என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான பேரணி நிறைவு: 26-ந்தேதி கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்  அறிவிப்பு
    X

    டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான பேரணி நிறைவு: 26-ந்தேதி கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் அறிவிப்பு

    • டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக விவசாயிகள் பேரணி.
    • மதுரை சதுக்கத்தில் பேரணி நிறைவடைந்த நிலையில், 26-ந்தேதி கருப்புக்கொடி ஏந்திர பேராட்டம் என அறிவிப்பு.

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாப்பட்டி, அ.வல்லாளப்பட்டி, நாயக்கர்பட்டி உள்பட 11 கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க இந்துஸ்தான் நிறுவனத்திற்கு மத்திய அரசு ஏல உரிமை வழங்கியதாக கூறப்படுகிறது.

    அரிட்டாப்பட்டி பல்லுயிர் தலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைத்தால் வன விலங்குகள் பாதிக்கும். இயற்கை சூழல் கெடுவதோடு விவசாயம், மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படையும். எனவே டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட வேண்டும் என பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக கடந்த சில மாதங்களாக தொடர் போராட்டங்கள், மறியல்கள் நடைபெற்றன. டங்ஸ்டன் சுரங்க திட்ட போராட்டத்திற்கு வணிகர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. கடந்த மாதம் மேலூரில் கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

    இதற்கிடையில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு எதிராக தமிழக சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை எந்த வகையிலும் தமிழக அரசு அனுமதிக்காது என அறிவித்தது.

    இருப்பினும் மத்திய அரசு தற்போது வரை டங்ஸ்டன் சுரங்க ஏல உரிமை ரத்து குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

    இதன் காரணமாக மேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக கிராம மக்கள் தொடர்ந்து போராட்டங்களை தற்போது வரை நடத்தி வருகின்றனர்.

    அதன்படி மேலூர் ஒருபோக பாசன விவசாய சங்கம் சார்பில் இன்று விவசாயிகள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்களை திரட்டி 4 வழிச்சாலையில் நடைபயணமாக பேரணியாக சென்று மதுரை தமுக்கத்தில் உள்ள தலைமை தபால் தந்தி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்தது.

    அதனையொட்டி ஆயிரக்கணக்கானோர் இன்று 4 வழிச்சாலை வழியாக பேரணி சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அதையும் மீறி விவசாயிகள் பேரணியை தொடர்ந்தனர்.

    மதுரை தமுக்கம் அருகில் விவசாயிகள் முன்னேறிச் செல்ல முடியாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்ததது. ஆனால் விவசாயிகள் தடுப்புகளை தாண்டிச் சென்றனர். மதுரை தமுக்கத்தை தாண்டி விவசாயிகள் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் விவசாயிகள் அப்பகுதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இன்றைய பேரணி இத்துடன் நிறைவடைவதாக தெரிவித்தனர்.

    அத்துடன் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக வருகிற 26-ந்தேதி கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தப்படும் என பேராட்டக்குழு தெரிவித்துள்ளது.

    Next Story
    ×