பாலத்தை அமைத்துள்ளது. இந்த கண்ணாடி பாலத்தை கடந்த மாதம் 30-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    அதைத்தொடர்ந்து கடந்த 4-ந்தேதி முதல் இந்த பாலம் வழியாக சுற்றுலா பயணிகள் நடந்து சென்று திருவள்ளுவர் சிலையை பார்க்க அனுமதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து திருவள்ளுவர் சிலைக்கு தற்போது படகு போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறையில் இருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றிச்செல்லும் படகு விவேகானந்தர் பாறையில் சுற்றுலா பயணிகளை இறக்கி விட்டுவிட்டு அங்கிருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு கரைக்கு திரும்பி வந்து விடுகிறது. விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்ட பிறகு சுற்றுலா பயணிகள் கண்ணாடி பாலம் வழியாக நடந்து சென்று திருவள்ளுவர் சிலையை பார்வையிடுகிறார்கள். அதன்பிறகு அவர்கள் அதே பாலம் வழியாக விவேகானந்தர் பாறைக்கு வந்து அங்கிருந்து படகு மூலம் கரைக்கு திரும்புகிறார்கள்.

    கண்ணாடி பாலம் திறக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து திருவள்ளூர் சிலைக்கு படகில் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் திருவள்ளுவர் சிலைக்கு தற்காலிகமாக படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

    • ஒரே நாளில் அனுமதி வழங்கிய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • ஒருவேளை போலீஸ் அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தியிருந்தால், தி.மு.க.வினர் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி பி.வேல்முருகன் இன்று காலையில் வழக்குகளை விசாரிக்க தொடங்கினார்.

    அப்போது பா.ம.க.வைச் சேர்ந்த வக்கீல் கே. பாலு ஆஜராகி, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்த பாமக மகளிர் அணி சென்னை போலீஸ் கமிஷனரிடம் அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்தது. ஆனால் 5 நாட்களுக்கு முன்பு விண்ணப்பம் செய்யவில்லை என்று காரணம் கூறி கடைசி நேரத்தில் போலீசார் அனுமதி வழங்க மறுத்து விட்டனர்.

    வெளியூரிலிருந்து வந்த பெண்கள் காலையில் போராட்டம் நடத்த முற்பட்டபோது அவர்களை கைது செய்து மாலை 7 மணி வரை திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து, பின்னர் விடுவித்தனர். ஆனால், நேற்று நடந்த சம்பவம் தொடர்பாக மாநில கவர்னரை கண்டித்து ஆளும்கட்சியான தி.மு.க. இன்று சைதாப்பேட்டையில் போராட்டம் நடத்த போலீஸ் அனுமதி வழங்கியுள்ளது.

    இதற்கான விண்ணப்பத்தை ஒரே நாளில் போலீசார் பரிசீலித்து போராட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளனர் . இது குறித்து தகுந்த உத்தரவை இந்த ஐகோர்ட்டு பிறப்பிக்க வேண்டும். எனவே ஒரே நாளில் அனுமதி வழங்கிய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஒருவேளை போலீஸ் அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தியிருந்தால், தி.மு.க.வினர் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஐகோர்ட்டு தான் பொதுமக்களின் பாதுகாவலர் என்பதால் இது சம்பந்தமாக தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்" என்று முறையிட்டார்.

    அதற்கு நீதிபதி, "இந்த ஐகோர்ட்டு தான் பொதுமக்களின் பாதுகாவலர் அந்த பொறுப்பை நான் உதறித் தள்ள விரும்பவில்லை. இந்த விவகாரம் குறித்து வழக்கு தாக்கல் செய்திருந்தால் அந்த வழக்கை நாளை காலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறேன். அந்த வழக்கை விசாரித்து தகுந்த உத்தரவையும் பிறப்பிக்கின்றேன் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

    • கோட்டூர்புரம் லேக்வியூ ஏரிக்கரை பகுதியில் உள்ள ஞானசேகரன் வீட்டில் சோதனை செய்தனர்.
    • ஞானசேகரன் வீடு, பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு சொந்தமானது என தெரியவந்தது.

    சென்னை:

    சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் என்ஜினீயரிங் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கோட்டூர்புரம் பகுதியை சேர்ந்த பிரியாணி கடைக்காரர் ஞானசேகரன் (வயது 37) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது. இதற்கிடையே, இந்த வழக்கினை ஐகோர்ட்டு நியமித்த 3 ஐ.பி.எஸ். பெண் அதிகாரிகள் கொண்ட புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.

    இவர்கள் கடந்த 2 தினங்களுக்கு முன்பு கோட்டூர்புரம் லேக்வியூ ஏரிக்கரை பகுதியில் உள்ள ஞானசேகரன் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அங்கு சிக்கிய ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் ஞானசேகர் வீடு குறித்த அறிக்கையை வருவாய்த்துறையிடம் கேட்டனர். அதனடிப்படையில் நேற்று வருவாய்த்துறை அலுவலர்கள் ஞானசேகரன் வீட்டினை அளந்து, ஆவணங்களை பார்த்தனர்.

    அப்போது அந்த வீடு, பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு சொந்தமானது என தெரியவந்தது. அந்த பகுதியில் உள்ள 2 ஏக்கர் நிலம், அந்த கோவிலுக்குதான் சொந்தமானது. கோவில் நிலத்தில்தான் ஞானசேகரன் 3 மாடி வீடு கட்டியுள்ளார். இது கோவில் நிலத்தில் கட்டப்பட்டுள்ள வீடு என்பதால், வருவாய்த்துறையினர் அறிக்கை ஒன்றை தயாரித்து, அதனை அறநிலையத்துறையினரிடம் ஒப்படைத்து விட்டனர். எனவே இந்த விவகாரத்தில் அறநிலையத்துறை தனது விசாரணையை தொடங்க உள்ளது.

    இந்நிலையில் கோட்டூர்புரத்தில் ஞானசேகரன் வீடு உள்பட மேலும் பல வீடுகள் கோவில் நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

    ஞானசேகரனின் வீட்டை அளவீடு செய்த நிலையில் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து 21 வீடுகள் கட்டப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    • பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளுடன் இந்த சந்தையில் குவிந்தனர்.
    • ஆடுகள் எடைக்கேற்ப ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்பனையானது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்கிழமைகளில் சந்தை நடைபெற்று வருகிறது.

    மிகவும் பிரசித்தி பெற்ற இந்த வாரச்சந்தைக்கு சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மேட்டூர் மேச்சேரி மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடுகளை வாங்கவும், விற்கவும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கிறார்கள்.

    செவ்வாய்கிழமைகளில் நடக்கும் சந்தையில் அதிகாலை நேரத்தில் ஆடுகள் விற்பனை தொடங்கி காலை நேரத்திலேயே அனைத்து ஆடுகளும் விற்பனை ஆகிவிடும். இந்தநிலையில் பொங்கல் பண்டிகை இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் ஆடுகளுக்கான தேவை அதிகரித்துள்ளது.

    இன்று அதிகாலை நல்லம்பள்ளியில் ஆட்டு சந்தை தொடங்கியது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளுடன் இந்த சந்தையில் குவிந்தனர். இதேபோல் ஆடுகளை வாங்கவும் ஏராளமான வியாபாரிகள் சந்தையில் திரண்டனர். வியாபாரிகள் மற்றும் வீடுகளில் ஆடுகளை வளர்த்தவர்கள் என அனைவரும் விற்பனைக்காக ஆடுகளை அதிக அளவில் கொண்டு வந்திருந்தனர்.

    ஆடுகள் எடைக்கேற்ப ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்பனையானது. சுமார் ரூ.1 கோடி வரை ஆடுகள் விற்பனை நடைபெற்றது. பண்டிகைக்கு ஆடுகள் விற்பனை சந்தையில் களை கட்டியது. அதிகாலையில் கடும் பனிப்பொழிவிலும் விறுவிறுப்பான விற்பனை நடைபெற்றது.

    • பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததும், தாங்களும் எதிர்ப்பு தெரிவிப்பது போல நாடகமாடியது.
    • டங்ஸ்டன் சுரங்கத்தைக் கைவிடும் எண்ணம் திமுகவுக்கு இல்லை என்பதையே காட்டுகிறது.

    சென்னை:

    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதில், ஆரம்பம் முதலே நாடகமாடிக் கொண்டிருக்கிறது திமுக அரசு. டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கலாம் என்று, மத்திய அரசுக்குக் குறிப்பு அனுப்பி, சுரங்க ஒப்பந்தம் வழங்கப்படும் வரையில், எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்து விட்டு, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததும், தாங்களும் எதிர்ப்பு தெரிவிப்பது போல நாடகமாடியது.

    மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன்ரெட்டி சுரங்கம் அமைக்கும் பணிகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்து, தமிழக அரசு மேற்கொண்டு டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்தங்களைப் பரிசீலிக்கக் கூடாது என்று தெரிவித்த பின்னர், திமுக அரசு அது குறித்து அரிட்டாப்பட்டி விவசாயிகளுக்கு எந்த உறுதியும் அளிக்கவில்லை என்பது தெளிவாகிறது.

    தற்போது அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் விவசாயிகளைத் தடுத்து நிறுத்த முற்படுவது, டங்ஸ்டன் சுரங்கத்தைக் கைவிடும் எண்ணம் திமுகவுக்கு இல்லை என்பதையே காட்டுகிறது. விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் கோரிக்கைகளைப் பரிசீலிப்பது திமுக அரசின் கடமை. அதை விடுத்து, மத்திய அமைச்சர் அறிவிப்பு வெளியிட்ட பிறகும், டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக எந்த உறுதியும் அளிக்காமல், நாட்களைக் கடத்திவிட்டு, தற்போது விவசாயிகள் போராட்டத்திற்குக் காரணமாக இருக்கிறது திமுக.

    உடனடியாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், விவசாயிகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

    ×