என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • நம்பெருமாளின் மோகினி அலங்காரம் கண்கொள்ளா காட்சியாக அமைந்தது.
    • இராப்பத்து திருவாய்மொழி திருநாள் நாளை முதல் தொடங்குகிறது.

    திருச்சி:

    108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று பக்தர்களால் அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதெசி பெருவிழா மிகவும் பிரசித்திப்பெற்றது.

    இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த டிசம்பர் 30-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 31-ந்தேதி பகல்பத்து திருவாய்மொழி திருநாள் தொடங்கியது.

    விழாவையொட்டி உற்சவர் நம்பெருமாள் தினமும் தினந்தோறும் காலையில் பல்வேறு அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார்.

    பகல் பத்து 10-ம் திருநாளான இன்று நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரம் நடைபெற்றது. பாற்கடலை கடைந்து கிடைத்த அமுதத்தை அசுரர்கள் பறித்துக் கொள்ள, தேவர்கள் திருமாலைச் சரணடைந்தனர். அவரும் மோகினியாகத் தோன்றி, தேவர்களுக்கு அமுதம் கிடைக்கச் செய்தார்.

    இதை நினைவூட்டும் வகையில் இந்த மோகினி அலங்கார காட்சி நடைபெற்றது. இதற்காக இன்று காலை 6 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள், 7 மணிக்கு அர்ச்சுன மண்டபம் வந்தார். அங்கு மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.

    நம்பெருமாளின் மோகினி அலங்காரம் கண்கொள்ளா காட்சியாக அமைந்தது. அவர் வெண்ணிற பட்டு புடவை அணிந்து, வலது திருக்கையில் தங்கக் கோலக்கிளி தாங்கி, இடது திருக்கை தொங்க விட்டுக் கொண்டு, கம்பீரமாக அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி அளித்தார்.

    மேலும் சவுரிக் கொண்டை அணிந்து, அதில் கலிங்கத்துராய் , நெற்றி பட்டை , முத்து பட்டை சாற்றி, காதில் வைர மாட்டல், வைரத் தோடு அணிந்து, மூக்குத்தி அணிந்து காட்சி தந்தார். மார்பில் பங்குனி உத்திர பதக்கம், அதன்மேல் தாயாரின் திருமாங்கல்யம், அழகிய மணவாளன் பதக்கம், அடுக்கு பதக்கங்கள் அணிவிக்கப்பட்டிருந்தன.

    மேலும் நெல்லிக்காய் மாலை, தங்க பூண் பவழ மாலை, காசு மாலை அணிந்து, இடது திருக்கை முழுவதும் தங்க வளையல்கள், அரசிலை பதக்கம், பவழ வலையல், தாயத்து சரங்களுடன் கம்பீரமாக் காட்சி அளித்தார்.

    வடியில் தங்க சதங்கை, தண்டைகளும், பின்புறம் ஏலக்காய் ஜடை தாண்டா சாற்றி,அதன் மேல் கல் இழைத்த ஜடை நாகத்துடன் சேர்ந்த சிகப்பு கெம்புக்கல் ஜடை, ராக்கொடி அணிந்து, திருக்கைகளில் புஜ கீர்த்தி சாற்றி, அரைச்சலங்கை இடுப்பில் வலைவாக சாற்றி சூர்ய பதக்கம் உள்ளிட்ட ஆபரணங்கள் அணிந்திருந்தார்.

    வருடம் ஒருமுறை மட்டுமே சேவை தரும் நாச்சியார் திருக்கோலத்தை காண திருச்சி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். பக்தர்கள் மோகின் அலங்காரத்தில் பெருமாளை பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

    இதையடுத்து மாலை 5 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து புறப்படும் நம்பெருமாள், இரவு 7 மணிக்கு கருட மண்டபம் சென்றடைவார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.

    இதன் தொடர்ச்சியாக இராப்பத்து திருவாய்மொழி திருநாள் நாளை முதல் தொடங்குகிறது. நாளை (வெள்ளிக் கிழமை) அதிகாலை 4.15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட பல்வேறு சிறப்பு திருவாபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்தில் இருந்து சிம்ம கதியில் புறப்பட்டு வெளியில் வருவார்.

    2-ம் பிரகாரம் வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியே 3-ம் பிரகாரத்திற்கு வரும் நம்பெருமாள், துரைப்பிரதட்சணம் வழியாக பரமபதவாசல் பகுதிக்கு வருவார்.

    அதனைத் தொடர்ந்து அதிகாலை 5.15 மணியளவில் பரமபதவாசல் திறக்கப்படும். அப்போது நம்பெருமாள் பக்தர்கள் புடைசூழ பரமபதவாசல் வழியாக எழுந்தருள்வார். பக்தர்கள் ரங்காரங்கா கோஷம் முழங்க அரங்கனை பிந்தொடர்ந்து சொர்க்கவாசல் வழியாக வருவார்கள்.

    பின்னர் நம்பெருமாள் மணல்வெளி, நடைப்பந்தல், தவுட்டரவாசல் வழியாக ஆயிரங்கால் மண்டபத்தின் எதிரில் உள்ள திருக்கொட்டகைக்கு வருவார். அங்கு பெருமாள் சுமார் 1 மணி நேரம் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

    அதன்பின் சாதரா மரியாதையாகி(பட்டு வஸ்திரம் சாற்றுதல்) ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி நள்ளிரவு வரை பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பின்னர் இரவு 12 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, வீணை வாத்தியத்துடன், இரவு 1.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.

    ராப்பத்து பெருவிழாவின் 7ம் திருநாளான 16-ந்தேதி அன்று திருக்கைத்தல சேவை நடைபெறும். 8-ம் திருநாளான 17-ந்தேதி திருமங்கை மன்னன் வேடுபறி வைபவம் நடைபெறும். 10ம் திருநாளான 19-ந்தேதி தீர்த்தவாரியும், 20-ந்தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதெசி பெருவிழா நிறைவு பெறும்.

    • அ.தி.மு.க., பா.ஜ.க., த.மா.கா. ஆகிய கட்சிகள் பொது எதிரியாக தி.மு.க.வை கருதுவதால் பொதுவேட்பாளரை ஆதரிக்கலாம் என்று கூறப்படுகிறது.
    • எல்லா கட்சிகளும் தனித்து போட்டியிட்டால் அது தி.மு.க.வுக்கு சாதகமாக இருக்கும் என்பதையும் எல்லா கட்சிகளும் உணர்ந்து உள்ளன.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவை தொடர்ந்து அந்த தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வேட்பு மனுதாக்கல் தொடங்குகிறது.

    குறுகிய கால இடைவெளியே இருப்பதால் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க, கூட்டணிகளில் எந்த கட்சியை போட்டியிட வைப்பது? யாரை வேட்பாளராக நிறுத்துவது? என்பதில் மும்முரமாக ஆலோசித்து வருகிறார்கள்.

    இந்த தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் போட்டியிட விரும்புவதாக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். இது தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை செல்வப்பெருந்தகை இன்று மாலை அல்லது நாளை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.

    காங்கிரசை பொறுத்தவரை 5 பேர் போட்டியிட விருப்பம் தெரிவித்து உள்ளார்கள். இடைத்தேர்தலை பொறுத்தவரை பொதுத்தேர்தலை விட செலவு மிக அதிகம் ஆகும். அதை காங்கிரஸ் வேட்பாளர்களால் ஈடுகட்டுவது சாத்தியமில்லை என்றும் கூறப்படுகிறது.

    எனவே தி.மு.க.வே நேரடியாக களம் இறங்கலாம் என்று தெரிகிறது.

    பெரும்பாலும் இடைத்தேர்தலை பொறுத்தவரை ஆளுங்கட்சிக்கு சாதகமாகவே இருக்கும். எனவே இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியை வீழ்த்த பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த முயற்சிகள் நடந்து வருகிறது.

    இது தொடர்பாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனும் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்கள்.

    இதையடுத்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் ஜி.கே.வாசன் சந்தித்து பேசி இருக்கிறார். அந்த சந்திப்பின்போது நாளை மறுநாள் (11-ந்தேதி) அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது. அந்த கூட்டத்தில் ஆலோசித்து தெரிவிப்பதாக கூறினார் என்று கூறப்படுகிறது.

    கடந்த இடைத்தேர்தலின் போது த.மா.கா., அ.தி.மு.க. கூட்டணியில் இருந்தது. அப்போது அந்த கூட்டணியில் த.மா.கா.வுக்கு அந்த தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த தேர்தலில் த.மா.கா. வேட்பாளரை பொது வேட்பாளராக நிறுத்தலாம் என்று பேசப்படுகிறது. இதற்கு எடப்பாடி பழனிசாமியின் சம்மதத்தை இரு கட்சிகளும் எதிர் பார்க்கின்றன.

    அ.தி.மு.க., பா.ஜ.க., த.மா.கா. ஆகிய கட்சிகள் பொது எதிரியாக தி.மு.க.வை கருதுவதால் பொதுவேட்பாளரை ஆதரிக்கலாம் என்று கூறப்படுகிறது. எல்லா கட்சிகளும் தனித்து போட்டியிட்டால் அது தி.மு.க.வுக்கு சாதகமாக இருக்கும் என்பதையும் எல்லா கட்சிகளும் உணர்ந்து உள்ளன.

    கடந்த தேர்தலில் த.மா.கா. சார்பில் போட்டியிட்ட யுவராஜ் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோல்வி அடைந்தார். ஏற்கனவே காங்கேயம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த விடியல் சேகரும் அந்த பகுதியை சேர்ந்தவர்.

    இருவரும் வாசனிடமும் நெருக்கமானவர்கள். எடப்பாடி பழனிசாமியிடமும் நல்ல நட்புடன் இருப்பவர்கள். எனவே இருவரில் ஒருவரை வேட்பாளராக்கலாம் என்று த.மா.கா. கருதுகிறது.

    இது தொடர்பாக நாளை ஈரோடு கிழக்கு மாவட்ட நிர்வாகிகளோடு ஜி.கே.வாசனும் ஆலோசனை நடத்துகிறார். இந்த தேர்தலில் பொது வேட்பாளருக்கு அ.தி.மு.க. உடன்பட்டால் 2026 தேர்தலிலும் தி.மு.க.வுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைய வாய்ப்பு இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

    • நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
    • பெரியார் குறித்த தனது கருத்தை சீமான் திரும்பப்பெறாவிட்டால் போராட்டம் தொடரும் என த.பெ.தி.க.வினர் அறிவித்துள்ளனர்.

    தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    தந்தை பெரியார் குறித்து சீமான் பேசியதற்கு ஆதாரம் வேண்டும் என்று தெரிவித்த தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன், சீமான் வீட்டுக்கு சென்று ஆதாரத்தை கேட்கப்போவதாக தெரிவித்து இருந்தார்.

    இதையடுத்து சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் பெரியார் பற்றி கோஷமிட்டபடியே சீமான் வீட்டை முற்றுகையிட சென்ற பெரியார் திராவிட கழகத்தினரை தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    பெரியார் குறித்த தனது கருத்தை சீமான் திரும்பப்பெறாவிட்டால் போராட்டம் தொடரும் என த.பெ.தி.க.வினர் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.

    • அங்குலம் அங்குலமாக ஒவ்வொரு கட்டிடத்தையும் சோதனை செய்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தின் மையப்பகுதியான வண்ணார்பேட்டை கொக்கிரகுளம் பகுதியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ளது.

    இங்கு ஊரக வளர்ச்சி முகமை, வருவாய்த்துறை, மகளிர் திட்டம், மாற்றுத்திறனாளிகள் துறை என 20-க்கும் மேற்பட்ட துறை சார்ந்த அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. மேலும் பாளை தாலுகா அலுவலகம், இ-சேவை மையம், தபால் நிலையம் உள்ளிட்டவையும் இயங்கி வருகிறது.

    இங்கு பல்வேறு பணிகளுக்காகவும் தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். எப்போதும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு கருதி இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் சுழற்சி முறையில் பணியாற்றி கொண்டு இருப்பார்கள். மேலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும் பணியில் ஈடுபடுவது வழக்கம்.

    இந்நிலையில் நெல்லை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று அதிகாலை 1.20 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் போன் செய்துள்ளார். அப்போது பேசிய நபர், நெல்லையில் இருந்து பேசுகிறேன். நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளேன் என்று கூறிவிட்டு போனை வைத்து விட்டார்.


    இந்த தகவல் மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹடிமனிக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவரது உத்தரவின்பேரில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கலெக்டர் அலுவலகத்துக்கு விரைந்து சென்றனர்.

    வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும் அங்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து மெட்டல் டிடெக்டர் மூலமாக அங்குலம் அங்குலமாக ஒவ்வொரு கட்டிடத்தையும் சோதனை செய்தனர்.

    மேலும் போலீசாரும் மோப்பநாய் மூலமாக கட்டிடங்கள், அரசு வாகனங்கள் உள்ளிட்டவற்றை சோதனை செய்தனர். கலெக்டர் அலுவலகம் முழுவதும் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த சோதனையில் வேறு எதுவும் சிக்கவில்லை. இதனை தொடர்ந்து அனைவரும் நிம்மதி அடைந்தனர்.

    பின்னர் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் அழைப்பு வந்த செல்போன் எண்ணை போலீசார் செல்போன் சிக்னல் மூலமாக ஆய்வு செய்தனர். அப்போது அந்த சிக்னல் பேட்டை ஆசிரியர் காலனியை காட்டியது. உடனடியாக பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் அங்கு விரைந்தனர்.

    அங்குள்ள 3-வது தெருவில் விசாரணை நடத்தியபோது கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் செய்யது அப்துல் ரஹ்மான்(வயது 45) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை போலீசார் பேட்டை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு வைத்து நடத்திய விசாரணையில், செய்யது அப்துல் ரஹ்மான் பேட்டை பகுதியில் கார் டிங்கரிங் மற்றும் வெல்டிங் தொழிலாளியாக வேலை பார்த்து வருவரு தெரியவந்தது. இவருக்கு மனைவி , ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    சமீபத்தில் செய்யது அப்துல் ரஹ்மானின் மனைவி, தமிழக அரசின் திட்டமான மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் ரூ.1000 கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுவிட்டது. இதனிடையே பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1000 வழங்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், பணம் வழங்கப்படவில்லை என்பதால் செய்யது அப்துல் ரஹ்மான் அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.

    ஏற்கனவே மகளிர் உரிமை தொகையும் கிடைக்காத நிலையில், பொங்கலுக்கு எதிர்பார்த்த ஆயிரம் ரூபாயும் தரவில்லையே என்று செய்யது அப்துல் ரஹ்மான் ஆத்திரம் அடைந்துள்ளார்.

    உடனே நேற்று மாலை பேட்டையில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்திய அவர், இரவில் மதுபோதையின் உச்சத்தில் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து செய்யது அப்துல் ரகுமானை பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1000 கன அடிக்கு கீழ் குறைந்துள்ளது.
    • கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 300 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    மேட்டூர்:

    காவிரி டெல்டா பாசன பகுதிகளில் மழை பெய்து வந்ததால் கடந்த 31-ந்தேதி மேட்டூர் அணை ஒரே ஆண்டில் 3-வது முறையாக தனது முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணைக்கு வருகின்ற தண்ணீரை விட, கூடுதலாக அணையில் இருந்து தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வந்தது.

    கடந்த 3-ந்தேதி முதல் அணையிலிருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 12,000 கன அடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 300 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வந்தது. நீர்வரத்தை விட தினமும் கூடுதலாக நீர் திறந்து விடப்பட்டதால் மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து கொண்டே வந்தது. இதனால் டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த 6-ந்தேதி 12 ஆயிரம் கன அடியில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.

    இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1000 கன அடிக்கு கீழ் குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 831 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நீர்மட்டம் 116.10 அடியாகவும், நீர் இருப்பு 87.38 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

    நீர்வரத்து 1000-க்கும் கீழ் சரிந்துள்ளதால் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பின் அளவை மேலும் குறைத்துள்ளனர். அதன்படி காவிரி ஆற்றில் வினாடிக்கு 8,000 கன அடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 300 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • ஊட்டியின் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள மலை காய்கறி தோட்டங்களில் உறைபனி மற்றும் குளிரின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.
    • தேயிலை தோட்டங்களில் உறைப்பனி தாக்கத்தால் செடிகள் கருகி மகசூல் அடியோடு பாதிக்கப்பட்டு உள்ளது.

    ஊட்டி:

    ஊட்டியில் கடந்த சில நாட்களாக உறைபனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அங்குள்ள பல்வேறு பகுதிகள் காஷ்மீர் போலவே பனிகள் படர்ந்து காட்சியளிக்கின்றன.

    அதிலும் குறிப்பாக ஊட்டி குதிரை பந்தய மைதானம், காந்தல், தலைகுந்தா உள்ளிட்ட பகுதியில் உள்ள புல்வெளி மைதானங்களில் உறைபனி படிந்து உள்ளது. இதன் காரணமாக பச்சைப்பசேலென காட்சியளிக்கும் புற்கள், தற்போது வெள்ளை கம்பளம் போர்த்தியது போல் வெண்மையாக காணப்பட்டது.

    மேலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களின் மீது உறைப்பனி கொட்டி கிடந்ததால் வாகனங்களும் வெள்ளை நிறமாக காட்சி அளித்தன. அதிகாலை நேரத்தில் இருசக்கர வாகனங்கள் மீது கொட்டி கிடந்த உறை பனியை வாகன ஓட்டிகள் அகற்றுவதை பார்க்க முடிந்தது.

    ஊட்டியின் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள மலை காய்கறி தோட்டங்களில் உறைபனி மற்றும் குளிரின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் தொழிலாளர்கள் வெம்மை ஆடைகளை அணிந்து உறைப்பனியிலும் கேரட் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மார்க்கெட் சுமை தூக்கும் தொழிலாளர்கள், அங்குள்ள பகுதிகளில் ஆங்காங்கே தீ மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர்.

    உறைபனி தாக்கத்தால் செடி, கொடி மற்றும் புற்கள் காய்ந்து வறட்சியான கால நிலை நிலவுவதால் கால்நடைகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்படும் அபாய நிலை உள்ளது. ஊட்டியின் புறநகர பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் உறைப்பனி தாக்கத்தால் செடிகள் கருகி மகசூல் அடியோடு பாதிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் விவசாயிகள் 'கோத்தகிரி மலார்' செடிகளை கொண்டு தேயிலை தோட்டங்களை மூடிவைத்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

    ஊட்டியில் ஜனவரி மாதம் இறுதிவரை உறைப்பனி தென்படும் சூழல் இருப்பதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஆண்டுகளை விட இந்தாண்டு உறைபனி அதிகமாக காணப்பட்டது. அதிலும் குறிப்பாக குன்னூர் மற்றும் புறநகர பகுதிகளான ஜிம்கானா, ஸ்டாப் காலேஜ், வெலிங்டன் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை உறை பனிப்பொழிவு கொட்டி தீர்த்தது. இதனால் அங்குள்ள புல்வெளிகள் மீது உறைபனி படிந்து வெள்ளை கம்பளம் போர்த்தியது போல காட்சியளித்தது.

    குன்னூர் நகரில் சராசரி வெப்பநிலை 2.6 டிகிரி செல்சியஸ் ஆகவும், சமவெளி பகுதிகளில் 0 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகி உள்ளது. கடும் குளிர் நிலவி வருவதால் அங்கு வசிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

    • சைபர் பாதுகாப்பிற்கும் தமிழக அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
    • இனி மக்களின் எல்லா பயன்பாடுகளும் டிஜிட்டல் வழியாகவே அமையும்.

    நந்தம்பாக்கம்:

    சென்னை நந்தம்பாக்கத்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் 2 நாட்கள் நடைபெறும் Umagine TN தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்பின்னர் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

    * AI தான் இன்று பல இடங்களில் பேசுபொருளாக உள்ளது. இந்த தொழில் நுட்பம் மூலம் வேலைவாய்ப்புகள் பெருகதான் செய்யும். AI தொழில்நுட்ப வளர்ச்சியால் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ளனர். இதனால் இந்த நேரத்தில் இந்த மாநாடு அவசியமே.

    * வணிகத்தையும், தொழில்நுட்பத்தையும் எப்போதும் ஊக்குவிக்கும் அரசாக திமுக அரசு திகழ்கிறது.

    * புத்தாக்கம் மற்றும் தொழில் வளர்ச்சியில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள புத்தொழில் நிறுவனங்கள் பயனடையும் வகையில் அரசு செயல்படுகிறது.

    * இன்னும் கூடுதலான வளர்ச்சியை நோக்கி தமிழகம் செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.

    * எத்தனை வளர்ச்சி தமிழ்நாட்டில் ஏற்பட்டாலும் மேலும் வளர்ச்சி தேவை என்பது தான் எனது எண்ணம். உண்மையான வளர்ச்சி என்பது சமச்சீரானதாக இருக்க வேண்டும்.

    * ஐ.டி துறை வளர மனித வளம் என்பது மிகவும் முக்கியமானது.

    * 2-ம் கட்ட, 3-ம் கட்ட நகரங்களில் சிப்காட் தொழிற்பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    * தொழில் சார்ந்த திறன்களை வளர்க்க 'நான் முதல்வன் திட்டம்' மிகவும் பயன் உள்ளதாக உள்ளது. நான் முதல்வன் திட்டத்தால் நம் மாநில இளைஞர்களின் Soft Skills வளர்ந்துள்ளது.

    * தமிழ் மென்பொருள் உருவாக்க மிகுந்த முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

    * மாநிலத்தின் அனைத்து திட்டங்களும் இணையதத்தில் வழங்கப்பட வேண்டும். அதனால் மக்கள் பயனடைவர்.

    * இணைய சேவை எல்லா இடங்களிலும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுகிறோம்.

    * சைபர் பாதுகாப்பிற்கும் தமிழக அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

    * சைபர் செக்யூரிட்டி, இணையத்தில் தமிழ் வழிக்கல்வி, தமிழ் வழி தேடுதலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    * பல்வேறு திட்டங்கள் மூலம் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்பட்டு வருகிறது.

    * இனி மக்களின் எல்லா பயன்பாடுகளும் டிஜிட்டல் வழியாகவே அமையும்.

    * டிஜிட்டல் குற்றங்களை தடுக்க புதிய தொழில்நுட்பங்களை வடிவமைக்க வேண்டும் என்றார்.

    • அணை கட்டுவதற்கு ஆறுகள் இல்லாததால் தடுப்பணைகள் கேட்கிறார்கள்.
    • வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் குழாய்கள் சீர்செய்யும் பணி 2026-க்குள் நிறைவடையும்.

    சென்னை:

    நடப்பாண்டுக்கான முதல் சட்டசபை கூட்டத்தொடரின் 4-வது நாள் கூட்டம் தொடங்கியது.

    சட்டசபையில் வினாக்கள்-விடைகள் நேரத்தில் சட்டசபை உறுப்பினர்கள் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிக்கின்றனர்.

    எம்.எல்.ஏ. உதயசூரியன் கேள்விக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:

    ஒரு காலத்தில் எங்கள் தொகுதியில் அணை கட்டுங்கள் என கேட்பர். தற்போது 40-க்கும் மேல் அணைகள் கட்டப்பட்டு விட்டது.

    அணை கட்டுவதற்கு ஆறுகள் இல்லாததால் தடுப்பணைகள் கேட்கிறார்கள். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வடக்குநந்தல் கோபி அணை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    அத்திக்கடவு-அவினாசி 2-ம் கட்ட திட்டத்தில் தொண்டாமுத்தூரில் உள்ள குளங்களில் நீர் நிரப்ப நடவடிக்கை தேவை என்று எம்.எல்.ஏ. வேலுமணி கூறினார்.

    அதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், தொண்டாமுத்தூரில் உள்ள குளங்களில் நீர் நிரப்பும் கோரிக்கையை முன்னுரிமை அடிப்படையில் ஏற்பதாக கூறினார்.

    வடசென்னையில் பழைய குடிநீர், கழிவுநீர் குழாய்கள் சீரமைப்பது தொடர்பாக எம்.எல்.ஏ. ஐட்ரீம் மூர்த்தி கேள்விக்கு அமைச்சர் கே.என். நேரு பதில் அளித்தார். அவர் கூறுகையில்,

    வடசென்னையில் பழைய குடிநீர், கழிவுநீர் குழாய்கள் சீர் செய்யப்படும். வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் குழாய்கள் சீர்செய்யும் பணி 2026-க்குள் நிறைவடையும்.

    சென்னையில் ஜூலை மாதம் வரை குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. சென்னையின் குடிநீர் தேவை 13.22 டிஎம்சியாக உள்ள நிலையில் தற்போது இருப்பு 15.56 டிஎம்சி உள்ளது என்று கூறினார்.

    • அரசியல் கட்சியினர் ஈரோடு செல்வதற்கான ஏற்பாடுகளில் இப்போதே ஈடுபட தொடங்கி விட்டனர்.
    • தி.மு.க.வினர் ஒவ்வொருவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிக்கு சென்று பிரசாரத்தில் ஈடுபட வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மரணம் அடைந்த நிலையில் அங்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

    இடைத்தேர்தலில் போட்டியிடுபவர்களின் வேட்பு மனுக்கள் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நாளை (10-ந் தேதி) முதல் 17-ந் தேதி வரை பெறப்பட உள்ளது.

    18-ந்தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். மனுக்களை வாபஸ் பெற 20-ந் தேதி கடைசி நாளாகும். அன்று மாலை 3 மணிக்கு பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அதன் பிறகு தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கும்.

    இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் வேட்பாளர் யார் என்பது இன்று முடிவாகி விடும் என தெரிகிறது.

    ஈரோடு தொகுதியை பொறுத்தவரை இருமுறை காங்கிரஸ் வேட்பாளர்களே போட்டியிட்டனர். அதனால் இந்த முறை யார் வேட்பாளர்? என்ற எதிர்பார்ப்பில் தி.மு.க. கூட்டணி உள்ளனர்.

    வேட்புமனு தாக்கல் நாளை தொடங்கும் நிலையில் அரசியல் கட்சியினர் ஈரோடு செல்வதற்கான ஏற்பாடுகளில் இப்போதே ஈடுபட தொடங்கி விட்டனர்.

    தி.மு.க. அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி முன்னணி நிர்வாகிகள் அனைவரும் ஈரோட்டுக்கு 29-ந்தேதி சென்றுவிட வேண்டும் என்று கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. தி.மு.க.வினர் ஒவ்வொருவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிக்கு சென்று பிரசாரத்தில் ஈடுபட வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

    இதைத் தொடர்ந்து தி.மு.க.வினர் ஒவ்வொரு வரும் ஈரோட்டில் ஏற்கனவே தங்கிய ஓட்டல்களில் இப்போதே முன்பதிவு செய்ய தொடங்கிவிட்டனர். அமைச்சர்கள் பலர் கடந்த முறை அங்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர். இப்போது அதே வீடுகளை மீண்டும் வாடகைக்கு கேட்டுள்ளனர்.

    இப்போது பொங்கல் பண்டிகைக்காக அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் கட்சி நிர்வாகிகளுக்கு பேண்ட்-சட்டை, வேஷ்டி, சேலை, காலண்டர் வழங்கி வருகிறார்கள்.

    பொங்கலுக்கு கட்சி நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெறுவது வழக்கம். அந்த வகையில் தி.மு.க.வினர் 16-ந்தேதி வரை பொங்கல் நிகழ்ச்சியில் தீவிரமாக இருப்பார்கள். அதன்பிறகு ஈரோடு செல்வதற்கான ஏற்பாடுகளை கவனிப்பார்கள் என்று தி.மு.க. தலைமை கழக நிர்வாகி தெரிவித்தார்.

    • சீமானின் வீட்டை சுற்றி 3 இடங்களில் தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
    • நாம் தமிழர் கட்சியினர் சீமான் வீட்டின் முன்பு குவிந்துள்ளனர்.

    தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் சீமானின் அநாகரிக பேச்சை அடுத்து மோதல்களை தடுக்கும் நடவடிக்கையாக சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    சீமானின் வீட்டை சுற்றி 3 இடங்களில் தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். நாம் தமிழர் கட்சியினரும் சீமான் வீட்டின் முன்பு குவிந்துள்ளனர்.

    முன்னதாக, தந்தை பெரியார் குறித்து நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்கு ஆதாரம் வேண்டும் என்று தெரிவித்துள்ள த.பெ.தி.க. பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன், இன்று காலை சீமான் வீட்டுக்கு சென்று ஆதாரத்தை கேட்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூறுகையில்,

    தமிழ்நாட்டு மக்களால் பெரிதும் மதிக்கப்படும் தந்தை பெரியார் குறித்து தீய நோக்கத்தோடு அவதூறு குற்றச்சாட்டு கூறுவதாகவும், சீமான் மீது தமிழ்நாடு முழுவதும் காவல் நிலையங்களில் திராவிடர் விடுதலை கழகம் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    • மூன்றாவது நாளாக வெள்ளி விலையில் மாற்றமில்லை.
    • பார் வெள்ளி ஒரு லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் விலையில் மாற்றமின்றி சவரன் ரூ.57,720-க்கு விற்பனையானது. இதனை தொடர்ந்து நேற்று சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 57,800-க்கு விற்பனையானது.

    இந்த நிலையில் இன்று தங்கம் விலை இரண்டாவது நாளாக அதிகரித்துள்ளது. சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 58,080-க்கும் கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,260-க்கும் விற்பனையாகிறது.



    மூன்றாவது நாளாக வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 100 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    08-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,800

    07-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,720

    06-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,720

    05-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,720

    04-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,720

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    08-01-2025- ஒரு கிராம் ரூ. 100

    07-01-2025- ஒரு கிராம் ரூ. 100

    06-01-2025- ஒரு கிராம் ரூ. 99

    05-01-2025- ஒரு கிராம் ரூ. 99

    04-01-2025- ஒரு கிராம் ரூ. 99

    • இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
    • தினந்தோறும் 100 பேருக்கு பொங்கல் பரிசு விநியோகிக்கப்படும்.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் 2.21 கோடி ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.

    சைதாப்பேட்டையில் உள்ள ரேசன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார். பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்துடன் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., மேயர் பிரியா மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்று இருந்தனர்.

    ஒரு கிலோ பச்சரிசி, சர்ச்சரை, முழுக் கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு ரேசன் கடைகளில் இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது.

    ஏற்கனவே வழங்கப்பட்ட டோக்கனில் உள்ள தேதி, நேரத்தின் அடிப்படையில் காலை, மாலை என தலா 100 பேருக்கு பொங்கல் பரிசு விநியோகிக்கப்படும்.

    ×